என் சரித்திரம் / 89 ஜைன நண்பர்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

89. ஜைன நண்பர்கள்

சேலம் இராமசுவாமி முதலியார் கொடுத்த சீவகசிந்தாமணிப் பிரதியைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் நச்சினார்க்கினியர் உரையும் இருந்தது. அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன கதையை அது சொல்வது, இன்னவகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்டதாக ஒரு நினைப்பு. அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற் பரப்புக்குப் புறம்பேயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது.

சிந்தாமணி ஆராய்ச்சி

புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

“மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே”

என்பது சிந்தாமணியிலுள்ள முதற்பாட்டு. இதிலுள்ள சொற்களில் பொருள் விளங்காதது ஒன்றுமில்லை, ஆனால் ஒரு நூலின் காப்புச் செய்யுளாக இருக்கும் அதில் எனக்கு ஒரு புதுமை தோற்றியது. நான் படித்த நூல்களில் உள்ள விநாயக வணக்கமோ, சடகோபர் காப்போ அதில் இல்லை. ஜைன சமயக் காவியத்தில் அந்த வணக்கங்கள் இருக்க நியாயமில்லை; பொதுவான கடவுள் வணக்கமாக அது முதலில் எனக்குத் தோற்றியது. ‘மூவா முதலா வுலகம் என்ற தொடருக்கு மாத்திரம் எனக்குப் பொருள் தெளிவாகவில்லை’

உரையைப் படிக்கலானேன். நச்சினார்க்கினியர் முதலில் காவிய இலக்கணத்தை விரிவாக எழுதியிருக்கிறார். பிறகு சொல்லிலக்கணம் முதலியன வருகின்றன. அக்காலத்தில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம் பூரணமும் நச்சினார்க்கினியமும் சொல்லதிகாரம் சேனா வரையமும் அச்சிடப் பெற்றிருந்தன. அவற்றை நான் படித்திருந்தமையால் சிந்தாமணி உரையிலுள்ள எழுத்திலக்கணச் சொல்லிலக்கணச் செய்திகள் எனக்கு விளங்கின. உரையில், ‘மூவா முதலா வுலகம்மொரு மூன்றும்’ என்பதற்கு, ‘அந்தமும் ஆதியுமில்லாத மூவுலகமும்’ என்று எழுதியிருந்தது. உலகம் நிலை யாமையையுடையதென்ற விஷயத்தையே மிகுதியாகக் கேட்டுப் பழகியிருந்த எனக்கு இக்கருத்து, புதியதாக இருந்தது. மேலே படித்துக்கொண்டு போனேன். அந்த ஒரு பிரதியை மாத்திரம் வைத்துப் படிப்பது சிரமமாகவே தோற்றியது.

ஏட்டுப் பிரதி

அந்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போலவே திருவாவடுதுறைக்குப் போய் இராமசாமி முதலியாரைச் சந்தித்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தேன். கேட்ட தேசிகர் மிகவும் மகிழ்ச்சியடைந்து. “தக்க அறிவுடைய கனவான்களது பழக்கம் ஏற்படுவது மிகவும் நல்லதுதான்; அவருக்கு ஜாக்கிரதையாகப் பாடம் சொல்ல வேண்டும்; பிள்ளையவர்கள் எழுதி வைத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதி ஒன்று மடத்தில் இருக்கிறது” என்று சொல்லி அப்பிரதியை வருவித்து அளித்தார். “முதலியாருக்குப் பாடம் சொல்லும்படியிருப்பதால் சனிக்கிழமை மட்டும் வந்து ஞாயிற்றுக்கிழமை திரும்பி விடலாம்” என்று கூறி விடை கொடுத்தார்.

