ஊர்மண்/015
அகலக் கேரியலில் குறுக்காக ஒரு பலகை, போல்ட் போட்டு முறுக்கி, அதன்மேல் வெற்றுச் சாக்குகளை முறையாக மடித்து, நூல் கயிற்றால் கட்டியிருந்தான், கார்மேகம். பஞ்சுப் பிசுக்குகள் ஒட்டியிருக்கிற சாக்குகள். கேரியலில் சாக்குகள் கட்டியிருப்பதே ஓர் அழகு. லட்சணம். பிசிறில்லாத ஒழுங்கின் கச்சிதம்.
சைக்கிளின் முக்கோணத்திற்குள் அதன் வடிவத்திலேயே தைக்கப்பட்டிருக்கிற சாக்குப் பை. அதற்குள் கைத்தராசு. ஹாண்டில் பாரில் சுழற்றிப் போட்டிருக்கிற பையில் படிக்கற்கள்.
கார்மேகம் கைலி, பனியனுக்கு மேல் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். எல்லாவற்றிலும் ஒரு துப்புரவு. சுத்தம். கண்ணாடியைப் பார்த்து தலை சீவிக்கொண்டான். எண்ணெய் வழிந்த முகத்தை துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான். முகப் பவுடரில் தொட்டு நெற்றியில் திருநீறாக அணிந்தான். ‘ம்... எல்லாம் ரைட்’ என்கிற திருப்தி உணர்வு.
“அடேய்... நா வேலைக்குப் போவணும்பா...”
அம்மா தயாராக இருந்தாள், “நீ போம்மா...”“நீ எப்ப ஏவாரத்துக்குப் போற?”
“இந்தா... கெளம்பிட்டேம்மா. நீ போ. நான் வீட்டுச் சாவியை கூரை வல்லடையிலே (எரவாரம்) வைச்சிருதேன்.”
“சரிப்பா. போய்ட்டு பத்திரமா வா.”
“ம்.”
அம்மா போய்விட்டாள். ஒரு முழ டர்க்கித்துண்டு எடுத்து சட்டைக் காலருக்குள் திணித்துக் கொண்டான். உள் வீட்டுக்குள் டிரங்க் பெட்டியைத் திறந்து ரூபாயை எடுத்தான். வீட்டைப் பூட்டினான்.
முற்றத்தில் சைக்கிள் இருந்தது. காலை வெயிலில் சைக்கிளின் பச்சைசீட் பளீரிட்டது. சைக்கிளை எடுக்கும் முன்பு, சகுனம் பார்க்கிற எண்ணத்தில் நிமிர்ந்தான். ஓர் இளம்பெண் இடுப்பில் நிறைகுடத்துடன் வந்தாள். அவனுக்குள் மகிழ்ச்சி.
அந்த இளம் பெண்ணை சற்று கூர்ந்து பார்த்தான். லேசுமாசாக நனைந்த மாராப்பு. அவனுக்குள் வாலிபச் சில்மிஷமான நினைப்பு. விசிலடிக்கிற மனசு. மோகச் சலம்பல்.
அலையும் மனசை இழுத்துப் பிடிக்கிற காரியார்த்தம்.
சைக்கிளை எடுத்துவிட்டான்.
தெருவில் சைக்கிள் விரைந்தது. பிரீவீலின் இரைச்சல் அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. ‘இன்றைக்குப் போகிற நேரம் நல்லாயிருக்கும். பருத்தி ஏவாரம் நல்லாச் சாயும். நிறைய கிடைக்கும். லாபமும்தான்.’
அவனுக்குள் விரிகிற சிறகுகளோடு கனவுகள்.லாரி லாரியாக லோடு ஏற்றியனுப்புகிற வியாபாரியாக வளரணும். மஞ்சள் பையில் ரூபாய்க் கட்டுகளோடு பருத்தி மருகைகளில் உட்கார்ந்து, சம்சாரிகளிடம் பட்டுவாடா பண்ணணும். ஊரே பார்த்து பிரமிக்கிற பணக்காரனாகணும். ஒரு பெரீய காரை வீடு கட்டணும். பெரிய பெரிய பணக்காரங்க எல்லாம் தாம்பாலத்துலே பொண்ணை வைச்சுக் கெஞ்சணும்...
