உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/017

விக்கிமூலம் இலிருந்து

17


மலை இறைத்துக் கொண்டிருந்தார் சங்கரலிங்க நாடார். தார்ப்பாய்ச்சி கட்டியிருந்தார். தலையில் வட்டக்கட்டாக தலைப்பாகை. மாடுகள் முன்னுக்கும் பின்னுக்குமாகப் போக, கூனையிலிருந்து தண்ணீர் ‘பொது பொது’வென்று வாய்க்காலில் கொட்டியது. கமலைக் குழியில் மாடுகளின் தடத்தில் புழுதி பறந்தது. புழுதியை அடக்க அவ்வப்போது வாய்க்காலிலிருந்து தண்ணீர் வாரியிறைத்தார், சங்கரலிங்கம்.

லேசுப்பட்ட சம்சாரியில்லை இவர். ஊரே மதித்துப் போற்றுகிற உழைப்பாளி. முன்மாதிரி விவசாயி.

அப்போதெல்லாம் ஊர் முழுக்க இறவைத் தோட்டங்களில் புகையிலைப் பயிர்தான். அகல அகல இலைக– ளோடு இடுப்புயரத்துக்கு வளரும். பார்க்க ஏகலட்சணமாக இருக்கும்.

ஆனால் ரொம்பக் கவனமாக கவனிக்க வேண்டும். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு கவனித்து, பருவம் தப்பாமல் பக்குவம் செய்ய வேண்டும். பருவம் பிசகினால்... படு நாசம்.

அப்போது... வெள்ளைக்காரன் ஆட்சி. சென்னை மாகாணத்தில் மட்டும் ராஜாஜி ஆட்சி. போதைப் பொருளான புகையிலை மீது எதிர்ப்பு. கள்ளுக்கடை எதிர்ப்பு மாதிரியே, புகையிலை எதிர்ப்பும். திகிடுமுகிடாக வரியைப் போட்டுத் தள்ளினார்கள்.

புகையிலையைப் பயிரிட்ட விவசாயிகள், வரிச் சுமையில் திணறினர். மொத்த விளைச்சலும் வரிக்கே காணாது. அம்புட்டு வரி.

புகையிலை, பயிரிட முடியாத பயிராகிவிட்டது. சரி... அதற்கு மாற்று என்ன? வேறு எதைப் பயிரிட? வழி தெரியாமல் மறித்து நின்ற கேள்வி. விவசாயிகள் தாயைப் பறிகொடுத்த கோழிக் குஞ்சுகளாக ‘கியா...கியா’ என்று திகைப்போடு கத்தினர்.

சங்கரன்கோவில் கமிஷன் கடை ராவுத்தருக்கும், சங்கரலிங்கத்துக்கும் நல்ல பழக்கவழக்கம். ராவுத்தர் வீட்டு ‘சுன்னத்’ கல்யாணத்துக்கு பெரிய வளர்ப்புக் கிடாவை பரிசளிப்பார், சங்கரலிங்கம்.

இவர் வீட்டு விசேஷத்திற்கு மைதீன் ராவுத்தர் கார் போட்டு வருவார். ஊரே திரண்டு வந்து காரை வேடிக்கை பார்த்தது. நூறு இருநூறு என்று மொய் செய்வார். இந்து— முஸ்லீம் வேற்றுமையில்லாமல் உறவு.

‘ரம்ஜானு’க்கு இவர் போவார். தீபாவளி, பங்குனிப் பொங்கலுக்கு மைதீன் வருவார். தாயாய் பிள்ளையாய் உறவு.

அப்படிப்பட்ட அந்த உறவில், கமிஷன் கடையில் உட்கார்ந்து புகையிலைக்கு வந்திருக்கிற பேரிடி பற்றிச் சொல்லிப் புலம்பினார். ‘இறவைப் புஞ்சைகளில் மாற்று வெள்ளாமை என்ன செய்ய’ என்ற குழப்பத்தையும் சொல்லி மருகினார்.

மைதீன் ராவுத்தர்தான் சங்கரலிங்கத்திடம் சொன்னார்.

“ஏன் சித்தப்பா, உங்க தோட்டத்துலே மொளகாச் செடியை நட்டிப் பாருங்களேன்...”

“எப்படி மகனே, எங்க மண்ணுக்கு இது சரிப்படாதே.”

“அட போட்டுத்தான் பாருங்களேன். ‘வாய்ச்சால் நமக்கு, வாய்க்காட்டா புள்ளையாருக்கு’ன்னு போடுங்க சித்தப்பா.”

