என் சரித்திரம் / 25 செங்கணத்தில் வாசம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

25. செங்கணத்தில் வாசம்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலையர், கருணைப் பிரகாசர் இவர்களுடைய பரம்பரையினரும் உறவினரும் அப்பக்கங்களில் பல கிராமங்களில் பள்ளிக்கூடம் வைத்திருந்தார்கள். அவர்கள் யாவரும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்கள். நல்ல பாடல்களை மனனம்செய்து அவற்றை உரிய சந்தர்ப்பங்களிற்சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துப் பயன்பெறுவார்கள். அவர்களும் வேறு சில வித்துவான்களும் அடிக்கடி செங்கணத்திற்கு வந்து விருத்தாசல ரெட்டியாரிடம் சம்பாஷணைசெய்து சில நாட்கள் தங்கியிருந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டும் பொருளுதவி பெற்றும் செல்வார்கள். சில வித்துவான்கள் ரெட்டியாருடைய சந்தேகங்களையும் தீர்ப்பதுண்டு.

தனிப்பாடல் திரட்டு


இவ்வாறு வருபவர்களுடைய சம்பாஷணையால் எனக்குத் தமிழ் லாபம் இருந்தது. அவர்கள் கூறும் தனிப்பாடல்கள் மிக்க சுவையுள்ளனவாக இருக்கும். அவற்றைக் கேட்டு நான் பாடம் செய்துகொள்வேன். தனியே எழுதிவைத்துக் கொள்வேன். இப்படி ஒவ்வொரு பாடலாக நான் கேட்டுத் தெரிந்துகொள்வதை அறிந்த ரெட்டியார் ஒரு நாள், “என்னிடம் தனிப்பாடல் திரட்டு இருக்கிறது. அதில் பல பாடல்கள் உள்ளன. நான் உமக்குத் தருகிறேன்” என்று கூறித் தம்மிடமிருந்த அப்புஸ்தகத்தை என்னிடம் கொடுத்தார். அது துந்துபி வருடம் (1862) சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவரால் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பெற்றது. அப்பொழுது அதன் விலை ரூபா ஐந்து.

அதைப் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைத்துவிட்டதுபோல இருந்தது. பலவகையான கருத்துக்களும் பலவகையான சாதுரியங்களும் அமைந்த தனிப்பாடல்கள் என் மனத்தைக் கவர்ந்தன. காளமேகப்புலவர் சமயத்துக்கேற்றபடி சாதுரியமாகப் பாடிய பாடல்களைப் படித்துப் படித்து உவப்பேன்; அவர் பாடிய சிலேடைகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வேன்; பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் செய்யுட்களிலுள்ள பக்தியையும் எளிய நடையையும் கண்டு ஈடுபடுவேன்; ஒளவையார் முதலியவர்களுடைய பாடல்களின் போக்கிலே என் மனம் லயித்துவிடும். பலவகையான சுவைகள் உள்ள அப்பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினமாகவே தோன்றியது; ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அவற்றையே படித்துக் காலம் கழிப்பேன். பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவேன்; மிக விரைவில் பல பாடல்கள் மனனமாயின; எனது தமிழன்பு அப்பாடல்களால் எவ்வளவோ உயர்ந்துவிட்டது.

ரெட்டியார் எனக்கு யாப்பருங்கலக்காரிகை அச்சுப் பிரதியையும் வேறு சில புஸ்தகங்களையும் பின்பு அளித்தார். அச்சுப் புஸ்தகங்கள் அருமையாக வழங்கிய அக்காலத்தில் அப்புஸ்தகங்கள் எனக்குப் பெருந்தனமாக இருந்தன.

