உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/003

விக்கிமூலம் இலிருந்து

3


சாப்பிட்டு முடித்து கை கழுவினார், தாழையா. ஈரக்கையாலேயே மீசையையும் நீவி விட்டுக்கொண்டார். பருக்கை இணுக்குகளை நீவுதலில் சுத்தம் பண்ணினார்.

வட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போனாள், பொற்கொடி.

உட்கார்ந்த இடத்தில் கிடந்த மேல்துண்டை எடுத்து ஈரக்கையையும் மீசையையும் துடைத்துக் கொண்டார்.

குலைந்து போயிருந்த நரைத்த மீசையை கெழுறு மீனை தொடுகிற ஜாக்கிரதையுணர்வோடு தொட்டு... நீவி... முறுக்கிவிட்டுக் கொண்டார். விழிகளை அடியில் இறக்கி, மீசையின் மேல் நுனிகளை திருப்தியுடன் பார்த்துக் கொண்டார்.

மீசை அவருக்கு இஷ்டமான விஷயம். ரொம்பப்பிடிக்கும். கள்ளப் பெண்டாட்டி மாதிரி... அதன்மேல் ஒரு மோகம்.

செம்பகம் முன்பே சொல்வாள். மீசையைப் பற்றி ரொம்ப இளப்பமாகச் சொல்வாள்.

“ஆனா... வீமன் தடியன் கணக்கா இருக்கீராக்கும்? கைத் தண்டியிலே (கை கனத்தில்) மீசை வைச்சு... செந்தட்டிவீரன் சாமி கணக்கா ஓங்குதாங்கா இருக? சீத்தைக்குஞ்சு கணக்கா இருக்கீரு. இதுலே முறுக்கு மீசை வேணுமாக்கும்?”

ஆசைப் பெண்டாட்டியை மோகத்துடன் தழுவுவதைப் போன்ற போதைப் பெருமிதத்துடன் பதனமாய்—இதமாய்—மீசையைத் தடவிக் கொள்வார். “மீசை இருந்தா... ஒன்னை என்ன செய்யுது? மீசைதான் ஆம்பளைக்கு அழகு.”

“அதுக்கும் ஒரு பொருத்தம் வேண்டாமா?”

“ஆளு ஒல்லியாயிருந்தாலும்... மீசையை முறுக்கி விட்டுக்கிட்டா... மனசுக்குள்ளே ஒரு வீரம் வரும். தைர்யம் வரும். மீசையைப் பார்த்தா... எதிரே நின்னு பேசுறவனுக்கும் ஒரு மரியாதை வரும். அதுலேயே ஏங் காரியத்தை நா சாதிச்சிக்கிடுவேன். தெரியுமா?”


“ஆமா... இந்த வாய்ப் பேச்சுக்கு ஒன்னும் கொறைச்சலில்லே...”

“வாயுள்ள புள்ளைதான் பொழைக்கும்னு சொலவடை. அது ஒனக்குத் தெரியுமா?”

“அதான்... ஊருக்குள்ளே எல்லாரும் வாயடி நாடாருங்காக.”

“சொல்லட்டுமே... என் சாமர்த்தியத்துலே சம்பாதிச்ச பேருதானே, அது? அதுவும் ஒரு பெருமைதானே?”

அந்தப் பெருமிதம் இப்போதும் உண்டு, அவருக்கு. நரைத்து செம்பட்டை பாய்ந்துவிட்டாலும், மீசையை முறுக்கிவிட்டுக் கொள்வார். சவரம் செய்கிற நாவிதன்கூட அவர் மீசைக்குத்தான் ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வான்.

மீசை மேல் அப்படியோர் மயக்கம் அவருக்கு.

மேல் உதட்டில் ஒட்டிக் கிச்சலம் காட்டிய ரோமங்களையெல்லாம் விரலால் தொட்டு எடுத்து மீசையுடன் சேர்த்துக் கோதிவிட்டுக் கொண்டே செம்பகம் படுத்திருந்த கட்டில் பக்கமாய் வந்தார்.

