உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/018

விக்கிமூலம் இலிருந்து

18


தாழையா ரொம்ப ஒல்லி. சின்ன முகம். சில்லாங்குச்சி (கிட்டிப்புல் குச்சி) மாதிரி உடம்பு. கரிசல் காடுகளில் கரட்டான் மாதிரியே சிறிசாக ஒன்று இருக்கும். அதற்குப் பெயர் சில்லான். அப்படித்தான் இருப்பான் தாழையா.

சங்கரலிங்கம் தாழையாவைக் கூப்பிட்டார்.

“என்ன அய்யா?”

“ஓங்கூட சுப்பையா மகன் வருவான். மாதாங்கோவில் பட்டியிலே முத்யைா நாடார் மகா செம்பகம்தான் பொண்ணு. போய்ப் பாத்துட்டு வந்துரு.”

“யாருக்கு?”

“ம்” என்று ஒரு உறுமல் உறுமினார். அதிலேயே பாதி ஒடுங்கிப் போனான்.

“ஒனக்குத்தாண்டா.”

“எனக்கா...? கல்யாணமா?”

“ஆமா... அதுக்குள்ளே ஐயா... கிட்ணன்கூட ரவுண்டு அடிக்க ஆரம்பிச்சிட்டீகளாம்லே?”

“அதெல்லாமில்லே.”

“எல்லாந் தெரியும்டா. போய்ப் பார்த்துட்டு வா சொன்னதைச் செய். எலும்பை எண்ணிருவேன். படுவா ராஸ்கல்.”

அரண்டு போனான். அதற்குமேல் அரண்டு போனான், செம்பகத்தைப் பார்த்து. ஆள் நல்ல சிவப்பு. ஓங்குதாங்கான உடம்பு. வேலையில் வசக்காத வீட்டுக்கர்ளை மாதிரி, கம்பீரமான லட்சணமாக இருந்தாள். அவள் ஆசைப்பட்டால் இவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள். அப்படித் திடகாத்திரம். அரேபியக் குதிரை மாதிரி நிமிர்ந்த தோற்றம்.

இவனிடம் அபிப்பிராயம் கேட்கவேயில்லை. காரியம் ‘மளமள’வென்று நடந்தது. பூ வைப்பு, நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது.

தாழையா உள்ளுக்குள் நடுங்கினான்.

கல்யாணம் பண்ணி என்ன செய்யப் போகிறான்? எப்படி ஆளுமை கொள்வது? என்ன ஏது என்ற அரிச்சுவடி கூடத் தெரியாத இவன் எப்படிக் குடும்பம் நடத்த?

செம்பகம் நெஞ்சில் உதைத்தால்... இவன் எப்படி எகிறிப் போய் விழுவான் என்கிற கற்பனை, மாறிமாறி உள்ளுக்குள் வந்தது.

இந்தக் கேவலத்தை எப்படி எதிர்கொள்ள? இவனது அறியாமை அவளால் பரிகசிக்கப்படுவதை எப்படித் தாங்க? ‘ப்பூ! நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? நீ கெட்ட கேட்டுக்கு கல்யாணம் ஒரு கேடா?’ என்று கேட்டால் எப்படித் தலைநிமிர?

அவள் முன்னால் இவனை நிறுத்தினால் முதலிரவில் பேந்தப் பேந்த முழிக்கவா?

வரப்போகிற இழிவை எண்ணி எண்ணி மருண்டான்.

இந்தக் கேவலக்கூத்தை யாரிடம் சொல்ல? சொல்ல முடியுமா? சொன்னால் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?

நீந்தத் தெரியாதவனை கிணற்று விளிம்பில் நிறுத்தி தள்ளிவிடப் போவதாகச் சொன்ன மாதிரி, மனசுக்குள் பதற்றமாகக் கதறினான். கிலியும் திகிலுமாக முகம் இருண்டு போய்த் திரிந்தான்.

கையாலாகாதவனாக இருப்பதிலுள்ள இழிவை— இதனால் வரப்போகிற கேவலங்களை நினைத்து நினைத்து மிரண்டான்.

