உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/016

விக்கிமூலம் இலிருந்து

16


ல்யாணம் ஒன்றுக்குப் போக வேண்டும். தாழையா ரொம்பப் பரபரத்தார். காலையில் 6–40க்குப் பஸ். ஆற்றுப்பாலத்தில் போய் ஏற வேண்டும். ஒரு கிலோமீட்டருக்கும் மேலிருக்கும். ஆறேகாலுக்காவது வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டும்.

இவருக்கு இது பெரிய இச்சிலாத்தி. சடங்கு, கிரகப்பிரவேசம், காதுகுத்து, கல்யாணம் என்று மாசத்துக்கு பத்துக்கும் மேல் பத்திரிகைகள் வந்துவிடும்.

“கட்டாயம் வந்துரணும். மொதநாளே உங்க முகத்தைப் பார்க்கணும். வராம இருந்துராதீக” என்று மருகி மருகி வற்புறுத்தல்கள் வேறு. உறவுக்காரர்கள் மட்டும் என்றில்லை. எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும்தான். இவருக்கோ தரகுத் தொழில். எல்லோருடைய பழக்கவழக்கமும் தேவை. தொழில் அபிவிருத்திக்கே இந்த உறவுகள் ரொம்ப அவசியம். ஆக,எதையும் தள்ளமுடியாது. போகாமலிருக்க முடியாது.

எல்லா ‘நல்லது’களுக்கும் போவதென்றால் முதுமை ஒத்துழைக்க மறுக்கிறது. பெரும் தொல்லைகளாக— வேண்டாச் சுமைகளாக— மனசுக்குத் தோன்றுகிறது. ‘ச்சீ’, ‘த்தூ’வென்று சள்ளைப்படுகிறது.

அதிலும் பஞ்சாயத்துகள்— ஊர் வழக்குகள் இவற்றில் தலையிட்டு வாயடி பலத்தில் வெற்றிக்கொடி நாட்டிய புகழ் வேறு, இவரைப் பெரிய பிரமுகர்கள் வரிசையில் சேர்த்துவிடுகிறது.

“உங்களை மாதிரிப்பட்ட பெரிய மனுஷர்கள் வந்து கால் வைச்சா, எங்க வீட்டு விசேஷத்துக்குத் தனீ மரியாதை” என்கிற மாதிரியான குளிர்ச்சியான நச்சரிப்புகள். மறுத்துப் பேச வழியில்லை.

“ச்சேய்! மத்தவங்க நல்லது பொல்லதுகளுக்குப் போறதுலேயே பாதி ஆயுசு பறிபோயிரும் போலிருக்கே” என்று உள்ளுக்குள் குமைகிற எரிச்சல்.

ஆனால், இந்தக் கல்யாணத்திற்குக் கட்டாயம் போய்த்தீர வேண்டும். மூத்த மகனுக்குப் பெண் எடுத்த வழியில் சொந்தக்காரர்கள் வீட்டுக் கல்யாணம். யாரைப் பகைத்தாலும் ‘சம்பந்த’காரர்களைப் பகைக்க முடியாது. அதிலும், முதல் சம்பந்தகாரர்.

பால் சொசைட்டிக்குப் பால் பீய்ச்சி ஊற்றப் போகிற எருமை மாடுகளின் சத்தத்திலேயே முழிப்பு தட்டிவிட்டது, அவருக்கு. மணி நாலரை இருக்கும். அப்புறம் உறக்கம் கண்ணில் ஒட்டவில்லை. நாலாவிதமான திசைகளில் நினைவுகளும் நேரமும் நழுவிக் கொண்டிருந்தது.

கண்ணை மூடிக்கொண்டே சும்மாவே படுத்துக்கொண்டிருந்தார். சத்த வடிவில் செவிகளுக்குள் பதிவாகிற வெளிஉலகம்.

