உயிர்க்காற்று/009
கலர்க்கலராய் ஆசை
ஆறாங் கிளாஸில் இருக்கிற ஆறுமுகத்துக்கு ‘காய்ச்சல் வரவில்லையே’ என்று வருத்தம் என்றால்... வருத்தம், அப்படி வருத்தம்.
‘ஐயோ பாவம்’ என்று நாலுபேர் பரிதாபப்படுகிற மாதிரி...ஏதாச்சும் நோய் வந்தால் நல்லது. நோயைத் தீர்க்க ஊசி மருந்து இருக்கிற மாதிரி, நோயை வரவழைக்க ஏதாச்சும் வழி வகை இருக்கிற மாதிரி தெரியவில்லை, ஆறுமுகத்துக்கு. தெரிந்தால்... செய்து கொள்வான்.
மதியம் ரெண்டு மணிக்கு இங்கிலீஷ் வாத்தியார் வந்துவிடுவார். நேற்றே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
“நாளைக்கு ‘ஃபார் வாண்ட் ஆப் ஏ நெயில்’ போயமை மனப்பாடமா ஒப்பிக்கணும். படிச்சுட்டு வாங்க. எவனாச்சும் ஒப்பிக்கலே...? இந்தா இருக்கு பிரம்பு. முதுகுத் தோலு பிய்ஞ்சு போகும்.”
அவர் பிய்க்கிறவர்தான். அடித்தார் என்றால் நாயடி பேயடிதான். வகுப்பில் ரொம்பக் கண்டிப்பானவர்.
ஆறுமுகமும் நேற்று பூராவும் இங்கிலீஷ் புத்தகத்துடன் மல்லுக்கட்டிப் பார்த்தான். ராத்திரி பத்துமணி வரைக்கும் உருப்போட்டுப் பார்த்தான், ஊஹும்!“பார் வாண்ட் ஆப் தி ஹார்ஸ்” பிடிபட்டால், “தி ரைடர் வாஸ் லாஸ்ட்” நழுவிக் கொள்கிறது. ஒரே வார்த்தை ரெண்டு வாக்கியங்களில் மாறி மாறி வரும். அது, ஆறுமுகத்தைக் குழப்பிவிடும். ஞாபகத்தில் பிடிபட்டிருந்த வாக்கியக் குருவியைப் பறக்க விட்டு விடும்.
வாத்தியார் வந்து கேட்பார். என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? அதுதான்... குதிரை றெக்கை விரித்துப் போய்விட்டதே... ஆணியுமில்லாமல், சாம்ராஜ்யமுமில்லாமல், சூன்யமாய்...
நிச்சயமாய் மப்பைக் கழட்டி விடுவார். பிரம்பு, தீச்சாட்டையாய் ‘பளீர், பளீ’ ரென்னும். அதை நினைத்தால், இப்பவே வயிற்றில் ‘பகீர், பகீர்’ ரென்கிறது.
என்ன செய்ய? காய்ச்சல் கீய்ச்சல் வந்துவிட்டால், தொல்லை கழிந்து விடும். வீட்டுக்குப் போய்விடலாம். இந்த நெயில் என்கிற இங்கிலீஷ் லாட ஆணி முகரையில் முழிக்காமல் தப்பித்து விடலாம்.
காய்ச்சலும் வரல்லியே... ஆறுமுகத்துக்கு தர்ம சங்கடமாக இருந்தது. மணி பன்னிரண்டை நெருங்குகிறது. தமிழய்யா இலக்கணத்தில் ‘எழுவாய் பயனிலை’ விளக்குகிறார்.
ஆறாம் வகுப்பு மட்டும் வெட்ட வெளியில். இடமில்லை. பள்ளி வளாகத்தில். வேப்ப மரத்தடியில். மரத்தை சுற்றி வட்டமாய் சிமெண்டுத் திண்ணை. அதில் ஆசிரியரும் கரும்பலகையும். பிள்ளைகள் மணலில்.
