உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/006

விக்கிமூலம் இலிருந்து

6


ன்ன செய்றது? எந்த முடிவுக்கு வர்றது?

சிந்தாமணிக்கு ஓர் இழவும் புரியவில்லை. எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடக்கிற இறுக்கம்... எந்தப் பாதையுமற்றுப் போன திணறல்... ஆனால், எங்காவது நகர்ந்தேயாக வேண்டிய கட்டாயம்.

திகைப்பு... திகைப்பு... திகைப்பின் முற்றுகைகள்....

வேப்பமரத்துக் கொண்டை இருட்டுக்குள் எம்புட்டு நேரம் இருப்பது? கட்டெறும்புகள் வேறு பனியனுக்குள் ஊர்கின்றன. உடம்பெல்லாம் ஊர்ந்து ‘நறுக், நறுக்’ என கடிக்கிற சிற்றெறும்புகள் வேறு.

சொறியவும் முடியவில்லை; சொறிந்தால் வேப்பிலைகள் கூப்பாடு போடும். கிளைகள் ஆடும். காட்டிக் கொடுத்துவிடும்.

அம்மா இப்பவும் பதற்றமும் கண்ணீருமாக தலையிலடித்துப் புலம்பிக்கொண்டிருப்பாள். “வழியிலே போற சனியனைப் பிடிச்சு, பிடறியிலே ஏத்திக்கிட்டானே, பாவிப்பய. பெத்த வவுத்துலே தீயை வைச்சிட்டானே” என்று நெஞ்சில் அடித்து அழுது சாவாள்.

அம்மா... அம்மா... அம்மா...

அம்மாவின் நம்பிக்கையும் இவன்தான். ஆறுதலும் இவன்தான். அம்மாவுக்காகப் பணியுறதா? பணிஞ்சு இந்தத் தொடை நடுங்கிக கால்லே வுழவா? சாதி உணர்வில்லாத கோழைக கால்லே விழுந்து கும்பிட்டு வணங்கி, அவமானப்பட்ட பிறகு... இந்த ஊர்லே இருக்கவா? அவமானத்துலே கிழிஞ்ச மூஞ்சியோட, இந்த ஊர் ஜனங்களோட பழகி வாழவா? முடியுமா? முகம் கொடுத்து உறவாட முடியுமா?

அவமானத்தீயிலே அவிஞ்சுபோன மனசுக்குள்ளே, ஊர் ஜனங்களோட பரிகாசப் பார்வை முள்முள்ளாய் குத்திக் கிழிக்குமே... காலமெல்லாம் ரத்தம் வழியுமே... அசிங்கப்பட்டு பிரேதமா உயிர் வாழ்றதைவிட, பிரேதமாகவே செத்துப் போயிடலாம்.

அம்மா?

அம்மா என்னை நம்பி மண்ணில் பிறக்கலே. அவா வவுத்துலேதான் நான் பொறந்தேன். அம்மா கூலிக்காரி. உழைப்பாளி. உடம்புலேயும் மனசுலேயும் வைராக்கியம் இருக்கும். வாழ்க்கையோட மல்லுக்கட்டுகிற வலிமை இருக்கும். சமாளித்துக் கொள்வாள்.

இளவட்டங்கள் நாலைந்து பேர் சேர்ந்தாற் போல மரத்தைக் கடந்து போகின்றனர். நடையில் ஒரு தீவிரம். ஒரு வேகம்.

“எங்க போய்த் தொலைஞ்சான்...அந்தப்பய?”

“மாயமாயிட்டானே. எங்கே தேடுனாலும், ஆப்புடவே மாட்டேங்கானே...”

“ஊர்ப் பெரிசுக நம்மளையும் ‘உஸ்ஸூ’ன்னு உக்கார விடமாட்டேங்குறாக... சிந்தாமணியை இழுத்துட்டு வாங்கன்னு உசுரைப் புடுங்குறாக.”

“ச்சேய்! இந்தப் பிசாசு எங்க போய்ப் பம்மிக்கிட்டானோ?”

இருட்டின் நிழற் கற்றைகளாக அவர்கள் போய்விட்டனர். கரைந்து மெலிகிற பேச்சு. தெரு முக்கைத் தாண்டிவிட்டனர். ஊர்முழுக்க வலைவிரித்துவிட்டார்கள். அலசித் தேடுகிறார்கள். தீவிர வேட்டை. சிக்கினால்... சிக்கல். இழிவு. ஏழு தலைமுறைக்கும் தீராத அவமானம். ஏழுவண்டிக் கேவலம்.

ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். வேறு வழியற்ற வழி. சூழலின் வெக்கை வெள்ளத்தில், தக்கையாக மிதக்கிற பயணம். எதையும் சிந்திக்க மறுக்கிற வெறித்தனப் புறப்பாடு.

மரத்திலிருந்து பூனை போல அரவமற்று இறங்கினான். கிழக்குத் திசையில் ஓட்டம் பிடித்தான். பாதைகளைத் தவிர்த்துவிட்டு, புஞ்சைகளின் நெஞ்சுகளில் குறுக்காக ஓடினான். பொழிகளில் வழுக்கி விழுந்தான். உழவுக் கட்டிகள் அவனை இடறிவிட்டன. உருட்டிப் புரட்டியது. எதையும் பொருட்படுத்தாமல், கண்ணை மூடிக்கொண்டு ஓடினான், கண்டமேனிக்கு. அவனுக்குத் துணையாக இருட்டு. பயம். ரோஷம். தார்மீகக் கோபம்.

மூன்றுமைல் தூரம். பாதை தெரியாத கரிசல் காட்டு ஒற்றைத் தடம். குத்துமதிப்பாக நடந்தான். முள்ளுக்காடுகள். தொடைகளைக் கிழிக்கிற இலந்தைமுள். கண்மாய்க் கரைப்பாதை. பாதமெல்லாம் குத்தி வலிக்கிற சலங்கை முட்களாக கரிசல் கட்டிகள். எல்லா ரணங்களையும் பல்லைக் கடித்துச் சகித்துக் கொண்டான்.

‘கிய்ய்ய்ங்’கென்று இருட்டு. எல்லையற்ற பரந்த வானக்கறுப்பு. அள்ளி இறைத்த நெருஞ்சிப் பூக்களாக நட்சத்திரங்கள். ஊளைக் காற்று. காட்டுநரிகளின் நீட்டி முழக்கிய ஊளைகள்.

கண்டமேனிக்கு கலைந்து பாய்கிற செம்மறிகளாக தறிகெட்டோடுகிற எண்ணங்கள்.

திருவேங்கடம் வந்து விழுந்தான். அகால நேரம். சாமத்தை நெருங்கும் சமயம். திருவேங்கடம் பஜாரில் ஓட்டல். சாப்பிட்டு முடித்த திருப்தியோடு சிகரெட் புகைய, ஆக்ஸிலேட்டரை மிதிக்கிற லாரி டிரைவர். கோவில்பட்டி போகிற முனைப்பில் உறுமுகிற செங்கல்லோடு லாரி டிரைவரிடம் கெஞ்சிக் கூத்தாடினான். “சரி... ஏறித்தொலை.”

லாரி கடகடத்த கிழட்டு உறுமலோடு பாய்ந்தது. அவன் தலைக்கு மேல் கன்னங்கரேலென்று புளியமரத்தலைகள் பின்னோக்கி ஓடின.

அம்மாவிடமிருந்து— பிறந்து, தவழ்ந்து, விளையாடிப் புரண்ட ஊரிடமிருந்து இவனைப் பிய்த்துக் கொண்டு... தூரம் தூரமாகப் போகிற லாரி.

எங்க போறோம்? என்ன செய்யப் போறோம்?

இந்தக் கேள்விகள் அவன் மனசை அதிரச் செய்தன. மனமெல்லாம் சூழ்ந்து கவிந்துகொண்ட சூன்யம்.

இந்த நினைவுகளே பிரம்மாண்டமாய் அவனைச் சுற்றி வளைத்தன. நெரித்தன. நெஞ்சுக்குள் திணறல். தவிப்பு, லாரி அதிர அதிர... அவனுள்ளிருந்து விம்மி விடைத்து வெளிப்படுகிற மனசாக அழுகை. அம்மாவை நினைக்க நினைக்க கேவிக் கேவி அழுதான். அம்மா... அம்மா...

மகனைக் காணாமல் தேடித் தவிக்கிற அம்மா. ஆட்களிடம் ஓடி ஓடிக் கேட்டலைகிற அம்மா. தொலைந்து போன ஒற்றைப் பிள்ளையை எண்ணி எண்ணிப் புலம்பிக் கதறுகிற அம்மா. “என்னைத் தவிக்க விட்டுட்டு ஓடிப்போக எப்புடிடா மனசு வந்தது, அடப் பாவிப் பயலே?” என்று தலைவிரிகோலமாக அழுது அரற்றுகிற அம்மா.