முற்றம் தெளிக்கிற சத்தம். மாடுகளை தண்ணீர் குடிக்க விடுகிற சத்தம். தீப்பெட்டியாபீஸ் வேன்களின் பேயிரைச்சல். அடங்கிய பேச்சும், அமுங்கிய சிரிப்புகளுமாக நடந்து செல்கிற சிறுமிகளின் சத்தம்.

அஞ்சு மணிக்கு மேல் பொற்கொடியை உசுப்பிவிட்டார்.

“வெந்நி போட்டு வையும்மா” என்று சொல்லிவிட்டு டீக்கடைப் பக்கம் போனார்.

வேலை ஜோலியில்லாத காலம். சம்சாரிகள், கூலி ஜனங்கள் எல்லாரும் டீக்கடையே தஞ்சம் என்று அடைந்து கிடந்தனர். அடைக்கோழி மாதிரி பலதுகளையும் மொணமொணத்துக் கொண்டு சோம்பிப் போய், சுவரில் சாய்ந்து கிடந்தனர்.

டீக்கடை இப்போதெல்லாம் ஊர்க்காரர்களுக்குக் கள்ளுக்கடை மாதிரியாகிவிட்டது. கிடையாகக் கிடந்து, மாறி மாறி டீ குடித்தனர். டீ இல்லாமல் இருக்க முடியவில்லை. கிறுக்குப் பிடித்த மாதிரியாகி விடுகிறது, டீ இல்லாவிட்டால்.

வீட்டில் வெல்லம் தேயிலைப் போட்டு கொதிக்க வைத்துப் பாலூற்றிக் குடித்தாலும், குடித்த மாதிரியே தோன்றாது. கடைட்டீக்கு மனசும் நாக்கும் அப்படிப் பழகிப் போய்விட்டது.

டீ. பீடி. டீ. பீடி... மாறி மாறி இதுதான். வயிறே மந்தித்துப் போய்விடும். நிறையப் பேருக்கு இப்போது காலைக் கஞ்சியே தொண்டையில் இறங்குவதில்லை.

தாழையா கடைக்குள் நுழைந்தவுடன், பேசிக்கொண்டிருந்த பேச்சு மூச்சிழந்து அறுந்தது. எல்லோரும் இவரை மையப்புள்ளியாக்கித் திரும்பினர்.

“என்ன சின்னையா, பருத்தி மார்க்கெட்டு எப்படியிருக்கு?”

“கம்புக்கு ஏவாரி வருவாகளா மாமா?”

“மக்காச் சோளம் விலை விழுந்து கெடக்குதே. எதுவும் உசும்புமா?”

“பெல்லாரி வெங்காயத்தைச் சீந்துவாரில்லையா, மச்சான்?”

எல்லோருக்கும் பதில் சொல்லி அடைத்தார். டீ வரவும் வாங்கிக் குடித்துவிட்டுப் புறப்பட்டார். ஓடைக்குப் போய்விட்டு வந்தார். நடையில் ஒரு பரபரப்பு. குறிநோக்கிப் பாய்கிற வேகம்.

வெந்நீர் ரெடியாகியிருந்தது. பொற்கொடி முற்றம் தெளித்து, கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

குளித்து துவட்டிக் கொண்டார். உள்ளங்கையை கத்திவசமாக வைத்து ஈரத்தலையை ‘சட், சட்’டென்று உதறிக் கொண்டார். பலகை மேலிருந்து டிரங்க் பெட்டியை இறக்கித் திறந்தார். சலவை மணம் கம்ம்மென்று மணந்தது. தேய்த்த மடிப்பும், பளீர் வெளுப்பும் மனசுக்குச் சுகமாக இருந்தது, பாலீயஸ்டர் வேட்டி. சந்தனக்கலரில் முழுக்கைச் சட்டை.

இதுபோன வருஷம் சுரண்டை வியாபாரி பாசத்துடன் வாங்கித் தந்த வேட்டி சட்டை. சன்மானம்.

