என் சரித்திரம் / 35 சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்


திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளவர்களுக்குத் தாமிரபரணி நதியும் திருக்குற்றால ஸ்தலமும் பெரிய செல்வங்கள்; அவற்றைப் போலவே மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர் இயற்றிய நூல்கள் இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன. மேலகரமென்பது தென்காசியிலிருந்து திருக்குற்றாலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. முன்பு திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து வெளியிடங்களுக்கு வரும் கனவான்களிற் பெரும்பாலோர் திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லி ஆனந்தமடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்; பலர் திருக்குற்றாலத் தல புராணத்திலிருந்தும் அரிய செய்யுட்களைச் சொல்லி மகிழ்வார்கள். தென்பாண்டி நாட்டார் பெருமதிப்பு வைத்துப் பாரட்டிய திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்களைப் பிள்ளையவர்கள் படித்ததில்லை. அவற்றை வருவித்துப் படிக்கவேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.

திருக்குற்றால யமக அந்தாதி


அக்காலத்தில் திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்பவர். அவர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் உதித்தவர். அவருடைய தம்பியாரும் மாணாக்கருமான சண்பகக்குற்றாலக் கவிராயர் என்பவர் மூலமாகப் பிள்ளையவர்கள் திருக்குற்றாலத் தலபுராணத்தையும் திருக்குற்றால யமக அந்தாதியையும் வருவித்துத்தாமே படித்து வரத் தொடங்கினார். யமக அந்தாதிக்கு ஒருவாறு பொருள் வரையறை செய்துகொண்டு எங்களுக்கும் பாடம் சொன்னார். குற்றாலத் தலபுராணத்தையும் இடையிடையே படிக்கச் செய்து கேட்டு இன்புற்று வந்தார். அந்நூலின் நடை நயத்தையும் பொருள் வளத்தையும் மிகவும் பாராட்டினார்.

எனக்குத் திருக்குற்றால யமக அந்தாதியில் சில செய்யுட்கள் பாடமாயின; அந்நூலைப் பாடம் சொல்லும்போது பிள்ளையவர்கள், “இதனை இயற்றிய கவிராயர் நல்ல வாக்குடையவர்; இப்போது திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கிற [1] மகாசந்நிதானம் அக்கவிராயர் பரம்பரையில் உதித்தவர்களாதலால் தமிழிற் சிறந்த புலமை உடையவர்கள். வடமொழியிலும் சங்கீதத்திலும் நல்ல ஞானம் உள்ளவர்கள். அவர்களை நீரும் சமீபத்தில் தரிசிக்கும்படி நேரும்” என்று கூறினார்.

‘குட்டிகளா!’


திருவாவடுதுறையிற் பதினைந்தாம் பட்டத்தில் இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகருடைய குருபூஜை வந்தது. அதற்கு வரவேண்டுமென்று ஆதீனகர்த்தர் பிள்ளையவர்களுக்குத் திருமுகம் அனுப்பியிருந்தார். அதற்காக அவர் திருவாவடுதுறை சென்று அங்கே மூன்று தினங்கள் இருந்துவிட்டு வந்தார். வந்தவுடன் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒரு நண்பரிடம் சொன்னார். நானும் பிற மாணாக்கர்களும் உடனிருந்து கவனித்தோம்.

“மகாசந்நிதானம் மிகவும் அன்போடு விசாரித்துப் பாராட்டியது. திருவாவடுதுறைக்கே வந்து இருந்து மடத்திலுள்ளவர்களுக்குப் பாடஞ் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டது. அங்கேயுள்ள குட்டிகளும் என்னை மொய்த்துக்கொண்டு, ‘எப்படியாவது இங்கே வந்திருந்து பாடஞ் சொல்லித் தரவேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். நான் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டு வந்தேன்” என்று ஆசிரியர் சொன்னார்.

