என் கனா
என் கனா
ஆசிரியர்
மேலாண்மை பொன்னுச்சாமி
வைகறைப் பதிப்பகம்
பெஸ்கி கல்லூரி
திண்டுக்கல் – 624001
- வைகறை வெளியீடு - 155
புத்தகத்தின் பெயர் : என் கனா முதற்பதிப்பு : அக்டோபர் 1999 ஆசிரியர்கள் : மேலாண்மை பொன்னுசாமி மொழி : தமிழ் பொருள் : சிறுகதை உரிமை : வைகறைப் பதிப்பகம்
திண்டுக்கல்பைண்டிங் : ஆர்ட்போர்டு தாள் : 10.6kg வெள்ளைத் தாள் அச்சு எழுத்து : 11 புள்ளி பக்கங்கள் : 160
- வெளியீட்டாளர்: சிரில், சே.ச.
- விலை ரூ. 30.00
- அச்சிட்டோர் : பயனியர் அச்சகம், சிவகாசி.
வைகறை வானத்திலிருந்து
என் கனா. இவர் காண்பது நல்ல கனாவா! கெட்ட கனாவா! நல்ல கனா காண்பவர்கள்தானே சமூக செயல்பாட்டாளர்களாக விளங்க முடியும்.
நல்ல கனாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கி வாழ்பவர்தான் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள். இவர் பல சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர். சிந்திக்கின்ற வாசகர்களுக்கு உறவுக்காரரும் கூட. தனக்கென்று ஒரு கணிசமான வாசக வலைப் பின்னல்களை உருவாக்கிக் கொண்டவர். இவரது கதை வருகைக்காக காத்திருப்பவர்கள் ஏராளம்.
இவரது கதைகளில் சமூக எதார்த்தம் எரிமலைக் கொழும்பாக வெடித்து சிதறும். எளிய நடை, நளினமான எழுத்து ஓட்டம், மக்கள் மொழியைக் கையாளும் திறன், வேரோட்டமான கருத்தியல் சித்தாந்தங்கள், அடிமைப் பாரம்பரிய மதிப்பீடுகளையும் கருத்தியல்களையும் ‘சம்மட்டி’ எழுத்து கொண்டு அடிக்கின்ற வீரம், உள்ளக் குமுறல்கள், வேதனைகள், ஏக்கங்கள், கோபக் கனல்கள் நம்பிக்கை உணர்வுகள் அனைத்தும் இவரது கதைகளில் சரளமாக நடனமாடும். வாசிப்பவரின் சிந்தனைகளையும் நடனமாடவைக்கும். நிதானமாக்கும். மனதை நிசப்தப்படுத்தும்.
குழந்தைகள், பெண்கள், தலித் மக்கள், தொழிலாளர்கள், இயற்கை போன்றவர்கள்தான் இவரது சிறுகதைகளில் வரும் கதாநாயகர்கள்.
பணத்துக்காக எழுதுபவர்கள் பேசுபவர்கள், குலுங்க குலுங்கச் சிரிக்க வைப்பவர்கள் தமிழ் மண்ணில் வளர்ந்து வருகின்ற வேளையில், சமூகத்திற்காக எழுதுகிற திரு. மேலாண்மை அவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் வைகறை ஆனந்தம் கொள்கிறது.
பண்பும், பாசமும்; உறவும் உணர்வும்; திடனும், திறமையும்; மதிப்பீடும் மாற்றுச் சிந்தனையும் கொண்ட ஆசிரியர் மேலாண்மை அவர்கள் வளரவேண்டும். இழந்த உலகத்தை எட்டிப் பார்க்க கனா காணும் பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள் போன்றோரின் உணர்வுகளைப் புரிந்து மதித்து மறுபடியும் அவர்களை மனிதர்களாக வாழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதும் ஆசிரியரின் கனா நனவாக வாழ்த்துகிறேன்.
கனவுகள் மலரும் நம்பிக்கையில்
சிரில்
அணிந்துரை
மேலாண்மை பொன்னுச்சாமி ஓர் சமூக உணர்வுக் கூர்மை மிக்க அற்புதப் படைப்பாளர். பதமான சலவைக்கல்லை – உளியால் தட்டிப்பார்த்தும் அந்தக் கல்லுக்குள்ளே சிறைப்பட்டுக் கிடக்கிற வானதூதரை விடுவித்து வெளியே சிற்பவடிவில் கொண்டுவிடுகிற மைக்கேல் ஆஞ்சலோவைப் போல... அவரது பேனா முனை...
