உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்க்காற்று/002

விக்கிமூலம் இலிருந்து

பசு

சுமதி வீட்டிலா...இப்படி?”

“இப்படியும் ஆகும்னு... எவளாச்சும் நெனைச்சுக் கூடப் பாத்துருக்க முடியுமா?”

“இதென்னடி கூத்து? பசுமதி வீட்டிலுமா... இப்படி?”

“தெற்கே உதிச்சு வடக்காலே பொழுது அடைஞ்சாலும் அடையும். பசுமதி வீட்லே மட்டும் அப்படி நடக்காதுன்னு மலைபோல நம்பியிருந்தேன். மலையிலே மண்ணு விழுந்துருச்சே.”

“இந்தக் கூத்து, வாடைக் காத்து மாதிரி. இரும்புக் கோட்டைக்குள்ளே கூட மூஞ்சியைக் காட்டிரும். பசுமதி வீடு எம்மாத்திரம்?”

ஊர் முழுக்க இதே பேச்சு, கண்மாய்க் காட்டு கொக்கு மாதிரி மாறி மாறி வட்டம் போட்டுக் கொண்டேயிருந்தது. வீட்டுக்கு வீடு இதே பேச்சுத்தான். பெண்டுகள் ஆச்சரியம் தாங்காமல் பேசிப் பேசி வாயாறினார்கள்.

எல்லாம்... கொஞ்ச நாளைக்குத்தான். ஆச்சரியமான இந்த விஷயம், போகப் போக ஊர் ஜனத்துக்குப் பழகிப்போகும். மரத்துப் போகும். கண்டுக்காமல் விட்டுவிடுவார்கள். “வீட்டுக்கு வீடு வாசப்படிதான்” என்று சொல்லிச் சொல்லி சமாதானம் ஆகிப் போவார்கள்.

2

போன வருஷம், மார்கழி முடியப் போகிறது. தை பிறக்கப் போகிறதென்கிற சந்தோஷம். தெருவெல்லாம் கரும்புச் சக்கை. பிள்ளைகள் ஆசை ஆசையாக கடித்து உரித்து ‘சப் சப்’பென்கிறார்கள். ‘ள்ஷ்ஷ்...’ என்று எச்சிலோடு சாறைச் சேர்த்து விழுங்குகிறபோது அதுகள் முகத்தில் அப்படியோர் இனிப்பு. இனிப்பின் பூரிப்பு.

“ம்மா...”

“என்னடா.”

“கரும்பு வேணும்மா... கடையிலே வாங்கிக்கிடடா?”

“வாங்குவம்.”

“நா ஒரு துண்டு வாங்கிக்கிடுதேம்மா. கடையிலே நறுக்கி வச்சிருக்காக.”

“இருடா.. அம்மா கடைக்குப் போக வேண்டியிருக்கு. வாங்கிட்டு வாரேன்.”

பசுமதி கடைக்குப் போனாள். சாமான்கள் வாங்கி முடித்தாள்.

கடையில் நறுக்கப்பட்ட துண்டுகள். கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட முழுக் கரும்புக்கட்டு, தோகைகளுடன்.

“முழுக் கரும்பு என்ன விலை தம்பி?”

“ஆறு ரூவாக்கா.”

“அந்தக்கடையிலே அஞ்சு ரூபாயாம்லே? எல்லாரும் சொல்தாக.” “அதுவும் கரும்பு. இதுவும் கரும்பா? இது ரஷ்தாழிக் கரும்பு, முத்தி வெளைஞ்ச கரும்பு. தேனா தித்திக்கும்.”

“ம்... ஒம் பேச்சுதா தேனா இருக்கு. விலை தேளா இருக்கு.”

கடைக்காரன் சிரித்தான்.

“உங்க பேச்சுதா வெவரமாவும் இருக்கு. வெவகாரமாவும் இருக்கு.”

கட்டில் ஆய்ந்தாள். நீள நீளக் கணு உள்ள கரும்பு. செம்மை கனிந்த கறுப்பு. தொட்டால்... சம்பலாய் விரலில் ஒட்டுகிறது. இருப்பதில் நல்லதாக ஒன்றை உருவினாள்.

முழுக் கரும்பை தோகையுடன் பார்த்தவுடன் பயலுக்கு ஒரே ஆதாளி. “அய்ய்... அய்ய்... அய்ய்...” என்ற ஆனந்தக் கூவக்காடு. குதூகலமாகக் குதித்தான். அவனது கும்மாளத்தில் இவளுக்குள் இறங்கிய கரும்புச் சாறு. சாற்றின் இனிமைக் கரைசல்.

