ஊர்மண்/004
ஓடையைக் கடந்து ஊருக்குள் நுழைகிற வாயடியின் நடையில் ஒரு துள்ளல். ஒரு சுதாரிப்பு. ஒரு காரியம் கைகூடி வருகிற சந்தோஷம். ஒரே பாய்ச்சலில் இருநூற்றைம்பது ரூபாய் லாபம் கிடைக்கப் போகிறது. ஒரு பசுவை கைமாற்றி விட்டதில் சுளையாக ஒரு வருமானம்.
வாயடியிலேயே வருமானம். மூலதனம் இல்லாத வருமானம். இதில் ‘இதுக்குத்தான் வாயடி நாடார் வேணும்’ என்று ரெண்டு சைடிலும் பாராட்டு வேறு.
மகிழ்ச்சி ததும்பும் மனசுக்குள், நெருடலாக ஓர் உறுத்தல், ருசியான கறிக் குழம்பில் உப்பு கூடிப் போனது போல, ஓர் அந்நியமான உணர்வு. எத்தனை அமுக்கினாலும் முடங்க மறுத்து, தலை நீட்டுகிற மனச்சாட்சி.
‘ச்சே’ என்று சலித்து வந்தது. வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையே ஒரு பாரம் போலப் போட்டு அமுக்குவதைப்போலிருந்தது. நடையின் வேகம் குறைந்தது. மனசுக்குள் விழுந்துவிட்டார்.
மனச் சுத்தத்துக்கு நியாயமில்லை. பொய்யும் புரட்டுமாய்... ஏமாற்றும் திருட்டுமாய் மாறிப் போன தொழில் பிழைப்பு. வெள்ளை மனசோடு வந்து தஞ்சமடைகிறவர்களின் அடிமடியிலேயே கைவைத்துப்பிடுங்குகிற மாதிரி. பாசத்தோடும் பாதுகாப்புணர்வோடும் எச்சில் வழிகிற புன்னகையோடு மடியில் ஏறி உட்கார்கிற குழந்தையின் கழுத்தைத் திருகுவதைப் போல, சகிக்க முடியாத குரூரம்.
‘இதுக்குத்தான் நாடார் வேணும்’ என்று ஆறுதலடைந்த நிம்மதியோடு வந்திருக்கிற வெள்ளந்தியான இந்தத் தேவரை, ஏமாற்றணும். பொய்களைச் சொல்லணும். அவர் முன்னிலையில் நாடகம் போடணும். முனியசாமியிடம் ‘கசறி’ச் சண்டை போடுகிற மாதிரி பாவலா காட்டணும். பாய்ச்சல் காட்டணும்.
அவரிடம் 250 ரூபாய் பிடுங்குவதை... அவரே உணராதமாதிரி... இது பிக் பாக்கெட்தானே? அதைவிட இழிவான மோசடிதானே?
என்ன செய்றது? பிழைப்பு நியாயம். ஜீவனமல்லுக்கட்டு வாழ்க்கையை நகர்த்துகிற மூர்த்தண்ய முயற்சி. வயிற்றுப்பாடு. வேறு வழியில்லை.
நோயில் கிடக்கிற செம்பகம். மாத்திரை மருந்துச் செலவு. குடும்பத்தின் அன்றாட அரிசி பருப்புச் செலவு. அடிவயிற்று நெருப்பாக தகித்து, அழகுச் சிலையாக நிற்கிற மகள் பொற்கொடி. கையில் அரிவாளை தூக்கிக் கொடுத்து ‘வேட்டைக்கு’ அனுப்புகிற நிர்ப்பந்தம்.
சத்தியம் பேசி, மனசுக்கு உண்மையாய் நடந்து, தர்ம நியாயத்துடன் கர்மம் செய்தால்... கதை நடக்காது. நாள் நகராது. பொழுது போய் அடையாது. பைதா உடைந்து வண்டி முடங்கிவிடும். நல்லவன் என்ற பேர் வராது. ‘சாமர்த்தியக்காரன், கெட்டிக்காரன்’ என்ற கியாதி கிடைக்காது.
தொழில் நடக்காது. குடை சாய்ந்துவிடும். வயிறு காயும். வாழ்க்கை நகராது. தேங்கும். நிற்கும். வற்றிப்போகும். கொக்குகூட வந்து நிற்காது. ஊர் கைகொட்டிச் சிரிக்கும். ‘பிழைக்கத் தெரியாத பேப்பயல்’ என்ற பட்டம் கட்டி, மூலை சேர்த்துவிடும்.
