என் சரித்திரம் / 97 பலவகைக் கவலைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

97. பலவகைக் கவலைகள்

சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு நான் வந்து சேர்ந்தவுடன் என்னுடைய அன்பர்களெல்லாம் வந்து சீவகசிந்தாமணிப் பதிப்பை ஆரம்பித்த சந்தோஷம் பற்றி விசாரித்தனர். அச்சிட்ட சில பாரங்களை நான் கையில் கொண்டு வந்திருந்தேன். அவற்றைப் பார்த்த காலேஜ் உபாத்தியாயர்கள் நன்றாயிருப்பதாகச் சொன்னார்கள். அப்போது காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த மிஸ்டர் பில்டர் பெக் துரை மூன்று பிரதிகள் வாங்கிக் கொள்வதாகக் கையொப்பம் செய்தார். அவருக்குத் தமிழ் தெரியாவிட்டாலும் நல்ல காரியத்திற்குத் தம்மால் இயன்ற உபகாரத்தைச் செய்ய வேண்டுமென்பதே அவர் கருத்து. அவரிடம் நான் அச்சிட்ட பாரங்களைக் காட்டினேன். பதிப்பு முறை அழகாக உள்ளதென்று கூறி. “சீக்கிரத்தில் இதை முடித்து விடுங்கள்” என்று ஆதரவோடு சொன்னார்.

தேசிகர் வார்த்தைகள்

அந்த வாரம் சனிக்கிழமை திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரைக் கண்டேன். அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாயிற்றோ அதை அளவிட்டுச் சொல்ல முடியாது நான் கையில் கொண்டு சென்ற பாரங்களை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அதன் அமைப்பு முறையை நான் எடுத்துச் சொன்னேன். அப்போது அருகில் இருந்த சிலரைப் பார்த்துத் தேசிகர், “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த காரியங்களைச் செய்ய இடமுண்டா? நல்ல வஸ்துக்கள் தக்க இடத்தில் இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்” என்றார். நான் இடைமறித்து, “இது மட்டும் தக்க இடமன்றா? பிள்ளையவர்களும் அவர்களுக்கு முன் சிவஞான முனிவர் முதலியவர்களும் இந்த ஆதீனத்தில் இருந்து தானே மிக்க புகழைப் பெற்றனர்?” என்று விநயமாகச் சொன்னேன்.

“அது வேறு விஷயம்; இந்த ஆதீன சம்பந்தம் உங்களுக்கு விட்டுப் போகவில்லையே! அதோடு வேறு ஒரு சிறப்பும் உண்டாயிற்று. இப்போது சென்னைக்குப் போய் உங்கள் காரியத்தைத் திருத்தமாகச் செய்யத் தொடங்கி விட்டீர்கள்” என்று அவர் சொன்னார்.

கும்பகோணத்திற்கு அடிக்கடி ‘புரூப்’ கள் சென்னையிலிருந்து வரும். நான் காலேஜ் விட்டவுடன் வீட்டில் உட்கார்ந்து படித்துத் திருத்தம் செய்வேன். கும்பகோணத்திற்கு மெயில் வண்டி பாதிராத்திரி நேரத்தில் வரும். அதற்குள் திருத்திப் புரூபைக் கட்டி, நானே ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று தபாலிற் போட்டு வருவேன்.

