என் சரித்திரம் / 85 கோபாலராவின் கருணை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

85. கோபால ராவின் கருணை

திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது காலேஜைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகஸ்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புக்களைக் காட்டிக் கொண்டு வந்த கோபால ராவ் நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவ் கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில் அவரை இருக்கச் சொல்லி மற்றொன்றில் தாம் அமர்ந்தார். அதைப் பார்த்தபோது அவர் நெடு நேரம் அவ்வகுப்பில் இருந்து பாடத்தைக் கவனிக்கக் கூடுமென்று தோற்றியது.

நான் பாடம் சொல்லத் தொடங்கினேன். கோபாலராவும் அவர் நண்பரும் கவனித்து வந்தனர்.

நான் அப்போது பாடம் சொல்லத் தொடங்கிய பாடல் மிகவும் ரஸமானது. “நமக்குச் சக்தி இருக்கும் பொழுதே தர்மத்தைப் பண்ண வேண்டும். பிறகு செய்யலாமென்று நினைத்தால் அதற்குக் காலம் வராமலே போய்விடும்” என்ற கருத்தையுடையது அது. அதன் உட்பொருளை விளக்குவதற்காக ஒரு கதையைச் சொன்னேன்.

நான் சொன்ன கதை

“ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நன்றாகச் சம்பாதித்தான். தனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொண்டான். தர்மசிந்தனை மாத்திரம் அவனுக்கு உண்டாகவில்லை.

அவனுக்கு வயசு முதிர்ந்து வந்தது. அவனுடைய குமாரர்களெல்லாம் தலையெடுத்தார்கள். ஏதாவது கிடைத்த பொருளைப் பத்திரமாகச் சேமித்து வைக்க அந்தக் காலத்தில் தக்க வழி இல்லை. அதனால் அவன் தனக்குக் கிடைத்ததை ஒரு துணியில் முடிந்து எங்கேயாவது புதைத்து வைப்பான். சில காலத்துக்குப் பிறகு அந்தக் கிழவனுக்கு நோயுண்டாகி மரணாவஸ்தை ஏற்பட்டது. அப்பொழுது அவனால் பேச முடியவில்லை. அருகில் அவனுடைய பிள்ளைகளும் உறவினர்களும் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் அவனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தினால், “என்ன வேண்டும்? என்ன வேண்டும்?” என்று கேட்கலாயினர்.

“கிழவன் யமனுடன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அவனுடைய நண்பனொருவன், கிழவன் பணத்தைத் தர்மத்தில் செலவிடாமலிருந்ததைக் கண்டித்துத் தர்மம் செய்ய வேண்டுமென்று இடித்துரைத்து வந்தான். அவன் வார்த்தைகளால் கிழவனுக்குத் தர்மம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது, தான் எங்கேயோ சுவரில் ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்த சிறு பொன் முடிப்பின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அதை எடுத்துத் தக்கபடி தருமம் செய்ய வேண்டுமென்ற கருத்திருந்தும், அப்படிச் செய்யும் நிலையில் அவன் அப்போது இல்லை. தனது எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் அவன் வாய் அடைத்து விட்டது. அந்தச் சமயத்தில் வேறு என்ன செய்ய முடியும்? எப்படியாவது தன் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு அதிகரித்து வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு ‘இவ்வளவு பெரிய பொன் முடிச்சு’ என்பதைத் தெரிவிப்பதற்காக தன் கையினால் சுவரைக்குறிப்பிட்டு ஜாடை காட்டினான். ஆனாலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அவன் கருத்து விளங்கவே இல்லை. ‘ஐயோ! எதையோ கேட்கிறாரே! இந்தச் சமயத்தில் இன்னது கேட்கிறாரென்று தெரிந்துகொள்ள முடியவில்லையே!’ என்று சிலர் இரங்கி அழுதனர். அப்போது அவனுடைய குமாரன் ஒருவன், ‘தெரிந்து விட்டது; இவருக்குப் புளிப்பு விளாங்காயின்மேல் மிக்க பிரியம் உண்டு; அதைக் கேட்கிறார். ஐயோ, இப்போது அது கிடைக்கும் காலமல்லவே. ஆனாலும் பார்க்கிறேன்” என்று வேகமாக ஓடினான். அவன் போய் வருவதற்குள் கிழவன் உயிர் போய்விட்டது.

