ஊர்மண்/005
ஊருக்குப் புறத்தேயுள்ள வெட்டவெளி மைதானம் தான், பஸ்ஸ்டாண்ட் ‘அண்ணா பேருந்து நிலையம்’ என்று கண்ணு மூடிய ஒரு மங்கலான நிறத்தில் ஒரு போர்டு. உளுத்துப் போன கட்டைகள் பலத்தில் நின்றது. ‘நிக்கட்டா, விழுந்துரட்டா’ என்று அரட்டிக் கொண்டிருந்தது.
ஊர்ப் பொதுவான இடம். நிறையப் பேர் குப்பை போட்டிருந்தனர். ‘ஊருக்கு முதன்முதலாக பஸ் வரப்போகுது’ என்ற மகிழ்ச்சி, ஊர்ஜனத்துக்கு பெரும் போதை. கண்மூக்கு தெரியாத போதை வெறி. மொத்த ஊரே ரெக்கையடித்துத் திரிந்தது.
ஆள் ஆளுக்கு அரிவாளைத் தூக்கி, ரோட்டோர வேலி மரங்களை வெட்டி ஒதுக்கினர். கூடை மம்பட்டிகளோடு போய் மண்ணை வெட்டியள்ளி ரோட்டைச் செம்மை பண்ணிய இளவட்டங்கள்.
‘பஸ் வந்து எங்கே வட்டமடிச்சுத் திரும்பணும்’ என்று ஊருக்குள் பெரும் விவாதம். மகிழ்ச்சியான சர்ச்சை. எல்லோரும் எதையும் விட்டுக் கொடுக்கிற அளவுக்கு மனம் கனிந்திருந்த சூழல். பொது மகிழ்ச்சியில் கூட்டாக மனிதர்கள் சங்கமித்துக் கரைகிறபோதுதான்... மனித மனம் உன்னத நிலை பெற்றுவிடுகிறது.
குப்பை மேடுகளாகவும், வேலிமரச் செடிகளாகவும், பன்றிகள் உலவுகிற இடமாகவும் இருந்த இந்தப் பகுதி பொருத்தமான இடம் என்று முடிவான போது, குப்பைக்காரர்கள் முகம் சுளிக்காமல் அள்ளிக் கொண்டு போனார்கள். எல்லாரும் இடத்தைத் துப்புரவுப்படுத்துவதில், சமப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.
அப்படியமைந்ததுதான் இந்த மைதானம்.
அந்த மைதானத்தில் அகலம் இப்போது ரொம்பச் சுருங்கிவிட்டது. ஆள் ஆளுக்கு விளிம்புகளைக் கடித்துக் கடித்துக் கரைத்துவிட்டனர். பால்பண்ணைக் கட்டடம், ஒரு வீடு, டீக்கடை, உரக்கடை, குடிசை என்று நிறைய்ய, சுற்றிலும். ஆளுக்குக் கொஞ்சமாய் சுற்றுவட்டக் கத்தரிப்பாக... ஆக்ரமிப்பு.
முற்றம் போட்டு, மரம் வைத்து, சாய்ப்பு இறக்கி, திண்ணை போட்டு என்று ஏக விதங்களில் ஆக்ரமிப்பு. மைதானம் விசாலமற்றுப் போய்விட்டாலும், பஸ்ஸுக்காகக் காத்திருக்கிற ஜனங்கள் ஒதுங்கி நிற்க நிழல்கள் கிடைத்திருக்கின்றன.
மதிய வெயில் உக்கிரம் குறைந்து, பொழுது மேற்கில் சாய்ந்துவிட்டது. மணி மூன்று. நிழல்கள் நீளநீளமாய்... கிழக்கில்.
‘பஸ் வருமோ, வராதோ’ என்ற சந்தேகத்தில் பதைப்புடன் ஆலாய்ப் பறந்த ஜனங்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் எண்ணெய் வழிகிற கிராமத்தாட்கள். அண்ணாந்து அண்ணாந்து ரோட்டின் திசையைப் பார்த்தார்கள், ‘புழுதிப் படலம் தெரிகிறதா’ என்று. செவிப்புலன்கள் ரொம்பக் கூர்மைப்பட்டிருந்தன.
