உள்ளடக்கத்துக்குச் செல்

உரிமைப் பெண்/அவள் வளர்த்த கடாரி

விக்கிமூலம் இலிருந்து
(உரிமைப் பெண்/ அவள் வளர்த்த கடாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)



அவள் வளர்த்த கடாரி

“வள்ளியாத்தா, படுக்கப் போகிறதற்கு முன்னே கட்டுச்சோறு கொஞ்சம் கட்டி வையம்மா; நாளைக்கு நேரத்திலே சந்தைக்குப் போகவேனும்” என்று வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக்கொண்டே வீரப்பன் சொன்னான். நாள் முழுவதும் கூலிவேலை செய்துவிட்டு வந்த அவன் களைப்பாறக் குடிசைத் திண்ணையின் மேல் உட்கார்ந்திருக்கிறான். அவன் மகள் வள்ளியாத்தாள் உள்ளே வேலை செய்துகொண்டிருக்கிறாள். எங்கிருந்தோ மாயமாக வந்து இருள் பாவிக் கொண்டிருந்தது.

“எந்தச் சந்தைக்குப் போகிறீர்கள்? துடியலூருக்கா?” என்று வேலை செய்துகொண்டே கேட்டாள் மகள்.

“ஆமாம், நாளைக்குக் திங்கட் கிழமையல்ல? இந்தக் கடாரியைச் சந்தைக்குக் கொண்டு போகலாம்னு இருக்கிறேன்.”

"என்னத்துக்கையா அதை இப்போ விற்கவேனும்? இன்னும் ரெண்டு மூன்று மாசம் போனால் கன்றுப் போடுமே?”

"ஆமாம், கன்றுப் போட்டால் எச்சு விலைக்குத்தான் போகும். ஆனால் செலவுக்கு அவசரமாகப் பணம் வேணுமே?”

“இப்போ என்ன அப்படிச் செலவு?” என்ற யோசனையுடன் கேட்டாள் மகள்.  தகப்பன் பதில் சொல்லுவதற்குச் சற்றுத் தயங்கினான். எப்படி ஆரம்பிப்பது என்று அவனுக்குத் தோன்றவில்லை. வேறு ஏதாவது விஷயமாக இருந்தால் அவனுக்குத் தயக்கமே இராது. அவன் இதுவரையில் தன் மகளிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை. அவன் மனைவி தன் நான்கு வயசுக் குழந்தையான ஒரே மகளை விட்டுவிட்டுத் திடீரென்று வாந்திபேதியால் இறந்தது முதல் வீரப்பனுக்கு அந்த மகள்தான் உயிர். அவன் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டான். அவனுடைய தங்கை மராயி வெகுநாள் வரையிலும் மன்றாடிப் பார்த்தாள்; அவன் இணங்கவில்லை. தன் குழந்தையின் மேலிருந்த அன்பினாலேயே அவன் அப்படி உறுதியாக இருக்கிறான் என்று அனைவரும் உணர்ந்துகொண்டனர்.

மனைவி இறந்த சில மாதங்கள் வரையில் அவன் தங்கை தன் கணவன் விட்டிலிருந்து வந்து அவனுடன் தங்கியிருந்தாள். உதவிக்கு அவளல்லாமல், வீரப்பனுக்கு, வேறு நெருங்கிய உறவினர்கள் இல்லை. மாராயியின் புருஷனும் தன் மைத்துனனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து அவளை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டான். ஆனால் அவள் எவ்வளவு காலம் இப்படி இருக்க முடியும்? அவளும் தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டாமா? அதனால் வீரப்பன் ஒருநாள் அவளிடம், மாராயி, நீ இங்கேயே இருந்தால் உன் வீட்டிலே மாமியாருக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். அவர்களும் வயசானவர்கள்; எத்தனை நாளுக்குத்தான் வீட்டு வேலையெல்லாம் தனி யாகச் செய்வார்கள்? நாங்கள் என்ன, இரண்டு சீவன்கள்தானே? எப்படியோ சமாளித்துக் கொள்கிருேம்,நீ ஊருக்குப் போய் உன் வீட்டைக் கவனித்துக் கொள்; உன் குழந்கைகளையும் நன்றாகப் பார்த்து வளர்த்துவா” என்று அன்போடு சொல்லி அனுப்பிவிட்டான்.