சிந்தாமணி கன்னத்தில் வழிகிற கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டான். விம்மி வெடிக்கிற கேவல்கள். விக்கலைப் போல தொடர்கிற விசும்பல்கள்.

எந்தத் திசையில் போகிறோம்? பிழைப்புக்கு என்ன வழி? அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன செய்றது?

சுற்றிலும் கற்றை இருட்டு. கண்களை இருட்டிக் கொண்டு வந்து மொய்க்கிற நினைவுக் குழப்பம். பயம். மனசின் உள் ஆழத்தில் கவ்விப் பிடிக்கிற நிராதரவுணர்ச்சி.

கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன். வந்து நின்ற ரயிலில் குருட்டாம் போக்கில் ஏறிப் பம்மிக் கொண்டான். திருச்சியில் டி.டி.ஆர். கறுப்புப் பூதமாக நெருங்கிவர பதற்றத்தில் இன்னது செய்வது என்று திகையாமல் பீதியில் இறங்கிவிட்டான்.

ஒன்றும் புரியவில்லை. பழக்கமில்லாத அந்நிய மண்.

இருட்டுப் புதர்களுக்குள் நடக்கிற காட்டுப் பிராணியைப் போல முரட்டுத் தைர்யத்தில், கால்போன போக்கில் நடந்தான்.

பசி வேறு கொத்திப் பிடுங்குகிறது. கையில் துட்டுமில்லை. ஊரைத் தவிர வேறு எங்கும் போயறியாத பட்டிக்காட்டுப் பாமரன். திருச்சியின் அசுர வேகமும், ஜன அடர்த்தியும் அவனை மிரட்டியது. யாரிடம் என்ன கேட்க? வாய் வரவில்லை. திகைப்பின் கைதியாக... அவன்.

கூட்டத்தைக் கண்டு மிரண்டு மிரண்டு ஜனநெரிசலில் சிக்குண்டு, தள்ளப்பட்டு அவன் வந்து நின்ற இடம், பட்டாளத்துக்கு ஆள் எடுக்கிற இடம். செம்மண்ணில் கடலாய் விரிந்து கிடந்த கிரவுண்டு. கட்டிடங்கள். மலர்ச்செடிகள், மலரில்லாத மலர்போன்ற வண்ணச் செடிகள். எல்லாம், தொட்டிகளில் அணிவகுப்பாக...

இவனும் வாலிப வரிசையில் நின்றான், பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு. பின்னால் இருப்பவர்களால் நகர்த்தப்பட்டான். அடிவயிற்றில் சுருக்கிடுகிற வலி. பசி மறந்துபோன வறண்ட வலி. கவ்விப் பிடிக்கிற வேதனை.

சூழ்ந்திருந்த வெறுமையே—நிராதரவுணர்வே— அவனுள் ஒரு பலமாக இருந்தது. கிடைக்கிற துரும்பைப் பற்றிக்கொண்டாவது உயிர் வாழ்கிற வெறி. வாழ்வின் வேட்கை.

இதுதான்... அவனை இக்கணத்தில் இயக்குகிற ஒரே பலம், ஆத்மபலம்.

அந்தக் கிரவுண்டில் பையன்களோடு வெறிகொண்டு ஓடுகிறபோது... இந்தச் சூன்யம்தான் வீர்யம் தந்தது. உள்ளாற்றல் முழுவதும் போர்க்குணமாக பீறிட்டது.

பசிக் கிறுகிறுப்பை சமாளித்தான்.

மெடிக்கல் டெஸ்ட்டில் நிர்வாணமாக நிற்கவேண்டியிருந்த போது, சாவைச் சந்திக்கிறவன் போலத் தவித்தான். பிய்த்துக் கொண்டு ஓடிவிடுவோமா என்று அலைபாய்கிற கூச்ச மனசு.

எங்கே ஓட? ஓடி எங்கே போக? என்ன புகல்?

இந்தக் கேள்வியின் மூர்த்தண்யம்தான்... அந்தக் கிராமத்தானின் இயல்பான கூச்சத்தைத் தின்று தீர்த்தது.

ஊரை விட்டுப் புறப்பட்ட பிறகு... அவன் சாப்பிட்ட முதல் சாப்பாடே, பட்டாளத்து ரேஷன்தான்.

பஞ்சாப்பில்—ஜபல்பூரில்— டிரெயினிங்.

புதிய உலகம். முழுக்க முழுக்க அந்நிய உலகம். ஒரு புதிய சூழலே; வாய்பிளந்து அவனை விழுங்கிக் கொண்ட மாதிரியிருந்தது.