ரொம்பத் தூரத்து டிராக்டர் இரைச்சலைக்கூட உற்றுக் கேட்டனர், ‘பஸ் வர்ற சத்தமாக இருக்குமோ’ என்ற யூகத்தில்.
பஸ்ஸின் ஹாரன் சத்தம், நீள அலறலாய் ஒலித்தது. ‘அப்பாடா... பஸ் வந்துடுச்சு’ என்று ஒரு நிம்மதி. ஆசுவாசம். அதனால் வந்த பரபரப்பு.புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டுவந்த வெள்ளைப் பஸ், வட்டமடித்து திரும்பி நின்றது. பஸ்ஸை வந்து ‘மொளோர்’ என்று மொய்க்கிற ஆண்கள், பெண்கள். இறங்குகிறவர்களின் கூச்சல். ஒரே ஆரவாரமும், சந்தடியுமாய்...
“அடப் பாதகத்திகளா... எங்களை எறங்க விடுங்களேன்... இப்புடி வந்து மறிச்சு அடைச்சுக்கிட்டா... எங்கிட்டுக் கூடி எறங்க?”
நெட்டித் தள்ளிக்கொண்டு இறங்குகிறவர்கள். முட்டிமோதிக்கொண்டு முண்டியடித்து ஏறுகிறவர்கள். கொஞ்சநேர தள்ளுமுள்ளு.
இறங்குகிறவர்கள் எல்லாம் இறங்கி, ஏறுகிறவர்களெல்லாம் ஏறி உட்கார்ந்த பிறகு... அதுவரை காத்திருந்துவிட்டு நிதானமாக இறங்கினான், ஒரு முழுத்த வாலிபன். அவன் ரொம்ப விநோதமான டிரஸ்ஸில் இருந்தான், வேற்றுலகவாசிபோல.
கரும்பச்சை பேண்ட், அந்தக் கலரிலேயே முழுக்கை ஷர்ட், அதே கலர்த் தொப்பி. கனத்த பூட்ஸ். ஒட்டவெட்டப்பட்ட பட்டாளத்துக் கிராப்பு. சன்னமான முறுக்கு மீசை. கரும்பச்சைக்கு அந்நியமாகாத கறுப்பு நிறத்திரேகம்.
லக்கேஜ்களை இறக்கினான். பிசாசு மாதிரியானதோர் ட்ரங்க் பெட்டி. ஒரு வீட்டையே உள்ளே பார்சல் பண்ணிவிடலாம். அத்தனை பெரிசு. கரும்பச்சையில்—கனத்த—வட்டமான—உயரமான பை. உச்சியில் சுருக்குக் கயிறு. பார்த்தால்... ஒரு உப்புமூட்டை மாதிரியிருந்தது. ராட்சஸத்தனமான சூட்கேஸ் வேறு.
எல்லாமே கனம். பேய்க் கனம். கூடமாட இறக்குவதற்கு சிலர் உதவினர். இறக்கி முடித்தவுடன் நிமிர்ந்து பார்த்தான். பார்வையில் துள்ளுகிற மகிழ்ச்சி மின்னல். சொந்த மண்ணில் கால் பதித்த மனப்பூரிப்பு. தாயின் மடியில் முகம் புதைத்த மழலையின் ஆனந்தத் துள்ளல். ததும்பி வழிகிற குழந்தைத்தனமான சந்தோஷத்தோடு சுற்றிலும் கழுத்தைத் திருப்பி மனித முகங்களைப் பார்த்தான்.
முகம்.... முகம்... முகங்கள்...
கிழக்கிலிருந்து வந்த ராமையாத் தாத்தா, இந்த வினோத உலகவாசியைப் பார்த்துத் திகைத்தார். பார்வை சரியாகப் பிடிபடவில்லை. மேற்குச் சூரியன் கண்ணில் ஊசியாகப் பாய... உள்ளங்கையை கண்ணுக்குக் குடையாக்கி இடுக்கிக்கொண்டு கூர்ந்து பார்த்தார், அண்ணாந்து.