நான் கவனித்து வரும்போது ‘குட்டிகள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் திடுக்கிட்டேன். “மடத்தில் குட்டிகள் இருக்கிறார்களா? என்று பிரமித்தேன். குட்டிகள் என்று இளம்பெண்களை யாவரும் கூறும் வழக்கத்தையே நான் அறிந்தவன். பக்கத்திலிருந்த சவேரிநாத பிள்ளையிடம், “குட்டிகள் மடத்தில் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் சிரித்துவிட்டு ‘சிறிய தம்பிரான்களை மடத்தில் குட்டித் தம்பிரான்கள் என்று சொல்வார்கள். அந்தப் பெயரையே சுருக்கிக் ‘குட்டிகள்’ என்று வழங்குவதுமுண்டு” என்று விளக்கமாகக் கூறினார். என் சந்தேகமும் நீங்கியது.

“திருவாவடுதுறையிலே போய் இருந்தால் இடைவிடாமற் பாடஞ் சொல்லலாம். அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள்; அவர்களுடைய பழக்கம் உண்டாகும். சந்நிதானத்தின் சல்லாபம் அடிக்கடி கிடைக்கும். அதைவிடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிள்ளைகளுக்கு ஆகார வசதிகள் முதலியன கிடைக்கும்” என்று பிள்ளையவர்கள் சொன்னார்கள். அவர் மாணாக்கர்களுடைய சௌகரியத்தையே முதல் நோக்கமாக உடையவர் என்பது அவ்வார்த்தைகளால் புலப்பட்டது.

இந்நிகழ்ச்சி ஆனி மாதத்தில் நடந்தது. அது முதல் “இந்த மகாவித்துவானுடைய மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரிய அந்தச் ‘சந்நிதானம்’ சிறந்த ரஸிகராகவே இருக்கவேண்டும்” என்று நான் நினைக்கலானேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் பெருமையையும் அதன் தலைவர்களாக உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரது மேன்மையையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த என் மனத்துள் “திருவாவடுதுறைக்கு எப்பொழுது போவோம்!” என்ற ஆவல் உண்டாயிற்று.

ஆறுமுகத்தா பிள்ளை


ஒரு நாள் பட்டீச்சுரத்திலிருந்து ஆறுமுகத்தா பிள்ளை என்ற சைவவேளாளப் பிரபு ஒருவர் வந்தார். அவர் பிள்ளையவர்களைத் தெய்வமாக எண்ணி உபசரிப்பவர். பிள்ளையவர்கள் அடிக்கடி பட்டீச்சுரம் சென்று சில தினங்கள் அவர் வீட்டில் தங்கியிருந்து வருவது வழக்கம்.

பிள்ளையவர்கள் செல்வாக்கை நன்கு உணர்ந்த ஆறுமுகத்தா பிள்ளை தம்முடைய குடும்பத்தில் உள்ள துன்பங்கள் சிலவற்றை அப்புலவர் பெருமானைக்கொண்டு நீக்கிக்கொள்ளலாம் என்றெண்ணி அவரை அழைத்துச் செல்வதற்கு வந்திருந்தார். என் ஆசிரியர் ஆறுமுகத்தா பிள்ளையிடம் விசேஷமான அன்புகாட்டி வந்தார். அதனால் அவருடைய வேண்டுகோளைப் புறக்கணியாமல் பட்டீச்சுரம் புறப்பட நிச்சயித்தார்.

திருவாவடுதுறைப் பிரயாணம்


“திருவாவடுதுறைக்குப் போய்ச் சந்நிதானத்திடம் விடைபெற்று, அங்கிருந்து பட்டீச்சுரம் போகலாம்” என்று சொல்லி என்னையும் தவசிப் பிள்ளைகளில் ஒருவரான பஞ்சநதம் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளையுடன் ஆசிரியர் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார்.

