என் சரித்திரம் / 121 மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அத்தியாயம்-121
மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

மேல் நாட்டில் எனக்கு நண்பரானவர்களில் ரெவரெண்ட் ஜி. யூ. போப் ஒருவர். அவர் பல காலம் தமிழ் நாட்டில் இருந்தவர். தமிழில் சிறுவர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிற்றிலக்கணம் ஒன்று எழுதியிருக்கிறார். ‘போப்பையர் இலக்கணம்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டில் அது வழங்கியது. திருவாசகத்தையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர் வெளியிட்டிருக்கிறார். ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடியில் தமிழ்ப் பேராசிரியராக அவர் இருந்து வந்தார்.

ஒரு சமயம் பூண்டி அரங்கநாத முதலியாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது போப்பினுடைய பிரஸ்தாவம் வந்தது. அப்போது முதலியார், “அவர் பதிப்பித்த நாலடியார் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் உழைத்துப் பல குறிப்புக்களை எழுதியிருக்கிறார். தங்கள் சீவகசிந்தாமணிப் பதிப்பைப் பற்றியும் அதில் பாராட்டி எழுதியிருக்கிறார்” என்று சொல்லித் தம்மிடமிருந்த பிரதியைக் கொடுத்தார்.

போப் துரையின் நட்பு

பிறகு புறநானூறு வெளியானபின் அதில் ஒரு பிரதி அவருக்கு அனுப்பினேன். அரங்கநாத முதலியார் இல்லாத காலம் அது. சில மாதங்கள் வரையில் போப்பிடமிருந்த கடிதம் வரவில்லை. புத்தகம் அவரிடம் போய்ச் சேர்ந்ததோ, இல்லையோ என்ற சந்தேகத்தோடு நான் இருந்தேன். மே மாதம் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது அது. ‘இந்தியன் இன்ஸ்டிடியூட்’ 26-4-1895

“, , , , ,தங்கள் புறநானூற்றைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்க வேண்டும். தாங்கள் சிறப்பாகப் பதிப்பித்த சீவக சிந்தாமணிப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதை அடிக்கடி உபயோகிப்பதுண்டு. என் நாலடியார்ப் பதிப்பில் முகவுரை 41-ஆம் பக்கத்தில் அதைப் பற்றிக் குறித்திருக்கிறேன். தாங்கள் இன்னும் ஏதேனும் பதிப்பித்திருக்கிறீர்களா? தங்கள் பதிப்பு நூல்களைப் பற்றி ராயல் ஏஷியாடிக் ஸொஸைடிக்கு ஒரு கட்டுரை எழுதியனுப்ப உத்தேசித்திருக்கிறேன். புறநானூற்றை இன்னும் தெளிவு படுத்த முடியாதா? எனக்குத் தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. ஆதலால் இன்னும் தெளிவும் சுலபமுமான நடையில் உரை வேண்டும். பண்டிதரல்லாத என்போலியரிடம் கருணை கொள்ளுங்கள்.

“சிந்தாமணி பெரும்பாலும் சுலபமாகவே இருக்கிறது. அருமையும் பெருமையுமுள்ள தமிழின் பொருட்டுத் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சித் திறனமைந்த பதிப்பு ஒன்று வேண்டும்,.,,,,,புராணக் கதைகளை விலக்கிவிட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுத வேண்டும்,,,,புறநானூற்றை எவ்வாறு படித்துப் பயன் படுத்தலாமென்பதையேனும் தெரிவியுங்கள்.”

அவர் முதல் முறையாக எழுதிய இக் கடிதத்தால், அவருக்கிருந்த தமிழன்பை ஒருவாறு அளந்தறிய முடிந்தது. தமிழ் நூல்களை நல்ல முறையில் நல்ல உருவத்தில் பதிப்பிக்க வேண்டுமென்ற கருத்துடைய எனக்கு அவர் எழுதியனவெல்லாம் மிகவும் பொருத்தமாகத் தோற்றின.

அடுத்தபடி புறப்பொருள் வெண்பாமாலைப் பிரதி ஒன்றை அவருக்கு அனுப்பினேன். அதைப் பெற்றவுடனே பின் வரும் கடிதத்தை எழுதியனுப்பினார்.

