உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்மண்/025

விக்கிமூலம் இலிருந்து

25


தே காலை நேரம்.

சுப்ரமணி வீட்டில் நிறைய வாலிபர்கள். சுப்ரமணியின் மனைவி சுப்புலட்சுமி அடுப்பில் நெருப்புக்கு விறகைத் திணித்தாள். அடுப்பில் பெரிய அலுமினியச் சட்டி. அதில் வெல்லமும் தேயிலையும் போட்ட ‘காப்பி’ கொதித்துக் கொண்டிருந்தது. ‘ங்ங்கீய்ய்ய்...’ என்கிற இரைச்சல். கொதி நிலைக்கு முந்தைய தண்ணீர். தேயிலையின் சுபாவம் கலையாத நிலை. சூடாகிக் கொண்டிருந்த வெல்லப் பாகாக... நீர்.

கொதிக்கிற போது... தேயிலையின் ஆத்ம சங்கமம். நீர், வெல்லம், தேயிலை எல்லாமே சுயமிழந்து... முழுசாகக் கலந்து... புதிய உருமாற்றம். புதிய நிற மாற்றம். புதிய ருசி. சுயமிழந்த பொருட்களின் அந்நியத் தன்மை கலைந்து... அந்நியோன்யமான அன்புச் சங்கமிப்பில்... புதிய குணம். புதிய பண்பு. புதிய வீர்யம்.

அப்படித்தான்... இந்த இளைஞர்கள். அமைப்பாகத் திரண்டு, கூட்டங்கள் நடத்தி... சமுதாயக்கல்வியும், தத்துவக்கல்வியும் பெறப்பெற... உணர்வு ரீதியான சங்கமிப்பில், புதிய குணம். புதிய பண்பு. புதிய வீர்யம்.

தேவர், நாடார், நாயக்கர், பறையர், சக்கிலியர் என்கிற சாதிகளிலிருந்து தனித்துவங்களோடு கைகோர்த்தவர்கள். சாதி கடந்த கலப்பு. கல்வி பெறப் பெறக் கொதிநிலை. தனித்துவங்களின் கோடுகள் கரைந்து, சுயமிழந்த புதிய சங்கமிப்பு... புதிய புதிய... புதிய...

சிந்தாமணி மாவட்டக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினான். பேச்சினூடே சமுதாய வரலாற்றையும் கலந்து சொன்னான்.

‘ராஜா ராணி ஆண்ட காலத்தில் சாதியடிப்படையில் இருந்த வேலைப் பிரிவினைகள். அதுவே நீண்ட காலம் நீடித்தது... அதனடிப்படையில் உறைந்துபோன சாதி முறையிலான சமுதாய அமைப்பு...

தொழில் யுகம்... கல்வி... தொழிற்கல்வி எல்லாத் தொழில்களிலும் எல்லாச் சாதியினரும் என்கிற இன்றைய நிலைமை. இதன் விளைவாக சாதீய அமைப்பில் ஏற்பட்டிருக்கிற உடைவுகள்... நிலப்பிரபுத்வம் அகற்றப்படாததால் சாதீயம் நீடிக்கிற நிஜம்...’

‘காப்பி’ வந்தது. எல்லோருக்கும் சுப்புலட்சுமி விநியோகித்தாள். பின்னும் நடந்த கூட்டம் முடியும் தருவாயில் —

ஒருவன் ஓடி வந்தான்.

“ஏய்... சுப்ரமணி...”

வெளியே வந்தான்.

“என்னப்பா...?”

“ஒங்களுக்கு விஷயம் தெரியாதா?”

“என்ன விஷயம்?”

“வாயடி நாடாரும், அவரு சம்சாரமும்...”

“ஆ... ஹ்... என்னாச்சு?”

“சேர்ந்தாப்லே செத்துக் கெடக்காக.”

“எப்ப?”

“இப்பத்தான். பொற்கொடி அழுதுக்கிட்டிருக்கா...”

சிந்தாமணிக்குக் கேட்டது. அவனுள் ஓடிப்பாய்ந்த மின்சார அதிர்வு. பக்கென்கிற மனசு. அவனுக்குள் ஏற்பட்ட மனக்கனம். ‘இப்ப என்ன செய்ய’ என்கிற குழப்பம்.

கனத்த பாரம் மனசை அழுத்துவதாக உணர்ந்தான்.

சாதியிலிருந்து தள்ளி வைக்கப்பட்ட கொடுமை. சாதிச் சுடுகாட்டில் இடமில்லை. சாதியாட்கள் வராமல், ஈமச் சடங்குகள் எப்படிச் செய்வது? நீர்மாலைக் கிணற்றுக்குப் போவதற்கு, சாதியாட்கள் வேண்டுமே.... தேர் தூக்க சாதியாட்கள் வேண்டுமே... மயானக்கரை வேலைகளுக்கு நாட்டாமையும், சாதிப் பிரமுகர்களும் வேண்டுமே... பந்தல் போட சாதியாட்கள் வேண்டுமே...

என்ன செய்ய...? எப்படிச் செய்ய?

பயங்கரச் சூன்யத்தின் முற்றுகைக்குள் இவன்...

மாமாவும், அத்தையும் செத்த சோகத்தைவிட.... மறித்துக்கொண்டு நிற்கிற இந்தப் பாரங்கள்தான், பெருங்கொடுமை....

சிந்தாமணிக்குள் தவிப்பு.

சுப்ரமணி உள்ளே வந்தான். அவன் முகத்திலிருந்த பிரேதக்களை.

“விஷயம் தெரியுமா... சிந்தாமணி?”

சிந்தாமணிக்குள் பொங்கிப் பீறிடுகிற துக்கத்தை, பல்லைக் கடித்துச் சமாளித்தான். அவன் முகத்தில் இறுக்கம். கன்னக் கதுப்புகளில் பற்கடிப்பின் புடைப்பில்... அவன் மனச் சோகம்.

“தெரியும்... இதைப் பத்தி நீயே பேசிரு.”

“சுப்ரமணி கூட்டத்தின் நடுவில் நின்றான்.”

“நீயே சொல்லேன்... சிந்தாமணி.”