ரெக்கை ஒடிந்து விழுகிற கனவுப் பறவை.
பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு நுரை கக்கச் செத்துக் கிடந்த கனியம்மாள், செத்துக் கிடந்த அலங்கோலம். கடைசி கணங்களின் திமிறல்களில் உயிர்த் துடிப்பான அலங்கோலம். தெறித்துவிடுவதைப் போல இருந்த கண்களில், வாழ்வின் தாகம் உறைந்திருந்த பயங்கரம்.
ஏன் செத்தாள்? எதற்காக மாய்த்துக் கொண்டாள்? என்ன காரணம்? என்ன காரணம்? ஊரே மர்மத்தில் திகைத்தது. கனியம்மாவின் அம்மாவுக்கும் தெரியவில்லை.
“அடிப்பாதகத்தி... தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுட்டீயே... என்ன கொடுமைக்கு இப்படிச் செய்ஞ்சே? என்னத்துக்கடீ... மாய்ச்சுக்கிட்டே?” என்று அவள் தலையில் அடித்துக்கொண்டு அழுத அழுகை. அதன் ஓங்காரச் சத்தம். ஓயாச் சோகம்.
ஒரு நிமிசத்தில் சாம்பலாகிப் போனாள், கனியம்மாள். அவள் வயிற்றில் மூன்று மாசச் சீவன் இருந்த ரகசியம், எரித்த நெருப்புக்கு மட்டுமே தெரியும்.
நெருப்புக்குத் தெரிந்த ரகசியம் கார்மேகத்திற்கும் தெரியும்.
கார்மேகம் வியாபாரம் முடிந்து வீடு வர ஏழு மணிக்கும் மேலாகிவிடும். அப்புறம்தான் ஓடைக்குப் போவான். இருட்டுக்குப் பயப்படமாட்டான். எந்தக் கிணற்றுக்குள்ளும் இறங்கிக் குளிப்பான், பிசாசாக.
தாயும் மகளும் கூலிக்காரிகளாக வாழ்ந்தவர்கள். கனியம்மாவும், அம்மாவும். குடிசை தவிர வேறு சொத்து இல்லை. மூக்குத்தி தவிர வேறு பொட்டுத் தங்கம் கிடையாது. கல்யாணத்துக்கு வழியேயில்லை என்கிற கசப்பான—பயங்கர—நிஜம். ஆகாய அந்தரத்தில் அற்றலைகிற கொடித் துளிராக கனியம்மா. பற்றிப் படர ஒரு பற்றுக்கோடு கிட்டாதா என்று ஏங்கித் தவித்து காற்றில் அலைகிற கொடி.
வறுமையிலிருந்து மேடேறி வருகிற கார்மேகம். இவன் ‘தலையெழுத்து’ வியாபாரம் செய்யத் துவங்கி, கையில் சில்லறை புழங்குகிற குடும்பமாக, கார்மேகக் குடும்பம். வளர்கிற ஆர்வப் பாய்ச்சலில் உழைக்கிற கார்மேகம்.
நம்பிக்கையுடன் தொடர்ந்த சந்திப்புகள். ஊரின் விளிம்புப் புஞ்சைகளுக்குள் நடந்த குசுகுசுப் பேச்சுகள். கிளுகிளுப்பான உரசல்கள். இளமையின் ஆர்ப்பரிப்பு. தேகத் தாகம். கணக்குகளை மறந்த களியாட்டம்.
தவறிப்போன மாதவிலக்கை உணரவே இவளுக்கு ரெண்டு மாசமாயிற்று. “என்ன செய்ய?” என்று கண்கலங்கினாள்.
