உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/002

விக்கிமூலம் இலிருந்து

2


மார்கழி கடைசி. இன்னும் முழுசாக விடியவில்லை. தளர்ச்சி காணாத கிழட்டு இருட்டு. வேதக்கோயிலில் மைக்செட் உயிர் பெற்று... கிராமத்தை உசுப்பியது. “உன்னதமான வல்லமையை—இறைவா எனக்குத் தாரும்” என்ற பிச்சைக் குரல் இந்தியத்தனமில்லாத இசையில் சிணுங்கியது.

பசுமாடுகள், எருமைகள் தெருக்களில். பால் சொஸைட்டி நோக்கி ‘தக், தக்’'கென்று நடக்கும் அதுகளின் பின்னால் சட்டியும், கன்றுக்குட்டியுமாய் ஆட்கள்.

முற்றங்களில் சாணிப் பால் தெளிப்பு. கல் மாவில் கலர் கலராக—ஓவியம் ஓவியமாக—கோலம் வரைகிற சிறுமிகள்.

மார்கழிக் குணத்தை மாற்றியிருந்தது மேக மூட்டம். பனியைக் கீழே விழவிடாமல் முதுகுகளில் ஏந்திக் கொண்ட சாரல் மேக அடர்த்தி.

வேலை ஜோலி பற்றிய சள்ளைப் பிடித்த நினைப்புகளோடு முறித்துக்கொடுத்துக் கொண்டிருந்தது, மொத்தக் கிராமமும்.

டீக்கடையில் ‘ஜே, ஜே’ என்று ஜனம். வெள்ளாமை விளைச்சல் பற்றிய பேச்சுகள். பருத்தியில் வந்து விழுந்திருக்கிற சாகா வரம் பெற்ற காய்ப்புழு—அடித்த மருந்துகளையெல்லாம் உறிஞ்சு கொழுக்கிற அந்தப் புழுவின் கொள்ளை வேட்டை. பூ, பிஞ்சை உதிர்க்கிற கொலை பாதகம்.

“புழு சாகாது. மருந்தைக் குடிச்சு சம்சாரி சாகவேண்டியதுதான்” என்று சலிப்புடன் ஒருவர் சொல்ல... அந்தச் சோகத்தையும் சிரிப்பாக மாற்றிக் கொள்கிற கிராமத்து ஜனங்கள்.

“ஆந்திராவிலே... நெசமாவே ஒம்பது பருத்தி சம்சாரிகள் மருந்தைக் குடிச்சு செத்துப் போய்ட்டாக... தெரியுமா?”

“அடக்கொடுமையே... நெசமாவா?”

“பொய் சொன்னா... கிரீடமா கெடைக்கப் போவுது?”

“பரிதாபம்தான்.”

“வேற என்ன செய்ய? வருஷா வருஷம் வெளைச்சல் நாசமாகுது.உப்பு உர மருந்துச் செலவு பூராவும், கடனா வட்டியா வளருது. சாவைத் தவிர வேற வழி?”

“நல்லதங்காக் கதைதான்... சம்சாரி பொழைப்பு.”

“ஏன்...? சம்சாரி, கண்ணகியா மாறுனா என்ன?”

“எப்படி மாற? அதுக்கு துணிச்சல் வேணுமே.”

“ஒன்னு சேர்ந்தா... சம்சாரியும் கண்ணகியா மாற முடியும்.”

“இவன் எங்கே ஒன்னு சேர்றது? பொழிச்சண்டையிலேயே மண்டையை ஒடைச்சிக்கிடுவான். சாதிச் சண்டையிலே மோதிக்கிடுவான். எங்கபோய் ஒன்னு சேர?”

“சம்சாரிகளை காலம் காலமா ஒன்னுசேர விடாம துண்டு துண்டாக்கி வச்சிருக்கிறதே... சாதிச் சண்டைகதான்.”

“சாதியில்லாம என்ன நடக்கும்? கல்யாணம், கருமாதின்னா... சாதிதானே வேண்டியிருக்கு?”

“அதுக்குமட்டும் சாதியை வைச்சுக்கிடணும். மத்ததுக்கெல்லாம் சாதி என்னத்துக்கு? சகிப்புத்தன்மையோட புத்தியோட பொழைச்சா, எதுக்கு சாதிச் சண்டை வருது?”

