ஊர்மண்/024
தாழையா நாடார் வீட்டுக்குள்ளிருந்து மூன்று பேர் வெள்ளையும் சொள்ளையுமாக படுகோபமாக வெளியேறினர். அவர்கள் முகமெல்லாம் சிடுசிடுப்பு. அனற்பொறிகள்.
“ச்சே! வயசு ஏறுன மாதிரியே, பிடிசாதனையும் ஏறிப்போச்சு. சொன்ன வார்த்தையை மதிக்காரா...? பாரேன்.”
“மதியாத வாசல்லே மிதியாதேன்னு சொலவடை. சாதியை விட்டு தள்ளி வைச்சுக் கேவலப்படுத்திட்டாங்க, நன்றி கெட்ட ஊருசனம். இன்னும் இவுகளை விட்டுட்டு வரமாட்டேன்னு சொன்னா என்னத்தைச் சொல்ல?”
“ராசாப் போல கௌரவமா இருக்கலாம், நம்மகிட்டே. அதை விட்டுட்டு, இந்த நாசமாய் போற பட்டிக்காட்டுலே கெடந்து, ‘சீப்படப்போறேன்’னு பிடிசாதனை பண்ணுனா... நாம என்ன செய்ய?”“சுடுகாட்டு மண்ணுலேகூட எடமில்லேன்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி, சாதிக்காரங்க சொன்ன பெறகும், இங்கேயே கெடக்கப் போறேன்னு அடம் பிடிச்சா, என்ன செய்ய? வாதத்துக்கு வைத்தியம் பாக்கலாம். பிடிவாதத்துக்கு என்ன வைத்தியம் பாக்க...?
“இதெல்லாம் ஒரு ஊரா? காலம்பூரா நல்லது செய்ஞ்ச நல்ல மனுசனை, நடு வீதியிலேயே நிறுத்திக் கேவலப் படுத்துற ஊரு. இந்த ஊரை இன்னும் மதிக்கிறாரே...”
மூன்றுபேரும் அவரது மகன்கள்தான். இதெல்லாம் தூவானம்தான். வீட்டுக்குள் ‘பெருமழை’யாகவே பெய்தார்கள். அய்யாவை கண்டிப்பும் மரியாதையுமாக சத்தம் போட்டனர். ஊரைத் திட்டினர். சாதியைத் திட்டித் தீர்த்தனர். “இந்தச் சனியன் பிடிச்ச ஊரே, வேண்டாம். டவுனுக்கு வந்துருங்க” என்று கெஞ்சிக் கூத்தாடினர்.
தாழையா ஒன்றும் பேசவில்லை. பேச என்ன நியாயம் இருக்கிறது? குற்றம் செய்துவிட்ட சிறுவனைப் போல, உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கிடந்தார். முகம் பேயறைந்த மாதிரி இருண்டு கிடந்தது. கற்றைச் சோகத்தில் கனத்துக்கிடக்கிற கண்கள். தலைகுனிந்தே கிடந்தனர். மகன்களின் குமுறல்கள்... கோபச் சீறல்கள்... ஆத்திரமும் ஆவேசமுமான சாடல்கள்... எல்லாமே இவர்மீது கொண்டிருக்கிற பாசத்தின் வெளிமுகங்கள். ஆழ்ந்த மரியாதையின் அடையாளங்கள்.
“என்னை விட்டுடுங்க... இங்கதான் எம்முடிவு...” என்று ஒரே வாக்கியத்தை மாறி மாறிச் சொன்னார்.
“இந்த ஊர்லே அப்டி என்னங்க இருக்கு?”
“எங்க ஆத்தா அப்பன் உசுர்க அலையுது. எங்க தாத்தா... தாத்தவுக்குத் தாத்தா... எல்லாருடைய வேர்வை வாசம் இந்த ஊருக் காத்துலே அலையுது. தாயா புள்ளையா பாசங்காட்டுன ஏழை ஜனங்க இருக்குது.”
“அவுகதா உங்களைச் சாதியிலேயிருந்து ‘தள்ளி’ வைச்சுட்டாங்களே. சூப்பனகை மாதிரி உங்களை மூக்கறுத்துட்டாங்களே...”
“எல்லாரும் இல்லே... நாடக்கமாரு எல்லாரும் அப்புராணிக. பாடுபடுற சம்சாரிக. சகிப்புத் தன்மையோட பழகுறவுக. தாயா புள்ளையா வாழணும்னு ஆசைப்படுற நல்லவுக.”
“அவங்கதானே உங்களை இக்கதியிலே நிறுத்தியிருக்காக?”
“நல்லையா மாதிரி நாலு பேரு செய்ற அக்குருமம் இது. நாடாக்கமாரு எல்லாரும் இதைச் செய்யலே. ஏதோ ஒரு வெறியிலே நல்லையா பேச்சுக்குத் தலையாட்டியிருக்கலாம். நல்லது கெட்டது பாக்க, ரொம்ப நாளாகாது.”