சகாயம் செய்தோர்

பக்தபுரி அக்கிரகாரத்தில் இருந்த என்னுடைய வீடு மிகவும் சிறியதானமையால் பிரதிகளை வைத்துக்கொண்டு பலருடன் ஒப்பிடுவதற்கு விசாலமான ஓர் இடத்தைத் திட்டம் செய்தேன். என் வீட்டிலிருந்து இரண்டு வீட்டுக்கு அப்பால் இருந்த மாடி அது. மாதம் இரண்டரை ரூபாய் வாடகை. அங்கே இருந்து பிரதிகளைப் பார்த்து ஒப்பிடுவதும், புரூப் பார்ப்பதுமாகிய காரியங்களைச் செய்து வந்தேன். காலேஜ் பிள்ளைகளும் வேறு சிலரும் வந்து உதவி புரிந்தனர். இப்போது பங்களூரில் இருக்கும் ஸ்ரீமான் திவான் பகதூர் ராஜஸபாபூஷண கே. ஆர். ஸ்ரீநிவாசையங்கார் (நிர்வாக சபையின் முதல் அங்கத்தினராக விளங்கியவர்) அக்காலத்தில் காலேஜில் படித்து வந்தார். அவர் மிக்க அன்போடு வந்து சிந்தாமணி புரூபைத் திருத்தும்பொழுது துணை செய்வார். மிகவும் நன்றாகப் படிப்பார். இப்படி என்பால் அன்பு பூண்டு உதவிய காலேஜ் மாணாக்கர் பலர். எனக்குச் சகாயம் செய்வதற்கு மடத்திற் படிக்கும் மாணாக்கர்களிற் சிலரை அனுப்ப வேண்டுமென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை வேண்டினேன். அவர் வேம்பத்தூர்ச் சுந்தரேச பாரதியையும் *நல்ல குற்றாலம் பிள்ளையென்பவரையும் அனுப்பினார். அவர்கள் ஏடு பார்த்து ஒப்பு நோக்குதல் முதலிய உதவிகளைச் செய்து வந்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கொட்டையூரிலிருந்து ஸ்ரீநிவாசையங்கார் என்பவரும் என்னிடம் பாடங் கேட்டு வந்ததுடன் பதிப்பிற்கு வேண்டிய உதவியையும் செய்தார்.

கோப்பாய் சபாபதிபிள்ளை

ஒரு சமயம் வழக்கம்போல் நான் திருவாவடுதுறை சென்று சிந்தாமணி புரூபையும் அடித்த பாரங்களையும் சுப்பிரமணிய தேசிகரிடம் காட்டினேன். அப்போது கோப்பாயென்னும் ஊரினராகிய xசபாபதிபிள்ளையென்பவர் அங்கே வந்திருந்தார். அவர் தமிழ்நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர் நான் சிந்தாமணி புரூப்களைக் காட்டும்போது அவரும் கவனித்தார். எனக்கு அவர் பழக்கம் முன்பே உண்டு பிறகு அவர், “நானும் இந்தப் புஸ்தகத்தின் புரூபைப் பார்த்துத் திருத்தித் தருகிறேன். அனுமதி செய்ய வேண்டும்” என்றார். அப்போது நான் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டேன். பிறகு தனியே இருக்கும்போது சுப்பிரமணிய தேசிகர் என்னை நோக்கி, “கண்டபேரிடம் இதைக் கொடுக்கக் கூடாது. நீங்கள் மிகவும் சிரமப்பட்டுச் செய்த திருத்தங் களையெல்லாம் தாமே செய்தனவாகச் சொல்லிக்கொள்வதற்கு இடமேற்படும். சபாபதிபிள்ளை விருப்பத்திற்கு இணங்க வேண்டாம்” என்று சொன்னார். நான் அவர் கருத்தின்படியே இருந்தேன்.இவர் வேம்பத்தூர் ஆசு கவி சிலேடைப்புலி பிச்சுவையரின் இளைய சகோதரர். இவர் காலமடைந்து சில வருஷங்களாயின. * இவர் ஆதி குமரகுருபர சுவாமிகள் மரபினர் சபாபதி நாவலரென்றும் வழங்கப் பெறுவர்.

ஹிந்துவில் வந்த கடிதம்

சுதேசமித்திரன் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்த ஹிந்து ஆசிரியர் ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயருடைய பழக்கம் சென்னையில் எனக்கு உண்டாயிற்று. அவர் நான் சிந்தாமணியைப் பதிப்பித்து வருவதை யறிந்து அந்த நூலைப்பற்றியும் நான் பதிப்பிப்பதைப் பற்றியும் ஒரு குறிப்பெழுதித் தரச்சொல்லி அதனைத் தம் பத்திரிகையில் வெளியிட்டார். அன்றியும் அவ்வப்போது இன்ன இன்ன பகுதி வரையில் அச்சாகியுள்ளதென்ற செய்தியையும் தமிழ்ப் பத்திரிகையில் நான் வெளியிட்டு வந்தேன். ஹிந்து பத்திரிகையிலும் அந்தச் செய்தி வெளிவரும். அவற்றைக் கண்டு எனக்குக் கடிதம் எழுதிப் பல அன்பர்கள் பதிப்பைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். தமிழ் நூல்களில் அன்புடையவர்களிடையே இந்தச் செய்தி ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்றென்றே தோற்றியது. எனக்குப் பழக்கமில்லாதவர்கள் பலர் தங்கள் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தும் என்னைப் பாராட்டியும் எழுதினார்கள். சிலர் அந்தப் பதிப்பில் சேர்த்துக் கொள்ளும்படி சிறப்புப் பாயிரங்கூட எழுதி அனுப்பி விட்டார்கள்.