கும்பகோணம் வந்து பிள்ளையவர்கள் பிரதியையும் முதலியார் தந்த பிரதியையும் வைத்துக்கொண்டு சிந்தாமணியைப் படித்தேன். முதலியார் பிரதியில் மூலமும் பொழிப்புரையுமே இருந்தன. முதலில் சில பாடல்களுக்கு மாத்திரம் விசேட உரை இருந்தது. பிள்ளையவர்கள் பிரதியிலோ முழுவதற்கும் விசேட உரை இருந்தது. ‘விசேட உரையை விட்டு விட்டுத் தனியே பொழிப்புரையை மாத்திரம் எழுதிக் கொள்வதில் என்ன லாபம்? இரண்டும் வேறு வேறு உரைகளோ’ என்ற சந்தேகம் உண்டாயிற்று. கவனித்துப் பார்க்கையில் இரண்டும் ஒருவரது உரையே என்று தெரிந்தது. ஆனாலும் ‘இருவேறு வகையாகப் பிரதிகள் இருப்பது ஏன்?’ என்ற ஐயம் விளங்கவில்லை.

தெரியாத விஷயங்கள்

அடுத்த நாள் இராமசுவாமி முதலியாரிடம் சென்று பாடம் சொல்லத் தொடங்கினேன். நாமகள் இலம்பகம் 1870-ஆம் வருஷம் பி. ஏ, பரீட்சைக்குப் பாடமாக இருத்நது. அப்போது படித்த முதலியார் தாம் பாடம் கேட்டபோது அறிந்த விஷயங்களை இடையிடையே சொன்னார். நான் பாடம் சொன்னபோது இடையில், ‘கட்டியக்காரன்’ பெயர் வந்தது. நான் அதை ஒருவருடைய பெயரென்று தெரிந்து கொள்ளவில்லை. ‘கட்டியக்காரன்’ என்று படித்தேன். அப்போது முதலியார், “நாமகள் இலம்பகக் கதை மாத்திரம் எனக்குத் தெரியும்; கட்டியங்காரன் என்பது தான் அந்தச் சொல்; சச்சந்தனுடைய மந்திரிகளுள் ஒருவன் பெயர் அது; அவன் தான் சச்சந்தனைக் கொன்றான்” என்றார். பிறகு, ‘கோவிந்தன்’ (சீவக சிந்தாமணி, 187, உரை) என்று ஒரு பெயர் வந்தது. அது கண்ணபிரானைக் குறிப்பதென்பதைத் தவிரச் சிந்தாமணியிலே யாரைக் குறிப்பதென்பது தெரியவில்லை. முதலியாருக்கும் அது விளங்கவில்லை. இப்படியே வேறு சில விஷயங்களும் விளங்காமலிருந்தன. எனக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லையென்று சொல்லித் தக்கவர்களைக் கேட்க வேண்டுமென்பேன். விளங்காததையும் விளங்கியதாகச் சொல்லிக் குழப்பாததை அறிந்த முதலியார் அதைப் பாராட்டுவார். நாங்கள் சிந்தாமணியைப் படித்து வந்த போது சில வித்துவான்களும் வந்திருந்து கேட்பதுண்டு. இப்படி ஐந்து மாதங்கள் சென்றன.

சிந்தாமணி ஜைன நூலாதலின் விளங்காத விஷயங்களை ஜைனர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணி என்னிடம் வீட்டிற் பாடம் கேட்டு வந்த ராமலிங்க பண்டாரமென்பவரை நோக்கி, “இந்தப் பக்கத்தில் ஜைனர்கள் யாரேனும் இருக்கிறார்களா? படித்தவர்களாக யாரையாவது தெரியுமா?” என்று கேட்டேன்.

அவர், “இங்கே இராமசாமி கோவில் மேல் தெருவில் ஜைனர்கள் வீடுகள் உண்டு. எல்லோரும் செல்வர்களே, அவர்களுள் படித்தவர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னதைக் கேட்டபோது உடனே போய் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன்.