“நா என்ன செய்ய முடியும்” என்று கை விரித்துவிட்ட கார்மேகம். அவள் ரெண்டு மூணு நாளாக மருகி மருகிக் கெஞ்சினாள்.
இவன் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டான். “கல்யாணத்தைப் பத்தி இப்ப நெனைக்கவே முடியாது. பெரீய்ய ஏவாரியா ஆனப் பெறகுதா அதை நா நெனைக்க முடியும்.”“அப்ப ஏங்கதி?”
“அதுக்கு நா என்ன செய்ய முடியும்?”
கெஞ்சலில் பலனில்லை. கண்ணீருக்குக் கரைகிறவனில்லை கார்மேகம். வெளியே தெரிந்தால் கேவலம் இவளுக்குத்தான். அவன் கேவலத்துக்கு அஞ்சுகிறவனல்ல. லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கிற காரியக்காரன். சுய முன்னேற்றத்தில் மட்டுமே கண்ணாக இருக்கிற கல்நெஞ்சுக்காரன். காசுதான் வாழ்க்கை என்ற கணக்கில் இறுகிப் போனவன்.
கனியம்மாவுக்கு வேறு வழி தெரியவில்லை, உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர.
கார்மேகத்தின் மனசுக்குள் கிலியான நினைவுகள். அவள் திரேக ஸ்பரிசம். தொடும்போது குளிர்ச்சியாகவும், விலகும்போது உஷ்ணமாகவும் அவள் திரேகம். கனிந்த உஷ்ணம். குழைந்த கொதிப்பு. நெகிழ்ந்த தகிப்பு. பரவசத்தில் நனைந்து சுடுகிற திரேகக் குழைவு.
அவள் செத்துக் கிடந்த பயங்கரம்.
அவனுள் மின்னலாய்ப் பாய்கிற பயக்குளிர்ச்சி. சைக்கிள் கனமாகிப் போன உணர்வு. கேரியலில் கனியம்மா உட்கார்ந்திருப்பது போன்ற பிரமை. அவளது கிசுகிசுப்பான சிரிப்புச் சத்தம், காதோரத்தில் உரசுகிற அசுரத்திகில்.
திக்கென்கிற பயம். திரும்பிப் பார்த்தான். கேரியலில் சாக்கு மடிப்பு மட்டுமே.
இந்தா பாருங்க... இது ஒங்களுக்கே நல்லதுல்லே... நா மானஸ்தி. மானத்தை உதுத்துட்டு, உசுர் வைச்சு இருக்கமாட்டேன். பாத்துக்கங்க.கண்ணீரில் உடைந்து கரைந்த கனியம்மாவின் குரல். இவனுக்குள் முள்முள்ளாகக் குத்துகிற வலி. பாவச்சுமையின் அழுத்தம்.
எல்லாவற்றையும் கூட்டிச் சேர்த்து பெருமூச்சாக விட்டான். சீட்டை விட்டு எழுந்து நின்று மிதித்தான். சாட்டை வீசிய காளைமாடாக புதுவேகமெடுத்த சைக்கிள். அதன் இரைச்சல். தராசுத் தட்டுகளும் சங்கிலிகளும் உரசிக் கொள்கிற சத்தம்.
தொம்பக்குளம் போய் இறங்கினான். தெருத்தெருவாகச் சுற்றிக் கத்தினான். “பருத்தி இருக்கா. பருத்தீ.”
தொம்பக்குளம் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவான். எல்லோரும் நல்ல பழக்கம். சில்லறை வியாபாரியாக இருந்தாலும் துட்டு விஷயத்தில் நாணயமானவன் என்ற பெயர், இவனுக்கு.
டீக்கடையில் நிறுத்தினான். ஒரு முழத்துண்டால் வேர்வையை துடைத்துக் கொண்டான்.
தினத்தந்தி பேப்பர் கிடந்தது. ‘ஒரு டீ போடுங்க’ என்று சொல்லிவிட்டு நின்ற நிலையில் பேப்பரை விரித்தான். பருத்தி மார்க்கெட்டை முதலில் பார்த்தான்.