“சரி... இதெதுக்கு வளவளாப் பேச்சு? நீங்க இப்ப எங்க கூட வாரீகளா... இல்லியா?”
“வரல்லே...”
“இது எங்களுக்குக் கேவலம். ‘மூணு ஆம்பளைப் புள்ளைக இருந்தும், தாய் தகப்பனை நாதியத்துப் போக விட்டுட்டாக’ன்னு... ஊர்லே எங்களுக்கு நாலு பேச்சு. கேவலம்...”
“நானாகத்தான் வரல்லேங்கேன். நீங்க என்னைக் கைவிடலையே... எதுக்கு உங்களைப் பேசணும்? நீங்க ஊரைப் பாத்துப் போங்க.”
அப்பவும் ‘காச், மூச்’சென்று கத்தினார்கள். அதிலும் தலைப்பிள்ளை ‘தங்கு, புங்’கென்று குதித்தான். கோடை– மழை மேகமாகக் குமுறிக் குமைந்தான். ஒன்றும் பாட்சா பலிக்கவில்லை.
ஒரேயடியாக வேர்பிடித்து விட்டவரைப் போல, தாழையா குலுங்காமலிருந்தார். அசையவேயில்லை. வலுவான கட்டை. வைரம் பாய்ந்த மனசு. வாழ்வை அளந்து முடித்துக் கரைகண்ட ஞானத் துணிவு. அசலான மனித நேயம். மனிதர்களின் நல்லுணர்வுகளின் மீது அசையாத நம்பிக்கை. ஆகாயத்தையே தாண்டுகிற மனுசன், இந்தச் சுண்டைக்காய் நல்லையா விரித்த வலைக்குள் கட்டுண்டா கிடப்பான்? அறுத்தெறிய எத்தனை நேரமாகும்? வெளிப்பட்டுவிடமாட்டானா? வெளிச்சத்தை உணரமாட்டானா? வெளிச்சத்தின் அருமையை— தர்மத்தை— உண்மையை உணர எவ்வளவு நாளாகும்? சாதிப் பகைமையின் ஆபத்தை தொட்டுணர்ந்துவிட மாட்டானா? ஒற்றுமையின் வலிமையைப் புரிந்துகொள்ள எத்தனை நிமிசமாகும்?
உறைந்து படிந்த மனித நம்பிக்கை மட்டுமல்ல... தாழையாவின் போர்க்குணம். இறங்கிய களத்திலிருந்து ஓரடி கூட பின் வாங்கிவிடக் கூடாது என்கிற உறுதி. வெற்றியின் உச்சி வரை, முன்னேறியாக வேண்டும் என்கிற தீவிரம் போர்க்குணம்.
அவர்களுக்குத் தொண்டைத் தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். முட்டி மோதி, தோற்றுவிட்ட அயற்சி. அயற்சியின் விளிம்பில் வருகிற எரிச்சல்...
எரிச்சலில் கண்டமேனிக்குத் திட்டிக்கொண்டே, பஸ் ஸ்டாண்டுக்குப் போய்விட்டார்கள்.
அவர்கள் வந்துபோன செய்தியறிந்து, சிந்தாமணி ஓட்டமாக ஓடினான், பஸ் ஸ்டாண்டுக்கு. வந்து அவர்களைப் பார்த்தான்.“மாமா மேலே கோபப்படாதீக... அவரை நா பாத்துக்கிடுதேன்,” என்று தைர்யம் சொன்னான். நல்ல வார்த்தைகள் சொல்லி அவர்களைச் சாந்தப்படுத்த முயன்றான்.
இத்தனை ரகளைக்கும் கவலைப்படாமல்— அலுங்காமல், குலுங்காமல் கல் மாதிரி இருந்த பொற்கொடியின் ஞாபகம்...
கலங்காமலிருந்த தைர்யம்...
எல்லாம் இவன் கொடுக்கிற தைர்யம்தானோ...
சட்டென்று மூத்தவனுக்குள் வந்த குறுக்கு வெட்டான நினைவு.
ரொம்பச் சிடுசிடுத்தான். எரிச்சல் பட்டான்.
“ஏய்... இங்கபாரு, நாளைக்கு ‘ஏதாச்சும்’ ஆச்சுன்னா... எங்களுக்குத் தாக்கல் தரவே கூடாது. கொள்ளிவைக்கக்கூட நா வரமாட்டேன். எல்லாத்தையும் நீயே பாத்துக்கோ...”
என்று கோபம் கோபமாக எகிறினான்.
‘தனக்கில்லாத உரிமையா... இவனுக்கு?’ என்கிற கோபம்.
பஸ் வந்துவிட்டது.