வாழ்க்கைக் களத்தில் சோர்வில்லாமல் போராடுவது என்றால்... ஆயுதங்கள் தரித்திருக்கணும். தந்திரம் வேணும். சூது வேணும். சூழ்ச்சி வேணும். நெருப்பை பொட்டலம் கட்டிய குளிர்ப் பேச்சு வேணும். இதுகளையெல்லாம் ‘யோக்கியம்’ என்று சாதிக்கிற வாய்ச் சாமர்த்தியம் வேணும்.
நாடாருக்குள் கசந்து அழறுகிறது. தரகுத் தொழிலின் அடிப்படையே அதர்மம். மனசுக்குள் ஏதோ ஒரு பிசைவு. குற்ற உணர்வின் முட்கள். அதன் உறுத்தல். சூழல் குறித்த குற்றச்சாட்டு. உள் நமைச்சல்.
வாழ்க்கை வாழ்க்கையாகத் தோன்றவில்லை. மனிதர் வாழ்கிற மனிதத் தன்மையுள்ள வாழ்க்கையாக இல்லை. அன்பு, பாசம், நட்பு, நம்பிக்கை, நாணயம், தோழமை என்கிற உள்—வெளி லட்சணங்களோடு ஒளிர்கிற இயல்பான மனித வாழ்க்கையாக இல்லை. மனிதர்களோடு கலந்து மனிதத்தன்மையோடு வாழ்கிற மனித வாழ்க்கை... நமக்கு லபிக்கவில்லை.
கீரியும் பாம்புமான வாழ்க்கை. மிருகங்களோடு மிருகமாக உறுமிப் புரண்டு, சதைகளைக் கடித்துக் குதறி, ரத்தம் குடிக்கிற உக்கிரத்துடன் மரண பயங்கரமாகத் தோன்றுகிற வாழ்க்கை.
வனமாகிப் போன சமூகம். போர்க்களமான வாழ்க்கை. கொல்ல வேண்டும். இல்லையேல், கொல்லப்பட வேண்டும். கடிக்க வேண்டும். இல்லையேல், கடிபட வேண்டும். சுரண்ட வேண்டும். இல்லையேல், சுரண்டப்பட வேண்டும்.பலிபீடமாகிப் போன சமூகம். நல்லதுகளை மதிக்காத சமூகம். வல்லமைகளைப் போற்றுகிற சமூகம். யோக்கிய ஏழைகளைத் தின்கிற சமூகம். அயோக்கிய வெற்றியாளர்களை ஆராதிக்கிற சமூகம்.
இந்தக் களத்தில்... கொஞ்சம் அசந்தால்கூட.. கொஞ்சமாய் தர்ம நியாயம் பார்த்தால்கூட... நம் கதை கந்தல்தான். கடித்துக் குதறப்பட்டு சதைப் பிண்டங்களாகக் கிடக்க வேண்டியதுதான்.
ச்சே! நாய்ப் பொழைப்பு. அதைவிடக் கேவலமான பொழைப்பு. மனுசப் பய வாழ்வானா... இந்தப் பொழைப்பை?
எதிர்த்தாற்போல் கந்தையா நாயக்கர் வந்து கொண்டிருந்தார். வேட்டி, சட்டை, துண்டு எல்லாம் ஏகக் கதரில் ‘பளிச்’சென்று வந்தார். வெள்ளையும் சொள்ளையுமாக வருகிறார் என்றால்... ஏதோ வெளியூர் பயணம் போலும். ‘பஸ் வந்துருமோ’ என்கிற பரபரப்பில் வந்து கொண்டிருந்த அவர், வாயடியைப் பார்த்தவுடன் ஓர் இனிய புன்னகையைச் சிந்தினார்.
வாயடியும் ரொம்ப மரியாதையாக, “ஐயா... தூரவா போறீக?” என்றார். வெளியூர் புறப்படுகிறவர்களிடம் ‘எங்க போறீக’ என்று கேட்பது சகுனக் குறைவு. மரியாதைக் குறைவு.
அது தெரிந்த இங்கிதத்தில் இவர் கேட்கவும், நாயக்கருக்கு முகம் பூராவும் படர்ந்த சிரிப்பு. “சும்மா... செவகாசி வரைக்கும்.”
“பன்னெண்டரை பஸ்ஸுக்கா?”