பெஞ்சில் ஒரு நாயக்கர். வயதானவர். அறுபது வயசிருக்கும். கதர் வேட்டியும் கதர்த் துண்டுமாக இருந்தார்.
“என்னப்பா. கார்மேகம், பருத்தி விழுதா?”
“ஒன்னும் சாயமாட்டேங்குதே ஐயா. இன்னைக்கு வெறுஞ்சுத்தா சுத்திக்கிட்டிருக்கேன்.”
“சில்லறைப் பருத்திதா வாங்குதீயா?”
“ஆமாய்யா...”
“அம்பாரமா பருத்தி இருக்கு, வாங்குறீயா?”“அம்புட்டுக்கு கையிலே ‘ஐவேசு’ இல்லியே.”
“வித்துட்டு வந்து குடு.”
“அப்படி நம்பிச் செய்ஞ்சா, நா வாங்குறேன்.”
“சில்லறை ஏவாரியா எத்தனை நாளைக்கு அலைவே? நீயும் பெரியாளா ஆகணும்லே?”
“ஆசை இருந்தா மட்டும் போதுமாய்யா? உங்களை மாதிரி பெரியாளுக சப்போர்ட் வேணும்லே?”
“நம்ம பருத்தியை வேணும்னா பாரு. நா நம்புதேன்.”
“அப்பச் சரிய்யா.”
விலை திகைந்துவிட்டது. இவனுக்குள் பரவசம். ரெக்கை முளைத்த மாதிரி ஆகாயத்தில் பறந்தான். ராஜபாளையும் பஞ்சுமில் போனான். தாட்டுக் கட்டு கொண்டு வந்தான். ஊர்த் தராசில் எடை. அன்றைக்கே மாட்டு வண்டியில் பாரமேற்றி சரக்கு ராஜபாளையம் போயிற்று. விற்று முதலாக்கி, நாயக்கரிடம் மொத்தமாகப் பணத்தைக் கட்டினான்.
அவன் கையில் ஏழாயிரம் மிச்சம். லம்ப்பாகக் கிடைத்த லாபம். அவன் தலை கால் புரியாமல் தத்தளித்தான்.
நாட்டாமை நல்லையா ஞாபகம் வந்தது.
“அடேய்... ஒரு உப்பு மூடை எடுக்கணும். ஏதாச்சும் கையிலே ரூபாயிருந்தா, கைமாத்தா கொடேன்.”
“ஐயய்யோ... ஏங்கிட்டே ஏது பணம்? நானே திண்டாடிக்கிட்டிருக்கேன்.”
இப்படிப்பட்ட பெரியாட்களின் தயவு தேவை. நல்லது. எப்போதாவது பயன்படும்.அவருக்கு ரெண்டு மூடை யூரியா உப்பு எடுத்துக்கொண்டு போய் சைக்கிளில் சேர்த்தான்.
நல்லையா நாடார் திகைத்துத் தடுமாறிப் போனார்.
“என்னடா இது?”
“நாலு நாளைக்கு முன்னாடி ரூவா கேட்டீகளே...?”
“ஆமா. எள்ளுன்னு கேட்டேன்— எண்ணெயா வந்து நிக்குறீயே. வீட்டு வாசல்லே உப்புமூட்டைகளைக் கொண்ணாந்து போட்டுட்டீயே.”
“கேட்டீக. இல்லேன்னுட்டேன். மனசு சங்கடமா இருந்துச்சு. ஒரு நல்ல ஏவாரம் கிடைச்சது. சரி, கொண்ணாந்து போட்டுருவம்னு வாங்கிட்டே வந்துட்டேன்.”
“ரொம்ப நல்லதாய்ப் போச்சு. ஒனக்கு பத்து நாள்லே பணம் தர்றேன்.”
“பதறாமத் தாங்க. அவசரமில்லே.”
நல்லையா அந்த உப்பில் கரைந்து போய்விட்டார். கார்மேகத்தைப் பற்றியே நினைத்தார்.