“இல்லே. நீ சொல்றதுதான் பொருத்தம்.”

சுப்பிரமணி அழுதுவிடுவான் போலிருந்தது. குரலில் உடைந்த மனசின் கரகரப்பு. எல்லார் முகங்களிலும் எண்ணெய்க் கசிவு போன்ற ஒரு நிறம். ஓர் இறுக்கம்.

“சாதிக இருக்கட்டும். பேதமும் சண்டையும் வேண்டாம். மதம் வேணும்னா, இருக்கட்டும். வெறியும் விரோதமும் வேண்டாம். ஒழைக்கிற ஏழை மனுச மக்கள், ஒத்துமையா இருந்தால்தான்... நாட்டைக் காப்பாத்த முடியும். சமுதாய அமைப்பை மாத்த முடியும். அதுக்கு மக்கள் ஒற்றுமைங்குறது, ரொம்ப ரொம்ப முக்கியம். இதுதான் நம்ம வாலிபர் சங்கத்தோட கடமை, லட்சியம், நோக்கம், குறிக்கோள்.

தாழையா நாடாரு தரகர்தான். ஆனா இதே கொள்கையையே... வாழ்க்கையா வாழ்ந்தவரு. மக்கள் ஒற்றுமைக்காக அவர் போராடுனாரு. அதனாலேதா... சாதிப் புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்காரு. அவரு அதிசயமான மொறையிலே எறந்துருக்காரு.

மனைவியும் கணவனும் சேர்ந்தே இயல்பான கூட்டுச்சாவு நடந்துருக்கு. அது அவுக அன்புக்குச் சாட்சி. மன ஒற்றுமைக்கு அடையாளம்.

அற்புதமான அன்பு உள்ளமும், மனித நேயமும் கொண்ட இந்த மாமனிதரின் இறுதிச் சடங்குக்கு, அவரது சாதி சனங்க வரமாட்டாங்க. ஆனா சகோதரத்துவத்தை சமத்துவத்தை விரும்புற ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவை உருவாக்குற— சமத்துவ இந்தியாவை உருவாக்குற கனவுகளோட இயங்குற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்தியாவின் பிரதிநிதியாக நின்று, இந்த ஈமச் சடங்கு நடத்தட்டும்.

கல்யாணத்துக்கு பல சாதிக வந்துட்டு மொய் செய்ஞ்சு போவா. ஆனா இழவுக்கு சுயசாதிக மட்டும்தான் வரும். சுய சாதி மட்டும்தான், இறுதிச் சடங்கை நடத்துவாக.

எல்லாச் சாதி சனத்தையும் மனசார நேசித்த தாழையா நாடாரின் இறுதிச் சடங்கை... எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நாம செய்றதுதா, ரொம்பப் பொருத்தம்.

நமக்கு நம்ம சாதிக்குள்ளேயிருந்து வர்ற நிர்ப்பந்தத்துக்குப் பணியாம... நாம் துணிச்சலா நிக்கணும். இதை வெற்றிகரமா முடிக்கணும்.”

எல்லாரும் “செய்ஞ்சிருவம்... செய்ஞ்சிருவம்” என்று ஏகோபித்துக் குரல் கொடுக்க... கூட்டம் கலைந்து, தாழையா நாடார் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.

பொற்கொடியின் அழுகைச் சத்தமும், சிந்தாமணியின் அம்மா அழுகைச் சத்தமும் மட்டுமே கேட்டது. ஓர் இழவு வீட்டுக்குரிய கூட்டு ஒப்பாரியின் சத்தக் கலவையில்லை. சிங்கார நாடார் மனைவி மட்டும், வீடு வாசலை... துணிமணிகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

மற்ற நாடார் வீட்டுப் பெண்கள் வரவில்லை. ஆனால் வேலை ஜோலிகளைப் பார்க்கிற மன அமைதியிலும் அவர்கள் இல்லை. தெரு முனையில் கூட்டமாக.... வருத்தமும், சூள் கொட்டல்களும், முகவாட்டமுமாக நின்றனர்.

“வாயடி எப்பேர்பட்ட மனுசன். ‘அவரு மோசம்’னு ஒரு பயலாச்சும், விரல் நீட்டிக் குத்தம் சொல்ல முடியுமா? தங்கமான மனுசன். அதான்... தங்கச் சாவு செத்துருக்காரு. பொஞ்சாதியோட சேர்ந்து உசுர் போகணும்னா.. அவரு எம்புட்டுச் சுத்தமான ஆளாயிருக்கணும்?”

“அதைச் சொல்லு... அப்பேற்பட்ட மனுசரு சாவுலே போய் நிக்க முடியாம... ஊர்க்கூட்டம் கூத்துப்பண்ணியிருக்கு. தாயா புள்ளையா இருந்த ஊர்லே... பஞ்சாயத்துத் தேர்தலும் சாதி வெறியும் வந்து, பேய்க் கூத்து போட்டுருச்சே.”

“ஊரையே கிழிச்சு, கந்து கந்தாக் கசக்கிப் போட்டுருச்சு, சனியன் பிடிச்ச சாதியெண்ணம்.”

“எதைத் தள்ளினாலும்... இழவைத் தள்ளக் கூடாது. நாம பாட்டுக்கு போய் நின்னா... என்ன?”

“நிக்கலாம். தப்பு இல்லே. நிக்கணும். நிக்காட்டா.... பாவம். அந்தப் பாவம், நம்மளைச் சும்மா விடாது...”

“அப்ப... வாங்க போவம்.”

“அதெப்படி...? ‘சாதிக்கட்டு’ன்னு ஒன்னு இருக்கே. சரியோ... தப்போ... சாதிக்கட்டை எப்படி மீற முடியும்?”

வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி வட்டமாகவும், வருத்தமாகவும் தர்மசங்கடமான முகபாவங்களுமாக நின்ற பெண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு... சிந்தாமணி வீட்டுக்குள் போனான்.

வாலிபர் சங்கத் தோழர்கள், வீட்டு முன்னால் நின்றனர். அவர்களுடன் சிங்கார நாடாரும் நின்றார்.

