உயிர்க்காற்று/011
கரும்பு
கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரியிருக்கிறது, ராமசுப்புவுக்கு. ‘என்ன செய்ய, ஏது செய்ய’ என்று ஓர் இழவும் புரியவில்லை. எல்லா வழிகளும் அடைபட்டுப்போன மாதிரி...ஓர் முட்டிப்பு.
எல்லார்கிட்டேயும் கடன் கேட்டுப் பார்த்து விட்டான். மாறி மாறி வந்து முகத்தில் சப்பென்று அறைந்த ஏமாற்றங்கள். தோல்விகள். கடைசியிலும் கடைசியான நம்பிக்கையோடு மாரிச்சாமியிடம் போய் நின்றான். கடனாகக்கூட இல்லை. கைமாற்றாகத்தான் கேட்டான்.
மனசில் ஒட்டியிருந்த நம்பிக்கையின் கடைசித் துளியும் உலர்ந்து போயிற்று. ரொம்பத் துவண்டு போனான், ராமசுப்பு. ‘என்ன செய்ய’ என்கிற கேள்வி, கண்ணைக் கட்டிய குழப்பமாக நின்றது. நெஞ்சுச் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கியது.
வீட்டுக்கு எப்படிப் போக? எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு ரங்கம்மாவை எதிர்நோக்க...? ரங்கம்மாவை விட்டுத் தள்ளு... இவனே எப்படிப் பிள்ளைகளைப் பார்க்க?
... போன ஐப்பசி மாசம். தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. ரங்கம்மா வாசல் நடையில் உட்கார்ந்து சிறு ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தாள். நூல் நுனியை பல்லால் கடித்துத் துப்பி ஈரப்படுத்தி... முறுக்கி விட்டு... நுட்பமாக கோர்த்தாள்.
“ஏலேய்... இங்க வாடா...”
மூத்தவன் வந்தான். “என்னம்மா...?”
“இதைப் பிடிச்சுக்க... நா தைக்கணும்டா...”
கிழிசலை பிடித்துக் கொண்டு அம்மா தைக்கிறவரை உட்கார்ந்திருக்கிற பொறுமையில்லை... அவனுக்கு. “போம்மா... நா வெளையாடப் போவணும்.”
“ஏலேய்... வாடா கண்ணு...”
“போம்மா...போ...”
தெருவில் குதித்தான். சிட்டாய்ப் பறந்து விட்டான். திண்ணையில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த ராமசுப்புவைப் பார்த்து முறைத்தாள், ரங்கம்மா.
“பாத்தீகளா... உங்க புள்ளையை? கொஞ்சமாச்சும் பயமிருக்குதா?”
“எதுக்கு பயப்படணும்? நீயும், நானும் சிங்கமும், புலியா?”
“இப்படி எந்தத் தகப்பனாச்சும் பேசுவாகளா? எனக்குன்னு வந்து வாய்ச்சீகளே...”
என்று சலித்துக் கொண்ட ரங்கம்மா, இளையவளைக் கூப்பிட்டாள். “அடியே... இங்க வா. நீயாச்சும் இதைப் பிடி. தைச்சுக்கிடுதேன்.”
வந்தாள். அம்மா பிடித்துக் காட்டியபடி சேலையின் கிழிசலை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள் எட்டு வயசு பட்டாம் பூச்சி. அவள் பாவாடையிலும், சட்டையிலும் கூட கிழிசல்கள். அதைத் தொட்டுப் பார்த்த ரங்கம்மா. அர்த்தம் பொதிந்த கோபத்துடன் புருஷனைப் பார்த்தாள்.
கேலிச் சிரிப்பாணியாக இருந்த ராமசுப்பு, அந்தப் பார்வையின் தாக்குதலில் வெலவெலத்துப் போனான். வாழ்க்கையின் தாட்சண்யமற்ற மூர்க்கத்தைத் தாள முடியாத தத்தளிப்பு.
வாடிப்போன முகத்துடன் குற்ற உணர்வில் தலைகவிழ்ந்தான். முகத்தை எதிர்கொள்ள இயலாமல் அலைபாயும் பார்வையாக வேறுபக்கம் பார்த்தான்.