அன்று முதல் வீரப்பன் தானகவே சமைப்பான்; குழந்தைக்குச் சோறு போடுவான். அவளுக்குக் தண்ணீர் ஊற்றுவான். இப்படியாக வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நேரம் தவறாமல் கூலி வேலைக்குப் போவான்; வள்ளியாத்தாளேயும் கூடவே கூட்டிச் செல்லுவான். அவன் கழனிகளிலே வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் மர நிழலிலே கல்லையும் ஒட்டையும் பொறுக்கி எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள்.

இப்படி வளர்ந்து பன்னிரண்டு வயதாவதற்குள் அவள் சிறிது சிறிதாகச் சமையல் செய்வதற்குக் கற்றுக்கொண்டாள். தளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தந்தைக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது. வீரப்பன் தினமும் கூலி வேலைக்குப் போய் வருவான். வந்ததும் தன் மகளோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் சமைத்து வைத்திருக்கும் சோளச்சோற்றையோ, ராகிக் களியையோ உண்பான். அவன் உண்ட பிறகு தானும் உண்டு, அடுத்த நாட்காலையில் வேண்டியிருக்கும் உணவைப் பத்திரமாக மூடிவைத்துவிட்டு வள்ளியாத்தாள் படுக்கச் செல்லுவாள். தந்தையும் மகளும் பேசிக்கொண்டே உறங்கி விடுவார்கள்.

வீரப்பன் சம்பாதிக்கும் கூலியைக்கொண்டு இவ்வாறு வாழ்க்கை எளிமை மணக்கும் இன்பமாக கடந்து வந்தது. ஆனால் மகளுக்கு வயசாக ஆக வீரப்பன் மனத்திலே ஒரு கவலை குடிபுகலாயிற்று. ஆண்டு முழுவதும் வேலை செய்தாலும் அவனால் இருபது ரூபாய் கூட மிச்சம் பிடிக்க  முடியவில்லை. அந்த நிலையில் தன் மகளுக்கு வயது வந்தவுடன் எப்படிக் கல்யாணம் செய்ய முடியும் என்று அவன் எண்ணமிடலானான். அவனுக்கு ஒரே மகள் தான் இருக்கிறாள். அவளுக்கு மரியாதையான முறையில் சீரெல்லாம் செய்து மணம் முடிக்க வேண்டுமல்லவா? இருநூறு முந்நூறு ரூபாய்கூட இல்லாமல் அதை எப்படிச் செய்வது? இந்த எண்ணம் அவனை வாட்டத் தொடங்கியது. தன் மகளைக் கூலி வேலைக்குப் போகும்படி சொல்லவும் அவனுக்கு விருப்பமில்லை.

பல நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று. அதன்படி அவன் ஒரு கடாரிக் கன்றை முப்பது ரூபாய் கொடுத்து வாங்கி வந்தான். அது நல்ல மயிலை; காங்கயம் வர்க்கத்தைச் சேர்ந்தது. பெரிதானால் முந்நூறு நாநூறு என்று விலைக்குப் போகும். வீட்டு வேலைகளை யெல்லாம் செய்துவிட்டு மற்ற நேரத்தில் வள்ளியாத்தாள் அதை மேய்த்து வரலானாள். சில நாட்களிலேயே அவளுக்கு அதன் மேல் அளவில்லாத பிரியம் ஏற்பட்டு விட்டது; மிகுந்த சிரத்தையோடு அதை வளர்த்து வந்தாள். மூன்று ஆண்டுகளிலே அது நல்ல அழகான கடாரியாகி ஈனும் பருவத்தை அடைந்து விட்டது.

