என் சரித்திரம் / 79 பாடும் பணி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

79. பாடும் பணி

திருவாவடுதுறையில் என் பொழுதுபோக்கு மிக்க இன்பமுடையதாக இருந்தது. பாடம் சொல்வதும், படிப்பதும், படித்தவர்களோடு பழகுவதும் நாள்தோறும் நடைபெற்றன. சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபம் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை அளித்தது.

தேசிகர் தினந்தோறும் அன்பர்களுக்குக் கடிதம் எழுதுவார். ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதப் பெறும். ஒவ்வொன்றுக்கும் உரிய விஷயத்தை ராயசக்காரர்களிடம் நிதானமாகச் சொல்லுவார்; தாமும் எழுதுவார். ராயசக்காரர்கள் தேசிகர் கருத்தின்படியே எழுதக்கூடிய திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பிள்ளை என்பவர். இடையிடையே வந்தவர்களுடன் பேசுவது, அவர்கள் குறையைக் கேட்டு நீக்குவது முதலியவற்றிலும் தேசிகர் கவனம் செலுத்துவார். இவற்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் போசனம் செய்வது என்ற வரையறை அவருக்கு இல்லாமற் போயிற்று. தேக நலத்தைக் கவனியாமல் இப்படியிருந்தமையால் அஜீரணமும் இருமலும் அவருக்கு உண்டாயின. கண்களில் ஒளிக்குறைவு ஏற்பட்டது. ஒன்றையும் பாராட்டாமல் அவர் வழக்கம்போல எல்லா வேலைகளையும் கவனித்து வந்தார்.

வித்துவான் யாரேனும் வந்தால் கல்வி சம்பந்தமான பேச்சிலேயே பொழுது போகும். திராவிட மகாபாஷ்யம் முதலிய நூல்களிலிருந்து தேசிகர் செய்திகளை எடுத்துச் சொல்லுவார். அப்போது என்னை அந்நூற்பகுதிகளைப் படித்துக் காட்டச் சொல்லுவார். ஏட்டில் இன்ன பக்கத்தில் இன்ன விஷயம் உள்ளது என்று குறிப்பிடுவார். அப்போது எனக்கு மிக்க வியப்பு உண்டாகும். படித்துப் படித்து அவர் பழகியிருந்தமையால் பக்கம் முதற்கொண்டு தெளிவாக அவர் ஞாபகத்தில் இருந்தது. இத்தகைய நிலையில் நான் அதிக நேரம் தேசிகரோடு இருக்க நேர்ந்தது; அதனால் மிக்க திருப்தியடைந்தேன்.

மொழி பெயர்ப்பு

சில சமயங்களில் தேசிகர் சில கருத்துக்களைக் கூறி அவற்றை அமைத்துப் பாடல்கள் இயற்றும்படி எனக்குக் கட்டளையிடுவார். செய்யுட்களை நான் உடனே இயற்றிச் சொல்லிக் காட்டுவேன். வடமொழி வித்துவான் யாரேனும் வந்து பழைய சுலோகம் ஏதாவது சொல்வார். அது நல்ல சுவையுடையதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பார்ப்பார். அவர் குறிப்பையறிந்து நான் உடனே அதனைத் தமிழ்ச் செய்யுளாக மொழி பெயர்த்துக் கூறுவேன். வடமொழி வித்துவான் அதைக் கேட்டு மகிழ்வதோடு மடத்தின் பெருமையைப் பாராட்டிப் பேசுவார். சில நாட்களில் இரவு நான் வீட்டுக்குப் போகும்போது தேசிகர் சில சுலோகங்களையோ, புதிய விஷயங்களையோ சொல்லுவார். அவற்றை இரவில் தமிழ்ச் செய்யுளாக இயற்றி மறுநாட்காலையில் தேசிகரிடம் சொல்லி அவரை இன்புறுத்துவேன்.

போஜ சரித்திரம்

ஒரு நாள் வடமொழி வித்துவானொருவர் மடத்திற்கு வந்திருந்தார். அவர் போஜ சரித்திரத்திலிருந்து சில சுலோகங்களைச் சொல்லிப் பொருள் கூறினார். எல்லாம் மிக்க சுவையுள்ளனவாக இருந்தன. ஒரு சுலோகத்தைச் சொல்லிவிட்டு, “போஜ மகாராஜ, உன்னை எல்லோரும் கொடையிற் சிறந்தவனென்று கூறுவதற்கு என்ன காரணம்? பர நாரியர்களுக்கு உன் மார்பையும் பகைவர்களுக்கு உன் முதுகையும் ஈய மாட்டாய்” என்று அதன் கருத்தையும் சொன்னார். உடனே நான் அக் கருத்தை ஒரு கட்டளைக் கலித்துறையில் அமைத்துச் சொன்னேன். அது வருமாறு:-

“கொடையிற் சிறந்தனை யென்றுனை யாவருங் கூறலென்னே
நடையிற் சிறந்த பரநா ரியரொடு நண்ணலர்க
ளிடையிற் சிறந்தமை முன்னொடு பின்னின்று மீந்திலைநீ
தொடையிற் சிறந்த புயபோஜ ராஜ சுகோதயனே.”

