உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/014

விக்கிமூலம் இலிருந்து

14


விவகாரம் தீராத நிலை. தீராது என்ற கட்டத்திற்கு வந்துவிட்ட நிலவரம். நாட்டாண்மை கத்திக் கத்தி அசந்து போய்விட்டார். தொண்டை புண்ணானதுதான் மிச்சம்.

மேட்டுக்கும் பள்ளத்துக்குமாக இழுபடுகிற வழக்கு. முறுக்கேறிப் போன மனநிலை. பரஸ்பரம் வன்மம் கூறிக்கொண்ட கட்சிக்காரர்கள். முகங்கள் நிறம் மாறி குரூரமாகியிருந்தன. வேர்வையும் கோபமுமாய் கறுத்து வழிந்தன.

கொதிநிலை. ‘வந்து பாரு’ ‘செய்யுறதைச் செய்’ ‘கையை வெட்டுவம்’ ‘காலை நறுக்குவம்’ என்கிற வீறாப்பான கொக்கரிப்புகள். உணர்ச்சி வெக்கை. கலவர நிலவரம்.

என்ன ஆகுமோ, எந்த மாதிரியான கொலை பாதகம் வந்துவிடுமோ என்ற பதைப்பும் பதற்றமுமாய் ஜனத்தின் திகிலான பேச்சுச் சத்தம்.

தாழையா நாட்டாமை பக்கத்தில் போய் உட்கார்ந்தார், “என்ன முடிஞ்சுதா?” என்ற கேள்வியோடு.

“ஒரு இழவும் முடியலே. ஒருத்தருக்கும் ஒரு பொட்டு அறிவுகூடக் கெடையாது. சொல்ற ஞாயத்தை யாரும் கேக்குற மாதிரி தெரியலே.”

சலித்துப் புளித்துப்போய் கிடந்த நாட்டாமை, ரொம்ப புண்பட்ட மனசின் ஆயாசத்தோடும் அயற்சியோடும் இவரைப் பார்த்தார்.

தாழையா நிமிர்ந்து பார்த்தார். அவமதிக்கப்பட்ட கொதிப்பின் மனக் கொந்தளிப்போடு சவால் விட்டுப்பேசிக்கொண்டிருந்த ஏழாயிரம் பண்ணைக்காரர்களை அழுத்தமாகப் பார்த்தார். பார்வையில் ஆழமும், அதட்டலும்.

சும்மாவே வெங்கலக்குரல் தாழையாவுக்கு. அதையும் உயர்ந்த ஸ்தாயியில் ஏற்றி அதட்டியபோது, மடமே எதிரொலித்து அரண்டது.

“யோவ்..என்னய்யா இது? பஞ்சாயத்தா... கலகமா? ‘வெட்டுவம், குத்துவோம்’னு பேசுறதுக்காய்யா... பஞ்சாயத்து? ஊர் விட்டு ஊர் வந்து வெட்டிருவீகளோ? இதென்ன ஊரா, காடா? நாங்க என்ன மயித்துக்கு மீசை வைச்சுக்கிட்டுத் திரியுதோம்? சும்மா அழகுக்கா? வார்த்தையை அளந்து பேசணுமய்யா. கொட்டுன வார்த்தையை அள்ள முடியுமா? ‘வளா வளா’ன்னு என்ன பேச்சு? மொதல்லே... பேச்சை நிறுத்துங்க. சத்தத்தை நிப்பாட்டுங்க.”

‘கண், கண்’ணென்று வெங்கலநாதமாய் அதிர்ந்து ஓங்கிய இவர் சத்தத்தில் மொத்தக் கூட்டமே திகைத்து வாய் மூட... அந்தப் பேச்சிலிருந்த வீரமும், நியாய அழுத்தமும் ஏழாயிரம்பண்ணைக்காரர்களை யோசிக்க வைத்தது.

மடமே ‘கப், சிப்’பென்றாகியது. எள் விழுந்தால்கூட சத்தம் கேட்கும். அத்தனை நிசப்தம். அதே ஓங்கிய குரலில் அதட்டலாக சிங்காரத்தைக் கூப்பிட்டார்.

“ஏய்... சிங்காரம்.”

“என்ன மச்சான்?”

