உள்ளடக்கத்துக்குச் செல்

உரிமைப் பெண்/உரிமைப் பெண்

விக்கிமூலம் இலிருந்து
(உரிமைப் பெண்/ உரிமைப் பெண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



உரிமைப் பெண்

றுமலர்ச்சி மன்றத்திலே இன்று கரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

“சிறு கதைகள் புற்றீசல் போலக் கிளம்புகின்றன என்பதை நான் காண்கிறேன். ஆனால் அதில் மறுமலர்ச்சி எற்பட்டுவிட்டதென்பதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்ற அழுத்தமாகப் பேசினார் ஒரு மூக்குக் கண்ணாடிக்காரர்.

“முதலில் மலர்ச்சி இருந்தால்தானே பிறகு மறுமலர்ச்சி ஏற்படமுடியும்?” என்ற குயுக்தி செய்தார் ஒரு குள்ளையர்.

“என்ன இருந்தாலும் தமிழிலே சிறு கதைகள் இப்படிப் பெருகப்படாது. இது இலக்கிய வளர்ச்சிக்கு அறிகுறியல்ல. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சிறுகதை, சிறுகதை-ஒரே சிறுகதை மயம்தான்” என்றார் ஒரு வானவில் மீசைக்காரர்.

“தமிழில்தானா இப்படி? உலகத்திலே எந்த மொழியிலும் இப்படித்தான் இருக்கிறது. இது சிறுகதை யுகம்” என்றார் எல்லாம் அறிந்த ஒருவர்.

வேறு பாஷைகளில் எழுதுகிறார்களென்றால் அப்படி எழுதுகிறவர்களுக்குச் சிறுகதை இலக்கணமாவது தெரிந்திருக்கிறது. தமிழிலே அதையும் காணோமே!”

“காணோமென்று நீ எப்படிச் சொல்ல முடியும்?”

“எப்படிச் சொல்ல முடியுமா? கதையைப் படித்துப் பார்த்தால் தெரியாதா? அதற்குக்கூட உன்னைப் போலச் சிறுகதை எழுத்தாளராக இருக்கவேண்டுமா என்ன?”

 “சிறுகதை இலக்கணம் உனக்கு நிரம்பத் தெரியுமோ? எங்கே, சொல் பார்க்கலாம்.”

“எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் நீ எழுதுகிற கதையில் அந்த லக்ஷணம் கொஞ்சங்கூட இல்லை என்று சொல்லுகிற அளவுக்குக் தெரியும்.”

“எந்தக் கதையிலே லக்ஷணம் இல்லாமல் போய் விட்டது? எங்கே, ஒரு கதையை எடுத்துக் காண்பி பார்க்கலாம்.”

“ஏன், காலையிலே எனக்குப் படித்துக் காண்பித்தாயே, அதிற்கூடச் சிறுகதை இலக்கணம் இல்லை.”

“அந்தக் கதையைச் சரியாகப் புரிந்துகொள்ளச் சக்தியில்லாவிட்டால் பேசாமல் இருக்கவேண்டும். இலக்கணமில்லை என்று எதற்காக உன்னுடைய அறியாமையை வெளிப்படுத்திக்கொள்கிறாய்?”

“அந்தக் கதையில் அப்படிப் புரியாதபடி ஒன்றும் பிரமாதமாக இல்லை. உன்னுடைய கதையைப்பற்றி நீயே பெருமையடித்துக்கொள்ள வேண்டாம்.”

“என்ன, நீங்கள் இரண்டு பேருமே இப்படித் தனிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே! எங்களேயெல்லாம் மறந்துவிட்டீர்களே” என்று இந்தச் சமயத்தில் மற்ற அங்கத்தினர்கள் குறுக்கிட்டார்கள். இல்லாவிட்டால் வேலுச்சாமியும் சாமியப்பனும் எந்த நிலைமையில் தங்கள் வாக்குப் பூசலை நிறுத்தியிருப்பார்களென்று கூறமுடியாது. இருவரும் நெருங்கிய நண்பர்கள்தாம். ஆனால் இப்படி அபிப்பிராய வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டால் மட்டும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். விவாதத்திற்கு வந்த பொருளைப்பற்றி அலசி அலசிப் பேசியபிறகு அதை முற்றும் விட்டுவிட்டு ஒருவர்மேலொருவர் வசை  வாளி தொடங்கிச் சிலநாட்களுக்குப் பேச்சு வார்த்தைகூட இல்லாத நிலை வரையில் சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த நிலைமை வெகு நாட்களுக்கு நீடிக்திருக்காது. வேலுச்சாமி மற்றொரு புதிய கதை எழுதும் வரையில்தான் சண்டை. அதை எழுதியானதும் அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டுச் சாமியப்பனிடம் ஒடுவான். ஆவலோடு கதையைப் படித்துக் காண்பிப்பான். இருவரும் பழையபடி நண்பர்களாகி விடுவார்கள். தனியாக இருக்கும்பொழுது அவர்களுக்குள் எண்ண வேறுபாடு உண்டானால் அது சண்டையாக மாறாது; மறுமலர்ச்சி மன்றத்திற்குள் புகுந்துவிட்டால் தான் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