வாழ்க்கை முள் மீது கிடந்து நடந்து குருதிகொட்டுகிற சாமானியர்கள்தான் இவரது கதை மாந்தர்கள்! மனிதர்களைப் போலவே இவர் இயற்கையையும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்! அவருடைய சொற்செட்டும், நடைச்சித்திரமும், கதை வார்ப்பும், உத்தி முறைகளும், உணர்வுச் சூழல்களின் பதிவுப் பரிணாமங்களும் மனிதத்தின் சிகரத்தைத் தொடுகின்றன!
இந்தத் தொகுப்பில் உள்ள ஒருசில கதைகளைப் பற்றி எனது மனப்பதிவு அணுகுமுறையில் சொல்வதென்றால்...! ஒரு தேசம் நாகரிகத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அங்கு உழைக்கிறவர்களுக்குப் பயனுள்ள விளையாட்டு, பொழுது போக்கிற்குப் போதிய நேரத்தை அனுமதிக்கவேண்டும். மயில்த்தாய், தனது குழந்தைப் பருவத்திலேயே தீப்பெட்டித் தொழிலில் தள்ளப்படுகிறாள். அவள் ஞாயிறு விடுமுறையில்கூட தூக்கம், அவள் தொலைக்காட்சியில் படம் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கத்தைப் பறித்துக்கொள்கிற சோகத்தை குழந்தைத் தொழிலாளிகளின் இழந்த உலகமாக நம் முன் நிறுத்துகிறது இழந்த உலகம் சிறுகதை.
எழுதத்தொடங்கிவிட்டேன் என் கதையை! என்று கதை முடிகிறது. அது முடிவல்ல! மீண்டும் நம்மைக் கதையின் ஆரம்பத்திற்குக் கொண்டுபோய் நிறுத்தி மறுவாசிப்புச் செய்யத் தூண்டுகிறது என் கதை! ஆழ்ந்த கவலைகளும் வேதனைகளும் மூழ்கடிக்கிற கலைஞனது காயங்களும் ரணங்களும் தான் சுவையான அவனது கதைகளின் ரிஷி மூலம்! தன்னையே கதைச் சிற்பமாகப் பொன்னுச்சாமி செதுக்கிக்கொள்கிற கதை!
கவர்மெண்ட் அதிகாரமையமான கச்சேரியில் கொடிகட்டிப் பறக்கும் கர்ணம்! கர்ணம் சாமி! கடவுள் சாமியாகவே தொழப்படுகிற அதிகார மேலாண்மை மிக்கவர். வரி வசூலிக்கத் தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குப் போனால்கூடத் தன்மானமும் சுய நன்மதிப்பும் மரியாதையும் பாதிக்கப்பட்டுவிடும் என நம்புகிறவர். தன் அடிமட்ட சேவகப் படையான தலையாரி வெட்டியான்கள் மூலமாக ஆணைச்சரகத்தை வெற்றிகரமாகச் செலுத்தியவர். ஆனால் அவரது தீண்டாமை அதிகாரத்துக்கு எதிராகவும் அறைக்கூவல் விடுக்கிறான் தேவசகாயம். கல்வியறிவும் சட்ட உணர்வும் கர்ணத்தின் முன் தலை நிமிர்ந்து நேருக்கு நேர்படப் பேச வெடிப்புறப் பேசவைக்கிறது. மற்றவர்போல் கூனிக்குறுகி, வளைந்து, நெளிந்து குன்னிக் குனிந்து குமைந்து குட்டுப்படுகிற சராசரி சேரி மனிதனாக அவன் இல்லை! வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்து வலிமையை உரமாய் மனசில் ஏற்றுகிற வீராப்புக் கதை! அது சரி... அதென்ன கண்ணகி கதைத் தலைப்பு? கண்ணகியின் மறுபிறப்பு அவதாரம் தான் தேவசகாயமா?