சிங்கார நாடார்தான் இருப்பதில் பெரியாள். பையன்களுக்கு யோசனைகள் சொன்னார்.

“சரியப்பா... நாலு கம்புகளைத் தூக்கிட்டு வாங்க. எங்க வீட்லே கிடுகுக்கட்டும், கடப்பாறையும் இருக்கு. எடுத்துட்டு வாங்க பந்தல் போடுவோம்.”

“சிந்தாமணி... சுப்பாநாயக்கரு கடையிலே போய் வெத்தலைக்கட்டு, பாக்கு, சுண்ணாம்புப் பாக்கெட் வாங்கிட்டு வா.”

“குறிஞ்சி நாற்காலி தூக்கிட்டு வரணும்லே?”

“ஆமா. நாடாக்கமாரு தரமாட்டாகள்லே?”

“எங்க வீட்லே ரெண்டு மரச்சேரு கெடக்கு. எடுத்துட்டு வாரேன்...”

“நீ... போக வேண்டாம். வேற பையங்களை அனுப்பு...”

ஆள் ஆளுக்கு வேலைகள். கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு பாய்ச்சல்கள். வேலைகள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தன.

வாலிபர்கள் ‘நா முந்தி, நீ முந்தி’ என்று போட்டி போட்டு முண்டியடித்து வேலைகள் பார்த்தனர்.

வீட்டு முன்னால்... பந்தல் ரெடி. ஏகாலி வந்து கட்ட வேண்டிய வெள்ளைத் துணியையும், பந்தலின் அடி வயிற்றில் கட்டிவிட்டனர்.

‘தள்ளி’ வைக்கப்பட்ட வீட்டுக்கு நாம போனா நாட்டாக்கமாரோட கலகம் பண்ணத் தயார்னு அர்த்தம். வாயடி நாடாரு நல்ல மனுசன்தான். நம்ம மேலே பாந்தமுள்ள மனுசன்தா. என்ன செய்ய? ஊரு நெலவரம் சரியில்லியே... யாரும் போக வேண்டாம்.”

என்றார் தேவர் நாட்டாமை. ஆனால்... மனம் சகிக்காமல், அதை மீறிக்கொண்டு போகிற தேவர்களை அவர் தடுக்கவில்லை. தடுக்க மனசு துணியவில்லை.

நாயக்கமார், பறையர், சக்கிலியர் எல்லாரும் வந்தார்கள். வீட்டு முன்னால் கும்பல் கும்பலாக உட்கார்ந் தனர். இளமதிய வெயில். கூரை நிழல்களில் கிராமத்து உழைப்பாளிகள்.

மரச்சேர்கள் வந்தன. முன் நடையை ஒட்டியுள்ள திண்ணையில், கிழக்கு பார்த்து மரச்சேர்கள் ஜோடியாகப் போடப்பட்டன. சிந்தாமணியும் சுப்ரமணியும் சேர்ந்து... கட்டிலில் குப்புறச் சாய்ந்து கிடந்த தாழையாவை தொட்டுத் தூக்கினார்கள். ஜில்லென்கிற உடம்பு. தூக்கி சேரில் உட்கார வைத்தனர். மாற்று வேட்டி சட்டை கட்டிவிட்டனர். வெத்தலை பாக்கை, மென்று வாயில் திணித்தனர். நாடிக்கட்டு போட்டு கால் கட்டும் போட்டனர்.

சிங்கார நாடார் மனைவி ஒத்துழைப்போடு செம்பகத்தையும் தூக்கி, சேரில் உட்கார வைத்தனர். அவள் செம்பகத்துக்கு மாற்றுச் சேலை கட்டிவிட்டாள். தேவமாருக்குப் பாத்தியப்பட்ட பூக்காரர், கொண்டு வந்த பூமாலைகளைப் போட்டனர். மரக்கால்களில் நிறை தானியம் அள்ளி வைத்து... ஊதுபத்தி பொருத்தி வைத்தனர்.

ஆரம்ப வேலைகள் ‘ஜாம், ஜாம்’ என்று நடந்து முடிந்தன. சிந்தாமணி, உட்கார வைத்து முடித்த தம்பதியைப் பார்த்தான்.

மாலையும் கழுத்துமாக மணமக்களைப் போல, உட்கார்ந்திருந்த அந்த அழகு... அந்த ஜோடிப் பொருத்தம்... ஆத்ம சங்கமப் பேரழகு...

சிந்தாமணிக்குள் என்னவோ செய்தது. முட்டிக்கொண்டு வருகிற அழுகை. குத்தலெடுக்கிற கண்கள்.

கவனிப்பில்லாமல், குத்தலும் கொதுக்கலுமாக துவண்டு கிடந்த தாழையா மீசை. அவரது ஆசைக்குரிய மீசை. அவருக்கான அடையாளம்.

வினோதமான துயரம் இவனை ஆட்கொள்ள... கிட்டத்தில் போனான். அவருடைய மீசையைத் தொட்டு நீவிவிட்டான். கைகள் நடுங்கின. கோதி முறுக்கி வைத்தான். மீசையின் நிமிர்வு, அவரை முழுமைப்படுத்தி அழகாக்கியது போலிருந்தது.

முட்டிக் கொண்டு வருகிற அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கதறியழுகிற பொற்கொடி. அம்மாவின் ஒப்பாரி. பெற்றோரின் காலடியில் துவண்டு கிடந்து, ஏதேதோ சொல்லிச் சொல்லியழுகிற பொற்கொடி.

சிந்தாமணிக்குள் கலக்கம். மாமா... கம்பீரமான மாமா... ஊரையே நற்குணத்தால கைக்குள் வைத்திருந்த மாமா... எல்லாச் சாதி மக்களின் அன்பைச் சம்பாதித்திருந்த மாமா... ‘இதுக்குத்தான் வாயடி வேணும்ங்குறது’ என்று ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு கூவி, அவரது இருப்பை அர்த்தப்படுத்திய— அழகுப்படுத்திய அற்புதம்... அதற்குள்ளிருந்த அவரது உழைப்பு... நல்ல மனசு...