“பொண்ணு தரமாட்டேன்னு இப்பச் சொல்றே? எதனாலே? இவுக பனையேறிங்குறதுனாலேயா? வேற காரணம் உண்டா?”

நீளமான விளக்கத்தை விஸ்தாரமாக சொல்வதற்கான முஸ்தீபுகளோடு வாயைத் திறக்கப்போன சிங்காரத்தை கண்டிப்போடு கையால் அமர்த்திவிட்டு, மிரட்டல் தொனியில் சத்தத்தை உயர்த்தினார், தாழையா.

“ஏய் இங்க பாரு, ‘வளவளா, வைக்கப்படப்பு’ன்னு சொல்லக் கூடாது. கேட்டதுக்கு மட்டும் ‘கட், கட்’டுன்னு பதில் சொல்லணும். வேற காரணம் உண்டா?”

“இல்லே.”

மொத்தக் கூட்டமும் ஓர் எதிர் பார்ப்பும் நம்பிக்கையுமாய் மௌனத்தில் புதைந்து கிடந்தது. புதிரான ஆர்வம். விவகாரம் தீர்ந்துபோகும் என்ற தெளிவில், வழங்குகிற ஒத்துழைப்பாக அந்த மௌனம்.

“நகை நட்டு பேசுனதுலே மாத்தம் உண்டா?”

“இல்லே.”

“பேசுனதுக்கு மேக்கொண்டு அவுக கேக்காகளா?”

“இல்லே.”

“பேசுன பேச்சுப்படி செய்ய முடியாமப் போய்... கொறைச்சுச் செய்யணும்னு ஒனக்கு நோக்கம் உண்டா?”

“என்ன மச்சான், இப்புடிக் கேக்கீக?”

“மச்சான், நொச்சான்ங்குறதெல்லாம் அப்புறம். இப்ப நீ கேட்டதுக்கு மட்டும் பதிலைச் சொல்லு.”

தாழையாவின் அதார்ட்டியமான அதட்டலில், ஏழாயிரம்பண்ணைக்காரர்களுக்கு நம்பிக்கை வெளிச்ச அரும்புகள்...

சிங்காரம் அரண்டு போய், “இல்லே” என்று உயிரில்லாமல் முணங்கினான்.

“மாப்பிள்ளைப் பையனைப் பத்தி தப்பான தகவல் ஏதாச்சும் இப்பக் கெடைச்சிருக்கா?”

“அப்படீன்னா...?”

“குடி, சூது, அப்படி இப்படின்னு ஏதாச்சும் தகவல் உண்டா?”

“இல்லே.”

“அப்ப... அவுக பனையேறி நாடார்ங்கிற தகவல் இப்பத்தெரிஞ்சு, அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான் பொண்ணு இல்லேன்னு சொல்றே இல்லே?”

“ஆமா.”

“நீ... சாணானா, இல்லியா?”

நம்மைக் குற்றவாளி மாதிரி நிறுத்தி வைத்து, வக்கீல் மாதிரி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு, தாட்சண்யம் இல்லாமல் நடத்துகிறாரே என்று விசனப்பட்டுக் கொண்டிருந்த சிங்காரம், இந்தக் கேள்வியில் ரொம்ப அதிர்ந்து போய்விட்டான். வெலவெலத்துப் போய் விழித்தான், புரியாமல் திகைத்தான்.

“என்ன சொல்லுதீரு மச்சான்?”

“நீ... நா... இந்த நாட்டாமை, பஞ்சாயத்தாரு, இந்தா... கூடியிருக்குற நம்ம ஜனங்க எல்லாரும் யாரு? சாணான்ங்க தானே?”

“ஆமா.”

“நீயும் சாணான்தானே?”

“ம்.”

“சாணான்னா என்ன அர்த்தம்... தெரியுமா?”

“நம்ம சாதிப் பேரு.”

“அது. தெரியுது. அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?”

“தெரியலே.”

உறைந்து போய் ‘கப், சிப்’பாகியிருந்த கூட்டம், மெள்ளச் சலனப்பட்டது. சலசலத்தது. இந்தக் கேள்விக்கு நிஜமாகவே ஒருத்தருக்கும் பதில் தெரியவில்லை. நாட்டாமை நல்லையாவுக்கும் கூடத் தெரியவில்லை.