கல்யாணத்திற்குப் பிறகு, கொஞ்ச நாட்கள் கழித்து இவள் ஓடிப்போய் விட்டால்...? இவனது ‘அறியாமை’ ஊரறிந்த விஷயமாக தண்டோரா போடப்பட்டு விட்டால்...? இவன் எப்படி உயிர் வாழ? எப்படி அந்தக் கேவலத்தைத் தாங்க?

நுரைவழிய செத்து விறைத்துக் கிடக்கிற தாழையாவை மனசுக்குள் கண்டு கண்டு நடுங்கினான். இவனது நடுக்கத்தைக் கண்டு தாட்சண்யம் காட்டவில்லை, நாட்கள். அவை தன்போக்கில் நெருங்கி நெருங்கி வந்தன.

அறுக்கப் போகிற ஆடுபோல தவித்தான். இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள? மீண்டு எங்கு போக? அயலூர் போய் அறியாதவன். மிஞ்சி மிஞ்சி இவன் பார்த்த ஊர்கள் சங்கரன் கோவிலும், செவல்பட்டியும் தான். செவல்பட்டிக்கு புகையிலைப் பாரம் விற்கப்போன வண்டியில் போயிருக்கிறான். சங்கரன்கோவிலுக்கு மிளகாய் வற்றல் விற்கப்போன சங்கரலிங்கத்துடன் போயிருக்கிறான்.

நாட்கள் நெருங்கிவிட்டன. வீட்டில் கல்யாணக்களை கட்டிவிட்டது. நெல் குத்தினார்கள். மசால் சாமான்கள் இடித்தார்கள். சொந்தம் பந்தம் வரத் துவங்கிவிட்டது.

இவனுக்குள் நரக வேதனையாக, அச்ச நடுக்கம். நிமிசத்திற்கொரு கற்பனையும் பயபீதியுமாக நகரும் பொழுதுகள். மனசுக்குள் நிரந்தரமான தேள்கடி ரணம்.

வேறு வழியில்லை. கேவல இடி கிணற்றில் தள்ளப்படுவதைவிட அறிமுகமில்லாத மனித மக்களோடு போய் கலந்துகொள்வது பரவாயில்லை.

நள்ளிரவில் புறப்பட்டுவிட்டான்.

அவன் காணாமல் போனதை கல்யாணத்திற்கு முதல் நாள்தான் உணரப்பட்டது. எவ்வளவு ரகசியமாக பொத்திப் பொத்தி வைத்தாலும் விஷயம் எப்படியோ மாதாங் கோவில்பட்டிக்கு ரெக்கையடித்துவிட்டது.

செம்பகம் கேவலம் தாங்காமல், குன்றிப்போனாள். தனது இழிவான தலையெழுத்தை எண்ணி எண்ணி ஊமையழுகையாய் அழுது கசிந்தாள்.

மாப்பிள்ளை காணாமல் போகிறான் என்றால் அதற்கு ஒரே அர்த்தம்தான், சமூகநோக்கில். ‘பெண் பிடிக்கவில்லை’ என்பது ஒன்றுதான்.

வரப்போகிற கணவனால் இப்போதே வெறுக்கப்படுகிறோம் என்பது ஒரு பெண்ணுக்குத் தாங்கக்கூடிய இழிவா? வெறுக்கிறவனோடு ஆயுள் முழுக்க மாரடித்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் கட்டுண்டு நிற்பது, ஒரு பெண்ணுக்கு எத்தனை பயங்கரம்?

யாரிடமும் முகம் கொடுக்காமல் மூலையில் கிடந்து ‘மூசுமூசெ’'ன்று அழுதுகொண்டேயிருந்தாள், செம்பகம். பச்சைத் தண்ணீர்கூட பல்லில் படவில்லை. சோறு தண்ணீர் காணாமல் சுருண்டு கிடந்தாள்.

இன்ன இடம் என்ற குறியில்லாமல் ரெக்கை விரித்துப் புறப்பட்ட தாழையாவுக்கு, ஆகாயமெல்லாம் கனத்த இருட்டாக மருட்டியது.