நெஞ்சுக்குள் அழுத்துகிற கனம். திரண்டு உதிர்ந்த நீர்த்துளியை துடைத்துக்கொண்டு, வெளியே வந்தான்.

சிங்கார நாடாரைத் தேடினான்.

“என்னப்பா...?”

“அவரு புள்ளைகளுக்கு தாக்கல் சொல்லிவிடணுமா?”

“இதென்ன....இப்படிக் கேட்கே? கொள்ளி வைக்கிற புள்ளைகளுக்கு தாக்கல் அனுப்பாம எப்படித் தூக்குறது?”

அவர்கள் நேற்று சொல்லி விட்டுப்போன கோப வார்த்தைகளைக் கூறினான்.

“அவுக... ஏதோ கோபத்துலே குருட்டுத்தனமா சொல்லிட்டுப் போயிருப்பாங்க. நாம மொறைப்படி தாக்கல் குடுத்துருவோம். வந்தா வரட்டும்... வராட்டா... நாம நம்ம வேலைகளைப் பாப்போம்.”

“அதுவும் சர்த்தான்.”

‘தாக்கல்’ பறந்தது. காளிசாத்தான் ஊருக்கும் ஆள் போயிற்று, ‘டங்கா மேளம்’ கொண்டு வர.

அவர்களை மறித்துக்கொண்டு நின்ற பிரச்சினைகள்— எந்தச் சுடுகாட்டில் போய் குழி வெட்டுவது? யார் கொள்ளிக்குடம் சுமப்பது? எந்த நீர்மாலைக் கிணற்றுக்குப் போவது?

வலுவான மறிப்புகள். அவமானகரமான மறிப்புகள். அற்பத்தனமான மறிப்புகள். தர்மதேவனுக்குச் சூட்டிய முட்கிரீடமாக— சிலுவையாக— மறிப்புகள்.

இதை எப்படித் தாண்டுவது?

சிந்தாமணிக்குள் குழப்பம் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த வாலிபத் தோழர்கள், கூடிக் கூடிப் பேசினர்.

அதே நேரத்தில்—

நல்லையாவும், அவரைச் சேர்ந்த நால்வரும் மும்முரமாக இருந்தனர். தாழையாவின் சாவின் அதிர்வில் மனம் கலங்கிப் போய்... சாதிக்கட்டை மீறத் துடித்த நாடார்களையெல்லாம் தனித் தனியாக சந்தித்து மிரட்டினர்.

‘சாதிக்கட்டை மீறுவது எவ்வளவு பெரிய குற்றம்’ என்பதைச் சொல்லி அச்சுறுத்தினர்.

ஊருக்குள் எங்கும் ஒரு வகையான துக்கமும், மனக்குழப்பமும். உறுத்துகிற மனச்சாட்சிகளின் முள் குத்தல்கள்.


26



ல்லையா குரூப்பின் அச்சுறுத்தல்கள், வேலை செய்யாமலுமில்லை; வேலை செய்யவில்லை. நாடார் விவசாயிகள், தெருக்களில் சினைப் பூனைகளாக நிலை கொள்ளாமல் அலைந்தார்கள். சாதியில் ஒரு இழவு விழுந்தால்... யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். இப்போதும் ஒரு சுடுகுஞ்சுகூட வேலைக்குப் போகவில்லை.

காலையிலேயே போயிருந்தவர்கள்கூட வீடு வந்து விட்டார்கள். ஆனால், இழவு வீட்டுக்கு வரவில்லை. தலைக்கட்டு வரி ரெண்டு ரூபாய் தரவில்லை. ஈமச் சடங்குகளில் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக்கவும் மனம் சம்மதிக்கவில்லை. புழுக்கம். தர்மசங்கடமான வேதனைகள். இக்கட்டான சூழல். மனநெருக்கடி. கைகளைப் பிசைந்துகொண்டு முகவாட்டமாய் அவர்கள்.

இயல்பாகவே ஈரமனசுள்ள கிராம விவசாயிகள்... மரணத்திற்கு கலங்குகிற— மனம் பதைக்கிற— மனிதநேயமுள்ளவர்கள். அத்துடன் எல்லோருமே, ஏதோ ஒரு வகையில் தாழையாவின் நல்ல மனசையும், உதவியையும் அனுபவித்தவர்கள்.

‘மிளகாய் வத்தல் இப்ப விற்கலாமா... சற்றுப் பொறுத்து விலை சொல்லலாமா’ என்று பொருத்தமாக யோசனை சொல்பவர். வியாபாரி கூடவே வருவார். ஆனால், சம்சாரிகளுக்கு ஆதரவாகவே நடப்பார். பஞ்சாயத்துகளில் ‘டாண், டாண்’ என்று மணிகொண்டு அடித்த மாதிரி பேசி... தீராத வழக்குகளையெல்லாம் தீர்த்து வைத்தவர்.

கோர்ட்டுக்குப் போய் சீரழிய வேண்டிய எத்தனையோ பங்காளிச் சண்டைகள்— பாகப்பிரிவினைச் சண்டைகளை சுமுகமாக தீர்த்து வைத்து, சகஜபாவத்தை ஏற்படுத்தியவர்.

அப்பேர்ப்பட்ட புண்ணியவான் செத்துக்கிடக்கிற போது... அந்த ஈமச் சடங்கில்கூட கலந்துகொள்ளாமல் எப்படி இருக்க? இந்தப் பாவத்தை எங்கே கொண்டு போய் கழுவ?

ஆனால்... குறுக்கே நிற்கிற சாதிக்கட்டு. அதன் முடிவு. காணாமற் போன பம்ப்ஷெட் மோட்டார்கள் பற்றிய மனக் கொதிப்பு.

இந்தக் குழப்பங்களில் இவர்கள் தடுமாறித் தத்தளிக்கிறபோது, அவர்கள் இதயமே அதிர்கிற மாதிரி, டங்கா மேளச் சத்தம்.

“டம்டம்... டமார்... டமார்... டம்டம்” என்று அதிர்கிற சத்தம். மனசுகளின் உள் ஜவ்வுகளில் உரசுகிற மாதிரியான உறுமிச் சத்தம். சங்கனின் ஒப்பாரிச் சத்தம், உணர்வுகளைச் சுண்டியதிர வைக்கிறது.

