என் சரித்திரம் / 18 குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

18. குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி


குன்னத்திற்கு அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள். அவர்களுள் கதிர்வேற் கவிராய ரென்பவர் ஒருவர். அவர் மூலமாக நான் பல விஷயங்களை அறிந்துகொண்டேன். சேலத்தைச் சார்ந்த சார்வாய் என்னும் ஊரிலே குமாரசாமிக் கவிராயர் என்ற தமிழ் வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் அரியிலூரிலும் உடையார்பாளையத்திலும் சில காலம் ஸமஸ்தான வித்துவானாக விளங்கினார். அவருடைய மாணாக்கரே கதிர்வேற் கவிராயர். குன்னத்தில் அவரை நான் பார்த்த போது அவருக்கு எழுபது பிராயம் இருக்கும். அம்முதுமையிலும் அவர் தமிழ்ச் செய்யுட்களைச் சொன்ன முறை கேட்பதற்கு இனிமையாகவே இருந்தது. கம்பராமாயணம், முதலிய இலக்கியங்களிலும் நன்னூல் முதலிய இலக்கணங்களிலும் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. நூற்றுக்கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக இருந்தன; பழைய தனிப்பாடல்கள் பலவற்றை அவர் தடையின்றிச் சொல்லி வருவார்; செய்யுள் இயற்றும் பழக்கமும் உடையவர்; ஓய்ந்த நேரங்களிலெல்லாம் ஏதேனும் செய்யுளைப் புதிதாக எழுதிக்கொண்டிருப்பார்.

அக்கவிராயர் ஒருமுறை குன்னத்துக்கு வந்து கணக்குப் பிள்ளை வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்தார். அவருடைய பழக்கத்தாற் பல தமிழ்நூற் பெயர்களை நான் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நூலைப்பற்றியும் அவர் சொல்லும்போது எனக்குப் புதிய புதிய இன்பம் உண்டாகும். “இவ்வளவு நூல்கள் தமிழில் உள்ளனவா!” என்று ஆச்சரியமடைவேன்.

தனிப்பாடல்களை அவர் சொல்லும்போது ஒவ்வொரு பாடலையும் இயற்றிய புலவரைப் பற்றிய வரலாறு, அதைப் பாடியதற்குக் காரணம் முதலிய விஷயங்களை மிகவும் சுவைபடச் சொல்லுவார். அப்போது வாயில் ஈப்புகுவதுகூடத் தெரியாமல் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அத்தனிப் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கற்கண்டுக் கட்டிபோல் இருக்கும். ’பாடம் செய்து’ என்ற முயற்சியில்லாமலே பல பாடல்கள் என் மனத்தில் தாமே பதிந்தன. அம்முதியவர் அவ்வளவு பாடல்களைச் சலிப்பின்றிச் சொல்வதைக் கேட்டு, அவ்வளவையும் மனத்திற் பதித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. கவிராயர் பின்னும் ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ தங்கியிருந்தால் நான் ஒருவாறு அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருப்பேன். அவரோ சில தினங்களே குன்னத்தில் இருந்து தம் ஊருக்குப் போய் விட்டனர்.

வித்துவானோ, கவிராயரோ, பரதேசிகளோ யார் வந்தாலும் “அவர்கள் ஏதாவது தமிழ் சம்பந்தமான செய்தியைச் சொல்ல மாட்டார்களா?” என்று ஆவலோடு எதிர்பார்ப்பது எனக்கு வழக்கமாகி விட்டது. புதிய புதிய பாடல்களையும் புதிய புதிய செய்திகளையும் கேட்கும்போது எனக்கு உண்டாகும் திருப்தி வேறு எதிலும் உண்டாவதில்லை.