“சரி மகனே, நீ கெடுத்த கெடுதலா இருந்தாலும் சரி, காட்டுன வழியாயிருந்தாலும் சரி, போட்டுப் பார்ப்போம்.”

“நானே வாரேன். நாத்தாங்கால் போடுற வழிமுறை, நிலம் பக்குவம் பண்ற முறை, நட்டுற பாணி எல்லாம் சொல்லித் தாரேன். அப்பப்ப வந்து கவனிச்சுக்கிடுதேன்.”

“வழியில்லாத திகைப்பு. இந்தப் பாதையிலேயும் போய்த்தான் பாப்பமே.”

“சித்தப்பா, புதர்க்காட்லே மொதல் தடத்தை தைர்யமா எடுத்து வையுங்க. அப்புறம் சில கால்கள் வரும். ஒத்தை யடிப் பாதையாயிரும். ரோடாகிப் போக ரொம்ப நாளாது...”

ராவுத்தர் வாக்கு பொய்க்கவில்லை. சங்கரலிங்கம் நட்டிய மிளகாய்ச் செடியில் நல்ல விளைச்சல். ராவுத்தர் கமிஷன் கடையில் நல்ல விலை.

இன்றைக்கு ஊர் மட்டுமல்ல. வட்டாரமே மிளகாய்ச் செடி மயமாயிற்று. சங்கரலிங்கம் புண்ணியத்தில் சுத்துபட்டி பத்து ஊருக்கும் பாதை கிடைத்துவிட்டது.

எல்லா வத்தல்களும் மைதீன்ராவுத்தர் கமிஷன் கடைக்கே போயிற்று. தாயாய் பிள்ளையான உறவு வளர்ந்தது. இந்த வட்டாரக் கிராமங்களில் நடக்கிற மாரியம்மன் திருவிழா, செல்லியம்மன் பொங்கல் போன்ற இந்துத் திருவிழாவுக்கு நன்கொடைகள் தருவது ராவுத்தருக்கு வாடிக்கையாயிற்று.

பங்குனி மாசம். மிளகாய்ச் செடி ஓய்கிற பருவம். தண்ணீர் பாய்கிறது. பின்னாலேயே ரெண்டு பெண்கள், பாய்ந்த பாத்திகளில் பருத்தி விதை ஊன்றி வருகின்றனர். தண்ணீர் பாய்ச்சுகிற தாழையாவுக்கு வயசு பதினாறு பதினேழு இருக்கும். மீசை முளைத்தும் முளைக்காமலுமான பருவம்.

தண்ணீர் பாயப் பாய, பருத்தி விதை நடவு. அந்த ரெண்டு பெண்களும் நடு வயசுக்காரிகள். அருந்ததியர். விதைகளை ஊன்றிக்கொண்டே குனிந்த நிலையில் நிமிர்ந்து பார்த்தால், தாழையாவின் பார்வை ஒரே இடத்தில் நங்கூரமிட்டிருக்கும். தங்கள் மார்புச் சதையையே வெறித்துப் பார்க்கிற தாழையா. காணாததைக் கண்ட அதிசய வெறிப்பு. பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்க்கிறதாக வெறிப்பு.

ராக்குக்கு அவனோடு விளையாடிப் பார்க்கிற குறும்புத்தனமான ஆசை. “யோவ் எளவட்டம். காய் கடிச்சிருக்கிறீரா?”

“என்ன காய்?”

“கொய்யாக்காய்.”

“ம். கடிச்சிருக்கேன்.”

அவனது வெள்ளந்தியான பதிலில் சிரிக்கிற ராக்கு.

“மரத்துலே வைச்சுக் கடிச்சீரா, புடுங்கியா?”

“புடுங்கித்தான்.”

“நாஞ் சொல்றது, புடுங்க முடியாத காயை.”

அவனுக்குப் புரியவில்லை. அடுத்தவள் ‘சிரியோ, சிரி’யென்று சிரிக்கிறாள். இவன் வெகுளித்தனமாகக் கேட்டான்.

“புடுங்க முடியாத கொய்யாக்காய் இருக்கவா செய்யுது?”

“ம். இருக்கு.”

“எங்க?”

“இங்கயே...”

“இங்கயா?”

“ம்... நீரு உத்து உத்துப் பாக்கீறே, அதுதான்.”

இப்போதுதான் அவளது பரிகாசச் சிரிப்புக்கே அர்த்தம் விளங்கியது இவனுக்கு. ரொம்ப வெட்கமாக இருந்தது. அவமானமாக உணர்ந்தான்.