தர்மசங்கடமாய் நெளிந்தார். சம்மணக்கால் போட்டிருந்த காலை நீட்ட, கையைக் காலை அசைத்து செருமிக் கொண்டார். ‘தாழையாவின் கேள்வி அத்துமீறலான கேள்வியோ’ என்ற யோசனையும் புழுக்கமும் கூட்டத்துக்கு. நல்லையாவும் நினைத்தார். ‘வாயடிக்கிற வேகத்துலேயும் பெருமையிலேயும் எல்லை மீறிப் போய்ட்டாரு, வாயடி மாப்ளே.’

ஆனாலும் பொறுமையிழந்து போனதைக் காட்டிக்கொள்ளவில்லை. பதற்றமும் பிரமிப்புமாய் அவர் வாய் அசைவையே கவனித்தார், நாட்டாமை.

அங்கே இங்கே கிசுகிசுப்பு. மெல்லச் சலசலப்பு.

“ஏய்... அங்க யாரு... ‘கொச கொச’ன்னு பேசிக்கிட்டு?” தாழையா கூட்டத்தைப் பார்த்துப் போட்ட அதட்டலில் பஞ்சாயத்தார் உட்பட மொத்தமாக ‘கப், சிப்.’

தாழையா செருமிக் கொண்டார். மறுபடியும் அதே கணீரென்கிற வெங்கலநாதம். உயர்ந்து நிதானித்த குரல்:

“சாணான்னா. ‘சாண் நார்’னு அர்த்தம். பனையேறுறப்ப கரண்டைக்கால்கள்லே வட்டமாய் போட்டுக்குற சாண்நார்னு அர்த்தம். அதுதான் நம்ம பரம்பரைத் தொழில் சின்னம். சம்சாரிக்கு ஏர்க்கலப்பை மாதிரி ஏவாரிக்கு தராசு மாதிரி, நமக்கு சாண்நார். அதை நம்புன பொழைப்பு, நம்ம பொழைப்பு, புரியுதா?”

“ம்...”

“அப்ப என்ன அர்த்தம்? நீ, நா, கூடியிருக்கிற நம்ம சாதி சனம் பூராவும் ஆதியிலே பனையேறிகதா. சாண் நாரை நம்பி வவுத்தையும் தலைமுறையையும் வளர்த்தவுகதான். கருப்பட்டி விக்கப் போனவுக ஏவாரியாயிட்டாக. அப்ப நீயும் நானும் ஏழு தலைமுறைக்கு முன்னாலே பனையேறுவதை நிறுத்திட்டு, சம்சாரித்தனம் செய்ஞ்சோம். இந்த ஏழாயிரம்பண்ணையாளுக போன தலைமுறையிலே பனையேறுவதை நிறுத்திட்டு தீப்பெட்டியாபீஸ் வேலை பாக்குறாக...”

சிங்காரம் முகத்தில் புதிய வெலவெலப்பு பறவையாடுகிற கண்கள். பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலியின் தவிப்பு. தப்பிப்போன செம்மறியாட்டை ஓடிச்சுற்றி வளைத்து கிடையில் சேர்த்துவிட்ட ஆட்டுக்காரனின் வெற்றித் தொனி, தாழையாவின் முகத்தில்.

“இப்பச் சொல்லு. பனையேறினா மட்டம்னு சொல்றது, மல்லாக்கப் படுத்துக்கிட்டு எச்சி துப்புறமாதிரி இல்லே? ஒரே சாதிக்குள்ளேயே ஒசத்தி தாழ்த்தின்னு கத்தி போட்டுப் பெளக்குறது, புத்திசாலித்தனமான காரியமா?”

மடத்துக்கே இப்பத்தான் மூச்சு வந்த மாதிரியிருந்தது. வரப்போகிற தீர்வை முன்னுணர்ந்த மகிழ்ச்சியோடு ஆசுவாசமாய் பேச்சுகளைப் பரிமாறிக் கொண்டது.

