என் சரித்திரம் / 93 மூன்று லாபங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

93. மூன்று லாபங்கள்

கும்பகோணம் காலேஜில் உள்ள ஆசிரியர்களும் மாணாக்கர்களும் என்பால் வைத்திருந்த பேரன்பினால் என் வேலையைச் சிரமமின்றி நான் திருப்தியுடன் பார்த்து வந்தேன். இடையிடையே திருவாவடுதுறைக்குச் சென்றமையால் அவ்வாதீனச் சம்பந்தமும் எனக்கு ஊக்கத்தை உண்டாக்கிற்று. அடிக்கடி தியாகராச செட்டியார், சேலம் இராமசுவாமி முதலியார் முதலிய அன்பர்கள் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். அவர்களுடைய கடிதங்கள் நேரில் பழகிப் பேசுவதைப் போன்ற இன்பத்தை உண்டாக்கும்.

மீட்ட நிலம்

முன்னமே தெரிவித்தபடி குடும்ப விஷயத்தில் எனக்கு எவ்வகைக் கவலையுமில்லாமல் என் தந்தையாரே கவனித்து வந்தார். குடும்பப் பாதுகாப்பில் அவரைப் போன்ற கருத்தும் ஒழுங்கும் உடையவர்கள் மிகச் சிலரே. அவர் மிகவும் செட்டாகச் செலவு செய்து பொருளைச் சேமித்துச் சீட்டுப் போட்டார். அவருடைய முயற்சியின் பயனாக 1884-ஆம் வருஷ ஆரம்பத்தில், எங்கள் பரம்பரைச் சொத்தாகிய நிலத்தை ஒற்றியிலிருந்து ரூ. 770 செலுத்தி மீட்டோம். பல காலம் பரம்பரையாகக் குடும்பத்துக்குச் சொந்தமாக வந்த நிலம் பிறர் கையில் உள்ளதேயென்ற வருத்தம் என் தந்தையாருக்கு இருந்தது. ஆயினும் அதை மீட்க முடியாத நிலையிலிருந்தார். இறைவன் திருவருளால் எனக்கு உத்தியோகம் கிடைத்ததும் கண்ணும் கருத்துமாகச் சேமித்த பணத்தைக் கொண்டு, முதலில் அந்த நிலத்தை மீட்டார் புதிய நிலமொன்று வாங்கியிருந்தாற்கூட அவருக்கு அவ்வளவு திருப்தி ஏற்பட்டிராது.

சேலம் இராமசுவாமி முதலியார்

இந்த நிலையில் எனது சிந்தாமணி ஆராய்ச்சி நன்றாக நடந்து வந்தது. இன்ன இன்ன பகுதிகளைப் படித்தேனென்று இராமசுவாமி முதலியாருக்கு எழுதுவேன். அவர் மிக்க சந்தோஷத்தைத் தெரிவித்து விடை எழுதுவார். 1880-ம் டு அக்டோபர் மாதம் 30-ம்Œ எழுதிய கடிதமொன்றில் “,,,,சிந்தாமணி முழுவதும் ஒரு விசை தாங்கள் பார்த்ததாகவும் அதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் தங்கள் கடிதத்தால் தெரிய வருகிறது. மறுபடி ஒரு விசை பார்க்கும் பக்ஷத்தில் சந்தேகங்கள் ஏறக்குறைய முழுவதும் தீர்ந்து விடுமென்று எனக்குத் தோற்றுகிறது. தங்களுடன் மறுபடியும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க எனக்கு எப்பொழுது உதவுமோ கடவுளுக்குத் தான் தெரியும். ஆகிலும் இருவரும் ஒரு விசை படிப்போமென்ற நம்பிக்கை மாத்திரம் இருந்து கொண்டேயிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அதனால் அவருக்குச் சிந்தாமணியிலுள்ள விருப்பமும் என்பாலுள்ள அன்பும் புலப்பட்டன. ‘சென்னைக்குச் சென்று முதலியாரோடு சில காலம் இருந்து வர வேண்டும்’ என்ற ஆவல் எனக்கு உண்டாயிற்று.