“சாதிச் சண்டைக்கு காரணகாரியமா வேண்டியிருக்கு? ‘சாணாப் பயலே’ன்று நா சொல்லிட்டா... நீ பொசுக்குன்னு கம்பு தூக்கிருவே.நீ ‘மறப்பயலே’ன்று சொல்லிட்டா... நா சடக்குன்னு அருவாளைத் தூக்கிருவேன். பெறகு... அங்கே புத்திக்கு என்ன வேலை? பொறுமைக்கென்ன ஜோலி...?”

“நெசம்தான்... சாதியை மறந்துட்டு சம்சாரிங்குற நெனைப்புலே என்னைக்கு ஒன்னு சேர்றானோ... அன்னைக்குத்தான் சம்சாரி பொழைப்பு விடியப் போகுது. சம்சாரிக்கு பொழைப்பு விடிஞ்சாத்தான்... நாட்டுப் பொழைப்பும் விடியும்.”

“தெனம் தெனம் விடியும்... நமக்கு எப்பவும் விடியப் போறதுல்லே... ஏய்... ஒரு டீ போடப்பா.”

இப்படி நாலா திசைக்கு நகர்ந்து ஓடிப் பாய்ந்து முடங்குகிற பேச்சு. அலைபாய்ந்து கரை நனைக்கிற பேச்சுகள்.

டீக்கடை முன் பக்கத்தில் உட்காந்திருந்த ராமையாத் தாத்தா, அந்தக் கால விவசாயத்தைப்பற்றிக் கதை சொன்னார். குதிரைவாலி, காணப்பயிறு விளைய வைத்த காலம். ஆற்றுத் தண்ணீரில் ஐயிரைமீனைப் பிடித்துத் தின்ற காலம். காலரா வந்து கூட்டம் கூட்டமாக செத்த காலம்...

என்று விலாவரியாகச் சொல்லிவந்த ராமையாத் தாத்தா ‘தீ வைக்கும் கலை’ பற்றி ரொம்பச் சுவாரஸ்யமாகச் சொன்னார். ரசனையோடு பேசிக்கொண்டிருந்தார்.

தீக் கங்கை அள்ளி ஒரு துணியில் வைத்து பொட்டலம் கட்டி, பழைய துணிகளால் சுற்றிச் சுற்றி, சாக்குத் துணியாலும் சுற்றி பெரும் பந்தாக்கி, வைக்கோல் படப்புக்குள் சொருகி வைத்துவிட்டுப் போய்விட்டால்... போனவன் பதினைந்து மைல் தூரம் நடந்துபோன பிறகுதான், தீ பிடிக்குமாம்.

தீ வைத்தவனைப் பிடிக்கவே முடியாதாம்... சந்தேகப்படக்கூட வழி இருக்காதாம்.

சாதிச் சண்டைகளில் வெந்து முடிந்த வைக்கோற்படப்புக்களைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார், கதை கதையாக.

டீக்கடைச் சுவரில் சாய்ந்துகிடந்த வேல்சாமி இதையெல்லாம் கவனித்தும் கவனிக்கமாலும்... தன் நினைவுகளுக்குள் மிதந்தான்.

‘ஒரு காகிதம் எழுதணும், யாரை எழுதச் சொல்றது? மூர்த்தி தம்பி எழுதித் தருவான். அவன் திருச்சிக்குப் போய்ட்டான். யாரை எழுதச் சொல்றது?’

நினைவு அங்கேயே நொண்டியடித்து...

...வேல்சாமி அப்போ சின்னப்பையன். ஆறு வயசு இருக்கும். விரலைச் சூப்பிக்கொண்டே அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டே அலைவான்.

‘பள்ளிக்கோடம் போடா’ என்றால்... ‘ஆமா... போ.. நா போவமாத்தேன்...’ என்று சிணுங்குவான். ‘சின்னப் பிள்ளை, சிணுங்கல்தான். போகப் போகச் சரிபண்ணி பள்ளிக்கு அனுப்பிவிடலாம்’ என்ற பெற்றவர்களின் நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டான் வேல்சாமி.

ஒரேயடியாக சாதித்து விட்டான்.

அப்போதெல்லாம்.. பத்து மணிக்குமேல் வாத்தியார் பிரம்புக்குச்சியோடு கிராமத்துச் சந்து பொந்துகளில் தேடித் திரிவார்—‘தப்பிப்போன ஆடு கண்ணில் தட்டுப்படுதா’ என்ற தேடல் மனோபாவத்தோடு.