இங்கிருந்து பார்த்தால்... கடை நன்றாகத் தெரியும். வெள்ளையும் சொள்ளையுமாக ஏழெட்டுப் பேர். அவர்களை வரவேற்கிற பரபரப்பில் உள்ளூர்க்காரர். கடையிலிருந்து கலர்களை வாங்கி உடைத்துக் கொடுக்கிற விறுவிறுப்பு.
கலர் உடைக்கிற சத்தம். கலர் மூடிகள் விழுகிற ‘கலீர், கலீர்’ சத்தம். ஆறுமுகம் மனசுக்குள் கலர்ப்பானத்தின் வாசம். உடைத்தவுடன், பாட்டிலுக்குள்ளிருந்து திமிறிப் பீறிடுகிற நுரை. எழுகிற புகை இழைகள்.
இவனுக்குள் கலர்ச் சபலம். நாக்கில் எச்சில் ஊறுகிறது. கலர் குடித்தவுடன் ஒரு ஏப்பம் வருமே... நெஞ்சின் முட்டலைப் பிளந்து கொண்டு வருகிற ஏப்ப வாசம்.
ஆறுமுகம் வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்திருந்த சமயத்தில், அம்மா சொன்னாள்.
“ஏலேய் ஆறுமுகம், கடையிலே போய் ஒரு கலரு வாங்கிட்டு வாடா . ஓடுறா.”
“கோலிக் குண்டு கலரா... டப்பா மூடிக் கலரா?”
“நல்ல கலரா பார்த்து கேட்டு வாங்கிட்டுவா.”
“எம்மா...”
“என்னடா? போடா, வெருசா.”
“எம்மா, எனக்கும் ஒன்னு.”
“சரி சரி... வாங்கிக்கோ.”
அம்மாவுக்கு விருந்தாளியை உபசரிக்கிற பரபரப்பு அவசரத்தில் இவனுக்கும் அனுமதி கிடைத்துவிட்டது. அன்றைக்கு குடித்த கலர்.மடக்கு மடக்காக அனுபவித்து ரசனையோடு குடித்தான். கருந்திராட்சை நிறத்திரவம். வந்த ஏப்பத்தில் திராட்சை மணம்.
நாக்கை நீட்டி நீட்டி கண்ணாடியில் பார்த்தான். அந்தத் திரவ நிறம் நாக்கில் படிந்திருந்தது. பார்த்துப் பார்த்து ரசித்தான். ரசிக்க ரசிக்க மனசுக்கு றெக்கை முளைத்தது. பறந்தான்.
ஆறுமுகத்துக்கு இன்னைக்கு கலர் குடிக்கணும் போலிருந்தது. நினைக்க நினைக்க நாக்கில் ஊறுகிற எச்சில். விதையாக விழுந்த கணத்தில், விருட்சமாகி விடுகிற வினோத உணர்வு. ஆசைச் சலனம், விருட்டென்று பேரலையாகிறது. பிரளயமாகவே ஆகிவிட்டது.
எழுந்து நின்றான், ஆறுமுகம். நேராக நிமிர்ந்து நிற்காமல் குன்னிப் போயிருந்தான். தமிழய்யா அவனைப் பார்த்தார்.
“என்னலே?”
“சார்... வவுத்தை வலிக்குது” அடி வயிற்றை அழுந்தப் பற்றினான்.
“எப்ப இருந்து?”
“அப்பவே வலிச்சது சார். இப்ப ரொம்ப வலிக்குது சார்... தாங்க முடியலே சார்.”
சரி என்ன செய்யப் போறே? வீட்டுக்குப்போறீயா?
“ஆமா... சார்.”
“ரைட். ஹெட்மாஸ்டர் கிட்டே சொல்லிட்டுப்போ.”பைக்கட்டை தூக்கிக் கொண்டு ஹெட்மாஸ்டர் அறைக்கு வந்தான். அங்கேயும் அதே நடிப்புதான். வேதனை தாளாத முகச்சுளிப்பு. அடிவயிற்றைத் தாங்கிப் பிடித்து கோணி நின்ற பாவனை.