மகன்கள் வருகிறார்களா... இல்லையா என்று மூன்று மணி வரை எதிர்பார்ப்பது. அப்புறம், இறுதிச் சடங்கு வேலைகளைத் துவக்குவது என்று முடிவு.

வாலிபர் சங்கத் தோழர்களுடன் சேர்ந்து இயங்குகிற ரெண்டுபேர். ஒரு நாடார். ஒரு தேவர். தானாக வந்து இவர்களுடன் வேலைகளில் சங்கமித்தனர், துணிச்சலாக.

தேர் கட்டுகிற வேலைகள் நடந்தன. சற்றுப் பெரிய தேர். ரெண்டு பேரையும் ஒரே தேரில் கொண்டு போகிற மாதிரியான ஏற்பாடு. ‘மண ஊர்வலப் பல்லக்கா... பிண ஊர்வலத் தேரா’ என்கிற மயக்கம் ஏற்படுத்தும்...

அந்த மாணிக்க நாடாரையும், பழநித் தேவரையும் பார்த்தான், சிந்தாமணி.

நாலைந்து நாளைக்கு முன்னால்—

பருத்திமார்ப் படப்பில் விறகு உருவிக் கட்டிக்கொண்டிருந்த மாணிக்கத்தை பாம்பு கடித்துவிட்டது. அலறித் துடித்தார். அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். ‘என்ன செய்ய’ என்று புரியாமல் தத்தளிப்பு, தவிப்பு. நல்லையா எங்கோ போய் ஒளிந்துகொண்டார்.

பாம்புக்கடி வைத்தியம், முத்தையாத் தேவர் ஒருவருக்குத்தான் தெரியும். ஊர் கிடக்கிற இந்த அலங்கோலத்தில், அவரைப் போய் யார் கூப்பிட? என்ன ‘முகத்தோடு’ போய்க் கூட்பிட?

ஏது செய்ய என்று வழி புரியாமல் தவிக்க... நிமிஷ நேரத்தில் நெருங்கி வருகிற மரணம்.

முத்தையாத் தேவருடன் வந்து சேர்ந்தான், சிந்தாமணி. கூட்டத்தில் ஒரே கசகசப்பு. ஆறுதலான பெருமூச்சுகள்.

முத்தையாத் தேவரைப் போய் சிந்தாமணிதான் கூப்பிட்டான். “ஐயய்யோ அப்படியா? இந்தா வரேன்” என்று மறு பேச்சுப் பேசாமல், ஒருகணம் கூடத் தயங்காமல் புறப்பட்ட அவரது பண்பில் மலைத்துப்போனான், சிந்தாமணி.

அடக்க முடியாத பிரமிப்பில் திணறிய சிந்தாமணி வாய்விட்டே கேட்டுவிட்டான். “எப்படியண்ணாச்சி, சொன்னவுடனே கெளம்பிட்டீக? ஊரு நெலவரம், சாதிப்பகை இதையெல்லாம் யோசிக்கலியா...?”

முத்தையாத் தேவர் பெருந்தன்மையாகச் சிரித்துக் கொண்டே நடையை துரிதப்படுத்தினார்.

“தம்பி, வைத்தி தர்மமே தனீ. அதுக்கு சாதி பாக்குற, பகை பாக்குற அற்பப் புத்தியெல்லாம் கிடையாது...”

அதேபோல, பழிநி. ஆடுகுட்டிக்கு கொழை ஒடிக்கப்போன இடத்தில் கால் தடுமாறி விழுந்து, வலது பாதம் அடித்து வீங்கிவிட்டது. ரத்த உறைவா, எலும்பு முறிவா என்று தெரியவில்லை. வலி தாளாமல் துடியாய்த் துடித்தான்.

கம்படி வாத்தியாருக்குத்தான் வர்மக்கலை தெரியும். நாடார். அவர்தான் அதற்கு வைத்தியம் பார்க்க முடியும். சிந்தமணிதான் போய்க் கூப்பிட்டான். அவரும் அப்படித்தான். மறுபேச்சில்லாமல் புறப்பட்டார்.

அவரும் அப்படியே சொன்னார். “எங்க ‘வாத்யார்’ ஆசீர்வாதம் பண்ணி அனுப்புறப்பவே சொன்னார்... ‘ஒன்னை நாளைக்கு வெட்டப்போற எதிரி வந்தாலும் கூட... அவனுக்கும் மனச்சுத்தமா வைத்தியம் பாக்கணும். அதுதான் நீ எனக்குச் செய்ற மரியாதை’ன்னாரு. அப்பேர்ப்பட்டதுதான், இந்த வைத்திய தர்மம்.”

சிந்தமாணிக்குள் ஓடிய ஒரு கனவு. ‘அடடா... இந்த வைத்திய தர்மமே... மானுட தர்மமா... உலக தர்மமா... எல்லா விஷயத்துலேயும் ஆகிட்டா... எம்புட்டு நல்லா யிருக்கும்...’

மதியம் ஆகிவிட்டது.

வீட்டுக்கு முன்னால், சிறுவர் சிறுமி பட்டாளத்தின் முற்றுகை. டங்கா மேளமும், உறுமியும் அதிர... நாதஸ்வரம் ஊத... பொய்க்கால் குதிரை குறுக்கும் நெடுக்குமாகப் போய், வட்டச்சுற்று சுற்றியாட.... சங்கன் வேர்க்க விறு விறுக்க ஒப்பாரிப் பாட்டு பாடினான்.

சங்கன் பெண் வேஷம் கட்டியிருந்தான்.

தெருவின் கீழ்முகப்பில் நாடார்ப் பெண்கள். மேல் முகப்பில் தேவமார்ப் பெண்கள். கிட்ட வரவில்லை. அதேபோல, தூரத்திலேயேயிருந்த தேவமார்க் கூட்டம், நாடாக்கமார் கூட்டம்.

