என் சரித்திரம் / 118 மூன்று துக்கச் செய்திகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அத்தியாயம்-118
மூன்று துக்கச் செய்திகள்

புறநானூறு 1893-ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெ நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் அச்சாகத் தொடங்கியது. வழக்கம்போல் நான் ராமையங்கார் தோட்டத்தில் தங்கி அச்சு வேலையைக் கவனித்து வந்தேன். இப்பதிப்புக்குத் திருமானூர்க் கிருஷ்ணையரது சகாயத்தைப் பெற முடியாமற் போயிற்று. வை. மு சடகோப ராமானுஜாசாரியர் என்னுடனிருந்து மிக்க உதவி செய்து வந்தார். பதிப்பிக்கும் விஷயத்தில் அவருக்குச் சிறந்த திறமை இருந்தது. அவர் ஒருவரே இரண்டு மூன்று பேர் செய்யக் கூடிய வேலைகளைச் செய்தார். ஆகையால் பதிப்பு விரைவாகவே நடை பெற்று வந்தது.

சதாசிவ பிள்ளை பிரதி

சென்னையில் ஆறுமுக நாவலருடைய அச்சுக்கூடத்தைக் கவனித்து வந்த சதாசிவ பிள்ளையிடம் ஒருநாள் போயிருந்தேன். அவர் தம்மிடம் புறநானூற்றுப் பிரதியென்று இருப்பதாகச் சொல்லிப் பிறகு ஒரு நண்பர் மூலம் எனக்கு அனுப்பினார். அதில் மூலம் மாத்திரம் இருந்தது; நூல் முழுவதும் இல்லை. 267-ஆம் செய்யுள் முதல் 369-ஆம் செய்யுள் வரையிலும் இருந்தன. ஒரு செய்யுள் கிடைத்தாலும் போற்றிப் பாதுகாக்கும் எனக்கு அந்தப் பிரதி பல வகையில் உபயோகமாக இருந்தது.

அந்த முறை புறநானூற்றில் 18 பாரங்கள் நிறைவேறின. காலேஜ் திறக்கும் காலம் சமீபித்தமையால் மேலே ப்ரூபைக் கும்பகோணத்துக்கு அனுப்பும்படி ஏற்பாடு செய்து விட்டு நான் புறப்பட்டு விட்டேன். சேலத்து வழியாகச் சில ஊர்களைப் பார்த்துக் கொண்டு சென்றேன். புறநானூற்றிலே சொல்லப்பட்ட ஊர்களிற் சிலவற்றைக் கண்டு அவற்றின் வரலாற்றை விசாரிக்க வேண்டுமென்பது என் விருப்பம். கருவூருக்குப் போயிருந்தபோது அங்குள்ள வக்கீல்களிற் சிலர், “எங்கள் கட்சிக்காரர்களிற் சிலபேர் வள்ள லென்னும் பட்டப் பெயருடையவர்களாக இருக்கிறார்கள்” என்ற செய்தியைத் தெரிவித்தார்கள். பத்துப் பாட்டிலும் புறநானூற்றிலும் கடையெழு வள்ளல்களின் பெயர்களும் வரலாறுகளும் சொல்லப் பெற்றுள்ளன; ஒரு கால் அவர்கள் பரம்பரையினராக இருக்கக் கூடுமென்று எண்ணினேன்.

வெ. ப. சுப்பிரமணிய முதலியார்.

கும்பகோணத்திற்கு வந்து புறநானூற்று அகராதியை முடித்தேன். அக்காலத்தில் ஸ்ரீமான் ராவ்சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் அப்பக்கத்தில் மிருக வைத்திய ஸூபரிண்டெண்டெண்டாக இருந்தார். அவருடைய பழக்கம் எனக்கு உண்டாயிற்று. அவருடைய தமிழன்பும் கம்பராமாயணப்பற்றும் எங்களுடைய நட்பை வன்மை பெறச் செய்தன கும்பகோணத்துக்கு அருகில் அவர் முகாம் போடும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு பேசிச் சல்லாபம் செய்து வருவேன். தாம் இயற்றும் செய்யுட்களை எனக்குச் சொல்லிக் காட்டி வருவார். ஆங்கிலம் படித்துத் தக்க உத்தியோகத்திலிருக்கும் ஒருவருக்குத் தமிழில் அவ்வளவு ஆழ்ந்த அன்பு இருந்தமை முதலில் எனக்கு வியப்பை உண்டாக்கியது.