கேரளாவுக்கு மூன்று லாரி லோடு மிளகாய் வற்றல் அனுப்பியாக வேண்டும். வந்து கிடைத்த ஆர்டர். ஆர்டர் மேல் சரக்கு அனுப்பி நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அதையும் உரிய நாட்களுக்குள் அனுப்பியாகணும். சுரண்டை வியாபாரி தத்தளித்தார்.

மஞ்சள் பை நிறைய பணக்கட்டுகளோடு வந்தார். நாலைந்து ஊர்களில் நாயாய் அலைந்தார். முட்டி மோதிப்பார்த்தார். முட்டிய முட்டலில் மண்டை காய்ந்ததுதான் மிச்சம். காரியம் ஆகிறமாதிரித் தெரியவில்லை.

நம்பிக்கைகள் சரிந்து, ஆயாசப்பட்டு, வேறு வழியில்லாமல் வந்து சேர்ந்தார், வாயடியிடம். நெருக்கடி நிலவரத்தைச் சொல்லிப் புலம்பினார்.

“நீருதான் தஞ்சம்னு வந்துட்டேன். ஒம்மாலேதான் முடியும்னு நம்பிக்கையோட வந்துருக்கேன்.”

“வந்துட்டீர்லே? வத்தல் லோடு பண்ணிட்டுப் போரும்.”

“அதுக்குத்தான் வாயடி வேணும்ங்குறது”.

சொன்ன மாதிரியே செய்து காட்டினார். மூன்று ஊர்களில் நாலைந்து அம்பாரங்களைக் குறிவைத்தார். வேறு சில சில்லறை ஐட்டங்கள். நடப்பு விலையைவிட ஐம்பது, நூறு விலையை உயர்த்தி வைத்தார். சரக்கு மளமளவென்று விழுந்தது. லாரிகளில் தாட்டுக் கட்டு வந்தது. ஒரே நாளில் எடை. பணப் பட்டுவாடா. சடசடவென்று ரெக்கை கட்டிப் பறந்தது, காரியம்.

மூன்றாவது நாள் மிளகாய் வற்றல் பாரத்தோடு லாரிகள் செங்கோட்டையைத் தாண்டின. சுரண்டை வியாபாரிக்கு சொல்லி மாளாத சந்தோஷம். வழக்கமான தரகுத் தொகையோடு சேர்த்து, இருநூறு மேற்கொண்டு போட்டுத் தந்தார்.

விற்று முதல் சிட்டையுடன் திரும்பி வந்தார். மனிதர் தத்தளிப்போடு வந்தார். யோகம் அடித்த மாதிரி, நல்ல லாபம். ஒரே கொந்தளிப்பு.

வாயடி கையைப் பிடித்து மருகினார். நல்ல பாலீயஸ்டர் வேட்டியும், இந்தச் சந்தனக்கலர் சட்டையும் எடுத்துத் தந்தார்.

இவர் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று சும்மாவாச்சும் ‘பிகு’ பண்ணினார். அவர் விடவேயில்லை. வாங்கித் திணித்துவிட்டுப் போய்விட்டார். பாசத்திணிப்பு.

சட்டை மடிப்புகளை விரிக்கிறபோது மனசுக்குள் விரிகிற சுரண்டை வியாபாரியின் முகம். சிட்டையைக் காட்டி அவர் பட்ட சந்தோஷம். சொன்ன பாராட்டு வார்த்தைகள். நெகிழ்ந்த மனசின் குழைந்த வார்த்தைகள். தாழையா முகத்தில் ஒரு மென்முறுவலின் ஒளி. மீசை சற்று நிமிர்ந்து, அந்த இளஞ்சிரிப்பில் அந்தச் சின்னமுகமே விரிந்து அழகு பெற்றது.

‘ராசா’வையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த செம்பகம், ‘என்ன சிரிப்பு’ என்று மென்குரலில் விசாரித்தாள். அவர் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிற ஆர்வம், அவளுக்கு.