மதியம் மூன்றாகிவிட்டது. மூன்று மணி பஸ்ஸும் வந்து போயிற்று. மகன்கள் வரவில்லை. சாதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலைமையின் பயங்கரத்தின் குரூரத்தைச் சந்திக்கத் தயங்கிவிட்டார்கள் போலும்!

புதிய இந்தியாவைப் படைக்க இருக்கும் வலிமையுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திகழ்வதும், அதன் கடமையாக இந்த ஈமச் சடங்கை எடுத்துக் கொண்டதுவும்... அவர்களுக்குத் தெரியவில்லை.

“சரி... காரியங்க நடக்கட்டும்,” என்றார் சிங்கார நாடார்.

கொள்ளிக்குடத்தை மாணிக்கம் உடைப்பது என்று துணிகரமான முடிவெடுத்தனர்.

குழிகள் எங்கே வெட்டுவது என்று ஒரு பிரச்சினை. சுப்ரமணியே நல்லையாவைச் சந்தித்துக் கேட்டான். நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட சுடுகாட்டில் புதைக்க அனுமதி கேட்டான்.

“சாதிக் கூட்டம் கூடி எடுத்த முடிவு. நா மட்டும் எப்படி மாத்த முடியும்? எனக்கென்ன அதிகாரம் இருக்கு?” என்று சமத்காரமாகப் பேசி மறுத்துவிட்டார்.

வாடிப்போன முகத்தோடு திரும்பிய சுப்ரமணியைப் பார்த்தவுடன் சிந்தாமணிக்குள் வந்த வெறி. ரத்தமெல்லாம் கொதித்தது. மனசுக்குள் மூண்டெழுந்த வன்மத் தீ...

இவன் முன்னாள் ராணுவக்காரன். தேசத்துக்காக பனியிலும் மலை முகடுகளிலும் கிடந்து உழைத்தவன்.... இவனுக்கென்று சில சலுகைகள் உண்டு. அதைப் பயன்படுத்திவிட வேண்டியதுதான்.

‘முன்னாள் ராணுவத்தினர் சங்கத்திற்கு’ ஒரு தந்தி கொடுக்க வேண்டும். அதேபோல... கலெக்டர், தாசில்தார், எஸ்.பி., காவல் நிலையம் எல்லோருக்கும் தந்திகளை அனுப்பிவிட்டு... இவனே தலைமை தாங்கி, சுடுகாட்டுக்குள் நுழைய வேண்டியதுதான். அத்துமீறலாக, கூடை மண்வெட்டிகளோடு நுழைய வேண்டியதுதான்...

எது நடந்தாலும் சரி... பார்த்துவிடுவோம். வந்து மறித்தால்... நாலு தலைகளை உருட்டுவோம்... நடப்பது நடக்கட்டும்...

சிந்தாமணி உன்மத்தம் பிடித்தவனைப் போல காட்டுக் கத்தலாகக் கத்தினான்.

இவன் இவனது வெறியைச் சொல்ல... அது கண நேரத்தில் பரவ... நல்லையாவுக்குள் குலநடுக்கம். நாடார்களுக்குள் பதற்றம். பதைப்பு. ஊரே... பதற்ற நிலவரம். கலவர உணர்வு.

தந்தி கொடுப்பது என்றவுடன்... சிந்தாமணி வீட்டுக்குள் நுழைந்தான், மேட்டர் எழுத ஒரு வெள்ளைப் பேப்பர் தேடி. பலகையில் தேடினான். அலமாரியில் தேடினான். ஒரு குயர் நோட் கிடந்தது. பழசு. அதைப் பிரித்தான். வெள்ளைத் தாட்கள் இருந்தன. கிழிப்பதற்குவாகாக நோட்டைத் திருப்பினான். உள்ளிருந்து விழுந்த காகித மடிப்பு. நாலாக மடித்த மூன்று பேப்பர்.

குனிந்து எடுத்தான். என்ன என்று விரித்தான், தாழையாவின் எழுத்துகள். ரெண்டு நாளைக்கு முந்தைய தேதி போட்டிருந்தது.

வீட்டுக்குள்ளிருந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பென்சில் எழுத்துகளை வாசித்தான். ஆத்மாவின் வடிவம் அது...

அவனுக்குள் பிரமிப்பு.

சோகமான ஆச்சரியம்.

மாமா சாகவில்லை— இன்னும் வாழ்கிறார். இறந்த பின்பும், இருந்து இவனுக்கு வழிகாட்டுகிறார். இவனை நெறிப்படுத்துகிறார். லகான் போடுகிறார். ஊருக்கே வழி காட்டுகிறார். உலகத்துக்கே வழி காட்டுகிறார்.

“சங்கரலிங்கம் நாடாரின் ஒரே குமாரன் தாழையா நாடார் எழுதிக்கொள்ளும் கடைசி ஆசைகள்...”

என்று துவங்குகிற கடிதம். கடிதமல்ல இது... அவரது ஆத்மா. ஆத்ம துடிப்பு. உயில். உயிர் கரைந்து, உருக்கெண்ட உயில்.

‘மளமள’வென்று வெளியே வந்தான். கிழக்கிலும்— மேற்கிலும் நின்று தவிக்கிற நாடார்— தேவர் மக்களைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டான்... வெறிக் கூச்சலாகக் கத்திக் கூப்பிட்டான். உணர்ச்சிப் பிழம்பாக... சிந்தாமணி.

“வாங்க... எல்லாரும் வாங்க... எங்க மாமா உங்களுக்காக— ஊருக்காக— உயில் எழுதி வைச்சிருக்காரு. அதை நா வாசிக்கப் போறேன்... நல்லா காது குடுத்துக் கேளுங்க... அப்புறமா... நீங்க உங்க மனம் போல நடந்துக்குங்க...”

‘உயில்... உயில்...’ என்றவுடன் ஒரு பரபரப்பு. ஏற்கெனவே தர்மசங்கடத்தில் தவித்தவர்கள்— ‘சாதிக் கட்டு’ என்ற ஒன்றுக்காக மட்டுமே, கட்டுப்பட்டு உழன்றவர்கள்— மனச்சாட்சியின் நமைச்சலுக்கு பதில் சொல்ல வார்த்தை யின்றித் திண்டாடியவர்கள்— மனம் முழுக்க நல்லுணர்வுத் ததும்பலில் நின்றவர்கள்—

நெருங்கி வந்தனர். ஆர்வமும், பதைப்புமாக கசகசப்பான சப்த அலைகளோடு வந்தனர். அவர்களுக்குள்ளும் வெள்ளமாகப் பரவுகிற நெகிழ்வுணர்ச்சி.

