உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/010

விக்கிமூலம் இலிருந்து

நாடோடியின் குரல்


காக்காயின் மூக்கு போலே
கறுப்பான மேகம் எல்லாம்
கல்லுமலை மேல் படுத்து
மெல்ல நழுவுது பார் !

கோலப் புள்ளிபோல் இருக்கும்
கொடிமுல்லை அரும்பு மேலே
தேன்குடிக்க வந்த வண்டு
திரும்புது பார் ஏமாந்து !

அத்திப் பழம் சேப்பு—அவ
மேனி நிறமோ நெருப்பு
முத்தமிடும் கன்னம் ரெண்டும்
முள்ளில்லாத ரோஜாப் பூ !

மரத்தின் கிளையைப் போல
மான்கொம்பு இருந்திட் டாலும்
குருவிஅதில் கூடு கட்டி
குடும்பந்தான் செய்தி டுமோ ?

வாலினால் நீர் குடித்து
வாயினால் பிள்ளை பெத்து
இருட்டை விரட்டு தடி
எங்க ஊட்டுத் திரிவிளக்கு !


மண்ணு குடிச்ச மழை
மறுபடியும் கேணி ஆச்சு—அதிலே
தண்ணி எடுக்க வந்தா—அவ
தலையிலே பூ பறிச்சேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/010&oldid=1879461" இலிருந்து மீள்விக்கப்பட்டது