சந்திரநாத செட்டியார்

மறுநாள் என் விருப்பத்தின்படி ராமலிங்க பண்டாரம் என்னை அழைத்துக் கொண்டு ஜைனர்கள் வசிக்கும் தெருவிற்குச் சென்றார். அங்கே தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியார் என்பவர் வீட்டினுள் என்னை அழைத்துப் போனார். அந்த வீட்டின் வாயிலில் மாக்கோலம் போடப்பட்டிருந்தது. நிலைகளில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். ‘இன்றைக்கு ஏதோ விசேஷம் போலிருக்கிறது’ என்று எண்ணி உள்ளே சென்றோம். அங்கே கூடத்தில் பலர் கூடியிருந்தனர். அக்கூட்டத்திலிருந்த ஒரு கனவானைக் காட்டி, “இவர்களே சந்திரநாத செட்டியாரவர்கள்” என்று ராமலிங்க பண்டாரம் சொல்லி என்னையும் அவருக்குப் பழக்கம் பண்ணி வைத்தார்.

“வாழை, தோரணம் இவையெல்லாம் கட்டி அலங்காரம் செய்திருக்கிறதே; ஏதாவது விசேஷ முண்டோ?” என்று கேட்டேன்.

“இன்றைக்குச் சிந்தாமணி பூர்த்தியாயிற்று; அந்த விசேஷத்தைக் கொண்டாடுகிறோம்” என்று அவர் சொன்னார்.

எனக்கு மிக்க ஆச்சரியமுண்டாயிற்று. ‘நாம் சிந்தாமணியைப் பற்றித்தான் கேட்க வந்திருக்கிறோம். சிந்தாமணி பூர்த்தியாயிற்றென்று இவர் சொல்லுகிறார்; சிந்தாமணியைப் பாராயணம் செய்வது இவர்கள் சம்பிரதாயம் போலிருக்கிறது’ என்றெண்ணி, “சிந்தாமணியைப் படித்து வந்தீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம். நான் சிரவணம் செய்து வந்தேன். இவர்கள் பாடம் செய்து வந்தார்கள்” என்று சொல்லி எதிரே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, “திண்டிவனம் தாலூகாவிலுள்ள வீடூர் என்பது இவர்கள் கிராமம். தமிழிலும், வட மொழியிலும், பிராகிருதத்திலும் உள்ள ஜைன கிரந்தங்களிலும் உரைகளிலும் மிகுதியான பழக்கமுள்ளவர்கள். இவர்களைப் போன்றவர்கள் யாருமில்லை. இவர்கள் திரு நாமம் அப்பாசாமி நயினா ரென்பது” என்று தெரிவித்தார். எனக்காகவே அவர் அங்கே வந்திருப்பதாகத் தோற்றியது. ‘நாம் எந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த விஷயத்தில் தேர்ச்சியுள்ளவர்களை எதிர்பாராமலே பார்க்கிறோம். அதே விஷய சம்பந்தமான உத்ஸவம் வேறு நடக்கிறது. இது தெய்வச் செயலே’ என்று எண்ணிப் பூரிப்பை அடைந்தேன்.

“எவ்வளவு காலமாக இவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“ஆறு மாதமாக இந்தப் பாடம் நடந்து வருகிறது”

‘இந்த ஆறு மாதங்களை நாம் வீண்போக்கி விட்டோமே!’ என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.

அந்தப் பெரியவர் மிக்க அடக்கமுடையவராகவும் மெல்ல வார்த்தை சொல்பவராகவும் இருந்தார். அவரிடம் நானும் சிந்தாமணியைப் படித்து வருவதைப் பற்றிச் சொன்னேன். “அதில் கோவிந்தனென்று வருகிறது; அது யாருடைய பெயர்?” என்று கேட்டேன்.