விடாமல் ரங்கம்மா வார்த்தைகளால் கவ்வினாள்.
“ஏங்க... கிழிஞ்சி போன துணிமணிகளோட புள்ளைக குறைக்கோலமாத் திரியுதுகளே... பாத்தீகளா?”
“ம்”
“தீபாவளிக்காச்சும் ரெண்டு துணிமணி எடுக்கலாம்லே?”
“ஒனக்குத் தெரியாதா? கையிலே வைச்சுக்கிட்டு வஞ்சகமா பண்ணுதேன்?”
“மானத்தை மறைக்க துணிமணி வேண்டாமா? பாக்குறவுக நம்மளைக் கேவலமா நெனைச்சு, சிரிக்க மாட்டாகளா?”
“தெரியத்தான் செய்யுது. கடன் கிடன் வாங்கி நெலத்துலே போடுற காலம்... மண்ணடிக்கணும். குப்பையடிக்கணும், நடுவை நட்டணும்”“காலம் பூராவும் வேலைப்பாடுகதான். பாடுபட்டு என்னத்தைக் கண்டோம்? தீபாவளிப் பண்டிகை வெறும் பண்டிகைதானா?”
“ரங்கம், நாம தமிழ்ச் சம்சாரிக. தைப்பொங்கலைத் தானே கொண்டாடணும்? தைப் பொங்கல்தான் தமிழ்ச் சாதிகளோட நல்ல நாள்”
“இந்த வாய்சாமர்த்தியத்துலே ஒன்னும் கொறைச்சல் இல்லே”
- என்று ரங்கம்மா வேதனையும், கோபமுமாய் நொடித்துக் கொண்டாள். உஸ்ஸுன்னு உக்கார நேரமில்லாம ராவுண்ணும் பாராம, பகலுன்னும் பாராம பாடுபடுற நமக்கு... உடுத்தக்கூட உருப்படியா ஒரு நல்ல சீலையில்லியே என்கிற நினைப்பு.
புருஷன் மீது மட்டுமல்ல... சூழ்ந்த வாழ்க்கையின் மீதே வந்த கொதிப்பாக பொங்கிச் சீறிய நினைப்பு. ஊசியைக் குத்திக் குத்தி உருவினாள். அம்மாவின் மனக் கொதிப்பையும், முகச் சிணுங்கலையும், யாரையோ சபிக்கிற முணுமுணுப்பையும், சின்னவள் மவுனமாகப் பார்த்தாள். அந்தச் சின்ன விழிகளில் புரியாமையும், குழப்பமும்.
தீபாவளிக் கண்டத்திலிருந்து தப்பித்துவிட்ட நிம்மதி, ராமசுப்புவுக்கு. தைப் பொங்கலுக்குத் தள்ளிப் போட்டது...நாளை நகர்த்த மட்டுமல்ல... நிஜமாகவே தைப் பொங்கலுக்குள் கணிசமாகப் பணம் கிடைத்துவிடும் என்று நினைத்தான். அப்படி நம்புவதற்கான நியாயம் இருந்தது. சாத்தியம் இருந்தது. அந்த ஐப்பசியில் அந்த நம்பிக்கை ரொம்ப ரொம்ப நிச்சயமாக இருந்தது.காரணம்... அப்போதுதான் கரும்பு நட்டியிருந்தான்.
கரும்பு... இந்த ஊருக்கே புதுசு. மிளகாய் வற்றல், பருத்தி, கம்பு, சோளம் என்று மட்டுமே வெள்ளாமை ஊருக்குள். இவன் கிணற்றில் மட்டும் தண்ணீர்ச் செழுமை. நெல்லும் போடுவான். அப்பத்தான் சர்க்கரை மில்லுக்காரர்கள் கரும்பு போடும்படி சொன்னார்கள், ஊர்ச் சம்சாரிகளிடம். யாரும் செவிசாய்க்கிற மாதிரி தெரியவில்லை.