படித்த நூல்கள்


விருத்தாசல ரெட்டியாரிடம் பல தமிழ் நூல்கள் இருந்தன. அவற்றிற் பல ஏட்டுச் சுவடிகள்; சில அச்சுப் புஸ்தகங்கள். ஏட்டுப் பிரதிகளிற் பல அவர் தம் கையாலேயே எழுதியவை. செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. தம் கையாலேயே அந்நூல் முழுவதையும் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். ஓய்ந்த நேரங்களில் நான் அப்புஸ்தகங்களை எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். அவற்றிலுள்ள விஷயங்களை ரெட்டியாரிடம் கேட்பேன். அவர் சொல்லுவார். இத்தகைய பழக்கத்தால் தமிழ்க்கடலின் ஆழமும் பரப்பும் பல நூற்பகுதிகளும் சில வித்துவான்களுடைய சரித்திரங்களும் விளங்கின. தண்டியலங்காரம், திருக்குறள், திருக்கோவையார் என்னும் நூல்களை நானே படித்தேன். கம்பராமாயணத்திலும் பல பகுதிகளைப் படித்து உணர்ந்தேன்.

பாட்டியல்கள்


காரிகைக்குப் பிறகு ரெட்டியார் எனக்குப் பொருத்த இலக்கணங்களையும் பிரபந்த இலக்கணங்களையும் கற்பித்தார். அவற்றை அவர் நன்றாக ஆராய்ந்து வரையறை செய்து வைத்திருந்தார். அவருடைய வீட்டுத் திண்ணைச் சுவர்களில் பல இடங்களில் இரட்டை நாகபந்தம், அஷ்ட நாகபந்தம் முதலிய சித்திரகவிகள் எழுதப்பெற்றிருக்கும். நான் முன்பே சில பாட்டியல் நூல்களைப் படித்திருந்தமையால் அவர் கற்பித்தபோது எனக்கு அவை தெளிவாக விளங்கின. ரெட்டியாருடைய விருப்பத்தின்படி ஒவ்வொரு பாட்டியலிலும் ஒரே விஷய சம்பந்தமாகக் காணப்படும் இலக்கணங்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி ஏட்டிற் பிரதி செய்துகொண்டேன். மங்கலப் பொருத்தம் என்பதன் இலக்கணத்தைப் பற்றி எல்லாப் பாட்டியல்களிலுமுள்ளவற்றை ஒருங்கே எழுதினேன். இம்முறையில் மற்றவற்றையும் எழுதினேன். இவ்வாறு தொகுத்து எழுதிய அச்சுவடி விஷய வரிசையால் அமைந்த பாட்டியற் கொத்தாக இருந்தது. அப்பிரதி பிற்காலத்தில் என்னிடமிருந்து நழுவிவிட்டது. அவரிடம் தத்தாத்திரேயப் பாட்டியல் என்னும் பிரபந்த இலக்கண நூல் இருந்தது அதனையும் படித்தேன். பிரதி செய்துகொள்ளவில்லை. இப்போது அந்நூல் தமிழ்நாட்டில் அகப்படவில்லை. சித்திரகவிகளின் இலக்கணத்தையும் அவற்றை இயற்றும் பழக்கத்தையும் ரெட்டியார் உதவியால் அறிந்துகொண்டேன்.

பெருமாளையர்


ரெட்டியாருடைய நண்பராகிய பெருமாளையர் என்னும் காணியாளப் பிராமணர் ஒருவர் பெரும்பாலும் ரெட்டியாருடனே இருப்பார். அவருக்கும் யாப்பிலக்கணத்திலும் பொருத்த இலக்கணங்களிலும் சித்திரகவிகளிலும் நல்ல பழக்கம் இருந்தது. நன்றாக அவர் சித்திரம் எழுதுவார். ரத பந்தம், நாகபந்தம், கமல பந்தம், சக்கர பந்தங்கள் முதலியவற்றை அவர் போட்டுத் தருவார். நான் அவற்றுள் செய்யுளை அடைப்பேன். நானும் அச்சித்திரங்களை வரைவேன்.