காலேஜில் என் கடமையை ஒழுங்காகக் கவனித்து வந்தேன். கோபாலராவுக்குப் பிறகு பிரின்ஸிபாலாக வந்தவர்களெல்லாம் அவரைப் போலவே என்பால் அன்பு காட்டி வந்தார்கள். சிந்தாமணி பதிப்பிக்கும் காலத்தில் பிரின்ஸிபாலாக இருந்த பில்டெர்பெக் துரை எனக்கு அதிக ஊக்கத்தை உண்டாக்கினார். கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை முதலிய இடங்களுக்கு அந்நூலை அனுப்பி அவர்களை எனக்கு நன்றியறிவோடு கடிதம் எழுதும்படி அவர் செய்தார்.

நடுவேனிற் கனவு

புறநானூற்றுப் பதிப்பு நடந்து வந்த காலத்தில் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்தவர் ஜே.ஹெச். ஸ்டோன் என்பவர், அவர் காலத்தில் காலேஜில் பலவிதமான விசேஷங்கள் நடைபெறும். ஒரு முறை காலேஜ் மாணாக்கர்களைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகமாகிய ‘நடுவேனிற் கனவு’ (Midsummer Night’s Dream) என்பதைத் தமிழில் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்தார். அந்நாடகத்தைக் காலேஜ் ஆசிரியராகிய நாராயணசுவாமி ஐயரென்பவர் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் விருப்பப்படி அதனை முற்றும் பார்த்துத் திருத்தம் செய்து கொடுத்ததோடு இடையிடையே சில பாடல்களையும் இயற்றிச் சேர்த்தேன். அந்நாடகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த மொழி பெயர்ப்பைப் பரிசோதித்த காலத்தில் ‘ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை ஆங்கிலந் தெரிந்த ஒருவர் துணையைக் கொண்டு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாம். காளிதாஸ மகா கவியின் நாடகங்களைத் தமிழில் வசனமாகவும் செய்யுளாகவும் எழுதி வெளியிடலாம்’ என்ற புதிய கருத்து எனக்கு ஏற்பட்டது. மடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சாகுந்தலச் சுலோகங்களிற் சிலவற்றை மொழி பெயர்த்ததுண்டு. ‘பழங் காலத்துத் தமிழ் நூல்களை மாசு கழுவி வெளியிடும் தொண்டில் அல்லவா ஈடுபட்டிருக்கிறோம்?’ என்ற எண்ணத்தால் அத்துறையிலே சென்ற உள்ளத்தை மீட்டுக் கொண்டேன். காலேஜ் ஆசிரியர்கள் பலர். “நீங்கள் புதிதாக வசன நூல்கள் எழுதுங்கள். பாடமாக வைக்கும்படி செய்யலாம். அதனால் உங்களுக்கு நல்ல பொருள் வருவாயுண்டாகும்” என்று அவ்வப்போது சொல்வார்கள் சில சமயங்களில் பொருள் முட்டுப்பாட்டினால் அவர்கள் சொல்லும் யோசனைப் படியே செய்யலாமென்ற சபலம் தோற்றினாலும் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே ஒன்றிப் போன என் உள்ளத்தில் அந்தச் சிறு விருப்பங்களெல்லாம் நிலை கொள்ளவில்லை.

காவேரியாச்சிக்கு உபகாரம்

அக்காலத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மனைவியாராகிய காவேரி யாச்சி மாயூரத்தில் இருந்து வந்தார். அவரைக் கவனித்துப் போஷிப்பவர் ஒருவரும் இல்லை. அவர் அடிக்கடி தமக்குப் பொருள் வேண்டுமென்று கடிதம் எழுதுவார். நான் அவ்வப்போது பொருளுதவி செய்து வருவேன். பழந்தமிழ் நூற்பதிப்பிலே ஈடுபட்ட அக்காலங்களில் இடையிடையே பிள்ளையவர்களுடைய நினைவு உண்டாகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் பல காவேரி யாச்சியின் கடிதங்களும் அந்நினைவுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

திருப்புகழ்ப் பதிப்பு

திருத்தருப்பூண்டியில் அப்போது ஜில்லா முன்ஸீபாக இருந்தவர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளையென்பவர். அவர் முருகக் கடவுளிடத்தில் அளவற்ற பக்தியுடையவர். அக்காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் அங்கங்கே வழங்கி வந்தது.