இடையில் தியாகராச செட்டியாரை ஒரு முறை போய்ப் பார்த்து வந்தேன். சிந்தாமணியைப் பற்றி அவரிடம் சொல்லிய போது அவர் மிக்க குதூகலத்தோடு என்னைப் பாராட்டினார். விளங்காத மேற்கோள்களில் திருக்கோவையாரிலுள்ள சிலவற்றை அவர் ஞாபகத்திலிருந்து சொன்னார். அவற்றைக் குறித்துக் கொண்டேன். ஒரு சமயம் அவர் பூவாளூர்ப் புராணத்தை அச்சிட்டார். அவர் விரும்பியபடி நானும் அதைப் பார்வையிட்டுச் சிறப்புப் பாயிரம் கொடுத்தேன்.

மகாமகம்

தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது. அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச செட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர். அக்காலத்திலெல்லாம் நான் தேசிகருடனே இருந்து வந்தேன். அதனால் பல புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.

மடத்தின் ஆதரவில் வளர்ந்த எனக்கு என் உத்தியோக வருவாயிலிருந்து தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு தர்மம் மடத்தில் நடத்த வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்தது. அதனை மகாமக காலத்தில் நிறைவேற்றினேன். சுப்பிரமணிய தேசிகரிடம் நூறு ரூபாய் கொடுத்து, “மடத்தில் மகேசுவர பூஜையில் ஒரு பாகத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னேன். தேசிகர் மிகவும் மகிழ்ந்து. “மடத்துப் பிள்ளையாகிய நீங்கள் இப்படிச் செய்ய வேண்டியது அவசியமில்லையே” என்றார். நான் உசிதமாக விடை அளித்தேன். மகாமக விழா முடிந்தபின் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் என் தந்தையாருக்கும் எனக்கும் பீதாம்பரங்களும், என் குமாரன் சிரஞ்சீவி கல்யாணசுந்தரத்திற்குச் சந்திரஹாரமென்னும் பொன்னாபரணமொன்றும் அளித்தார்.

மத்தியார்ச்சுன மான்மிய முயற்சி

ஆதீனக்காறுபாறும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி ஆலய விசாரணக் கருத்தருமாகிய சுப்பிரமணியத் தம்பிரானென்பவர் அந்த ஸ்தல சம்பந்தமாகத் தாம் செய்து வரும் கைங்கரியங்களை ஆதீன கர்த்தரிடம் விண்ணப்பித்துக்கொள்ளுகையில் சில காலமாக அவ்வாலயத்தில் நின்று போயிருந்த வஸந்தோத்ஸவத்தை மீட்டும் நடத்த வேண்டுமென்று சொன்னார். தேசிகர் அப்படியே உத்தரவு கொடுத்தார். அந்த உத்ஸவம் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் நடை பெறலாயின தம்பிரான் தேசிகருடைய முன்னிலையில் என்னை நோக்கி, “திருவிடைமருதூர் ஸ்தலப் பெருமையைப் பெரும்பாலோர் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. பழைய புராணங்கள் இருந்தாலும் அவற்றைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்பவர் மிகவும் சிலரே. ஆதலின் தாங்கள் அந்த ஸ்தலமாகாத்மியத்தைச் சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அச்சிட்டு யாவருக்கும் கொடுக்கலாம். அச்சிடும் செலவு முதலியவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். தேசிகரும் அவ்வாறு செய்வது நலமென்று குறிப்பித்தார். நான் எழுதுவதாக ஒப்புக்கொண்டேன்.

திருவிடைமருதூருக்கு ஞானக்கூத்தரென்பவரியற்றிய தமிழ்ப் புராணம் ஒன்றும், கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணம் ஒன்றும் உண்டு. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணத்தைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு திருவிடை மருதூர் ஸ்தலமகாத்மியத்தை எழுதி முடித்தேன். அதற்கு “ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்” என்று பெயரிட்டு, மூர்த்தி, தலம், தீர்த்தங்களின் சிறப்பும், வழிபட்டோர் வரலாறும் எழுதிச் சுப்பிரமணிய தேசிகரிடத்தும் சுப்பிரமணியத் தம்பிரானிடத்தும் படித்துக் காட்டினேன். பிறகு தம்பிரானது விருப்பத்தின்படி திருவிடைமருதூர் உத்ஸவ மூர்த்தியாகிய ஏகநாயகர் விஷயமாக ஓர் ஊசலும் தாலாட்டும் இயற்றிச் சேர்த்தேன்.

