என் சரித்திரம் / 52 திருப்பெருந்துறைப் புராணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

52. திருப்பெருந்துறைப் புராணம்


ஆசிரியரின் உத்தரவுப்படி நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்த பிறகு அவரைப் பிரிந்திருக்க நேர்ந்தது பற்றி மிகவும் வருந்தினேன். ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய அன்பும் தம்பிரான்களுடைய பழக்கமும் அவ் வருத்தத்தை ஒருவாறு குறைத்தன. திருவாவடுதுறையில் உணவு விஷயத்தில் எனக்கு ஒரு விதமான குறைவும் இல்லை. பொழுதுபோக்கும் இனிமையாக இருந்தது; குமாரசாமித் தம்பிரானுடைய சல்லாபம் எனக்கு ஆறுதலை அளித்தது. ஆசிரியர் கட்டளையிட்டிருந்தபடி, தம்பிரான்கள் எல்லாரிடமும் நான் மிக்க ஜாக்கிரதையுடனும் மரியாதையுடனும் பழகி வரலானேன்.

தேசிகர் கட்டளை


ஒருநாள் இரவில் சுப்பிரமணிய தேசிகருடன் நான் பேசிக்கொண்டிருக்கையில், “பிள்ளையவர்களிடம் போய் ஒரு சமாசாரம் சொல்லிவிட்டு வர வேண்டும்” என்றார்.

“கட்டளைப்படியே செய்கிறேன்” என்று நான் சொன்னேன்.

திருப்பெருந்துறையில் ஆலய விசாரணை செய்துவந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். பிள்ளையவர்களை அந்த ஸ்தலத்திற்கு நாடு, நகரச் சிறப்புடன் ஒரு புராணம் பாடும்படி கட்டளையிட வேண்டுமென்றும் அவ்வாறு அவர் பாடி அரங்கேற்றி முடித்தால் இரண்டாயிரம் ரூபாய் தாம் சம்மானம் பண்ணுவதாகவும் தம்பிரான் அதில் தெரிவித்திருந்தார். அக்கடிதத்தைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் சொல்லிவிட்டு, “நல்ல சந்தர்ப்பத்தில் இந்த வேண்டுகோள் வந்திருக்கிறது. பிள்ளையவர்கள் தம் குமாரருக்கு விவாகம்செய்த வகையில் ஏதேனும் சிரமம் அடைந்திருக்கலாம். அதை நீக்கிக்கொள்வதற்கு இது நல்லது. நீர் போய் இவ்விஷயத்தைத் தெளிவாக எடுத்துச்செல்வதோடு, அவ்வாறு செய்வது பல விஷயங்களில் அனுகூலமாக இருக்குமென்று நாமும் அபிப்பிராயப்படுவதாகச் சொல்லும். திருப்பெருந்துறைக்குரிய வடமொழிப் புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் அந்த ஸ்தலத்திற்கு முன்பே உள்ள இரண்டு பழைய புராணங்களையும் தம்பிரான் அனுப்பியிருக்கிறார். அவற்றையும் பிள்ளையவர்களிடம் கொண்டுபோய்க் கொடுத்து வாரும்” என்று சொல்லி அப்புஸ்தகங்களையும் என்னிடம் கொடுத்தார்.

ஒரு செய்யுளடி


நான் மறுநாட் காலையிலேயே மாயூரத்திற்கு நடந்து சென்றேன். ஆசிரியரிடம் செய்தியைச் சொல்லிப் புஸ்தகங்களையும் கொடுத்தேன். அவர் அவ்விஷயத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். அப்பொழுது அவர் மனம் திருப்பெருந்துறை விநாயகர் ஸந்நிதியிலேபோய் நின்றிருக்க வேண்டும். “செய்கிறேன்” என்றோ, “திருவாவடுதுறைக்குப் புறப்படுவோம்” என்றோ அவர் சொல்லவில்லை.

நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த
மழகளிற்றை நினைந்து வாழ்வாம்

என்ற ஒரு செய்யுளின் அடி அவர் வாக்கிலிருந்து புறப்பட்டது. அப்போது, ‘இப்பொழுதே இவர்கள் புராணத்திற்குப் பிள்ளையார் சுழிபோட்டுவிட்டார்கள்’ என்று எண்ணினேன். வெயிலுவந்த விநாயகரென்பது திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள ஸ்தல விநாயகர் திருநாமம். வெயில் உவந்த விநாயகர் என்ற திருநாமத்தோடு வெயிலுக்குப் பகையாகிய நிலவின் ஞாபகமும்! அதனை அவர் திருமுடியில் அணிந்திருப்பதன் ஞாபகமும் ஒருங்கே வந்தனபோலும். நான் அந்த அடியை ஏட்டிலே எழுதிக்கொள்ளவில்லை; என் உள்ளத்திலே எழுதிக்கொண்டேன்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர் திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற ஸ்தலமென்று ஐயா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல ஸ்தலந்தான். ஆவுடையார் கோவிலென்று இப்போது எல்லோரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம் அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத் தோன்றியது; என் ஆசிரியர் அந்த ஸ்தல புராணத்தைப் பாட நான் அதனை எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.