தாழையா தீவிரத்தைக் குறைக்காமல், அதே ஸ்தாயியில் பேசினார்;

“சாதி, மதம், எனம் எல்லாத்தையும்விட மனுசங்க தான் முக்கியம். மனுசத்தன்மையான மனுசங்க சேர்ந்து கலந்து மானத்தோட வாழ்றதுதா முக்கியம். காட்லே வெடிக்குற பருத்தி.... சட்டையா மாறணும்னாலேயே... எல்லாச் சாதி மனுசங்க ஒழைப்பும் தேவைப்படுது. மனுசங்களை சாதி சாதியா பிரிச்சுப் பேதப்படுத்திட்டா... சட்டை துணியில்லாம் மானங்கெட்டுப் போய்த்தான் திரியணும், நாம. மனுசங்களை சாதியா பிரிக்குறதே கூறுகெட்ட வேலை. நீ என்னடான்னா... ஒரே சாதிக்குள்ளே மேலே— கீழேன்னு பிரிச்சுப் பேசி காரியத்தையே கெடுக்குறீயே... என்ன ஞாயம்?”

ஓங்கி ஒலித்த வாயடியின் சத்த பலத்தில்— சத்திய பலத்தில்— நியாயம் பிழைத்தது. ஊர் முழுக்க அவரை ‘ஜே,ஜே’ என்று வாய் நிறையக் கொண்டாடியது. “வாயடி வாய் வைச்ச வெவகாரம் ஜெயந்தான்” என்று பாராட்டியது.

“வாயடின்னா... வாயடிதான். இவர் வாய்ச்சாமர்த்தியத்துலே தீராத வெவகாரம் ஜெகத்துலேயே கெடையாது.”

நாட்டாமை நல்லையா நாடார் வாயடியை ஒரு பிரமிப்புடன் பார்த்தார். மனசார— வாய் குளிரப் பாராட்டினார்.

“ஏய்... மாப்ளே, ஆயிரந்தான் சொல்லு... ஒன்னை ஜெயிக்க சுத்துபட்டி பத்து ஊர்லேயும் ஆளு கிடையாது. உன் மனசு சுத்தம். வாயடி பலம் வேற. நீ பேசி தீராத பஞ்சாயத்து, சுப்ரீம் கோர்ட் போனாலும் தீராது.”

ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். சந்தோஷப் பெருமிதத்தில் ததும்பினாலும், தன்னடக்கமாய் சிரித்தார் தாழையா. “எங் கையிலே என்ன இருக்கு? எல்லாம் நீங்க குடுக்குற தைர்யந்தான்.”

சிங்காரம் அவர் கையைப் பிடித்தான்.

“அப்ப மச்சான்... நா கல்யாண காரியத்தைப் பாக்கட்டா....?”

“செய் மாப்ளே, நல்லாச் செய். இதுக ஜேஜேன்னு பேரும் புகழுமா வாழும் மாப்ளே...”

ஏழாயிரம்பண்ணைக்காரரில் ஒரு பெரியவர் தாழையா கையைப் பற்றினார். உணர்ச்சி தழும்ப ஈர நெகிழ்வோடு அழுத்தினார்.

“நீரு... ரொம்பப் பெரீய மனசுக்காரரு. மலை போல மறிச்சு நின்ன வெவகாரத்தை பன்னீரா மாத்திட்டீரு... நீரு இந்த வெவகாரத்தை தீர்த்துவைச்சதுகூட பெருசா படலை எனக்கு.”

“ம்.”

“சாணாருக்கு ஒரு வெளக்கம் குடுத்தீரே... அதானய்யா வைரம் மாதிரி, எங்க மனசுலே வெளிச்சமா நிக்குது. பனையேறின்னு எங்களை எளப்பமா பேசறப்ப, பதில் சொல்லத் தெரியாம... கோபத்துலே ‘திண்டுக்கு முண்டா’ பேசுவோம். கரட்டுக்காட்டுக்கு மொரட்டு மம்பட்டியா பேசுவோம். நீரு சொல்லித்தான் எங்களுக்கு முழு வெவரமே தெரியுது.”

“அப்படியா! அதான்... அதுக்கு நெசமான வெளக்கம்...”

அப்போது—

மடத்துக்கு ஓட்டமாய் ஓடிவந்தான் ஒருவன். ஓடி வந்த வரத்தில் மூச்சிரைத்தது. மொத்தக் கூட்டமே திக்கென்று நெஞ்சு பதைத்தது. அவன் ஓடிவந்த வேகத்தில் அபசகுனம் தெரிந்தது.

“சிங்கார நாடாரு மகா... மருந்தைக் குடிச்சுட்டா...”