வேலுச்சாமி மற்றவர்களைப் பார்த்துப் பேசலானான்: “நான் எழுதிய கதையின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமலே இவன் அதை மதிப்பிடுகிறான். அது தான் எனக்குப் பிடிக்கவில்லை.”

உடனே சாமியப்பன், “நோக்கத்தைப்பற்றி இப்பொழுது பேச்சில்லை; சிறுகதை அமைப்பு உன் கதையில் இல்லை என்பதுதான் என் கட்சி” என்று பதில் கொடுத்தான்.

“கதை முழுதும் ஒரே உணர்ச்சி தொனிக்கவில்லையா? காலத்தால் நீடித்திருதாலும் ஒரே உணர்ச்சியைத் தாங்கி நிற்பதும் சிறுகதைதான்.”

“என்ன உணர்ச்சியோ?” என்று குள்ளையர் நடுவில் புகுந்தார்.

“கொங்கு நாட்டுக் கிராமத்திலுள்ள மக்கள் பாரம்பரையாக வந்த பழக்கத்திலும் எண்ணங்களிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள்; அதனால் அவர்களுக்குள் முன்னேற்றமில்லை என்கிற உணர்ச்சிதான். இதுகூடத் தெரியவில்லையா?” என்று சிடுசிடுத்தான் வேலுச்சாமி.”  “ஏன் தம்பி, கதை இன்னதென்றே எங்களுக்குச் சொல்லாமல், இது தெரியவில்லையா, அது தெரியவில்லையா என்ற கேள்வி போடுகிறாயே; நியாயமா?” என்றார் குள்ளையர்.

வேலுச்சாமி, நீ கதையைப் படித்துக்காட்டிவிடு. பிறகு நாங்களே தனித்தனியாக அதைப்பற்றி யோசித்து முடிவு செய்துகொள்ளுகிறோம். நீங்கள் இரண்டுபேரும் வீணாக ஏன் இப்படி அடிக்கடி சத்தம் போட்டுக்கொள்ளுகிறீர்கள்?” என்று மூக்குக் கண்ணாடிக்காரர் மத்தியஸ்தம் செய்ய வந்தார்.

அவர் ஆலோசனையை அனைவரும் ஆமோதிக்கவே வேலுச்சாமி கதையைப் படிக்கலானான்.

ஏர் முன்னால் செல்லுகிறது; அவன் கால்களும் முன்னால் எட்டி வைக்கின்றன. ஆனால் அவன் உள்ளம் மட்டும் பின்னால் தாவிக்கொண்டிருக்கிறது. அடிக்கடி அவன் திரும்பிப் புன்முறுவலோடு, உள்ளத்தில் பொங்கி வழியும் காதல் கண்களின் வழியாகப் பாய்ந்தோட அவளைப் பார்க்கிறான். அவளும் பார்க்கிறாள். இளஞ் சிரிப்பில் இதழ் மலர நெற்றி ஒளிவீசக் குனிந்துகொள்கிறாள். கைமட்டும் யந்திரம்போல விதைக் கடலையைப் படைக்காலில் ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டு வருகிறது.

