என் சரித்திரம் / 5 கனம் கிருஷ்ணையர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. கனம் கிருஷ்ணையர்

சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து புகழ் பெற்ற சங்கீத வித்துவான்களுள் இவர் ஒருவர். என்னுடைய பாட்டியாருக்கு இவர் அம்மான். இவருடைய இயற்பெயர் [1] கிருஷ்ணைய ரென்பது. சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய கனமார்க்கத்தை மிக்க ஊக்கத்துடன் அப்பியாசம் செய்து அதிற் சிறந்த திறமையைப் பெற்றார்.

இவர் உடையார்பாளையம் தாலூகாவில் உள்ளதாகிய திருக்குன்றம் என்ற ஊரிலே பிறந்தவர். இவருடைய பரம்பரையினர் சங்கீத வித்துவான்கள். இவருக்கு நான்கு தமையன்மார்கள் இருந்தனர். அவர்களும் சங்கீதத்தில் பயிற்சியுள்ளவர்களே. ஆயினும் சகோதரர் ஐவரிலும் முத்தவராகிய சுப்பராமைய ரென்பவரும், யாவரினும் இளையவராகிய கிருஷ்ணையரும் சங்கீத சாகித்தியங்களிற் பெருமை பெற்றனர்.

இவர் இளமையில் தம் தந்தையாராகிய இராமசாமி ஐயரிடத்தும் அப்பால் தஞ்சாவூர் ஸமஸ்தான சங்கீத வித்துவானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பைய ரிடத்தும் சங்கீத சிக்ஷை பெற்றார். பிறகு சில காலம் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துச் சங்கீத வித்துவான்களுள் ஒருவர் ஆனார்.

அக்காலத்தில் பொப்பிலி ஸமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா என்னும் பிரபல சங்கீத வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் கனமார்க்கத்தில் மிகச் சிறந்த வன்மை பெற்றவர். தஞ்சை அரசருடைய சபையில் அவர் பாடினார். கனமார்க்கத்தின் தன்மையை அரசரும் பிறரும் அறிந்து பாராட்டினர். தமிழ்நாட்டில் அக்காலத்தில் கனமார்க்கம் வழக்கத்தில் இல்லை. அதனால், ‘இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் கனமார்க்கத்தை அப்பியாசம் செய்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நமது ஸமஸ்தானத்திற்கும் கௌரவமாக இருக்குமே!’ என்று அரசர் எண்ணினார். ஸமஸ்தான வித்துவான்கள் கூடியிருந்த சபையில் அவ்விருப்பத்தை அவர் வெளியிட்டபோது ஒருவரேனும் அங்ஙனம் செய்ய முன்வர வில்லை. கனமார்க்க சங்கீதத்திற்கு நல்ல தேகபலமும் இடைவிடாத முயற்சியும் வேண்டும். அதனால் வித்துவான்கள் அதனைப் புதிதாகப் பயில்வதற்கு முன்வர வில்லை.

அப்போது இளைஞராக இருந்த கிருஷ்ணையர் தாம் அப்பியாசம் செய்வதாகத் தைரியத்துடன் கூறினார். பொப்பிலி கேசவையாவிடம் அந்த மார்க்கத்தின் இயல்புகளையும் அதனைச் சார்ந்த சக்கரதானத்தைப் பாடும் முறையையும் தெரிந்துகொண்டு கபிஸ்தல மென்னும் ஊருக்குச் சென்று இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வருடைய ஆதரவில் அப்பியாசம் செய்யத் தொடங்கினார். அந்த அப்பியாசம் வரவர முதிர்ச்சி அடைந்தது. கடைசியில் தஞ்சை அரசர் முன்னிலையில் பொப்பிலி கேசவையாவே வியந்து பாராட்டும்படி பாடிக் காட்டினார். அது முதல் இவர் கனம் கிருஷ்ணையரென்றே வழங்கப் பெற்றார்.

கனம் கிருஷ்ணையர் சில காலம் திருவிடைமருதூரில் மகாராஷ்டிர மன்னர் வமிசத்தைச் சேர்ந்த அமர சிம்மரது சமூக வித்துவானாக இருந்தார். நந்தன் சரித்திரக் கீர்த்தனையின் ஆசிரியராகிய ஸ்ரீ கோபால கிருஷ்ண பாரதியார் அங்கே வந்து அரண்மனை வித்துவானாகிய ராமதாசரென்னும் பெரியாரிடத்தில் சங்கீத அப்பியாசம் செய்து வந்தார். இடையிடையே கனம் கிருஷ்ணையருடன் பழகி இவரிடமும் சில கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டார்.

பிறகு கனம் கிருஷ்ணையர் உடையார்பாளையம் ஸமஸ்தானாதிபதியாக அப்போதிருந்த கச்சிரங்கப்ப உடையாரால் அழைக்கப் பெற்றுத் தம் வாழ்வு முழுவதும் அந்த ஸமஸ்தானத்துக்கு வித்துவானாகவே விளங்கி வந்தார். இவர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றும் சக்தியும் பெற்றிருந்தார்.

திருவையாற்றுக்கு இவர் ஒரு முறை சென்ற காலத்தில் ஸ்ரீ தியாகையரைச் சந்தித்து அவருடைய விருப்பத்தின்படி அடாணா ராகத்தில், “சும்மா சும்மா வருகுமா சுகம்” என்னும் கீர்த்தனம் ஒன்றை இயற்றியிருக்கிறார்.