திருவாவடுதுறை மாயூரத்திலிருந்து சற்றேறக்குறையப் பத்து மைல் தூரம் இருக்கும். ஆறுமுகத்தா பிள்ளை ஒரு வண்டி கொணர்ந்திருந்தார். நாங்கள் எல்லோரும் அவ்வண்டியில் ஏறிக்கொண்டு சென்றோம். சில நேரம் வழியில் நடந்து செல்வது உண்டு. பிராயாணத்திற் பிள்ளையவர்கள் திருவாவடுதுறையைப் பற்றிப் பல செய்திகளை என்னிடம் சொன்னார்.

“சந்நிதானம் உம்மைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டாலும் கேட்கும்; சில செய்யுட்களைச் சொல்லும்படி கட்டளையிடலாம்; நீர் நன்றாக இசையுடன் செய்யுட்களைச் சொல்லும்; சந்நிதானத்திற்கு இசையில் விருப்பம் அதிகம். பொருள் கேட்டால் அச்சமின்றித் தெளிவாகச் சொல்லும். சந்நிதானம் உம்மிடத்தில் பிரியம் வைத்தால் உமக்கு எவ்வளவோ நன்மைகள் உண்டாகும்” என்று கூறினார்.

வழியில் எதிரே வருபவர்கள் பிள்ளையவர்களைக் கண்டு மரியாதையாக ஒதுங்கிச் சென்றார்கள். நாங்கள் திருவாவடுதுறையின் எல்லையை அணுகினோம். அங்கே சந்தித்தவர்கள் யாவரும் அவரைக் கண்டவுடன் முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். சந்தோஷ மிகுதியால் அவரைச் சுற்றிக்கொண்டு க்ஷேமம் விசாரித்தார்கள். மடத்தைச் சேர்ந்த ஓதுவார்களிற் சிலர் பிள்ளையவர்கள் வரவை உடனே சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தனர். தேசிகர் அவரை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினார்.

சுப்பிரமணிய தேசிகர் தோற்றம்


நாங்கள் மடாலயத்துள் சென்றோம். மடத்தின் உட்புறத்தில் ஒடுக்கத்தின் வடபுறத்தே தென்முகம் நோக்கியபடி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அமர்ந்திருந்தார். மடத்தில் பண்டார சந்நிதிகள் இருக்குமிடத்திற்கு ‘ஒடுக்கம்’ என்று பெயர். சுப்பிரமணிய தேசிகருடைய தோற்றத்திலே ஒரு வசீகரம் இருந்தது. நான் அதுகாறும் அத்தகைய தோற்றத்தைக் கண்டதே இல்லை. துறவிகளிடம் உள்ள தூய்மையும் தவக்கோலமும் சுப்பிரமணிய தேசிகரிடம் நன்றாக விளங்கினர். கவலை என்பதையே அறியாத செல்வரது முகத்தில் உள்ள தெளிவு அவர் முகத்தில் பிரகாசித்தது. அவரது காவியுடை, ருத்திராட்ச மாலை, தலையில் வைத்துள்ள ஜபமாலை ஆகிய இவைகள் அவரது சைவத்திருக்கோலத்தை விளக்கின.

காதில் அணிந்திருந்த [2] ஆறுகட்டி, சுந்தர வேடம், விரல்களில் உள்ள அங்குஷ்டம் பவித்திரம் என்பவைகள், தேகத்திலிருந்த ஒளி, அந்த மேனியிலிருந்த வளப்பம் எல்லாம் அவர் துறவிகளுள் அரசராக விளங்கியதைப் புலப்படுத்தின. அவருடைய தோற்றத்தில் தவப்பயனும் செல்வப் பயனும் ஒருங்கே விளங்கின. அவர் முகமலர்ச்சியிலே, அவருடைய பார்வையிலே, அவர் அமர்ந்திருந்த நிலையிலே, அவரது கம்பீரமான தோற்றத்திலே ஓர் அமைதியும், கண்டாரைக் கவரும் தன்மையும் இயல்பாகவே அமைந்திருக்கும் தலைமையும் ரஸிகத்துவமும் புலப்பட்டன.