“பிள்ளை, ‘ஐயோ; அவருக்குப் பிரியமான விளாங்காய் வேண்டுமென்று ஜாடையாகச் சொன்னாரே நான் தெரிந்து கொண்டும் அதைக் கொண்டு வந்து கொடுக்கும் பாக்கியம் இல்லாத பாவியானேனே!’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான்.

“அந்தக் கிழவன் நினைத்ததற்கும் அவன் பிள்ளை செய்ததற்கும் சம்பந்தமே இல்லை. அவன் பொன்னைக் குறிக்கப்போய் அது புளி விளாங்காயாய் முடிந்தது.”

ராயர் சிரிப்பு

இந்தக் கதையை வேடிக்கையாக விரித்துச் சொல்லி நிறுத்தினவுடன் கோபால ராவ் பக்கென்று வாய்விட்டுச் சிரித்து விட்டார். அவ்வளவு வெளிப்படையாக அவர் சிரித்ததை யாரும் கண்டதில்லை. நான் சொன்ன கதையின் சுவைதான் அவரைச் சிரிக்க வைத்ததென்று அறிந்து திருப்தியடைந்தேன்.

மேலே பாடம் சொல்லத் தொடங்கினேன். “இப்படிக் கடைசிக் காலத்தில் தர்மம் செய்ய எண்ணியவர்கள் எண்ணம் அப்பொழுதுகூட நிறைவேறுவதில்லை. ஆகையால் நாம் போகும் மார்க்கத்திற்குப் பயன்படும் தர்மத்தை முன்பே செய்ய வேண்டும். பெரிய பிரயாணம் செய்யப் போகிறவன் சோற்று மூட்டை கொண்டு போவதுபோல இந்தத் தர்ம மூட்டையை நாம் மறுமைக்குச் சேகரிக்க வேண்டும். இதைத்தான் இந்தச் செய்யுள் சொல்லுகிறது” என்று சொல்லி மீண்டும் அப்பாட்டைச் சொன்னேன்:-


    “சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார்-இறுகிறுகிப் பின்னறிவா மென்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளாங்காயாம்.”


[சிறு காலை - இளம் பருவத்திலே. செல்வுழி - செல்லுமிடமாகிய மறு பிறப்பிற்குரிய. வல்சி - ஆகாரம். இறுகிறுக - இறுக இறுக. தோட் கோப்பு - தோளில் மாட்டிக் கொள்ளப்படும் உணவு மூட்டை. பின் அறிவாம் - பிறகு பார்த்துக் கொள்வோம்.]

அந்தப் பாட்டுக்கு விரிவாகப் பொருள் சொல்லி முடிந்தவுடன் மேலுள்ள பாடலைச் சொல்லத் தொடங்கினேன். அந்த வகுப்பில் மூன்றாவது மணிக்குரிய பாடம் சொல்லும் ஆசிரியர் அன்று வரவில்லை. அதனால் அந்த மணியிலும் தொடர்ந்து நானே தமிழ்ப் பாடம் சொல்லத் தொடங்கினேன். இரண்டு மணியிலும் கோபால ராவும் அவர் நண்பரும் அவ்வகுப்பில் இருந்து கேட்டனர்.

மணி முடிந்தது. அவர்கள் எழுந்தனர். கோபால ராவ் என்னை ஒரு முறை பார்த்துப் புன் முறுவல் பூத்தார். அவர் பார்வையில் கருணை ததும்பியது; முறுவலில் உவகை வெளிப்பட்டது.

நான் விடைபெற்றுக் கொண்டு இடைவேளை உணவு கொள்ளப் புறப்பட்டேன்.