“அவரு வந்து பாத்தா... கரும்பு வாங்குனதுக்கு ‘தங்கு, புங்கு’ன்னு குதிப்பாரோ... ‘காச்சு பூச்சு’ன்னு கத்துவாரோ...”

சாறுடன் சேர்ந்து சக்கை இணுக்குகளாக நெருடும் நினைவுகள்.

“கத்துனா...கேட்டுக்கிட வேண்டியதுதான். நாம கம்ம்முன்னு இருந்துட்டா... சண்டை சத்தம் எதுக்கு வரப்போவுது.”

சக்கை இணுக்கு தொண்டைக்குக் கீழே போய் விட்டது. நெருடல் இப்போது இல்லை.


3

நாளை தை. விடிந்தால் மாதம் பிறக்கிறது. இன்றைக்கு வேலைக்குப் போகவில்லை, பசுமதி. மதியம் ஆகவில்லை. இளமதிய வெயில் சுகமாக இருக்கிறது. பனி நனைந்த வெயில்.

ஸ்டூலை எடுத்துப் போட்டு ஏறினாள். பரணில் கிடந்த சாக்குமூட்டையைப் பார்த்தாள். பாத்திரமூட்டை பூராவும் வெங்கலப் பாத்திரங்கள். குத்துவிளக்கு, சருவச்சட்டி, குத்தண்டா, குடம், பானை, இட்லிக் கொப்பரை, பொங்கல் பானை, சருவக்கரண்டி, கும்பா லோட்டா, செம்பு என்று பலவகையான வெங்கலச் சாமான்கள். அம்மா தந்த சீதனம். ஆசை ஆசையாக சேகரித்து பாச மகளுக்குத் தந்த சீதனம்.

இவற்றில் எந்தப் பாத்திரத்தையும் புழங்கமாட்டாள் பசுமதி. மூட்டைகட்டி பரணியில் போட்டு வைப்பாள். நெகிழ்ந்த மனநிலை ஏற்படுகிற போதெல்லாம்... கண்கலங்க ஏறிட்டுப் பார்த்துக் கொள்வாள். அம்மாவையே நேரில் பார்க்கிற மாதிரியோர் உணர்வு. அம்மாவின் பாசம், பிரியம், ஆசையெல்லாம் வந்து மனசுக்குள் கனவுகளாக மொய்க்கும். அவள்பட்ட வேதனைகள், சொற்காயங்கள், விட்ட கண்ணீர், பட்ட அவமானம் எல்லாம் படைபடையாக வந்து நெஞ்சை ரணமாக்கும். அம்மாவே பரணிலிருந்து ஆறுதல் சொல்கிற மாதிரியிருக்கும்.

பசுமதிக்கு உலகத்தில் இருந்த ஒரே நாதி, அம்மாதான். அவள்தான் அய்யா, அண்ணன், தம்பி எல்லாம். அம்மாவைத் தவிர சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒரு நாதி கிடையாது பூமியில்.

அம்மா உயிர் வாழ்ந்ததே இவளது கல்யாணத்திற்காகத்தான். இருந்த கூரை வீட்டை விற்று நகையாக்கிப் போட்டு கல்யாணத்தை முடித்தவுடன், பிறந்த கடன் முடிந்துவிட்ட மாதிரி... கண்ணை மூடிவிட்டாள்.

சாகும்போது பசுமதி கைகளை இருகைகளாலும் பற்றிக் கொண்டாள் அம்மா. நடுங்கும் கைகளால் மகள் கைகளைப் பிசைந்தாள். கண்களில் மாலை மாலையாக வழிகிற கண்ணீர். உதடுகள் நடுங்கிற்று. ஏதோ சொல்லத் துடித்தது.

“என்னம்மா... என்னம்மா...” என்று அழுதாள் பசுமதி.

ஆயுள் முழுக்க பட்ட ரணத்தின் வலியில் திணறித் தவித்தாள் அம்மா.

“பட்ட கஷ்டமெல்லாம்... பஞ்சாய்ப் பறந்துருச்சு. ஒன்னைக் கரை சேத்துட்டேன். ஒனக்கொரு பாதையைக் காட்டிட்டேன். இனிமே... நா செத்தாலும் கட்டை நிம்மதியா வேகும்மா...”

“ம்மா... ம்மா... ம்மா...”