அதை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வள்ளியாத்தாளுக்கு அடுத்த மாதத்தில் கல்யாணத்தை முடித்து விடுவதென்று வீரப்பன் இப்பொழுது தீர்மானம் செய்திருக்கிறான். தன் தங்கை மாராயியின் மகனுக்கே உரிமைப் பெண்ணாகக் கொடுத்து விடுவதென்று ஏற்பாடாகி விட்டது. ஆனால் அதைப்பற்றி மகளிடம் அவன் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. வேறு எல்லா விஷயங் களேப்பற்றியும் அவளுடன் கலந்து யோசிப்பவன் அவளுடைய மணத்தைப்பற்றி மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதைக் குறித்து அவளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? கல்யாணம் என்றால் அது பெற்றோர்கள் ஆலோசித்து ஏற்பாடு செய்யவேண்டிய காரியந்தானே? அதில் மகனுக்கோ மகளுக்கோ என்ன யோசனை இருக்கிறது? கிராமங்களிலே பாம்பரையாக இந்த நியாயந்தான் வழக்கத்திலிருந்து வருகிறது. அதையே வீரப்பனும் பின்பற்றினான். ‘சிறு பிள்ளைகளுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? எனக்குக் கல்யாணம் செய்தபோது என்னைக் கேட்டா செய்தார்கள்?’ என்று இப்படி அவன் எண்ணிக் கொண்டான். மேலும், தன் அருமை மகள் என்றாலும் அவளிடத்தில் கல்யாணத்தைப்பற்றிப் பேசுவதற்கு அவனுக்கு இயல்பாக வார்த்தை வரவில்லை.

அதனால்தான் அவன் இப்பொழுதுகூடப் பதில் சொல்லத் தயங்கினான். ஆனால் மகள் மறுபடியும் அதே கேள்வியை விடாது கேட்டாள். அவன் கொஞ்சம் சமாளித்துக்கொண்டு, “எனக்கும் வயசாகிவிட்டது. சிக்கிரமாக உனக்குச் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்துவிட்டால் மனசுக்கு நிம்மதியாக இருக்கும்” என்று ஒருவிதமாக மறுமொழி கூறினான்.

“இப்போ உங்களுக்கென்ன அப்படி வயசாய்ப் போய்விட்டது?” என்று தடுமாற்றத்தோடு வள்ளியாத்தாள் வினவினாள்.

“ஏன், சித்திரை வந்தால் ஐம்பது முடியுதே?”

“அதெல்லாம் ஒரு வயசா? என்ன இருந்தாலும் கடாரியை இப்போ விற்க வேண்டாமையா” என்று  சொல்லிக்கொண்டே மகள் கதவருகில் வந்தாள். அவளுக்கு இந்தக் கல்யாணப் பேச்சு முன்பே தெரியாததல்ல. யாரும் பெண்களிடம் அதைப்பற்றிக் கலந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்கு அதை நுட்பமாக அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. அத்தை மாராயி அடிக்கடி வருவதிலிருந்தும், உடன் பிறந்தவனுடன் தனியாகத் தாழ்ந்த குரலில் பேசுவதிலிருந்தும் அவள் விஷயத்தை அறிந்துகொண்டாள். அவளுக்குத் தன் அத்தை மகனை மணந்துகொள்வதில் விருப்பமில்லை. அவள் பழகியதெல்லாம் அவன் ஒருவனுடன்தான். வேறு இளைஞர்களுடன் அவள் அதிகமாகப் பேசியதுகூடக் கிடையாது. அவளுண்டு, அவள் வளர்த்த கடாரியுண்டு, வீட்டு வேலையுண்டு என்று இதுவரை இருந்து வந்தாள். என்றாலும் அத்தை மகனை மணப்பதற்கு அவள் உள்ளம் ஏனோ இடங்கொடுக்க வில்லை. அதைக் குறிப்பாகவாவது தன் தந்தைக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலோடிருந்தாள். இப்பொழுது அதற்குச் சமயம் வாய்த்துவிட்டதாக அவள் கருதினாள்.