இவருடைய பெருமையினால் சிலருடைய பொறாமைத் தீ மூண்டு எரியத் தொடங்கியது. யாரோ சிலர் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் இவரைப்பற்றிக் குறைகூறி அவரது மனம் சிறிது சலிக்கும்படி செய்து விட்டார். அந்த ஜமீன்தார் கச்சிரங்கப்பருடைய குமாரராகிய கக்சிக் கல்யாணரங்க உடையா ரென்பவர்.

ஒரு நாள் கனம் கிருஷ்ணையர் வழக்கம்போல் ஜமீன்தாரைப் பார்க்கப் போனபோது அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஏதோ வேலையாகஇருப்பவரைப்போல் இருந்தார். அறிவாளியாகிய இந்தச் சங்கீத வித்துவானுக்கு, ‘இது யாரோ செய்த விஷமத்தின் விளைவு’ என்று தெரிந்து விட்டது. இவர் மனம் வருந்தியது. ஆனாலும் அதைத் தாம் தெரிந்துகொண்டதாக அறிவித்துவிட வேண்டுமென்று விரும்பினார்.

தம்முடைய மனவருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது இவருக்கு உசிதமாகப்பட வில்லை. குறிப்பாகத் தெரிவிக்க எண்ணினார். சங்கீதமும் சாகித்தியமும் இவருக்கு எந்தச் சமயத்திலும் ஏவல் புரியக் காத்திருந்தன. ஒரு நாயகி பாடுவதாகப் புதிய கீர்த்தனம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார்.

பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்
பைபையாப் பணத்தைக் கொடுத்தவர் போலப்
பாடின பாட்டுக்கும் ஆட்டுக்கும் நீரென்னைப்
பசப்பின தேபோதும் பலனறி வேன்காணும்

என்று சுருட்டி ராகத்தில் ஒரு பல்லவியை எடுத்தார்.

ஜமீன்தார் திடுக்கிட்டுப் போனார். இந்தச் சுருட்டி ராகம் அவர் உள்ளத்தைச் சுருட்டிப் பிடித்தது. கனம் கிருஷ்ணையர் நினைத்திருந்தால் பெரிய ஸமஸ்தானங்களில் இருந்து ராஜபோகத்தில் வாழலாமென்பதை அவர் அறிந்தவர். தம்முடைய சம்மானத்தை எதிர்பாராமல் அன்பை மாத்திரம் விரும்பி உடையார்பாளையத்தில் இருப்பதும் ஜமீன்தாருக்கு நன்றாகத் தெரியும். இந்த எண்ணங்களைப் பொறாமைக்காரருடைய போதனைகள் மறையச் செய்தன. கிருஷ்ணையருடைய பல்லவி அந்த ஜமீன்தாருடைய காதில் விழுந்ததோ இல்லையோ உடனே அவரது பழைய இயல்பு மேலெழுந்து நின்றது. ‘என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டோம்! நாம் இவருக்கு முத்துப் பையா தந்திருக்கிறோம்! வஜ்ரப் பதக்கமா கொடுத்தோம்! இவரால் நமக்கு எவ்வளவு பெருமை! நடுக்காட்டிலுள்ள இந்த ஊருக்கு வேறு ஸமஸ்தானத்திலிருந்து வித்துவான்களெல்லாம் வந்து போவது யாராலே? இவராலே அல்லவா? இதை நாம் மறந்து விட்டோமே’ என்று நினைந்து இரங்கினார்.

“ஸ்வாமீ! க்ஷமிக்க வேண்டும். நான் தெரியாமல் பராமுகமாக இருந்துவிட்டேன்” என்று ஜமீன்தார் வேண்டிக் கொண்டார்.

நினைத்த காரியத்தைச் சாதித்துக்கொண்ட கிருஷ்ணையர் பழைய பல்லவியை ஜமீன்தாரைப் புகழும் முறையில் மாற்றிப் பாடத் தொடங்கினார்:

பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்
பரிந்து கொடுத்து மிகச்சுகந் தந்துபின்
பஞ்சணை மீதினிற் கொஞ்சி விளையாடி
ரஞ்சிதமும் அறிந்த மகராஜனே

என்று இவர் அதை மாற்றிப் பாடவே ஜமீன்தார் முகம் மலர்ந்தது.

“சங்கீதமும் சாகித்தியமும் உங்களுடைய அதிகாரத்தின் கீழ் உங்கள் இஷ்டப்படி ஏவல் செய்கின்றனவே!” என்றார் அவர்.

“நான் என்ன ஜமீன்தாரா? ஏவல் செய்ய எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? என்னுடைய அதிகாரத்துக்கு யார் வணங்குவார்கள்?” என்று சிரித்துக்கொண்டே கிருஷ்ணையர் கூறினார்.

“இதோ, நான் இருக்கிறேன்; உங்கள் சங்கீத அதிகாரத்துக்குத் தலைவணங்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என்று ஜமீன்தார் சொல்லியபோது அவ்விருவருடைய அன்புள்ளங்களும் மீட்டும் பொருந்தி நின்றன.

இவ்வாறு கனம் கிருஷ்ணையருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல உண்டு. அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி இவர் பாடிய கீர்த்தனங்களும் பல. இவருடைய சந்தோஷமும், கோபதாபங்களும், வெறுப்பும், பக்தியும் கீர்த்தனங்களாக வெளிப்பட்டுள்ளன.

இவரிடம் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் சங்கீத அப்பியாசம் செய்தனர். அவ்விருவருக்கும் இவருடைய கீர்த்தனங்கள் பல பாடம் உண்டு. - உ.வே.சா.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கனம் கிருஷ்ணையருடைய சரித்திரத்தை 1936-ம் வருஷத்தில் தனியே விரிவாக எழுதிக் கீர்த்தனங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்.-உ.வே.சா.