நான் ஒருநாள் அறுசீரடி ஆசிரிய விருத்தம் ஒன்று எழுதிப் பெருமாளையரிடம் காட்டினேன். அச்செய்யுளில் நான்கு அடிகள் இருந்தன; ஆறு சீர்கள் இருந்தன; எதுகை மோனை எல்லாம் இருந்தன. ஆனால் ஓசை சரியாக இல்லை. பெருமாளையர் அதைப் பார்த்துச் சிரித்தார். “ஏன்? இதில் என்ன பிழை?” என்று கேட்டேன் “நீரே படித்துப் பாரும்; ஓசை சரியாக இருக்கிறதா என்று கவனியும்” என்றார். நான் சிலமுறை படித்தேன்; ஓசை சரியாக இல்லை என்பது எனக்கு ஓரளவு தெரிந்தும் அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை; “ஆறு சீர்கள் இல்லையா?” என்றேன். “ஆறு சீர்கள் இருக்கின்றன என்பது வாஸ்தவந்தான். ஆனால் எந்தச் சீர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. அதனால்தான் ஓசை பிறழ்கிறது” என்று கூறிப் பிரபுலிங்க லீலை என்றும் தமிழ் நூலை எடுத்துச் சில பாடல்களைப் படித்துக் காட்டினார். நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப் பெருமாளையர் பின்வருமாறு விளக்கினார்: “முதல் அடியில் முதற்சீர் மாச்சீராக இருந்தால் மற்ற அடிகளிலும் முதற்சீர் மாச்சீராகவே இருக்கும். இதோ இப்பாட்டைப் பாரும்:

“பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன்
கைகான் முடங்கு பொறியிலிதன்
நாவா யொழுகிற் றெனவுலக
மளந்த மாலு நான்முகனும்
காவா யெனநின் றேத்தெடுப்பத்
தானே வந்தெங் கரதலத்து
மேவா நின்ற மாமணியைத்
தொழுது வினைக்கு விடைகொடுப்பாம்”

என்பதில் ஒவ்வோரடியிலும் ஆறு சீர்கள் இருக்கின்றன. முதல் இரண்டு சீரும் நான்கு ஐந்தாம் சீர்களும் மாச்சீர்கள்; மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச் சீர்கள். இந்த அமைப்பு ஒவ்வோரடியிலும் மாறாமல் நிற்கும்; மாறினால் ஓசை கெடும். இவ்வண்ணம் சீர்கள் அமைவதனால்தான் ஒவ்வொரு வகை விருத்தத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன.”

அவர் விரிவாக எடுத்துச் சொன்னபோதுதான் எனக்கு விஷயம் விளங்கிற்று. “புஸ்தகத்தைப் படித்துப் பார்ப்பதனால் மட்டும் ஒருவனுக்குப் பூரண அறிவு ஏற்படாது; அறிந்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும்” என்று பெரியோர்கள் வற்புறுத்துவதன் உண்மையையும் உணர்ந்தேன். இத்தகைய அரிய விஷயங்களைத் தக்கவர்களிடம் தெரிந்துகொள்ளாமல் வெண்பா என்றும், கட்டளைக்கலித்துறை என்றும், விருத்தமென்றும் தாமே எண்ணிக்கொண்டு மனம் போனபடி பாடல்களைப் பிழையான ஓசையோடு பாடுபவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இக்காலத்திலும் காண்கிறேன். அத்தகைய பாடல்களையும் அவற்றைப் பாடுவோரையும் பாராட்டி மகிழும் கனவான்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை நினைந்து நான் மிகவும் இரங்குகிறேன்.

ஒரு முதியவரது ஞாபகம்


ஒருநாள் வழக்கம்போல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியார் கம்பராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடனிருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளிவிட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புஸ்தகத்தில் விட்டுப்போயின. என் பிரதியில் அப்பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்.