“சரி... போய்த் தொலை”
இங்கிலீஷ் வாத்தியாரைச் சந்திக்காமல் தவிர்த்தாகிவிட்டது. போயம் தெரியாமல், பேய் முழி முழிக்க வேண்டியதில்லை. பிரம்படியின் சுளீரடிகள் பட வேண்டியதில்லை. தப்பித்தாகி விட்டது.
இதே வயிற்றுவலியைச் சொல்லி... அழுது புலம்பி அம்மாவைக் கரைத்து... கலர் குடித்துவிடவும் செய்யலாம். ஒரே கல். ரெண்டு காரியம். அடி சக்கை!
அம்மா வீட்டில்தான் இருப்பாள். கூலி வேலைக்கும் நாலு நாளாய் கூப்பிடுவாரில்லை. காலையில் கூட அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
“கூத்துவன் பண்ணுற கொடுமை. மழை தண்ணியில்லாம அத்துப் போச்சு. காடுகரைகள்லே வெள்ளாமையில்லே. மனுச மக்களுக்கு வேலை ஜொலியில்லே. கூலி சனம் என்னத்தை வைச்சு... வவுறு நனைக்க?”
கடைக்காரர் கடன் கொடுக்க மலைத்தாராம். ‘பாக்கி ரொம்ப இருக்கு. எப்படி கொடுக்க?’ என்று குதர்க்கமாய் விசாரித்தாராம். அம்மா அதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
‘ஏவாரி வரட்டும். இருக்குற நாலு கோழிகளையும், ஒரு சேவலையும் எடை போட்டு வித்துட்டு... கடைக்காரர் பாக்கியை அடைக்கணும்’ என்று ரோஷம் ரோஷமாய் முணங்கினாள். இந்நிலையில்...
“எம்மா... கலரு வேணும்” என்று கேட்டால்... ஆங்காரம் தாங்காமல், அடிக்கவே வருவாள். செத்துப்போன அய்யாவை படைத்த சாமியை - வாய்த்த வாழ்க்கையை - எல்லாத்தையும் கூட்டிப் பிடித்து திட்டித் தீர்ப்பாள்.
“தாய் தவுட்டக்கு அலைஞ்சாளாம். புள்ளை இஞ்சிப் பச்சடி கேட்டு அழுதானாம். அப்படியில்லே இருக்கு உங்கதை” என்று சொலவடை சொல்லி வைவாள்.
ஆனாலும்... இன்னைக்கு எப்படியாச்சும் கலர் குடிச்சேயாகணும்.
ஆறுமுகத்துக்குள் பதுங்கிப் பதுங்கி நகர்கிற யோசனைகள். குறி மீது பாய்ச்சலுக்கு பம்மிப் பம்மி நகர்கிற பூனை நினைவுகள்.
வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. வாசலில் தலை வைத்து அம்மா படுத்திருந்தாள். அம்மாவின் மெல்லிசான குறட்டை.
இவனது பிஞ்சுக் காலடி அரவம். மண்ணில் செவ்வந்திப் பூவிழுகிற சத்தம். ஆனாலும் மகன். ரத்தப் பிறப்பு. அந்த மெல்லிய அதிர்விலேயே விழித்துக் கொண்டாள்.
பைக்கட்டோடு ஆறுமுகம். அவள் பதறவில்லை. பதைக்கவில்லை. என்னமோ ஏதோ என்று துடிக்கவுமில்லை. பிள்ளை குணம் அறியாத பெத்தவளா?எதிர் வீட்டு நிழலைப் பார்த்து, நேரத்தை உணர்ந்து கொண்டாள். மகனைப் பார்த்து கேலிச் சிரிப்பாய் வரவேற்றாள்.
“போன மச்சான் திரும்பி வந்தான்... பூமணத்தோடங்குற கதையா வந்து நிக்கீயே... என்னலே?”
“வாத்தியாரு போகச் சொல்லிட்டாரு.”
“எதுக்கு?”
“வவுத்தவலி.”
“வாத்தியாருக்கு வவுத்தவலின்னா... ஒன்னை எதுக்குப் போகச் சொல்லுதாரு? கோயமுத்தூர்லே இடி இடிச்சா...குத்தாலத்துல மழையா பெய்யும்?”
