என் தமிழ்ப்பணி/என் தமிழ்ப்பணி

விக்கிமூலம் இலிருந்து

1. என் தமிழ்ப்பணி


என் கடன் பணி செய்து கிடப்பதே!

1932 : செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர் திருவாளர், மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானு கவியார் என்ற பெரும் புலவர், துறவியார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த “அருட்பா, மருட்பா’ வாதத்தில் அருட்பாவாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மையாளர். எங்களூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதபுரீஸ்வரர், திருஞான சம்பந்தர் அவர்களால், ஆண்பனை பெண்பனையாகப் பாடப்பெற்ற பெருமைக்குரிய பெருமான். அவர் துணைவியார் பாலகுஜாம்பிகையார், அந்த அம்மையார் மீது “இளமுலைநாயகிப் பிள்ளைத் தமிழ்” என்ற பொருள் செறிந்த நூலைப் பாடியவர் பானுகவியார். அத்தகு பெரும் புலமை வாய்ந்த பானுகவியாரை வாதத்தில் வென்றவர் திரு வீரபத்திரப்பிள்ளை அவர்கள்.

அவர் வேலூரில், இன்று வெங்கடேசுவரா மேல்நிலைப்பள்ளி என அழைக்கப்பெறும் அன்றைய ஸ்ரீமசுந்து தேவஸ்தான உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டார். அவர் இடத்திற்குக் காவேரிப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்திருக்க திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். தென் ஆர்க்காடு மாவட்டம். மயிலத்துக்கு மேற்கில் பத்து கி. மீ. தொலைவில் உள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில், அவ்வூர்க் கணக்கு எழுதி வந்த திரு. சுந்தரம்பிள்ளை அவர்களின் மகனாகப் பிறந்தமையால் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை என அழைக்கப்பட்டவர்.

மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள் எங்கே, இவர் எங்கே, எனச் சில நாள் இவரை மதிக்காமலே இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒளவை அவர்களின் பாடம் நடத்தும் முறை புதுமையானது. அன்று நடத்த வேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை முன்பாகவே தேர்வு கொண்டல்லது பாடம் எடுக்கமாட்டார்; பாக்களை இசையோடு பாடுவார்; சொல் பிரித்து பொருள் விளங்கப் பாடுவார்; புதிய பாடம் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் பழைய பாடத்தை மாணவர் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளச் சில பல கேள்விகளைக் கேட்பார்.

அம்முறையில் ஒரு நாள் அரிச்சந்திர புராணத்தில் வரும் “அவமே புறம் அறைந்தமை” என்ற தொடரில் வரும் “அறைந்தமை” என்ற சொல்லுக்குச் சொல்லிலக்கணம் கூறுமாறு கேட்டார். அதுவரை இலக்கணம் என்றால், இலக்கணத்திற்குப் பாடமாக வைத்திருக்கும் நூலில் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களை ஒப்பிப்பதோடு சரி: அதனால் சொல்லிலக்கணம் என்பது என்ன எனப் புரியாமல் விழித்தோம். அவர் “இடவழுவமைதி தனித் தன்மைப் பன்மை” என்பதுதான் இதன் சொல்லிலக்கணம் என்றார். 

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இடமாவது, வழுவாவது அமைதியாவது, தனித்தன்மைப் பன்மையாவது” என விழித்தோம். அதன் பிறகு இவரிடம் நல்ல தமிழ், அறிவு இருக்கிறது என்பதை உணர்ந்து மதிக்கத் தொடங்கினோம்.

வகுப்பில் ஒருநாள் “என்னிடம் தமிழ் கற்க விரும்பும் மாணவர்கள் எழுந்து நிற்கலாம்” என்றார். எல்லோரும் எழுந்து நிற்கவும், உடனே அவர், என்னிடம் படிப்பதானால், மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும்! அதற்கு ஒப்புக் கொள்பவர் மட்டுமே நிற்கலாம் என்றார். நான், மா. கந்தசாமி, வ. வேதபுரி, பி. குப்புராவ், ஆகிய நால்வர் மட்டுமே நின்றோம்.

மாலையில் வீட்டிற்குச் சென்றோம் பணத்தோடு! தமிழ் கற்க எந்த அளவு ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே, ஐந்து ரூபாய் சம்பளம் என்றேன். சம்பளம் எதுவும் வேண்டாம் தமிழ் கற்றுத் தருகின்றேன் என்றார்.