“ம். வாயடியாலே நமக்கு ஒரு காரியம் ஆகணும். விடிஞ்சதுலேயிருந்து ஒம்மைப் பாத்துப் பேசணும்னு இருந்தேன். தேடிப் போன தெய்வம்போல தெருவுலே தட்டுப்பட்டுட்டீரு...”
“சொல்லுங்க ஐயா, உங்களுக்குச் செய்யாம... வேறயாருக்குச் செய்யப் போறேன்?”
“பருத்திக்கு ஏவாரி, யாரும் வரல்லியா?”
“கெடக்கா?”
“ஆமா. ஏழெட்டு கு(வி)ண்டால் தேறும்.”
“ஏவாரி வந்தா... கூட்டிட்டு வரவா?”
“அதென்ன அப்படிச் சொல்லிட்டீரு... ரூவாய்க்கு ரொம்ப அவசரம். இன்னும் ஏழெட்டு நாளைக்குள்ளே எட்டாயிரம் பொரட்டியாகணும்.”
“அப்படியா? அம்புட்டு ரூவா... ‘லம்ப்’பா தேவைப்படுதோ?”
“ம். நம்ம பய பட்டாளத்துக்குப் போகணும்னு ஒத்தைக்கால்லே நிக்கான்.”
“யாரு...? ரெண்டாவது புள்ளையாண்டனா?”
“அந்தப்பயதான். ஏழாயிரம் குடுத்துட்டா... ‘பட்டாளத்துலே சேத்துவிட நானாச்சு’ன்னு செவகாசியிலே ஒருத்தரு சொல்றாரு.”
“பட்டாளத்துக்குப் போறதுக்கும்... லஞ்சமா?”
“லஞ்சம் இல்லாமத்தான்... இந்தக் காலத்துலே ஒரு தூசிகூட நகராதே.”
“அடக் கொடுமையே! சரி... நீங்க பெறப்படுங்க. நமக்கொரு ஜோலியிருக்கு.”
“ம். ஜோலியோட ஜோலியா நா சொன்னதையும் யாவகத்துலே (ஞாபகத்தில்) வைச்சுக்கணும்.”“ஆட்டும், ஆட்டும். ஏவாரிதானே? பத்து நாளைக்குள்ளே பருத்தி துட்டாயிரும். போதுமா?”
“அதுக்குத்தான்... வாயடி நாடார் வேணுங்குறது.”
கந்தையா நாயக்கரைக் கடந்து வந்த வாயடிக்குள், நெருஞ்சி முள்ளில் கால் வைத்துவிட்ட உணர்வு.
‘பட்டாளத்துலே சேர்றதுக்கும் பணச்செலவா?’ இந்தக் கேள்வி முள்முள்ளாகக் குத்துகிறது. மனம் பதறி வருகிறது.
‘என்னாச்சு? நாடு எங்க போகுது? அழிவு காலம் நெருங்கிருச்சா? சனியன் பிடிச்சிட்டானா? பிடிச்சு ஆட்டுதானா?’
பத்து வருஷத்துக்கு முந்தி—
இதே கந்தையா நாயக்கரின் கடைக்குட்டித் தம்பி. வீட்டில் ஏதோ சண்டைசத்தம். கோபதாபம்.
ராத்திரி களத்தில் கம்பங்கதிர் அம்பாரம். மாட்டு வண்டிக்கு எட்டு வண்டிக் கதிர். மலை மாதிரி குவித்துப் போடப்பட்டிருந்தது. காவலுக்குப் படுத்திருக்கவேண்டியவன். போர்வையும் தலையணையும் கொண்டு வந்தவன்.
வயசுக் கோளாறு. இளவட்டச் செட்டுகளோடு கூட்டுச் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் திருவேங்கடத்துக்கு சினிமாவுக்குப் போய்விட்டான், ரெண்டாவது ஆட்டத்துக்கு.
விஷயம் தெரிந்துவிட்டது, வீட்டுக்கு. ஆள் ஆளுக்குச் ‘சத்தம்’ போட்டிருக்கின்றனர். கசமுசா வென்று வீட்டில் சண்டை. இளவட்டப் பயல். ‘சுருக்’கென்று சொல் கேட்கச்சகிக்காதவன். கோபித்துக் கொண்டு போய்விட்டான். வீட்டில் யாரும் தேடவில்லை. ‘குமரிப்பிள்ளையா, பதறுவதற்கு?’ என்று அலட்சியமாக இருந்துவிட்டனர்.“இளவட்டப்பய. கழுதை எங்க போகும்? நாலு காடு சுத்திட்டு வரட்டும். வவுறு காய்ஞ்சதுன்னா... தானாக வீடு வந்து சேரும்” என்ற மிதப்பான நினைப்பில், பொருட்படுத்தாமல் இருந்துவிட்டனர்.