மூன்று நாட்கள் நான் மாயூரத்தில் தங்கியிருந்தேன். பிறகு ஆசிரியர் புறப்படவே நானும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்தேன்.

திருவாவடுதுறைக்கு வந்தபின் மீண்டும் பாடங்கள் வழக்கம்போல் நடைபெற்றன. பெரிய வகையில் கந்தபுராணம் நடந்தது. சிறிய வகையில் திருவிளையாடல், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம் முதலியன நடந்தன.

குமாரசாமித் தம்பிரான்


குமாரசாமித் தம்பிரானுக்கு வரவர மடத்து நிர்வாகத்தில் கவனம்செலுத்த வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் பெரிய ஒடுக்கத்தில் இருந்தார். ஒடுக்கமென்பது பண்டார ஸந்நிதிகள் இருக்கும் இடத்திற்குப் பெயர். அவருடன் இருந்து காரியதரிசியைப் போல முக்கியமான காரியங்களைக் கவனித்துவரும் தம்பிரானுக்கு ஒடுக்கத்தம்பிரான் என்று பெயர். நம்பிக்கையுள்ள தம்பிரான்களையே அப்பதவியில் நியமிப்பது வழக்கம். அந்த வேலையில் சின்ன ஒடுக்கமென்றும் பெரிய ஒடுக்கமென்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. பழம், சந்தனக்கட்டை, கற்கண்டு, பூஜா திரவியங்கள் முதலியவை சின்ன ஒடுக்கத்தைச் சார்ந்தவை. ஆபரணங்கள், விலையுயர்ந்த பட்டு, பீதாம்பரங்கள், ஆடைகள் முதலியன பெரிய ஒடுக்கத்தில் உள்ளவை. அப்பெரிய ஒடுக்கத்தில் உள்ளவர் அனுபவத்தில் முதிர்ந்தவராக இருப்பார். அத்தகைய வேலையையே குமாரசாமித் தம்பிரான் ஏற்று நடத்தி வரலாயினர். அதனோடு மடத்து வித்துவான் வேலையும் அவருக்கு இருந்தது. வித்துவானென்ற பட்டமும் அதற்கு உரிய சின்னமாகிய பல்லக்கும் அவருக்கு வழங்கப்பட்டன.

பாடத்தில் மாறுதல்


இதனால் முன்போல் நாள்தோறும் பாடங் கேட்டு வருவது அவருக்கு இயலாமற் போயிற்று. பெரிய வகுப்பென்பது பெயரளவில் வகுப்பேயன்றி உண்மையில் குமாரசாமித் தம்பிரானுக்காகவே அது நிகழ்ந்து வந்தது. அவர் நிலைமாறியவுடனே இரு பிரிவாக இருந்த பாடங்களும் மாறி, எல்லாத் தம்பிரான்களும் ஒருங்கே இருந்து கேட்க, காலையும் மாலையும் பாடங்கள் நடைபெற்றன. குமாரசாமித் தம்பிரான் இடையிடையே ஓய்வு நேரும்போது வந்து கேட்பார்.

புராண ஆரம்பம்


சில தினங்களுக்குப் பிறகு பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைப் புராணம் இயற்றத் தொடங்கினார். முதலில் விநாயக வணக்கம் ஒன்றைச் சொல்லி முடித்தார். மாயூரத்தில் நான் அவரைப் போய்க் கண்டபோது ஓரடி கூறியது அவருக்கு ஞாபகம் இல்லை. அதனால் வேறு ஒரு செய்யுளைச் சொன்னார். அது முடிந்தவுடன் நான், “மாயூரத்திற்கு இது விஷயமாக நான் வந்தபோது வெயிலுவந்த விநாயகரைப்பற்றி ஓர் அடி சொன்னது என் ஞாபகத்தில் இருக்கிறது” என்று சொல்லி அவ்வடியையும் கூறினேன். கேட்ட அவர் உடனே அதனையே இறுதி அடியாக வைத்து ஒரு செய்யுளைக் கூறினார். நான் எழுதினேன். மேலும் செய்யுட்கள் சொல்லச் சொல்ல எழுதி வரலானேன். சில நாட்களில் கடவுள் வாழ்த்தும் நாட்டுப்படலமும் நிறைவேறின. திருப்பெருந்துறைக்கு முன்பே இருந்த தமிழ்ப்புராணங்கள் இரண்டும் ஸ்தல வரலாறுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு அமைந்தவை. பிள்ளையவர்கள் பாடும் புராணங்களில் நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு முதலிய வருணனைகள் கற்பனைத்திறம் விளங்க அமைந்திருப்பதை அறிந்தவர்கள் அம்முறையில் தங்கள் தங்கள் ஊருக்கும் புராணம் வேண்டும் என்று விரும்புவார்கள். திருப்பெருந்துறைக்குப் புதிய புராணம் பாட வேண்டுமென்ற முயற்சியும் அத்தகைய விருப்பத்தினால் எழுந்ததே.