“பேலியல் காலேஜ்” ஆக்ஸ்போர்டு. 21-10-1895

“, , , , தாங்களனுப்பிய புறப்பொருள் வெண்பா மாலைக்காக நன்றி பாராட்டுகிறேன். அதன் பிரதி ஒன்று எங்கள் தமிழ்ப் புத்தகசாலையில் இருக்கிறது. அதைப் படித்து முடிக்க முயன்றேன்.

நானும் எவ்வளவோ திட்டம் போடுகிறேன்; ஆனால் நீங்கள் இளைஞர், நான் கிழவன்-

‘ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.’

நான் மிகவும் அசௌக்கியமாக இருந்தேன்; ஆயினும் இன்னும் ஏதேனும் செய்யலாமென்று நம்பியிருக்கிறேன்..,,,,,உங்கள் பதிப்பு திருத்தமாகவும் பூர்ணமாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்களெல்லாம் புதுத் தமிழர்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள்,,,,,,”

இக் கடிதத்தில் திருக்குறட் செய்யுளைத் தமிழிலே எழுதியிருந்தார். அவர் எழுத்துக்களிலே நடுக்கமும் வார்த்தைகளிலே தேக அசௌக்கியத்தைக் காட்டும் குறிப்பும் இருந்தன. ‘ஒரு பொழுதும் வாழ்வ தறியார்’ என்ற அருமைத் திருக்குறளை அவர் எழுதுகையில் அவரது மனநிலை எப்படி இருந்திருக்குமென்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவோ காரியங்களைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடு உழைத்து வரும்போது இடையிலே வாழ்க்கை முடிந்து விட்டால் என் செய்வதென்ற பயம் அவர் நெஞ்சில் இருப்பதை அக்குறள் வெளிப்படுத்தியது. அவர் இன்னும் பல வருஷங்கள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினேன்.

நல்ல வேளையாக அவரது தேக அசௌக்கியம் மாறியது. முதுமைத் தளர்ச்சியிருந்தாலும் தமிழாசை அவர் உடம்பில் ஒரு புதிய முறுக்கை ஏற்றியிருக்க வேண்டும். 1896-ஆம் வருஷ ஆரம்பத்தில் அவர் மீட்டும் எனக்குக் கடிதம் எழுதினார்.

மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம் 3-1-1896.

“, , , , ,நான் நெடுங்காலம் கடிதம் எழுதாமல் தாமதம் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும். தங்கள் அற்புதமான பதிப்புக்களாகிய புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இரண்டையும் எளிதிற் படித்து இன்புற்று வருகிறேன். அவ்விரண்டும் ஒன்றையொன்று அழகாக விளக்குகின்றன.

பாரி, அவன் மகளிற், கபிலர், கோப்பெரூஞ் சோழன், பிசிராந்தையார். பொத்தியார் முதலியவர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கர்ணபரம்பரைச் செய்திகள் வேண்டும்; 115 முதல் 120 வரையிலுள்ள பாடல்கள் உள்ளங் கவர்வன, , , , தங்களுக்கு நாலடியாரின் பிரதி ஒன்று அனுப்பச் சொன்னேன். ஆக்ஸ்போர்டிலிருந்து கிடைத்ததா?,,,,,புது வருஷ வாழ்த்துக் கூறுகிறேன்.”

அவர் அனுப்பச் செய்த நாலடியார் எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்து கொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப் பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது.

பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்ஸோனது தமிழன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடா முயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றனரென்றெண்ணி வருந்தினேன்.

போப் துரை மேலும் பல கடிதங்கள் எழுதினார். புறநானூற்றிலிருந்தும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்தும் பல அரிய செய்யுட்களைத் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலும் அத்தகைய மொழி பெயர்ப்பொன்றை வாழ்த்துடன் எனக்கு அனுப்பி வந்தார்.

இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று. மணிமேகலை ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.