பள்ளிக்கூட வயசு வந்தும் பள்ளிக்கு வராமல் விளையாடிக்கொண்டு திரிகிற பயல்கள், வாத்தியாரைக் கண்டவுடன் ‘அர்ச்சுனன் பேர் பத்து’' என்று அலறியடித்துக்கொண்டு ஓடுவான்கள்.

வேல்சாமியும் அப்படித்தான். எங்காவது போய் பம்மிப் பதுங்கிக் கொள்வான்.

சிக்கிய பையன்களை பிரம்புக்குச்சியைக் காட்டி அதட்டுவார் வாத்தியார். அப்புறமும் நழுவ எத்தனித்தால்... நாலு பையன்கள் காலையும் கையையும் பிடித்துக்கொண்டு தூக்கிச் செல்வார்கள், பன்றியைத் தூக்கிக் கொண்டு போகிற மாதிரி.

பிடிப்பட்ட பையன் உலக்கையடி வாங்கிய பன்றியாக வீறிடுவான்.

ஒரு நாள்—

வாத்தியார், வேல்சாமியை குறி வைத்துத் தேட ஆரம்பித்துவிட்டார். அந்தத் தாக்கலும் வந்து சேர்ந்து விட்டது இவனுக்கு. ‘எங்க ஓடிப் போய் தப்பிக்கிறது’ என்று தெரியாமல் தத்தளித்தான், வலைக்குள் விழுந்த மைனா மாதிரி. பதற்றத்தில் ஒன்றும் ஓடவில்லை. கையும் காலும் உதறலெடுத்தது. வழி ஒன்றும் திகையவில்லை. அவசரத்தில் அகப்பட மறுக்கிற பாதை...

வாத்தியார் தெருமுனையில் தலையைக் காட்டிவிட்டார்.

“என்ன செய்ய?”

பதற்றப் பரபரப்பில் ஒன்றும் ஓடாமல், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நரிமாதிரி...தொழுவத்திற்குள் நுழைந்து மூங்கில் கதவைச் சாத்திக் கொண்டான்.

இருட்டு. கோழிகள் அடைகிற இடம். கோழிச்செல் (கோழிகளுக்குரிய பேன். பேனைவிட மிகச்சிறிய வெள்ளைப்பிராணி) வந்து அப்பிக்கொண்டது. செவி இடுக்குகளில்— கம்மங்கூட்டில்— நடுமுதுகில் ஊர்ந்து போகிற செல்களால் வருகிற அரிப்பு. தாளமுடியாத அரிப்பு. கூச்சமான அரிப்பு.

போதாக்குறைக்கு உடைந்த ஓட்டு மணலில் முட்டைகளின் மேல் படுத்துக் கிடந்த அடைக்கோழி. கள்ளனைக் கண்ட நாயைப் போல பயத்தோடு ‘கேர், கேர்’ரென்று அலறுகிறது.

‘காட்டிக் கொடுத்து விடுமோ’ என்று வேல்சாமி பதறிய பதற்றத்தில், டவுசரில் ஒன்னுக்கே இருந்து விட்டான்...

நல்லவேளை... வாத்தியார் தொழுவத்தைச் சந்தேகிக்கவில்லை. கவனிக்காமல் ஏமாந்து போனார்.

வேல்சாமிக்கு அன்றைக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அடைபடாத சந்தோஷம். தளும்பித் தெறித்த மகிழ்ச்சித் துளிகள்.

ஒரே ஓட்டமாய் ஓடினான். கமலை இறைத்துக் கொண்டிருந்த கிணற்று வாய்க்காலில் குளித்து, செல் அரிப்பிலிருந்து விடுபட்டு... ரொம்பக் குதூகலமாக விளையாடப் போனான்...

அன்றைக்கு வாத்தியாரிடமிருந்து தப்பித்ததற்காக குதூகலித்த வேல்சாமி, இன்றைக்கு டீக்கடையிலிருந்து வருத்தப்பட்டான். ‘அன்றைக்கு நான் தோற்றிருந்தால்... வாத்தியார் கையில் சிக்கியிருந்தால்... நல்லாயிருந்துருக்குமே’ என்று மனசுக்குள் வருந்துகிறான், இப்போது.

