ஊர்மண்
ஊர்மண்
[முழு நாவல்]
மேலாண்மை. பொன்னுச்சாமி
கங்கை புத்தகநிலையம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.
சமர்ப்பணம்
முதற்பதிப்பு முன்னுரை
முன்னுரை எழுத என் கையில் எதுவுமேயில்லை என்கிற அளவுக்கு என்னுள் ஒரு வெறுமை. என் வண்ணங்கள் முழுமையும் வழித்து இந்த நாவலில் கொட்டிவிட்ட மாதிரியோர்... உணர்வு.
இந்த நாவலை மறுபடியும் படித்துப் பார்க்கிற போது சில இடங்களில் என் கண்களில் நீர்க்கசிவு. ‘மானுடப் பிரவாகம்’ என்ற எனது சிறுகதை, என்னை அழ வைக்கும்.
இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என்ற அதிருப்தி, ஒன்றிரண்டு அத்தியாயங்களில்.
மீண்டும் கைவைத்தால் பூமாலையின் இந்த அழகு சிந்திச் சிதறிவிடுமோ என்ற பதற்றம்.
நாவல் உங்களிடம் வருகிறது.
தாழையாவும் செம்பகமும் வாடாத பூக்கள்; உதிர்ந்த பின்னும் மணம் வீசுகிற பூக்கள் – என்றென்றைக்குமாக...
அவர்களின் காதல், உன்னதங்களின் உன்னதம். ஆனால், உண்மையிலும் உண்மையானது.
இந்த நாவலை வாசித்துவிட்டு வழக்கம் போல ஓர் அஞ்சல் எழுதுங்கள். வாழ்க்கையிலிருந்து புது வண்ணங்களைச் சேகரிக்க இருக்கிற என்னிடம் உங்கள் கடிதம் ஒரு தூரிகையாக வந்து பயன்படும்; என்னை உற்சாகப்படுத்தும்; என்னை நெறிப்படுத்தும்.
சாதி என்னும் இந்திய ராட்சஸனை சவப்பெட்டிக்குள் அடைத்து, கடைசி ஆணி அறையப்படுகிற சுத்தியலின் சத்தத்தில் எனது சமூகமும், எனது நாவலும் வெற்றிப் புன்னகை புரியும். அதுவே எனது வியர்வையின் கனவு.
எனது எல்லா நூல்களைப் போலவே, இதையும் அழகாக – கச்சிதான கவித்துவமாக – அச்சிட்டு வெளியிடுகிற ‘குமரிப் பதிப்பக’ அதிபர் திரு வீ.ஜவஹர் அவர்களுக்கும்---
என்னைத் தன் சொந்தப் படைப்பாளியாக நினைத்து, நெஞ்சுக்குள் உச்சரித்துப் போற்றுகிற த.மு.எ.ச.தோழர்களுக்கும்---
எனது நூல்களையெல்லாம் தோள்களில் தூக்கிப் போட்டு ஒவ்வொரு வீடு வீடாகவும், ‘கலை இலக்கிய இரவு’களிலும் விற்பனை செய்கிற முற்போக்கு மனம் கொண்ட நண்பர்களுக்கும்---
எனது இதய நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
நன்றி!
என்றும் உங்கள்,
மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்
மறுபதிப்புக்கான முன்னுரை
‘ஊர்மண்’ எனக்குப் பிடித்த நாவல். எந்த இதழிலும் தொடர்கதையாக பிரசுரமாகாமல், நேரடியாக பதிப்பகம் சென்ற நாவல்.
இந்த நாவலின் மீதுள்ள எனதன்பு இன்னும் குறையவில்லை. இப்போது வாசித்துப் பார்க்கிற போதுகூட, இதன் மொழிநடையும், உரையாடல் நேர்த்தியும் என்னை ஒரு சுயமோகியாக்குகிறது.
இதை நான்தான் எழுதினேனா என்று மலைக்கவைக்கிறது. இன்பப் பிரமிப்பாக இருக்கிறது. இந்த நாவலுக்கு வாசகர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுக் கடிதங்கள். அமெரிக்காவிலிருந்துகூட சில கடிதங்கள் வந்தன. ஆனால்---
இதழ்களின் உலகத்தில் உரிய மதிப்புரைகளையும், கவனிப்பையும் பெறவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டமான சோகம். இந்த மறு பதிப்பிலாவது அந்தக் குறை நீங்க வேண்டும் என்று பேராசைப்படுகிறேன்.