அவளும் அப்போதுதான் காலைக் கஞ்சியைக் குடித்திருந்தாள். உப்பில்லாத சுடு அன்னக்கஞ்சி. அத்துடன் சுடவைத்த பசும்பால். சுவாரில் தலைவைத்துச் சாய்ந்து கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் ஒரு தெளிர்ச்சி. எலும்பும் தோலுமாகத் துவண்டிருந்த அந்த நோயாளியின் முகத்தில் ஓர் உயிர்க்களை. ஈரல்குலையில் போய் விழுந்த பருக்கைகளினால் வந்த மலர்ச்சி.

கட்டிலைச் சுற்றிலும் தரை சுத்தமாகக் கழுவி விடப்பட்டிருந்தது. செங்கல் பாவிய தரை. சிரட்டையில் புது மணல், தூசுகளுடன்.

“சரி...மாத்திரையும் டானிக்கும் சாப்ட்டீயா?”

“இல்லே.”

“சாப்டுதீயா? எடுத்துத் தரட்டா?”

“வேண்டாம். பொற்கொடி இருக்காள்லே?”

அந்நேரம்—

வீட்டு முற்றத்திலிருந்து பொற்கொடி கூப்பிடுகிற குரல்.

“....ய்யா....”

“என்னம்மா.”

“உங்களைத் தேடிக்கிட்டு வந்துருக்காக.”

“யாரு?”

“வந்து பாருங்க...ய்யா.”

“மாமா...” உள்ளூர் இளவட்டக் குரல்.”

“என்ன?”

“உங்களைத் தேடி அசலூருக்காரரு வந்துருக்காரு.”

வெளியே வந்தார், தாழையா. வாசலுக்கு வந்தவுடன் தாழையா முகத்தில் பளிச்சென்று ஒரு வெளிச்சம். ஒடுங்கிய சின்ன முகத்தில் மின்னுகிற மகிழ்ச்சி. சிரிப்பில் உதட்டுடன் சேர்ந்து விரிந்து நீள்கிற மீசை.

“அடடே... சன்னாசித் தேவரா? வாருமய்யா...வாரும். சொன்னபடியே வந்துட்டீரே...”

“ஆமாய்யா... ஒம்ம வீட்டைக் கண்டுபிடிக்குறதுக்குள்ளே பெரும்பாடாப் போச்சு...”

“என்னத்துக்கு? எம்பேரைச் சொன்னாப் போதுமே... வவுத்துக்குள்ளே கெடக்குற புள்ளைகூட வழிகாட்டுமே.”

“சிக்கலே... அதுதானே...ய்யா.”

“என்ன சிக்கல்...?”

இனி நடக்கப் போகிற உரையாடலை முன்னுணர்ந்து கொண்ட உள்ளூர் இளவட்டம், தர்மசங்கடமாக நெளிந்தான். நழுவிக்கொள்ள பரபரத்தான்.

“சரி... நீ போ... மாப்ளே. சரி... இப்பச் சொல்லும், என்ன சிக்கல்?”

“ஊர் மடத்துலே ஆளுகளா இருந்தாக. ஒம்ம பேரைச் சொல்லிக் கேட்டேன், ஒருத்தருக்கும் தெரியலே.

அப்படியோர் ஆளே இந்த ஊர்லே கெடையாதுன்னு ஒரு பையன் அடிச்சுச் சொல்லிட்டான். நா தெகைச்சுப் போயிட்டேன்...”

“ம்... அப்புறம்?”

“பெறகென்ன? ஓம்ம அடையாளத்தை மெல்லச்சொன்னேன். அப்புறம் ஒரு பெரியாளுதான் ஒம்ம வீட்டைக் காட்டச் சொன்னாரு.”

“ம்... அப்படியா...?”

“ஊர் பூராவும் வாயடி நாடார்னாத்தான் தெரியுது. தாழையா நாடார்னா... ஒருத்தருக்கும் தெரியலியே...”

“அதுவா? ஆமாமாம், அது அப்படித்தான். வாயடின்னுதான் ஊர் பூராவும் கூப்புடுவாக. அது நமக்குப் பட்டப் பேரு. பட்டப்பேரு துலங்கிருச்சு. சொந்தப்பேரு மங்கிருச்சு...”

“வாயடி நாடாருங்குறதுதான் ஒமக்குப் பொருத்தமான பேரு...”