வகுப்பு தொடங்கிற்று. திரு. உலகநாதம் பிள்ளை அவர்கள் இயற்றிய ‘கன்றும் கனி உதவும்’ என்ற உரைநடை நூலைக் கொடுத்து, அதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பணித்தார். பாரி மகளிர் வரலாறு கூறும் சிறந்த உரைநடை நூல் இது. அது முடிந்ததும் "கார் நாற்பது", "களவழி நாற்பது" என்ற எளிய பொருள் விளக்கம் பெறவல்ல, அதே நிலையில் ஆழமான பொருள் நிறைந்த நூல்களைக் கற்றுத் தந்துவிட்டுப், பின்னர் ஒருநாள். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், ஒரு நாள் திருக்குறள் பரிமேலழகர் உரை எனச் சொல்லித்தந்தார். பாடம் தொடங்குமுன்:

திருவிளங்கு பலமொழியும் சீர்விளங்கு
புலவர் பலர் சிறப்பத் தோன்றி
உருவிளங்கு பாக்கள் பல உரைகள்
பல ஆக்குதநல் உளவாம் வாய்மை
மருவிளங்கு தமிழ் மொழியின் மருங்கு
எழுந்தது என விளங்கும்
திருவிளங்கு வள்ளுவனார் திருக்குறள் கண்டவர்
அடியைச் சிரமேற் கொள்வாம்.

என்ற பாடலை எல்லோருமாகப் பாடுவோம்.

1934-இல் பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அவர் தந்த பயிற்சியின் துணையால் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களை நானே படிக்கத் தொடங்கினேன்.

1935-இல் “காவேரி” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய “தமிழ்ப் பொழி”லுக்கு அனுப்பினேன். அது வெளிவந்த பிறகே ஆசிரியர்க்குத் தெரியும். இதுவே என் எழுத்துப் பணியின் தொடக்கம்.

ஊரில் “வாகீச பக்த ஜன சங்கம்” என்ற பெயரில் ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது. அது மேலே கூறிய திருக்கோயில் திருவிழா நடைபெறும் தைத் திங்களில் பத்து நாட்கள் உபயச் சொற்பொழிவு நடத்தி வந்தது. ஒளவை அவர்கள் பங்கு கொண்டதும், அது புதுநடை போடத் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் உள்ளிட்ட பல சமயப் புலவர்கள் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள். அவர்கள் பேசியன எல்லாம் கேட்ட எனக்கும் “நாமும் ஏன் பேசக் கூடாது” என்ற உணர்வு எழவே, ஆசிரியர் அறிவுரையோடு “சைவ இளைஞர்கள் முன் னிற்கும் கடமைகள்” என்ற தலைப்பில் பேசினேன். அதுவே என் முதற் பேச்சு.

எங்கள் ஊரில் “பானு கவி மாணவர் தமிழ்ச் சங்கம்” என்ற பிறிதோர் அமைப்பும் இருந்தது. கம்ப இராமாயணத்தை ஆழ்ந்து படிக்காமலே பட்டிமன்றம், வழக்காடு மன்ற மேடைகளில் நின்று கொண்டு வெறும் சொல் சாலம் காட்டுவார் போல் அல்லாமல் ஆழமாகப் படித்து “வாலி வழக்கு” என்பது போலும் அரிய நூல்களைப் படைத்த அமரர் திரு. புரிசை முருகேச முதலியார் போன்றவர்கள் பானுகவியாரின் மாணவர்கள். அவர்கள் உருவாக்கியது அச்சங்கம். அதிலும் நான் பங்குகொண்டவன் தான்; ஆண்டுதோறும் திருவத்திபுரத்திற்கு வந்து செல்லும் ஞானியார் அவர்கள் அயர்ந்து உறங்கத் தொடங்கும் போது, அவர் உறங்கும் வரை அவர் கால்களைப் பிடித்துவிடும் பழக்கமுடைய என்னை, ஒரு முறை அவர் தலைமையில் “மணிவாசகர் அளித்த இரு வாசகம்” என்ற தலைப்பில் பேசுமாறு பணித்து விட்டார்கள். சங்க இலக்கியங்களை ஓரளவு கற்றவனே அல்லது, சமய இலக்கியம் படித்தவன் அல்லன், ஆனாலும் திருக்கோவையாரில் ஒரு சில பாக்களைப் பள்ளியில் படித்தவன். என் தந்தையார் மார்கழி மாத விடியற் போதில் படிக்கும் திருவாசகப் பாக்களைக் கேட்டுக் கேட்டுச் சில பாடல்களை நினைவில் வைத்திருப்பவன். அதனால் தன் மகள் அவள் விரும்பும் இளைஞனோடு அவனுர் சென்று விட்ட போது, அவர்களைத் தேடிச் சென்ற தாய், எதிரே வந்த ஓர் இள ஆணையும் ஓர் இள மகளையும் அணுகி, உங்களைப் போன்ற இருவர் இவ்வழியில் செல்வதைக் கண்டீர்களா எனக் கேட்க, அதற்கு அந்த இளைஞன், ஒன்று இருவரையும் பார்த்தேன் அல்லது இல்லை எனக் கூறியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக “என்னைப் போன்ற இளைஞனைப் பார்த்தேன்” எனக் கூறி விட்டுத் தன் பக்கத்தில் நிற்கும் தன் காதலியைப் பார்த்து, “இந்த அம்மா, வேறு யாரோ ஒருவரைப் பற்றிக் கேட்கிறார்களே! அவர்களைப் பற்றி உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டதாக வரும்,

