ஊருக்குள் ஒரு புரட்சி
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
ஊருக்குள் ஒரு புரட்சி
தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல்
சு. சமுத்திரம்
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.
| முதல் பதிப்பு | : | ஏப்ரல், 1980 |
| மறுபதிப்பு | : | டிசம்பர், 1998 |
விலை ரூ. 22.00
பதிப்பாசிரியர்
டாக்டர் ச. மெய்யப்பன்
கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி:
சிதம்பரம்: 23069 |
சென்னை : 561039 |
திருச்சி : 706450
அச்சிட்டோர் : ஸ்டேட் ஃபாஸ்ட், சென்னை - 600 013. ✆ : 5953842
பதிப்புரை
பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதுடன் புதிய படைப்பிலக்கியங்களையும் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. வளரும் தமிழுக்கு வளம் செய்யும் புதினங்களை ஆர்வத்துடன் வெளியிடுகிறது. எம். வி. வெங்கட்ராம் அவர்களின் வேள்வித் தீ என்னும் சமூக நாவலை வெளியிட்டது. அது பல பதிப்புகளைப் பெற்றது. இப்பொழுது திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப் பெறுகிறது. “அரும்பு”, “ஒரு பெண் போராடுகிறாள்” என்னும் இரண்டு பெரிய புதினங்களை வெளியிட்டு நல்வரவேற்பினைப் பெற்றுள்ளது.
தமிழ்ப் புதினங்கள் தனித்தன்மையோடு வெற்றிநடை போடும் இக்காலத்தில், சோதனை முயற்சிகள் வரிசையில் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ எழுகிறது. தமிழ் நாவல்கள் உள்ளடக்கத்தாலும், உருவத்தாலும். உத்திகளாலும் உன்னத நிலையைப் பெறுகின்றன. கம்பன் குறிகளால் காட்ட முயன்றதைப் புதின ஆசிரியர்கள் விளக்கமாகவே எழுதுகின்றனர். அண்மையில் வெளிவந்த சமுத்திரம் நூல்கள் வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிய பத்திரிகைகளும் விரும்பி வெளியிடுகின்றன.
திரு. சமுத்திரம் அவர்கள் மனித வாழ்க்கை என்னும் நிலத்தை ஆழ்ந்து அகழ்கிற வன்மையும், ஆற்றலும் மிக்கவர். சமூகப் பிரச்சினைகளை ஆழ்ந்து சிந்திக்கும் சமுத்திரம் அவர்கள் இப்புதினத்தை துணிச்சலுடன் புதுமுறையில் அமைத்துள்ளார். முதன்மை பெற்ற மூத்த திறனாயவாளர்களான டாக்டர் கைலாசபதி, டாக்டர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் வானமாமலை போன்றவர்கள் சமுத்திரம் அவர்கள் கதையை நடத்திச் செலலும் நயத்தினை, கூறும் திறனை, நடை நலத்தைத் தெரிந்து உரைத்த பின்பு பதிப்பகம் மேலும் என்ன பகர வேண்டியுள்ளது! இவருடைய படைப்புகளை எம். பில். பட்டத்திற்கும் ஆராய்ந்துள்ளார்கள். டாக்டர் பட்டத்திற்கும் ஆராய்ந்து வருகிறார்கள்.
தொடர்ந்து தமது நூல்களை வெளியிட வாய்ப்பளித்து வரும் திரு. சமுத்திரம் அவர்களுக்கும் நூலாக வெளியிட இசைவு தந்த திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும் நன்றி!
என்னுரை
கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒருசிலவற்றின் ஒட்டு மொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க ‘யந்திர வாதிகளின்’ ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும்வரை, ஏய்ப்பவர்கள்தான் ‘மேய்ப்பவர்’களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள். இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள்தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்கமுடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு, ஓரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், ‘ஜாதிக்’ குடிசைகளும், ‘சேரிக்’ குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை, பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கெளதம முனிவரை திசை திருப்பும் ‘இந்திர’ சேவலல்ல இது. விடியுமுன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.
நான் முதன் முதலாக எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலில், பாதி பார்வையாளனாகவும், பாதி பங்காளியாகவும் இருந்தேன். அடுத்து எழுதிய ‘சோற்றுப் பட்டாளத்தில்’, சற்று ஒதுங்கி நின்றேன். ஆனால் இந்த நாவலில் முதற் பகுதியில் விலகி நின்ற என்னால், இறுதிவரை அப்படி விலகி நிற்க முடியவில்லை. ஆண்டியப்பனையும், சின்னானையும், காத்தாயியையும் நான் படைத்தேன் என்பதைவிட, அந்தப் பாத்திரங்களே என்னைப் படைப்பாளியாக்கின என்று சொல்லலாம். இது, பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களே. பின்னர் எனக்கு எப்படி எப்படி எழுதவேண்டும் என்று உத்தரவிட்டன! பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும், எந்தக் கட்டத்திலும், யதார்த்தத்தை மறைக்கவில்லை. காரணம், இந்தப் பாத்திரங்கள், கிராமங்களில் பல்வேறு மனித வடிவங்களாக நிற்கின்றன.