1886-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் ஹிந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதில் ‘சாமிநாதையர் சிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதாகத் தெரிகிறது. அது நச்சினார்க்கினியரது உரையாக இருந்தால் தான் தமிழ் நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்படும். சாமிநாதையர் உரையாக இருந்தால் பயன்படாது!’ என்ற கருத்து இருந்தது. எழுதினவர் தம் பெயரை வெளியிடாமல் புனைபெயர் பூண்டிருந்தார். அது வரையில் பாராட்டுக்களையே கேட்டு வந்த எனக்கு அக்கடிதம் சிறிது வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘நச்சினார்க்கினியரது உரையோடு வெளியிடுவதாகத் தனிப் பிரசுரத்தால் தெரிவித்திருப்பதோடு அவ்வப்போது பத்திரிகைகளிலும் அறிவித்து வருகிறோம். அப்படியிருக்க ஒன்றும் தெரியாதவர்போல் இப்படி எழுதி விட்டவர் ஏதோ கெட்ட நோக்கமுடையவராகத் தான் இருக்கவேண்டும்’ என்று ஊகித்துக் கொண்டேன். என் ஊகம் சரியே என்று பிறகு தெரிய வந்தது.

அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதுவது அவசியமென்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். நானே எழுதுவதைவிட வேறு தக்க ஒருவரைக் கொண்டு எழுதுவித்தல் நலமென்று தோற்றியபடியால் உடனே சென்னையிலிருந்த இராமசுவாமி முதலியாருக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தேன். அவர் சிறிதும் தாமதமின்றி, “சீவகசிந்தாமணி மிகப் பழைய காவியம். அதைப் பல பிரதிகளைக் கொண்டு சோதித்து உழைத்து ஆராய்ந்து நச்சினார்க்கினியர் உரையுடனே தான் சாமிநாதையர் பதிப்பித்து வருகிறார். அந்த நூல் வெளிவந்தால் தமிழ் நாட்டுக்கு மிக்க உபகாரமாக இருக்கும்” என்னும் கருத்து அமையத் தம் கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி அதை ஹிந்து பத்திரிகையில் 5-8-1886 ஆம் தேதியில் வெளிவரச் செய்தார்.

தாமோதரம் பிள்ளை

கும்பகோணத்தில் இருந்து வந்த சி.வை. தாமோதரம் பிள்ளை பிறகு புதுக்கோட்டையில் ஜட்ஜ் உத்தியோகம் பெற்று அங்கே சென்றார். அங்கிருந்தபடியே இலக்கண விளக்கம், கலித்தொகை என்னும் இரண்டையும் பதிப்பித்து வந்தார். சீவகசிந்தாமணிப் பிரதியை நான் வாங்கிக் கொண்டதிலிருந்து அவருக்கு மனத்துள் சிறிது வருத்தம் இருந்ததென்று குறிப்பாகத் தெரிந்தது. தாமும் சிந்தாமணியைப் பதிப்பிக்கப் போவதாகச் சிலரிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தாரென்றும் தெரிந்தது. ‘யார் என்ன செய்தாலும் சரி; நான் மேற்கொண்ட காரியத்தை இடையில் நிறுத்தப் போவதில்லை!’ என்ற துணிவோடு சிந்தாமணிப் பதிப்பை நடத்தி வந்தேன். அதில் ஈடுபட ஈடுபடச் சிலரால் நேரும் இடையூறுகளை அறவே மறந்துவிடும் நிலை எனக்கு ஏற்பட்டது.