காலை பத்து மணி, நல்ல ஏறு வெயில். இருந்தாலும் மழையீரம் போகுமுன்பே விதைத்தாக வேண்டும். இரண்டு ஏர் பூட்டியிருந்தால் எளிதாக முடிந்திருக்கும். ஆனால் பண்ணையாள் தலைவலி யென்று முதல் நாள் படுத்தவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவன் காலையில் வந்து விடுவான் என்று எதிர்பார்த்து வேறு கூலியாளையும் கூப் பிட்வில்லை. அதனால் காளியப்பன் தனியாக உழுதுகொண்டிருக்கிறான் அதிலே அவனுக்கும் பூரண திருப்தியாக இருக்கிறது. இப்படி நீண்ட நேரம் பாவாத்தாளுடன் தனியாக உரையாடிக்கொண்டும், அவள் அழகிய வதனத்தைப் பார்த்துக்கொண்டும் இருக்க வேறு நல்ல சமயம் வாய்க்குமா? சாதாரணமாக அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதானிருந்தார்கள். பாவாத்தாள் கூலிக்காரி, காளியப்பனுடைய தகப்பனர் பெரிய பண்ணைக்காரர். அவருடைய பண்ணையிலே பன்னிரண்டு மாதமும் ஒன்றிரண்டு பெண்களுக்குக் களை எடுப்பது, மிளகாய் பறிப்பது, பருத்தி எடுப்பது என்று இப்படி வேலை இருந்துகொண்டே இருக்கும். அதனால் பாவாத்தாள் அநேகமாக அந்தப் பண்ணையிலே வேலை செய்து வந்தாள். காளியப்பன் அவளைச் சந்தித்து வார்த்தையாடப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இருந்தாலும் இவ்வாறு நீண்ட நேரம் தனியாக இருவரும் இருக்கச் சமயம் வாய்ப்பது அருமை.

பண்ணைக்காரனுடைய மகன் என்றாலும் காளியப்பன் வேலை செய்யாமல் இருப்பதில்லை. ஆட்களிடம் வேலை வாங்குவதோடு தானும் அவசியமானபோது எந்த வேலையையும் செய்வான். இப்பொழுது அவன் தன் நெற்றியில் ஊறிக் கன்னத்தில் வழியும் வியர்வையை அலட்சியமாகத் துடைத்துக்கொண்டு ஏர் உழுகிறான். பாவாத்தாள் முன் முனையை எடுத்துத் தலையில் சுற்றிக் கட்டிக்கொண்டு ஒரு கையால் விதைக் கூடையைத் தாங்கி, மற்றொரு கையால் படைக்காலில் விதையைப் போட்டுக்கொண்டு அவன் பின்னால் நடக்கிறாள்.

தனியாக அவளுடன் நீண்ட நேரம் பேசுவதற்குச் சமயம் கிடைத்தால் என்ன என்னவோ சொல்ல வேண்டும் என்று அவன் முன்பெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது அவனுக்கு அந்தச் சமயம் கிடைத்துவிட்டது. ஆனால் அவன் அதிகம் பேசவில்லை. தன்னைக் கவர்ந்த பெண்கொடியின் அழகில் ஈடுபட்டு அவன் உள்ளம் நிறைந்திருந்தது. ஒரே இன்பக் கிளர்ச்சி. வார்த்தைக்கு அங்கு இடமே இருக்கவில்லை.

பாவாத்தாளும் அதை உணர்ந்துகொண்டாள். வாா்த்தை அலங்காரத்தில் அவனுடைய காதலைப்பற்றிக் கேட்க அவள் விரும்பவில்லை. ஆழ்ந்த உணர்ச்சியைப் பூரணமாகக் காட்டச் சொற்களால் முடியாது. சொற்களை விட மெளனம் அந்த உணர்ச்சியைக் குறிப்பாக நன்கு காட்டும். அந்த மெளனப் பேச்சிலே இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டு தங்கள் வேலையைச் செய்தார்கள்.

ஆனால் பாவாத்தாளுடைய உள்ளத்திலே ஒரு பயம் மட்டும் எப்பொழுதும் ஒளிந்திருந்தது. காளியப்பன் பண்ணைக்காரனுடைய மகன். அவன் தங்தைதான் வீரன் காட்டூரில் பெரியதளக்காரர். அப்படியிருக்கக் காளியப்பன் கூலிக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா? அவன் பண்ணிக்கொள்வதாக ஆயிரந் தடவை உறுதி கூறினாலும் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா? பண்ணைக்காரர் மகனுக்கும், பண்ணையில் வேலை செய்யும் கூலிக்காரிக்கும் கல்யாணமா? இது நடக்கக்கூடிய காரியமா ? இதுவரையில் கண்டிராத புதுமையாக இருக்கிறதே ! மேலும், கல்யாணப் பேச்சு வருகிறபோது காளியப்பனை யார் கேட்கப் போகிறார்கள்? பெற்றோர்களும் நெருங்கிய உறவினரும் தங்களுக்குள்ளேயே பேசி முடிவு செய்கிற காவியத்தானே அது?