“யாரது.....புதுசாயிருக்கே?”
“தாத்தா....என்னைத் தெரியலியா?”
குரலில் உருவமும் உறவும் பிடிபட, அவர் முகத்தில் ஒளிப்பரவல்.
“அடடே... நம்ம சிந்தாமணிப் பயலா?”
“ஆமா... தாத்தா.”
“எப்படா ... வந்தே?”
“இப்பத்தான்.....வாரேன் தாத்தா.”
“முந்தா நாளே உங்க அம்மாக்காரி அலைபாய்ஞ்சு வந்தாளே...‘எம்மகன் வரப்போறான், வரப்போறான்’னு. அம்மாவைப் பாத்தீயா?”
மகிழ்ச்சிப் பரவசத்தில் அசட்டுத்தனங்கள் சகஜம் போலும். அவன் அதைக் கூட ரசித்துச் சிரித்தான்.
“இப்பத்தானே தாத்தா வந்துருக்கேன்... இனிமேத்தான் அம்மாவைப் போய் வீட்லே பாக்கணும்.”“போடா...உங்கம்மாக்காரி உசுரைக் கையிலே புடிச்சுக்கிட்டு ஒனக்காகக் காத்திருக்கா. போய்ப்பாரு.”
“சரி, தாத்தா.”
“அவளுக்கு ஒன்னைவிட்டா... வேற நாதி ஏது? நீயும் அவளை ரொம்பத் தவிக்க வைச்சுட்டே.”
“ஏன் தாத்தா... நீங்கள்லாம் இல்லியா? உங்களை மாதிரியான பெரியாளுக ஒத்தாசை இருக்கும்ங்கிற நம்பிக்கை... எனக்கு இருக்கு தாத்தா.”
“நாங்க இருக்கோம். இருக்கத்தான் செய்தோம். இருந்தாலும், பெத்த புள்ளையாயிருமா... மத்த ஆளுக?”
“அதான்... வந்துட்டேன்லே தாத்தா?”
“சரி... சாமான் செட்டுகளை வீடு கொண்டு போய்ச் சேரு. ஏலேய், இளவட்டங்களா... ஆளுக்கொன்னா தூக்குங்கடா.”
ராமையாத் தாத்தா நகர்வதற்காகவே காத்திருந்தவர்களைப் போல, இளவட்டங்கள் மொய்த்துக் கொண்டனர். தடபுடலான உபசரிப்பு. தாறுமாறான விசாரிப்புகள். நச்சரிப்பான உபசரிப்பு.
“வாங்க அண்ணே...”
“வாங்க மாமா...”
“ட்ரெயின்லே வந்தீகளா?”
“பிரயாணம் எம்புட்டு நாள்?”
ஏகப்பட்ட கேள்விகளின் முற்றுகை. வந்து மொய்க்கிற மகிழ்ச்சியான துள்ளல்கள். சிரித்தமுகம் மாறாமல் சலிக்காமல் பதில் சொன்னான், சிந்தாமணி. ஆளுக்கொரு சாமானாகத் தூக்கிக் கொண்டனர். ரெண்டு மூன்று பேர் ட்ரெங்க் பெட்டியை...தொப்பியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்தான், சிந்தாமணி.
நடக்க நடக்க இனிய திடுக்கிடலாய் நிமிர்ந்து பார்ப்பது போல தரை அதிர்ந்தது. பூட்ஸ் கால்கள் ‘ஜர்ர்ர்க்... ஜர்ர்ர்க்’கென்று கனகம்பீரமாய் ஒரு சத்தம். ஒரு ராஜகம்பீரம்.
தெரு நெடுக ஆட்கள் அவனைப் பார்த்தனர், வியப்பாக. அவனது வாட்ட சாட்டமும், நிமிர்ந்த தோற்றமும், தேகக் கச்சிதமும் அப்படியிருந்தது.
வழிநெடுக பூக்களை அள்ளித் தூவுகிற மாதிரியான சிநேகிதமான உபசரிப்புகள். அன்புமயமான விசாரிப்புகள். கிராமத்தின் பேரழகான அந்நியோன்யம் ததும்புகிற வரவேற்புகள்.