“பசுமதி அழாதேடி. புகுந்த எடத்துலே புத்தியோட நடந்துக்கம்மா. சண்டை சத்தம்னா... கோவிச்சுக்கிட்டு வந்து நிக்க...ஒனக்கொரு நெழலு கெடையாதும்மா...நா போய்ட்டா... ஒனக்கு ஒரு நாதியில்லே. ‘வா, வந்து உக்காரு, கஞ்சிக் குடி’ன்னு சொல்ல ஒருத்தருமில்லே... இதை மனசுலே வைச்சுக்க. பதிச்சு வைச்சுக்கோ... பத்திரமா நடந்துக்க. புத்தியோட பொழைச்சுக்க...”

அப்புறம்... நாலைந்து விக்கல்கள். ‘கொரட், கொரட்’டென்று கொஞ்சநேர இழுப்பு. அவ்வளவுதான். அம்மாவின் ஜீவச்சுடர், காற்றுக்கு அலைப்புண்ட தவிப்போடு அடங்கி அணைந்து போயிற்று.

சின்ன வயசில் தாலியறுத்த ஒரு பெண் ஆதரவற்று வாழ்வது சுலபமா? அதிலும் ஒரு பொட்டைப் பிள்ளையை வளர்த்து, தன் வயிற்றையும் நனைப்பது அத்தனை சாதாரணமா? வளர்ந்து பூப்பெய்திய ஒரு பெண்ணை மானமரியாதையோடு கட்டிக்காத்து, யார் உதவியும் இல்லாமல் ஒரு கல்யாணம் பண்ணிப்பார்ப்பது... நடக்குற காரியமா?

நடத்திக் காட்டினாளே... அம்மா. சாதித்துக் காட்டினாளே... வைராக்கியக்காரிதான்.

தை பிறப்பதற்கு முதல் நாள்தான், பரணிலிருந்து மூட்டையைப் பிரிப்பாள். நீரில் நனையப் போடுவாள். புளியும், செங்கல்த் தூளும் கொண்டு மினுக்குவாள். வீட்டு முற்றத்தில் கட்டில் போட்டு மினுக்கிய பாத்திரங்களையெல்லாம் குப்புறப் போட்டு உலர வைப்பாள்.

பார்த்துப் பார்த்துப் பூரிப்பாள். பார்க்கட்டும். தெருவில் வருவோர் போவோரெல்லாம் இதைப் பார்க்கட்டும். சூரிய ஒளிபட்டு தங்கத் தகதகப்பாக ஜொலிப்பதைப் பார்க்கட்டும். அம்மா தந்த சீதனம். பட்டினி கிடந்து சேகரித்த பாத்திரங்கள். அம்மாவின் தியாகத்தில் - பாசத் துடிப்பில் வந்த பாத்திரங்கள். எல்லாரும் கண் குளிரப் பார்க்கட்டும்.

சாயங்காலம் வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அப்புறம் எடுத்து... பலகையில் அடுக்குவாள். வரிசை வரிசையாக அம்சமாக அடுக்குவாள். ஆசை ஆசையாகப் பார்ப்பாள். பார்க்கப் பார்க்க மனசு கிடந்து மலரும்.

நாலைந்து நாளைக்குப் பிறகு... மறுபடியும் மூட்டையாக்கி பரணில் ஏற்றி வைத்துவிடுவாள், அம்மாவை.

இதெல்லாம்... போன வருஷம் தை வரைதான்.

இந்தத் தையில்தான் கதையே மாறிப் போயிற்றே. கதை கந்தலாகி விட்டதே. அதுவும் சாதாரணக் கந்தலா? நாய் கிழித்த சர்க்கரைச் சாக்காக... நூல் நூலாக... பிய்ந்து...

4

அம்மா தந்த சீதனங்களில் மிகப் பெரிய சீதனம், சாகும்போது தந்ததுதான். “வா, வந்து உக்காரு, கஞ்சி குடின்னு சொல்ல நாதியில்லே. கோவிச்சுக்கிட்டுப் போய் நிக்க நெழல் இல்லே” என்றாளே... அந்தச் சூன்யப் பயங்கரம். அதுவே பசுமதியை “புத்தியோடு” பிழைக்க வைத்துவிட்டது. பூமி மாதாவை மிஞ்சிய பொறுமையை அவளுள் சுபாவமாய் திணித்துவிட்டது. பயந்த சுபாவமே அவள் மனசின் வடிவம் போலாகி விட்டது.