பரதேசிகள்


விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மாடுவெட்டிமங்கலம் என்னும் ஊரில் ஒரு மடம் கட்டிக்கொண்டு சில பரதேசிகள் இருந்தனர். அவர்கள் வருஷந்தோறும் திருவையாற்றில் நடைபெறும் ஸப்தஸ்தான உத்ஸவ தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் குன்னத்திற்கு வந்து கணக்குப் பிள்ளையின் உதவியைப் பெற்றுச் செல்வது வழக்கம். அவர்களில் ஒருவர் ஆசிரியர்; மற்றவர்கள் மாணாக்கர்கள். யாவரும் தமிழ் இலக்கியங்களிலும் அடிப்படையான இலக்கண நூல்களிலும் பயிற்சியுடையவர்கள்; தமிழிலுள்ள வேதாந்த சாஸ்திரங்களில் நல்ல திறமையைப் பெற்றிருந்தார்கள். ஞானவாசிட்டம், குமார தேவர் சாஸ்திரம், கைவல்ய நவநீதம், சசிவர்ண போதம், வைராக்கிய சதகம் முதலிய நூல்களிலுள்ள பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறுவார்கள். அந்தச் சாஸ்திரப் பயிற்சியை லக்ஷியமாகக்கொண்டே முதலில் இலக்கிய இலக்கணங்களை அவர்கள் பயின்றார்கள்.

அவர்களுடைய வேதாந்த சாஸ்திர ஞானமும் அடக்கமும் சாத்விக இயல்பும் சீலமும் தெய்வ பக்தியும் அவர்கள் மேற்கொண்ட துறவுக்கு அலங்காரமாக விளங்கின. அவர்களாலே நான் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

குன்னத்தில் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருந்த ஒருவர் முன்னே குறிப்பிட்ட சார்வாய்க் குமாரசாமிக் கவிராயருடைய மாணாக்கர்; தமிழ்நூற் பயிற்சியும் கவித்துவ சக்தியும் உள்ளவர்; மிக்க தைரியசாலி. அவர் எங்கள் வீட்டிற்கு வேண்டிய நெய்யை மாதந்தோறும் தம் செலவில் வாங்கிக் கொடுத்து உதவி வந்தார். அவரிடமும் சில தமிழ்ச் செய்யுட்களை நான் பாடங் கேட்டேன்.

கஸ்தூரி ஐயங்கார் வருகை


நான் இவ்வாறு குன்னத்தில் இருக்கும்போது ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவரது வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அதற்காக அவ்வூரின் வடக்கேயுள்ள கார்குடி என்னும் கிராமத்திலிருந்து அந்த வீட்டினருக்குப் பந்துக்களாகிய சிலர் வந்தனர். அவர்களில் கஸ்தூரி ஐயங்காரென்பவர் ஒருவர். அவர் சிதம்பரம் பிள்ளைக்குப் பழக்கமானவர். சிதம்பரம் பிள்ளை என்னிடம் கஸ்தூரி ஐயங்காரைப் பற்றி “அவர் சிறந்த தமிழ் வித்துவான். இந்தப் பக்கங்களில் அவரைப் போன்றவர் ஒருவரும் இல்லை. கம்பராமாயணத்திலும் மற்ற நூல்களிலும் நல்ல பழக்கமுடையவர். நன்றாகப் பிரசங்கம் செய்வார். முருக்கங்குடியிலிருந்த ஒரு வீரசைவப் புலவரிடம் பாடங் கேட்டவர்” என்று கூறினார். அப்போது எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்றும் அவரிடமிருந்து அரிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவா உண்டாயிற்று. அதற்குரிய முயற்சி செய்யத் தொடங்கினேன்.

விவாகம் நடந்த மறுநாட் காலையில் கஸ்தூரி ஐயங்காரே நாங்கள் இருந்த வீட்டின் சொந்தக்காரராகிய ராமையங்காரைப் பார்க்க வந்தார். அவ்விருவரும் உறவினர். அவர் வந்தபோது அவருடன் வேறு பலரும் வந்தனர். எல்லோரும் ஓரிடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு பக்கமாக இருந்து அவர்களுடைய சம்பாஷணையைக் கவனித்து வரலானேன். கஸ்தூரி ஐயங்கார் பேசுவது மிகவும் ரஸமாக இருந்தது. அவர் இடையிடையே தமிழ்ப் பாடல்களைச் சொல்லிப் பொருளும் கூறினார். அவற்றைக் கேட்டு நான் மிக்க உத்ஸாகத்தை அடைந்தேன்.