அவர் ஸாதாரணமாக, “விஜயையின் சகோதரன். விஜயை சச்சந்தனுடைய மனைவி” என்றார். வேறு சில ஐயங்களை வினவினேன். தெளிவாக பதில் கிடைத்தது. சிந்தாமணியைப் படிப்பதற்கு ஒரு தக்க துணை அகப்பட்டதென்ற நம்பிக்கை உண்டாயிற்று. சந்திரநாத செட்டியாரும் சில விஷயங்களை விளக்கினார். கதையையும் எடுத்துச் சொன்னார்.கும்பகோணம் காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்து பென்ஷன் பெற்றுக் கொண்டுள்ள ஸ்ரீமான் ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினாரவர்களுடைய தந்தையார் இவர்.
விளங்கிய விஷயங்கள்

அன்று முதல் சந்திரநாத செட்டியார் எனக்கு நல்ல நண்பராகி விட்டார். ஜைனர்கள் சீவகசிந்தாமணியைச் சிறந்த பாராயண நூலாகக் கருதுகிறார்களென்பதும், நம்மவர்கள் இராமாயண முதலியவற்றைப் பாராயணம் செய்து பட்டாபிஷேகம் செய்வது போல அவர்களும் அந்த நூல் நிறைவேறியவுடன் அந்த நிறைவேற்றத்தைக் கொண்டாடுவார்களென்பதும் எனக்குத் தெரியவந்தன. சம்பிரதாயமாகப் படித்தவர்களிடையே சிந்தாமணிக்கு ஓர் உரைவாய் மூலமாக வழங்கி வந்தது. அதை அவர்கள் சொல்லுவார்கள். மணிப்பிரவாள நடையில் மத சம்பந்தமான பரிபாஷைகள் மிகுதியாகக் கலக்கப் பெற்று விளங்குவது அவ்வுரை. அதன் பகுதிகளை அவ்வப்போது சந்திரநாத செட்டியார் சொல்ல நான் கேட்டு இன்புற்றேன்.

சிந்தாமணி உரையில் அங்கங்கே, நச்சினார்க்கினியர் அந்நூற் செய்யுட்பகுதிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். நூல் முழுவதும் நன்றாகப் படித்து மனனஞ் செய்தாலன்றி அச்செய்யுட்கள் இன்ன இடத்தில் இருக்கின்றன வென்பது விளங்காது. அந்தச் செய்யுட் பகுதிகளைச் சந்திரநாத செட்டியாரிடம் சொல்வேன்; அவர் பளிச்சுப் பளிச்சென்று இன்ன இடத்திலிருக்கின்றனவென்று சொல்லி முழுப் பாட்டையும் சொல்வார். சிந்தாமணி விஷயத்தில் அவர் ஓர் அகராதியாக இருந்தார்.

சிந்தாமணி சம்பூரண உத்ஸவம் முடிந்த பிறகும் அப்பாசாமி நயினார் சில காலம் கும்பகோணத்தில் தங்கியிருந்தார். பிறகு தம் ஊர் சென்றார். இடையிடையே கும்பகோணம் வந்து செல்வார். அவர் வந்த காலங்களிலெல்லாம் ஜைன சம்பிரதாயங்களையும் ஜைன சமயக் கருத்துக்களையும் விளக்கமாகத் தெரிந்து கொள்வேன்.

ஜைன அன்பர்களுடைய பழக்கத்தால் ஏட்டுப் பிரதிகள் இரண்டு வகையாக இருந்ததற்குக் காரணம் தெரிந்து கொண்டேன். நச்சினார்க்கினியர் முதலில் சிந்தாமணிக்கு ஓர் உரை எழுதினாராம். பிறகு அதை ஜைனர்களிடம் படித்துக் காட்டிய போது சம்பிரதாய விரோதமாகச் சில பகுதிகள் உள்ளனவென்று சொன்னார்களாம். அதனால் அவர் தம்மை ஒரு ஜைனராகச் சொல்லிக்கொண்டு சிற்றாம்பூர் என்னும் இடத்திலுள்ள ஜைன மடத்திற்கு வந்து சில காலம் தங்கி ஜைன நூல்களையும் ஜைன சம்பிராதயங்களையும் கற்றுச் சென்று மீட்டும் புதிய உரையை எழுதினாராம். விசேஷ உரையுடன் இருக்கும் பிரதியிலுள்ளது பின்பெழுதிய உரையென்று தெரிய வந்தது.

