என் சரித்திரம் / 90 அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்

கும்பகோணம் பெரிய நகரமாக இருந்தும், கனவான்கள் மாலை நேரங்களில் கூடிப் பழகிப் பேசுவதற்குத் தக்க பொதுவிட மொன்று இல்லை என்ற குறை நகர வாசிகளுக்கு இருந்தது. ஒரு நகர மண்டபம் வேண்டு மென்று காலேஜ் ஆசிரியர்கள் விரும்பினர். கும்கோணம் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்த போர்ட்டர் துரையின் ஞாபகம் நிலவும்படி அவர் பெயரால் ஒரு நகர மண்டபம் அமைக்கலாமென்று கோபால ராவ் முதலியவர்கள் கூறினர். இந்த விஷயத்தில் சாது சேஷையரும், ஆர். வி. ஸ்ரீநிவாசையரும் மிக்க முயற்சி யுடையவராக இருந்தனர். நகரத்திலுள்ள பொது ஜனங்கள் ஒரு கூட்டம் கூடி, போர்ட்டர் ஞாபக மண்டப அமைப்புக் குரிய ‘கமிட்டி’ ஒன்றை நியமித்தனர். அதற்கு ஸ்ரீநிவாசையரே காரிய தரிசியாக இருந்தார்.

நிலப் பரிவர்த்தனை

நகர மண்டபத்தை நிருமிக்க ஒரு குறிப்பிட்ட இடத்தைக் ‘கமிட்டி’யினர் தேர்ந்தெடுத்தனர். அவ்விடம் லக்ஷ்மீ நாராயணபுர மென்ற பெயருள்ளது; வலையர்கள் குடியிருப்பாக இருந்தது. திருவிடைமருதூர் தேவஸ்தானத்துச் சொத்தாகிய அது திருவாவடுதுறை ஆதீனத்தின் வசம் இருந்தது. அந்த மண்டபத்திலிருந்து நிலத்தை வாங்குவதற்கு வழி என்னவென்று ‘கமிட்டி’ அங்கத்தினர்கள் யோசித்தபோது ஸ்ரீநிவாசையர், “நம்முடைய காலேஜ் தமிழ்ப் பண்டிதர் திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவர். அவரைக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று சொல்லி என்னிடமும் விஷயத்தைத் தெரிவித்தார்.

“நிலங்களை விற்கும் உரிமை ஆதீனத் தலைவருக்கு உண்டா?” என்ற விஷயத்தைப் பற்றிச் சந்தேகம் பிறந்தது. விஷயம் தெரிந்த சிலர், “விற்கக் கூடாது” என்றனர். வேறு சிலர் அதற்குரிய உபாயத்தைத் தெரிவித்தனர். “வேறு ஓரிடத்தில் இந்த நிலத்தின் மதிப்புடைய மற்றொரு நிலத்தை வாங்கியளித்துப் பரிவர்த்தனை செய்து கொண்டால் தடை இராது” என்று கூறினர். அப்படியே செய்யலாமென்ற தீர்மானத்தின் மேல் ஸ்ரீநிவாசையரும் வேறு சில கனவான்களும் என்னை உடனழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குப் போவதாக எண்ணினர்.

1881-ஆம் வருஷம் மே மாதம் 3-ஆம் தேதியன்று இரவு ஸ்ரீ சாதுசேஷையர், சுந்தர ராவ், ஸ்ரீநிவாசையர், எஸ். ஏ. சாமிநாதையர் என்பவர்களுடன் நானும் திருவாவடுதுறைக்குப் போனேன். மறுநாள் முழுவதும் தங்கிச் சுப்பிரமணிய தேசிகரிடம் பேசினோம். என்னுடன் வந்திருந்த அன்பர்களிற் சிலர் அதற்கு முன் மடத்தைப் பாராதவர்கள்; அதனால் அதன் உண்மையான சிறப்பை அதுவரையில் அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தனர். அன்று அங்குள்ள அமைப்புக்களையும், காரியங்களெல்லாம் நடைபெற்று வரும் ஒழுங்கையும் கண்டு மகிழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் யாவருக்கும் தக்க உபசாரங்கள் செய்வித்தார். அவர் பேசிக்கொண்டு வந்தபோது அப்பேச்சிலிருந்து அவர் நல்ல நூற்பயிற்சி யுடையவரென்பதை ஆசிரியர்கள் அறிந்து கொண்டனர். சிவஞான போத பாஷியத்திலும் தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் சில பாகங்களைப் படிக்கச் சொல்லி விளக்கினார். அவற்றை நானே படித்தேன். இடையிடையே ஸம்ஸ்கிருத சுலோகங்களையும் வியாகரணச் செய்திகளையும் சுப்பிரமணிய தேசிகர் எடுத்துரைத்ததைக் கேட்டு யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நான் அங்கே படித்ததையும் தேசிகருடன் பேசிய முறையையும் கண்ட அவர்கள், “நம்முடைய பண்டிதர் நன்றாகப் படிக்கிறார். பக்குவமாகப் பேசுகிறார்” என்று சொல்லிப் பாராட்டினார்கள்; தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படியே பரிவர்த்தனையாக வேறு நிலங்களை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட இடத்தைப் போர்ட்டர் நகர மண்டபத்தின் பொருட்டு வழங்க ஏற்பாடு செய்து விட்டார்.