தகப்பனில்லாத பயல். படிக்க வழியில்லாம பாதியிலே நின்னவன். கூலி வேலை பார்த்து, விறகு வெட்டிப் பிழைத்தவன்.
கஞ்சிக்கு வழியற்று கஷ்டப்பட்டவன். நல்ல பயல்தான். திறமையானவன்தான். உருண்டு புரண்டு கரையேறி விட்டான். கையை ஊன்றி, காலை ஊன்றி, கரணம் பாய்ந்துவிட்டான். கெட்டிக்காரப் பயல்தான்.
இனிமேல் ‘டா’ போட்டுப் பேசக்கூடாது. அது மரியாதையில்லே.
கார்மேகம் பற்றி அவருள் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள்.கார்மேகம் இந்த உப்புமூடையே தூண்டில் புழுவாகத்தான் போட்டான். மீன் சிக்கிவிட்டது. அவனது குறிக்கோளே வேறு. ரொம்ப அடாவடித்தனம். தாறுமாறான குறுக்கு வழி.
வரப் போகிற பஞ்சாயத்துத் தேர்தலில் பிரசிடெண்ட்டுக்கு நிற்கணும். பணம் செலவழிக்கத் தயாராக இருக்கணும். சாதி ஆதரவு வேணும். அதற்கு நாட்டாமை பக்கபலமாயிருக்கணும்.
தலைவர் தேர்தலில் ஜெயித்துவிட்டால், ஏணியில் கால் வைத்துவிட்ட மாதிரி. மடமடவென்று ஏறிவிடலாம். உச்சிக்குப் போய்விடலாம். ஊரே முயன்றாலும் எட்டிப்பிடிக்க முடியாத உச்சிக்குப் போய்விடலாம்.
ஆனால், இதில் ஒரே ஒரு சிக்கல்.
இந்த ஊரில் தலைவர் தேர்தலில் போன தடவை நாடார் ஒருவர் நின்றார். தேவர்கள், நாயக்கர்கள் ஒத்துழைத்தனர் ஓர் ஒப்பந்த அடிப்படையில்.
அதாவது அடுத்த தலைவர் தேர்தலில் ‘நாடார்கள், தேவர் ஒருவருக்கு ஆதரவு தர வேண்டும்’ என்ற ஒப்பந்தம்.
அந்த ஒப்பந்தத்தை மீறினால்தான், கார்மேகம் போட்டியிட முடியும். மீறுவதற்கு இருக்கிற ஒரேயொரு பலவீனமான நியாயம்... கடந்த தேர்தல் முடிந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது என்பதுதான்.
ஐந்தாண்டுகளில் தேர்தல் வந்திருந்தால் அந்த ஒப்பந்தம் செல்லும். பதினாறு வருடங்கள் ஆகிவிட்டதால் அந்த ஒப்பந்தம் ரொம்பப் பழசாகிவிட்டது என்று முரட்டு நியாயம் பேசலாம்.
அப்படி முரட்டு நியாயம் பேச நல்லையா நாடார் வேண்டும். அப்போதுதான் இவன் திட்டங்கள் நடை முறையாக முடியும்.இப்படிச் செய்தால்...
தேவர்கள் ஆத்திரப்படுவார்களே... படட்டும்!
ஊர் ரெண்டு படுமே... படட்டும்!
சாதிவெறியும் சண்டையுமாய் ஊர் அமளிதுமளியாகுமே... ஆகட்டுமே!
எது எக்கேடு கெட்டால் என்ன...!
இவன் நிலை உயரவேண்டும். அது ரொம்ப முக்கியம்.
டா போடாமல் நாகரிகமாக மதித்துப் பேசுகிற நல்லையா நாடாரின் உள்மனசைப் புரிந்து கொண்டான். அவரைக் கைக்குள் போடுகிற முயற்சியில் இறங்கினான்.
அவருடன் ரொம்ப ஒழுக்கமாக—பவ்யமாக—பணத்தாராளமாக—நடந்துகொண்டான்.