சிரித்த முகத்தின் மலர்ச்சி மங்காமல் பதில் சொல்லிக்கொண்டே நகர்ந்தான். சற்றுப் பெருமிதமாகவும்தான்.
அவனுக்கு முன்னால் ஒரு சிறுவன். அவிழ்ந்தோடுகிற டவுஷரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஓட்டமாய் ஓடினான், சிந்தாமணியின் அம்மாவிடம் ‘தாக்கல்’ சொல்ல. அவன் வாயில் காரின் மோட்டார் இரைச்சல். “டரரரரர்... பிராரார்... ட்ரரரர்.”
ஊர் மடத்தைத் தாண்டுகிறபோது—
அதை நிமிர்ந்து பார்த்தான். வழக்கம்போல அது பூட்டியே கிடந்தது. உள்ளோடும் பழைய நினைவுகள். அலை அலையான வெக்கை நினைவுகள். மனசின் உள்ஜவ்வுகளையெல்லாம் சுட்டுத்தகித்த அக்கினியலைகள்.
முழு மடத்தையும் உள்ளே அள்ளி வைத்துக்கொள்வதைப் போல... ஆழமாய்ப் பார்த்தான். அர்த்தம் பொதிந்த பார்வைத் தீவிரம்.மனசுக்குள் மடைதிறந்த மாதிரி நினைவுப் பிரவாகம். அனலாய் வாட்டி வதைத்த சம்பவங்கள். இவனை அடித்து இழுத்துச் சென்ற நிகழ்ச்சிப் பிரவாக உக்கிரம். பதினேழு வயசுச் சிறுவனை அச்ச நரகத்தில் முக்கியெடுத்து பீதியூட்டிய கொடிய தருணங்கள்.
காய்ந்த உதடுகளில் வெடித்த ஒரு சின்னப் புன்னகை. கருமையான உதடுகளில் சோக ரணமாய் உடைகிற புன்னகை.
ஊர் மடம் அன்றைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது. ஊரிலுள்ள முக்கியமான நாடார் பிரமுகர்கள் சகலரும் கூடியிருந்தனர். குழப்பமான கொதிநிலை. திடுமென்று கூடியிருக்கிற அவசரக் கூட்டம்.
பதினேழு வயசுக்காரன், சிந்தாமணி. இப்ப இப்பத்தான் பொசுபொசுவென்கிற மெல்லிய மயிர்களை மீசை என்று ஒதுக்கிவிடுகிறான். அவன்தான்... இன்றைய விசாரணைக்குரிய குற்றவாளி.
விசாரணை என்ன... விசாரணை, அதெல்லாம் சும்மா ஒரு பாவனைதான். தண்டனை மட்டுமே சர்வநிச்சயம்.
சிந்தாமணியைத் தேடிக்கொண்டு நாவிதன் ரெண்டு மூன்று தடவை போய்விட்டு, “ஆளு தட்டுப்படலே, முதலாளி” என்று பணிவடக்கமாகச் சொல்லிவிட்டான்.
ஊர் மடத்து வாசலுக்கு எதிரில்—நேர்ப் பார்வையில், சற்றுத் தள்ளி—ஒரு வேப்பமரம். பள்ளிக்கூட மைதான வேம்பு. பெரிய மரம். யாரும் வந்து ஒரு இலையைக் கூடக்கிள்ளிவிட முடியாது. கண்டிப்பான பாதுகாப்பு. அதனால் அடர்த்தியான கிளைகள். இலைகள். ராட்சஸக் குடையாக இருந்த அந்த மரத்தின் உச்சி இருட்டுக்குள்—கிளையில்—பல்லிபோல அப்பிப்போயிருக்கிறான், சிந்தாமணி. பறவை எதுவும் அடையாத மரம் என்பதால்... அவன் ஒளிவதற்குத் தோதாக இருந்தது. முகத்தில் சரசரவென உரசும் வேப்பிலைகளை விரலால் ஒதுக்கிவிட்டுக் கொண்டு, ஊர்க் கூட்டத்திலேயே கண்ணாக இருந்தான்.