பைக்கட்டை வீட்டுக்குள் போட்டான். அம்மா காலடியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து சுவரில் சாய்ந்தான். அம்மாவின் கிண்டலில் புண்பட்டவனைப் போல, முகத்தில் ஒரு சிடுசிடுப்பு.
“வாத்தியாருக்கில்லே... எனக்குத்தான்.”
“ஒனக்கா? வவுத்தவலியா?”
“ஆமா. அடிவவுத்துலே ‘சுருக், சுருக்’குன்னு குத்துது.”
“கோழிக்கறியும் சோறுமா தின்னுட்டுப் போனே? கொடல்லே குறுக்கே வுழுந்து வவுத்தை வலிக்க? பழைய கஞ்சிதானே குடிச்சிட்டுப் போனே?”
“ஆமா...”
“பெறகெதுக்கு வவுத்தவலி?”“என்னத்துக்கோ!”
ஆறுமுகத்துக்குள் ஒரு புழு ஊர்ந்து செல்கிற மாதிரியான ஓர் உணர்வு. அம்மாவின் நக்கலும் நையாண்டியுமான குரல். இவனை நம்பவில்லை.இவன் ஏமாற்றில் ஏமாறாமலிருக்கிற அம்மா.
கலர் கிடைக்காமப் போயிருமோ... கதை கந்தலாகிப் போகுமோ... கடை வாசலில் வெள்ளை வேட்டிகள் குடித்த திரவம். அன்னைக்குக் குடித்த கலர். விட்ட ஏப்பம். மனசுக்குள் சோடா மூடிகள் விழுந்த ‘கலீர் கலீர்’ சத்தம்.
“அப்ப... வவுத்தவலிக்கு? ஊம்?”
“ஆமா. தாங்க முடியலே.”
“இன்னிக்கு ‘வெளியே’ போனீயா?”
“ம்.”
“போனதா?”
“அதெல்லாம் போச்சு.”
“அப்படியா...?” அம்மா யோசிக்கிறாள். சில கணங்கள் இவனுக்குள் ‘படக், படக்.’
“அஞ்சறைப் பெட்டியிலே ஒரு சுக்குத் துண்டு கெடக்கு. அம்மியிலே வைச்சு உணுக்கித்தாரேன். சக்கரைக் கட்டியைக் கடிச்சுக்கிட்டு தின்னுரு. வவுத்தவலி, மாயமாய்ப் போயிடும். ம்?”
“சுக்கா? அதெல்லாம் வேண்டாம்.”
“ஏண்டா?”
“அது ஒறைக்கும். அந்த ஒறைப்பை எவன் தாங்க?”“வலிவுடணும்னா... ஒறைப்பை தாங்கித்தான் ஆகணும். விழுந்த பொதியை, சொமந்துதான் தீக்கணும் கழுதை.”
மகன் முகத்தையே பார்க்கிற அம்மா. விசனப்பட்ட சின்ன முகம். வயிற்றையே நசுக்கி அமுக்கி விடுகிற கை. கோபமும், வேதனையுமான முகம். “நிஜத்திலேயே... வவுத்தவலி தானோ...”
பெருமூச்சோடு எழுந்தாள். புளித் தண்ணீர்ப் பானையில் ஒரு கிளாஸ் முகர்ந்து கொடுத்தாள்.
“குடிடா... சூட்டு வவுத்த வலின்னா... வுட்டுரும்.”
“வேண்டாம்... போ.”
“சுண்ணாம்பை கால் வெரல் நகங்கள்லே தடவட்டுமா? உள்ளங்கால்லேயும் தடவுனா... சூடு தணிஞ்சிடும்.”
“சுண்ணாம்பா? பொத்துப் புண்ணாப் போயிடும்.”
“வெத்தலையிலே சோத்துக்குப் போடுற உப்புக் கல்லை சுத்தித்தாரேன். மென்னு முழுங்குறீயா?”
“நீதான் முழுங்கு... அதை.”
சகிக்க முடியாத வெறுப்பில் எரிந்து விழுகிற ஆறுமுகம். அவனது சின்னக் கண்ணில் கோபத் தகிப்பு. நிராசையின் அரூபச் சுமையை முன்னுணர்ந்து விட்ட வலியின் துடிப்பு. அம்மாவுக்கு மெல்லிசான கோபம்.