சுந்தரம் பிள்ளை கடிதங்கள்

1896-ஆம் வருஷ ஆரம்பத்தில் திருவனந்தபுரத்தில் இருந்த புரொபஸர் பி. சுந்தரம் பிள்ளை, தாமுள்ள காலேஜில் தமிழாசிரியர் வேலைக்குத் தக்க ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களென்று தெரிவித்தார். அன்றியும், நான் அவ்வேலையை ஏற்றுக்கொண்டால் ஆரம்பத்தில் ரூபாய் அறுபத்தைந்து கிடைக்குமென்றும், படிப்படியாக உயருமென்றும் எழுதினார். எனக்கு அது சம்மதமாக இல்லை. பிறகு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அந்த ஸ்தானத்தில் நியமித்து விட்டார்கள்.

அக்காலத்தில் சுந்தரம் பிள்ளை இயற்றிய மனோன்மணீய நாடகத்தின் சில பகுதிகள் காலேஜ் வகுப்புகளுக்குப் பாடமாக இருந்தன. அவற்றை நான் பாடம் சொல்லி வரும்போது பாராட்ட வேண்டிய இடத்திற் பாராட்டி விட்டுப் பிழையாகத் தோற்றிய சிலவற்றைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னேன். இவ்விஷயத்தை யார் மூலமாகவோ அறிந்த சுந்தரம் பிள்ளை அக்குற்றங்கள் இன்னவையென்று தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் எழுதினார். நான் அங்கங்கே கண்டவற்றைத் தொகுத்து எழுதியனுப்பவே அவர் உசிதமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டு தம் நன்றியறிவைத் தெரிவித்தார். அது முதல் அடிக்கடி அவர் அன்போடு எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தார்.

காதையும் பாட்டும்

மணிமேகலையை விரைவில் அச்சுக்குக் கொடுக்கும் பொருட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். மிதிலைப் பட்டியில் கிடைத்த பிரதி தான் எனக்குப் பெருந்துணையாக இருந்தது. மற்றப் பிரதிகளில் ஒவ்வொரு பகுதியும் காதையென்ற பெயருடையதாக இருந்தது. மிதிலைப் பட்டிப் பிரதியில் பாட்டு என்று இருந்தது. முதலில் பதிகமென்பது கதை பொதி பாட்டு என்றும், விழாவறை காதை யென்பது விழா வறைந்த பாட்டு என்றும், இவ்வாறே மற்றவற்றின் பெயர்களும் மாறிக் காணப்பட்டன. அந்தத் தலைப்புக்களிலிருந்து காதை யென்பதற்குப் பாட்டென்னும் பொருள் கொள்ளலாமென்று தெரிய வந்தது. மற்ற ஆதாரங்களைக் கொண்டும் அப்பொருளே உறுதியாயிற்று.

மணிமேகலை மூலம்

மணிமேகலையின் மூலம் மாத்திரம் 1891-ஆம் வருஷம் திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையால் அச்சிடப்பெற்றது. பொருள் வரையறை செய்து கொள்ளாமலே பல விடங்களில் ஏட்டிலுள்ள பாடங்களை அவர் அமைத்திருந்தார். அந்தப் பிரதியைக் கொண்டு நூற் பொருளை நன்கு அறிதல் சிரமமாகவே இருக்கும். அது பதிப்பிக்கப்பெற்று வந்த காலத்திலேயே அதைப்பற்றி, தி. த. கனக சுந்தரம் பிள்ளை எனக்கு எழுதியிருந்தார்; “மணிமேகலையில் மூன்று மூன்று பாரம் எனக்குக் காட்டினார்கள். அவர்கள் போடுவது நான் முன் எண்ணியிருந்ததிலும் கேடாகவே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியில் இருக்கின்றபடியே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியிலிருப்பது இதிலும் நலமென்று சொல்லலாம். ஏட்டில் சொக்கலிங்க மென்றிருப்பதை ஒருவர் முழுவதுங் கலிங்கமென்று பொருள் பண்ணி வாசித்தபோதிலும் மற்றொருவராவது சந்தர்ப்பம் நோக்கிச் சொக்கலிங்க மென்று வாசிப்பார். இவர்கள் அதனைச் சேரக் கலிங்கமென்று அச்சிலிட்டதன் பின் ஏட்டைக் காணாதவர்களெல்லாம் சேரக்கலிங்கமென்று தானே படிக்கவேண்டும்? ‘எட்டி குமரனிருந்தோன்றன்னை’ என்பது ‘எட்டிருமானிருந்தோன்’ என்றும், ‘ஆறறி யந்தணர்’ என்பது ‘ஆற்றி யந்தணர்’ என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே யறிந்து கொள்ளவும்” (29-3-1891) என்று குறித்திருந்தார். பின்னால் புத்தகம் வெளி வந்த காலத்தில் அதைப் பார்த்தபோது, பின்னும் ஆராய்ச்சிக்கு இடமுண்டென்றே தெரிந்தது.