[பரநாரியர் - வேறு மகளிர். நண்ணலர்களிடையில் - பகைவர் கூட்டத்தினிடையே. சிறந்து அமை முன்னொடு - சிறந்து அமைந்த மார்போடு. பின் - முதுகு. தொடை - மாலை. பரநாரியருக்கு முன்னும், நண்ணலர்களுக்குப் பின்னும் ஈந்திலையென்று நிரனிறையாக நின்றது.]

இந்தப் பாட்டில் ‘முன்னொடு பின் இன்றும் ஈந்திலையென்ற பகுதிக்கு, மார்போடு முதுகை இன்றும் ஈயவில்லையென்ற பொருளோடு, முன்னும் பின்னும் இன்றும் ஈயவில்லை என முக்காலப் பெயரும் தோற்றும்படி வேறொரு பொருளும் அமைந்துள்ளது. அதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர், “நன்றாயிருக்கிறது. முன்னொடு பின் என்பவற்றோடு இன்றும் என்பதைச் சேர்த்ததுதான் ரஸம்” என்று சொல்லி மகிழ்ந்தார்.

மற்றொரு நாள் வேறு வித்துவானொருவர் வந்தபோது அவர் சில சுலோகங்களைச் சொன்னார். போஜ மகாராஜன் ஒரு நாள் வீதி வழியே செல்லும் போது எதிரே ஒரு பிராமணன் தோற்பையொன்றில் ஜலம் எடுத்து வந்தானாம். அதைக் கண்டு, “இவன் தோற்பையில் ஜலம் எடுப்பதற்குக் காரணமென்ன? அனாசாரமல்லவோ?” என்றெண்ணிய அரசன் உடன் வந்த மந்திரியைக் கண்டு விஷயத்தை விசாரிக்கச் செய்தான். போஜராஜனுடைய பார்வையினால் கவித்துவ சக்தியைப் பெற்ற அப்பிராமணன் உடனே அரசனை நோக்கி விடையாக ஒரு சுலோகத்தைச் சொன்னானாம். “போஜ ராஜனே! நீ உன் பகைவரைச் சிறைப்படுத்தி அவர் காலில் விலங்கிடுவதால் இந்நாட்டில் உள்ள இரும்பெல்லாம் செலவாயின. உன்பால் வந்த வித்துவான்கள் முதலியவர்களுக்குத் தானங்கள் வழங்கி அவற்றைக் குறிக்கும் தானசாஸனங்களைத் தாமிரப் பட்டயத்தில் பொறித்துக் கொடுக்கவே தாமிரமும் இலதாயிற்று. நான் வேறு எந்தப் பாத்திரத்தில் ஜலம் எடுப்பேன்?” என்ற கருத்தமைந்தது அந்தச் சுலோகம். ஸம்ஸ்கிருத வித்துவான் சுலோகத்தைச் சொல்லிவிட்டு மிகவும் ரஸமாகப் பொருளை எடுத்துரைத்தார். சுப்பிரமணிய தேசிகர் கேட்டு மகிழ்ந்ததோடு என்னைப் பார்த்து, “எப்படியிருக்கிறது?” என்று வினவினார். நான் அவர் குறிப்பையறிந்து, “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு உடனே அக்கருத்தை அமைத்துப் பின் வரும் செய்யுளை இயற்றிச் சொன்னேன்:-

“நேரார் பதத்துப் புனைவிலங் காலயம் நீங்கினநிற்
சேரா துலர்க்கருள் சாஸனத் தாற்செம்பு தீர்ந்தவென்றால்
ஏரார்நின் னாட்டிடைப் போஜவித் தோலன்றி யானிதமும்
நீரா தரத்தோ டெடுப்பமற் றியாது நிகழ்த்துவையே.”

(நேரார்-பகைவர். அயம் - இரும்பு. ஆதுலர் - இரப்பவர்கள், ஆதரம் - அன்பு. நிகழ்த்துவை-சொல்வாயாக.)

காற்றுக்கு விண்ணப்பம்

பின்பு ஒரு நாள் வித்துவானொருவர் தேசிகருடைய உதவியை நாடி வந்தார். அவர் பழைய சுலோகங்கள் பலவற்றைச் சொன்னார். எந்த வகையான ஆதரவுமற்ற ஒரு வித்துவான் ஒரு பிரபுவை நோக்கித் தம்மைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தெரிவிக்க எண்ணி அக்கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகப் புலப்படுத்தியதாக அமைந்த சுலோகங்கள் அவை. அவற்றுள் புயற்காற்றினால் கடலில் அலைப்புண்ட ஒரு கப்பலில் தத்தளிப்பவன் காற்றைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது ஒரு சுலோகம். நான் அதனை மொழிபெயர்த்துச் சொன்னேன். அச் செய்யுள் வருமாறு:-


  “மீகாமன் செயல்முறையும் பிறழ்ந்தது வீழ்ந்
          தனதுடுப்பு மீன்றோன் றாமல்
  ஆகாய மறைத்தபுயல் அம்புதியோ
          கடக்கரிதால் அந்தோ மார்க்கம்
  ஏகாத விதமலைக ளுடையதுநௌ
          விதைக்கரைப்பால் ஏகச் செய்து
  நீகாவ லதுகவிழிவ் விரண்டுமுன்றன்
          கையனவாம் நிகழ்த்துங் காலே.”
  (மீகாமன்-மாலுமி. மீன்-நக்ஷத்திரம். அம்புதி-கடல். நௌ-ஒருவகைத் தோணி. காலே-காற்றே.)