“இப்போ விற்கப்படாதென்றுதான் எனக்கும் ஆசை. ஆனால் உன் அத்தை சும்மா அவசரப்படுத்துகிறாள்” என்று உட்கருத்தைப் பட்டும் படாததுமாக வீரப்பன் சொல்லி வைத்தான்.

“அத்தைக்கு வேலை என்ன?” என்று இதற்குப் பதில் சிறிது வெடுக்கென்று பிறந்தது.

என்னமோ சோசியன் சொல்லியிருக்கிறானாம். பையனுக்கு இந்த வருஷத்திலே நடக்காவிட்டால் பிறகு கல்யாணம் நடக்கவே நடக்காதாம். அதனால்தான் அவளுக்கு இத்தனை அவசரம்.” 

“சோசியன் என்ன வேண்டுமானாலும் சொல்லுவான். அவனுக்கென்ன? அப்படி அவசரமாக இருந்தால் எங்காவது போகிறது.”

“அப்படிச் சொல்ல முடியுமா? அவளுக்கிருக்கிற உரிமை எங்கே போகும்?”

இந்தச் சமயத்தில் வாசலிலே கட்டியிருந்த கடாரி ‘ம்மா’ என்று கத்திற்று. வள்ளியாத்தாள் வெளியே வந்து, தான் பிடுங்கி வந்திருந்த பச்சைப் புல்லில் கொஞ்சம் எடுத்து அதனருகே போட்டுவிட்டு அங்கேயே நின்றாள். அவள் மனத்திலே என்ன என்னவோ எண்ணங்கள் எழுந்து மோதின. சற்று நேரம் மெளனமாக இருந்து விட்டு, “ஐயா, இந்தக் கடாரியை விற்கவே வேண்டாம்; இது ஒன்றிருந்தால் எனக்குப் போதும்” என்றாள்.

“என்ன வள்ளியாத்தா, இப்படிச் சொன்னால் எப்படி....?”

“நான் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடத்திலே சொல்லுவேன்? அம்மாளா இருக்கிறாள்?” என்று சொல்லிக்கொண்டே அவள் தன்னையும் அறியாமல் அழுது விட்டாள்.

வீரப்பனுக்கு அந்த அழுகையின் பொருள் விளங்கவில்லை. தான் சொன்ன சொல்லை ஒரு நாளும் தட்டியறியாத மகள் அன்று கட்டுச் சோறு கட்டி வைக்காததன் குறிப்பும் அவனுக்குப் புலனாகவில்லை. கல்யாணப் பேச்சைக் கேட்டால் பெண்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்வது இயல்பு என்று எண்ணிக்கொண்டு அவன் காலையில் கடாரியைப் பிடித்துக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். அவன் அதைச் சாதாரணமாகப் பிடித்துக்  கொண்டு போனதில்லை. வள்ளியாத்தாள்தான் மேய்க்கக் கொண்டு போவது; தண்ணீர் காட்டுவது; கட்டுத்தறியில் கட்டுவது எல்லாம். இன்று புதிதாக அவன் பிடித்துக் கொண்டு அதட்டவே கடாரி பயந்து குடிசையை நோக்கிக் கத்திற்று. வள்ளியாத்தாள் கதவருகில் நின்று கொண்டிருந்தாள். அவள் கன்னத்திலே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தங்தையும் அதைக் கவனித்தான்.

“இத்தனை நாளாகப் பிரியமாக வளர்த்த கடாரியைப் பிரிவதென்றால் உனக்கு வேதனையாகத்தான் இருக்கும்; என்ன செய்யலாம்?” என்று கூறிக்கொண்டே வீரப்பன் போய்விட்டான்.