சிலர் கவிதையில் கதை எழுதுவார்கள்; பொன்னுச்சாமி என் கனா என்கிற கதை மூலம் கவிதை எழுதுகிறார். நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பொன்னுச்சாமியின் முத்திரை பதித்த நடை! ஒரு வேப்பமரத்தின் கனா ... வேப்பமரத்தை ஆளாக்கிய சின்னக்கனியின் கடைசி மூச்சுடன் வேம்பும் வெட்டப்பட்டு அதன் கதையும் முடிந்துவிடுமோ என்கிற கவலை நெஞ்சைக் குடைகிறது. ஆனால் கதை முடிவு வேம்பின் வடிவில் தன் தந்தையையே கண்டு அவர் மகன் வாழவைக்கத் தீர்மானிக்கிற போது நம் நெஞ்சில் பாறையாகி அழுத்திப் பாரம் தரையிறக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்பை நம் முன் பதியம் போடுகிற கதை ... என் கனா
இப்படியே இதன் ஒவ்வொரு கதையாய் கள்வம், உறவியின் நிஜம், கைநாட்டு, இந்தக் காலத்துத் தாய், மண் ஆகிய சிறுகதைகளும், அதீதம் குறுநாவலும் . . . எடுத்து வாசிக்கத் தொடங்கினால், குழந்தையை அள்ளி அணைத்துக் கீழே இறக்கி விட்டால் ஏற்படும் மனசின் வலி போல் கீழே நூலை வைக்க மனசு மறுக்கும் . . . உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டால் பொன்னுச்சாமியின் கதைகள் சிகரங்களைத் தொட்டுவிடும் நாள் தொலைவில் இருக்காது . . . உங்களுக்கு இன்னமும் குறுக்கே இருக்கலாமா நான்? விடை கொடுங்கள் . . . வெல்க வைகறைப் பதிப்புகள்!
இளைய நந்தன்
முனைவர் அ. அந்தோணி குருசு
தூய வளனார் கல்லூரி, திருச்சி
என்னுரை
‘கிளிப்பிள்ளையைப் போல பேசுவான்’ என்ற ஆங்கிலப் பேரறிஞரின் பொன்மொழியை பொய்யாக்கிக் காட்டியவர் கவிஞர் சூரியதாஸ்.
அவரது அதற்கு அப்பாலும் என்ற இரண்டாவது கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா திண்டுக்கல்லில் நடந்தது. நானும் கலந்துகொண்டு, உளமார ரசித்த கவிதானுபவங்களைப் பகிர்ந்து வாழ்த்திவிட்டு வந்து விட்டேன். அத்துடன் முடிந்தது என்று முற்றுப்புள்ளியாக நினைத்தேன். அது ஓர் உறவுக்கோலப் பின்னலின் முதற் புள்ளியாகும் என்று நான் நினைக்கவேயில்லை. ஆனால், அப்படியே நிகழ்ந்தது.
அந்த நூலை வெளியிட்டிருந்த வைகறைப் பதிப்பகத்தின் பொறுப்பாளர் அ. சிரில், சே.ச. அவர்களின் வித்தியாசமான குணம், பழகிய சுபாவ இங்கிதம், ஞான நிறைகுடத் ததும்பலான இனிய புன்னகை, வைகறைப் பதிப்பகத்தை நிர்வகித்து வருகிற தனிச்சிறப்பான வகை எல்லாமே என்னைப் பிரமிக்க வைத்தது. என் மனசின் முக்கிய இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
த.மு.எ.ச. நடத்திய அந்த நூல் வெளியீட்டு விழாவின் நாயகன் சூரியதாஸ் மனசுக்குள் அரும்பிய ஒரு பூ இதழ் விரித்தது. விருப்பம் மகரந்தமாக வாசம் வீசியது.
‘வைகறைப் பதிப்பக வெளியீட்டு மூலமாக தங்கள் கதைத் தொகுப்பு ஒன்று வெளிவரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆர்வத்துடன் அதற்காக வைகறைப் பதிப்பகப் பொறுப்பாளர்களிடம் அணுகலாம் என்றிருக்கிறேன். நீங்கள் ஒத்துழைப்பீர்களா?’ என்று கவிஞர் சூரியதாஸ் ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கவிஞரின் கடிதம் தான் முதற்புள்ளி. அதன் கோல ஓவியமாக... இதோ என் கனா என்ற கதைத் தொகுதி உங்கள் கையில்.
‘வைகறைப் பதிப்பகம் மூலமாக வருகிறது, எனது கதைத் தொகுதி. இதுவே முதற்புள்ளியாக இருக்க வேண்டும், முடிவற்ற உறவின் கோலப்பின்னல் ஓவியமாக எதிர்காலம் அமைய வேண்டும்’ என்று உளமார விரும்புகிறேன்.
இதிலுள்ள கதைகள் ஆனந்த விகடன், கல்கி, செம்மலர், தாமரை, அமுதசுரபி போன்ற இதழ்களில் பிரசுரமானவை.