“ச்சீய்... அதுக்கு வேற ஆளைப் பாரு. நா அப்படிப் பட்டவனில்லே.”

“அப்ப காய் கடிக்கலே?”

மௌனம் சாதித்தான், புண்பட்ட மனசோடு.

“ஒமக்கு கல்யாணம் மூய்ச்சி வைச்சா, என்ன செய்வீரு? எப்படிக் கட்டி மேய்ப்பீரு? மேய்க்கத் தெரியாத ஆளாயிருந்தா...‘ஆடு’ கள்ள மேய்ச்சல்லே எறங்கிரும்லே? என்ன செய்வீரு?”

இவனுக்கு அவமானமாக இருந்தது. அப்படியே மண்வெட்டியைப் போட்டுவிட்டு ஓடிவிடலாமா என்றிருந்தது. கோபம் கோபமாக வந்தது. ஒன்றும் பேசவில்லை. விசனப்பட்டவனாக அடுத்த வாய்மடையைக் கொத்தி விலக்கினான். காய்ந்த மிளகாய் இலைச் சருகுகளை சரசரவென்று இழுத்து வருகிற வாய்க்கால் தண்ணீர். காலடி மண்ணைக் கரைக்கிற நீர். பாத்திக்குள் சரசரவென்று, சாரைப் பாம்பாக நுழைந்து பரவுகிற நீர்.

கேலியாகக் கேட்டாலும் ராக்குவின் வார்த்தைகள் அவனுக்குள் நிஜமாகவே முள்ளாகச் சொருகிக் கொண்டன. அவனை வளைத்து ஆக்ரமிக்கிற கேள்விகள். பாம்பாகப் பின்னிக்கொண்டு பயமுறுத்துகிற கேள்விகள்.

நிஜந்தானே? ஒரு பெண்ணை ஆளுமை கொள்ளத் தெரியுமா? அது எப்படி? அந்த வித்தையே தெரியாதே, என்ன செய்ய? வாழ்க்கையின் மிக முக்கியமான உறவு, தாம்பத்யம். உயிர்களைப் படைக்கும் பந்தம். மனித வம்சாவளியின் முடிவில்லா உறவு. அது எப்படி ? எனக்குத் தெரியாதே. என்ன செய்ய?

ராக்குவும் மற்ற பெண்ணும் இவனைப் பார்த்து ஒரே சிரிப்பாணியாகச் சிரித்தார்கள். இவன் பேச்சு கொடுக்க மறுத்தவுடன், அவர்களாகவே பேசிக்கொண்டார்கள். பேச்சு பூராவும் இவனுக்காகத்தான்.

ராக்குதான் ஆரம்பித்தாள்.

“எனக்கு வாய்ச்ச மொதப்புருஷன் கதை தெரியுமா?”

“தெரியாதே...”

“தேனீக்காரன். ஆளு வாட்ட சாட்டமாயிருந்தான். வெள்ளையும் சொள்ளையுமா ஆளு. ஏகத் தடபுடல். கால்லே செருப்பு, கையிலே ரிஸ்ட் வாட்ச்னு ரொம்ப ஜோக்கா இருப்பான். எனக்குப் பிடிச்சுப்போச்சு. எர நூத்தைம்பது ரூவா பரிசப்பணம். கல்யாணம் மூய்ஞ்சது. மனுசன் பகல் பூராவும் ஒரே சில்மிஷம் அங்க தொடுவான். இங்க தொடுவான். குறுஞ்சிரிப்பு சிரிப்பான். கண்ணடிப் பான். நா ரொம்ப மயங்கிப் போய்ட்டேன்.”

“ம். அப்புறம்!”

“ராத்திரியாயிச்சு. வெளியே எல்லார் மத்தியிலேயும் கூச்சமில்லாம சேட்டைக செய்வான். ஒரே ரகளை. தனிச்சுவுட்டாக. பேந்தப் பேந்த முழிச்சான். ஒன்னுந் தெரியலே. கையும் ஓடாம, காலும் ஓடாம பிடிபட்ட மைனாக்குஞ்சு மாதிரி முழிச்சான்.”

“நீயாச்சும் சொல்லித் தர வேண்டியதுதானே?”

“பொம்பளை எப்படி இதைச் சொல்லித் தரமுடியும்? அனுபவப்பட்ட கையான்னு கேட்டா என்ன சொல்ல?”

“அது வேற கூத்து. பெறகு?”