அவ்வப்போது சில அன்பர்கள் இத்தனை பிரதிகள் எடுத்துக் கொள்கிறோமென்றும், இத்தனை ரூபாய் அனுப்புகிறோமென்றும் தெரிவித்து ஊக்கமளித்தனர். ஊற்று மலை ஜமீன்தாராகிய ஸ்ரீ ஹிருதயாலய மருதப்பத் தேவர் தாம் நூறு ரூபாயனுப்புவதாக வாக்களித்தார்.

சென்னைப் பிரயாணம்

கோடை விடுமுறைக்குப் பின் கும்பகோணத்திற்கு வந்த நான் அங்கிருந்தபடியே பதிப்பை நடத்திக் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தபடி வேலை வேகமாக நடைபெறவில்லை. அடிக்கடி இராமசுவாமி முதலியார் கடிதம் எழுதுவார். “நீங்கள் இங்கே வந்திருந்து நடத்தினால் வேலை துரிதமாக நடைபெறும்” என்று அவர் ஒருசமயம் எழுதினார். ஆகையால் கிறிஸ்துமஸ் விடுமுறையில் மீண்டும் சென்னைக்குச் செல்ல ஏற்பாடு செய்தேன்.

கேள்வியுற்ற செய்தி

டிசம்பர் மாத இறுதியில் நான் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்கே போனவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில், யாரோ ஒருவர் சிந்தாமணியைப் பதிப்பித்து வருகிறாரென்று ஒரு விளம்பரம் வந்ததாகக் கேள்வியுற்றேன். தங்கசாலைத் தெருவில் உள்ள ஸ்ரீ ஆறுமுக நாவலரது வித்தியாநுபாலன அச்சியந்திர சாலையில் நாவலர் பதிப்புக்களைக் கவனித்து வந்த யாழ்ப்பாணம் சதாசிவ பிள்ளை என்பரிடம் போய் விசாரித்தேன். அவர், “நாவலரையாவின் மருகராகிய பொன்னம்பலம் பிள்ளையும் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்து வருகிறாராம். இருபது பாரம் பதிப்பித்தாயினவாம். இதோ பாருங்கள்: இந்தப் பத்திரிகையில் அறிவிப்பு” என்று அந்தப் பத்திரிகையையும் காட்டி, “ஒரே நூலை இருவர் பதிப்பிப்பதில் என்ன லாபம்!” என்றும் சொன்னார். “அதனால் என்ன?” என்று சொல்லி நான் வந்து விட்டேன். அது முதல் சிந்தாமணிப் பதிப்பைப் பின்னும் செவ்வையாக நடத்த வேண்டுமென்று எண்ணி உழைத்து வந்தேன். கிறிஸ்டியன் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வந்த சுப்பராயலு நாயகரென்பர் புரூப் பார்த்து எனக்கு உதவி செய்து வந்தார்.

கும்பகோணம் காலேஜில் இருந்த ஸ்ரீ ஆர்.வி.ஸ்ரீனிவாசையர் சென்னை ரெவின்யூ போர்டு ஆபீஸில் தக்க உத்தியோகம் பெற்று அப்போது சென்னையில் இருந்தார். நான் அவர் வீட்டுக்குச் சென்று சில நாள் தங்குவேன். அவர் என் பதிப்பு முயற்சிகளைக் கேள்வியுற்று மகிழ்ந்து ஊக்க மூட்டுவார். பூண்டி அரங்கநாத முதலியாரையும் பார்த்து வருவேன். சேலம் இராமசுவாமி முதலியாரை ஒவ்வொரு நாளும் கண்டு சல்லாபம் செய்து மகிழ்வேன்.