திருக்குறள்


விருத்தாசல ரெட்டியார் எப்போதும் தமிழ் நூல்களைப் படிப்பதிலே தம் பொழுதைப் போக்கி வருபவர்; மற்ற வேலைகளில் கவலையில்லாதவர். அவருக்கு ஏற்றபடி வேறு கவனமேயில்லாமல் தமிழ் ஒன்றிலேயே நாட்டமுடையவனாக நான் கிடைத்தேன். எனக்குப் பாடம் சொல்வதும் நான் படிக்கும் நூல்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதும் அவருக்குப் புதிய வேலைகள். அவை அவர் உள்ளத்துக்கு உவப்பான காரியங்கள். என்னிடம் அவர் மிக்க அன்பு வைத்திருந்தார். எனக்கும் அவருக்கும் பிராயத்திலும் அறிவிலும் செல்வத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. எனினும், தமிழனுபவத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம். நாள் முழுவதும் தமிழைப்பற்றி அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பவர் என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.

அவ்வப்போது படித்து வந்த நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறளை எப்போதும் கையில் வைத்துப் படிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. ரெட்டியாரிடம் இருந்த புஸ்தகத்தைப் படித்து வந்தேன். எனக்குச் சொந்தமாக ஒரு புஸ்தகமிருந்தால் எங்கே போனாலும் வைத்துக்கொண்டு படிக்கலாம் என்று நினைத்தேன். அச்சுப் புஸ்தகத்தைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வாங்க இயலாதவனாக இருந்தேன். பெரும்புலியூர்ப் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயராக இருந்த ராயரொருவர் திருக்குறள் உரைப் புஸ்தகம் தம்மிடம் இருப்பதாகவும் பெரும்புலியூர் வந்தால் எனக்கே தருவதாகவும் குன்னத்தில் வாக்களித்தது அப்போது ஞாபகத்திற்கு வந்தது. “இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது” என்ற கருத்தால் பெரும்புலியூர் சென்று அதை அவரிடம் வாங்கி வர நிச்சயித்து எனது எண்ணத்தை ரெட்டியாரிடம் தெரிவித்தேன். அவர், “நானும் வருகிறேன். பேசிக்கொண்டே போய் வரலாம்” என்றார். அவர் என்னோடு பெரும்புலியூருக்கு நடந்து வருவதாகக் கூறியதைக் கேட்டபோது எனக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று.

பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தார். ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது எனக்குப் பேரானந்தத்தை உண்டாக்குகின்றது. இது பெரிய புண்ணியம். தமக்குப் பாடம் சொல்பவர் ஒருவரும் இல்லையே என்று குன்னத்தில் இவர் தவித்துக்கொண்டிருந்தார். இவருக்கு உங்களுடைய பழக்கம் கிடைத்தது அதிர்ஷ்டமே” என்று ராயர் பாராட்டிப் பேசினார். முன்பு வாக்களித்திருந்தபடி தம்மிடமிருந்த திருக்குறட் பிரதியை எனக்கு ஆசீர்வாதத்துடன் கொடுத்தார். அப்பால் நாங்கள் இருவரும் விடைபெற்றுச் செங்கணம் வந்து சேர்ந்தோம்.

வரும்வழியில் ரெட்டியார் என்னை அயலிலுள்ள ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு பனைமரத்தைக் காட்டினார். அதில் நான்கு பக்கங்களிலும் பல கிளைகள் இருந்தன. நான் பார்த்து வியந்தேன். அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்குப் பலர் வருவதுண்டென்றும் சொன்னார். செங்கணம் வந்தது முதல் பின்னும் ஊக்கத்துடன் குறளைப் படித்து இன்புறலானேன். அப்புஸ்தகத்தில் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதப்பெற்ற பதவுரை, கருத்துரை, விசேடவுரைகள் இருந்தன. அது நளவருஷம் ஆனி மாதம் (1856) காஞ்சீபுரம் சபாபதி முதலியாராற் பார்வையிடப் பெற்றுப் பதிப்பிக்கப்பட்டது.