“என்னதான்... செய்யணும்கே? வவுத்தவலின்னு வந்து நின்னு, உசுரைப் புடுங்குறே?”“சோடா குடிச்சா சரியாப் போவும்!”
“சோடாவா... கலரா...?”
ரெண்டு பேர் பார்வைகளும் திடுமென்று மோதிக் கொண்டன. கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த மைய உண்மையை நெருங்கி விட்ட மாதிரியோர் உணர்வு.
அந்தரங்கம் பிடிபட்டுப் போச்சோ என்கிற தடுமாற்றத்தில் விலகுகிற மகனின் பார்வை. அவன் கண்ணுக்குள் முகம் காட்டிவிட்டு மறைகிற ஒரு கள்ளத் தனம்.
“சொல்லுடா... சோடாவா, கலரா...?”
“ஏதாச்சும் ஒன்று.”
முணுமுணுப்பாக கிசுகிசுக்கிற ஆறுமுகம். தொண்டைக்குள் உயிராக பம்மிப் பதுங்கிற குரல்.
“கடையிலே போய்... வாங்கிக்கறியா?”
“அப்ப...துட்டு குடு.”
“ஊம்... சாயங்காலம் பால் வாங்கலாம்னு வைச்சிருந்தேன். அதுக்கும் சனியனா நீ வந்துட்டீயா?”
கவலைப் பெருமூச்சோடு... முந்திமுடிச்சை அவிழ்த்தாள். ஒன்னரை ரூபாய். எடுத்து நீட்டிவிட்டு... வெறும் முந்தியை உதறினாள். கடந்த கால முடிச்சின் அடையாளமாய் சுருக்கங்கள். வெறுமனே காற்றில் அசைந்தது. சோகமாய்.
துட்டை வாங்கிக் கொண்டான். அவனுக்குள் றெக்கையடிக்கிற சந்தோஷப் படபடப்பு. விசிலடிக்கிற மனப் பரபரப்பு.ஒரே ஓட்டமாய் ஓடினான். சிட்டாய்ப் பறந்தான். ஆகாயத்தில் மிதக்கிற ஆனந்தக் கிறுகிறுப்பு.
ஆசை ஆசையாய் ஓடினான். அவனுக்கும் முன்னால், அவன் மனசு. பாய்ச்சல் வேகத்தில் கடையில் நின்றான். கலர் வாங்கினான். ஆசை ஆசையாகக் குடித்தான். ஆரஞ்சுக் கலர். மிடறு மிடறாக, பதறாமல், ஆற அமர... ரசித்து ரசித்துப் பருகி...
நாக்கில் பரவுற தித்திப்பு. வருகிற ஏப்பம். நாசிக்குள் முட்டுகிற ஆரஞ்சு வாசம். நாக்கில் படிந்திருக்கும் திரவ நிறத்தைப் பார்க்கணும், கண்ணாடியில் வீட்டுக்கு ஆவலாய் வந்தான். வாசலை நெருங்கினான் அங்கே-
சோகத்தில் நனைந்து துவண்டு போன அம்மாவின் அங்கலாய்ப்புக் குரல். அழுகைக் கசிவான குழைவுக் குரல். தனிமைப் புலம்பல்.
“நாவுக்கு ருசியா நாலு பண்டங்க வாங்கிக் குடுக்குறதுக்கு வக்கத்துப் போன இந்தப் பாதகத்தி வவுத்துலே வந்தா... நீ பொறக்கணும்? ஏந்தங்கப் பெட்டி... ஒரு கலருத் தண்ணிக்கு இம்புட்டு வேஷமும் பாவ்லாவுமா... நீ போடணும்?”
வாழ்வின் அவலமாய் அம்மாவின் குரல். ஆறுமுகத்தை கற்றையாய் அறைந்த அம்மாவின் உள் மனரணம். இப்போது கலர் கசந்தது, ஆறுமுகத்துக்கு.
10-3-96 கல்கி