நாலைந்து நாளாக வெளியே வரவேயில்லை, தாழையா. தாங்க முடியாத துக்கம். யாரையும் ஏறிட்டுப் பார்க்க முடியாத தலைகுனிவு. நடுங்குகிற மனசு.
சுப்ரமணி வந்தான். வேல்சாமி வந்தான்.
தேவர் பிரமுகர்கள் சொல்லிவிட்ட தகவலைச் சொன்னார்கள்.“நாடாக்கமார் எங்க மேலே கேஸ் போட ஏதாச்சும் வழி கெடைக்குமா என்று அலைகிறார்கள். நாங்களே தேர்தல்லே தோத்துப் போய் புண்பட்டுப் போயிருக்கோம். இதுக்கு மேலே கம்பெடுத்து கலகம் பண்ண எங்களுக்குத் தோணலை. சாதியை விட்டுத் தள்ளி வைச்சிருக்கிற உங்களை, நாங்க பகிரங்கமா ஆதரிக்க முடியாது. கலகம் பண்றதுன்னு முடிவானா... உங்களை ஆதரிச்சுடலாம். இப்ப முடியாது... ஆனா... உங்க குணத்துக்காக... நாங்க மறைமுக ஆதரவு தருவோம்...”
தாழையா ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார்.
“தப்பு பண்ணாத எனக்கு... கள்ள உறவு வைச்சுக்கணும்னு என்ன அவசியம்?”
வருகிற விஷயம் பூராவும், கசப்பாக இருக்கிறது. வெறுப்பூட்டக் கூடிய விஷயங்கள்.
செம்பகம் அன்றைக்குப் பேசியவள்தான். இந்த நாலைந்து நாட்களாக ஒரு பேச்சு பேசவில்லை. அடிபட்டு விழுந்த பறவையாகிவிட்டாள். ஒடிந்துபோய், குறைக்கோலமாக இருக்கிற ‘ராசா’வைப் பார்க்கப் பார்க்க குலை கொதிக்கிறது.
“அம்மா... கஞ்சி குடிங்கம்மா...”
“ஓர் எழவும் வேண்டாம்.”
பச்சைத் தண்ணீர் பல்லில் படவில்லை. ஒரு மடக்கு தண்ணீர்கூட குடிக்கவில்லை.
உயிர் ஒடுங்கி வருகிறது. அவளது கட்டிலை விட்டு எழாமல்— நகராமல்— இவர். அவளையே பார்த்துக்கொண்டு இவர். அலைபாய்கிற மனசு.அவள் ஓடியாடித் திரிந்த நாட்கள் இவரோடு சங்கமித்துக் குழைந்த அழகு. பதறிப் பதறி பலவீனமாகி தவித்த நாளில் கூட, இவரே முழுத்த ஆம்பளையாகக் கருதி... பரவசப்பட்டு... இவருள் நம்பிக்கையை வளர்த்த அவளது சுபாவம்...
குழந்தை பெற்ற நாட்கள். குழந்தைகளைச் சீராட்டி மகிழ்ந்த அனுபவங்கள். குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, காட்டிலும் வீட்டிலும் பாடுபட்ட அவளது சாமர்த்தியம்...
இவரைக் கொண்டாடி மகிழ்ந்த செம்பகம். சண்டை சத்தம் போடாத செம்பகம். இவர்மீது உயிரையே வைத்திருக்கிற செம்பகம்...
அவருள் சுருள்சுருளாக அந்த நினைவுகள். விதம் விதமான காட்சிகள். கடந்த போன நிஜங்கள் மனசின் வேர் வரை தழுவிக் கரைத்து பண்படுத்திய அனுபவங்கள். பக்குவப்படுத்தி மெருகேற்றிய சம்பவங்கள்.
ஒன்றா... ரெண்டா? கோடி கோடி... அனந்த கோடி...
வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு வகைகளில் வளர்ந்து வந்த ரெண்டு மனசுகள். ஒன்றையொன்று கண்டு மிரள, சேர்த்து வைக்கப்பட்ட பலவந்த நிலைமையில்... கட்டுண்டு நின்ற மனசுகள்.
அந்த மனசுகள் ஒரு மனசானது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! அதைச் சாத்தியமாக்கியது எது?
சகிப்புத்தன்மை... அவளது சகிப்புத்தன்மை... இவனை இவனாகவே ஏற்றுக்கொண்ட அவளது தாய் மனசு. இவனது பலவீனங்களோடு, நற்குணங்களையும் சேர்த்து அரவணைத்துக் கொண்ட சகிப்புத்தன்மை...‘சகிப்புத்தன்மைதானே... மனுசத்தன்மை’ செம்பகம் கூறினாள்.
இதுதான் அவர்களது வாழ்க்கையின் வேதம். பாதை. பட்டறை. சிகரம். வெற்றிமூலம்.
