உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/006

விக்கிமூலம் இலிருந்து

சம்மதம்


ஆண்  : நிமிர்ந்த பம்பரம் போல—யானை
நெற்றியின் மேடு போலே—மலை பாராய் !

பெண் : ஆகாயம் கட்டிய கொட்டகையோ மலை—கண்ணா ?

ஆண்  : அசைகின்ற பூமியின் கொப்புளந்தான்மலை—கண்ணே !

ஆண்  : பாம்பின் சட்டையைப் போல—வெடித்த
பட்டையில் ஊற்றிய பால் போல—அருவி பாராய் !

பெண் : பெண்கள்உடுத்தும் மேல் ஆடைதான் இப்படி ஆச்சோ ?

ஆண்  : தண்ணீர்க்கும் வால் உண்டு என்பதற்(கு) இது சாட்சி !

ஆண்  : மரகதக் கம்பளம் மேலே—மயில்
இறகுகள் நிற்பது போலே—தோட்டம் பாராய் !

பெண் : காதலரால் இந்தத் தோட்டம் கசங்காதோ—கண்ணா ?

ஆண்  : குளிர்ந்த பனித்துளியாலே கல் உடையுமா—கண்ணே !

ஆண்  : எறும்பு ஏந்திய பொரி போலே—சோழி
இரண்டு சேர்ந்தது போலே—அரும்பு பாராய் !

பெண் : இந்த அரும்புக் (கு) எப்போது கல்யாணம் ஆகும் ?

ஆண்  : இதழ்கள் மலர்ந்தபின் வண்டுக்(கு) இது தாரம் ஆகும் !


ஆண்: பகல் நிறக் கற்கண்டு போலே—பேசும்
நாக்கை வசமாக்கும் பழம் போலே—இனிப்பு தாராய் !

பெண் : முத்தம் ஒட்டினால் உதடு களைப்பாகும்—கண்ணா !

ஆண் : நித்திரை செய்வதால் விழிகள் வீணாகுமா கண்ணே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/006&oldid=1879457" இலிருந்து மீள்விக்கப்பட்டது