அவரைச் சுற்றிப் பலர் உட்கார்ந்திருந்தனர். எல்லோருடைய முகத்திலும் அறிவின் தெளிவு மலர்ந்திருந்தது. எல்லாருடைய முகங்களும் சுப்பிரமணிய தேசிகரை நோக்கியபடியே இருந்தன. பிள்ளையவர்கள் புகுந்தவுடன் தேசிகர் கண்களிலே தோற்றிய பார்வையே அவரை வரவேற்றது. அங்கிருந்த யாவரும் என் ஆசிரியரைப் பார்த்தனர். அவர்களிடையே ஓர் உவகைக் கிளர்ச்சி உண்டாயிற்று.

ஆசிரிய வணக்கம்


பிள்ளையவர்கள் தேசிகரைச் சாஷ்டாங்கமாக வணங்கினர். அவருடைய சரீர அமைப்பு அப்படி வணங்குவதற்கு எளிதில் இடம் கொடாது. சிரமப்பட்டே வணங்க வேண்டும். ஆதலின் அவர் கீழ் விழுந்து நமஸ்காரம் செய்த காட்சி எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. புலவர் சிகாமணியாகிய அவர் புலமைநிலை மிக உயர்ந்தது. பிறரை வணங்காத பெருமையை உடைய அவர் அவ்வாறு பணிந்து வணங்கியபோது அவரது அடக்கத்தையும் குருபக்தியையும் உணர்ந்து பின்னும் வியப்புற்றேன்.

வணங்கி எழுந்த ஆசிரியர், தேசிகரிடம் திருநீறு பெறுவதற்கு அணுகினார். அப்போது நான் அவர் பின்னே சென்றேன். தேசிகர் முன் பிள்ளையவர்கள் குனிந்தார். அவர் அன்புடன் பிள்ளையவர்களது நெற்றியில் திருநீறிட்டு, “உட்கார வேண்டும்” என்றார். வழக்கம்போல் இரண்டாவது முறை பிள்ளையவர்கள் வணங்கத் தொடங்கியபோது. “ஒருமுறை வணங்கியதே போதும். இனி இந்த வழக்கம் வேண்டாம்” என்று தேசிகர் சொல்லவே அவர் மீட்டும் வணங்காமல் அருகில் ஓரிடத்தில் அமர்ந்தார். அமர்ந்த பிறகு, “உங்களிடம் பாடங் கேட்டு வரும் சாமிநாதையரா இவர்?” என்று தேசிகர் என்னைச் சுட்டிக் கேட்டார். “ஸ்வாமி” என்று பிள்ளையவர்கள் சொல்லவே, தேசிகர் என்னையும் உட்காரச் சொன்னார். பெரியோர்களிடத்தில் மற்றவர்கள் ஆம் என்னும் பொருளில் ‘ஸ்வாமி’ என்னும் வார்த்தையை உபயோகிப்பது வழக்கம். நான் என் ஆசிரியருக்குப் பின்னால் இருந்தேன். “நம்மைப் பற்றி முன்னமே நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்களே! இவர்களும் ஞாபகம் வைத்திருக்கிறார்களே” என்று எண்ணி உளம் பூரித்தேன்.

‘நீங்கள் இல்லாத குறை’