கரும்பு போட்டால்... ஏக்கருக்கு 40 டன் விளையும் என்று சாதித்தார்கள். இவனுக்கும் போட்டுப் பார்க்க ஆசைதான். ஆனால்...
கரும்பு போட்டால், அந்தளவுக்கு தண்ணீர் காணாது. ரெண்டு கெஜம் வெட்டினால் தண்ணீர் பெருகும். சரிக்கட்டி விடலாம். கிணறு வெட்டுவது என்றால்... சும்மாவா? பத்தாயிரம் ஆகுமே...
இவன் மெல்ல வாய் விட்டான், மில்லுக்காரர் ஒரே பிடியாக இவனைப் பிடித்துக் கொண்டார். கிணறு வெட்ட பத்தாயிரம் லோன் வாங்கித் தருவதாக சத்தியம் செய்தார்.
“அதெப்படி... முடியும்? லோன் வாங்குறதுன்னா... சும்மாவா? எம்புட்டு அலையணும்? எம்புட்டு நாளாகும்? அதுக்குள்ளே பயிர் பச்சைக வாடிப்போகும்...”
“அதெல்லாம்... நீங்க லோன் வாங்கப் போறப்பதான்... அப்படி. நாங்க அப்படியில்லே. மில்லு மேனேஜர் போன் போட்டு பேசுனார்னா... ரெண்டே நாள்லே லோன் உங்களைத் தேடிக்கிட்டு வந்து சேரணும்”
“மேனேஜர் போன் போடுவாரா?”
“நாங்க எதுக்கு இருக்கோம்? உங்களுக்கு மான்யம் குடுத்து நட்டவைக்கிற கரும்பு, நல்லா வெளைஞ்சாத்தானே எங்களுக்கு ஆதாயம்? லோன் வாங்கித் தர்றது எங்க கடமை. நிச்சயமா செய்ஞ்சு தர்றேன்”
மில்லுக்காரர் இவனிடம் பின்னிப் பின்னிப் பேசினார். அவர் சொல்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. அப்படியிருந்தது, அவர் பேச்சு. கரும்பாய் தித்தித்தது.
நம்பினான். கிணறுவெட்ட லோன் வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையின் பலத்தில் துணிச்சலாக அந்தப் புதுக் காரியத்தில் இறங்கிவிட்டான்.
ஆவணி புரட்டாசியில் பருத்தியும், பங்குனி சித்திரையில் ஒட்டுக் கம்பும் பயிரிடக்கூடிய ரெண்டு ஏக்கரில் கரும்பு நட்டினான். இவனுக்கு ஏகப் பெருமை. விதைக் கரும்பை வெட்டித் துண்டாக்குவதையும் துண்டுகளை ஊன்றுவதையும் ஊர்ப் பெரிசுகள் வந்து ரொம்ப ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
கரும்பு நன்றாகத்தான் வளர்ந்தது. இடுப்பு உயரத்துக்கு வந்தது. சாம்பல் நிறத் தோகைகள், உள்ளே தண்ணீர் பாய்ச்சப் போனால் உடம்பெல்லாம் உரசும். அந்த உரசல் ஒரு சுகமாக இவனுக்குள் பரவும். கரும்பு, நிறைய கனவுத் தோகைகளை வளர்த்தது. டன்கணக்கான கனவுகள், சீனிக் கனவுகள், இனிப்பு இனிப்பான பணக் கனவுகள், டன் டன்னாக பணக் கனவுகள்.நெல் நாற்றங்கால் வளர்கிறவரை பிரச்சினையில்லை. நடுவை நடந்தது. நெல் பயிரிடாமல் இருக்க முடியாது. வருஷப் பாட்டுக்கு நெல் வந்துவிடும். சோற்றுக் கவலையை இல்லாமல் ஆக்கிவிடும்.
நெல் நடுவைக்குப் பிறகு... கரும்புக்கு நீர் பாய்ச்ச வழியில்லை. நீரில்லை. மழையுமில்லை. கிணறு வெட்டலாம் என்று பார்த்தால்... கையில் பணமுமில்லை.