இப்படி நூலாராய்ச்சியால் புலப்படாமல் கர்ண பரம்பரையாகக் கேட்டுத் தெரிந்த செய்திகளால் பல விஷயங்கள் எனக்கு விளங்கின. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறு அவ்வாறுதான் எனக்குத் தெரிந்தது.

இராமசுவாமி முதலியார் பாடம் கேட்டு வந்தார். அங்கங்கே சிந்தாமணி நூலின் நயத்தையும் உரை நயத்தையும் அறிந்து அவர் பாராட்டுவார். கோவிந்தையாரிலம்பகத்தின் முதற் செய்யுளுரையில் “வீரன்றாணிழல்” என்பதற்குச் சமவசரணம் என்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அந்தத் தொடர் எதைக் குறிக்கிறதென்று எனக்கு விளங்கவில்லை. விளங்காவிட்டால் விடுவேனா? சந்திரநாத செட்டியாரிடம் போய்க் கேட்டேன். சமவசரண மென்பதுபெரிய ஜைனாலயமென்று தெரிய வந்தது. அதற்குப் பல அங்கங்கள் உண்டென்று சந்திரநாத செட்டியார் சொல்லி, “என் வீட்டிற்கு எதிரே குணபால செட்டியார் என்பவர் வீடு இருக்கிறது. அவ் வீட்டில் சமவசரணத்தின் படம் உண்டு. அதைப் பார்த்தால் அதன் விஷயம் நன்றாகத் தெரியும்” என்று சொன்னார். பவ்ய ஜீவன் அப்படியே அவ்வீடு சென்று குணபால செட்டியாரைக் கண்டு பேசினேன், அவர் சமவசரணத்தின் படத்தை எனக்குக் காட்டினார். அதிலிருந்து சமவசரணத்தின் உறுப்புக்கள் எனக்குத் தெளிவாகத் தெரிய வந்தன. குணபால செட்டியார் ஜைன சம்பிரதாயம் தெரிந்தவர். அவரை விட அதிகமாக அவர் மனைவியாருக்குத் தெரியும்.

நான் அவ்வீட்டுக்குப் போன அன்று சமவசரணப் படத்தைப் பார்த்ததோடு ஜைன சமய சம்பந்தமான சில விஷயங்களை விசாரித்தேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிவிட்டு மற்ற விஷயங்களை விளக்குவதற்காகத் தம் மனைவியாரை அழைத்து வந்தார். அவர் ஜைன சமய விஷயங்களில் பெரிய நிபுணரான தரணி செட்டியார் என்பவருடைய சகோதரியார்.அவர் மூலமாகச் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நான் கேட்கும் கேள்விகளிலிருந்து அப்பெண்மணியார் நான் ஜைன சமய நூல்களில் பயிற்சியுடையவனென்று எண்ணி, “இவர்கள் பவ்ய ஜீவன் போல் இருக்கிறதே” என்று தம் கணவரிடம் சொன்னார். பக்குவ ஆன்மாக்களைப் பவ்ய ஜீவனென்பது ஜைன சம்பிரதாயம். நச்சினார்க்கினியர் சிந்தாமணிக்கு ஜைனர்களுடைய சம்மதத்தைப் பெற்று உரை எழுதியபோது எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருப்பாரோ அவ்வளவு சந்தோஷத்தை அப்போது நான் அடைந்தேன். ‘சிந்தாமணி ஆராய்ச்சிக்கு நீ தகுதியுடையவன்’ என்ற யோக்கியதா பத்திரத்தை அந்த ஜைன விதுஷி அளித்ததாகவே நான் எண்ணினேன்.இவ்விஷய விரிவை நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை நாலாம் பாகத்தில் காணலாம்.
சமுத்திர விஜயம் செட்டியார்

இந்த ஜைன நண்பர்களோடு அதே தெருவில் இருந்தவரும் மிக்க செல்வரும், தரணி செட்டியாருடைய மருகருமாகிய சமுத்திர விஜயம் செட்டியாருடைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. அவருடைய துணையினால் எனக்குச் சில ஜைன நூல்கள் இரவலாகக் கிடைத்தன.