பந்தலுக்கடியில்—

குப்புறக் கிடந்த குத்துரலில் ஏறி நின்றுகொண்டு சிந்தாமணி.... உரக்கப் பாத்தான்:

“சங்கரலிங்க நாடாரின் ஒரே குமாரன் தாழையா நாடார் எழுதிக்கொள்ளும் கடைசி ஆசைகள்.

இந்த ஊர், எனக்குத் தாய் மாதிரி. இந்த ஊர் தண்ணீரை, தாய் பாலாகக் குடித்து வளர்ந்தவன். எங்கள் வம்சாவளி முன்னோர்களின் மூச்சு கலந்திருக்கிற இந்த ஊர் காற்றை, நுகர்ந்து வாழ்ந்தவன்.

இந்த வட்டாரத்தில் மிளகாய் செடி வெள்ளாமை இருக்கும் வரை, மிளகாய் வத்தலின் கமறல் வாசனை முழுவதும் எங்கள் ஐயா பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும். அதேபோல... இந்த ஊரில்— வட்டாரத்தில்— விவசாயம் இருக்கிறவரை, விளைந்த சாமான்களை வியாபாரிகளிடம் விற்கிற சம்சாரிகள் இருக்கிறவரை இந்தத் தரகன் தாழையா நாடான் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

எனக்குத் தரகு தந்தது, வியாபாரிகள்தான். ஆனால், நான் எந்த சம்சாரிக்கும் மனசால்கூட தீங்கு நினைத்ததில்லை. ஒரு சம்சாரியிடமிருந்து கூட ஏமாற்றிப் பிடுங்கி வியாபாரிகளுக்குத் தந்ததில்லை.

நான்... இந்த ஊர் சம்சாரிகள் எல்லாருக்கும் முடிந்தளவுக்கு ஒத்தாசையே செய்திருக்கிறேன். ஆடு மாடு வளர்க்கிற கூலி ஜனத்துக்கும் ஒத்தாசையாகவே இருந்திருக்கிறேன்.

காரணம்... வேறொன்றுமில்லை. என் உடம்புதான் தரகன் உடம்பே தவிர, மனசு பூராவும் சம்சாரி மனசு. என் உடம்பில் ஓடுகிற இரத்தம், சுத்தமான சம்சாரியின் இரத்தம். மண்ணில் வேர்வை சிந்தி, பொன்னாக்குவதை பிறவிக்கடன் என்று நினைத்துப் பாடுபட்ட சம்சாரியின் இரத்தம்.

அதனால்தான்... சம்சாரிகளைப் பற்றி ரொம்பக் கவலைப்படுகிறேன். காலம் பூராவும் உழைத்து விளைய வைத்தாலும், நல்ல விலை இல்லை. பாடுபட்டதற்கேற்ற பலன் இல்லை. கடன் தொல்லைகளும், நஷ்டங்களுமாகவே நலிந்து வருகிற விவசாயம். சமுத்திரமாக இருந்த சம்சாரித்தனத்தை நம்பி, வேலையை உதறிய வாத்தியார்கள் உண்டு, ஒரு காலத்தில்.

இன்றைக்கு ஆடி மாதக் குளமாகக் காய்ந்துபோன சம்சாரித்தனம். காடுகரைகளை விற்று, லஞ்சமாகத் தந்து, வாத்தியார் உத்தியோகம் வாங்குகிற கேவலம். பட்டாளத்துக்குப் பையனை அனுப்ப... பருத்தியை விற்று லஞ்சம் தருகிற சம்சாரி.

இப்படிச் சம்சாரித்தனம் கெட்டழிகிறது. நாசமாகிறது. இதை எப்படிச் சரிப்படுத்த? கட்டுப்படியாகிற தொழிலாக சம்சாரித்தனத்தை எப்படி மாற்ற? உத்தியோக வருமானத்துக்கு நிகராக சம்சாரி உழைப்புக்கும் வருமானம் வருகிறபடி என்ன செய்ய?

இதையெல்லாம் யோசிக்க வேண்டிய சம்சாரிகள்... சாதிச் சண்டை, வரப்புச் சண்டை, தெருச்சண்டை போட்டு ஒற்றுமையைக் கெடுக்காமல்... ஒன்றுபட்டு நின்று யோசிக்க வேண்டிய சம்சாரிகள்... சம்சாரிகளுக்கு யார் எதிரி என்று இனம் கண்டுபிடித்து... கூடி எதிர்க்க வேண்டிய சம்சாரிகள்... கூடிப் போராட வேண்டிய சம்சாரிகள்...

உப்புக்கல்லுக்குப் பெறாத அற்ப விஷயங்களுக்காக சண்டை போட்டு, சாதி பேத உணர்வை வளர்த்து... வெறியாக மூர்க்கம் கொண்டு... நாடார்— தேவர்— நாயக்கர்— அரிஜன் என்று சாதி சாதியாகத் துண்டாகி... ஒற்றுமை குலைந்து கிடக்கிற இன்றைய நமது ஊரை நினைத்து நினைத்து, இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்.

ஒரு சாதியை ஒரு சாதி ‘தள்ளி’ வைத்து, பகை வளர்த்து... மனிதருக்கு மனிதர் முகம் கொடுத்துப் பேச முடியாமல் போன நிலைமையை நினைத்து நினைத்து ஊமையாக அழுகிறேன். உங்கள் கால்களைப் பிடித்து கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சாதிப் பகைமையை உண்டாக்காதீர்கள். சகோதரத்துவ உணர்வைக் கெடுக்காதீர்கள். ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்.