மில்லுக்காரப் பிரதிநிதி ‘வருவார், வருவார்’ என்று வழிபார்த்து காத்துக் கிடந்தான், ராமசுப்பு. ‘லோன் வாங்கித் தந்தால் கிணறு வெட்டலாமே’ என்று மனசுக்குள் ஆலாய்ப் பறந்தான்.
சத்தியம் பண்ணினாரே... என் கடமை என்றாரே... ‘போன்போட்டால் ரெண்டே நாளில் கையில் கிடைக்கும்’ என்றாரே...
வருகிற மாதிரித் தெரியவில்லை. கைச் செலவை யோசிக்காமல், பஸ்ஸேறி, ரெண்டு தடவை மில்லுக்கும் போனான். அந்தப் பிரதிநிதியை ‘தேடு, தேடு’ வென்று தேடினான். யார் யாரிடமோ விசாரித்தான். எல்லோரும் கேணப் பயலைப் பார்த்த மாதிரி ஏளனமும் இகழ்ச்சியுமாய் இவனைப் பார்த்தனர்.
ராமசுப்பு உள்ளுக்குள் ரொம்ப நொந்து போனான்.
இவனை ஏமாற்றி விட்டார்கள். வஞ்சித்து விட்டார்கள். மில்லுக்கு வேண்டிய கரும்பை பயிரிட வைப்பதற்காக, இவனை ஆசை காட்டி மோசம் பண்ணிவிட்டார், அந்தப் பிரதிநிதி.‘ச்சேய்... தமிழ்ச் சம்சாரியை தமிழ் மில் முதலாளிகளே ஏமாற்றிச் சாறு பிழிகிறார்களே’ என்று உள்ளுக்குள் கசந்து போனான்.
கிணற்றை எட்டிப் பார்த்தான். வாழ்க்கையைப் போல வறண்டு கிடந்தது.
ரங்கம்மா நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“பருத்தி போட்டுருந்தா... பத்து குவிண்டாலாச்சும் வெடிச்சிருக்கும். கோடையிலே கம்பு பத்தாயிரத்துக்கு வந்துருக்கும். எடுக்காத எடுப்பெடுத்து... பொம்பளை பேச்சு கேக்காம, நாசம் பண்ணித் தொலைச்சுட்டீகளே... ஒரு வருஷ வெள்ளாமையே... மண்ணாக்கிட்டீகளே...”
கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்ச வழியில்லை. சாம்பல் நிறத் தோகைகள் வெள்ளை வெள்ளையாக வெளிறி விட்டன. சாவின் பயத்தில் முகம் வெளுத்துப் போன கரும்புத் தோகைகள். நீரில்லாமல் மரண விளிம்பில் கரும்பு.
மாசம் ஒரு தண்ணீர் பாய்ச்சுவதற்கே... ‘ஆத்தாடி அம்மாடி’ என்று திண்டாடித் தவிக்க வேண்டிய கொடுமை.
பிரதிநிதியோடு சேர்ந்து வானமுமா ஏமாற்ற வேண்டும்?
கரும்புத் தோகைகள் வாடி உலர்ந்துபோய் தேன் நிறத்துக்கு வந்து... ஊளைக்காற்றில் சத்தமாய் சலசலத்தன. இவனது கனவுகளும் உலர்ந்து போய்... கதிர் பருவத்துக்கு வந்துவிட்ட நெல், பருத்தி, மிளகாய் என்று வேறு வெள்ளாமையில்லை. அதுதான் கரும்பு பிடித்துக் கொண்டதே...எந்தப் பண வருமானத்துக்கும் வழியில்லை. எதை நம்பி எவன் கடன் தருவான்?
தைப் பொங்கலை எப்படித் தாண்ட? தீபாவளியை ஏமாற்றியாகி விட்டது. ‘தமிழ்ச் சாதியின் திருநாள் தைப்பொங்கல்’ என்று அப்போது காட்டிய வாய்ச் சாமர்த்தியம்.
இப்போது...
தைப் பொங்கலுக்கு துணிமணி எடுக்கணுமே. எடுத்தாகணுமே... உடுத்தத் துணியில்லாமல் பிள்ளைகள் கிழிசலும் தையலுமாய் நூல் நூலாய் தொங்குகிற பிள்ளைகளின் சட்டைகள்.