செட்டியாரின் ஆவல்

அன்றுமாலை வழக்கம்போல் தியாகராசசெட்டியாரிடம் போய்க் கோபால ராவ் என் வகுப்புக்கு வந்ததையும் அங்கே நிகழ்ந்தவற்றையும் எடுத்துச் சொன்னேன்.

செட்டியார், “அவருக்கு என்ன அபிப்பிராயம் உண்டாயிற்று என்று தெரியுமா? மேலதிகாரிகளுக்கு உங்களைப்பற்றி எழுத வேண்டுமே; என்ன எழுதப் போகிறாரோ!” என்று கேட்டார்.

“நான் எப்படி அறிவேன்?” என்று கூறினேன். செட்டியாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. என்னைப் பற்றிக் கோபால ராவ் மேலதிகாரிகளுக்கு எழுதி நியமன உத்தரவு பெற வேண்டும் என்ற கவலையால் ராயரவர்களுடைய மனத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைத்தெரிந்து கொள்ளுதற்கு மிக்கஆவலுடையவராக இருந்தார். எல்லாம் நல்லதாகவே இருக்குமென்று எதிர்பார்த்த எனக்கு அவருடைய ஆவல் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மறுநாள் காலேஜ் திறந்தவுடன் செட்டியார் அங்கே சென்று ரைட்டரைப் பார்த்து, “சாமிநாதையரைப் பற்றி ராயரவர்களுக்கு என்ன அபிப்பிராயம்?” என்று கேட்டார்.

நல்ல செய்தி

அவர் நல்ல செய்தியைச் சொன்னார். “ராயரவர்கள் இவரைப் பற்றி டைரக்டருக்கு நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதோ தபால் அனுப்பப் போகிறேன்” என்று ரைட்டர் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தியாகராச செட்டியாருக்கு நல்லுணர்வு வந்தது. அவர் ரைட்டரை அதோடு விடவில்லை. என்ன எழுதினாரோ வென்று தூண்டித் தூண்டி விசாரித்தார். நான் மடத்திலிருந்து கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனென்பதையும், அங்கே பலருக்குப் பாடம் சொல்லிப் பழக்கமானவனென்பதையும் எழுதிவிட்டு. “நானே இரண்டு முறை அவர் பாடம் சொன்ன வகுப்புக்குப் போய்க் கவனித்தேன். அவர் கற்பிக்கும் முறை மிகவும் திருப்தியாக இருக்கிறது, ஆகையால் இது வரையில் தியாகராச செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது ரூபாயையே அவருக்கும் கொடுத்து இரண்டு வருஷத்துக்கு ஸப்ரோட்டமாக நியமிக்கலாம்” என்றும் குறித்திருந்ததாக ரைட்டர் சொன்னார்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வந்த செட்டியார் என்னிடம் “கவலை நீங்கியது. கடவுள் கிருபையால் நான் செய்த முயற்சி பலித்தது. இனி உங்கள் பாடு, உங்கள் மாணாக்கர்கள் பாடு” என்று சந்தோஷத்தோடு சொன்னார்.

“எல்லாம் உங்களுடைய பேரன்பினால் உண்டானவை” என்று என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன்.

இந்த முக்கியமான நிகழ்ச்சிக்குப் பிறகு கோபாலராவ் என்பால் மிக்க கருணை காட்டலானார். என்னைக் காணும் போதெல்லாம், “ஒழுங்காகப் பாடம் நடந்து வருகிறதா? யாராவது தவறு செய்தால் உடனே சொல்லுங்கள். உங்களுக்கு ஏதாவது ஆகவேண்டுமானாலும் கூச்சமில்லாமல் தெரிவிக்கலாம்” என்று அன்பொழுகக் கூறுவார். தம்முடைய பாதுகாப்பின் கீழ் வந்த என்னை அங்கீகரித்துக்கொண்டதற்கு அறிகுறியாக இருந்தன அந்த வார்த்தைகள்.

அந்த வாரம் சனிக்கிழமை காலையில் தியாகராச செட்டியாரையும் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று அங்கே இரண்டு நாள் சந்தோஷமாக இருந்து விட்டு வந்தேன். வரும்போது சுப்பிரமணிய தேசிகர், “செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது ரூபாய் கொடுத்தால் அங்கே இரும்; இல்லாவிட்டால் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விடலாம்” என்று சொல்லி அனுப்பினார்.