மொத்தக் கூட்டமும் ‘மொலோ’ரென்று கலைந்தது.

நாட்டாமை பதறிப்போனார். “எப்ப?”

“இப்பத்தான். இன்னிக்கு பூராவும் முகம் வாடிப் போயிருந்தாளாம். பூச்சி மருந்தை எடுத்துக் குடிச்சாளாம். குடிக்கும்போது பாத்துட்டாக. தட்டிவிட்டுட்டாக. பாதி மருந்தை குடிச்சிட்டாளாம். வாழைத்தண்டுச் சாறை குடுக்காக...”

“அதெல்லாம் சரிப்படாது. டக்கரை எடுத்துட்டுப் போங்க. தூக்கிப் போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரி கொண்டு போங்க. சீக்கிரம் சீக்கிரம்.”

தாழையா ஆட்களை விரட்டினார். மடம் ‘வெறீச்’ சென்றிருந்தது.

ஓர் இளம் பெண்ணின் தற்கொலை முயற்சியில் ஊரே திடுக்கிட்டுவிட்டது. ‘மரணம் நிகழ்ந்துவிடுமோ’ என்ற பயத்திலும், அதிர்விலும் ஜனங்கள்.

டக்கர் புறப்பட்ட சத்தம். பெண்களின் அனுதாபப் புலம்பல்கள். அதிர்வு நிறைந்த அங்கலாய்ப்புகள்.

இப்போது மடத்தில்—

நாட்டாமையும், தாழையாவும், ஏழாயிரம் பண்ணைக்காரர்களும் மட்டும்தான். மாப்பிள்ளைப் பையன் முகமெல்லாம் இருண்டு போயிருந்தான். கண் கலங்கியிருந்தது. உடலில் மெல்லிய நடுக்கம்.

தாழையா தைர்யமாக இருந்தார், நிஜமாகவே. அவருக்குள் ஒருவிதமான நம்பிக்கை. ஆறுதல் சொன்னார்.

“தம்பி, பயப்படாதே. புள்ளைக்கு ஒன்னும் ஆகாது. ஆஸ்பத்திரி கொண்டு போய்ட்டாக. உசுருக்கு மோசமில்லே. உங்க கல்யாணம் குறிச்ச தேதியிலே நடந்தே தீரும்.”

“அப்படியா?”

“ஆமா... பொண்ணுக்கு ஒன்னை ரொம்பப் புடிச்சுப் போச்சு. கல்யாணம் நடக்குற சந்தோஷத்துலே இருந்துருப்பா. இந்தப் பஞ்சாயத்து, வெவகாரம்னு வந்தவுடனே... கல்யாணம் நின்னுபோகுமோ...ங்குற பயத்துலேதான் மருந்தைக் குடிச்சிருக்கா.”

“ம்.”

“ஒனக்கும் அவா மேலே ரொம்பப் பிரியம். அதான் கண் கலங்குதே. இந்த அன்பும் ஒத்துமையும்தான் உங்களை காலம் காலமா சீரும் சிறப்புமா வாழ வைக்கப் போகுது.”

அவர் சொன்னது பொய்யில்லை.

அவள் உடல் ஒரு வாரத்தில் குணமாயிற்று, ஐயாயிர ரூபாய் செலவில்.

கல்யாணம் கோலாகலமாய் நடந்தது. தாழையாவின் வாய்ச் சாமர்த்தியமும், அறிவுத் திறமையும், பஞ்சாயத்துப் பேசுகிற நேர்த்தியும் ஏழாயிரம்பண்ணை வட்டாரமெல்லாம் புகழாகப் பரவியது.

கல்யாணத்துக்கு வந்திருந்த தெற்கத்தி நாடார்களெல்லாம் வந்து வந்து தாழையா கையைப் பிடித்துப் பாராட்டினர்.

அவர்களுக்குத் தெரியுமா? இதே பஞ்சாயத்தில் தாழையாவும் குற்றவாளியாக நிற்கப் போகிறார் என்பதுவும், கொடிய தண்டனைக்கு ஆளாகப் போகிறார் என்கிற அவலமும் காலத்தால் நிகழ்த்தப்படப் போகிறது என்பதைக் கண்டார்களா... அவர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/014&oldid=1818138" இலிருந்து மீள்விக்கப்பட்டது