“ஒன்னுமில்லே.”

“அடச் சொல்லுங்களேன்.”

“சும்மாதான்.”

“கிறுக்கா?”

“என்ன?”

“கிறுக்குப் பிடிச்ச ஆளுகதா ஒத்தையிலே சிரிப்பாக.”

நிமிர்ந்து அவளைப் பார்த்தார். கட்டிலில் சற்றே சாய்ந்த நிலையில் தலையைத் தூக்கி சுவரில் சரிந்து உட்கார்ந்திருந்த அவள் முகத்தில் ஒரு மலர்ந்த பூவின் குளிர்ந்த வெளிச்சம்.

அவர் மனசுக்குள் குறும்பு செய்ய ஆசைப்படுகிற குறுகுறுப்பு.

“பழசை நெனைச்சுக்கிட்டேன்.”

“பழசுன்னா?”

“சந்தனக் கலர்ச் சட்டையைப் பார்த்தவுடனே நம்ம கல்யாணம் யாவுகத்துக்கு வந்துச்சு. அதான் சிரிச்சேன்.”

“பொய்யி.”

“என்ன பொய்யி?”

“அதை நெனைச்சு நாந்தான் சிரிக்கணும். நீங்க சிரிக்க முடியாது. வெக்கப்படத்தான் முடியும்.”

“ம்.”

“என்னைப் பாத்துப் பயந்துபோய் கல்யாணமே வேண்டாம்னு ஓட்டம் பிடிச்ச ஆளாச்சே, நீங்க. ஊர்லே உள்ள ஆளுக தேடிக் கண்டுபிடிச்சு, கோழிக்குஞ்சை அமுக்குன மாதிரி அமுக்கிக் கொண்ணாந்து மணவறையிலே உக்கார வைச்சாக. கல்யாணத்தப்ப நீங்க பண்ணுன கூத்து, கொஞ்சமா?”

ஒரு சின்னப்பிள்ளை மாதிரியான குதூகலத்தோடும், பெரிய மனுசிக்குரிய அங்கலாய்ப்போடும் சொல்லி அவள் சிரிக்க, அவருக்குள் நிஜமாகவே பூத்த வெட்க உணர்ச்சி. கூச்ச உணர்வு. வாலிப கால அறியாமையை எண்ணித் தர்மசங்கடமாய் எழுகிற சுயபரிகாச உணர்ச்சி.

கூச்சச் சிரிப்போடு முகத்தைத் திருப்பிக் கொள்கிற அவரைப் பார்த்து பெரும் சிரிப்பாக சிரிக்க முயன்று, இருமலில் வந்து மாட்டிக் கொண்டாள்.

பொழுது ‘பல, பல’வென்று விடிந்துவிட்டது. வைகறை மேக நிழலாக ஒரு வெளிச்சம். வெயிலுக்கு முந்தைய சாம்பல் நிற வெளிச்சம்.

அந்நேரம், வாசலில் மனித அரவம். சட்டைக்கையை மடித்துவிட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தார். வாசல் கொள்ளாமல் நெடிதுயர்ந்த தோற்றத்தில் சிந்தாமணி.

“வாப்பா... வா... உக்காரு.”

“ஆட்டும் மாமா... அத்தை, ஒடம்பு எப்படி இருக்கு? சீராக இருக்கா?”

“ஏதோ இருக்கு தம்பி. தொரத்தலும் மருந்தும் தொயந்து வந்துக்கிட்டேயிருக்கு.”

“என்ன சிந்தாமணி, பட்டாளத்துலேயிருந்து ஏதோ லம்ப்பா பணம் வருதுன்னீயே... வந்துருச்சா?”

“வந்துருச்சு மாமா... பேங்க்லே போட்டுருக்கேன்.”

“வீடு கீடு கட்டுறதா உத்தேசம் இருக்கா?”

“கட்டணும் மாமா... கொஞ்சம் பொறுத்துச் செய்யணும்.”