அவனைக் காணோம் என்றவுடன் மூலை மூலைக்கு ஆட்கள் புறப்பட்டார்கள், தேடி. நாலா மூலைகளுக்கும் நிறைய ஆட்கள். காணாமல் போன கோழியை படப்புகளில்— குப்பைமேடுகளில்— சந்து பொந்துகளில்— கூரை வல்லடைகளில் தேடுவதைப்போல. ஆள் ஆளுக்கு எட்டுத் திசைகளிலும் வலைகளை விரித்தார்கள்.

சங்கரலிங்கம் இத்தனை களேபரத்திலும் இம்மிகூடக் கலங்கவில்லை. கல்யாண வேலைகளை அவர் பாட்டுக்குக் கவனித்தார். எல்லாருக்கும் தைர்யம் சொன்னார். தயங்கித் தயங்கி மயங்கியவர்களையெல்லாம் அதட்டி முடுக்கிவிட்டார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.

முகூர்த்த நேரத்திற்கு சற்று முன்னால்—

கைது செய்யப்பட்டவனாகக் கொண்டு வரப்பட்டான், தாழையா.

கோடை மழையில் நனைந்த கோழிக்குஞ்சாகக் கிடந்து நடுங்கினான்.

கல்யாணம் ‘ஜே ஜே...’ என்று சீரும் சிறப்புமாக நடந்தது.

‘ஏண்டா ஓடுனே’ என்று ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை, சங்கரலிங்கம். வாழ்க்கை அதன் போக்கில் ராட்சஸ வலிமையோடு சுழன்று நகரும். அதன் பற்சக்கரத்தில் சிக்கியவர்களையும், சிக்க மறுத்தவர்களையும் இழுத்துப் பிடித்து நசுக்கி, தன்னைப் போன்ற வடிவத்தில் வார்த்துவிடும் என்ற பலத்த நம்பிக்கையில், பரிபூர்ண நிதானமாக இருந்தார்.

தாழையா எதைக் கண்டு கடந்த ரெண்டு மூன்று வருஷமாக நினைத்து நினைத்து நடுங்கிச் செத்தானோ, அந்த முதலிரவு வந்தது.

ரொம்ப நடுங்கிப்போய், திகிலும் பீதியுமாக எதிர் கொண்டான். இன்னும் சில வினாடிகளில் செம்பகம் வந்துவிடுவாள். அவளுடன் தனித்து விடப்படுவான்.

‘என்ன செய்ய?’ மர்ம இருட்டாக சூழ்ந்து நெருக்குகிறமாயப் பய உணர்வு. எல்லோரும் சொர்க்கமாக நினைக்கிற அற்புதம், தாழையாவுக்கு மட்டும், பயங்கர நெருப்புக் குண்டமாகத் தோன்றி மருட்டுகிறது.

கதவு திறந்து மூடுகிற சத்தம். இவனுக்குள் திக்கென்கிறது. நெஞ்சு தடக் தடக்கென்று அதிர்கிறது. மெல்ல வருகிற செம்பகம். அண்ணாந்து பார்க்கத்தக்க உயரமாக அவள்.

நெஞ்சில் ஓங்கி மிதிக்கப்போகிறவள். முகத்தில் அருவெறுப்புடன் காறித் துப்பப் போகிறவள். ‘ஓடிப் போய்’ கேவலப்படுத்தப் போகிறவள்.

அவனுக்குள் வியர்வை. சட்டையெல்லாம் ‘தொப் தொப்’பென்று நனைந்துவிட்டது. பயத்தில் மருள்கிற கண்கள். வெளுத்துப் போய் அரண்டு போன முகம்.

அவன் அவனாக இல்லை. தன் வசமிழந்த நிலையில் அவன். அவனை மீறிக்கொண்டு ராட்சஸமாக நெருங்குகிற நேரம். கட்டுமீறிய நிலை. தலைக்கு மேல் வெள்ளம். பயந்து பலனில்லை. தப்பிக்க வழியில்லை. மாற்று மார்க்கமில்லை.