பிள்ளையவர்கள் பிரஸ்தாபம்


ரெட்டியார் பாடஞ்சொல்லும் காலத்தில் இடையிடையே தமக்குத் தெரிந்த வித்துவான்களைப் பற்றியும் சொல்லுவார். நான் அரியிலூர்ச் சடகோபையங்காரிடம் பாடம் கேட்டதை அறிந்த அவர் அவ்வையங்காருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்று சொன்னார். கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியாரைப் பார்த்திருப்பதாகவும் அவர் சிறந்த இலக்கண வித்துவானென்றும் கூறினார். ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் அவர் அடிக்கடி சொல்வார்; திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக்காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம்போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புஸ்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார். செய்யுட்களாயுள்ள பகுதிகளின் எண்ணும், உரைப் பகுதிகளும் அதில் எழுதப்பட்டிருந்தன. மேலும் மேலும் படிக்கும் நூல்களில் சந்தேகம் எழுந்தால் அந்தச் சுவடியில் அவர் எழுதி வைத்துக்கொள்ளுவார்.

‘அவரிடம் போங்கள்’


இவ்வாறு பிள்ளையவர்களைப் பற்றிய பிரஸ்தாபம் வரும் சமயங்களில் நான் ஆவலாகக் கேட்பேன். மேலும் விஷயங்களை விசாரிப்பேன். நான் அவர்களிடம் படிக்க வேண்டுமென்று எண்ணியதையும் திருவிளையாடற் புராணத்திற் கயிறுசார்த்திப் பார்த்ததையும் சொல்லியிருந்தேன். இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடங் கேட்கலாம்; உமக்குத் திருப்தியுண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். பலரிடம் இக்கருத்தையுடைய வார்த்தைகளையே கேட்டுக் கேட்டு ஏங்கிய எனக்கு ரெட்டியாருடைய வார்த்தைகள் பின்னும் உறுதியை உண்டாக்கின.

ரெட்டியார் என்னிடம் சொல்வதோடு நில்லாமல் என் தந்தையாரிடமும் இக்கருத்தை வெளியிட்டார்: “என்னால் இயன்றதைச் சொல்லிக் கொடுத்தேன். இன்னும் நன்றாகப் படித்துப் பயன் அடைய வேண்டுமானால் பிள்ளையவர்களிடம் இவரை விட்டுப் படிப்பிப்பதுதான் நலம். உங்களை ஆதரிக்க வழியில்லாமல் இவ்வாறு சொல்லுகிறேனென்று நீங்கள் சிறிதும் எண்ண வேண்டாம். நீங்கள் எவ்வளவு வருஷம் இருந்தாலும் எனக்குச் சிரமம் இல்லை. கடவுள் கொடுத்திருப்பதைக்கொண்டு என்னால் இயன்ற அளவு ஆதரித்து வருவேன். இவரால் எனக்குச் சிரமம் உண்டென்று நான் நினைப்பதாகவும் எண்ணாதீர்கள். இவருக்குப் பாடம் சொல்வதும், இவரோடு தமிழ் நூல் சம்பந்தமாகப் பொழுதுபோக்குவதும் உண்மையில் எனக்கு அளவற்ற திருப்தியைத் தருகின்றன. எப்பொழுதும் இப்படியே இருக்கலாம். ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கையில் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை; இவர் இனிமேல்தான் முன்னுக்கு வந்து பிரகாசிக்க வேண்டும். தக்க இடத்தில் இருந்து பாடங் கேட்டால் இவர் அபிவிருத்தி அடைவாரென்பதில் தடையில்லை. இவரை அனுப்புவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வருத்தத்தை மாத்திரம் உத்தேசித்து, இவருடைய அபிவிருத்திக்குத் தடை உண்டாக்குவது பாவமல்லவா?” என்று அவர் கூறிப் பின்னும் பலமுறை வற்புறுத்தினார். என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற்கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தைவிட்டுப் புறப்படச் சித்தமாயினர்.