இடது கைச்சட்டையை மடித்துக்கொண்டே சிந்தாமணியைப் பார்த்தார். ஓங்கு தாங்கான உடம்பு. அளவெடுத்துச் செய்த சிற்பம்போல கச்சிதமான திரேக அமைப்பு. கறுத்து விரிந்த முகத்தில், ஒரு பாலீஷ் கீற்றுப்போல மீசை. பார்க்க ஆள் ரொம்ப லட்சணம். கம்பீரம்.

‘பட்டாளத்து ரொட்டியிலேயும், கறியிலேயும் பயல் நல்லா கொழுத்துருக்கான்.’ என்று மனசுக்குள் ஒரு லயிப்போடு ஓடுகிற நினைவு.

“மாமா... எங்கேயோ பெறப்புடறது மாதிரித் தோணுதே.”

“ஆமா. ஒரு கல்யாணத்துக்குப் போகணும்.”

“ஆத்துப் பாலத்து வண்டிக்கா?”

“ஆமா.”

“நா வேணும்ன. சைக்கிள்லே கொண்ணாந்து வுடட்டுமா மாமா?”

“என்னத்துக்கப்பா ஒனக்கு வீண் சிரமம்?”

“இதுலே என்ன சிரமம் மாமா? சும்மாதானே இருக்கேன்.”

“அப்பச் சரி. அதுவும் நல்லதுதான். பொடி நடையா போனாலும் அரைமணி நேரமாகும். சைக்கிள்னா... ‘சள்’ளுன்னு போயிரலாம்.”

நிகோடின் கறுமை படிந்த சிந்தாமணியின் உதட்டு விளிம்புகளில் சிறு மின்னலாய் ஒரு புன்னகை.

“ஏம்ப்பா... இனிமேலாச்சும் ஒரு கல்யாணம் காட்சியை முடிக்கிற வழியைப் பாரு. உங்க அம்மாவும் ஒத்தையிலே கெடந்து ரொம்பச் சீரழிஞ்சிட்டா.”

“ஆட்டும் மாமா.”

“எங்கக்காவை நெனைச்சா மனசுக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. சின்ன வயசுலேயே அமங்கலமாயிட்டா. ஒன்னை வளர்த்தெடுக்குறதுக்காக அரும்பாடு பட்டா. வாய்க்கு ருசியா ஒருநாக்கூட அனுபவிச்சிருக்கமாட்டா. அப்ப்...படித் தும்பப்பட்டா. நீ வேற ரெண்டு வருஷம் காணாமப் போய், அவளைத் துடிக்க வைச்சுட்டே. அவா ஆயுசு பூராவும் தும்பந்தான். துயரந்தான். வெறும் பொழைப்பு. சூன்யத்துலேயே எரிஞ்சு சாம்பலாயிட்டா”

சிந்தாமணி வெறுமனே தலைகவிழ்ந்தான். மாமாவின் சொற்களில் கசிகிற அம்மாவின் சோகத்தில், உள்ளூர உடைந்து நொறுங்கினான். மனம் முழுக்க ஒரு படபடப்பு. பரிதவிப்பு. ஒரு மனத்திணறல். கண்ணோரங்களில் நீரின் முள் உறுத்தல். ஓவென்று கதறியழ வேண்டும் போலிருந்தது.

அம்மாவின் மொத்த வாழ்க்கையே சூன்யமும் துன்பமுமாய் கழிந்து கரைந்து போயிருக்கிற அவலத்தை, சட்டென்று உணர்ந்து தவித்தான். கற்றையாக நெஞ்சுக்குள் வந்து தாக்குகிற அவலம்.

அம்மாவின் சோகம் அவனே அறிந்ததுதான். அடுத்தவர் மூலமாக அதுவே உணர்த்தப்படுகிறபோது—

அந்தக் கணத்தில்—

அம்மாவின் மீது அவன் கொண்டிருந்த பாசஉணர்வு, பல மடங்குகளாக அதிகரித்து, ஒரு பிரவாகமாக சீறிச் சினந்து, அவனையும் உள்ளிழுத்து சுழற்றி விழுங்குவதைப் போல...