முஸ்லீம்கள்..... மலையாளிகள்... தெலுங்கர்கள்... இந்திக்காரர்கள்.... கன்னடியர்கள்... சீக்கியர்கள். புரியாத பாஷைகள். உணர்வைச் சுமந்த ஒலிக் குழப்பங்கள். அந்நியமான உருவங்கள். வகை வகையான தோற்றங்கள். வேறு வேறு ரகமான முகங்கள். மனிதர்கள் என்கிற ஒரே இணைப்புக் கயிறு.

அவனுக்குக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருந்தது. “மதறாசி... மதறாசி” என்று இவனைக் கூப்பிடுகிற சக வாலிபர்கள்.

ட்ரெயினிங் தருகிற ஆபிஸர்களில் ஒருவர், தமிழர் அவரும் தேவர். திருமங்கலத்துக்காரர். ‘தெற்கத்திக்காரன் இவன்’ என்கிற தனித்த விஷயத்தை விசேஷமாகக் கவனித்தார்.

சிந்தாமணியிடம் அவர் ரொம்பப் பாசமாக இருந்தார். இவனது கண்களின் ஒளியாக— இவனது மொழியாக— அவர் இருந்தார். அவர் செய்த உதவிகளுக்கு—ஒத்தாசைகளுக்கு—கணக்கு வழக்கேயில்லை.

பட்டாளம் எனும் புதிய உலக அனுபவம், இவனது மனத்தின் நிறத்தையே சலவை செய்து மாற்றியது. அவனது சிந்தனையை இறுகப் போர்த்திக் குறுக்கிப் போட்டிருந்த தோலை உரித்தது. ஆத்மா சுதந்திரப்பட்டது. தேச மனிதர்கள் என்ற பெரும் பிரம்மாண்டத்தில், சாதி என்பது எத்தனை அற்பமான விஷயம் என்று உணர்த்தியது.

மானுடம் என்ற ஒன்றே நிஜம் என்பது... அவனது அனுபவத்தில் மலர்ந்தது. இந்திக்காரனின் இனிய புன்னகையும், சீக்கியனின் வலிமையான தைர்யமூட்டலும், மலையாளியின் அன்பான தோழமையும், முஸ்லீமின் கருணை மிக்க தழுவல்களும் அவனுக்குள் மனவெளிச்சமான உணர்வனுபவமாகியிருந்தது. அதிலும், அந்த ஆபிஸர் தேவரின் அன்பு, இவனை ரொம்ப அசத்திவிட்டது.

பதவி வித்தியாசங்களையெல்லாம் கடந்து வந்து இவன்மேல் படர்ந்த அந்த அன்பின் ஒளியில்... இவனது குற்றம் இவனுக்குத் தெரிந்தது, துல்லியமாய்.

சுப்ரமணியை ஓடை மண்ணில் போட்டு முரட்டுத்தனமாய் புரட்டிப் புரட்டி எடுத்த காட்சி, மனசுக்குள் நெருடல் நெருடலாய் நினைவுக்கு வந்தது. முள் முள்ளாய்க் குத்தியது.

ட்ரெயினிங் முடிந்தவுடன்... லீவ் கிடைக்கிற வாய்ப்பு.

அம்மாவை நினைத்து ஏங்கினான். தாய்மடி போன்ற ஊர்ப்புழுதியில் உள்ளங்கால், பதிக்க ஆசைப்படுகிற துடிப்பு. சமவயதுக் கூட்டாளிகள் முகங்களைத் தரிசிக்க வெறி கொள்கிற தவிப்பு. உள்ளுர்க் காற்று... அந்த ஆகாயம். அந்த வேலிக்காட்டின் உஷ்ணமூச்சு .மாடுகளின் மூத்திர வாசம்.

ஏக்கத்தைக் காலில் போட்டு மிதிக்கிற நிதர்சனம். தொலியை உரித்துத் தொங்கப் போடக் காத்திருக்கிற தேவமார்களின் கோபம். நெற்றிமட்டக் கம்புகளோடு குரூர வெறியோடு சூழ்ந்து நெருக்கி சூறையாடக் காத்திருக்கிற வன்மம். அவனை பயமுறுத்தியது. அடி வயிற்றைக் கலக்கியது. விதம் விதமான அச்சுறுத்தலான கற்பனைகள்...

லீவை தவிர்த்துவிட்டான்.