“பெறகென்ன? பேய் முழியா முழிச்ச பய, இருட்டுக்குள்ளே போன குருட்டுப்பய மாதிரி தடபுடன்னு மேலே வுழுந்து புரண்டான். ‘பொசுக்’குன்னு சாய்ஞ்சட்டான். எனக்கு ஆத்திரம்னா ஆத்திரம். பகல் பூரா அவன் போட்ட ஆட்டம். தூண்டிவிட்ட ஆசை. இப்ப சுருண்டு கெடக்குற அலங்கோலம்... காலடியிலே கெடந்த அவன் நெஞ்சுலே ஒரே மிதி. உதைச்ச உதையிலே மல்லாக்கப் போய் வுழுந்தான். பொட்டைக் கழுதை மாதிரி அழுது சிணுங்குனான்.”

“ம்...”

“பத்துநா பொறுத்துப் பாத்தேன். ஒன்னும் ஒப்பேறலை. அவனும் ஏங்கிட்டே மிதி வாங்க முடியாமப் பதறிப் போய்ட்டான். பரிசுப் பணம் எரநூத்தைம்பதுக்கு ஐநூறு ரூவாயை தீர்வையா கட்டிட்டு தாலியை வாங்கிட்டுப் போய்ட்டான்.”

“அப்புறம்... அவன் என்னானான்?”

“தேனியிலே ஒரு கல்யாணம் மூய்ச்சான்; அதுவும் மறுமாசமே ‘தீர்ந்’தாச்சு. அப்புறம் மருந்தைக் குடிச்சுச் செத்துப் போய்ட்டான்.”

“ஐயய்யோ...”

“பெறகு? சொல்லித் தெரிவதில்லைம்பாக, இந்தக் கலையை. கண்டாச்சும் தெரிஞ்சுருக்கணும்லே? ஒன்னுந் தெரியாம ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்கலாமா? அது பாவம்லே...?”

“அதைச் சொல்லு.”

“இவரும் காய் கடிக்கலேங்குறாரு. இவருக்கு வாய்க்கப் போற புண்ணியவதி என்ன பாடு படப்போறாளோ...? எப்படி ஏங்கிச் சாகப்போறாளோ...? வேற யாரையும் கூட்டிக்கிட்டுப் போகப் போறாளோ? யாரு கண்டது? இவரு என்ன கூத்து பண்ணப் போறாரோ.”

கேட்காதவனைப் போல எங்கோ பார்த்தாலும், இவன் காது பூராவும் இவள் கதையில்தான். இவனுக்குள் ரெண்டு காட்சி துல்லியமாக விரிந்தது.

நெஞ்சில் உதை வாங்கி மல்லாக்க விழுந்து அவமானப்பட்ட புதுமாப்பிள்ளை.

நுரை கக்கி செத்துக் கிடந்த ஓர் இளைஞன்.

இவனுக்குள் இந்தக் காட்சிகள், பயங்கர மிரட்டலாக இறங்கிற்று. படர்ந்தது. மனசின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

நெஞ்சில் உதைபட்டு கேவலப் பிண்டமாக விழுகிறவனாக இவன்.

நுரை கக்கி செத்து விறைந்த நிலையில், தாழையா.

ஊன்றிய பருத்தி விதை முளைத்ததோ இல்லையோ... ராக்கு ஊன்றிய விதை, இவனுக்குள் முளைத்தது. விஷ விருட்சமாக எழுந்தது. அவனை அலைக்கழித்தது.

நாட்கள் கடந்தன. தாழையா போக்கே மாறிவிட்டது. இளவட்டங்கள் கூடிக் கூடிப் பேசுகிற குசுகுசு பேச்சுகளில் வேண்டுமென்றே கலந்தான். வேலி மரக்காட்டில் ஜோடி சேர்ந்து பின்னிக் கிடந்ததைப் பார்த்ததாக... பம்ப்ஷெட் ரூம்களில் மாறிப்போன கள்ளஜோடி பின்னிக் கிடந்ததாக... கதை கதையாகச் சொன்னார்கள். ‘கண்டதாக’ச் சொன்னார்கள்.

இவனும் வேலை மெனக்கெட்டு காடுகளில் அலைந்து பார்த்தான். ‘பின்னிக்கிடந்த கோலம்’ இவனுக்கு மட்டும் கண்ணில் தட்டவேயில்லை.

இளவட்டங்களுடன் பேசிய பேச்சுப் பழக்கத்தில் ராக்கு சொன்னது சரியென்றே பட்டது.