துடியலூர்ச் சந்தைக்குக் காட்டூரிலிருந்து ஒன்பது மைலிருக்கும். இரண்டு மைல் காட்டுப் பாதையில் சென்றுவிட்டால் பிறகு விசாலமான பாட்டை, அதில் போவது அத்தனை கடினமல்ல. இருந்தாலும் அந்தக் கடாரியைப் பிடித்துக்கொண்டு போவது பெருஞ் சங்கடமாக முடிந்து விட்டது வீரப்பனுக்கு.

வள்ளியாத்தாள் அன்று அடுப்பு மூட்டவே இல்லை; துக்கத்தோடு படுத்திருந்தாள். மாலையில் தகப்பன் பசியோடு வந்தால் என்ன செய்வதென்று கூட நினைக்கவில்லை. தனது வாழ்க்கையில் இருள் சூழ்வதைப்போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத உணர்ச்சி ஏற்பட்டது. தங்தையிடத்தில் நேற்றுவரை குழந்தையைப் போலத் தன் மனத்தில் தோன்றியதை யெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு இன்று வாயடைத்துவிட்டது. அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. தந்தை இரவிலே வீட்டிற்குத் திரும்பும் போது அவள் சோறு சமைக்காததையும், உணவு  அருந்தாமல் இருப்பதையும் பார்த்தாவது அவன் உண்மையை அறிந்துகொள்ளமாட்டானா என்று எண்ணியிருந்தாள். அந்த நம்பிக்கை ஒன்றுதான் அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடி வீரப்பன் அன்றிரவு திரும்பவில்லை. மறு நாளும் அவன் வரக் காணோம். அதற்கடுத்த நாள் பொழுது சாயும் வரையில் வரவில்லை.

கடாரியை விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராகத் தன் தங்கை வீட்டிற்குப் போயிருக்கலாம் என்று அவள் கருதினாள். தங்கையோடு கல்யாண ஏற்பாடுகளைப் பற்றியெல்லாம் உற்சாகமாகப் பேச்சு நடந்துகொண்டிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. இந்த எண்ணம் அவள் துக்கத்தை மேலும் அதிகமாக்கிற்று.

வள்ளியாத்தாளுக்குச் சென்ற ஆறுமாதங்களாக ஒரு தோழி கிடைத்திருந்தாள். அவள்தான் எதிர் வீட்டுச் சின்னப்பனுக்கு மனைவியாக வாய்த்த பாவாத்தாள். இருவரும் விரைவிலே நெருங்கிப் பழகி ஒருத்திமேலொருத்தி மிகுந்த அன்பு கொள்ளலானார்கள். வள்ளியாத்தாள் பாவாத்தாளை அக்காள் என்று அழைத்தாள். பாவாத்தாள் வீரப்பனைப் பெரியப்பன் என்று முறை கொண்டாடினாள். இளம் பெண்கள் இருவரும் தங்கள் உள்ளத் துடிப்பை யெல்லாம் தங்களுக்குள்ளே ஒளிக்காமல் பேசிக்கொள்வார்கள். பாவாத்தாளுடைய சொந்த ஊர் அங்கிருந்து பதினேந்து மைல் இருக்கும். அங்கேயே ஒர் இளைஞனுக்கு அவளை மணம் முடிப்பதாக நெடுநாள் வரையில் பேச்சிருந்ததாம். அவளுக்கும் அது உள்ளுற விருப்பமாம். ஆனால் சீர்வரிசைகளைப் பற்றி கடந்த பேச்சில் பெற்றோர்களுக்  குள்ளே உடன்பாடேற்படாததால் கடைசியில் அந்தக் கல்யாணம் நின்றுபோய் விட்டதாம். பிறகு பாவாத்தாள் காட்டூரில் என்றும் பார்த்திராத ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டாள். இப்பொழுது அவளுடைய உள்ளத்தைத் திறந்து காண்பிப்பதற்கு வள்ளியாத்தாள் ஒருத்திதான் உண்டு.