வீட்டு நாயைப் போலாகிவிட்டாள். எந்த வலியையும் ரோஷமில்லாமல் விழுங்கித் தீர்த்தாள்.

அம்மாவின் இழப்பு, அவளுக்கு காலடித் தரை உருவின மாதிரியாகி விட்டது. அவளது ஆன்மாவின் உஷ்ணத்தையே அவித்துவிட்டது.

சண்டை சத்தம் இல்லாத வீடாகி விட்டது. புருஷன்காரன் அர்த்தம் இருந்தோ - காரணம் இல்லாமலோ - காட்டுக் கூப்பாடு போட்டாலும், காது கேளாதவளைப் போல இருந்துவிடுவாள்.

ரெண்டு கை தட்டினால்தானே சத்தம் வரப்போகிறது? ரெண்டு மனசின் வெக்கை சீறி, வார்த்தைப் பொறிகள் மோதினால்தானே... சண்டை வரப் போகிறது? புருஷனை எதிர்த்து ஒரு சொல்கூட பேசவே மாட்டாள் பசுமதி.

சண்டை சத்தம் நடந்தது, கூட்டம் கூடியது, கோபித்துக் கொண்டு போனாள் என்று ஒரு நாளும் கிடையாது. ஊரே பசுமதி வீட்டைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது.

“பசுமதி மாதிரி கொணம் எந்தப் பொம்பளைக்கு வாய்க்கும்? ஒரு பொழுதாச்சும் அவுக வீட்லே ‘கீச்சு’ன்னு சத்தம் வந்ததுண்டா?”

"கொணத்துலே பசுதான்... பசுமதி. அவா குடும்பம் நடத்துற லட்சணமே... தனீ. ஒரு சண்டை, ஒரு சத்தம், ஒரு கோபதாபம்னு என்னிக்காச்சும் உண்டா?"

“கொணம், மனம்ங்குறதெல்லாம் பிறவியிலேயே அமையணும். கடைக்காட்டுலே காசு குடுத்தா வாங்க முடியும்?”

அவரவர் மனசில் பட்டதை வெள்ளந்தியாக வெளியே கொட்டினார்கள். ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். ‘பசுமதி, பசுமதி’ என்று கிடந்தது.

இது பசுமதிக்கும் தெரியும். அடிமனசுவரைக்கும் கசந்து அழறும். “ஏலாத நாய்க்கு பொறுமை ‘அழகு’ன்னு, நாம ரோஷங்கெட்ட சவத்துப் பொழைப்பு பொழைச்சிக்கிட்டிருக்கோம். இதுக்குக் கிரீடம் வேற வேணுமாக்கும்? கெரகசாரம்” என்று உள்ளுக்குள் அறுக்கிற அவலச் சோகத்தில் வெந்த பசுங்கொடியாக வெம்புவாள், ரகசியமாக. பாத்திர மூட்டையாக பரணில் கிடக்கும் ‘அம்மா’வைப் பார்த்துக் கொள்வாள், கலங்கும் கண்களுடன்.

5

கூட்டுறவு சொஸைட்டிக்காரர்கள் வந்து ஜப்தி செய்யப்போவதாக மிரட்டி விட்டுப் போனார்கள். முருகேசன் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. எச்சரிக்கை நோட்டீஸ்களையும் பொருட்டாக நினைக்கவில்லை.

எப்படி நினைக்க? இவன்பட்ட கடனா? இவன் வாங்கிய கடனா? இல்லையே! கூட்டுறவு சொஸைட்டியில் பரஸ்பரம் கடன்தாரர்களையே ஜாமீன்தாரராக்கிக் கொள்வார்கள். இதற்குச் சம்மதமும் கேட்பதில்லை. முருகேசனுக்கு ஒரு கடன்தாரர் ஜாமீன் கையெழுத்துப் போட்டிருப்பார். முருகேசன் வேறு ஒரு கடன்தாரருக்கு ஜாமீன் போட்டிருப்பான்.

இது எப்பவும் இப்படித்தான். இதில் எப்பவும் ஒரு சிக்கல், சிரமம் வந்ததேயில்லை. ஆனால் முருகேசனுக்கு சிக்கல் வந்துவிட்டது.

இவன் ஜாமீன் போட்ட கடன்தாரர் இறந்து போய் விட்டார். அவரது மனைவி மக்கள் இருந்த சொச்ச மிச்சத்தை விற்று கைமாற்றிவிட்டு கேரளாப் பக்கம் பிழைக்கப் போய்விட்டார்கள்.