ஆதலால் பிள்ளையவர்கள் நாட்டுச்சிறப்பை விரிவாகவே அமைத்தார். 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம் முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப்பெற்றன. அடிக்கடி சுப்பிரமணிய தேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியே சென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள் நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.

நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆன பகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார். அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார். செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர் பாராட்டிக்கொண்டே வந்தார். “திருப்பெருந்துறை பெரிய சிவக்ஷேத்திரம். மாணிக்கவாசக சுவாமிகள் அருள்பெற்ற ஸ்தலம். அதற்கு ஏற்றபடி இப்புராணமும் சிறப்பாக இருக்கிறது. சீக்கிரம் இதை நிறைவேற்றி அரங்கேற்றிப் பூர்த்தி செய்யவேண்டும்” என்றார். செட்டியாரும் மிகவும் பாராட்டினார்.

அக்கவிஞர்பிரான் நாள்தோறும் சிலசில பாடல்களைச் செய்து வந்தார். அடிக்கடி யாரேனும் பார்க்க வருவார்கள். அவர்களோடு சம்பாஷணை செய்வதில் பொழுதுபோய்விடுமாதலால் சில நாட்கள் புராண வேலை நடைபெறாது. தமிழ்ப்பாடம் மாத்திரம் தடையின்றி நடந்து வந்தது.

பெரிய புராணப் பாடம்


தம்பிரான்களுடைய வேண்டுகோளின்படி ஆசிரியர் பெரியபுராணப் பாடம் நடத்த ஆரம்பித்தார். அப்போது தியாகராச செட்டியாரும் மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தனர்.

நான் பெரியபுராணம் படிக்கும்போது அபஸ்வரம் இல்லாமல் படிப்பதைக் கண்டு மகா வைத்தியநாதையர் சந்தோஷமடைந்தார். சில நாட்கள் அவர் திருவாவடுதுறையில் தங்கினமையின், அவரோடு பழகி அவருடைய குணங்களை அறிந்துகொள்ள அனுகூலமாயிற்று. அவரோடு பழகப் பழக அவருடைய சிவபக்தியும் ஒழுக்கமும் வரையறையான பழக்கங்களும் தூய்மையும் என் மனத்தைக் கவர்ந்தன. சுப்பிரமணிய தேசிகரால் தாம் முன்னுக்கு வந்ததை எண்ணி அவர் விநயமாக நடந்துகொண்டதைப் பார்த்தபோது அவரது நன்றியறிவு எவ்வளவு சிறப்பானதென்பதை நான் உணர்ந்தேன்.

அவர் என்னிடம் அன்பு பாராட்டி எனக்கு எவ்வாறு சங்கீதப் பயிற்சி ஏற்பட்டது என்று கேட்டார். நான் எங்கள் குடும்ப வரலாற்றையும் தந்தையாரது சங்கீதத் திறமையையும் எடுத்துச் சொன்னேன். எனக்குத் தெரிந்த கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களையும் பாடிக்காட்டினேன். அவர் கேட்டு மகிழ்ந்தார்.