அவனது கண்ணோரங்களில் மனத்துளிகள்.

“நீ வாழப்போற சந்தோஷமும், நீ பெத்துக் குடுக்கப் போற பேரன் பேத்தியுந்தான்... எங்கக்கா காணப் போற வாழ்க்கை.”

மாமாவை நிமிர்ந்து பார்த்தான். அவனையே செதுக்கிய சிற்பியாக— தாய் குறித்த இவனின் கடமைகளை உணர்த்திய ஆசானாக...

அந்தச் சின்ன உருவம், அவனுள் பிரம்மாண்டமாகிறது.

அம்மா மீது அவர் வைத்திருக்கிற சகோதரவாஞ்சை அசலானது. ஈர மனசுக்குரிய குணம். அந்த வாஞ்சையின் அசல் தன்மைதான், அவரை அப்படிப் பிரம்மாண்டமாக்குகிறது.

கனிந்த மனசின் உள் உலகத்தில் மூழ்கிக் கிடந்த தாழையா, நிஜ உலகின் லௌகீக வாழ்வுக்கு கரையேறி வருகிற முயற்சியாக மெல்லச் செருகிக் கொண்டார். தழைந்த குரலின் மிருதுத் தன்மையை—நெகிழ்வை—கடந்துவர முயன்றார்.

“சரியப்பா. எல்லாம் கிடக்கட்டும். அடுத்த என்ன செய்யுறாக உத்தேசம்? ஏதாச்சம் வேலை ஜோலிக்கு எழுதிப் போட்டிருக்கீயா?”

அப்பவும் அவரது குரலில் நெகிழ்ந்த மனசின் குழைவு. ஒருவித உணர்ச்சிக் கரகரப்பு.

கண்ணுக்குப் புலப்படாத உணர்வுச் சலனங்களின் நுட்ப இயக்கம் முழுசையும், மனசால் உள்வாங்கிக் கொண்ட சிந்தாமணிக்குள், பெரும் பிரளயம். மனப்பிசைவு. அடிவயிற்றின் உட்பகுதியை யாரோ பற்றியழுத்தி வதைப்பது போன்ற ஒரு வலி. மார்புக் கூட்டுக்குள் வெற்றிடமாகிப் போன மாதிரியோர் வேதனை.

பொங்கிப் பீறிட்டு வருகிற அழுகையை அடக்குவதற்கு ரொம்பச் சிரமப்பட்டான். இவன் சின்ன வயசில் பார்த்த அம்மா. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மகனுக்காக பாடுபட்ட அம்மா. துணிமணி எடுக்க முடியாமல் தவித்து அழுத அம்மா.

முகம் முழுவதையும் உள்ளங்கைகளால் அழுந்தத் துடைத்து எடுக்கிற சில கணங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான்.

எத்தனை சிரமப்பட்டாலும் குரலின் தழுதழுப்பை மறைக்க முடியவில்லை. தொண்டைக்குள் பிசிறடிக்கிற சங்கடம்.

“சிமிண்டுப் பேக்டரியிலே டிப்பர் டிரைவருக்கு அப்ளை பண்ணியிருக்கேன். பி.ஆர்.சி.யிலேயும் எழுதிப் போட்டிருக்கேன். மிலிட்டரிக் கோட்டாவுலே கெடைக்கலாம்னு ஒரு நம்பிக்கை. பாக்கலாம், மாமா.”

“அப்பச் சரி. நேரமாகுது. பெறப்படுவமா?”

“சரி மாமா. சைக்கிளை எடுத்துட்டு வாரேன்.”

புறப்பட்டான். பொற்கொடியிடமும் செம்பகத்திடமும் சொல்லிக்கொண்டே வெளியேறிய தாழையா, வழக்கம் போல குலதெய்வம் தாழையடி அய்யனாரை மானசீகமாக நினைத்துக் கொண்டார்.