எப்படிப் பார்த்தாலும்... 1000 ரூபாய் வேண்டுமே... எவனும் தரமாட்டேன் என்கிறானே... என்ன செய்ய?
கழுத்தாம்பிடியாக வந்து நெருக்குகிற கேள்வி. தோள்த் துண்டைப் பிடித்து உலுக்குகிற கேள்வி.
“துணிமணி எடுக்க என்னமும் வழியிருக்கா?” என்று கேள்வி கேட்பாளே... ரங்கம்மா, அவளுக்கு என்ன பதில் சொல்ல?
“அய்யா”
திரும்பினான், மூத்த பயல்.
“என்னடா?”
“அம்மா கூப்ட்டாக.”
“எதுக்குடா?”
“ஒங்களைத் தேடிக்கிட்டு யாரோ வந்துருக்காக...”
மூத்தவனோடு கிளம்பினான். மனசுக்குள் குழப்பம் ‘யாராக இருக்கும்’ என்கிற திகைப்பு.போய்ப் பார்த்தால்... சர்க்கரை மில்லுக்காரர். ‘அந்த’ப் பிரதிநிதியில்லை. ஏமாற்றிய அந்தப் பிரதிநிதியில்லை. வேறு ஆள். கரும்பு விலைபேச வந்திருந்தார். புஞ்சைக்குப் போனார்கள். அந்த ஆள் சுற்றிப் பார்த்தார். நீர் பாய்ச்சாமல் வாடவிட்டதைக் குற்றம் சொன்னார். இவன் சொன்ன புகார்களை - நிலவரங்களை - காதில் வாங்கவேயில்லை.
“என்ன பாடுபட்டாச்சும் கரும்புக்குத் தண்ணி பாய்ச்சிருக்கணும்” என்று கமலை வண்டிச் சத்தம் மாதிரி திரும்பத் திரும்ப கீச்சிட்டார். ‘நம்ம புள்ளய நாமா கழுத்தை நெருச்சி கொல்லுவோம்? இவர் பெருசா... உபதேசம் பண்ணுதாரே!’
ராமசுப்புவுக்குக் கோபம் என்றால்... கோபம், அப்படிக் கோபம் வந்தது. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘நம்ம புத்திக் குறைவுக்கு யாரைக் குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது...’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
கரும்பின் விளைச்சலின்மையை மாறி மாறி... சொன்னார். 6 டன் தேறும் என்று மதிப்பிட்டார். டன் 700 ரூபாய் ரேட் கிடைக்கும் என்றார். சனியன் விட்டுத் தொலைந்தால் போதும் என்று அட்வான்ஸை வாங்கினான். ஒரு வருஷ வெள்ளாமை போச்சே என்று மனசு கிடந்து மருகித் தவித்தது.
பருத்தியும் கம்பும் போட்டிருந்தால்... இருபத்தையாயிரத்துக்குக் குறையாது. கரும்பு...? வெறும் மூவாயிரம் கை சேருமா என்பதே சந்தேகம்தான்.‘உழுதவன் கணக்குப் பார்த்தால்... உழக்கு கூட மிஞ்சாது’ என்கிற சொலவடை சரியாய்ப் போயிற்றே என்று சோகமாக நினைத்துக் கொண்டான்.
தைப் பொங்கல். புதுத் துணிமணிகளை உடுத்திக் கொண்டு மூத்தவனும், இளையவளும் சந்தோஷ வெள்ளத்தில் தத்தளித்தனர். “அய்ய்... புதுச் சட்டை... அய்ய் எனக்கு புதுப் பாவாடை” என்று குதூகலக் காற்றாக சுழன்று வந்தனர். ராமசுப்புவுக்கும், ரங்கம்மாவுக்கும் புதுத்துணிமணிகள்தான். ஆனால்... ஏதோ கிழிந்து போய் விட்டிருப்பதை உணர்ந்த மாதிரி, மனசெல்லாம் கசப்பு.
15-1-96 கதிரவன், தீபாவளிச் சிறப்பிதழ்