பேசுகிற சப்த இரைச்சல் எதிரொலியதிர்வோடு கேட்கிறது. கலவையாகிப் போன ஒரே கூட்டுக் கூச்சல். காட்டுக் கூச்சல். தண்டிக்கிற நோக்கம் தெளிவான கொடூரமாகத் தெரிகிறது.
இவனுள் பயம். நெஞ்சுக் கூடு விம்மி விம்மித் தணிகிறது. உள்ளங்கைகளில் வேர்வைப் பிசுபிசுப்பு. பயம் என்றால்... பயம், அம்புட்டுப் பயம். கேவலத்தை நேருக்கு நேர் சந்திக்கப் போகிற நடுக்கம். அவமானப்பட வேண்டுமே என்கிற கிலி.
கூட்டத்தின் மொத்தப் பார்வையில் கூனிக்குறுகிப்போய் நிற்க வேண்டும். ஆள் ஆளுக்கு முறைப்பார்கள். இளப்பமாய் பார்ப்பார்கள். திட்டுவார்கள். “சாதியைக் கேவலப்படுத்திட்டீயே... சாதி கெட்டப் பயலே” என்று நாறவசவுகளாய் வைது தீர்ப்பார்கள். அடிக்க அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு, மட்டியைக் கடித்துக்கொண்டு பாய்ச்சல் காட்டுவார்கள்.
அத்தனையையும் ‘வாங்கி’க் கட்டிக்கொள்ள வேண்டும். நிமிர்ந்து பார்த்து விடக்கூடாது. பணிந்து குழைந்து நிற்கணும். அப்பவும் சில சண்டியர்கள் “சபைக்குப் பயந்து வணங்கி நில்லுடா” என்று அதட்டுவார்கள்.
நாட்டாமை ‘ஆயிரம் ரூபாய்’ என்று அபராதம் போடுவார். கொத்திப் பிடுங்குகிற அத்தனை பெரிய கூட்டத்தில், அம்மணமாய் நிற்கிற அவமான அவஸ்தையோடு, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விழுந்து கும்பிடணும். புலம்பிக் கெஞ்சணும். ஒரு முறையல்ல... பலமுறை மரணம்.
செத்து செத்துப் பிழைப்பதுபோல வணங்கி எழ, வணங்கி எழ ஆயிரம் ரூபாய் சன்னஞ் சன்னமாய் இறங்கி வந்து... நூறு ரூபாயில் வந்து ஆணியடித்து நின்றுகொள்ளும். அதைக் கட்டியாகணும்.
ஊர்க்கூட்டத்தில் குற்றவாளியாக நிற்பதே, நரகாவஸ்தைதான்.
இத்தனை அவமானங்களையும் எப்படித் தாங்க? சாவைவிடக் கொடிய இந்த வதையைத் தாங்கிக்கொள்ள மனசில் பலம் உண்டோ? அந்த அளவுக்கு மான உணர்வற்று, மரத்துக்போயா கிடக்கிறது, மனசு?
அதைவிடக் கொடுமை... இப்படியெல்லாம் காலடிச் செருப்பாக கேவலத்தில் இழுபடுகிற அளவுக்கு அவன் எந்தக் குற்றமும் செய்ததாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால்... அவன் செய்தது குற்றமேயில்லை. நியாயம். நியாயத்துக்கான யுத்தம். சாதியின் மானத்தைக் காக்கும் போராட்டத்தில், ஒற்றையாளாய் நின்று பயப்படாமல் போட்ட சண்டை.
பாராட்ட வேண்டிய ஊர்க்கூட்டம், தண்டிக்கக் காத்திருப்பதுதான், விநோதம்; அல்லது அவன் விதி. கோழைத்தனமான ஜனங்கள், தன்மானமில்லாத நடவடிக்கை. பயந்தாங்கொள்ளித்தனம்.