அவனை மீறிய அவன். மாய இயக்கத்தின் கையில் சுழன்ற அவன். என்ன செய்கிறோம் என்றுணர முடியாத மனநிலையில் இயக்கம்.

எப்படியோ அந்த நாள் கடந்துவிட்டது. நெஞ்சில் உதை விழவில்லை. செம்பகத்தின் முகத்தில்— அவளது கண்களின் ஆழத்தில்— பயத்தோடு, பார்வையை நிறுத்தினான். அவளிடம் அருவெறுப்பு இல்லை. அசூயையின் சாயல்கூட இல்லை. உள் ஒடுங்கிய வெறுப்போ, கோபத்தின் நிழலோ தென்படவில்லை.

நாணத்தின் சங்கடத்தில் புன்னகைக்கிற அவள். திருப்தியின் பூரிப்பில் குலுங்குகிற காலை ரோஜாவாக அவள். அதிகாலைக் குளியலில் அழகு ரூபமாக சுடர்விடுகிற செம்பக முகம். ஒளி மின்னுகிற கண்களில், மனசு. எதிர்கொண்டு பார்க்காமல் தர்ம சங்கடமாக தவிர்ப்பதில் இவனுக்குள் வேர்பிடிக்கிற நம்பிக்கை. ‘ஆளமுடிந்த ஆண்தான்’ என்கிற தன்னம்பிக்கை.

ஆனால், அவனுக்கு வேறொரு வெட்க உணர்வு. இரு முழங்கால்களிலும் ரத்தம் கோதிப்போன புண். தோல் நைந்து போயிருந்தது. அந்தப் புண்ணே தண்டோரா. இவனது ‘அறியாமை’யை ஊர் முழுக்கச் சொல்லிவிடும்.

ரொம்பப் பதறினான்.

வேட்டியை மடித்துக் கட்டவே பயந்தான். எந்நேரமும் கால்வரை விட்டேயிருந்தான், முழங்கால்களை மறைக்க.

மலையாக மறித்து நின்ற விஷயம், இப்படிப் பன்னீராகிப் போனதில் இவனுக்கு ஏகப் பிரமிப்பு. ‘எதற்காகப் பயந்தோம்’ என்று நினைக்கும்போதே, வெட்கக்கேடாக இருந்தது. ‘ச்சே... இப்படி ஒரு விஷயத்திற்கா, இத்தனை காலமாக நடுங்கிச் செத்தோம்?’

மூன்றாவது பிள்ளை பிறந்த ஆறாவது மாசம். ரெண்டு பிள்ளைகளும் ஏற்கெனவே உறங்கிவிட்டன. பௌர்ணமி நிலா. பட்டுப் போல நிலா. பால் போல வெளிச்சம்.

ஆறு மாச மழலை அழுது சிணுங்கியது. இவன்தான் தோளில் வைத்திருந்தான். அது சிணுங்க ஆரம்பித்தவுடன் நெஞ்சில் போட்டு குலுக்கிக்கொண்டே நடந்தான்.

செம்பகம் குளிக்கிற சத்தம். தண்ணீரின் ‘சளப்’ சத்தம்கூட எழாமல், அமுத்தலான ரகசியமாகக் குளிக்கிற பெண் சாமர்த்தியம்.

குளிப்பதற்கு ஏன் பயப்படுகிறாள்? இவனுக்குப் புரிகிறது.

இந்நேரம் குளிப்பது என்பது ஒரு மொழி. தாம்பத்ய ரகசிய பாஷை. மகரந்தச் சேர்க்கையோடு மலர்ந்து சிலிர்க்கிற ஒரு பூவின் மொழி. தழுவலுக்கும் தத்தளிப்புக்கும் தயார் என்கிற உணர்த்தல்.

தாழையா சிரித்துக் கொண்டான். அவளைத் ‘தொட்டு’ ஏழெட்டு மாசமாகிவிட்டது.

“ஏய்... புள்ளே அழுகுது.”

“என்ன செய்ய?”

“சீக்கிரம் வா, பசிக்கும் போலிருக்கு.”

“இந்தா வந்துட்டேன்.”