போன அரைமணி நேரத்திற்கெல்லாம்—

வீட்டு வாசலில் சைக்கிள் வந்து நிற்கிற சத்தம். உயிருக்குள் கலந்து பரிச்சயமான காலடிச் சத்தம். செம்பகம் மெல்லத் தடுமாறி எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

பார்த்தால் ‘ராசா’ உள்ளுக்குள் நறுக்கிட்டது. என்னவோ ஏதோவென்று மெல்லிய பதற்றம். உள்பதைப்பு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயற்கையான கேலியாகக் கேட்டாள்.

“என்ன இது, ‘போன மச்சான் திரும்பி வந்தாரு. பூமணத்தோட’ங்குற மாதிரி வந்து நிக்கீகளே. கல்யாணத்துக்குப் போவலியா?”

“கல்யாணமேயில்லியாம்.”

“இதென்ன புதுக்குண்டைத் தூக்கிப் போடுதீக.”

“ஆமா. ஆத்துப்பால வண்டி வந்துச்சு. கல்யாணத்துக்குப் போயிருந்தவுக எல்லாம் அந்தப் பஸ்ஸிலேயே திரும்பிட்டாக. கல்யாணமே நின்னுபோச்சாம்...”

“அதான் கேக்கேன். எதுக்கு நின்னு போச்சாம்?”

“மாப்பிள்ளைப்பயல் எங்கயோ ஓடிப் போய்ட்டானாம்.”

அதிர்ச்சியான இந்தச் செய்திக்குச் சம்பந்தமில்லாமல், செம்பகம் குப்பென்று சிரித்தாள். ஒட்டிக்கிடந்த கன்னச் சதையில்கூட ஒரு மின்னலான ஒளிவெட்டு. உலர்ந்த உதட்டில் ஈரமலர்ச்சி. குழிக்குள் கிடந்த கண்களுக்குள் எட்டிப் பார்க்கும் குறும்பான ஏளனச் சிரிப்பு.

அதன் உள்ளர்த்தம் தாழையாவுக்குப் புரியாமலில்லை. இருந்தாலும் ‘சும்மாவாச்சும்’ கேட்டார்.

“என்ன...சிரிப்பு அள்ளிக்கிட்டு வருது ? எதுக்குச் சிரிக்கே?”

“மாப்பிள்ளைப் பையன் உங்ககூடச் சேர்ந்தவன் போலிருக்கு. குடையைப் பார்த்து வெருள்ற காளை மாடு மாதிரி... கல்யாணத்தைக் கண்டு பதறிப்போய் ஓடியிருக்கான்.”

கோபம் பொத்துக்கொண்டு வரவில்லை, அவருக்கு. கூச்சமான குறுஞ்சிரிப்புதான் வந்தது.

“போ...கழுதே, நீ இதையே சொல்லிக்கிட்டு...” என்று சிணுங்கல் சிரிப்பாக சிரித்துவிட்டு அசடு வழிகிற முகத்தை மறைக்க உள்ளே போனார்.

அவருக்குள் அவர். வாலிபமான தாழையா. கல்யாண நாள் நெருங்க நெருங்க பதறிப் பதைத்த இளவட்டத் தாழையா.

பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத அந்தரங்கப் பதற்றம். உள்மனசை முள்முள்ளாகக் குத்தி ரணப்படுத்திய ஊமைப் பயம்.

பயத்தின் நடுக்கத்திலேயே உறக்கங்களையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு, குற்ற உணர்வு கொன்று வதைக்க அரைப் பைத்தியமாக உழன்ற நாட்கள். அந்த முள் நாட்கள்.

முட்புதர் இருட்டுகளாக வந்து மோதி மூழ்கடிக்கிற அந்த நாட்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/016&oldid=1818141" இலிருந்து மீள்விக்கப்பட்டது