தாழையா நாடார் அந்தப் பாராட்டில் கிறங்கிப்போனவராக மகிழ்ந்து போய்ச் சிரித்தார்.

“வாயடியிலேயே... எப்பேர்ப்பட்ட கொம்பாதி கொம்பனையும் அடிச்சுச் சாய்ச்சிருதீர்லே?”

“சரி... நம்ம பொழைப்பு தரகுப் பொழப்பு. வாய்தானே நமக்கு மூலதனம்? அதை வைச்சுத்தானே முழம் போடணும்?”

“அதுவும் ஞாயந்தான்...”

பேர் விஷயம் பேசிக்கொண்டிருக்கும் போதே தாழையாவுக்குள் தாவுகிற நினைவோட்டம். தக்கையின் அசைவைக் கவனிக்கிற தூண்டில்காரனின் துல்லியத்தில், அவர் மனசு.

“சரி... வாசல்லே நின்னு பேசுனா... எப்படி? வீட்டுக்குள்ளே வாரீரா... வெளியே போவோமா?”

“போவோம்...”

“அப்ப நடையைப் பிடியும். சைக்கிள்லே வந்தீரா?”

“ஆமா. மடத்துக்கிட்டே நிப்பாட்டிட்டு வந்தேன்...”

“ம். என்னவிஷயமா வந்தீரு? காரியத்தைச் சொல்லும்.”

“ஒமக்குத் தெரிஞ்சதுதானே? நா எதுக்கு வந்துருக்கேன்னு ஓமக்குத் தெரியும்லே?”

“அடச் சொல்லும், தேவரய்யா...”

“ஏதோ... ஒரு பசு கெடக்குன்னு சொன்னீர்லே?”

“ஆமாமா... நேத்துச் சொன்னேன்...”

“அது கெடக்குதா?”

“கெடக்கு, கெடக்கு...”

“போய்ப் பாப்பமா?”

“பாத்துட்டுப் போகவா... பத்திக்கிட்டுப் போகவா?”

“மாடு மனசுக்குப் பிடிச்சு... வெலை நெலவரமும் படிஞ்சு வந்துச்சுன்னா... பத்திக்கிட்டே போயிர வேண்டியதுதான்.”

“மடியிலே கனமிருக்கா?”

“இருக்கு.”

“அப்பச் சரி... தேவரய்யா, நீரு மடத்துலே சித்தே இரும். நா ஒரு நிமாண்டுலே வந்து சேருதேன்.”

“ம்... ரொம்ப நேரமாகுமா?”

“ஆமா... கொஞ்ச நேரம் ஆகத்தான் செய்யும். காரியத்தை முடிக்கணும்லே?”

“நா... மடத்துலே இருக்கேன். சட்டுன்னு வந்து சேருமய்யா... வீட்லே வேலைசோலி கெடக்கு, தலைக்குமேலே.”

“மூடி முழிக்கும் முன்னாலே வாரேன்.”

சன்னாசித் தேவர் மடத்துப் பக்கமாகப்போனார். ஆணிகள் அறைந்த தோல் செருப்பு ‘சர்ரக்... சர்ரக்’ என்று கர்ஜித்தது. நாலுமுழ வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். மேலே ஷர்ட். அதுக்கு மேலே பச்சையும் சிவப்புமாகக் கட்டம் போட்ட துண்டு. தலையிலும் உடம்பிலும் குளுகுளுவென்று எண்ணெய் தேய்த்திருந்தார். வெள்ளி, செவ்வாய் பிள்ளையார் மாதிரி எண்ணெயில் நனைந்து மின்னினார்.

தாழையா, அவர் போவதைப் பார்த்துவிட்டுத் திரும்பினார். மனசு முழுக்க ஒரு துல்லியத்தில் குவிந்தது. அவருள் ரத்தம் பரபரத்தது. வீட்டுக்குள் பாய்ந்தார். சட்டையைத் தூக்கி மாட்டினார். கழுத்து வழியாக போடுகிற அரைக்கைச் சட்டை.

கழுத்துப்பட்டனை மாட்டிக்கொண்டு, துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு—

“சரி....செம்பு.”

