உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு/014

விக்கிமூலம் இலிருந்து

பருவம்


ரின் நடுவில் ஓர்குளம்; அதுவும்,
ஆமை ஓட்டின் அமைப்புபோல் இருந்தது.

கிண்ணங்கள் பரவலாய்க் கிடப்பது போல
தடாகம் முழுதிலும் தாமரைப் பூக்கள்
இருந்தன; அதோடு வண்டுகள் இருந்தன.

வாழைப்பூ போல வால்உள்ள வாத்துகள்
நீரின் அலைகளை நீந்திக் கலைத்தன.

எப்போதும் நீலமாய் இருக்கும் வானில்
சிவப்புச் சூரியன் எழுந்து, உலகை
வெள்ளை யாக்கும் விடியற் காலையில்,
வர்ணப் பறவைகள் விழித்துக் கொண்டன.

மிளகாய்க் காம்புபோல் மீசை வைத்த
வாலிபன் ஒருவன் வடக்கே இருந்து
தூண்டில் போடஅத் துறைக்கு வந்தான்
பாத்திரம் கழுவப் பெண்களும் வந்தனர்.
பறவைகள் இறகு திறந்து பறந்தன.

வந்த வாலிபன் ஓரிடம் அமர்ந்து
தூண்டியில் வந்து தொத்தும் மீன்களை
கூண்டில் நிரப்பிக் கொண்டே இருந்தான்.

அரும்புபோல் ருது ஆகாத சிறுமியர்,
காதலால் உதட்டைக் காயப் படுத்திக்

கொண்டே இருக்கும் குடும்பப் பெண்கள்,
வயது பெருகிய மங்கையர்; அனைவரும்
மாட்டுச் சலங்கையை ஆட்டுதல் போல
பேசிக் கொண்டே பாத்திரம் துலக்கினர்.
சிலர்,
ஏசிக் கொண்டே பல்லைத் துலக்கினர்.

இவனும் இவர்களும் இவையும் இப்படி
இருந்து கொண்டே இருக்கும் போது;

புதிய ரோஜாப் பூவைக் கூந்தலில்
பதிய வைத்து, பிறைநிலா நெற்றியில்
பொட்டின் வடிவை வட்டமாய்க் காட்டி,
இடுப்பில் குடத்தை எடுத்துச் சேர்த்து
அதற்கு இடதுகை ஆதரவு தந்து,
துதிக்கை போல வலதுகை வீசி
குளக்கரை நோக்கி கமலா என்பவள்
வந்தாள் ; அன்னம் வருவது போல
வந்தாள் அப்படி வருகின்ற போதே
இடையும் வளைந்தது ! குடமும் அசைந்தது !

தங்க நிறத்து அங்கப் பகுதிகள்
கிழக்கு வெய்யிலில் வழக்கம்போல் மின்னின !
பெண்ணின் உதடும், கண்ணும், முகமும்,
பழமும், கடலும், நிலவும் ஆயின
பாத்திரம் துலக்கும் பெண்களில் ஒருத்தி,
கமலா வருவதைக் கண்டாள், சொன்னாள்.
அவளைக் குறித்து சிவகாமி என்பவள்
தொடர்கதை சொல்லத் தொடங்கிவிட்டாள்

சொல்லும் கதையை, எல்லோரும் கேட்கையில்
தங்கம் என்ற தையல் தும்மினாள்.

மங்களம் என்பவள் மறுத்துப் பேசினாள்.
சத்தம் பலத்தது ; சிரிப்பும் அப்படி !
மேயும் மீன்கள் எல்லாம் இதனால்
தூண்டிலில் விழாது தாண்டி ஓடின.

மீன்களை முதலிலும், பெண்களைப் பிறகும்
இளைஞன் பார்த்து, எரிச்ச லோடு,
“போதும், கொஞ்சம் பேசாமல் இருங்கள்.
உங்களால் மீன்கள் ஓடு கின்றன”
என்று சொன்னான் இதற்கு ஒருத்தி,

“தண்ணீர்த் துறைதான், பெண்களுக் கெல்லாம்
பேச்சு மேடை! புரிந்ததா?” என்றாள்.
மாதுரி என்ற மற்றொரு மங்கை
“வேறு துறைக்கு போ” என்று சொன்னாள்.

“இந்தத் துறையில்தான் அதிகமாய் மீன்கள்
அகப்படும்” என்றான். அல்லி என்பவள்,
“இப்படிச் சொன்னால் ஒப்ப முடியுமா?
குத்து விளக்கில், எந்தப் பக்கத்துத்
திரியைக் கொளுத்தினும், எரியும்” என்றாள்.

அல்லிக்கு மறுமொழி சொல்ல முடியாமல்
தூண்டில் காரன் கண்ணை உருட்டினான்.
குடத்தைச் சுமந்த கோதை கமலா
அந்தச் சமயம் வந்து சேர்ந்தாள்.

அவளைப் பார்த்து அன்னம் என்பவள்
“இவ்வளவு நேரம் ஏன்?” என்று கேட்டாள்.

“வீட்டில் இன்று வேலை அதிகம்,
அதனால் தாமதம் ஆனது” என்றாள்.

“ஏண்டி மறைக்கிறாய் ! இப்போது தான், உன்
வீட்டுக் காரர் விழித்தார் என்று சொல் !”
என்றாள் மதுரம். இதனைக் கேட்டு
குலுக்கென்று சிரித்தது குளத்துக் கூட்டம் !
வெடுக்கென்று எழுந்து வாலிபன் போனான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு/014&oldid=1879465" இலிருந்து மீள்விக்கப்பட்டது