நாலைந்து வருஷமாய் பிரச்சினை வரவில்லை.

இப்போது கெடுபிடி வசூல். ஜப்தி வசூல் பண்ணும்படி அரசாங்கம் உத்தரவு போட, அதிகாரிகள் தூசிதட்டி பேரேடுகளைத் தூக்க... இறந்து போனவரின் பழைய கடன், வட்டி, அபராத வட்டி எல்லாம் சேர்ந்து ஒன்பதாயிரம் வந்து நிற்க, வசூல் பண்ண வழி என்ன என்று யோசிக்க... சட்ட ஜாமீன் முருகேசனை நீட்ட

பிரச்சினை பூதமாக வந்து நிற்கிறது. முருகேசன் அசால்ட்டாக இருந்தான். “எவனோ பட்ட கடனுக்கு நம்மவூட்லே எப்படி ஜப்தி பண்ண முடியும்? இது என்ன... ஊரா, காடா? அந்த அளவுக்கா நாட்லே தர்மம் அழிஞ்சு போச்சு?” என்ற எண்ண ஓட்டம் அவனுள்... அவனுக்குத் தெரியவில்லை, “அதர்மம்தான் ஆட்சி பண்ணுகிறது” என்று.

6

அது வைகாசி மாதம். கடைசியாகி விட்டது. பசுமதி கோடைப் பருத்திக்குக் களைவெட்டிக் கொண்டிருந்தாள். கூலியாட்கள் ரெண்டு பேர். அவர்களை வேலை வாங்கணுமே என்று இவள் ஓடி ஓடி களைவெட்டினாள். நிறைபிடித்து நிமிராமல் வெட்டினாள்.

புஞ்சையை ஒட்டி வண்டிப்பாதை. கலிங்கப்பட்டிக்குப் போகிற வண்டிப் பாதை. சைக்கிளிலும், நடந்துமாக போகிற வருகிற வெள்ளையும் சொள்ளையுமான ஆட்கள்.

“சாம்சாரிமேலே கை வைக்க சர்க்காரு எப்பவும் தயங்கும். இப்ப என்னடான்னா... அடாவடித்தனமா கை வைக்காகளே...”

“என்ன கொடுமை செய்ஞ்சாலும், ஜனங்க குருட்டுத்தனமா ஓட்டு போட்டுருவாகன்னு ஆளுங்கட்சிக்கு திமிரான எண்ணம்.”

“அதானே? இந்த ஊர்ல மட்டும் அஞ்சு சம்சாரிக வீடுகள்லே ஜப்தி நடக்கப் போகுதாம். ஜீப்லேயும் கார்லேயும் ஆபிஸர்மார்க வந்து குமிஞ்சிட்டாக...”

“சம்சாரிக போராட்டம் பண்ணுவாகன்னு பயம் இருந்தா... இம்புட்டுத் தெம்பா... அதிகாரிக வருவாகளா?”

“சைக்கிளில் போகிறவர்களின் பேச்சு. இவள் காதிலும் வந்து விழுகிறது. இவளுக்குள் ஏனோ... மனசுக்குள் இனம் புரியாத நமைச்சல். குருட்டாம் போக்கிலான மனக் கஷ்டம். குழப்பம்.”

மணி மூன்று. வேலை முடிந்து, அகத்திக்கொழை ஒடித்துக்கொண்டு வந்தாள் பசுமதி. ஊருக்குள் வந்தாள். இவளையே எல்லாப் பெண்களும் வினோதமாகப் பார்க்கிற உணர்வு. அனுதாபப்பட்டு சூள்கொட்டுகிற சத்தம்.

இவளுக்குள் பூரான் ஊர்கிற மாதிரி... ஓர் உணர்வு. என்னவோ மனசுக்குள் நறுக்கிட்டது.

தெருமுனை திரும்பி விட்டாள். தன் வீட்டின் முன்னால் ——

நாலைந்து குழாய்ச் சட்டைக்காரர்கள். மாராப்பு போட்ட அமீனா. வீட்டு முற்றத்தில் ரேடியோ, சைக்கிள், கம்பு மூட்டைகள்.

நம்ம வீட்டிலேயும் ஜப்தியா?

அடிமனசு வரை மின்சாரம் பாய்ந்த அதிர்வு. பதைப்புடன் ஓடி வந்தாள். உயிர் ஒடுங்கிப் போன அவமான அவஸ்தையில் தலைகவிழ்ந்து நிற்கிற முருகேசன்.