அப்போது என் மனத்தில் ஓர் ஆவல் உண்டாயிற்று; “இவர் நம்மைப் பார்த்துப் பேச மாட்டாரா? ஏதேனும் நம்மைக் கேட்க மாட்டாரா?” என்று எண்ணினேன். என் கருத்தை ஊகித்தறிந்த ஒருவர் கஸ்தூரி ஐயங்காரை நோக்கி, “ஸ்வாமீ, இந்தப் பையன் தமிழ் படித்து வருகிறான். உங்களை பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தான். இப்போது உங்கள் பேச்சையே கேட்டுக்கொண்டிருக்கிறான்” என்றார்.

கஸ்தூரி ஐயங்கார் பரீக்ஷித்தது


கேட்ட அவர், “அப்படியா? சந்தோஷம்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “நீ யாரிடம் படித்து வருகிறாய்?” என்று கேட்டார்.

“இவ்வூர்க் கணக்குப்பிள்ளையவர்களிடம் படிக்கிறேன்.”

“என்ன படிக்கிறாய்?”

“திருவிளையாடற் புராணம்.”

“முன்பு வேறு யாரிடமேனும் படித்ததுண்டோ?”

“உண்டு. அரியிலூர்ச் சடகோபையங்காரவர்களிடமும் வேறு சிலரிடமும் படித்தேன்” என்று கூறி நான் படித்த நூல்கள் இன்னவை யென்றும் தெரிவித்தேன்.

கேட்டதும் அவர், “அப்படியா? சடகோபையங்காரவர்கள் நல்ல படிப்பாளி. அவர்களிடம் படித்தாய் என்பதைக் கேட்க எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. எங்கே, ஒரு பாடல் சொல் கேட்போம்” என்றார். உடனே நான் பைரவி ராகத்தில் திருவேங்கடத்தந்தாதியிலிருந்து ஒரு பாடல் சொன்னேன். பொருள் கூறும்படி அவர் கேட்டார். நான் சுருக்கமாகக் கூறினேன். “நன்றாக இருக்கிறது” என்று சொல்லி அவர் சந்தோஷமடைந்தார். அவர் சொன்னது எனக்குக் கனகாபிஷேகம் செய்ததுபோல் இருந்தது. அவ்வளவு பெரிய வித்துவான் என்னை ஒரு பொருட்படுத்தி என் பாட்டைக் கேட்டுப் பாராட்டுவதென்றால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்!

“வேறு ஏதேனும் தெரிந்தால் சொல்லு” என்று கேட்டார் அவர்.

எனக்கு ஊக்கம் அதிகரித்தது. சதகங்களிலிருந்து சில பாடல்கள் சொன்னேன்.

“திருவேங்கட மாலை படித்திருக்கிறாயா?” என்று அவர் கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“நான் இப்போது ஒரு பாடல் சொல்லுகிறேன். எழுதிக்கொள்” என்றார்.

“இன்று நாம் நரி முகத்திலேதான் விழித்திருக்கிறோம்” என்று எண்ணி நான் மிக்க குதூகலமடைந்தேன்.

“தேனியலுங் கூந்தலார் செங்கரமு மாதவத்தோர்
மேனியுமை யம்பொழியும் வேங்கடமே - ஞானியர்கள்
ணெய்தாங் குறியெட் டக்கரத்தார் தாளுரன்மேல் - வைத்து
வெண்தாங் குறியெட் டக்கரத்தார் சார்பு”
(திருவேங்கடமாலை, 57)

என்ற பாடலை அவர் மெல்லச் சொல்லி என்னை எழுதிக்கொள்ளச் செய்தார். பிறகு அதன் பொருளையும் சொன்னார். அப்பால், “எங்கே, அதை ஒரு முறை படித்து அர்த்தம் சொல், பார்க்கலாம்” என்று உரைத்தார். “இவருடைய மனத்தில் நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று மனம் அவாவியது. மிகவும் நிதானமாகப் படித்துப் பயபக்தியுடன் நான் கேட்டபடியே பொருள் சொன்னேன்.