பத்து நாளாயிற்று. வீட்டாள்களுக்கு மெல்லப் பயம் தட்டியது.
அப்போது—
ஒரு கடிதம் வந்தது.
‘பட்டாளத்தில் சேர்ந்து விட்டதாகவும், பஞ்சாப்பில் டிரெயினிங்கென்றும், ஆறாவது பட்டாலியன்’ என்று கடிதம் சொல்ல—
அவ்வளவுதான்! வீடே ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டது. எதோ பிள்ளையை சாகக் கொடுத்து விட்டதைப் போல பதறித் தவித்து, அழுது அரற்றினர்.
வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் ரத்தம் கிடந்து கொதித்தது. தகுதிக்குப் பொருந்தாத—தராதரமில்லாத அவமான காரியத்தைச் செய்துவிட்ட மாதிரி அவனைத் திட்டித் தீர்த்தனர். குடும்பத்துக்குக் கேவலத்தைக் கொண்டு வந்துவிட்ட மாதிரி கொதித்தனர்.
“ஒரு சம்சாரி வீட்டுப் புள்ளைக்கு இப்படியா புத்திபோகணும்? வெறும் பயலாயிருக்குற கூலிக்காரன் மாதிரி... என்னத்துக்கு பட்டாளத்துக்குப் போகணும்... இவ? ‘சொக்கனுக்குச் சட்டியளவு சோறு’ங்கிற மாதிரியான மாசச் சம்பளத்துக்கு, கண்டகண்ட பயலுக்கெல்லாம் கும்பிடு போட்டுக்கிட்டு இருக்கணும்னு இவனுக்குத் தலையெழுத்தா? காடு கரைக கிடக்கு, நாலா தெசையிலும். சமுத்திரம்போல சம்சாரித்தனம். பத்துப் பேருக்கு நிதம் வேலை குடுக்கலாம். ஏழு தலைமுறைக்கும் ராசாப்போல இருந்து சாப்புடலாம்... பாடுபட்டா. சம்சாரிப்பயலுக்கு இந்த ஈனப் புத்தி வரலாமா?” என்று ‘தங்கு, புங்’கென்று தரைக்கும் ஆகாயத்துக்குமாகக் குதித்தார்கள்.
விவசாயக் குடும்பத்தின் கெளரவமே இழிவுபட்டுப்போனதாக ரௌத்ரமானார்கள். பெண் பிள்ளைகள் அதற்கும் மேல்.
“இந்தக் கணமே எங்க புள்ளையை நாங்க கண்ணுலே பாத்தாகணும்” என்று காளியாட்டம் ஆடினர். வீடே ரணகளமாயிற்று. கண்ணீரும் கதறலுமாய் ஒரே குழலுபடியாயிற்று.
வேறு என்ன செய்ய?
ஆயிரம் ரூபாயை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு, கந்தையா நாயக்கர் புறப்பட்டார். நாலு விபரமறிந்த—நாடு கோடு கண்ட—பெரிய மனிதர்களைக் கண்டு பேசி, ‘என்ன, ஏது’ என்று வழிவகைகளை விசாரித்து அறிந்து கொண்டு—
‘அப்பாவுக்கு இழுத்துக்கிட்டு கிடக்கு. இப்பவோ அப்பவோன்னு நிலவரம்’ என்று தந்தி அடித்து, பணம் செலவழித்து, போலீஸ் ஸ்டேஷன் மூலமும் தகவல் தந்து... சீதையை மீட்கிற ராமயுத்தம் போல பெரும் போராட்ட இழுபறிக்குப் பிறகு... தம்பியை மீட்டிக்கொண்டு வந்தார்.
பையனைப் பார்த்தபிறகுதான், எல்லாருக்கும் சமாதானமாயிற்று. வீடு, வீடாயிற்று...
பத்து வருஷத்திற்குள் என்ன ஆகிப் போய்விட்டது ? அதே கந்தையா நாயக்கர் தன் மகனை பட்டாளத்தில் சேர்த்துவிட ஆலாய்ப் பறந்து அலைகிறார். ஏழாயிரம் லஞ்சமாய் அழுதாவது, பட்டாளத்திற்கு அனுப்பிவிட பிரம்மப் பிரயத்தனப்படுகிறார்.