வந்துவிட்டாள். சீயக்காயின் நறுமணம். ஈரக்குளிர்வான மேனியின் சுகந்த வாசம். இவனுள் ஒரு திணவு.

வழக்கம்போல பிள்ளையை ‘அமர்த்த’ மறைவு தேடவில்லை. அவனோடு ஏதேதோ பேசிக்கொண்டே அவன் முன்னால்.

பிள்ளை வயிறு நிறைய நிறைய, கண் அயர்ந்துவிட்டது. அலுங்காமல் தூக்கி தொட்டிலில் போட்டாள். சற்றே நெளிந்து புரள்கிற மழலை. தொட்டிலின் ஆட்டத்தில் மறுபடியும் தூங்கிவிட்டது.

“படுக்கலியா?”

“படுக்கணும்.”

“வெளியே பாய்தலைவாணியை எடுத்துட்டுப் போங்க.”

“நீ?”

“உள்ளேதான்.”

அடப்பாதகத்தி! எத்தனை மாய்மாலம்! அழைக்கிற மர்மச் செயல்கள். விரட்டுகிற வார்த்தைகள்.

“நா இன்னிக்கு உள்ளேதா.”

“அதெல்லாம் முடியாது.”

“என்ன முடியாது?”

“முடியாதுன்னா முடியாதுதான்.”

மூர்க்கமூட்டுகிறாள். வெறிகொள்ள வைக்கிறாள். இதுதான் ஊடலா? மூர்க்கமும் வெறியும்தான், அவள் எதிர்பார்ப்பா?

“போய் வெளியே படுங்க.”

“மாட்டேன்.”

“என்ன பேச்சு. இது?”

“செல்லப் பேச்சு.”

அப்புறம் அவளைப் பேச விடவில்லை, அவன். திமிறாமல் மறுக்கிற அவள். காட்டமில்லாத செல்லக் கோபங்கள். ‘ச்சேய்’ என்கிற செல்லச் சிணுங்கல்கள். ஆர்வமான ஒத்துழைப்பு. ஆசையான இணக்கம். பௌர்ணமிக் கடலின் ஆர்ப்பரிப்பாக அவள்.

மூர்க்கமும் வெறியுமாக இவன். காய்ந்த மாடு கம்மங்கொல்லையில் விழுந்த மாதிரியான வேகம். உக்கிரம். ஆரவாரம். உணர்ச்சிப் படையெடுப்புகள்.

எல்லாம் முடிந்து, படைகள் விலகிச் சரிந்த பிறகு—

திளைப்பின் உச்சத்தில் செம்பகம். வேர்வைப் பிசுபிசுப்பான அவன் கன்னத்தில் கடித்து, தோளைப் பிசைந்து ‘ராசா... ராசா...’ என்று மிழற்றி...

களைத்த உடம்பு. வெற்றிப் பெருமிதத்தில் திளைக்கிற அவன். பெருமித எண்ணங்களின் ததும்பல்.

இப்படிப்பட்ட நேரத்தில் பேசுவதேயில்லை, அவர்கள். பின்பும் இதைப் பற்றிப் பேசுவதுமில்லை. பேசுவதை அவள் அனுமதிக்க மாட்டாள்.

இன்றைக்கு ஏனோ.... பேசாமலிருக்க முடியவில்லை அவனால்.

“செம்பு...”

“ம்.”

“ஏய்... செம்பு.”

“என்ன?”

“இப்ப இப்படி இருக்கோமே... நம்ம கல்யாணத்தன்னிக்கு நா எப்படிப் பயந்து கிடந்தேன்... தெரியுமா?”

“தெரியும்.”

“ஆனா... நீ அன்னிக்கும் நீ திருப்தியாகத்தான் இருந்தே...”

“ம். நா என்னத்தைக் கண்டேன்? நீங்க தந்ததுதான் ‘அது’ன்னு நெனைச்சிருந்தேன். அம்புட்டுத்தான் அதுன்னு நெனைச்சுக்கிட்டேன்.”