திருப்புகழ்ச் சுவடிகளைச் சிலர் வைத்திருந்தனர். அருணகிரி நாதருடைய வாக்கிலே ஈடுபட்ட சுப்பிரமணிய பிள்ளை திருப்புகழ்ப் பாடல்களைத் திரட்டி வெளியிடவேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்யத் தொடங்கினார். தாம் உத்தியோகம் பார்த்து வந்த இடங்களிலும் அவற்றைச் சார்ந்த இடங்களிலும் விசாரித்து விசாரித்துத் திருப்புகழ்ப் பாடல்களைச் சேகரித்தார். ஏடுகளைத் தொகுத்தார். பாடுபவர்களிடமிருந்து கேட்டு எழுதிக் கொண்டார். எனக்குக் கிடைத்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்தேன். அவர் மிகவும் சிரத்தையுடன் தொகுத்து வந்தைதை அறிந்து அவர்பால் எனக்குப் பற்றுதல் உண்டாயிற்று. அவர் அடிக்கடி கடிதம் எழுதுவார். திருப்புகழைப் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு புரூபை எனக்கு அனுப்பி வந்தார். நான் பார்த்துத் திருத்தி அனுப்புவேன். புறநானூறு பதிப்பித்து வந்த காலத்தில் இந்தத் திருப்புகழ்க் கைங்கரியம் எனக்கு முருகப்பிரான் தியானத்தால் உண்டாகும் பயனையும் நெஞ்சத் திண்மையையும் கிடைக்கச் செய்தது.

மகாவைத்தியநாதையர் நிரியாணம்

1893-ஆம் வருஷத்தில் மூன்று துக்க நிகழ்ச்சிகள் நேர்ந்தன. நந்தன வருஷம் தை மாதம் 16-ஆம் தேதி (27-1-1893) மகா வைத்தியநாதையர் சங்கீத உலகத்திலே தம் புகழுடம்பை நிலை நிறுத்திப் பூதவுடம்பை நீத்தார். அந்தச் செய்தியை அறிந்தபோது என் தந்தையாரும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரும் நானும் பிறரும் அடைந்த வருத்தத்துக்கு முடிவில்லை. ‘இனி அந்த மாதிரி சங்கீதத்தை வேறு எங்கே கேட்கப் போகிறோம்’ என்ற பேச்சுத்தான் எல்லோரிடமும் எழுந்தது. சிவபக்தியும் பாஷா பயிற்சியும் ஒழுக்கமும் சங்கீதத் திறமையும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அவரைப் போன்ற ஒருவர் இந்நாட்டிற் பிறப்பது அரிது.

தந்தையார் இழந்தது

அவ்வருஷம் செப்டம்பர் மாதத்தில் என் தந்தையாருக்கும் தாயாருக்கும் தேக அசௌக்கியம் உண்டாயிற்று. இருவருக்கும் நோய் கடுமையாகவே இருந்தது. இருவருடைய நிலையும் நம்பிக்கை தருவதாக இல்லை. என் தாயார், தந்தையாருக்கு முன் காலமாய் விடலாமென்று தோற்றியது. ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. அக்டோபர் மாதம் 7-ம் தேதி டாக்டர் வழக்கம் போல் வந்து இருவரையும் பார்த்தார். “தந்தையார் நிலை அபாயகரமாக இருக்கிறது; அவரை மேல் மெத்தையிலிருந்து கீழே கொண்டு போவது நல்லது” என்று டாக்டர் சொல்லவே அப்படியே

செய்தோம். அப்பொழுது அவருக்கு நல்ல ஞாபகம் இருந்தது. பஞ்சாட்சர மந்திரத்தின் தியான சுலோகத்தையும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் தியான சுலோகத்தையும் அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அருகிலிருந்து கவனித்து வந்தேன். நினைவு மறக்கும் தறுவாயில் என்னை அவர் அழைத்து மெல்ல, “சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்று சொன்னார். அதன் பிறகு என் தந்தையாருடைய வார்த்தையைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாமற் போயிற்று. அவர் கூறிய அந்த உபதேசத்தை நான் மறக்கவில்லை; என்னால் இயன்றவரையில் கடைப்பிடித்து வருகிறேன். சிவபெருமானுடைய பக்தர் கூட்டத்தில் சேருவதற்கு எனக்குச் சிறிதும் தகுதியில்லை. என் தந்தையார் உறுதியான சிவ பக்தியுடையவர். சிவபக்தி பண்ணுவதையே தம் வாழ்க்கையாக அவர் செய்து கொண்டார். அவரிடம் பெற்ற பரம்பரைச் செல்வம் அந்தச் சிவ பக்தி. ஆதலால் என்னை அறியாமலே அதில் ஒரு பங்கு எனக்கு அமைந்திருந்தது. ஆனாலும் நானெங்கே! என் தந்தையாரெங்கே!

அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். அவருடைய மரண காலநிலையை என் தாயார் அறிந்து கொள்ளவில்லை; நோய்வாய்ப் பட்டு மயக்க நிலையிலிருந்தார். தந்தையார் காலமான துக்கச் செய்தி காதிற்பட்டவுடனே அந்த மயக்கம் இருந்த இடம் தெரியாமல் அகன்றது. உடனே எழுந்து உட்கார்ந்து புலம்பத் தொடங்கி விட்டார். நானும் அதுகாறும் அடையாத வருத்தத்தை அடைந்தேன்; அழுதேன்; அரற்றினேன். என் நண்பர்கள் ஆறுதல் கூறினர்; கடிதங்கள் எழுதினர். பலர் தங்கள் வருத்தத்தைச் சரம கவிகளால் தெரிவித்தனர்.

என் தந்தையார் இயல்புகளை எண்ணி எண்ணி நைந்து சில பாடல்களை நான் இயற்றினேன். அவரை நினைக்கும்போதெல்லாம் முதலில் அவரது சிவ பக்தியும் சிவ பூஜையுமே முன் வந்து நின்றன. அவரது சங்கீதத் திறமையும் தொடர்ந்து ஞாபகத்துக்கு வந்தது. நான் முன்னுக்கு வரவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த கவலையையும், என் கல்வியின் பொருட்டு ஊர் ஊராகத் திரிந்து அங்கங்கே தங்கித் தங்கி என் தமிழ்க் கல்வி அபிவிருத்தியாகும்படி செய்த பெருமுயற்சிகளையும் எண்ணி எண்ணி உருகினேன். இந்த எண்ணங்களிற் சில அந்த இரங்கற் பாடல்களிலே அமைந்தன. அச்செய்யுட்களிற் சில வருமாறு:


  “மெய்யார நீறணிந்து விழிமணிமா லிகைபூண்டு
  கையார மலரேந்திக் கசிந்துருகித் தினந்தோறும்
  மையாரும் மணிமிடற்று மாதேவை அருச்சிக்கும்
  ஐயாவென் னையாவென் னையாவெங் ககன்றனையே!”

[நீறு - விபூதி. விழிமணிமாலிகை - ருத்திராட்ச மாலை. மையாரும் மணிமிடறு - நீல நிறம் பொருந்திய மணி போன்ற திருக்கழுத்து]


  “பற்றலெங்கே செந்தமிழைப் பற்றிக்கற் றோர்பலர்பால்
  துற்றலெங்கே மீனாட்சி சுந்தரநல் லாரியன்பால்
  கற்றலெங்கே கற்றுக் கவலையொரீஇ யந்நிலையே
  நிற்றலெங்கே இன்றுவரை நீயருள்செய் யாவிடினே!”

[துற்றல் - கல்வியை நுகர்தல். ஒரீஇ - நீங்கி]


  “அத்தா நினதுபிரி வல்லற் கடலழுத்திப்
  பித்தாக்கி யென்னைப் பெரிதும் வருத்துறுமால்
  எத்தானஞ் சென்றாய் இதுவோநின் தண்ணளியே
  சத்தான இன்பமுறு சங்கீத சாகரமே!”

[அல்லற்கடல் - துக்க சாகரம். தானம் - இடம். சத்தான - நிலையான]


  “அன்போடு சிவபூசை யாற்று மிடத்தொடுநீ
  இன்போடு பாடி இருக்குமிட முந்தமியேன்
  துன்போடும் படிவார்த்தை சொல்லுமிடந் தானுமந்தோ
  என்போடு முள்ளுருக என்னை வருத்துறுமால்.”

[ஆற்றும் - செய்யும். துன்பு ஓடும்படி]

என் தந்தையாருக்குரிய ஈமக் கிரியைகளையெல்லாம் செய்து முடித்தேன். அதுகாறும் என் தலையிலேறாமலிருந்த குடும்பச் சுமையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. தந்தையார் காலமானதால் உண்டான துக்கமும், புதிய பொறுப்பும் என்னுடைய தமிழ்ப் பணிக்குச் சிறிதளவு தளர்ச்சியைக் கொடுத்தேன்.