“போய்ட்டு வாங்க.”

“மாத்திரையை சாப்புட்டுக்கோ. அயத்துராதே.”

“ஆட்டும்.”

“பொற்கொடி.”

“நா... பாத்துக்கிடுதேன்ய்யா...”

அப்பவும் அவருக்கு ஒரு மனசாகவில்லை. அத்தனை பரபரப்பிலும்... மனசு முழுக்க ‘செம்பு, செம்பு...’ என்று மருகித் தவித்தது. உயிரின் இழையாய் உணர்வைப் பிணைக்கும் ஆத்ம தோழியின் நினைவு.

செருப்பை மாட்டிக்கொண்டு வாசல்படியைத் தாண்டுவதற்குள், மூன்று தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தார். பார்வையின் மருகல். கண்களின் அசைவிலேயே செம்பகம் தெம்பு சொன்ன பிறகுதான், ஒரு மனசோடு படிதாண்டினார்.

எல்லாம்... தெருவுக்கு வரும் வரைக்கும்தான். தெருக்காற்று அவர்மீது பட்டவுடன்... தாழையா நாடார், வாயடி நாடாராகிவிட்டார். தொழிலைச் சுற்றி மட்டும் பின்னிப் பின்னி வலை செய்து, நெருங்கிக் குவிகிற மனசு. மனத்தீவிரம்.

கீழத்தெரு நோக்கி நடையை எட்டிப் போட்டார். இளமதிய வெயில், உறைக்காமல் அடித்தது. மார்கழி மாதத்து வெயில். பருவம் தப்பிய முறையில் மாரி மூலைக்காற்று வீசுகிறது.

வேட்டியைத் திரட்டி மடித்துக் கட்டிக்கொண்டார். துண்டை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டார். ‘விசுக், விகக்’கென நடையை எட்டிப் போட்டார்.

முந்தா நாளே மாட்டை விலை பேசி முடித்துவிட்டார், வாயடி. நல்ல இளம் பசு. சிவலை நிறம். நாட்டுச் சரக்கு. ரெண்டாம் ஈற்று ஈண்டிருக்கிறது. ஒரு மாதம் கூட ஆகவில்லை. பால் மூன்று லிட்டருக்குக் குறையாது. நல்ல பரம்பரை. சைசான கொம்பு வரிசை.

வந்த வியாபாரிகள் எல்லாரும் ‘ஆயிரத்தைந்நூறுக்குக் கீழே வெலை சொல்லு’ என்று ஒரே பல்லவியைத்தான் பாடினார்கள். பசு வைத்திருக்கிற முனியசாமிக்கு பணத்துக்கு ரொம்ப அவசரம்.

எப்படியாவது உடனடியாக விலையாடியாகணும். வயிற்றுப் பசி. தீப் பசி. ஆனால் வியாபாரிகள் கேட்கிற விலை, அடி தண்டமாக இருக்கிறது. அடிமாட்டு விலையாய்... கொடுமை.

பணத்துக்கு அவசரம்தான். அதற்காக கொடுமையின் காலில் விழுந்து பணிய மனசில்லை, முனியசாமிக்கு.

வழியற்றுப் போன நிலையில்... வாயடியிடம் நம்பிக்கையோடு தஞ்சமடைந்தான். கெஞ்சிக் கூத்தாடி மருகித் தவித்தான்.

“என்னப்பா... செய்யணும்ங்கே?”

“துட்டுக்கு ரொம்ப அர்ஜென்ட், கழுத்தாம்பிடியான நெருக்கடி.”

“அதுக்கு நா என்ன செய்ய?”

“நீங்கதான்... எப்படியாச்சும் ஒரு ஏற்பாடு பண்ணியாகணும்.”

“சரி. சொல்லிட்டேல்லே? ரெண்டு நாள் பொறு. ஏதாச்சும் பாப்போம்.”

“பாப்போம்னா? இழுத்தாப்புலே சொல்லுதீகளே...”

“ரைட், முடிச்சிருவம். சர்த்தானா?”

“ஆங். அப்படிச் சொல்லுங்க. நீங்க மனசு வைச்சிட்டா... காரியம் முடிஞ்ச மாதிரிதான்.”