‘தேவி’ வாரப் பத்திரிகையில், ஆரம்பத்தில் நான்கைந்து அத்தியாயங்களுக்குள் தொடர்கதையாக முடித்துவிடவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி, எழுதத் துவங்கினேன். வாசகர்களிடையே இந்தத் தொடர் கதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கருதி, தேவி பத்திரிகை ஆசிரியர் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், நான் எத்தனை அத்தியாயங்கள்வரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில், பதினேழு அத்தியாயங்கள் எழுதி, அவர் முடிக்கச் சொல்லுமுன்னாலேயே, கண்ணோட்டங் கருதி முடித்துக் கொண்டேன். வாரா வாரம் வாசகர்களின் கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்து, ஒரு எழுத்தாளனிடம் பத்திரிகையாசிரியர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும் அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு கதையின் நலங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டிய உதவி ஆசிரியர் ஜேம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடிதங்கள் மூலம் பாராட்டிய தேவி வாசகர்களுக்கும் நன்றி.
தொடர்கதை வந்து கொண்டிருந்தபோதே, அதை விமர்சித்து எனக்குக் கடிதங்கள் எழுதியவர் திரு. வல்லிக்கண்ணன். ஆரம்ப அத்தியாயங்கள், கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு போகிறதேயன்றி, கலையம்சமாக இல்லை என்றும், பிறகு சிறப்பாகப் பரிணாமப்பட்டதாகவும் கருத்துத் தெரிவித்தார். உண்மைதான். குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அப்படி எழுதினேன். இந்த நூலில் கூட, அந்தக் குறையை முற்பகுதியில் அதிகமாகச் செப்பனிடாமல் மெத்தனமாக இருந்து விட்டேன். இளைய தலைமுறையை, காய்தல் — உவத்தலின்றி ஆய்வு செய்து அடையாளங்காட்டும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.
தொடர்கதை என்பது வேறு. நாவல் என்பது வேறு. அதே சமயம், விசுவாசத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் ஒரு தொடர்கதையை, சிறந்த நாவலாகவும் ஆக்கிவிடலாம் என்று எனக்கு வழிகாட்டியவர், திரு. ஆர்.கே. கண்ணன். தேவியில் வெளியான பதினேழு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, புரட்சிக்குரிய களம் வலுவாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தார். இதை அறிந்து நான் எழுதி வைத்திருந்த ‘லிங்குகளை’ப் படித்துவிட்டு. அவற்றை ‘ரிப்போர்ட்டாக’ச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லி தளத்தை களமாக்கினார். இந்த நாவலை முழுமைப்படுத்திய அந்த முழுமையான இலக்கிய ஞானவானுக்கு என் நன்றி.
தேவியில் நான் தொடர்கதை எழுதியே ஆக வேண்டும் என்று என்னை வற்புறுத்தியவர் இலக்கிய வீதி அமைப்பாளரான, என் எழுத்தாளர் நண்பர் இனியவன். தொடர்கதையாக எழுதும்போது சொல்ல வேண்டிய விவகாரங்கள் விடுபட்டுப் போகலாம் என்று நினைத்து நான் தயங்கிய போது, கிட்டத்தட்ட அடிக்காத குறையாகப் பேசி எழுத வைத்தவர் நண்பர் இனியவன். இவர் உருவாக்கியிருக்கும் இளந்தலைமுறையினரான வெங்கடேச ரவி, மது, ராஜேந்திரன், எம். வி. குமார் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் (இரண்டையும் செய்யக் கூடியவர்கள்) தொடர்கதையை, காரசாரமாக விமர்சித்து என்னைக் கதாநாயகனாக்கினார்கள்.