அரங்கநாத முதலியார் பிரிவு

தந்தையார் காலமான செய்தி தெரிந்து வருத்தம் தெரிவித்த அன்பர்கள் பலர். பூண்டி அரங்கநாத முதலியார் அவர்களுள் ஒருவர். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த உபகாரியின் மரணத்தைக் குறித்தே வருந்தும் துர்ப்பாக்கியமும் எனக்கு உண்டாயிற்று. 10-12-1893 இல் அவர் காலமானார். அச் செய்தி கேட்டுத் தமிழ் நாட்டிலுள்ளார் திடுக்கிட்டனர். தமிழ்ப் புலவர்கள் மனங் கலங்கினர். பல வகையான ஸ்தாபனங்களில் அவர் தலைமை வகித்து ஊழியம் புரிந்து வந்தார். அவருடைய ஆதரவிலே பல நல்ல முயற்சிகள் ஓங்கி வந்தன. அவற்றோடு தொடர்புடைய யாவரும் இடி விழுந்தது போலச் செயலற்றுப் போயினர். ஆங்கிலத்தில் மிகவும் சிறந்த புலமை வாய்ந்து தமிழிலும் புலமை வாய்ந்தவர்களை அக்காலத்தில் பார்ப்பது அருமை. அவர் மரணத்தைக் குறித்துக் குறித்து தி. த. கனக சுந்தரம் பிள்ளை எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் ‘இனி இங்கிலீஷ் படித்தவர்களில் தமிழறியவல்லார் இல்லை என்பதுவே போதும்’ என்று எழுதியிருக்கிறார்.

அரங்கநாத முதலியார் எனக்குச் செய்த உதவிகள் பல. பணத்தினால் மட்டும் ஒருவன் சிறப்படைய மாட்டான். தக்க மனிதர்களுடைய பழக்கம் பல பெருங் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அனுகூலமாக இருக்கும். பணத்தால் முடியாத காரியத்தை இந்தப் பழக்கத்தால் நிறைவேற்றிக் கொள்ளலாம். அரங்கநாத முதலியாருடைய நட்பினால் இந்தப் பலம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய பழக்கம் எனக்கு இருந்ததனால் நான் பலருடைய மதிப்புக்குப் பாத்திரனானேன். அவர் எனக்குப் பழக்கம் பண்ணி வைத்த கனவான்களால் நான் பல நன்மைகளை அடைந்திருக்கிறேன்.

அரங்கநாத முதலியார் மரணமடைந்தபோது நான் இரங்கற் பாட்டு ஒன்றும் உடனே எழுதவில்லை. “நான் செய்யும் பாடல்களைக் கேட்டுச் சந்தோஷிக்க அவர் இருக்கிறாரா?” என்று நினைத்துச் சும்மா இருந்து விட்டேன். அன்பர்கள் சிலர் வற்புறுத்தவே சில செய்யுட்களை எழுதினேன். அவற்றுள் பின்வருவனவும் சேர்ந்தவை.


  “பொன்னைப் பெறலாம் புகழ்பெறலாம் பூவலயம்
  தன்னைப் பெறலாந் தகமுயன்றால் யாவையுமே
  பின்னைப் பெறலாம் பிறழா மனவலிசேர்
  உன்னைப் பெறுமாறும் உண்டோ உரையாயே.”

[பூவலயம் - பூ மண்டலம். பின்னை - பிறகு]


  “பனியார் சிலசொற் பகர்ந்தே யுளங்குழைப்போய்
  கனியார் இனிமை கலந்தே சுவைகள் பல
  நனியார் தமிழின் நயந்தெரிய வல்லார்தாம்
  இனியா ருனைப்போ லினியார் இனியாரே”

[பனி - குளிர்ச்சி]


  “தரங்க வேலை யனைய தாய சபையி டைப்பு குந்துநின்
  றுரங்க லந்த வாங்கி லேய ரொருமொழிப் பிரசங்கமங்
  கரங்கநாத வள்ளல் போல வவர வர்வி யந்துதம்
  சிரங்க ரந்து ளக்கு மாறுசெப்ப வல்லர் யாவரே.”

[தரங்கவேலை - அலைகளையுடைய கடல். உரம் - அறிவு. துளக்குமாறு - அசைக்கும்படி]

என் தந்தையாரை இழந்த துக்கமும், குடும்பப் பொறுப்பை வகிக்க வேண்டுமே என்ற கவலையும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் சேர்ந்து என் மனவுறுதியைக் குலைத்தன. அதனால் தேகம் பலஹீனப்பட்டது. பித்த சுரம் என்னைப் பற்றிக் கொண்டது. சில வாரங்கள் அந்த நோயினால் துன்புற்றுத் தக்க மருந்துகளை உட்கொண்டு ஒருவாறு சௌக்கியமடைந்தேன்.