என் சரித்திரம் / 88 என்ன பிரயோசனம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

88. “என்ன பிரயோசனம்?”

காலேஜ் வேலையைப் பார்த்துக் கொண்டும் வீட்டுக்கு வரும் மாணாக்கர்களுக்கு ஒழிந்தநேரங்களில் பாடம் சொல்லிக் கொண்டும் பொழுது போக்கி வந்தேன். அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது, தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்புடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது.

சேலம் இராமசுவாமி முதலியார்

முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீன்தார் பரம்பரையினர். இளமையிலேயே பேரறிவு படைத்து விளங்கினார். தமிழிலும் சங்கீதத்திலும் வடமொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்த காலத்தில் அவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால் அவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள். கும்பகோணத்துக்கு நூதனமாக உத்தியோகஸ்தர்கள் வந்தால் அவர்களிடம் மனிதர்களை அனுப்பிப் பார்த்து வரச் செய்வதும், குரு பூஜை முதலிய விசேஷதினங்களில் மடத்திற்கு வரவேண்டுமென்று அழைக்கச் செய்வதும் திருவாவடுதுறை மடத்து வழக்கங்கள். சேலம் இராமசுவாமி முதலியாருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் கேள்வியுற்ற ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவரைப் பார்த்து வரும்படி காறுபாறு தம்பிரானையும் அவருடன் வேறு சிலரையும் அனுப்பினார். தம்பிரான் பரிவாரங்களுடன் சென்று முதலியாரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார்.

இராமசுவாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம் பெருமையை நன்குணர்ந்தவராதலின், தம்பிரானுடன் சம்பாஷணை செய்து வரும் போது மடத்து நிர்வாகத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், கல்வி சம்பந்தமாகவும் விசாரிக்க ஆரம்பித்தார். “மடத்தில் தமிழ்க் கல்வியபிவிருத்திக்கு என்ன செய்கிறார்கள்? வித்துவான்களாக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை பேர்கள் படிக்கிறார்கள்?” என்பவை போன்ற கேள்விகளை அவர் கேட்டார். தம்பிரான் ஏற்ற விடை அளித்து வந்தார். தமிழ், வடமொழி, சங்கீதம் என்னும் மூன்றிலும் சிறந்ததேர்ச்சியையுடைய வித்துவான்கள் அடிக்கடி மடத்துக்கு வந்து சம்மானம் பெற்றுச் செல்வார்களென்றும், ஆதீனத் தலைவரே சிறந்த கல்விமானென்றும், அவரிடத்திலும் சின்னப்பண்டார ஸந்நிதிகளிடத்திலும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடம் கேட்டு வருகிறார்களென்றும் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்துக் கொண்டு வரும்போது அக்காலத்து மடத்துக் காரியஸ்தராக இருந்தவரும், தம்பிரானுடன் வந்தவருமாகிய சிவசுப்பிரமணியபிள்ளையென்பவர், “மடத்திலே படித்துக் கொண்டிருந்த மாணாக்கர்களுள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே இவ்வூர்க் கவர்ன்மென்ட் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருக்கிறார்” என்று சொன்னார். கேட்ட முதலியார், “அப்படியா? நான் அவரைப் பார்த்ததில்லை” என்றார்.

பின்னும் சில நேரம் பேசி யிருந்து விட்டுத் தம்பிரான் முதலியோர் விடை பெற்றுச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர். உடனே ஆதீனத் தலைவர், “இப்போது அங்கே முன்ஸீபாக வந்திருக்கும் முதலியார் தமிழில் நல்ல பயிற்சி உடையவரென்று தோற்றுகிறது. அவரை நீங்கள் போய்ப் பார்த்து வரவேண்டும்” என்று எனக்குச் சொல்லியனுப்பினார்.

முதற் காட்சி

அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை; சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின் நான் சென்று பார்க்கலாமென்று ஒருநாள் புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை (21-10-1880). அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் காலேஜில் இருப்பதையும் மடத்தில் படித்தவனென்பதையும் சொன்னேன். அவர் யாரோ அயலாரிடம் பராமுகமாகப் பேசுவது போலவே பேசினார். என்னோடு மிக்க விருப்பத்துடன் பேசுவதாகப் புலப்படவில்லை. ‘அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?’ என்று நான் எண்ணலானேன்.

“நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன் என்றேன்.

பிள்ளையவர்கள் பெயரைக கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை மதிக்காவிட்டாலும், பிள்ளையவர்கள் மாணாக்கனென்ற முறையிலாவது என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன் வரவில்லை. கணக்காகவே பேசினார்.

“பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடை பெயர்ச்சியே இல்லாத இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம் பொய்யாக இருக்கும்’ என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன்.

அவர் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. “என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?” என்ற கேள்வி அடுத்தபடி அவரிடமிருந்து வந்தது. ‘இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி செய்துவிடலாம்’ என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புஸ்தகங்களின் வரிசையை ஒப்பிக்கலானேன், “குடந்தை யந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை. . . ” என்று சொல்லிக் கொண்டே போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன். அவர் முகத்தில் கடுகளவு வியப்புக் கூடத் தோன்றவில்லை.

அசையாத பேர்வழி

“இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று திடீரென்று அவர் இடை மறித்துக் கூறினார். நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன். ‘இவர் இங்கிலீஷ் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம்.அதனால்தான் இப்படிச் சொல்லுகிறார்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன்.

“திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம். . . . “

அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார்.

“நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தி யார் உரை. . . . .” என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண நூல்களை எடுத்துக் கூறினேன். அப்பொழுதும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. ‘அடடா! முக்கியமானவற்றையல்லவா மறந்து விட்டோம்? அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டு வந்திருக்கலாமே!’ என்ற உறுதியுடன், “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப் பாடம் கேட்டிருக்கிறேன்” என்றேன்.

இராமசுவாமி முதலியார், “சரி, அவ்வளவு தானே?” என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. ‘கம்பராமாயணத்தில் கூடவா இவ்வளவு பராமுகம்! இவ்வளவு அசட்டை!’ என்ற நினைவே அதற்குக் காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அவர் என்னை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார்.

பழைய நூல்கள்

“இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?

எனக்கு அவர் எதைக் கருதிக் கேட்டாரென்று தெரியவில்லை. ‘பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையே நான் படித்திருப்பதாக இவர் எண்ணிக்கொண்டாரோ? கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகளெல்லாம் பழைய நூல்களல்லவோ? கம்பராமாயணம் பழைய நூல் தானே? பழைய நூலென்று இவர் வேறு எதைத் கருதுகிறார்?’ என்று யோசிக்கலானேன்.

“நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!” என்று நான் கேட்டேன்.

“அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.

“தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரிய வில்லையே?” என்றேன்.

“சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக் கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?”

அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், ‘இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு” என்று கம்பீரமாகச் சொன்னேன்.

சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார். “நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?” என்று கேட்டார்.

“அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்று தைரியமாகச் சொன்னேன். அறிவுப் பலத்தையும் கல்வி கேள்விப் பலத்தையும் கொண்டு எப்படியாவது படித்து அறிந்து கொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண்டாகிவிட்டது.

“சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்” என்று அவர் சொன்னார். நான் விடை பெற்றுக்கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவரென்றும் உணர்ந்தேன்.

இரண்டாவது சந்திப்பு

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசாமி முதலியாரிடம் போனேன். அன்று அவர் மிகவும் அன்போடு என்னை வரவேற்றார். அவரைப் பார்ப்பதைவிட அவர் சொன்ன புஸ்தகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர் தம்மிடம் இருந்த சீவகசிந்தாமணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார். “இதைப் படித்துப் பாருங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாமா?” என்றார். “அப்படியே செய்யலாம்” என்று உடன்பட்டேன். பிறகு அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

முதலியார் சிந்தாமணி பெற்ற வரலாறு

“எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை. திருநெல்வேலிப் பக்கத்திலுள்ள கவிராயர்கள் வீட்டில் பிரதிகள் கிடைக்கலாமென்று எண்ணி ஸ்ரீவைகுண்டத்தில் முன்ஸீபாக இருந்த என் நண்பர் ஏ. இராமசந்திரையர் என்பவரிடம் விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தேன். அவர் யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்; ஒன்றும் கிடைக்கவில்லை.

“ஒரு சமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு வழக்கில் சாக்ஷியாக வந்தார். அவரை விசாரிக்கும்போது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்களென்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது. விசாரணை யெல்லாம் முடிந்த பிறகு முன்ஸீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார். அவர், ‘இருக்கின்றன’ என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துத் தரவேண்டுமென்று கூறினார். அதிகாரப் பதவியிலிருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவகசிந்தாமணிப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார். அதிலிருந்து காகிதத்திற் பிரதி பண்ணிய புஸ்தகம் இது.

“இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை. நான் காலேஜில் படித்தபோது இதன் முதற் பகுதியாகிய நாமகளிலம்பகம் மாத்திரம் பாடமாக இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் தமிழைக்காட்டிலும் இங்கிலீஷ் அதிகமாயிருந்தது. நூல் முற்றும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள வித்துவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, பிள்ளைத்தமிழ், புராணங்கள் இவைகளோடு நிற்கிறார்களே யொழிய மேலே போகவில்லை. அதனால் நான் மிகவும் அலுத்துப் போய்விட்டேன்.”

“புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்ப ராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.”

முதலியார் கூறியவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு வந்தேன். தமிழ் நூற் பரப்பையெல்லாம் உணர்ந்து விளங்கிய பிள்ளையவர்கள் கூடச் சிந்தாமணியைப் படித்ததில்லையென்பதை நினைத்தபோது, ‘நாம் இந்தப் புதிய நூலைப் படித்துப் பொருள் செய்வது சுலபமாக இருக்குமா?’ என்ற அச்சம் சிறிது தோற்றினாலும், “தமிழ் நூல் மரபுக்குப் புறம்பாக இல்லாத நூல் ஏதாயிருந்தாலென்ன? ஸம்ஸ்கிருதமா, தெலுங்கா நூதனமாகப் பயிற்சி செய்து கொள்ள வேண்டுமென்பதற்கு? தமிழ் நூலை அறிவு கொண்டு ஆராய்ந்து படித்துப் பார்த்தால் விளங்காமலா போகிறது? எவ்வளவோ நூல்களைப் படித்ததாகச் சொல்லியும், ‘என்ன பிரயோசனம்?” என்று ஒரு கேள்வியில் தூக்கி எறியும்படி அந்தப் புஸ்தகத்தில் என்னதான் இருக்கிறது? பார்த்துவிடலாம்!” என்ற தைரியமே முன் நின்றது.

“பிற்பாடு வருகிறேன்; இதைப் படித்துப் பார்த்துக்கொண்டே வருகிறேன்” என்று உத்ஸாகத்தோடு சொல்லி இராமசுவாமி முதலியாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.