இதைப் போன்ற மண்வாச நாவல்கள், இன்னும் ஆழமும் செறிவும் உள்ள நாவல்கள் எழுதுகிற ஆற்றல் என்னுள் கிடக்கிறது என்பதை இந்த மறுபதிப்பு எனக்கே உணர்த்துகிறது.எங்கள் ஊர் ‘பல்லக்கு கேஸ்’ என்பதற்குள் சமூக நீதிக்கான மல்லுக்கட்டு இருக்கிறது. எங்கள் ஊர் வேதக்காரப் பள்ளிக்கோடம் வந்த கதையும், ‘வேதக்காரர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும்’ என்ற நிபந்தனையோடு வந்த விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் வந்த கதையும், ஊர் நாடார்கள் முழுக்க வேதக்காரர்களாக இருந்த கதையும், எங்கள் அப்பா பெயரே ‘மரிய செல்லச்சாமி நாடாராக’ இருந்த கதையும், வேதக் கோயில் விதியின் அந்நியத் தன்மையால் மிரண்டு வெளியே வந்த நாடார்களின் ஆதிப் பண்பாட்டு மனவேட்கைக் கதையும், நாயக்கர்களில் ஒரு பகுதியினர் மட்டும் வேதக்கார நாயக்கர்களாக மாறியதில் நடந்த சமூகக் கதையும் எனக்குள் அலையடித்துக் கிடக்கின்றன.
வெள்ளைக்காரத் துரைகள் குதிரையேறி கிராமத்துக்குள் வந்த கதை பற்றி கதை கதையாகப் பேசுகிற எங்கள் ஊர் பெரிசுகளுக்கு ‘காந்தி என்றால் என்ன’வென்று தெரியாத வியப்புக்குரிய பேருண்மை கிடக்கிற பேராச்சரியம் எனக்குத் தெரியும்.
என் ஐயாப்பா சங்கையா நாடார் கடைக்காரர். எங்கள் அப்பா செல்லச்சாமி நாடார் கடைக்காரர். என் தம்பி கரிகாலனும், நானும் கடைக்காரர்கள். மூன்று தலைமுறை கடைக்கதையை கடைக்காரனான நானே எழுதினால்... அந்த நாவலுக்குள் ஜீவத்துடிப்பு இருக்கும். தமிழுக்கு ஒரு புதிய---உண்மைக் கொடையாக இருக்கும்.
எனக்கு முன்னால் வாழ்ந்தவர்களை நான் வாழ்ந்த நாட்களில் வாசித்திருக்கிறேன். கடந்த காலத்தூரங்கள் எனக்குள் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன. கிராமத்து நதியின் மீன் நான்.யோசித்துப் பார்த்தால்... எனக்குள் நிறைய நாவல்கள் பொதிந்து கிடக்கின்றன. யோசிக்கச் செய்கிறது, இந்த மறுபதிப்பு.
‘எழுத முடியும்’ என்கிற நம்பிக்கையையும், ‘எழுதணும்’ என்கிற வெறியையும் என்னுள் ஏற்படுத்துவதனாலேயே... இந்த மறுபதிப்பை பெரிதும் மதிக்கிறேன்.
மறுபதிப்பை வெளியிட முன்வந்த கங்கை புத்தக நிலையம் உரிமையாளர் திருமிகு. ராமு அவர்களுக்கும், நாவல் பிரதி தேடி எடுத்துத் தந்த எனது தோழர் செம்மலர் துணையாசிரியர் சோழ நாகராஜ் அவர்களுக்கும், இந்த மறுபதிப்பை செதுக்குவதில் உதவிய என் மகள் வைகறைச்செல்விக்கும், எனக்கு ஆதார பலமாகவும், ஆணிவேராகவும் உள்ள என் தம்பி கரிகாலனுக்கும் என் நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
- நன்றி!
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு
626127
விருதுநகர் மாவட்டம்.