இவ்வாறு அந்த அந்தச் சந்தர்ப்பங்களில் நான் மொழி பெயர்த்து இயற்றிய பாடல்கள் பல. இந்த உத்ஸாகத்தில் தினந்தோறும் கற்பனைகளை அமைத்துச் சொந்தமாகப் பல பாடல்களையும் இயற்றி வந்தேன். ஒரு சமயம் தேக அசௌக்கியத்தால் சில நாள் மடத்துக்கு நான் போக இயலவில்லை; படுத்த படுக்கையிலேயே இருந்தேன். அக்காலத்தில் முருகக் கடவுள் படைவீடுகள் ஆறில் ஒவ்வொன்றின் விஷயமாகவும் ஒவ்வோர் இரட்டை மணிமாலை இயற்றினேன்.

அவதானம்

மடத்திற்குச் சில சமயங்களில் அவதானம் செய்யும் வித்துவான்கள் வந்து தங்கள் திறமையைப் புலப்படுத்துவார்கள். அஷ்டாவதானம், ஷோடசாவதானம், முப்பத்திரண்டவதானம், சதாவதானம் என்னும் அவதானங்களைச் செய்பவர் வருவார்கள். அவர்கள் திறமையைக் கண்டு நானும் பிறரும் வியப்போம். “நாமும் இவ்வாறு அவதானம் செய்யவேண்டும்” என்று ஆசை எனக்கும் பிறருக்கும் எழுந்தது. அப்பியாசமும் செய்து வந்தோம். அப்பால் ஒரு நாள் நான் என்னுடன் படிப்பவர்களையும் என்னிடம் படித்த மாணாக்கர்களையும் வைத்துக் கொண்டு அவதானம் செய்யலானேன். சிலர் பாடல்களுக்கு ஸமஸ்யை கொடுத்தனர். சிலர் நூல்களிற் சந்தேகம் கேட்டனர். சிலர் பழைய பாடலைக் கூறித் திரும்பச் சொல்லச் செய்தனர். சிலர் கணக்குப் போட்டனர். அவற்றிற்கெல்லாம் நான் தக்கபடி விடை அளித்தேன். அவதானத்துக்கு இன்றியமையாதது ஞாபக சக்தி. எனக்கு ஸமஸ்யை கொடுத்தவர்களுள் என்னிடம் படித்து வந்த வைஷ்ணவ மாணாக்கராகிய ராமகிருஷ்ண பிள்ளை யென்பவர் ஒருவர். அவர், “புண்டரீக வல்லிதாள் புகழ்ந்து பாடியுய்வனே” என்று ஈற்றடி கொடுத்தது மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. மடாலயம் முழுவதும் தமிழ் மணம் நிரம்பி யிருந்தமையால் தமிழ் சம்பந்தமான எந்த முயற்சியையும் தைரியமாக மேற்கொள்ளும் இயல்பு எனக்கு உண்டாயிற்று.

மற்ற மாணாக்கர்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு.

கடிதப் பாடல்

ஒரு சமயம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகர் விஷயமாகச் சில வெண்பாக்களைப் பாடி அவற்றைத் தேசிகரிடம் சொல்லிக்காட்ட வேண்டுமென்று எனக்கு ஒரு செய்யுளால் அறிவித்து அவற்றையும் அனுப்பியிருந்தார். தேசிகரிடம் நான் அச்செய்யுட்களை அறிவித்ததோடு அச் செய்தியைப் பின்வரும் பாடலால் வேதநாயகம் பிள்ளைக்கும் தெரிவித்தேன்:-

“தாயக மெனநன் னாவலர் பலர்க்குந்
        தனமுதல் அளித்தியல் வேத
நாயக மகிபா நீயக மகிழ்ந்து
        நன்கனுப் பியமுதற் பாவை
ஆயக மதில்வாழ் சுப்பிர மணிய
        ஆரியன் பாலுட னுரைத்தேன்
நோயக லெவர்க்கு நின்பெருஞ் சீரை
        நுவன்றன னுவலரும் புகழோய்.”
(முதற்பா - வெண்பா. ஆய் அகமதில் வாழ் - நூலை ஆராய்கின்ற நெஞ்சத்தில் வாழும்.)

இவ்விதம் பல வகையிலும் பாடும் பணியில் ஈடுபட்ட என் செய்யுள் முயற்சி விருத்தியாகி வந்தது. அதனால் மற்றவர்களுக்கு ஸந்தோஷமும் எனக்கு மேன்மேலும் ஊக்கமும் விளைந்தன. சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும்.