வைசூரி


ஆங்கீரஸ வருஷம் கார்த்திகை மாதம் (1872 நவம்பர்) முதல் பெரியபுராணப் பாடம் நிகழ்ந்து வந்தது. கண்ணப்ப நாயனார் புராணம் நடைபெற்றபோது எனக்குத் திடீரென்று கடுமையான ஜ்வரம் வந்துவிட்டது. உடம்பில் எங்கும் முத்துக்கள் உண்டாயின. எல்லோரும் பெரியம்மை வார்த்திருப்பதாகச் சொன்னார்கள். அதனால் பெரியபுராணப் பாடம் கேட்கவோ மற்றக் காரியங்களைச் செய்யவோ ஒன்றும் இயலவில்லை. சத்திரத்தின் ரேழி (இடைகழி)யில் படுத்தபடியே இருந்தேன். பிள்ளையவர்கள் சில சமயங்களில் வந்து அருகில் உட்கார்ந்து, “உமக்கு இப்படி அசௌக்கியம் வந்துவிட்டதே!” என்று வருந்துவார். என் கண் இமைகளின் மேலும் கொப்புளங்கள் எழுந்தமையால் கண்களைத் திறக்க முடியவில்லை. பிள்ளையவர்கள் வரும்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்வேன். துக்கம் பொங்கிவரும். கண்ணையோ திறக்க முடியாது. கண்ணீர் வழிய வழிய நான் என் வருத்தத்தைத் தெரிவித்தேன். “என் பாட்டனார் ஊராகிய சூரியமூலைக்குப் போய்த் தேகசௌக்கியம் உண்டான பிறகு வருகிறேன்’ என்றேன். அவ்வாறே செய்யலாம் என்று கூறி என்னை அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யலானார்கள்.

அப்பொழுது மடத்துக்குக் கல்லிடைக்குறிச்சியிலிருந்து வீரராகவையர் என்ற கனவான் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்து சத்திரத்தில் தங்கியிருந்தார். அவருடைய முதிய தாயார் ஒருவிதமான உதவி செய்வாரும் இல்லாமல் நான் கஷ்டப்படுவதைக் கண்டு இரங்கி வருந்தி, “அப்பா! நீ கவலைப்படாதே; நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என்று கூறி என் அருகில் இருந்து வேண்டிய அனுகூலங்களைச் செய்துவந்தார். இரவு முழுவதும் தூங்காமல் என்னைக் கையைப் பிடித்து அழைத்துச்சென்றும், தாகமென்று சொன்னபோதெல்லாம் வெந்நீர் வைத்துக்கொடுத்தும் பாதுகாத்தார். எனக்குத் துன்பத்தைக் கொடுத்த அம்மையின் தெய்வம் அத்துன்பத்தினிடையே பாதுகாப்பதற்கு அவ்வுருவம் எடுத்து வந்ததாகவே எண்ணினேன்.

தை மாதத்தில் நடைபெறும் குருபூஜை சமீபித்துக்கொண்டிருந்தது. அதன்பொருட்டுப் பலர் வருவார்களாதலால் அச்சமயத்தில் திருவாவடுதுறையில் இருப்பது நல்லதன்று என எண்ணியே நான் சூரியமூலை செல்வதாக என் ஆசிரியரிடம் கூறினேன்.

விடைபெறுதல்


என் அசௌக்கியத்தையும் அதனால் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் பெரியபுராணப் பாடத்தை நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

என்னை ஒரு பல்லக்கில் இருக்கச்செய்து சூரியமூலைக்கு அனுப்பினார். மூங்கில் வளைவுள்ள அப்பல்லக்கு மூடி இல்லாதது; அவசரத்தில் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. கண்ணை மூடியபடியே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டேன். பிள்ளையவர்களும் பிறரும் என்னைப் பார்த்து மிகவும் விசனப்பட்டார்கள்.

“சாமிநாதையர், போய் வருகிறீரா?” என்ற பேச முடியாமல் வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தழுதழுத்தபடியே பொங்கிவரும் துயரத்தில் நனைத்துக் கூறினார் ஆசிரியர்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. குழறினேன்; அழுதேன்; காலை எட்டுமணிக்குப் பல்லக்கில் நான் சூரியமூலையை நோக்கிப் பிரயாணப்பட்டேன். பிள்ளையவர்கள் என்னுடன் ஹரிஹரபுத்திர பிள்ளை என்ற மாணாக்கரை வழித்துணையாகச் சென்றுவரும்படி அனுப்பினார். சூரியமூலைக்குத் திருவாவடுதுறையிலிருந்து போக அப்போது வசதியான சாலையில்லை. வயல்களின் கரைவழியே போக வேண்டும். எனக்கும் பிள்ளையவர்களுக்கும் இடையிலே உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே விரிந்து சென்றுவிடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது என் வயிறு பகீரென்றது.

பல்லக்கு, சூரியமூலைக்கு அருகில் உள்ள ஒரு தோப்பு வழியே சென்றபோது என் தந்தையார் எதிரே வந்தனர். நான் இருந்த நிலையைக் கண்ட அவர் திடுக்கிட்டுப் போனார். அவர் வந்த கோலம் ஏதோ ஒரு விசேஷத்தைக் குறிப்பித்தது. கண்ணை நன்றாகத் திறந்து பார்க்க என்னால் முடியவில்லை. “பேசாமல் வீட்டுக்குப் போ; பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று தந்தையார் சொல்லிச் சென்றார்.