இதுதான் வாயடி நாடார். ஊரிலுள்ள சகல சாதி சம்சாரிகளுக்கும் அப்படியோர் நம்பிக்கை. அழுத்தமான பற்று, மோசம் பண்ணமாட்டார் என்கிற வைர நம்பிக்கை. இந்த ஊரிலுள்ள சம்சாரிகளுக்கு மட்டுமல்ல, சுற்றுப்பட்டி பத்து ஊர் ஜனத்துக்கும்தான்.

அன்றைக்கே வாயடி கம்மாய்ப்பட்டிக்குப் போனார். அங்கே ஒரு சம்சாரியிடம் இருபது மூடை நெல் இருப்பதாகத் தகவல். இன்னொருத்தரிடம் எம்.சி. 5 பருத்தி ஒரு அம்பாரம் கிடக்கிறது.

ரெண்டும் படியுமா என்று விசாரித்துவிட்டு, பசுவுக்கும் ஆள் கிடைக்குமா என்று துப்பு துலக்கினார். வாயடி காரியம் பூராவும் இப்படித்தான்.

ஒரு ஜோலியாக மட்டும் எங்கும் போகமாட்டார். ‘ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கணும். அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் இருக்கணும்’ என்கிற மாதிரித்தான் பயணப்படுவார். எங்கு குறிவைத்தாலும்... கொத்துக் காய்கள் மீதுதான் கல்லெறிவார்.

இப்போதும் அப்படித்தான்.

அப்படி விசாரிக்கிற போதுதான், இந்தச் சன்னாசித் தேவர் சிக்கினார். அவருக்கு ஒரு பால் மாடு வேண்டியிருந்தது. தூண்டிலில் மீன் சிக்கியிருப்பதை தக்கை ஆடுவதிலேயே கண்டுவிடலாம். இல்லையா? வாயடியின் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. தூண்டிலைச் சுண்டியிழுப்பதைப் போன்ற நுட்பத்துடன் சாமர்த்தியமாகப் பேச ஆரம்பித்தார்.

“பசு நல்ல சிவலை. ஒமக்கேத்த ஐட்டம். பாலு மூணுக்குக் குறையாது.”

“மாடு... முத்தலா?”

“என்னை யாருன்னு நெனைச்சீரு? முத்துன மாட்டை ஒம்மகிட்டே காட்டுவனா? ரெண்டாம் ஈத்து. இளசு. பசு வந்து ஒம்ம தொழுவிலே நின்னா... தொழுவே ஒரு அழகாயிரும், மகாலட்சுமியே வந்து நின்ன மாதிரி. அப்படிப்பட்ட லட்சணம்.”

“சரி...வெலை என்ன பாட்டத்துலே... இருக்கும்?”

“நீரு என்ன நெலவரத்துலே இருக்கீரு? அதைச் சொல்லும் மொதல்லே.”

“ம்ம்... என்னத்தைச் சொல்ல?”

“சொல்லும்.”

“என்ன... அந்தா இந்தான்னு... ரெண்டுக்குள்ளே அமைஞ்சா நல்லது.”

“ரெண்டாயிரமா?”

“ம்.”

“சரி... நாளைக் கழிச்சு வாரும். ரெண்டாயிரத்துக்குள்ளே அமையுறது, கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம்... முன்னேப் பின்னே... இருக்கும்.”


“அதெல்லாம் நம்மாலே முடியாது. ரெண்டாயிரத்துக்குள்ளேதான் பாக்கணும்.”

“சரி தேவரே, ஒமக்குச் செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்? வாரும். நம்மளை எப்பவும் மனசுலே நெனைச்சுக்கிட்டிருக்குற மாதிரி... ஒரு பசுவை கொண்ணாந்து உம்ம தொழுவத்துலே கட்டிருதேன்.”

“அதுக்குத்தான்... நாடாரு வேணுங்குறது.”

சன்னாசித் தேவருக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சி. ஒரு காரியம் முடிந்த நிம்மதி. ஊர் ஊராகத் தேடியலைகிற அலைச்சல் இல்லாமல் போன திருப்தி.