இம்மாதிரி எண்ணங்கள் அடிக்கடி அவள் மனதைக் கவ்விக்கொள்ளும். ஆனால் இப்பொழுது அவை  யெல்லாம் அவளைத் துன்புறுத்தவில்லை. காளியப்பனுடைய புன்னகையில் அவை எரிந்துபோய்விட்டன. அவனுடைய அன்பு, அவனுடைய கட்டுறுதியுள்ள மேனி, அவனுடைய காதல் ஒளிரும் கண்கள்-இவைகளே அவளுக்கு உறுதிப் பொருள்களாகத் தோன்றின.

பூரணச்சந்திரன் நீல வானில் தண்ணமுதப் பொற்கலசம் போல மிதக்கும் ஒரிரவு. வெள்ளிக்கிரண மது மயக்கத்திலே உலகம் அறிவிழந்ததுபோலக் கிடக்கின்றது. பாவத்தாள் வீட்டுத் திண்ணையிலே பாயை விரித்துப் படுத்திருத்தாள். அவளையும் இந்த மயக்கம் தொட்டு விட்டது. அவளுக்குத் தாக்கம் பிடிக்கவில்லை. நெஞ்சத்திற்குள்ளே ஆயிரம் ஆயிரம் இளமைத் துடிப்புகள் ஒருங்கே குமுறிப் பொங்கின. மார்பகம் வெதும்பி விம்மிற்று. காளியப்பனுடன் இருக்கவேண்டுமென்று ஆசை பீறிக் கொண்டு எழுந்தது.

இதென்ன பேதைமை என்றாவது அவர்கள் இரவில் சந்தித்திருக்கிறார்களா? இல்லவே இல்லை. இன்றிரவாவது சந்திக்கலாமென்று ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்களா? அதுவும் இல்லை. பின் இவள் ஏன் புறப்படுகிறாள்? விரன்காட்டூரிலிருந்து அரை மைல் தொலைவில்தான் வேங்கை மாத்துப்பாளையம் இருக்கிறது. விரைவில் அங்குச் செல்ல முடியுமானலும் காளியப்பனை எப்படிச் சந்திப்பது!

அவளுக்கென்னவோ சந்திக்க முடியுமென்று ஒரே நம்பிக்கை. எழுந்து புறப்பட்டுவிட்டாள். தாய், அண்ணன் முதலியவர்கள் பகலெல்லாம் உழைத்த களைப்பினால் அயர்ந்து துாங்குகிறார்கள். பாவாத்தாள் ஊரைத் தாண்டி விட்டாள்.  ஆ! என்ன அதிசயம்! யார் அங்கே வருகிறது? அவனுக்குப் பாவாத்தாள் வருவது எப்படித் தெரியும்? நெஞ்சோடு நெஞ்சம் பேசிக்கொண்டதா? நிலாப் பெண் தாது சென்றாளா? இளமைக் துடிப்பு ஒரே மாதிரி எண்ணத்தை இருவர் உள்ளத்திலும் ஒலித்ததா? காளியப்பன் பாவாத்தாளைத் தேடிக்கொண்டு எதிரே வருகிறான்!

கட்டுக்கடங்காத இளமை, அது துணிச்சல் மிக்கது. புதிய அநுபவங்களையெல்லாம் ஆவலோடு எதிர்பார்ப்பது. பின்னால் விளையப் போவதை எண்ணிப் பார்க்காதது. இருவரும் எதிர்பாராது சந்தித்து நிலவு மயக்கத்திலும் இளமைத் துடிப்பிலும் புதுமை இன்பம் கண்டார்கள்.

காளியப்பன் பாவாத்தாளையேதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஒரே பிடிவாதம் பண்ணுகிறான். அவன் பெற்றோர்க்கு இது பெரிய வித்தையாக இருக்கிறது. எங்கேயாவது இப்படிக் கேட்டதுண்டா?

அவனுக்கென உரிமையாக வளர்ந்த அத்தை மகள் பருவமடைந்து காத்திருக்கிறாள். அத்தையும் அடிக்கடி வந்து சிக்கிரம் கல்யாண ஏற்பாட்டைச் செய்யும்படி வற்புறுத்திக்கொண்டிருக்கிறாள். சீர் சிறப்பு, நகை நட்டு முதலான விவகாரங்களை யெல்லாம் திருப்தியாகப் பேசி முடித்தாகிவிட்டது. எல்லோருக்கும் வேலைவெட்டி இல்லாத சமயம் பார்த்துக் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறபோது, மேகமில்லாமல் இடியிடித்ததுபோலக் காளியப்பன் இவ்வாறு குறுக்கே பேச ஆரம்பித்துவிட்டான்.