அடுத்த ஆறு மாதம். அப்போதும் அந்த லீவ் வாய்ப்பைத் தவிர்த்துவிட்டான். அதே பயம். அணு அணுவாக வதைக்கிற பயம். உண்ணும் போதும், உறங்கும் போதும், வைகறை இருட்டில் மூச்சிரைக்க ஓடுகிற போதும் ரைபிளை க்ளீன் பண்ணுகிற போதும் மனசை முள்ளாகக் குத்தி ரணப்படுத்துகிற அதே பயம்.

அவன் லீவைத் தவிர்த்த விதம், தேவர் ஆபிஸருக்கு அனாவசியமாகப் பட்டது. கவனிக்கும்படி உறுத்தியது.

அதிகாலையில் தினசரி நடக்கிற பேரெய்டுக்குப் பிறகு... அவனைத் தனியாக அழைத்தார்.

“சிந்து... நீ இப்பவும் லீவுக்கு அப்ளை பண்ணலியா?”

“இல்லே சார்.”

“ஏன்? ஊருக்குப் பக்கணும், அம்மாவைப் போய் பாக்கணும்னு தோணலியா?”

“தோணுது சார்.”

“அப்புறம் ஏன் அப்ளை பண்ணலை? எனி ரீஸன்?”

“சும்மா... தான்.”

“என்ன சும்மா...? சும்மான்னு ஒரு ரீஸனா?”

“.....................”

“ரைட். இப்பக் கேக்குறேன், வீட்டுக்கு லெட்டராச்சும் போட்டீயா?”

“போடலை சார்.”

“ஒன்னு கூட?”

“இல்லே சார்.”

“ஏன்?”

கால் பெருவிரலில் நங்கூரமிட்ட பார்வை. தத்தளிக்கிற அவன். அவனையே கூர்ந்து பார்த்தார். கனிவான குரலில் அதட்டினார்.

“ஏய்... சிந்தாமணி, நீ இப்ப ஒரு ஜோல்ஜர். வீரமுள்ள ஆம்பளை. நிமிர்ந்து பார்... உண்மையைச் சொல்லு... என்ன விஷயம்?”

தடுமாற்றமாய் நிமிர்ந்தான். வியர்வையில் எண்ணெய் கசிற முகம்.

அவரது சிவந்த—அகன்ற—முகம். துல்லியமான மேல் வளைவுகளோடு முறைக்கிற மீசை. நாற்பதை நெருங்குகிற வயது. அவரது இடுங்கிய கண்களில், மகனைப் பார்ப்பது போன்ற உணர்வு. அப்படியோர்... மிருது. குழைவு.

அவன் தயங்கினான். அலைபாய்கிற கண்கள், பிடிப்பட்ட குருவிகளைப் போல. உள்ளடங்கிக் கிடந்த கொதி உணர்ச்சிகள் பீறிட்டன. கண்ணோரங்களில் ஈரக்கசிவு. என்னத்தைச் சொல்ல? எப்படிச் சொல்ல? தேவமார் பையனை அடித்ததை—ஊரிலுள்ள தேவமார்கள் அடிப்பதற்காகவும், அவமானப்படுத்தவும் காத்திருக்கிற பயங்கர நிஜத்தை எப்படிச் சொல்ல? அதுவும்... இவரிடமே சொல்வதா?

அவனுக்கு அவனே கசந்தான். குற்ற உணர்வின் அவஸ்தை. தாளமுடியாத தத்தளிப்பு.

“கமான்... க்விக்... என்ன தயக்கம்? ஃப்ரீயா பேசு.”

அவரது கனிந்த குரலில் மெல்லிசான அதிகாரத் தொனி.

நிமிர்ந்து பார்த்தான். குழைவான அவரது முகம். கனிவான கண்கள். அதில் ததும்புகிற பாசம். பரிவுணர்ச்சி. உள் மனசின் ஆழத்தில் மயிலிறகாக நீவுகிற அன்புணர்ச்சி.

உடைந்துவிட்டான். அழுது விசும்பும் முகத்தோடு கரகரத்த குரலில் சகலத்தையும் கொட்டித் தீர்த்தான்.

அதிகார மிடுக்கையெல்லாம் களைந்துவிட்டு வெள்ளையாகச் சிரித்தார். சகஜபாவமான தோழமையான சிரிப்பு. பொம்மையைப் பார்த்துவிட்ட குழந்தையின் சிரிப்பு. மகிழ்ச்சியும் பரிகாசமுமான சிரிப்பு. சிரிக்கத் தக்கதா என்னோட பயம்? பயந்து பயந்து நிமிஷத்துக்கு நிமிஷம் நடுங்கிக்கிட்டிருக்கேனே... இது பரிகாசத்துக்குரியதா?

