உதட்டில் உதடு/009
யானைவால் கரும்பு
ஆரம் பத்தில் யானையின் வால்போல்
முளைத்த கரும்பை முதிர்ந்ததும் வெட்டி
வண்டியில் ஏற்றி விற்றுக் கொண்டே
போனான் கந்தன் போகையில் அந்திப்
பொழுது மாண்டு முழுநிலா வந்தது.
வந்த நிலவால் உலகம் குளிர்ந்தது
வெள்ளி விளக்கைப் பிள்ளைகள் அழைத்தனர்
கணவனை மனைவி, கண்ணால் அழைத்தாள்.
நெஞ்சு இனிக்கும் நிலா நேரத்தில்
வீட்டுக் காரியின் உதட்டின் நினைவு
வண்டி ஓட்டிக்கும் வந்தது. வந்ததும்,
“வெடித்த வெள்ளரிப் பழம்போல் வெண்ணிலா – ஆடை
உடுத்தா மலே திரியும் வெண்ணிலா
கடலில் உடல் கழுவும் வெண்ணிலா – குளித்தும்
கறை படிந்தே விளங்கும் வெண்ணிலா.
நோய் வராமல் இளைக்கும் வெண்ணிலா – இரவு
நேரந் தனை வெளுக்கும் வெண்ணிலா
தாய்உள்ளம் போல் குளிர்ந்த வெண்ணிலா – வெள்ளித்
தட்டுபோலே அமைந்த வெண்ணிலா.
மங்கையின் முகம் போலே வெண்ணிலா – ஒரு
மாதம் உயிரோ டிருக்கும் வெண்ணிலா
தங்க நிறம் ஆகும் வெண்ணிலா – செந்
தாமரை யின் விரோதி வெண்ணிலா.
தண்ணீரில் முகம் பார்க்கும் வெண்ணிலா – வானைத்
தடவி சுகம் பார்க்கும் வெண்ணிலா
மின்னத் தெரியாத வெண்ணிலா – உச்சி
மலைக்கு முத்தம் கொடுக்கும் வெண்ணிலா”—
என்று பாடிக்கொண்டே போகையில்
மலையில் நிலவு மறைந்தது—அவனது
உதட்டுப் பாட்டும் உப்புபோல் கரைந்தது !