கோபால ராவ் அறிவித்தது

திங்கட்கிழமையன்று காலையில் பன்னிரண்டு மணிக்கு மேல் பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு மணியான பிறகும் சிறிது நேரம் சொன்னேன். அப்போது திடீரென்று பிள்ளைகளெல்லாம் எழுந்து நின்றார்கள். நான் காரணம் அறியாமல், “ஏன் நிற்கிறீர்கள்?” என்று கேட்கவே அவர்கள், “ராயரவர்கள் வந்து தாழ்வாரத்தில் உங்களை நோக்கிக்கொண்டு நிற்கிறார்கள்” என்றார்கள். நான் உடனே அவர்பாற் சென்றேன். அவர், “உங்களை இரண்டு வருஷத்துக்குச் செட்டியாரவர்களுக்குக் கொடுத்த ஐம்பது ரூபாயையே சம்பளமாகக் கொடுத்து ஸப்ரோட்டமாக நியமித்திருப்பதாக டைரக்டர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். நான் என் சந்தோஷத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என் மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது?

முதற் சம்பளம்

அந்த வாரம் நான் இந்தச் சந்தோஷத்துடனும் கையிற் பெற்ற அரை மாதச் சம்பளத்துடனும் திருவாவடுதுறை சென்றேன். “நீங்கள் வாங்கும் முதற் சம்பளத்தை உங்கள் தாய் தகப்பனாரிடம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று செட்டியார் சொல்லியிருந்தார். அப்படியே அந்த இருபத்தைந்து ரூபாயை முதலில் என் தாயார் கையிற் கொடுத்தேன். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வேறு யாரேனும் லக்ஷ ரூபாய் கொடுத்திருந்தாலும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது. பிறகு என் தந்தையாரிடமும் சுப்பிரமணிய தேசிகரிடமும் கொடுத்து வாங்கிக் கொண்டேன். “பரம சாம்பவருடைய பிள்ளையாகிய உமக்கு இன்னும் அதிகச் சம்பளமும் உயர்ந்த பதவியும் கிடைக்க வேண்டும்” என்று தேசிகர் வாழ்த்தினார்.

அதுவரையில் கும்பகோணத்தில் நான் ஸ்ரீசாது சேஷையரவர்கள் வீட்டிலேயே இருந்து போஜனம் செய்து வந்தேன். அந்த வாரம் என் தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன். அங்கே சில மாத காலத்துக்குப் பக்தபுரியக்கிரகாரத்தில் ஒரு சிறிய வீடுபேசிக்கொண்டு அதில் குடியிருந்தோம்

பரீக்ஷையும் விடுமுறையும்

மார்ச்சு மாத இறுதியில் காலேஜ் பரீக்ஷை நடைபெற்றது. அக் காலத்தில் ஸர்வ கலாசாலைப் பரீக்ஷை டிசம்பர் மாதத்தில்தான் நடைபெற்று வந்தது. மார்ச்சு மாதப் பரீக்ஷைக்குத் தியாகராச செட்டியாருடைய உதவியால் வினாப்பத்திரம் சித்தம் செய்தேன். பரீக்ஷை முடிந்தபிறகு அவர் முன்னிலையில் விடைக் கடிதங்களைத் திருத்தி ‘மார்க்’குகளை வரிசைப்படுத்தி எழுதிப் பிரின்ஸிபாலிடம் சேர்ப்பித்தேன்.

கோடை விடுமுறை தொடங்கியது. அந்தச் சம்பளத்தையும் பெற்றுத் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்குச் சென்றேன். அக்காலத்தில் திருவாவடுதுறையில் எனக்குச் சீமந்தம் நடைபெற்றது. அதற்கு என் சம்பளப் பணம் உதவியது. சுப்பிரமணிய தேசிகர் செய்த உதவிகளுக்கும் கணக்கில்லை.