எல்லாம் முடிந்தபிறகு தம்பிரான் அதனை எங்கே அச்சிடலாமென்று யோசனை செய்தார். அதற்கு முன் கும்பகோண புராணமும், பூவாளூர்ப் புராணமும் சென்னையில் அச்சிடப்பெற்ற விஷயம் அவருக்குத் தெரியும். ஆதலின் அங்கே அனுப்பி அச்சிட்டு வருவிக்கலாமென்று நான் சொன்னபோது அவர், “புஸ்தகம் இப்போது பூர்த்தியாகி இருக்கிறது. இந்த வஸந்தோத்ஸவம் ஸமீபத்தில் வருகிறது; அதற்குள் புஸ்தகம் அச்சாகி வந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். தபால் மூலமாக அச்சுக் காகிதங்கள் வருவதும், திருத்துவதுமாக இருந்தால் குறித்த காலத்தில் நிறைவேறுமென்று தோற்றவில்லை. உங்களுக்கு இப்போது லீவு காலமாக இருப்பதால், நீங்களே சிரமத்தைப் பாராமல் சென்னபட்டணம் சென்று நேரில் இருந்து காரியத்தை முடித்துக் கொண்டு வரலாம். செலவு சிறிது அதிகமானாலும் காரியம் மிகவும் உயர்ந்தது” என்றார். அவர் வார்த்தை கரும்பு தின்னக் கூலி தருவதாகச் சொல்லுவது போல இருந்தது. அதுவரையில் சென்னையையே பார்த்திராத எனக்கு அந்த நகரத்துக்குப் போய் ஆங்குள்ள அறிவாளிகளோடு பழக வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அன்றியும் சேலம் இராமசுவாமி முதலியாரைக் கண்டு சில காலம் உடனிருந்து சிந்தாமணியைப் படித்துக் காட்ட வேண்டுமென்ற ஆவலும் உண்டு. இவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்தக் காரியம் ஏற்பட்டது நமது நல்லதிருஷ்டமே என்று நான் எண்ணி, அவ்வாறே சென்று புஸ்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வருவதாக ஒப்புக்கொண்டேன்.

சென்னைப் பிரயாணம்

ஒரு நல்ல நாளில் புறப்பட்டு நான் என்பால் பாடங் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் சாமிநாதையர், சிதம்பரம் சோமசுந்தர முதலியார் என்பவர்களுடன் சென்னைக்குச் சென்றேன். எனக்கு உதவி செய்வதற்கு வேறு ஒரு மனிதரைச் சுப்பிரமணியத் தம்பிரான் அனுப்பினார். இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கினேன்.

சென்னையில் ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் நான் கொண்டு போன புஸ்தகத்தை அச்சுக்குக் கொடுத்து அதைக்கவனித்துக் கொள்ளும்படி உடன் வந்த இருவரிடமும் சொல்லிவிட்டுப் பெரும்பாலும் இராமசுவாமி முதலியாருடன் இருந்து பொழுதுபோக்கி வந்தேன் சீவக சிந்தாமணியைப் பற்றிய செய்திகளை நான் எடுத்துச் சொன்னபோது அவர் கேட்டு மிகவும் திருப்தி அடைந்தார். “எப்படியாவது அதை முடித்து வெளியிடுங்கள். இங்கே வந்திருந்து பதிப்பு வேலையை நிறைவேற்றலாம். என்னாலான சகாயமெல்லாம் செய்கிறேன்” என்றார். “அதை ஆரம்பிப்பதற்கு நீங்கள் காரணமாக இருந்தீர்கள்; பூர்த்தி செய்வதற்கும் நீங்களே உதவி செய்ய வேண்டும்” என்று நான் சொன்னேன்.

இராமசுவாமி முதலியார் உதவி

சென்னையில் நான் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தேன். மத்தியார்ச்சுன மான்மியம் பதிப்பிப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தாலும், என்னுடைய நோக்கம் அந்நகரத்தையும் அங்குள்ள அறிஞர்களையும் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டு மென்பதே. இராமசுவாமி முதலியாருடைய பேருதவியால் அந்நோக்கம் மிக எளிதில் கைகூடியது.

