உதட்டில் உதடு/005
இனிக்கும் பதில்
அவள் : முற்றிக் கனிந்திட்ட கோவைப் பழம்போல
முன்பே சிவந்த உதடுகளை ,
வெற்றிலை போட்டின்னும் ரத்தப் படுத்துதல்
விவேக மாகுமோ காதலரே ?
அவன் : வண்டு குலவிடும் தாமரைப் பூபோன்ற
வர்ண சிவப்பு முகத்தினிலே ,
வண்ணக் கிளிப்பிள்ளை வாய்நிறப் பொட்டுநீ
வைப்பது மட்டும் சரிதானா ?
அவள் : மிதக்கும் நிலாமுகப் பெண்ணின் உதடுகள்
மென்று தின்கின்ற கற்கண்டு என்றால் ,
இதுவரை எந்தனை முத்தமிட்டும் அவை
இன்னும் கரையா திருப்பது ஏன் ?
அவன்: வெட்டிய மாம்பிஞ்சு போன்ற விழியினால்
‘வாருங்கள்’ என்று அழைப்ப வளே ,
சுட்ட கொழுக்கட்டை மேல்கலத் தண்ணீரைக்
கொட்டினும் மாவு கரைந் திடுமா ?
பல்லிமுட்டை போன்ற முல்லை அரும்பினைப்
பின்னிய கூந்தலில் வைத்த வளே ,
ஒல்லி இடைதன்னில் மின்னல் அடிக்குது
ஓசை மட்டும்அங்கு இல்லாத தேன் ?
அவள் : சுற்றிப் படரும் கொடியின் உடம்பில்
ஜெனித்த மலர்போல் சிரிப்ப வரே ,
சற்றுத் திரும்புங்கள் ; கன்னத்திலே அந்த
சப்தத்தை உண்டாக்கிக் காட்டு கிறேன் !