கிராமங்களிலே புதிதாக மணமான இளம் பெண்கள் தனியாக உட்கார்ந்துகொண்டு கண்ணீர் வடிப்பதைச் சாதாரணமாகக் காணலாம். தாய் தங்தையரைப் பிரிந்து புக்ககம் வந்ததால் அப்படிச் செய்கிறார்கள் என்று அனை வரும் சொல்வார்கள். இது பொதுவாக உண்மையாக இருக்கலாம். ஆனால் வேறு காரணமே இருக்காது என்று அவர்கள் தீர்மானமாக நினைப்பதுதான் ஆச்சரியம். அப்படி இருந்தால்தான் என்ன? நாளடைவில் ஒன்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடுகிறது. சமூகக் கட்டுப்பாட்டையெல்லாம் பார்த்துப் பார்த்து உள்ளம் சுருங்கி இளம் பெண்களும் தங்கள் நிலைமையை மெளனமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். பின்பு வாழ்க்கை அவர்களுக்கு இன்பமாகவும் மாறிவிடுகிறது. மறதி என்பது ஒர் அற்புதமான சக்தி யல்லவா?

கிராமச் சமுதாய வாழ்க்கை போதிக்கின்ற இந்தக் கருணையற்ற பாடத்தைத்தான் பாவாத்தாள் இன்று கற்றுக் கொண்டு வருகிறாள். அவளும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் கூர்மை மழுங்கிக் குடும்பச் சகடத்தில் கிரீச்சிடாது செல்லும் சக்கரமாகிவிடுவாள். அதுதானே வேண்டியது?

சென்ற இரண்டு மூன்று நாட்களாகப் பாவாத்தாளுக்கு வேலை அதிகம். பருத்திக்காடு களை வெட்ட வேண்டியிருந்தது. அதனால் தன் தோழியின் வீட்டுப் பக்கம் அவள் வரவில்லை. ஆனால் மூன்றாம் நாள் மாலையில் அவளுடன் இரண்டு வார்த்தையாகிலும் பேசிவிட்டுப் போகலாம் என்று வேகமாக வந்தாள். வந்தவளுக்கு வள்ளியாத்தாளின் கவலையெல்லாம் தெரிந்துவிட்டது. தன் வீட்டிற்கு வந்து முதலில் கொஞ்சமாவது சாப்பிடவேண்டும் என்று வற்புறத்தினாள். ஆனால் வள்ளியாத்தாள் இணங்கவில்லை. மூன்று நாளும் அவள் அடுப்பு மூட்டவில்லை.

“தினமும் சாப்பிட்டுச் சாப்பிட்டு என்ன கண்டு விட்டேன்? அப்படி இந்த உடம்பைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது?” என்று அவள் புலம்பினாள்.

“என்ன இருந்தாலும் இந்த ஆண் பிள்ளைகளுக்கு ஒன்றுமே தெரிகிறதில்லை” என்று குற்றம் சாட்டினாள் பாவாத்தாள்.

“அவர்களைச் சொல்லி என்ன செய்வது?” என்று பெருமூச்சு விட்டாள் மற்றவள்.

ஆமாம், ஆண்பிள்ளைகளுக்குத்தான் தெரியாதென்றால் பெண்கள் மாத்திரம் தெரிந்து கொள்ளுகிறார்களா? எங்கள் வீட்டிலே அம்மாளுந்தான் இருக்கிருள்.”

“பெண்ணாகப் பிறக்கவே படாது” என்று வள்ளியாத்தாள் முடிவு கட்டினாள்.

பாவாத்தாளுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. “பெரியப்பன் வந்ததும் அவரிடம் பேசட்டுமா? என்று அவள் கேட்டாள். ஆனால் அந்தக் கேள்வியின் பொருள் மனத்தில் பதியப் பதிய அவளுக்கே சந்தேகமும் திகிலும் ஏற்பட்டு விட்டன.  “நீ மட்டும் எப்படிச் சொல்லுவாய்? என்னவோ விதியென்று பேசாமல் இருக்க வேண்டியதுதான்” என்று வள்ளியாத்தாள் பற்றற்றவள் போல் பேசினாள்.