ஒரு காகிதம் எழுதக்கூட முடியாமல், கண்ணிருந்தும் குருடனாக தவிக்க வேண்டியிருக்கிறதே...

சம்சாரிக சாதிச் சண்டைகளிலேயே வாழ்க்கையை தொலைப்பதற்கும்கூட பெரிதும் காரணம்... எழுத்து வாசனை இல்லாமல் இருப்பதுதான்.

கல்வி கெடைச்சிருந்தா... அந்த வெளிச்சத்துலே தொழிலைப் புரிஞ்சிக்கிடலாம். தொழில் நசிவுக்குக் காரணமான அரசாங்கத்தைப் புரிஞ்சிக்கிடலாம். அரசியலைப் புரிஞ்சிக்கிடலாம். நிலம் தனியார் கைகளில் குவிஞ்சு கிடக்கிற சமுதாய அமைப்பைப் புரிஞ்சிக்கிடலாம். இதையெல்லாம் மாத்திச் சரிபண்ணுகிற பாதையையும் புரிஞ்சுக்கிடலாம். புரிஞ்சுக்கிட்டா... சாதிச் சண்டைக்கு இடமேயில்லாமப் போயிருமே...

இப்படித்தான், ஒவ்வொரு காகிதத்திலும் விலாவரியாக எழுதுகிறான், சிந்தாமணி. அவன் தங்கமானவன். நாடாக்கமார்தான். ஏவாரிக் குணமில்லாத மனசுக்காரன். கணக்கு வழக்கு பார்க்காமல், நட்பை மதிக்கிறவன். சிநேகிதக்காரனுக்காக உயிரைக்கூட ஒப்படைக்கத் தயங்கமாட்டான். மனிதன் என்றால் அவன்தான் மனிதன். மனிதக் குணம் மட்டுமே ததும்பி நிற்கிற முழு மனிதன்.

இதோ... பட்டிக்காட்டுக்குப் பொருந்தாத ஆடம்பரமாக தான் போட்டிருக்கிற சிவப்புக்கலர் ஸ்வெட்டர், அவன் கொடுத்ததுதான். உள்ளே போட்டிருக்கிற பட்டாளத்துப் பனியன், அவன் தந்ததுதான்.

பட்டாளத்துலேயிருந்து லீவுக்கு வர்றபோதெல்லாம் ஏதாச்சும் ஒரு பொருள் தராமல் போகவே மாட்டான்.

இப்போது.... அவனுக்குத்தான் காகிதம் எழுத வேண்டும். எப்படி எழுத? யாரை எழுதச் சொல்ல?...

இந்த யோசனையே அவனுள் கோழிச் செல்லாக அரித்தது. நமைச்சலெடுக்கிற அரிப்பு.

சாயங்காலம் பாத்துக்கிடலாம். சத்துணவு ராமசாமிகிட்டே சொல்லி எழுதச் சொல்லலாம். பெரிய படிப்பு படிச்சவர். ஹைஸ்கூல் வாத்தியாராகிற அளவுக்கு ஒசந்த படிப்பு.

அவரைத்தான் பிடிக்கணும். அவருதான் சரியான ஆளு.

மூர்த்தி மாதிரியே அவரும் வெவரமான ஆளு.

வெளியே வந்தான். இருட்டைப் பலவீனப்படுத்துகிற மேகத்து வெளிச்சம், மழலைத்தனமாய் தவழ்ந்து படர்ந்தது. ஓடைக்குப் போய்விட்டு வந்தான். வேலி விறகு வெட்டப் போகணும். கூலி முப்பது ரூபாய்.

பல்லைத் தேய்த்துக் கஞ்சியைக் குடித்தான். ரெண்டு லிட்டர் பிளாஸ்டிக் கேனில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டான். மதியச்சோறு வைத்திருந்த தூக்கு வாளியை எடுத்துக்கொண்டான். பட்டாளத்துத் துணியில் தைத்த டவுசர். பட்டாளத்துப் பனியன், பட்டாளத்துப் பூட்ஸ். தொரட்டி, வெட்டரிவாள், குத்துக்கம்பி எல்லாம் எடுத்துக் கொண்டான்.

பட்டாளத்து அய்ட்டமெல்லாம் பட்டாளத்துச் சிநேகிதன் சிந்தாமணியின் நன்கொடை. அன்பளிப்பு. நட்பில் கரைந்த மனசின் அடையாளம். சாதி உணர்வைக் கடந்த நட்பு.