“வெளியே சொல்லாதே. ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிந்தால் நம் மதிப்பே போய்விடும். எல்லோரும் சிரிப்பார்கள்” என்று தாய் அடக்க முயன்றாள்.  “பையனுக்குப் புத்தி போகிறதைப் பார்! நம் அந்தஸ்து என்ன? ஊரிலே நமக்கு இருக்கிற மரியாதை என்ன? அந்தக் கூலிக்காரியைக் கட்டிக்கொண்டு எங்கே போய் உட்காருவாய்? மருமகன் போனால் ராகிக் களிகூடக் கிடைக்காது” என்று இகழ்ச்சியாகப் பேசினார் தந்தை.

அத்தை கண்ணீரைத் திறந்துவிட ஆரம்பித்தாள். "நான் என் ஒரே மகளை எத்தனே ஆசையாக வளர்த்தேன்! நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளாவிட்டால் எனக்கு இனிமேல் இந்த வீட்டிற்கு வர என்ன சொந்தம் இருக்கிறது?” என்று அங்கலாய்த்தாள்.

இப்படியாக, வீட்டில் ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் காளியப்பனுக்கு விரோதமாகக் கிளம்பி விட்டார்கள். அவர்களுடைய தனித் தாக்குதல்கள், கூட்டுத் தாக்குதல்கள், இகழ்ச்சி வார்த்தைகள் முதலியவற்றை அவனால் சமாளிக்க முடியவில்லை. கடைசியாக அவன் தோல்வியடைந்தான். அத்தை மகளுக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தேறியது. அத்தை மகள் என்ற உறவால் வந்த உரிமைப்பெண் வீடு சேர்ந்தாள். அன்பு என்னும் உறவால் வந்த உரிமைப்பெண் அங்கலாய்த்து நின்றாள்.

இரண்டு உள்ளங்கள் உடைந்துபோன இவ் வரலாற்றிலே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது வேறு என்ன இருக்கிறது? வேறு என்னதான் நிகழ்ந்திருந்தாலும் அதைப்பற்றிப் பேசிப் பயன் என்ன? காளியப்பனுடைய பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படியே மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்துத் தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொண்டார்கள். அவனுடைய அத்தை, தன் சொந்தத்தை இன்னுமொரு தலைமுறைக்கு நிலைநாட்டிவிட்டாள்.

காளியப்பன்? அவன் இப்பொழுது சதா குடி வெறியில் மயங்கிக் கிடக்கிறான். அறிவு தெளிவாக இருந்தால் அவனால் சகிக்க முடிவதில்லை. ஆனால் அதன் காரணத்தை யாரும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. “கல்யாணமாகிக் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்து விட்டால் இந்தக் காலத்துப் பையன்களை இப்படித்தான் கெட்டுப் போகிறார்கள்” என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

பாவாத்தாள் விஷயம் ஒரு வகையில் நோக்கினால் இவ்வளவு மோசமில்லை. அந்தப் பூரண நிலவு ஒரு புதிய உயிரை அவள் வயிற்றில் புகுத்திவிட்டது. காளியப்பனுக்குக் கல்யாணமான மறு வாரத்திலேயே இந்த ரகசியம் அவளுடைய அண்ணனுக்குத் தெரிந்துபோயிற்று. அவன் என்ன செய்வான்? விஷயம் வெளியானால் அவன் மானம் போய்விடும்; சமூகக் கட்டுப்பாடு வந்துவிடும். என்னவோ நடந்தது. அவ்வாறு நடப்பது கிராமங்களிலே சகஜம். ஒரு நாள் பாவாத்தாள் துாக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகச் செய்தி பாவிற்று. “தாய் எதற்காகவோ வைதாளாம்; கோபத்தில் துாக்குப் போட்டுக் கொண்டாள். ரொம்பக் கோபக்காரி அந்தப் பெண்” என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

வேலுச்சாமி கதையைப் படித்து முடித்துவிட்டு ஆவலோடு தலை நிமிர்ந்து பார்த்தான். யாரும் தமது எண்ணத்தைத் தெரிவிக்க முன்வரவில்லை. அனைவரும் நித்திரை மயக்கத்திலிருந்தார்கள். மறுமலர்ச்சி மன்றம் நித்திராதேவியின் முழு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.