இந்தச் செய்கையில் எனக்குத் தனியான பெருமை ஒன்று இராவிட்டாலும், நகரவாசிகளுக்கு மாத்திரம் என்னுடைய முயற்சியால்தான் அந்த இடம் சுலபமாகக் கிடைத்ததென்ற எண்ணமும், அதனால் என்னிடத்து ஒரு மதிப்பும் உண்டாயின. நகர மண்டபத்திற்குக் கோபாலராவே அஸ்திவாரக் கல் நாட்டினார். பொது ஜனங்களிடத்திலிருந்து பணம் வசூல் செய்து மண்டபம் கட்டத் தொடங்கினார்கள்.

கோபாலராவ் பிரிவுபசாரம்

இப்படியிருக்கையில் 1882-ஆம் வருஷம் கோபாலராவை அரசாங்கத்தார் சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜு க்கு மாற்றினார்கள். பல வருஷங்களாகக் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்து எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றவர் அவர். பிள்ளைகள் அவரிடத்தில் பயபக்தியோடு நடந்தாலும், உள்ளத்துள்ளே அவர் பால் தனியான அன்பைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம் அவரது திறமைதான். தாமே தனியாகப் படித்துப் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலையை ஒழுங்காகப் பார்த்துவந்த அவருடைய முயற்சியை அறிஞர்களெல்லாம் பாராட்டுவார்கள். அவர் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பாடம் சொல்லும்போது மாணாக்கர்கள் அசைவற்ற பிரதிமைகளைப் போல இருந்து கேட்பார்கள். திருத்தமும் தெளிவுமுள்ள வார்த்தைகளால், மாணாக்கர்களின் அறிவு நிலையை அறிந்து விஷயங்களை உணர்த்துவதில் அவர் மிக்க சமர்த்தர். ஆங்கிலத்தில் அவருக்குள்ள மேதை மிகச் சிறப்பு வாய்ந்தது. அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டேயிருப்பார். தமிழ் நூல்கள் சிலவற்றில் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எதைப் படித்தாலும் அழுத்தமாகப் படித்து நினைவில் இருத்திக் கொள்ளுவதால் அவர் படிப்பு அவ்வளவும் பயனுள்ளதாயிற்று. அவருக்கு நன்னூலிலும், குறள் முதலிய நூல்களிலும் எவ்வளவு பழக்கம் உண்டென்பதைத் தியாகராச செட்டியார் சொல்லக் கேட்டதோடு, நானே நேரில் உணர்ந்தும் இருக்கிறேன். செட்டியார் கும்பகோணம் காலேஜிற்கு வருவதற்கு முன் சில காலம் கோபால ராவ் காலேஜ் வகுப்புக்களில் தமிழ்ப் பாடம் நடத்தி வந்தார். செட்டியாருடைய திறமையை உணர்ந்து வருவித்துக் காலேஜில் வேலை செய்வித்தவரும் அவரே.

தளராத ஊக்கத்துடன், மேற்கொண்ட வேலையை நிறைவேற்ற வேண்டுமென்பது அவர் கொள்கை. அக்கொள்கைக்கு ஆதாரமாக விளங்கும்.

“அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”

என்ற குறளை அவர் தம் புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொள்ளுவது வழக்கம்.

இவ்வாறு தமிழில் அன்புடைய அவர் பிரிவதில் எனக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவருக்கும் நெடுங்காலம் பழகிய கும்பகோணம் காலேஜை விட்டுப் போகிறோமே என்ற வருத்தம் ஓரளவு இருந்தது. அவர் சென்னைக்குச் செல்லும் செய்தி கேட்டுக் கும்பகோண நகர வாசிகள் துன்புற்றனர்.

அவருக்கு ஒரு பிரிவுபசாரம் நடத்தவேண்டுமென்று ஆசிரியர்களும் அவருடைய அன்பர்களும் தீர்மானித்தார்கள். 1882-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பிரிவுபசாரம் நடை பெற்றது. அதில் கோபால ராவ் விஷயமாகப் பத்துச் செய்யுட்கள் இயற்றி நான் படித்தேன். படிக்கும் போது வருத்தம் தாங்காமல் கண்ணீர் விட்டேன்.