கொழையையும், சுரண்டியையும் கீழே போட்டாள். அவள் பார்வை அந்த மூட்டையின் மீது.

பாத்திர மூட்டை. சீதனம். அம்மாவின் உயிர். அம்மாவின் ஆயுள் கால வியர்வை. அம்மாவையுமா ஜப்தி?

இவளுக்குள் உயிர் கொதித்தது.

ஒருவன் பாத்திர மூட்டையின் கழுத்துக் கட்டை அவிழ்க்கிறான். கீழே கொட்டி பாத்திரங்களை பட்டியல் போட்டு புருஷனிடம் கையெழுத்து வாங்கவா?

இவள் இவளாக இருக்க முடியவில்லை. பசுமதி பசுவாக இருக்க முடியவில்லை. குடையைக் கண்ட காளையாகிவிட்டாள். வெறி கொண்ட பாய்ச்சலாக முன்வந்தாள்.

அதற்குள் அவன் சாக்கைக் கொட்டிவிட்டான்.

‘கணங், கணங், கணங்’கென்ற சப்த சிணுங்கல்களோடு சிதறிய பாத்திரங்கள். வெங்கலப் பாத்திரங்கள். அம்மாவின் எலும்புகள். சதைத் துண்டுகள். கண்கள் கனவுகள். அம்மாவின் உயிர்த்துளிகள்.

இவளுக்கு குலையைப் பிடுங்கி வெளியே போட்டது போலிருந்தது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தாள். பாத்திரங்களையெல்லாம் ஆவி ஆவி அணைத்துக் கொண்டாள்.

“எந்தப் பயலாச்சும்... இது மேலே கைவைச்சா... உசுரோட போய்ச் சேர முடியாது. தாலியத்துருவண்டா... திருட்டு நாய்களா...”

இந்த ஆவேசத் தீயின் வெக்கையில் அதிகாரிகள் மிரண்டனர். இருப்பினும் கெத்துவிடாமல் நின்றனர்.

“தள்ளியிரும்மா... தள்ளு... யோவ், ஒங்க பொஞ்சாதியை அப்புறப்படுத்துங்கய்யா...”

முருகேசன் பசுமதியின் தோளைத் தொட்டான். கையைப் பற்றித் தூக்க எத்தனித்தான். அவள் அவனை உதறிய உதறலில் சிதறிப் போய்விட்டான்.

பத்ரகாளியாக புருஷனைப் பார்த்தாள். பார்வையில் தீ.

“எங்க அம்மாவை விக்குறதுக்கு நீ யாரு? அடப்பாவி மனுசா...கிட்டே வந்தே... கொடலை உருவி மாலை போட்டுருவேன் பாத்துக்கோ...”

முருகேசன் அதிர்ந்து போனான். யார் இது? நம்ம பசுமதிதானா? எதிர்த்துப் பேசவே பேசாத நம்ம பசுமதி தானா?

அதிகாரிகள் முன்னிலையில் அவமானத்தில் இருண்ட முகத்தைக் காட்டாமல் சமாளித்தான். செத்துவிடாமல் அதட்டினான்.

“ஏய்...பசுமதி, வா... இங்குட்டு.”

பசுமதி சற்றும் பதறவில்லை. அதைவிட உக்கிரமமான சத்தத்தில் வீறிட்டாள். “எங்க அம்மாவை முத்தத்துலே தூக்கிப் போட்டிருக்கீயே... பாவி, நீ வௌங்குவீயா? நாசமாய் போயிருவே... நீ போயா.. அங்குட்டு.”

அதிகாரிகள் போய்விட்டனர், எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு. முருகேசன் அடிபட்ட நாகமாய் பலர் முன்னிலையில் தன்னைத் திட்டிவிட்டாளே என்கிற கோபமாய்... ‘கறுமுறு’வென்று திருகிக் கொண்டிருந்தான். அம்மாவை மறுபடியும் பறிகொடுத்த தகிப்பில் வெறிபிடித்தவளைப் போல சண்டை போட்டுக் கொண்டேயிருந்தாள். அந்த வீட்டில் –

அப்புறம்... அனுதினமும் சண்டைக் காடுதான்.

ஏப்ரல் / 995, செம்மலர்
‘மாலைமதி’யில் மறுபிரசுரம் செய்யப்பட்ட சிறுகதை

"https://ta.wikisource.org/w/index.php?title=உயிர்க்காற்று/002&oldid=1837008" இலிருந்து மீள்விக்கப்பட்டது