“அட... இடியட், நான்சென்ஸ்! இதுக்கா... பயந்துக்கிட்டு இத்தனை நாளா செத்துக்கிட்டிருக்கே? ரியலி யூ ஆர் ஏஃபூல்.”

இவனது கலக்கம் விலக...திகைப்புடன் அவரைப் பார்த்தான்.

“யாரந்தப் பையன்? என்ன பெயர் சொன்னே? சுப்ரமணியா?”

“ம்.”

“அந்தப் பையனை அடிச்சது தப்புன்னு... நீ இப்ப ஃபீல் பண்றீயா? உன்னோட ஃபீலிங்ஸ் நிஜமா? சொல்லு.”

“ஆமா... சார். நெசந்தான்.”

“அப்போ... அதே உணர்வுகளோட அந்தப் பையனுக்கு ஒரு லெட்டர் போடு.”

“ம்.”

“உங்க வில்லேஜுக்குப் பஸ் இருக்கா?”

“இல்லே சார்...திருவேங்கடம் இறங்கி... அங்கிருந்து சைக்கிள்லேதான் போகணும்.”

“ஆல் ரைட். ‘திருவேங்கடம் இன்ன டேட்லே வர்றேன், சைக்கிளோட வந்து சேரு’ன்னு ரெண்டாவது லெட்டர் போடு.”

“போட்டா...?”

“நீங்க ரெண்டுபேரும் ஃபிரெண்ட்ஸ் ஆயிருவீக.”

“நடக்குமா... சார்?”

“டெஃபனட்டா நடக்கும்.”

வியப்பும் சந்தேகமுமாய் அவரைப் பார்த்தான். அவரது நம்பிக்கையை இவன் நம்பினான். வேறு புகல்?

இந்தக் கோணத்தில் இவரால் எப்படிச் சிந்திக்க முடிந்தது? இத்தனை மாதங்களாக இவனை உறங்கவிடாமல் போட்டுப் பிறாண்டி, அவஸ்தைப்படுத்திய ஒரு பயங்கரமான பிரச்சினைக்கு... இத்தனை சுலபமான ஒரு தீர்வைத் தந்துவிட்டாரே...

“ரொம்ப ஆச்சரியப்படாதே... மைடியர் பாய்! இது ஒன்னும் என்னோட மேதாவித்தனமான புதிய சிந்தனையில்லே. காலம் காலமா... நம்ம ஊருப் பெரியவங்க கடைப்பிடிக்கிற ரொம்ப ரொம்பச் சாதாரணமான டேக்டிக்ஸ்தான்.”

“அப்...படியா... சார்?”

“ஆமா... ‘சாட்சிக்காரன் கால்லே வுழறதைவிட, சண்டைக்காரன் காலில் வுழுந்துரலாம்’னு ஒரு பழமொழி... நீ கேட்டதுல்லே... நம்ம காடுகள்லே?"

அசந்து போனவனாக சிந்தாமணி, அவரைப் பார்த்தான். அந்த ஆபிஸர், இவனது குலதெய்வமாய்—பிரம்மாண்டப் பேருருவமாய்—தெரிந்தார்.

இவனுக்குள்...இவனது ஊர். அம்மா. ஊர்ப் புழுதி வாசம். ஊரின் சம வயதுச் சிநேகிதர்கள்.

அலை அலையாய் ஆர்வப் பெருக்கு.

இப்போதே ரயில் ஏற வேண்டும் போல... உள்பரபரப்பு.

இவனது தோளைப் பரிவுடன் தட்டிக் கொடுத்தார்.

“ரைட்... உடனே லெட்டர்ஸ் போடு. லீவுக்கு அப்ளை பண்ணு.”

அவர் போய்விட்டார். சிந்தாமணி மனம் ஊரை நோக்கிப் பயணப்பட்டது. ஆபிஸர் கணக்கு பிசகி விட்டால்...? ஊர் போய்ச் சேர்ந்தவுடன்... “வந்துட்டான் பயந்தாரிப்பய... இவனைப் பிடிச்சு மரத்துலே கட்டிப்போடுங்கடா” என்று ஆர்ப்பரித்தால்...

சிந்தாமணிக்குள் மெல்லிசாக திகில் படர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/006&oldid=1818130" இலிருந்து மீள்விக்கப்பட்டது