அப்பாடல்களிற் சில வருமாறு:-

“மாறாத வாய்மை தனில் மனச்சான்றுக் கொத்தியலும்
        மாண்பு தன்னில்
தேறாத மாணவகர்க் கினிதுவிளங் குறத்தெருட்டும்
        திண்மை தன்னில்
சீறாத இயல்புடைய கோபால ராயவண்ணற்
        சிவணு வோர்யார்
பேறாய அவன்பெருமை மிகச்சிறியன் நாவொன்றாற்
        பேசற் பாற்றோ?”
[மனச்சான்று - மனச்சாட்சி. தெருட்டும் விளக்கும். சிவணுவோர் - ஒப்பாவார்]

“மன்னியநற் பொருட்கல்வி கற்றலரி ததினரிது மாற ஐயம் அன்னியர்பால் வினவாமை அதினரிது மாணாக்கர்க் கையந் தீர்த்தல் பன்னியவா றேநடத்த லதினரிய திவைஇயல்பாப் படைத்தோன் அன்பு துன்னியவன் னையைநிகர்த்த கோபால ராயப்பேர்த் தூய னம்மான்” [ஐயம் மாறவென்று கூட்டுக. இவை இயல்பாய் படைத்தோன் - இந்தக் குணங்களை இயல்பாகவே கொண்டவன்]

“முன்னாடுந் திறமை தனில் மிகவல்ல துரைத்தனத்து
        முதல்வர் தொண்டை
நன்னாடு சான்றோரை யுடைத்தென்றல் தனைப்புதுக்க
        நாடிக் கொல்லோ
"எந்நாடும் புகழினிய கோபால ராயவண்ணல்
        இணைமிக் கோங்கும்
மின்னாடும் மணிமாடச் சென்னைநகர் வரச்செய்த
        விதந்தான் மன்னோ.”
[‘தொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து’ என்பது ஒளவையார் பாடிய பழைய வெண்பாவின் பகுதி.]

உபசாரமெல்லாம் முடிந்த பிறகு நான் தனியே கோபாலராவ் வீட்டிற்குச் சென்று அவரிடம், “தங்களுக்குப் பின் வருபவர் எப்படி இருப்பாரோ, அறியேன். தாங்கள் எனக்கு ஒரு யோக்கியதா பத்திரம் தந்தால் நலமாயிருக்கும்” என்றேன். அவர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். யார் வந்தாலும் உங்களிடம் பிரீதீயாகவே இருப்பார்கள். நான் யோக்கியதா பத்திரம் தனியே எழுதித் தரவேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்களைப்பற்றி மேலதிகாரிகளுக்குச் சிபாரிசு செய்து எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றைக் காலேஜிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதுவே போதும்” என்றார். அதிலிருந்து என்னைப்பற்றிச் சிறப்பாக மேலதிகாரிகளுக்கு அவர் எழுதியிருப்பது உறுதியாயிற்று. கோபால ராவுக்குப் பிறகு காலேஜ் பிரன்ஸிபாலாக ஸ்டூவர்ட்துரை என்பவர் வந்தார்.

சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள்

சேலம் இராமசுவாமி முதலியார் சென்னைக்குச் சென்று எனக்குக் கடிதங்கள் எழுதினர். சீவகசிந்தாமணி ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று ஒவ்வொரு கடிதத்திலும் வற்புறுத்தினார். நான் அவ்வாறே படித்து ஆராய்ந்து வருவதைத் தெரிவித்தேன். பவர்துரை பதிப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பக அச்சுப்பிரதி ஒன்று எனக்குக் கிடைத்தது. தியாகராச செட்டியாருக்கு நான் சிந்தாமணி படித்து வருவதைத் தெரிவித்தபோது அவர் தம்மிடமிருந்த பிரதியை, திரு. பட்டாபிராம பிள்ளை மூலம் அனுப்பினர். அப்பிரதி பிள்ளையவர்களால் முதலில் எழுதப்பெற்றது. பொழிப்புரையும் விசேடவுரையும் முற்றும் அதில் இருந்தன.

நான் சிந்தாமணி முழுவதையும் தனியே இரண்டு குறிப்புப் புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டு ஆராய்ந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப் பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். எல்லாவற்றையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துப் பாட பேதங்களைக் குறித்துக் கொண்டேன். என்னிடம் வீட்டில் பாடம் கேட்பவர்களை வைத்துக் கொண்டு பிரதிகளை ஒப்பு நோக்குவேன். காலேஜ் மாணாக்கர்களும் வந்து உதவி செய்வார்கள். ஒரே சமயத்தில் நாலைந்து மாணாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிரதி வைத்துக் கொண்டு பாட பேதம் பார்க்கும்போது வேலை மிகவும் வேகமாக நடைபெறும். அதில் சிறிதும் சிரமமே தோற்றாது. பகலோ, இரவோ, ஏதாயிருந்தாலும் சலிப்பின்றி ஆராய்ச்சி செய்து வந்தேன்.