ஒவ்வொரு நாளும் முதலியார் பிற்பகலில் தம் கோச்சு வண்டியில் என்னை அழைத்துக் கொண்டு புறப்படுவார். பிரஸிடென்ஸி காலேஜ், காஸ்மொ பாலிடன் கிளப் முதலிய இடங்களுக்குப் போய் அங்குள்ளவர்களும் வருபவர்களுமாகிய கனவான்களில் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் பண்ணி வைப்பார். அவர்கள் கௌரவத்தை எனக்கு எடுத்துரைப்பதோடு என்னைப் பற்றியும் அவர்களிடம் சொல்வார். அவருடைய உதவியினால் நான் ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர். வி. பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கார், பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய பழக்கத்தைப் பெற்றேன். பிரஸிடென்ஸி காலேஜிற்குச் சென்று பூண்டி அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களானார்கள், வர்னாகுலர் சூபரிண்டெண்டெண்டு சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமாசாரியரையும் கண்டு பேசினேன். புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமிநாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய வித்துவான்களைப் பார்த்துப் பேசி இன்புற்றேன். அஷ்டாவதானம் சபாபதி முதலியார் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய சகபாடியாதலின் அவருடைய புலமையைப் பற்றிப் பேசினார். சோடசாவதானம் சுப்பராய செட்டியார் தாம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட விஷயத்தையும் அப்புலவர் பிரானுடைய சிறப்புக்களையும் எடுத்துச் சொன்னார். நான் கண்ட வித்துவான்கள் பல பழைய பாடல்களைச் சொன்னார்கள். அவற்றைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன். நானும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன்.

சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய பொருட்காட்சிச் சாலை, கடற்கரை, கோயில்கள், புத்தகசாலைகள், சர்வகலாசாலை முதலியவற்றையும் பார்த்தேன். வித்துவான்களையும் அறிஞர்களையும் பார்த்துப் பழகியது கிடைத்தற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோக பதவியை வகித்த பெரியவர்களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு நான் வியந்தேன். கும்பகோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும் கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை உண்டாக்கியது.

ஆதீனத்தின் புகழ்

ஒரு நாள் தங்கசாலை வீதியிலுள்ள காசிப்பாட்டி ஹோட்டலுக்குள் சென்றேன். உள்ளே புகுந்ததும் அங்கிருந்த சிலர், “வாருங்கள், வாருங்கள். எங்கே இவ்வளவு தூரம் வந்தது?” என்று என்னை வரவேற்று உபசரித்தனர். ‘இதென்ன இப்படி வரவேற்கிறார்களே; ஏதேனும் மோசம் இருக்குமோ! என்று முதலில் நான் சந்தேகமடைந்தேன். அவர்களுடைய சரிகை அங்கவஸ்திரமும் சவ்வாதுப் பொட்டும், பேச்சும் அவர்கள் சங்கீத வித்வான்களென்பதைப் புலப்படுத்தின. நான் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த போதே ஒருவர், வந்தீர்கள்? பண்டார ஸந்நிதிகள் சௌக்கியமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியிலிருந்து அவர்கள் என்னைப் பற்றித் தெரிந்தவர்களேயென்று உணர்ந்தேன்.

“உங்களை இன்னாரென்று தெரியவில்லையே” என்றேன் நான்.

“எங்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும்; நீங்கள் சுப்பிரமணிய தேசிகருக்குப் பக்கத்திலே இருப்பீர்களே! ஆஹா! என்ன சபை என்ன சங்கீதம்!”

எங்கேயோ இருக்கும் திருவாவடுதுறையின் புகழ் சென்னையில் அந்த இடத்தில் வீசியதற்குக் காரணம் சுப்பிரமணிய தேசிகருடைய தூய்மையும், வள்ளன்மையும், கல்விச் சிறப்பும், பெருமையுமே என்பதை உணர்ந்தேன். அந்த வித்துவான்கள் திருவாவடுதுறையில் நடைபெறும் குருபூஜைச் சிறப்பையும் சுப்பிரமணிய தேசிகர் வித்துவான்களுடைய தரமறிந்து சம்மானம் செய்யும் அழகையும் மற்ற விசேடங்களையும் பாராட்டினார்கள். அருகிலிருந்த மற்றவர்களுக்குத் திருவாவடுதுறை யாதீனத்தின் பெருமைகளையெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். “அப்படியா? அப்படியும் ஓர் இடம் இருக்கிறதா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த மடம் ஒரு பெரிய வித்தியாபீடமாக வல்லவோ இருக்க வேண்டும்?” என்று கேட்டவர்கள் விம்மித மடைந்தார்கள்.