கிராமவாசியின் தமிழன்பு

ஒருநாள் அச்சுக்கூடத்தில் புரூப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவரும் வராமையால் நானே தனியே இருந்து வாய் விட்டுப் படித்து வந்தேன். கிறிஸ்துமஸ் சமயமாதலால் சென்னைக்கு வெளியூரிலிருந்து பலர் வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவில் போய்க் கொண்டிருந்தனர். நான் தெருவை நோக்கியிருந்த ஜன்னலுக்கருகே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ மெல்ல ஜன்னலண்டை வந்து ஓரமாக நின்றார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் படிக்கப் படிக்க அவர் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவருடைய சாதாரணமான தோற்றத்திலிருந்து அவரை ஒரு கிராமவாசி என்று தெரிந்து கொண்டேன். கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்க வந்த அவர் நான் படித்ததைக் கேட்டார். அந்தத் தமிழ் அவரை இழுத்தது. அதனாலே தான் அங்கே வந்து நின்று கவனித்தார். அவர் பேசாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து நான், “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“என்னவோ படிக்கிறீர்களே! கேட்க வந்தேன்” என்றார் அவர் “அங்கே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றேன். அவர் வந்தார். “படிக்க வருமா?” என்று நான் வினவ, அவர் ‘படிப்பேன்” என்று சொன்னார்.

உடனே நான் கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். புரூபை நான் பார்த்துத் திருத்தி வந்தேன். அவர் படிக்கையில் அதில் மனத்தைச் செலுத்திப் படித்தார். கிராமங்களில் தமிழ் வளம் நிரம்பியிருப்பதை அவர் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு சமயம் என் நண்பராகிய தஞ்சை வக்கீல் கே. எஸ், ஸ்ரீனிவாச பிள்ளை சென்னைக்குக் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் முகமாக எனக்கு, “நீங்கள் பதிப்பித்து வருகிற சிந்தாமணி அச்சுப் பாரங்களை எப்படியாவது முயன்று தமக்கு அனுப்பி வர வேண்டுமென்றும், அச்சுக்கூடத்தாருக்குப் பெருத்த தொகை கொடுப்பதாகவும், ஒருவர் சூழ்ச்சி செய்கிறாராம். இதை நாகை நீலலோசனி பத்திராதிபராகிய சதாசிவம் பிள்ளை தெரிவித்தார். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சொல்லி அனுப்பினார். அதைக் கேட்டவுன் எனக்கு மிக்க கவலை உண்டாயிற்று. அச்சுக்கூடத் தலைவராகிய கோவிந்தாசாரியாரிடம் சொன்னேன். அவர் மிக்க நல்லவர். “நீங்கள் இதுபற்றிச் சிறிதும் கவலைப்பட வேண்டாம். யாரோ வேண்டுமென்று செய்யும் புரளி இது. இங்குள்ள வேலைக்காரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். இங்கே அச்சிடும் விஷயங்களை இரகசியமாகவே வைத்திருப்பார்கள்” என்று அவர் தைரியம் சொன்னார்.

‘நல்ல காரியத்திற்கு எத்தனை விக்கினங்கள்?’ என்று எண்ணி இதை இறைவன் திருவருளைத் துணையாகச் சிந்தித்துக் கொண்டு பதிப்பு வேலையைக் கவனிக்கலானேன்.

பீப்பிள்ஸ் பார்க்கில் தீ

ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு அச்சுக்கூடத்தில் நான் புரூப் பார்த்துக் கொண்டிருந்தபோது கோவிந்தாசாரியார் மிகவும் கலக்கமடைந்த முகத்தோடு என்னிடம் வந்தார். “என்னாங்க! சமாசாரம் கேள்விப்பட்டீங்களா?“ என்று கேட்டார். “என்ன?” என்று நான் வேகமாக விசாரித்தேன்.

“தீப்பிடித்து விட்டுதுங்களாம்” என்று சொல்லி மேலே பேசாமல் நிறுத்தினார். எனக்குப் பகீரென்றது. எப்போதும் சிந்தாமணி யைப் பற்றிய விசாரத்திலே மூழ்கியிருந்த எனக்கு, “சிந்தாமணியில் அச்சிட்ட பாரங்களுக்குத்தான் அபாயம் வந்து விட்டதோ” என்று பயந்து, “எங்கே? எங்கே?” என்று பரபரப்போடு விசாரித்தேன்.