குடும்பங்கள் சண்டைகளும் சச்சரவுகளுமாக ‘லோல்’ படுவதற்கும், சரசமும் சந்தோஷமுமாய் பொங்கிப் பூரிப்பதற்கும் ரெண்டுக்குமே மூலகாரணம் மன்மதக் கலைதான். பெண்ணை ஆளுமை கொள்வதில் வெற்றி கண்டு திருப்திப்படுத்திய புருஷனுக்கு காலடிப் புழுவாக மனைவி கிடப்பாள், சகலவிதமான சகிப்புத் தன்மைகளோடு...

திருப்திப்படுத்தாத புருஷனை காலடிப் புழுவாக மிதித்துக் கேவலப்படுத்துவாள்.

இந்தச் சித்திரம்தான் கிடைத்தது. இதுதான் ராக்குவும் சொன்னது. இதெல்லாம் தாழையாவுக்குள் அச்சுறுத்தலை அதிகப்படுத்தியது. அனுதினமும் மிரட்டியது. அவனது தேடல்களை அதிகரித்தது.

தேடிக் கண்டடைகிற விஷயமாகத் தெரியவில்லை. ஏமாற்றமும் மிரட்சியுமே நிரந்தரமாயிற்று.

இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள இளைஞர்கள் தஞ்சமடைவதற்கென்று, கிராமத்தில் ஓரிடம் உண்டு. கிடைகாவல் கிருஷ்ணன்தான், அது.

அவன் மன்மதக் கலையில் ஒரு பல்கலைக்கழகம். அவன் குறிவைத்து, விழாத பெண்ணில்லை. கரைகண்ட ஆள். அவனிடமே தாழையாவும் தஞ்சமடைந்தான்.

வீட்டில் பருத்தியை களவாடுவான். கடையில் போட்டு சேவு, சீனிக்கிழங்கு, கருப்பட்டிப் பலகாரம் என்று நிறைய வாங்கிக்கொண்டு கிடைக்கே போய்விடுவான், தாழையா.

கிட்ணன் போட்ட கதைகள் ஒன்று ரெண்டு கிடையாது. வண்டி வண்டியாகக் கதைகள். எல்லாம் சம்பவங்கள். ஜோடி சேர்ந்த பறவைகள். ஜோடி மாறிய சோரக் கதைகள். கிழவனைச் சுற்றிய இளசுகள். இளசுகளை வேட்டையாடிய கிழடுகள்.

இவனுக்குள் மாய உலகம். விரிந்து விரிந்து மோக மூட்டுகிற கதைகள். நிஜம்போலத் தோன்றுகிற மோகினிகள் உலகம்.

கிட்ணனும் சலிக்க ஆரம்பித்துவிட்டது, தாழையாவுக்கு. அவனும் இன்பக் கதைகள்தான் போட்டான். ஒரு பெண்ணை ஆளுமை கொள்கிற அந்த மாயவித்தையைச் சொல்லித் தரவில்லை.

அப்போதுதான்—

சக்கிலியக்குடிக்கு கூனை தைக்கப் போனார் சங்கரலிங்கம். அவன் கிழிந்து கிடந்த கூனைத் தோலைத் தைத்ததோடு கிழிந்து கிடந்த தாழையா சங்கதியையும் தைத்துவிட்டான்.

“மொதலாளி, உங்க புள்ளையாண்டன் போக்கு சரியில்லே.”

“ஏன்... என்னாச்சு?”

“கெடை காவல் கிட்ணன் கூடவே சுத்துராக.”

“யாரு...? தாழையாவா?”

“ஆமா... மொதலாளி.”

கிடை காவல் கிட்ணன்கூட ஓர் இளவட்டம் சுற்றுகிறான் என்றால் கல்யாண ஆசை வந்துவிட்டது என்பது, கிராமத்துக் கணக்கு.

அர்த்த பாவனையோடு சங்கரலிங்கம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தபோது, அவர் யோசனைக்கு வழிகாட்டுகிற மாதிரி கூனை தைக்கிறவன் சொன்னான்.

“மொதலாளி, ஊரே கையெடுத்துக் கும்புடுற குடும்பம், உங்க குடும்பம். புள்ளையாண்டனாலே ஒரு தலைகுனிவு வராமப் பாத்துக்கங்க. புள்ளை கைமீறிப் போறதுக்குள்ளே, ஒரு கால் கட்டு போட்டு கைக்குள்ளே பிடிச்சு வைச்சுக்கங்க.”

“ம்”

அவரது யோசனை, ஒரு முடிவாகி அதுவும் செயலாகிறபோது தாழையா நிஜமாகவே அதிர்ந்து விட்டான். பருந்தைக் கண்ட நாகமாகப் பம்மிப் பதுங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/017&oldid=1818143" இலிருந்து மீள்விக்கப்பட்டது