உள்ளடக்கத்துக்குச் செல்

எது வியாபாரம், எவர் வியாபாரி/006-017

விக்கிமூலம் இலிருந்து



திருக்குறளில் வணிகம்

ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை முதலியவைகளைப் பார்ப்பதில் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி. அதிலும் யானைப் போரைப் பார்ப்பதில் ஒருவனுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும். அதிலும் யானை தன் பக்கம் திரும்பி விட்டால் தீங்கு விளையுமே என்ற அச்சமும் ஏற்படும். ஆனால் அவன் குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பதில் அவனுக்கு அந்த அச்சம் ஏற்படாது. அது எப்படிப்பட்டது என்பதை வள்ளுவர் அடியிற்கண்டவாறு கூறுகிறார்.

அதிக மூலதனத்தை வைத்துத் தொழில் செய்யும் ஒரு வணிகன், தன் வணிகத்தை எவ்வித இழப்புமின்றி வெற்றியோடு செய்து மகிழ்கின்றானோ அதுபோன்று என்பதே. குறள் இதுதான் :

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.”

(758)

இது ஒவ்வொரு வணிகரும் தம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று.

மற்றொன்று :

வணிகத் தொழில் புரியும் அன்பர்களுக்கு வள்ளுவர், எல்லா வணிகமும் வணிகமல்ல; ஒரு உயர்ந்த வணிகம் செய்ய வேண்டுமென்று ஒரு புதிய வழியைக் காட்டுகின்றார். அது வணிகத் தொழில் புரிகின்றவர்கள் பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதிச் செய்ய வேண்டும். அதுவே உயர்ந்த வணிகமுறையாகும் என்பது. குறள் இதுதான் : "வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின்

(120)

வள்ளுவர் வணிகப்பெருமக்களுக்குக் கொடுத்திருக்கும் இடம் ஒர் உயர்ந்த இடமாகும். சான்றோர்களுக்கு அறம் சொல்ல வந்த வள்ளுவர் வணிகப் பெருமக்கள் கையாளுகின்ற தராசைச் சுட்டிக்காட்டி அதன் நடுமுள் எப்படி ஒரு பக்கமும் சாய்ந்து விடாமல் நிற்கிறதோ அப்படியே சான்றோர்கள் தங்கள் உள்ளத்தை நடுநிலைமை பிறழாமல் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். குறள் இது :


“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.”

(118)

இது எவ்வளவு பெரிய உயர்ந்த இடம் என்பதை ஒவ்வொரு வணிகரும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

எப்படியும் தொழில் செய்யலாம், எந்த வகையிலும் பொருள் சேர்க்கலாம் என்பது வணிக முறையல்ல தீமையான செயல்களை நீக்கி, நல்ல வழிகளைக் கையாண்டு, நேர்மையான முறைகளில் பொருள் சேர்ப்பதே “சிறந்த வணிகம்” ஆகும். அது ஒன்றுதான் அறமும் இன்பமுமாகிய மகிழ்ச்சியைத் தரும் வணிகமாகும் என்று குறள் கூறுகிறது.


அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.


ஒரு வணிகன் தன் தொழிலில் வெற்றிபெறத் தேவையானவை என்னென்ன? என்பது ஒரு கேள்வி. ‘பொருள்’ என்பர் சிலர். ‘அனுபவம்’ என்பர் சிலர். ‘நண்பர்கள்’ என்பர் சிலர். ‘குடும்பம்’ என்பர் சிலர். ‘அரசாங்க உதவி’ என்பர் சிலர். ‘நல்ல விளைவு காலம்’ என்பர் சிலர். ‘நல்ல பஞ்ச காலம்’ என்பர் சிலர் வள்ளுவர் இத்தனையையும் ஒப்ப இல்லை. அவனுக்கு வேண்டியது ‘மன உறுதி’ ஒன்றே என்று கூறுகிறார்.குறள் இதுதான்:


“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

(661)