“ஒனக்கு எப்பவும் வெறுப்பே வரல்லியா? ‘இவன் என்ன ஆம்பளை’ன்னு எப்பவும் எளப்பமா மனசுக்குள்ளே நெனைக்கலியா?”

“எதுக்கு நெனைக்கணும்? நாம் பாத்த ஆம்பளையே நீங்கதான். உங்க கொணம் ரொம்பப் புடிச்சுப் போச்சு. என்னை மதிச்சு நடத்துன உங்க நடப்பு, ரொம்பப் புடிச்சுப் போச்சு. அதுலே... மத்த கொறை எதுவும் பெரிசாத் தெரியலை எனக்கு...”

“நெசம்மாவா?”

“கொறைக இல்லாம ஒலகத்துலே யாரு இருக்காக? உத்துப் பாத்தா... சாமிகிட்டேகூட குத்தம் பாக்கலாம். சகிச்சுப் போறதுதா மனுசத்தன்மை. ஒரு கொறையை இன்னொன்னு விழுந்து நெறையாக்கிரும். அப்படி நெனைச்சாத்தான்... வாழ்க்கை. இல்லேன்னா... நரகந்தான்.”

“ம்.”

“இந்த விஷயத்துலே அறியாம இருக்கிறது. கேவலமில்லே. பெருமைப்படணும். யோக்கியம்ங்குறதுக்காக, ஒழுக்கம்ங்குறதுக்காக பெருமைப்படணும். ராவணனுக்கு இருந்த தேர்ச்சி, ராமனுக்கு எப்படி இருக்கும்? இல்லாம இருக்குறதுதானே... பெருமை?”

செம்பகம்தானா பேசுவது? அவளுக்கா இத்தனை அறிவு?

தாழையா தடுமாறிப் போனான். மூன்றாண்டு காலமாக பயந்து பயந்து வெட்கப்பட்டுப் போயிருந்த அறியாமயையே.... ஓர் அழகு என்கிற செம்பகம். இது... முற்றிலும் புதிய கோணம். புதிய பார்வை.

ராக்குவின் விஷ விருட்சம் ஒரு மாயமாக மறைந்தது.

செம்பகம் வெறும் பெண்ணில்லை. இவனை அளந்து முடித்த ஞானி. இவனது பலவீனத்தையும், அறியாமையையும் தாயின் மனத்தோடு தாங்கி, இவனை வழிநடத்தியிருக்கிற சாரதி. இவனுக்காகவே இவனை நேசித்திருப்பவள். இவனே உலகம், இவனே சகலம் என்று சங்கமித்திருப்பவள். நம்பிக் கிடந்தவள். தாழ்ந்து... சகித்து.... இவனை வார்த்து... உயர்த்தியவள். வாழ்க்கைக்கு தகுதியானவனாக மாற்றியவள். இவனது சிருஷ்டிகர்த்தா, அவள்.

அன்றைக்குத்தான்...

தாழையா செம்பகத்தின் முழுமையை உணர்ந்தான். மண உலகத்தின் உள் நரம்புகளை தொட்டுணர்ந்தான். மன உலகின் ஆளுமையை— அன்பின் முடிவில்லா ஆழத்தை— ஆத்ம சங்கமிப்பின் இறுக்கத்தை உணர்ந்தான்.

செம்பகம் அவனது ஆத்மாவானாள். அவனது உயிர்த்துடிப்புகளிலெல்லாம் செம்பக அதிர்வுகள்; அவனது உள்நரம்புகளில் ஓடுகிற ரத்தமாக அவள்.

அவனது உயிராக...வே, அவள்.

அப்போது...

ஏனோ இப்படி நினைத்தான்.

‘சாகுறப்ப கூட ஒன்னாவே செத்துப் போகணும்...’

அபசகுனமான இந்த நினைப்பில் அதிசயமான பரவசத்தை உணர்ந்தான்...

‘இன்றைக்குத்தான் அவளைக் காதலிக்கத் துவங்கியிருக்கிறான்’ என்பதை அவனே உணர்ந்ததில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/018&oldid=1818144" இலிருந்து மீள்விக்கப்பட்டது