தியாகராச செட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன. அவர் பென்ஷன் பெறும் விஷயத்தில் சில சிக்கல்கள் நேர்ந்தமையால் அதனைக் குறித்துப் பிரின்ஸிபாலிடமும் மற்றவர்களிடமும் தெரிவித்துக் காரியம் நிறைவேறும்படி செய்ய வேண்டுமென்று மிக்க கவலையோடு எழுதிவந்தார். நான் அதைப் பற்றிச் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி முயற்சி செய்தேன். செட்டியார் வேலையை விட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகே அவருக்குப் பென்ஷன் உத்தரவு கிடைத்தது.

திருக்குடந்தைப் புராணம்

பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களில் அச்சில் வராதவற்றை வெளியிட வேண்டுமென்பது தியாகராச செட்டியாரது விருப்பம். முதலில் திருக்குடந்தைப் புராணத்தை வெளியிடும் பொருட்டுக் கும்பகோணத்திலிருந்த சில கனவான்களிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அவர் திருவானைக்காவுக்குப் போன பிறகு அதைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கடிதம் எழுதினார். அதற்குப் பொருளுதவி செய்வதாகச் சொன்னவர்களை நான் அணுகிப் பணம் வாங்கிச் செட்டியாருக்கு அனுப்பி வந்தேன். செட்டியார் முதலில் தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சென்னையில் வைத்திருந்த அச்சுக்கூடத்தில் அச்சிட ஏற்பாடு செய்து சிறிது முன்பணமும் கொடுத்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. பிறகு சென்னையில் இருந்த சூளை சோமசுந்தர நாயகர் அச்சிட்டு அனுப்புவதாக ஒப்புக் கொண்டமையால் அவருக்கே புராணப் பிரதியை அனுப்பினார். அவ்வப்போது அவரிடமிருந்து ‘புரூப்’ செட்டியாருக்கு வரும். அவருக்குக் கண் ஒளி குன்றி வந்தமையால் அதை அவர் பார்த்து விட்டு எனக்கு அனுப்புவார். நான் அதைப் பார்த்துத் திருத்திச் சென்னைக்கு அனுப்புவேன். புராணத்தை அச்சுக்கு ஸித்தம் செய்தவனும் நானே. மூலத்தை மாத்திரம் ஒழுங்கு செய்து அச்சிட்டு வந்தோம். குறிப்புரையுடன் வெளியிட்டால்தான் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்ற கருத்து அப்போது எனக்கு எழவில்லை.

சிந்தாமணி நயம்

சிந்தாமணியிலும் அதன் உரையிலும் மூழ்கியிருந்த எனக்கு மற்ற வேலைகளில் கவனம் செல்லவே இல்லை. அந்த நூலின் புதுமைச் சுவையை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அதனைப் படிக்கப் படிக்கப் பிற்காலத்து நூல்களெல்லாம் எவ்வளவு தூரம் அந்தக் காவியத்திலிருந்து காவிய மரபுகளை அறிந்து அமைத்துக் கொண்டுள்ளனவென்பது நன்கு விளங்கியது. வாரந்தோறும் திருவாவடுதுறைக்குப் போகும்போது சிந்தாமணியில் நான் கண்ட நயங்களையெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்வேன். அதில் அங்கங்கே உள்ள மேற்கோள்களிற் பல இன்ன நூல்களென்று விளங்கவில்லையென்றும் கூறுவேன். அவர், “மடத்தில் எவ்வளவோ பழைய நூற் பிரதிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து ஏதாவது உபயோகமாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்” என்று அனுமதியளித்தார். நான் மிக்க நன்றியறிவுடன் அவ்வாறே செய்வதாகச் சொன்னேன்.

நமசிவாய தேசிகர்

சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் சிந்தாமணி விஷயத்தைக் கேட்டு வியப்பார். ஆனால் அவருக்குப் பூர்ணமான திருப்தி அதனால் உண்டாகவில்லை. “ஜைன சமய நூல் அது” என்ற ஞாபகந்தான் அதற்குக் காரணம். நச்சினார்க்கினியர் உரைத் திறத்தைக் கேட்டு மிகவும் பாராட்டுவார்.

அவர் பழையபடி கல்லிடைக்குறிச்சிக்குச் சென்று வசிக்கலானார். அங்கிருந்து எனக்குக் கடிதம் எழுதினார். விடுமுறைகளில் அங்கே வந்து சில நாட்கள் தங்கும்படி சிலமுறை எழுதினார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற என்னால் இயலவில்லை.