அந்தக் கூட்டத்தினிடையே அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போது நான் கரையற்ற இன்பக் கடலில் ஆழ்ந்திருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் பெருமையைச் சொல்லுவதில் நானும் கலந்து கொண்டேன்.

குட்டித் தம்பிரான்

ஒருநாள் சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து எனக்கு ஒரு திருமுகம் வந்தது. ‘சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோவில் தெரு மடத்திலுள்ள வித்துவான் ஆறுமுகத்தம்பிரானிடம் ஒரு குட்டித்தம்பிரான் படித்து வருவதாகத் தெரிகிறது. நாம் மகாமகத்துக்குக் கும்பகோணம் போயிருந்தபோது அந்தக் குட்டித் தம்பிரானைக் குன்றக் குடி மடித்துக் காரியஸ்தர் அப்பா பிள்ளையும், தெய்வ சிகாமணி ஐயரும் அழைத்து வந்து காட்டினார்கள். அவருடைய தோற்றப் பொலிவு கண்ணைக் கவர்ந்தது ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய விடைகள் திருப்தியை அளித்தன. அவர் கிடைத்தால் இங்கே சின்னப் பட்டத்திற்கு ஏற்படுத்தலாமென்று நினைக்கிறோம். அவருக்குச் சம்மதமிருந்தால் அவரோடு கலந்து கொண்டு அவரை இவ்விடத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று அதில் எழுதியிருந்தார்.

நான் சென்னைக்கு வந்த நாள் முதல் அந்தக் குட்டித் தம்பிரான் அடிக்கடி என்பால் வந்து உபசார வார்த்தைகளைப் பேசிக் செல்வார். அச்சுக்கூடத்திற்கும் அவர் இருந்த இடத்திற்கும் சமீபமாதலால் அவர் வந்து என்னைப் பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது. அவரிடம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய உள்ளக் குறிப்பைத் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். சுப்பிரமணிய தேசிகருக்கு இவ்விஷயத்தை எழுதித் தெரிவித்தேன். அவர் உடனே தம்பிரானைத் திருவாவடுதுறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று எழுதினார். அதன்படியே என்னுடன் வந்திருந்த சிதம்பரம் சாமிநாதையரைத் துணையாகச் சேர்த்து அந்தக் குட்டித் தம்பிரானைத் திருவாவடுதுறைக்கு அழைத்துப் போகும்படி செய்தேன்.

மத்தியார்ச்சுன மான்மியம் அச்சாகிக் கொண்டிருந்தது. இடையே திடீரென்று ஒரு நாள் தியாகராச செட்டியார் கண் வைத்தியம் செய்து கொள்வதற்காகத் தம் மனுஷ்யர்களுடன் சென்னைக்கு வந்து, நான் இருக்கும் இராமசுவாமி முதலியார் பங்களாவில் சில நாள் தங்கினார். அப்பால் அவர் தம்முடைய சகபாடியாகிய சுப்பராய செட்டியார் மூலமாக வேறு ஜாகை ஏற்படுத்திக் கொண்டு அங்கே சென்று இருந்து வந்தார். நான் அவருடன் இருந்து பேசியும், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தும் அச்சு வேலையைக் கவனித்தும் வந்தேன்.

சென்னையிலிருந்து திரும்பியது

புஸ்தகம் முடிந்தவுடன் புறப்பட்டுத் திருவிடைமருதூருக்குத் திருக்கல்யாண தினத்தன்று சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் புஸ்தகப் பிரதிகளை ஒப்பித்து நிகழ்ந்த விஷயங்களையும் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டு அவர் மிகவும் திருப்தியுற்று, “சாமிநாதையர் பட்டணம் போய் வந்ததில் மூன்று லாபங்கள் உண்டாயின. ஒன்று அவரைச் சேர்ந்தது. மற்ற இரண்டும் மடத்துக்கு இலாபம். பல பேர்களைப் பழக்கம் செய்து கொண்டது அவருக்கு நன்மை. மத்தியார்ச்சுன மான்மியம் வெளி வந்ததும் குட்டித் தம்பிரானை வரச் செய்ததும் மடத்துக்கு உபயோகமானவை” என்று பாராட்டினார்.

வஸந்தோத்ஸவம் மிகச் சிறப்பாக நடந்தது. மத்தியார்ச்சுன மான்மியம் அச்சமயத்தில் யாவருக்கும் வழங்கப்பட்டது.