வாயடிக்கும் ரொம்ப சந்தோஷம், ஒரு வேட்டை கிடைத்த மகிழ்ச்சி. வைத்த குறியில் கொத்துக் காய்கள் மடியில் விழுந்த வெற்றிப் பெருமிதம்.

மறுநாளே... முனியசாமியிடம் பத்துப் பைசாவை அட்வான்ஸ் போட்டு வைத்தார். விலை ஆயிரத்து எழுநூற்றைம்பது. அந்த விலை முனியசாமிக்கும் நியாயமாகப் பட்டது. கழுத்தாம்பிடியிலிருந்து தப்பித்த நிம்மதி. வாயடியை குலதெய்வமாக நினைத்தான்.

இப்போது முனியசாமியைத் தேடித்தான் ‘விசுக், விசுக்’ நடை. நல்ல வேளை, இருந்தான்.

“யப்பா... முனியசாமி, ஆளு வந்தாச்சு. நீ ரெண்டாயிரத்து நூறு சொல்லி, ரெண்டாயிரத்துக்குக் கீழே எறங்காதே. மத்ததை நா பாத்துக்கிடுதேன்.”

“ஆட்டும்.”

“நேத்து நாம பேசிக்கிட்டது, அட்வான்ஸ் குடுத்தது எதையும் மூச்சு காட்டாதே. அது நமக்குள்ளேயே இருக்கட்டும்.”

“ஆட்டும்... ஆட்டும்.”

“ஆளை சாயங்காலம்தான் கூட்டிக்கிட்டு வருவேன்.”

“வந்துட்டாருன்னு சொன்னீகளே?”

“வந்தவுடனே மாட்டைக் காட்டக் கூடாதப்பா. இழுத்தடிச்சு, காக்க வைச்சுட்டு.... அப்புறந்தான் காட்டணும். அப்பத்தான் மாடு மனசுக்குப் பிடிக்கும். சரி... வுடு... அதெல்லாம் தொழில் சூச்சுமம்.”

“காக்க வைச்சா... புடிக்குமா? அதெப்படி?”

“மனசு சலிச்சுப் போகும். அலுத்துப் போன மனசுக்கு ‘சரி...இதையே முடிச்சிருவோம். அலைஞ்சது போதும்’னு தோணும்.”

“அடேங்கப்பா...” என்று ஆச்சரியத்தில் மனம் பிளந்து போனான், முனியசாமி.

வாயடி நாடார் நடந்து போகிற தினுசையே இமை தட்டாமல் பார்த்தான். அவனுக்குள் வியாபிக்கிற வியப்பு.

‘சில்லாங்குச்சி (கிட்டிப்புல் குச்சி) கணக்கா ஆளு இருக்காரு. உள்ளே எம்புட்டு சரக்கு வைச்சிருக்காரு. மனுசர் பெரிய கில்லாடிதான்.’

பிரமிப்போடு வந்தான். தொழுவத்திற்கு வந்தான். பசுவைப் பார்த்தான். அதன் கரிய—பெரிய—விழிகள். காதுகள் விடைக்க மருட்சியுடன் இவனைப் பார்த்தது. இளம் கன்றுக்குட்டி தூணைச் சுற்றிச் சுற்றித் துள்ளி விளையாடுகிறது. அந்தப் பசுவின் கண்ணிலிருந்து ஒரு நீர்க்கோடு.

கன்று ஈன்ற நேரத்தில் பசு பட்ட சிரமம். கத்திய கதறல். பால் தந்த பக்குவம். நடைச் சத்தத்திலேயே ஆளைப் புரிந்துகொண்டு பாசத்துடன் கனைத்த அதன் நுட்பம். புல் இல்லாத சமயத்தில் உரிமையோடு கத்திய அதன் கதறல்.

பசுவின் முதுகை ஒரு பரிவுடன் வருடினான். உள்ளங்கையின் ஸ்பரிசத்தில் புல்லரிக்கிற பசுவின் சலனம்.

இதைப் பிரியப் போகிறோம் என்கிற நினைவுப் பாரம் மனசை என்னவோ செய்தது. மனப் பாரம், நீரின் உறுத்தலாகக் கண்ணோரங்களில் வந்து முட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/003&oldid=1818089" இலிருந்து மீள்விக்கப்பட்டது