பாழடைந்த பெருமாள் கோயில், ஆற்றின் கரையில். நீரில்லாத ஆறு. மணற் கொள்ளைக்கு ஆளாகி... விதவையாகிப் போன மலட்டு ஆறு. அதன் கரையில் கோயில். வெள்ளையடிக்காத கோயில். கன்னங்கரேலென்று நரைத்துப் போன கிழட்டுக் கோயில். சாமி சிலையில்லாத கோயில்.

இந்தக் கிராமத்தில் கால் பரப்பிய கறுப்புச் சட்டை இயக்கத்தின் துடியான வாலிபர்கள்.... ‘சமூகத்தின் முழு எதிரியே சாமி சிலைகள்தான்’ என்ற திசை நழுவிய கோபத்தில்... நடத்திய தாக்குதலில் சிதிலமாகிப்போன பெருமாள் கோயில். கோயிலைச் சுற்றிலும் வேலி மரங்களின் அடர்த்தி, புதரைப்போல. கொப்பும் கொழையுமாக அடர்த்தி.

அதைத்தான் வெட்ட வந்திருக்கிறான், வேல்சாமி. இவனுக்குப் பெயரே, விறகு வெட்டி வேல்சாமிதான். இவனைக் கண்டால்... வேலிமரம் பட்சியாகப் பயப்படும். பதறி நடுங்கும்.

மஞ்சணத்தி மரத்தில் சோற்றுச்சட்டியை மாட்டினான். நிழலில் கேனை வைத்தான். பூட்ஸ் கால்களோடு வேலி முட்களை நறநறவென்று மிதித்துக்கொண்டு புதருக்குள் நுழைந்தான். தொரட்டியைப் போட்டு முட்கிளைகளையெல்லாம் இழுத்து ஒதுக்கினான். கனத்த அரிவாளையெடுத்தான். கட்டைகளில் ஓங்கிச் சாயலாகப்போட்டான். அல்வாக் கட்டிக்குள் பாய்ந்த கத்தியாக ‘சதக்’கென்று விழுந்தது.

பழுத்த வேலி இலைகள் அவன்மேல் விழுந்து வியர்வை நசநசப்பில் ஒட்டிக்கொண்டன. புள்ளி புள்ளியாக. விறகு மளமளவென்று சாய்ந்தது, குவிந்தது. புதர் இருட்டுக்குள் வெயிலின் வெளிச்சம் சுதந்திரமாய் முன்னேறியது.

அவனுக்குள் சிந்தாமணி. தாழையா நாடாரின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகன். பட்டாளத்தில் இருப்பவன். இன்னும் கல்யாணமாகவில்லை.

ராணுவப்பணி முடிந்த பிறகுதான் கல்யாணம் என்ற வைராக்கியத்தில் இருப்பவன்.

அவனுக்குக் காகிதம் எழுதவேண்டும். ராமசாமியைப் பார்த்து எழுதச் சொல்லணும். முத்துலட்சுமி விஷயத்தைச் சொல்லணும்.

எப்படிச் சொல்ல? அந்தரங்கமான விஷயத்தை அந்நியனான ராமசாமியிடம் எப்படிச் சொல்ல?

ம்ஹூம்... சொல்லக்கூடாது. அது நல்லதுல்லே. ஒரு பெண்ணோட— வாழவேண்டிய பெண்ணோட— அந்தரங்கத்தைத் தண்டோரா போடுறதுவும், பச்சைப் புள்ளை கழுத்தை நெரித்துக் கொல்வதும் ஒன்னுதான். பாவகாரியம்.

வரட்டும். லீவுக்கு வருகிறபோது நேரில் பேசிக்கொள்ளலாம். அதற்குள் கை மீறிப் போய்விட்டால்... காரியம் கெட்டுப் போய்விட்டால்... சிந்தாமணி ஒருவனால்தான் இதைத் தடுக்க முடியும்.

அவனுள் நடுக்கம். ஒரு குழப்பம்.

நம்ம சாதிக்காரப்பய சங்கையா... சாதிச் சண்டையாக வெடிச்சிட்டா...?

அவனுக்குள் எறும்புகள் ஊர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/002&oldid=1818088" இலிருந்து மீள்விக்கப்பட்டது