“ஐயோ! பார்க்கு வேடிக்கைக்குப் போட்டிருந்த பெரிய கொட்டகையில் தீப் பிடித்துக் கொண்டதாம். பல பேர் சேதம். தீயை அணைக்க முடியவில்லை. குழந்தைகளும், பெண்களும், சிறுவர்களும், கிழவர்களும் தீயில் அகப்பட்டுத் தீய்ந்து போய்விட்டார்கள்” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். உடனே புரூப்களை அப்படியே வைத்து விட்டு அவருடன் அங்கே போய்ப் பார்த்தேன். என்ன பரிதாபமான காட்சி! கண்ணாற் பார்க்கச் சகிக்கவில்லை. உடல் முழுவதும் வெந்தும் உயிர் போகாமல் துடித்துக் கொண்டும் கை வெந்தும் கால் தீய்ந்தும் போன பல ஜனங்களைப் பார்த்தேன். வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்திருந்தனர். அவர்களிற் பலர் இந்த விபத்திற் சிக்கி உயிரை இழந்தனர்.

என் பெற்றோர்களின் கவலை

இந்தச் செய்தி பத்திரிகை வாயிலாக வெளியூர்களில் எங்கும் பரவவே அங்கங்கேயுள்ளவர்கள் தங்கள் தங்களைச் சேர்ந்தவர்கள் என்ன ஆயினரோ என்று திடுக்கிட்டு விசாரிக்கத் தொடங்கினர். தந்திகள் பறந்தன. கடிதங்கள் குவிந்தன. இந்த விஷயம் தெரிந்தால் என் தாய் தந்தையர்கள் மிகவும் கவலைப்படுவார்களென்று நான் எண்ணி மறுநாள் காலையிலேயே ஒரு கார்டு எழுதி என் தகப்பனாருக்கு அனுப்பினேன். அதில் விசேஷ மொன்றுமில்லை. “. . . . ஊட்டு மறுத்துப்போன பசுமாட்டை ஊருக்கு அனுப்பினது நல்லதுதான். நான் பார்க் வேடிக்கை பார்க்கப் போகவில்லை. பதிப்பு வேலையைக் கவனித்துக்கொண்டு சௌக்கியமாக இருந்து வருகிறேன்” என்று எழுதினேன். என் சௌக்கியத்தைப் பற்றித் தெரிவித்ததுதான் முக்கியம்.

அதற்குள் என் பெற்றோர்கள் மிக்க கவலையில் ஆழ்ந்து ஒன்றும் தெரியாமல் திகைத்திருந்தார்கள். அவர்களுடைய துயரத்தை அறிந்த சாது சேஷையர் அவர்களைத் தேற்றினார். கும்பகோணத்துக்கு இரவில் வரும் தபால்களை விடிந்த பிறகுதான் உடைத்துப் பார்த்துப் பிரித்து எட்டுமணியளவுக்கு எல்லோருக்கும் கொடுப்பார்கள். அதுவரையில் காத்திருக்கச் சேஷையரால் முடியவில்லை. மெயில் வந்தவுடன் அவர் தபால் நிலையத்துக்குப் போய்ப் போஸ்டு மாஸ்டரிடம், “உடனே தபால் கட்டைப் பிரித்துப் பாருங்கள்” என்றார். அவர் வழக்கத்துக்கு விரோதமாகச் செய்யக் கூடாதென்று சொல்லவே சேஷையருக்கு மிக்க கோபம் வந்து விட்டது. “என்ன ஐயா வழக்கம்! ஆபத்துக் காலங்களில் விதி விலக்கு இல்லையா? எல்லோரும் எப்போது தபால் வருமென்று கவலையோடு ராத்திரி முழுவதும் தூங்காமல் காத்திருக்கிறார்கள். நீர் ரூல் பேசுகிறீரே! நீர் இப்போது இந்தக் கட்டை உடைத்துக் கடிதங்களை அவரவர்களுக்குக் கொடாவிட்டால் நான் மேலதிகாரிக்கு எழுதுவேன்” என்று கண்டிப்பாகச் சொன்னார். மிக்க செல்வாக்குள்ள அவர் சொல்லவே, போஸ்டு மாஸ்டர் தபாற் கட்டைப் பிரித்தார். என் தகப்பனார் விலாசத்துக்கு வந்த கார்டை வாங்கி உடனிருந்த என் தகப்பனாருக்குக் காட்டினார். வேறு பலரும் தங்களுக்கு வந்த கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். என் கார்டைப் பார்த்த பிறகே என் தந்தையாருக்கு உயிர் வந்தது.