கஸ்தூரி ஐயங்காருக்கு என்பால் அன்பு அரும்பியது. “நல்ல கிராஹ்ய சக்தி இருக்கிறது. நன்றாய்ப் படித்துக் கொண்டு வா” என்றார் அவர்.

வாக்களித்தது


அங்கே இருந்தவர்களுள் ஒருவர், “தாங்களே இந்தப் பையனுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க முடியுமா?” என்று வினவினார். அவர், “நான் பாடம் சொல்வதற்கு ஒரு தடையுமில்லை. கார்குடிக்கு வந்தால் வேண்டிய சௌகரியம் செய்வித்து இவனைப் படிப்பிக்கிறேன். இந்தப்பிள்ளை விருத்திக்கு வருவானென்று தோற்றுகிறது” என்று விடை கூறினார்.

அந்தக் கூட்டத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த என் தந்தையார், “தாங்கள் சொன்னபடியே கார்குடிக்கு வருகிறோம். இவனுக்குத் தாங்கள் பாடம் சொல்ல வேண்டும்; மற்றக் காரியங்களில் இவன் புத்தி செல்லவில்லை” என்று சொன்னார். அவர் இவ்வாறு கூறியபோது அவருடைய பேச்சில் உணர்ச்சி ததும்பியது. கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது போல இருந்தது கஸ்தூரி ஐயங்காருடைய வார்த்தை.

“அங்கே வந்து விடுங்கள். நானும் என் சொந்தக்காரர்களும் உங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கிறோம். இவனையும் படிப்பிக்கிறேன்” என்று கஸ்தூரி ஐயங்கார் சொன்னார்.

அப்போது சாமி ஐயங்காரென்ற ஒருவர் அங்கே வந்தார். அவரும் கார்குடியில் இருப்பவரே. கல்யாணத்தின் பொருட்டுக் குன்னம் வந்தவர்; கஸ்தூரி ஐயங்காருடைய நண்பர்; தமிழிலும் சங்கீதத்திலும் வல்லவர்; கவித்துவ சக்தியும் உள்ளவர். அவரைக் கண்டவுடன் கஸ்தூரி ஐயங்கார் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் அவரிடம் தெரிவித்தார். அவர் அதைக் கேட்டதுதான் தாமதம்; உடனே எந்தையாரை நோக்கி, “அடடா, மிகவும் சந்தோஷம்! நீங்கள் அப்படி வந்தால் என்னால் ஆன அனுகூலத்தை நானும் செய்விக்கிறேன்; தமிழ்ப் பாடமும் இவனுக்குச் சொல்லுகிறேன்” என்று வாக்களித்தார்.

ஒருவரையொருவர் அன்பிலும் ஆதரவிலும் தரும சிந்தையிலும் மிஞ்சியிருப்பதை யறிந்தபோது, “இனி நமக்கு நல்ல காலந்தான்” என்று நான் நிச்சயஞ் செய்துகொண்டேன்.

“நல்ல நாள் பார்த்துக்கொண்டு வந்து விடுங்கள்” என்று என் தந்தையாரிடமும், “வருகிறாயா? வா” என்று என்னிடமும் கூறிவிட்டுக் கஸ்தூரி ஐயங்கார் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றனர்.

கஸ்தூரி ஐயங்கார் சென்ற திக்கையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தூரத்தில் மறைய மறைய என் மனத்துள் கார்குடியைப் போன்ற தோற்றம் ஒன்று உண்டாயிற்று. என் தமிழ்க் கல்வியின் பொருட்டு எந்த இடத்துக்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்.