குறிப்புரை

அப்பதிப்பு வெளிவந்து ஏழு வருஷங்களாயினமையின் நான் செய்த ஆராய்ச்சியின் பயனாகப் பலவகைக் குறிப்புக்களுடன் மணிமேகலையை வெளியிடுவதில் பிழையொன்றுமில்லை என்று கருதினேன். அன்பர்கள் பலர் மணிமேகலை முழுவதற்கும் உரை எழுதி வெளிப்படுத்த வேண்டுமென்று கூறினர். பழந் தமிழ் நூல்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று போப் துரை எழுதிய கடிதங்களும் எனக்குத் தூண்டுகோலாயின. பதவுரையின்றேனும் குறிப் புரையாக எழுதி முடிக்கலாமென்று தொடங்கிப் பெரும்பாலும் எழுதி நிறைவேற்றினேன். சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதையென்னும் பகுதியில் பிற சமய இலக்கணங்கள் வருகின்றன. தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை என்னும் பகுதியில் பௌத்த மதத்தினர் கூறும் அளவையிலக்கணம் முதலியன உள்ளன. இவ்விரண்டற்கும் குறிப்புரை எழுதுவது எளிதென்று தோற்றவில்லை. வடமொழித் தர்க்க சாஸ்திரங்களிற் பாரங்கதராக விளங்கிய குறிச்சி மகாமகோபாத்தியாய ரங்காசாரியரிடம் போய்க் கேட்டேன். முன்னதிலுள்ள விஷயங்களை அவர் விளக்கினார்.

ஆனால் பின்னதிலுள்ள விஷயங்களை அவரால் விளக்க இயலவில்லை; “இந்த முறையுள்ள பழைய நூல்கள் இக்காலத்து வழங்கவில்லை. இது பிராசீன தர்க்கம்” என்று சொல்லிவிட்டார்.

கும்பகோணம் காலேஜில் ஸம்ஸ்கிருத பண்டிதராக இருந்த பெருகவாழ்ந்தான் மகா மகோபாத்தியாய ரங்காசாரியரிடமும், திருமலை ஈச்சம்பாடி சதாவதானம் ஸ்ரீநிவாஸாசாரியரிடமும் சில வட மொழிப் பிரயோகங்களில் உண்டான ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

மற்றவற்றிற்கெல்லாம் ஒரு வகையாகக் குறிப்புரை எழுதி விட்டு அளவையிலக்கணம் வரும் பகுதியைப் பலமுறை வித்துவான்களுடைய முன்னிலையில் பரிசோதித்து இயன்ற வரையில் சுத்த பாடங்களென்று தோற்றியவற்றைத் தெரிந்து எழுதிக் கொண்டேன். பாடபேதங்களை அங்கங்கே அடிக்குறிப்பில் அமைத்தேன்.

என் உவகை

எல்லாம் சித்தமானவுடன் மணிமேகலையை எடுத்துக்கொண்டு சென்னை சென்று வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் 5-6-1896 அன்று அச்சுக்குக் கொடுத்தேன்.

அடிக்குறிப்பில் நான் எழுதிய குறிப்புரையோடு, புத்தகம் அச்சாகத் தொடங்கியது. முதல் பாரத்தைப் பார்த்து உத்தரவு கொடுத்த போது என் உள்ளத்தில் இருந்த உவகைப் பெருக்கை இறைவனே உணர்வான்! ‘இந்த நூலையும் நாம் பதிப்பிப்போமா!’ என்று அலந்திருந்தவனாதலின் அதற்கு ஓர் உருவும் ஏற்பட்டதைப் பார்த்து என் உள்ளமும் உடலும் பூரித்தன.