இவ்வாறு இருவரும் அங்கலாய்த்துக் கண்களிலிருந்து முத்துத் துளிகளைச் சிந்திக்கொண்டிருந்தார்கள்.

வெகு நேரம் இப்படிக் கழிந்தது. வெளியிலே இன்னும் மங்கலாக வெளிச்சமிருந்தாலும் குடிசைக் குள்ளே ஒரே கும்மிருட்டாக இருந்தது. விளக்கேற்றி வைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தோன்றவில்லை. அந்தச் சமயத்தில் எதிர் வீட்டு வாசலிலிருந்து பாவாத்தாளின் மாமியார் அவளை உரத்த குரலில் கூப்பிடும் இசை கேட்டது. “அக்கா, நீ விட்டுக்குப் போ. அங்கே வேலை இருக்கும்” என்றாள் வள்ளியாத்தாள்.

ஆனால் பாவாத்தாள் அசையவே இல்லை. வெளியிலே காலடிச் சத்தம் கேட்டது. முன்றானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு இருவரும் கலவரத்தோடு திரும்பிப் பார்த்தார்கள். வீரப்பன் மெதுவாக நடந்து வந்து வெளித் திண்ணையிலே, உஸ் அப்பாடா!” என்று அனத்திக்கொண்டு உட்கார்ந்தான். முழங்கால் வரையிலும் படிந்திருந்த புழுதியைக் கழுவவே இல்லை. அவன் முகத்தில் சோர்வும் களேப்புமே குடிகொண்டிருந்தன.

சற்று நோம் யாரும் பேசவில்லை. பிறகு பாவாத்தாள் ஆரம்பித்தாள். “பெரியப்பா, எங்கே போயிருந்தீர்கள்? இந்த மூன்று நாளாய் வள்ளியாத்தா சோறு தண்ணீர் ஒன்றும் குடிக்காமல் அழுதுகொண்டே கிடக்கிறாள்.”

“நானும் நல்ல கஞ்சி குடித்து மூன்று நாளாச்சு” என்று பதில் சொன்னான் விரப்பன்.  “ஏன் பெரியப்பா? அத்தை விட்டுக்குத்தானே போயிருந்தீர்கள்?”

“இல்லேம்மா இல்லை. அப்பவே வள்ளியாத்தா அந்தக் கடாரியை விற்க வேண்டாமென்று சொன்னாள். நான் தான் கேட்காமல் கொண்டுபோனேன்.”

“அதை என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?”

“அதை ஏன் கேட்கிறாய்? வள்ளியாத்தாள் ரொம்ப மனமுடைஞ்சு போவாள். எனக்கு அதுதான் கவலை. பணம் பெரிசில்லை.”

“பெரியப்பா, என்ன நடந்தது? சொல்லுங்கள்.”

“நான் அந்தக் கடாரியைப் பிடித்துக்கொண்டே போனேன். ரஸ்தாவைக் கண்டதும் சும்மா மிரண்டு மிரண்டு குதித்துக்கொண்டே வந்தது. காட்டுக்குள்ளேயே இருந்து வளர்ந்ததால், சைக்கிள், மோட்டார் ஒன்றையும் பார்த்தது கிடையாது. ஒரு நாலு மைல்கூடப் போயிருக்க மாட்டேன். பெரியநாயக்கன் பாளையத்திற்குப் பக்கமாகப் போயிருக்கலாம். ஒரு நாசமாப் போன மிலிட்டரி லாரி வந்து சேர்ந்தது. அந்தப் பாவி கிட்டவந்து பூம் பூமென்று சத்தம் பண்ணினான். கடாரி ஒரே இழுப்பாக இழுத்துக் கொண்டு போய்விட்டது. நானும் கூடவே ஒடிப் பார்த்தேன். என்னலே முடியல்லே” என்று சொல்லி அவன் நிறுத்தி விட்டான்.