நச்சினார்க்கினியர் உரை

இவ்வாறு ஜைனர்களுடனும் ஜைன நூல்களுடனும் இடைவிடாது பழகியபோது சிந்தாமணியின் அருமை வர வர எனக்கு நன்கு புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காவியங்களுக் கெல்லாம் அதுவே உரையாணி என்பதை அறிந்து கொண்டேன். அதனுடைய போக்கிலே உள்ள கம்பீரமும் சொல்லாட்சிச் சிறப்பும் என் மனத்தைக் கவர்ந்தன.

நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விஷயங்களை உணர்ந்தேன். இரண்டு விஷயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப் பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைத்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விஷயத்துக்கோ சொற்பிரயோகத்துக்கோ ஒரு நூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை. ‘என்றார் பிறரும்’ என்று எழுதி விட்டு விடுகிறார்.

சிந்தாமணிப் பாட்டாக இருந்தால் சந்திரநாத செட்டியார் இருக்கிறார். வேறு நூலாக இருந்தால் என்ன செய்வது! அவர் மேற் கோளாகக் காட்டும் உதாரணங்களோ நான் படித்த நூல்களிலே இல்லாதன. அவர் உதாரணங்கள் காட்டு அந்த நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற மலைப்பு எனக்குத் தோற்றியது. “நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித் தொலைக்கக் கூடாதா?” என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும் அந்த மகோபகாரியின் அரிய உரைத் திறத்தின் பெருமையை நான் மறக்கவில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கி விட்டு எது நுணுக்கமான விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும் பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு பெருங்கடலென்றே சொல்ல வேண்டும். இவ்வளவு சிறப்புக்களுக்கிடையே முன் சொன்ன இரண்டு குறைபாடுகளும் மறைந்து விடுகின்றன.

சிந்தாமணி நயம்

இராமசுவாமி முதலியாருக்குப் பாடம் சொல்லுவதாக ஆரம்பித்த சிந்தாமணி ஆராய்ச்சி வரவர எனக்கு இன்பந் தரும் ஒரு பொழுதுபோக்காகி விட்டது. காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல்லும் நேரம் போகச் சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன். அனபாய சோழ மகாராஜா சீவகசிந்தாமணியைப் படித்து அதன் நயத்திலே ஈடுபட்டிருந்தாரென்றும், அப்போது சேக்கிழார் ஜைனர்கள் கட்டிய கதை அந்நூல் என்று சொன்னாரென்றும், நான் வாசித்திருந்தேன். அந்தச் சோழ சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பிணிக்கும் காவியரஸம் அந்த அரிய நூலில் இருப்பது உண்மை யென்றே நான் உணர்ந்தேன். அது ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ யானால் நமக்கென்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே; அவை நிரம்பக் கிடைக்கும் காவியமாக இருக்கும்போது அதைப் படித்து இன்புறுவதில் என்ன தடை?

நான் கொடுத்த வாக்கு

சிந்தாமணிப் பாடத்தில் காந்தருவதத்தையாரிலம்பகத்தில் பாதி நடந்திருந்தது. அக்காலத்தில் முதலியார் தம் வேலையை ராஜினாமாச் செய்து விட்டு ஒரு கட்டுப்பாடுமின்றி வாழவேண்டுமென்றும் சென்னைக்குச் சென்று வக்கீலாக இருக்கலாமென்றும் எண்ணிக் குடும்பத்துடன் புறப்பட்டார். புறப்படுங்காலத்தில் என் வீட்டுக்கு வந்தார்; “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்போது நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும், இன்னும் சில பிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும். அதைப் போன்ற உபகாரம் வேறு ஒன்றும் இல்லை” என்று சொன்னார். நான், “என்னால் இயன்ற அளவு முயன்று அப்படியே செய்கிறேன்” என்று வாக்களித்தேன். அவர் விடை பெற்றுச் சென்றார்.