இந்தக் கதைகள் பற்றி நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவையே தம்மை உரியமுறையில் அறிமுகம் செய்து கொள்ளும். அதற்காக வலிமையும் நட்பும் அவற்றுக்கு உண்டு.
‘உறவின் நிஜம்’, ‘மண்’, ‘இந்தக் காலத்துத்தாய்’ ஆகிய மூன்று கதைகளும் எனது ஆரம்ப நாளைய கதைகள். ‘மண்’ தாமரையிலும், பிற இரண்டும் செம்மலரிலும் பிரசுரமானவை. ஏன் இந்தக் கதைகளை இதில் சேர்த்திருக்கிறேன்?
ஒரு படைப்பாளி ஒரே மாதிரி மாற்றமின்றி இருப்பதில்லை. தினந்தோறும் மாறுகிறான். காலந்தோறும் வளர்கிறான். ‘செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம்’ என்பதைப் போல பழகப் பழக தூரிகை வளர்கிறது. சித்திரத்தின் தரமும் மாறுகிறது.
மாறுவதும் வளர்வதுமாக இயங்குகிறான். வளர்கிற கரும்பில் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமும், கணுவாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லையா? அப்படித்தான் படைப்பாளியும்.
படைப்பின் காலத்தில் படைப்பாளி எப்படி இருந்தான் என்பதை படைப்பே சொல்லும். ஆமாம்.....மேற்கண்ட கதைகள் மூன்றும் எனது பழையகணு. கடந்த ஒரு காலக்கட்டம். மேலாண்மையினுள் இருந்த பழைய முகம்.
என்படைப்புகளில் எம்ஃபில் ஆய்வு செய்தோர் சிலர். செய்து கொண்டிருப்போர் பலர், முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் தற்போது நால்வர். இவர்களுக்கெல்லாம் பயன்பட வேண்டும் என்பதால் தான், இந்த மூன்று கதைகள்.
இதில் ‘மண்’ கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. ‘மாமிச ருசியை பிராணிகள் வளர்ந்த மண் நிர்ணயிக்கிறது’ என்கிறது கதை. ஆனால் இப்போதுள்ள மேலாண்மை மண்ணின் தன்மையையும் நிர்ணயிப்பது நிலத்தடி நீர்தான் என்று புதிதாகப் புரிந்திருக்கிறான் என்பதை இந்த என்னுரையில் பதிவு செய்தாக வேண்டும். போதும்... கதைத் தொகுப்பும் நீங்களுமாய்... இனி...
என் கதைகளைப் பிரசுரம் செய்து எனக்கு முகவரி தந்த தாய் பூமி செம்மலர், சகோதர பூமி தாமரை, என் முகவரிக்கு கூடுதல் வெளிச்சம் தந்த கல்கி, ஆனந்த விகடன், அமுத சுரபி ஆகிய இதழ்களுக்கும், அவர்கள் காட்டிய பேரன்புக்கும், கதைகளைத் தொகுப்பாக வெளியிட வழங்கிய அனுமதிக்கும்...
கதைத் தொகுப்பு வெளியிட பேருதவியும், கடின உழைப்பும் தந்த கவிஞர் சூரியதாஸ் அவர்களுக்கும்....
கதைத் தொகுப்பை பொறுப்பேற்று வெளியிட முன் வந்து, எனக்குள் சிகரமாய் உயர்ந்திருக்கும் வைகறைப் பதிப்பகப் பொறுப்பாளர் அ. சிரில் அவர்களுக்கும்... அட்டைப்பட ஓவியத்தை வழங்கிய கவிஞர் ஸ்ரீரசா அவர்களுக்கும்... கதைத் தொகுப்பை ஆதரித்து விற்பனை செய்கிற, தமிழ் கூறுநல்லுலக முற்போக்காளர்களுக்கும்...
வாசித்து முடித்தபின்பு மௌனமாகிவிடாமல், உள்ளதை உள்ளபடி – உணர்ந்த படி – பாராட்டி என்னை உற்சாகப்படுத்துவோருக்கும், இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி என்னைக் கூர்மைப்படுத்துவோருக்கும்... எல்லோருக்குமே...
எனது இதய பூர்வமான நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
- நன்றி!
என்றும் உங்கள்,
மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண் மறைநாடு - 626127
விருதுநகர் மாவட்டம்.