பயத்தையும் மீறிக்கொண்டு அவனுள் திமிர்கிற ரௌத்ரம். நடந்தது இதுதான்:
மேலக்காட்டில்—ஓடைக்குள்—செம்மறியாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஓடையின் கரை இருமருங்கிலும் இறவைத் தோட்டங்கள். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்காரன் சுப்ரமணி, தேவமார் பையன். ஓடைக்கரை பூராவும் புதர்க்காடாய் செடிகள். பெரிய பெரிய வேலிமரங்கள், அடர்த்தியாய். வேலிக்கிளை நீள உச்சியில் ஏறிக்கொண்டிருந்த கரட்டாணை இறங்கவிடாமல் ‘சத்தக்காடு’ போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அதைத் துரத்திக்கொண்டு கொடுமை பண்ணிக்கொண்டிருந்தான். கொடி போன்ற மெல்லிய சாட்டையாய் வளைந்து அந்தரத்தில் தொங்கிய கிளையில் கரட்டாண் ஏற... அதன் கனம் தாளாமல் அக்கிளை தாழ்ந்து தாழ்ந்து ஊஞ்சல் போல ஆட, கரட்டாண் பதறித் தவித்தது. பின்பக்கமாய் இறங்கவிடாமல் இவன். முன்பக்கமாய் போய் கீழே விழ முடியாமல், தரை ரொம்பக் கீழே. சாவு நிச்சயம் என்று அது முழித்த பயமுழி. அதில் சுப்ரமணிக்குக் குரூரக் கொண்டாட்டம்.
இவன் இந்தக் குஷியான விளையாட்டில் மனம் ஒன்றிப்போய் முழு மூச்சாய் ஈடுபட்டிருக்க... ஆடுகள் பத்துக்குமேல் நாடார் தோட்டத்திற்குள் விழுந்து வெறிவேகமாய் ஆவல் ஆவலாய் மேய—
நாடாரின் மகன், ரொம்பச் சின்னப் பையன். அவன் பருத்திச் செடிகளுக்குள் ஓட முடியாமல் தத்தளித்து ஆடுகளைப் பத்தினான். அழுகையும் வசவுமாய் ஓடி ஓடிப் பத்தி... பசுங் கொழை மேய்கிற ஆவலில் ஆடுகள் அவனை ஏமாற்றின. இவன் பருத்திச் செடிகளுக்குள் விழுந்து தடுமாறி...கூவ(ல்)க் காடு போட்டான்.
அந்தச் சின்னவன் போட்ட கூப்பாட்டில்தான், சுப்ரமணி சுதாரித்தான். பதறயடித்துப்போய் ஆடுகளை மடக்கிப் பத்தினான். சின்னவன் தாறுமாறாக வைதான். வயசைப் பார்க்காத வசவுகள்.
சுப்ரமணியும் பதிலுக்குத் திட்டினான்.பக்கத்தில் விறகு வெட்டிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான், சிந்தாமணி. பக்கா சாதிவெறியன். அடுத்த சாதியாட்களையெல்லாம் கடித்துத் துப்பவேண்டுமென துடிக்கிறவன். அவன் ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. பார்வை பூராவும் அவனுக்கு இங்கே தான்.
சுப்ரமணி ஆடுகளை மடக்கிக்கொண்டே அந்தச் சின்னவன் வசவுக்கு பதிலாகத் திட்டுகிறபோது... நாடார் சாதி குறித்த ஓர் இழிவுச் சொல், தவறிப் போய் தெறித்துவிட்டது.
அவ்வளவுதான். சிந்தாமணி பாய்ந்து வந்தான். சகலத்தையும் மறக்கடிக்கிற சாதி வெறி... அவனுள் தீயாக. சுப்ரமணியை இழுத்துப்போட்டு, ‘சாத்து சாத்து’ என்று பயங்கரமாய் மொத்திவிட்டான். சாதாரண மொத்து இல்லை...சுப்ரமணி கிழிந்து போகிற மாதிரி, புரட்டிப் புரட்டி எடுத்துவிட்டான்.
இதுதான் சம்பவம்.
தேவர் பிரமுகர்கள் ஆத்திரமும் ஆவேசமுமாக வந்து நாடார் பிரமுகர்களிடம் மோதினர்.