“அப்புறம்...?” என்று பாவாத்தாள் மேலும் கேட்டாள்.


“அப்புறம் என்ன? இந்த இாண்டு நாளாக எங்கெல்லாமோ தேடிக்கொண்டே போனேன். வழி நெடுக விசாரித்துக்கொண்டே மலையருகில் போய்விட்டேன்.  கடைசியிலே ஒருத்தன் குருடிமலைச் சாரலுக்குள்ளே ஒரு கடாரி கத்திக்கொண்டு ஒடினதாகச் சொன்னான். அங்கே போய்க் கல்லுக்குள்ளும் முள்ளுக்குள்ளும் புதர் புதராக அலைந்தேன். அப்படி அலைஞ்சாலும் பரவாயில்லை; கடாரி கிடைத்திருந்தால் எல்லோருக்கும் சந்தோஷமாய்ப் போயிருந்திருக்கும்”

“காட்டுக்குள்ளே என்னமாவது............?” என்று இழுத்து நிறுத்தினாள் பாவாத்தாள்.

“ஆமாம், பாவாத்தா கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தது போலக் கடாரியைப் புலிக்கு இறையாகக் கொடுத்துவிட்டேன். புலியடித்து அது கிடந்ததைப் பார்த்து எனக்கே பொறுக்க முடியவில்லை. அப்படியே ஒரு மூச்சு அழுதுவிட்டேன்” என்று தழுதழுத்த குரலில் வீரப்பன் முடித்தான்.

அப்பொழுதுதான் வள்ளியாத்தாள் பேச வாயெடுத்தாள். ஐயா, கடாரி போனால் போகிறது. அதற்காக மனத்திலே உங்களுக்குக் கவலை வேண்டாம். அது போனால் இன்னென்று வாங்கி வளர்த்தால் போகிறது. நான் சீக்கிரமாகச் சோறாக்குகிறேன்; சாப்பிடலாம்” என்று உற்சாகமாக அவள் சொன்னாள். தான் வளர்த்த கடாரியைப் புலி அடித்துவிட்டதே என்று அவளுக்குப் பெரிய வருத்தந்தான்; இருந்தாலும் அதைக் கீழே அழுத்திவிட்டு ஏதோ ஒரு விவரிக்க முடியாத இன்ப உணர்ச்சி மேலோங்கியது.

“சோறாக்கி அப்புறம் சாப்பிடுவானேன் ? இப்பொழுதே எங்கள் வீட்டிற்குப் போய்ச் சாப்பிடலாம், எழுந்திருங்கள்” என்று பாவாத்தாள் கலகலப்பான குரலிலே அழைத்தாள்.  வள்ளியாத்தாள் இப்படிக் கவலை இல்லாமல் பேசுவாளென்று வீரப்பன் எதிர்பார்க்கவே இல்லை. அவள் வருத்தப்பட்டுப் புலம்புவாளே என்றுதான் அவன் பெரிதும் பதைத்துக் கொண்டிருந்தான். அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையை விரைவில் செய்ய இயலாமற் போய்விட்டதே என்றுகூட அவன் கலங்கவில்லை.

ஆனால் வள்ளியாத்தாளின் செய்கை அவனுக்கு மலைப்பை உண்டாக்கிவிட்டது. உயிருக்குயிராக வளர்த்த கடாரியைப் புலி அடித்துவிட்டது என்று கேள்விப்பட்ட பிறகும், விற்பதற்கே உடன்படாது அழுதவள் இவ்வாறு குதுாகலமாகப் பேசுவது அவனுக்கு விளங்கவே இல்லை. அவன் திகைத்துப்போய்ச் சிலைபோல் உட்கார்த்திருந்தான். பாவாத்தாள் சாப்பிட அழைத்ததும் அவன் செவியில் நுழையவில்லை.