வெறும் பயலாயிருக்கிற கூலிக்காரன் மாதிரி பட்டாளத்தில் சேர்ந்து, ‘சொக்கனுக்குச் சட்டியளவு சோறு’ என்கிற மாதச்சம்பளத்துக்குச் சாகணும்னு, சம்சாரிகளுக்கும் தலையெழுத்து வந்துருச்சா? ஏழு தலைமுறைக்கும் ராஜயோகம் தந்துகொண்டிருந்த சமுத்திரமான சம்சாரித்தனம், இந்தத் தலைமுறையிலேயே ஆடி மாச ஊருணியாக வற்றி வறண்டு போயிற்றா? விவசாயத் தொழில் மதிப்பிழந்து போயிற்றா? பட்டாளத்துச் சம்பளம் கௌரவத்திற்குரியதாகி விட்டதா?
சம்சாரிகள் வாங்கப் போகிற பொருள் விலையெல்லாம் உச்சியிலே. இவன் விளைய வைக்கிற பொருள் விலையெல்லாம் பள்ளத்திலே. உலகம் பூராவுக்கும் சோற்றைத் தருகிறவன் இவன்தான். உலகம் பூராவும் ஏமாற்றி வஞ்சிப்பதுவும் இவனைத்தான். இவன் பாடுகளை சர்க்கார் ஒரு தொழிலாகவே மதிக்கலே.
அதனாலேதான்... வருஷா வருஷம் வெளைச்சல் உயருது. வாழ்க்கை நிலைமை சரியுது. மண்ணைப் பொன்னாக்குற இந்தச் சம்சாரித்தனமே மண்ணாகிப் போச்சே...
சம்சாரி வீட்டுப் பிள்ளைகள் எல்லாரும் சம்சாரித்தனத்தைக் கண்டு ஓட்டமாய் ஓடிப் பறிகிறார்களே... ‘விட்டால் போதும்’ என்று பாய்நது விடுகிறார்களே... விவசாயத்தைச் சுமக்கப் பயந்து சாகிறார்களே...
சம்சாரித்தனம் சரிந்தது என்றால் நாடு எதைத் தின்று வாழப் போகிறது? சம்சாரியை சாகடித்துவிட்டு, நாடு மட்டும் வாழ்ந்து விடுமா?
சம்சாரித்தனம் மதிப்பிழந்து போனால் சர்வ நாசமானால்... அந்தக் குளத்தை நம்பி வாழ்கிற கொக்குகள் போன்ற வாயடிகள் எங்கே போய் மீன் கொத்த? எப்படி வாழ? யாரை நம்பிப் பொழைக்க?
வாயடிக்கு எதிர்காலத்தை நினைத்தால், பயம் வந்தது.
பட்டாளத்துக்குப் போவதற்கும் லஞ்சமா? இதென்ன அக்கிரமம்? ஏழாயிரம் கொடுத்து பட்டாளத்துக்குப் போகிறவன், பட்டாளத்துக்குரிய வீரத்துடன் இருப்பானா? கடமை உணர்ச்சியோடு இருப்பானா? தேசப்பற்று வருமா? உயிரைத் துச்சமாக எண்ணுகிற தியாக மனசு வருமா?
நாடு காக்க வேண்டிய பட்டாளத்தானே ஒப்புக்கு மாரடிக்கத் துவங்கிவிட்டால்... நாடு என்னாகும்?
‘அதிகாரிகள் லஞ்சம் வாங்கவில்லை, இடைத்தட்டுக்காரர்கள்தான் வாங்குகிறார்கள்’ என்பது வாஸ்தவம்தான். இருந்தாலும்... அப்படிப்பட்ட இடைத்தட்டுப் புரட்டர்கள் முளைக்கலாமா? முளைக்க விடலாமா? முளையிலேயே கிள்ளியெறிய வேண்டாமா, கவர்மெண்ட்? பட்டாளத்து மேலே மனுச மக்க வைச்சிருக்கிற நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டாமா?
மடத்துக்கு வந்தார். தேவர் உட்கார்ந்திருந்தார். காத்துக் கிடந்து, காத்துக் கிடந்து சலித்துப் போயிருக்கிறார் என்பது அவரது முகத்தில் துல்லியமாய்த் தெரிகிறது.
இவரைக் கண்டதும் தேவர் முகம் பிரகாசமாயிற்று.