தேசிகர் பிள்ளையவர்களுடைய க்ஷேம சமாசாரங்களை முதலில் விசாரித்தார்; பின்பு. “மகாவைத்தியநாதையரவர்கள் இங்கே வந்திருந்தார்கள்; நேற்று மாலையில் சோமாசிமாற நாயனார் கதை பண்ணினார்கள். திருவிடைமருதூர், திருவாலங்காடு முதலிய இடங்களிலிருந்து சம்ஸ்கிருத வித்துவான்களும் வேறு ஊர்களிலிருந்து கனவான்களும் வந்திருந்தார்கள்; நல்ல ஸதஸ்; நீங்கள் இல்லாதது தான் குறையாத இருந்தது; மகாவைத்தியநாதையரவர்கள் பல வடமொழி நூல்களிலிருந்து அருமையான மேற்கோள்களை எடுத்துக்காட்டினார்கள். பெரியபுராணம், தேவார, திருவாசகம் முதலிய நூல்களிலிருந்தும் உங்கள் வாக்காகிய சூதசங்கிதையிலிருந்தும் செய்யுட்களை எடுத்துச் சொல்லிப் பிரசங்கம் செய்தார்கள். உங்கள் வாக்கைச் சொல்வதற்கு முன் ‘பிள்ளையவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று பீடிகை போட்டுக்கொண்டு செய்யுளை இசையுடன் சொல்லி அர்த்தம் கூறும்போது உங்கள் பெருமை எல்லோருக்கும் விளங்கியது. இப்படி அடிக்கடி உங்கள் வாக்கை எடுத்துக்காட்டினார்கள். அதுமுதல் உங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறோம். இங்கேயுள்ள தம்பிரான்களும் பிறரும் உங்கள் வரவை வெகு ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்” என்று உரைத்தார். அப்போது, அவருடைய வார்த்தைகளில் அன்பும் இனிமையும் வெளிப்பட்டன. “உலகம் பெரிது; அதில் உள்ள பெரியோர்கள் அளவிறந்தவர்கள். மனத்தைக் கவரும் அரிய குணங்களும் அநந்தம்” என்று நான் நிமிஷத்துக்கு நிமிஷம் எண்ணமிடலானேன்.

பெருமையின் விரிவு


பிள்ளையவர்களின் பெருமையை நான் முன்பு கேள்வியால் உணர்ந்திருந்தேன். அவரிடம் வந்து சேர்ந்தபின், அவரது பெருமையை நன்கு உணர்ந்தேன்; முற்றும் உணர்ந்துவிட்டதாக ஓர் எண்ணம் இருந்தது. அது பிழை என்று அப்போது என் மனத்திற்பட்டது. திருவாவடுதுறையில் அந்தத் துறவரசாகிய சுப்பிரமணிய தேசிகர் அவ்வளவு வித்துவான்களுக்கிடையில் என் ஆசிரியர் இல்லாததை ஒரு பெருங்குறையாக எண்ணினார். மகாவைத்தியநாதையர் தேவார, திருவாசகங்களோடு என் ஆசிரியர் வாக்கையும் மேற்கோளாகக் காட்டிப் பொருள் கூறினார் என்ற இச்செய்திகளும் பிள்ளையவர்களிடத்தில் தேசிகர் அன்பு காட்டிய முறையும், “நான் பிள்ளையவர்கள் பெருமையை இன்னும் நன்றாக உணர்ந்துகொள்ளவில்லை” என்பதைப் புலப்படுத்தின.

வித்துவான்களுக்கிடையே கம்பீரமாக வீற்றிருந்து இன்மொழிகளால் என் ஆசிரியரைப் பாராட்டும் தேசிகருடைய தோற்றத்தில் நான் ஈடுபட்டேன். அவருடைய பாராட்டுக்கு உரிய என் ஆசிரியரது பெருமையைப் பின்னும் விரிவாக உணர்ந்து வியந்தேன்; அவ்விருவருடைய பழக்கமும் பெறும்படி வாய்த்த என் நல்வினையை நினைந்து உள்ளம் குளிர்ந்தேன்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஆதீன கர்த்தரவர்களை ‘மகாசந்நிதான’ மென்றும் ‘சந்நிதான’ மென்றும்சொல்வது வழக்கம்.
  2. ஆறுகட்டி என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறையும் அடக்கியவர் என்பதைக் குறிக்கும் ஓர் ஆபரணம், சுந்தர வேடம் என்பது காதில் அணிந்து கொள்ளும் வட்டமான பொன் ஆபரணம், இது சுந்தரமூர்த்தி நாயனாரால் அணியப்பெற்றதாதலின் இப்பெயர் வந்ததென்பர். சைவாசாரியர் இதை அணிவது வழக்கம்.