‘தாமரை’ உதவி ஆசிரியர் சோமு அவர்கள், இந்த நாவல் வெற்றிகரமாக வெளிவருவதற்கு எல்லா வகையிலும் உதவினார். மிகச் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமான திரு. இளவேனிலை, எனக்கு அறிமுகப்படுத்தி, அவரையே ஒரு அற்புதமான அட்டைப்படத்தை வரையச் செய்தார். நான் தனியாக எழுதிய நான்கு அத்தியாயங்களைப் படித்து, அவற்றை மேலும் செம்மையாக்க பல ஆலோசனைகளை வழங்கினார். எனது நூல் வெளிவருவதை, தனது சொந்தப் படைப்பு வெளிவருவது போல் பெருமிதப்படும் எழுத்தாளரான சோமுவுக்கு என் நன்றி. இதுவரை வெளியான எனது படைப்புகள் அத்தனையிலும் சம்பந்தப்பட்டதுடன், அவை, எந்த விதமான வரவேற்பைப் பெறும் என்று துல்லியமாகக் கணிப்பதில் வல்லவர் சோமு. என் படைப்பில் பெருமைப்படுபவர். எழுத்தாளர்களில், இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்? விரல்விட வேண்டிய அவசியமே இருக்காது.
இந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் ஓரளவு ‘பிரச்சார வாடை’ வீசுவதுபோல் ஒரு கருத்துத் தோன்றியது, எனக்கும் அது சரியெனப்பட்டது. பாத்திரங்கள், தங்கள் கொள்கைகளை செயலாக்கும்போது, அவை ‘பேச வேண்டுமா’ என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெற்று, நான், ‘பேச்சைக்’ குறைக்கப் பேனாவை எடுத்தபோது, ‘நாவலின் ஆன்மாவே இதுதான். இது பிரச்சாரம் அல்ல... எதைச் சொல்வதற்காக நாவல் எழுதினீர்களோ... அதுதான் இது’ என்று வாதாடி வெற்றி கண்டவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலாளர் கவிஞர் இளையபாரதி.
பிரபல பத்திரிகைகளில் அழுத்தமான பாத்திரங்களைப் படைப்பது கடினமான காரியம். வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள் விற்பனைப் பொருளாகி, நாளடைவில் வெறும் பொருளாய்ப் போனதுக்குக் காரணமே, இந்தச் சூழல்தான். இந்த நிலை எனக்கு வராமல் போனதற்குப் பெருங்காரணம் தாமரைப் பத்திரிகையே. அந்தப் பத்திரிகையில் நான் பெற்ற பயிற்சி, பிரபல பத்திரிகைகளிலும் எதிரொலிப்பதை அறிவீர்கள். இந்தப் பயிற்சியை அளித்தவர். கவிஞர் கே.ஸி.எஸ். அருணாசலம் அவர்கள். ‘கவிதை என் கைவாள்’ என்று அவர் சொன்ன ஒரு வரியை, நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு. ஓராயிரம் வரிகளை எழுதியிருக்கிறேன். இலக்கியத்தை, நான் போர்ப்பரணியாகக் கருதுவதற்கு உருத்தந்தவர் கே.ஸி.எஸ். எனது எல்லாக் கதைகளையும் வரிக்கு வரி படித்து, ஒளிவு மறைவு இல்லாமல் விமர்சித்து ஒளி பாய்ச்சியவர், அவர் மூலமாகவே, முற்போக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. கவிதை உலகில் என்னை அறிமுகப்படுத்தியவரும் அவரே. நான் எப்படி என் படைப்புகளை நினைத்துப் பெருமைப்படுகிறேனோ அப்படி, அவர் என்னை நினைத்துப் பெருமைப்படுபவர். இந்த நாவலின் பாத்திரங்கள் அழுத்தமாக உள்ளன என்றால், அதற்கு அவரளித்த அழுத்தமான பயிற்சியே காரணம்.
இந்த நாவலை, மறைந்த பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இளந்தலைமுறையினருடன், ‘தலைமுறை இடைவெளி’ இல்லாமல் பழகிய அந்த இனிய அறிஞர், இந்த நூலைப் படிப்பதற்கு இல்லையே என்று நினைக்கும் போது சங்கடமாக இருக்கிறது. நான் ‘ஆய்வுக்’ கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த அவருக்கு என் புரட்சி வணக்கங்கள். என் படைப்புகளில், வாசகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
இந்த நாவலை, நல்ல முறையில் வெளியிடும் மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு, குறிப்பாக அச்சுக் கரம் நீட்டிய பேராசிரியர் மெய்யப்பனுக்கும், இந்த நாவலை வரிக்கு வரி விமர்சித்து, ஊக்கப்படுத்திய நாவலாசிரியரும் அச்சகத்தின் மேலாளருமான க. நாராயணன் அவர்களுக்கும், பதிப்பகத்தின் சார்பில் என்னுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு, பாலமாக விளங்கிய திரு. குருமூர்த்திக்கும் என் நன்றி. சிறுகதைகள் விலை போகாது என்று தெரிந்தும், என் சிறுகதைத் தொகுதிகள் மூன்றை விழாயெடுத்து வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம், எனது எல்லாப் படைப்புகளையும் வெளியிட முன்வந்திருப்பதை, எனக்களிக்கப்படும் மிகச் சிறந்த கெளரவமாகக் கருதுகிறேன்.