என் சாவுகூட உங்களுக்குள் ஒரு கீறலை உண்டு பண்ணிவிடக் கூடாதே என்று அஞ்சுகிறேன். நாடார் சுடுகாட்டில் எங்களைப் புதைப்பதற்காக ஒரு சண்டை போட்டுவிட வேண்டாம். ஒரு தகராறு வந்துவிட வேண்டாம்.

எங்கள் வம்சாவளி முன்னோர்களின் காலடித் தடங்களும் வேர்வைத் துளிகளும் விழுந்துகிடக்கிற எங்கள் புஞ்சையின் வடகிழக்கு மூலையில் எங்கள் ரெண்டுபேர்களையும் புதைத்துவிடும்படி அன்புடன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். அதுவே எங்களுக்கு தாய்மடி.

பரம்பரைப் புஞ்சையான அந்த நிலத்தை, என் பிள்ளைகள் மூவரும் மனமொப்பி, என் மகள் பொற்கொடிக்குத் தந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எங்கள் சமாதிகள் உள்ள அந்தப் புஞ்சையை என் மகளும் என்றென்றும் பிறருக்கு விற்காமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் வீடு... சுய சம்பாத்தியம்.

சாதிக்கொரு மடம் தனித்தனியாக ஊரில் உள்ளன. எல்லாச் சாதிச் சம்சாரிகளும் ஒன்றாகச் சேர்ந்து... நல்ல நோக்கத்துடன் ‘விவசாயிகள் சங்கம்’ அமைத்தால்... அந்தச் சங்கத்திற்கு என் வீடு பாத்தியப்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கிறேன். இந்த வீட்டின் பாதுகாப்பாளனாக முத்துமணி நாடார் குமாரன் சிந்தாமணியை நிரந்தரமாக நியமிக்கிறேன்.

நாடார் சாதியைச் சேர்ந்த சம்சாரிகள் மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. என்னைச் சாதியிலிருந்து ‘தள்ளி’ வைத்ததற்காக வேதனையுமில்லை. அவர்கள் நல்லவர்கள். உழைத்துப் பிழைக்கிற நல்ல மனசுக்காரர்கள். நன்றி உணர்ச்சியும் சுயாபிமானமும் நிறைந்த சுத்தமானவர்கள்.

நல்லையா மாமாவும், கார்மேகமும், அவர்களுடன் சேர்ந்த நாலு பேர்களும் செய்த சதிதான், எனக்கான தண்டனை.

இப்படி என்னை அவமானப்படுத்தியதில், எந்த நாடார் சம்சாரிக்கும் சம்மதமில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

என் இறுதிச் சடங்கிலாவது எல்லாச் சாதிகளும் ஒன்றுசேர்ந்தால்... என் ஆத்மா சாந்தியடையும். என் ஆத்ம தோழியோடு சேர்ந்து சாகிற பாக்கியம் கிடைத்தால்... அது போதும். அதுதான்... எனது பிரார்த்தனை.

இப்படிக்கு
என்றும் உங்கள்
தாழையா நாடார்

சிந்தாமணி வாசித்து முடிக்கிறபோது... தொண்டையெல்லாம் காந்தல் எடுத்தது. நெஞ்சுக்கூடு வற்றி உலர்ந்து எரிந்தது. அவனது கண்களில் வழிந்துகொண்டேயிருந்தது கண்ணீர்.

அவன் வாசிக்க வாசிக்க... கூடியிருந்த இரு பகுதி மக்களிடமும் வந்த சலசலப்பு. அலை அலையாக மனசுக்குள் உணர்ச்சிகள் நர்த்தனமிட... ஈர முணுமுணுப்புகள். ‘அடடா...’ என்று நெருங்கிப் போன மனசுகளின் சூள் கொட்டல்கள். சின்னச் சின்ன விசும்பல்கள். பெண்கள் மத்தியில் வெடித்துக் கதறிய அழுகைகள். “ஐயய்யோ... பாதரவே” என்று பரிதவித்த பெண்கள். கலக்கமடைந்த உடைந்த மனசுகளின் விசும்பல்கள்.

நல்லையாவும் கார்மேகமும் ஏற்படுத்திய பேத அழுக்குகளை— பகைமை கறையை— தாழையாவின் மரணமும், வாழ்வும், அவற்றை நினைவூட்டிய உயிலும் சேர்ந்து பிரவாகமாகப் பெருக்கெடுத்து சகலத்தையும் கழுவித் துடைத்து இழுத்துச் சென்றன. மனிதர்கள், மனிதத்தன்மையுடன் அன்புப் பிரவாகமாகத் தழுவிக் கலந்து சங்கமித்துக் கொண்டனர்.

கட்டுடைந்த அன்புப் பிரவாகமாக எல்லாச் சாதிச் சனங்களும் கூடிக் கலந்து அலைமோத... எல்லா வேலைகளும் நிமிஷத்தில் நடந்தன.

சாயங்காலம்—

ஐந்து மணிக்குத் தேரைத் தூக்கினார்கள். மணமக்களைப் போல அலங்கரிக்கப்பட்டு தாழையாவும், செம்பகமும்.

தாய்மடியான புஞ்சையை நோக்கிப் புறப்பட்ட இறுதி ஊர்வலம். சகலவிதக் கோலாகலத்தோடு ஜாம் ஜாமென்று முன்னேறிய ஊர்வலம். சுடுகாட்டுக்குப் போகிற பழைய பாதையல்ல. புதிய பாதையில் ஊர்வலம், புஞ்சையை நோக்கி.

வழக்கமான இறுதி ஊர்வலங்களில் ஒரு சாதிச் சனம் மட்டுமே பின்தொடரும். இந்த ஊர்வலத்தில்... சகல சாதிச் சனங்களும் கூடிக் கலந்து, சமுத்திரமாக அலைமோத... வருங்கால இந்தியாவின் அடையாளமாக...

சாதியிலிருந்து ‘தள்ளி’ வைக்கப்பட்ட தாழையாவின் இறுதி ஊர்வலம், சகல சாதி மக்களின் உணர்ச்சிமயமான மரியாதையோடு முன்னேறியது. காலம், தாழையா பெயரை தன் நெஞ்சில் பொறித்துக் கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊர்மண்/025&oldid=1818154" இலிருந்து மீள்விக்கப்பட்டது