“என்ன சொல்தீக... இதுக்கு? கேட்டுக் கொடுக்கப் போறீகளா... இல்லே நியாயத்தை நாங்களே பாத்துக்கிடவா?”
ஒதுங்கிக் கொள்வது அத்தனை சுலபமல்ல. “நீங்களே அவனை என்ன வேணும்னாலும் செய்துட்டுப் போங்க” என்று பொறுப்பில்லாமல் ஒதுங்கிட முடியாது.
இதே விவகாரத்தை இதன் போக்கில் வளரவிட்டால் நாடார்—தேவர் சாதிச்சண்டையாக வெடித்துவிட்டால் என்ன செய்ய? பொறியைத் துவக்கத்திலேயே அணைத்தாக வேண்டும்.நாடார் பிரமுகர்கள் பதற்றத்தோடு ஒப்புக்கொண்டனர். “சரி சொல்லிட்டீக. நாங்களே அந்தப் பயலை விசாரிச்சு, ஞாயப்படி தண்டிச்சிருதோம்.”
“இந்த ஊரைப் பொறுத்தளவுலே தேவமாரும் நாடாக்கமாரும் தலைமுறை தலைமுறையா அண்ணன் தம்பிகளாக இருந்து வாரோம். அதனாலேதான் உங்ககிட்டே வந்து பொறுமையா சொல்லிக்கிட்டிருக்கோம். இல்லேன்னா... இப்ப நடக்குறதே வேற.”
“ஒன்னும் மனசுலே வச்சுக்காதீக. உங்க பையன் வேற, எங்க பையன் வேறயா? யார் செய்ஞ்சாலும்... தப்பு, தப்புத்தானே? தண்டிக்காம விடுவோமா? சிந்தாமணிப் பயலைக் கூப்புட்டு விசாரிச்சு தொலியை உரிச்சு தொங்கவிட்டுருதோம். சர்த்தானே?”
“அப்பச் சரி”...
இதற்குத்தான் மடத்தில் இந்த அவசரக் கூட்டம்.
சாதியின் மானத்தைக் காப்பாற்ற சண்டை போட்ட சிந்தாமணிக்கு... சாதியே தண்டனை தரக் கூடியிருக்கிறது. அவமானகரமான தண்டனை. சாவைவிடக் கொடிய அவமானம். தாங்கவே முடியாத ரணச் சாவு. சரணாகதி போன்ற இழிவான ரணம்.
சாதி வெறிபிடித்த சிந்தாமணிக்குள் இள ரத்தம் கொதித்தது. இந்தக் கூட்டமே தொடை நடுங்கிக் கூட்டமாகத் தெரிந்தது.
“அடிச்சதுக்கு நாங்க பைசல் பண்றோம். சாதி சொல்லி திட்டுனதுக்கு நீங்க என்ன செய்யப்போறீக?”ன்னு துணிச்சலாக ஒரு கேள்வி கேட்க, ஒருத்தன் நாவிலேயும் வீரமில்லாமப் போச்சே...
இந்தக் கோழைக் கூட்டத்தின் காலில் விழவே கூடாது. அதைவிட, உயிரை விட்டுவிடுவது ரொம்ப மேல்.சிந்தாமணியின் கொதிக்கிற மனசுக்குள்... அம்மா. இவனைத் தவிர, வேறு நாதியில்லாத அம்மா. கூலிக் காரியாக உடம்பைக் கடம்பாகக் கடைந்து, இவனை வளர்த்த— வளர்க்கிற— அம்மா.
அய்யா முகம் தெரியாமல் வளர்த்த அம்மா. அய்யா முகத்தை மனசு தேடாத அளவுக்கு, எல்லாமாக நிறைந்து காத்துப் போஷித்த அம்மா.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாத குழப்பம்.
மூச்சு முட்டல். தகிப்பு. மொத்த வாழ்க்கையும் நிர்ணயித்த கடின கணம். வலிய தருணம்.
வேப்பமரக் கொண்டைக்குள் சிக்கிக்கொண்ட பேனாக... அவன் தவிப்பு.