இந்தச் சாதாரண விஷயம், ஏன் இந்த ஊர்ச் சனங்களுக்குத் தெரியமாட்டேன் என்கிறது? சரிவுகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் என்ன காரணம் என்று, ஆற அமர யோசிக்க முடியவில்லையே ஏன்? சரிந்து நொறுங்கிக் குவிந்துகிடக்கிற ஏழை சனங்கள், ஒன்னா சேர்ந்தால்... ஒரு சக்தி பிறக்குமே.. ஒரு தெளிவு கிடைக்குமே.. வாழ்க்கை விடியுமே..
ஏன்... ஒன்று சேர முடியலை? சகிப்புத்தன்மையில்லே. சகிப்புத்தன்மையில்லாம பொழிச் சண்டை... வரப்புச் சண்டை... கோழிகுஞ்சுக்காகக்கூட தெருச் சண்டை... ஒரு குடம் தண்ணீருக்காக கோஷ்டி சண்டை... சாதிச் சண்டை... எல்லாமே சகிப்புதன்மை யில்லாததாலேதான். அடுத்த மனுசனும், அடுத்த சாதிக்காரனும் நம்ம அண்ணன் தம்பிகதான்ங்கிற சகிப்புத்தன்மை வந்துட்டா... விழிப்புணர்ச்சி வந்துரும். ஒற்றுமை வந்துரும். சக்தி தெரிஞ்சுரும். துணிச்சல் வந்துரும்.
அவருக்குள் ஆத்மாவாகக் கரைந்திருக்கிற செம்பகமும்... ஊரும்.
அவருள் அவராக... அவளும் ஊரும்.
கலந்து பின்னிக் குழம்புகிற நினைவுகள்.
அன்றைக்கு—
ஆறாவது நாளிலும் வெளியே தலை காட்டாமல் தாழையா. கட்டிலின் சட்டத்தில் உட்கார்ந்திருந்தார். செம்பகத்தின் வெளுத்த முகம். ஆடாமல் அசையாமல் சலனமற்ற முகம். அவற்றில் பரவுகிற ஒரு வெளிச்சம். தொண்டைக் குழிக்குள் ‘கொரட், கொரட்...’டென்கிற இழுவைச் சத்தம். கண்களின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாகக் கண்ணீர். உதடுகளில் மெல்லிய நடுக்கம். உலர்ந்து வெடிப்பு கண்ட உதடுகள். சுருக்கங்கள் விழுந்து துவண்டு சரிந்து கிடக்கிற கன்னச் சதைகளில் மெல்லிய துடிப்பு.
இவருக்குள் பதறி வருகிறது. அணைந்து வரும் உயிர்ச்சுடர் பற்றிய திகில். அடிவயிற்றைக் கவ்விப் பிடிக்கிற பீதியும் திகிலும்.
அவருக்குள் சுழன்று வந்து பந்தாக அடைத்துக்கொள்கிற மயக்கம். அவரும் எதுவும் குடிக்கவில்லை. அன்ன ஆகாரம் கிடையாது.
படபடப்பாக வருகிற பய உணர்ச்சி.
“செம்பு... செம்பு... ஏய் செம்பு... ஏங்கண்ணு...”
பதற்றத்தில் அவரது துடிப்பு. கலங்கி உடைந்து கரகரக்கிற குரல். கண்ணில் வருகிற நீர்ப்பெருக்கு அழுகையும் கலக்கமுமாக அவர்.
“செம்பு... செம்பு... ஏங்கண்ணு... ஏஞ் செல்லம்...”
அவளது பஞ்சடைந்த கண்களில், மெல்லிய சலனம். திரண்டு வருகிற கண்ணீர்த்துளி. அதன் நடுக்கம். ‘வருந்தாதீக....அழாதீக’ என்று ஆறுதல் மொழி சொல்கிற அந்தக் கண்ணீரின் நடுக்கம்.
பறைவயாடுகிற விழிகள். ஓர் உக்கிரமான சலனம். ஒரு வெறியான தடுமாற்றம். வயிற்றில் படிந்து கிடக்கிற கையில் ஒரு துடிப்பு. அசுரத் துடிப்பு. மொத்த உடம்பே ஒரு குலுங்கு, குலுங்கி அடங்கியது.
செம்பகம் கதை முடிந்துவிட்டது. ‘செத்துப் போனாள்’ என்று உணர்ந்த கணத்திலேயே, இருட்டிக் கொண்டு வந்த கண்கள். கறுப்பாகக் கிடக்கிற செம்பகம். நெஞ்சுக்குள் கத்தியைச் சொருகின மாதிரி ஒரு வலி. அவரும் அவள் மேல் விழுந்துவிட்டார். உயிரில் கலந்த உயிராக.