“என்ன... ஆளு மாயமாய் மறைஞ்சு போய்ட்டீரு?”
“ரொம்ப நேரமாயிருச்சோ?”
“ஆமா... நானும் ‘பொட்டு, பொட்டு’ன்னு காத்துக்கிடக்கேன். கண்ணுதான் பூத்துப் போச்சு. சரி, போய் மாட்டைப் பாப்பமா?”“மாட்டுக்காரன் புஞ்சைக்குப் போயிருக்கான். சாயங்காலம் ஆகும்.”
தேவருக்கு முகம் இருண்டது. அருள் கெட்டுப்போயிற்று. சட்டென்று வந்து அறைந்த ஏமாற்றத்தின் உள்அதிர்வு.
“அப்ப... இன்னிக்கு நா வேலை முடியாம... வெட்டியலைச்சலாத்தான் வீடு திரும்பணுமோ?”
“அதென்ன அப்படிச் சொல்லிட்டீரு...? பசு...இன்னிக்கு உம்ம வீட்டுத் தொழுவத்துலே நிக்கும். அதுக்கு நா காரெண்டி போதுமா?”
ஆணியடித்த மாதிரி கணீர் குரலில் வாயடி கேட்க, தேவர் திகைத்துப் போனார்.
“நெசமாவா?”
“நா சொல்லிட்டா... அதுக்கு அப்பீல் உண்டா?”
“அப்பச் சரி... இப்ப என்ன செய்ய?”
“வாரும்... டீக்கடைக்குப் போவோம்...”
டீக்கடை வந்தார்கள். மதியப் பள்ளிக்கூடம் விட்டிருந்தார்கள். தெரு நிறைய அடைத்துக் கொண்டு மலர்ச் செண்டுகள். கை வீசி கால் வீசி துள்ளிக் குதிக்கிற பூப்பந்துகள். பூச் சூடிய பெண்ணைப் போல... தெருவே ஒரு லட்சணமாயிற்று.
கடையில் முட்டைக்கோஸும், வடையும் சுடச்சுட இருந்தது. அதில் இரண்டு, இதில் இரண்டு என்று பிய்த்துவாயில் போட்டார்கள், 10 குடித்தார்கள். தேவர்தான் காசு கொடுத்தார்.
‘அது, இது’ என்று மூச்சு விடாமல் கதையடித்தார் வாயடி. அவர் வாங்கிக் கொடுத்த பசுக்கள் ‘ஜே ஜே’ என்று இருந்து நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கிற கதைகள். இவரை நம்பாமல் போய்... ‘தொத்தல்’ மாடுகளில் விழுந்து ஏமாந்தவர்களின் கதைகள். அவர் பாட்டுக்கு அள்ளி விட்டார்.
தேவர் வாயில் ஈ போவது தெரியாமல் ‘ஆ’வென்று கேட்டுக் கொண்டிருந்தார். அவர் உள்ளுக்குள் ஆச்சரியம்.
‘மனுசர்.. பிடிச்சா உள்ளங்கைக்குள்ளே அடங்கிருவார். ஆனா பேச்சு என்னமாய்ப் பொறிகிறார். இதுலே எது பொய்யோ...எம்புட்டுப் பொய்யோ...!’
வாயடி சொன்னபடியே பசுவை முடித்து தேவரைத் திருப்தியோடு அனுப்பிவிட்டார். இவரது பைக்குள் முழுசாக ரெண்டு மூன்று நூறு ரூபாய்த் தாள்.
50 ரூபாயை குறைத்துக் கொண்டதில்... இவரது மனச்சாட்சி சற்று சமனப்பட்டிருந்தது. உறுத்தலைக் கடந்திருந்தது.
வீட்டுக்குப் போகிற போது... ‘செம்பகத்துக்கு மருந்து மாத்திரை வாங்கப் போகணும்’ என்று நினைத்துக்கொண்டார்.
‘பட்டாளத்திலிருந்து சிந்தாமணி வரப் போவதாக கடிதம் எழுதியிருந்தானே... எப்போ வருவான்?... வரட்டும், நல்ல பயல். அவனுக்கும் ஒரு 'ஏற்பாடு' செய்யணும்.’
அவருடன் நினைவுகளும் நடந்தன, கூடவே.
ஆனால், இவருக்கே அவன்தான் ‘ஏற்பாடு’ செய்யப்போகிறான், என்கிற காலக் கூத்தைக் கண்டாரா, அவர்!