என்னடா இது... இவர் ஒரு லிஸ்டையே போட்டுக் காண்பிக்கிறாரே என்று வாசகர்கள் யோசிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்... எழுத்தாளன், தனித்தன்மை உள்ளவன் என்று நான் கருதவில்லை. அவன் ஒரு இலக்கியச் சூழலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன். சமூகத்தின் விரும்பத்தக்க ஒரு தன்மையை தனது தன்மையாகக் கருதுபவனே எழுத்தாளன். இதில் தனித்தன்மையை இழப்பது என்பது, பரமாத்மாவுடன், ஜீவாத்மா இணைகிறபோது இன்பம் ஏற்படும் என்கிறார்களே, அது மாதிரி. தனித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, சுய தன்மையை சமூகத் தன்மையாக நினைப்பவனோ, புகுத்துபவளோ, எழுத்தாளன் ஆகான். மரத்தைத் தாங்கி, மண்ணுக்குள்ளேயே இருக்கும் வேரைப் போல் ஒரு எழுத்தாளனை பலர், வெளியே தெரியாமலே தாங்கிப் பிடிக்கிறார்கள். படைப்பு பல படைக்கும் இவனைப் படைப்பவர்கள், இத்தகைய இலக்கிய நண்பர்களே. ‘உன் நண்பர்களைச் சொல்... உன்னைச் சொல்லுகிறேன்’ என்பதுபோல், ஒரு எழுத்தாளனை, அவனைச் சுற்றியிருக்கும் இலக்கியவாதிகளை வைத்தே கணித்து விடலாம். இந்த வகையில், என்னைத் தாங்கிப் பிடிக்கும் ஆணிவேர்களை அடையாளப்படுத்தவே இதை எழுதினேன். நான் யார் என்று அடையாளங் காட்டவே, இவர்களைப் பற்றி எழுதினேன்.
நான் யார்?
இந்த சமூக விடுதியில் ஒரு சர்வர்.
இவர்கள் சமையல்காரர்கள்.
நீங்கள்?
சாப்பிடப் போகிறவர்கள்.
சாப்பாட்டிற்காக வாழ்கிறீர்களா, வாழ்வதற்காக சாப்பிடுகிறீர்களா என்பதைச் சொல்லப் போகிறவர்கள்.
கடிதங்கள் மூலமாகச் சொல்லுங்கள்.
பத்திரிகை ஆசிரியர்கள், வெறும் வியாபாரிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைத் துணிந்து பிரசுரித்த திரு. ராமச்சந்திர ஆதித்தனுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன்,
சு. சமுத்திரம்
பேராசிரியர் நா. வானமாமலை
அவர்களுக்கு
இலக்கியம் என்றால்
என்னதென்ற கேள்விக்கு
பாட்டாளி இலக்கியமே
படைப்பிலக்கியம் என்று
விடையாக நின்றமேதை
விடைபெறாமல் போய்விட்டார்
இந்த நாவலின் முடிவு
இந்திய முடிவாகும் போது
இவரின் இறப்பே
– சு சமுத்திரம்
உள்ளடக்கம்
- ஊருக்குள் ஒரு புரட்சி/001
- ஊருக்குள் ஒரு புரட்சி/002
- ஊருக்குள் ஒரு புரட்சி/003
- ஊருக்குள் ஒரு புரட்சி/004
- ஊருக்குள் ஒரு புரட்சி/005
- ஊருக்குள் ஒரு புரட்சி/006
- ஊருக்குள் ஒரு புரட்சி/007
- ஊருக்குள் ஒரு புரட்சி/008
- ஊருக்குள் ஒரு புரட்சி/009
- ஊருக்குள் ஒரு புரட்சி/010
- ஊருக்குள் ஒரு புரட்சி/011
- ஊருக்குள் ஒரு புரட்சி/012
- ஊருக்குள் ஒரு புரட்சி/013
- ஊருக்குள் ஒரு புரட்சி/014
- ஊருக்குள் ஒரு புரட்சி/015
- ஊருக்குள் ஒரு புரட்சி/016
- ஊருக்குள் ஒரு புரட்சி/017
- ஊருக்குள் ஒரு புரட்சி/018
- ஊருக்குள் ஒரு புரட்சி/019
- ஊருக்குள் ஒரு புரட்சி/020
- ஊருக்குள் ஒரு புரட்சி/021