“ஆளி அன்னானைக் கண்டேன், அயலே தூண்டா
விளக்கனையாய்? என்னையோ அன்னை சொல்லியதே”

என்ற பாட்டைப் பாடிவிட்டு, எதிரில் இருவர் வர, ஆணை மட்டும் பார்த்துப் பெண்ணைப் பார்க்காத அக்கால இளைஞரின் நாகரீகம் எங்கே? அழகிய இளமகளிரை-எங்கெல்லாம் காணலாம் என அலைபாயும் உள்ளத்தோடு, மகளிர் கல்லூரி வாயில்களிலும், திரையரங்குத் திடல்களிலும் காத்துக் கிடக்கும் இன்றைய இளைஞரின் நாகரீகம் எங்கே எனக் கேட்டு: முடித்தேன்.

அடுத்து “தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை” என்ற-திருவாசகத் தொடரை எடுத்துக் கொண்டு, தருதல் என்றால், கொடுப்பவன் தாழ்ந்து, வாங்குவோன் உயர்ந்து நிற்கும் போது ஆள வேண்டிய சொல், இங்கு ‘தந்தது உன் தன்னை’ என கூறியதன் மூலம், சிவனைத் தாழ்ந்தவனாகவும், தன்னை உயர்ந்தவனாகவும் மதித்துள்ளாரே மணிவாசகர், இது ஏன் என்ற் கேள்வியைக் கேட்டு விட்டுப் பேச்சை முடித்துக் கொண்டேன்.

தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.

மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் , பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை தந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரத்தைக் கவியரசு ஆர் வெங்கடாசலம் பிள்ளை அவர்கள், இராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார். எனக் கூறினார். அது கேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டி, “இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்?” என்று கூறிச் சென்று விட்டார்.

கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலுமாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன். என் அறிவு எனக்குத் தானே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்க வேண்டி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக் கூடும் என்பதால் கவியரானா விட்டு ஒடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எழுப்பினேன். “தொல்காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் கூறும்போது எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” என்றார். அதாவது சொல் எவ்விதத் திரியும் இல்லாமல் இருப்பது. அவ்வாறு கூறிய அவரே ‘நீயீர்’ என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும்போது “நும்மின் திரிபெயர்” என்று கூறியுள்ளார். இது முன் கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? நும்மின் திரி, பெயராகிய நீயீர் என்பது பிற வேற்றுமைகளை ஏற்கும்போது மீண்டும் நும், எனத் திரிந்து, “தும்மை நும்மால்” என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவ்ர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் எனஓடி விட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு. பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம். அவர் மறுத்து விட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்த முன் வரவில்லை. அதனால் ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தெர்டங்கி அவருக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம். 

ஓராண்டு கழிந்தது; 1936இல் முதலாண்டு விழா நடத்த முடிவு செய்தோம். விழாத் தலைமைக்கு மறைமலை அடிகளாரை அழைக்க முடிவு செய்தோம். ஆசிரியர் ஒளவை அவர்கள் அவருக்கு கடிதம் எழுத, அடிகளார் ஒரு நாளைக்கு 100 வெண் பொற்காசுகள் (அதாவது ரூபாய்) தர வேண்டும் என்றும் உணவு இவ்வகையில் இருக்க வேண்டும் என்றும் பதில் எழுதி விட்டார்.

எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை; ஆனாலும் மறைமலையாரை அழைக்கும் ஆசையும் குறையவில்லை. ஒருநாள் ஆசிரியர் அவர்களிடமும் சொல்லாமல் பல்லாவரம் சென்று, அரைக்கிலோ கற்கண்டு, 2 சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மலர்மாலை இவற்றை வாங்கிக் கொண்டு அடிகளார் மாளிகை சென்று ஒரு தட்டு வாங்கி, அதில் இவற்றை வைத்து எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவர் கையில் தட்டைக் கொடுத்துவிட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினேன். (நான் வணங்கிய முதல்வர் அவர் தான்.)

வாழ்த்தி எழுந்திருக்கப் பணித்துவிட்டு, யார்? வந்தது ஏன் என வினவினார்: அழைக்க வந்தேன் என்றேன். ஒளவைக்குக் கடிதம் எழுதி விட்டேனே என்றார். கையில் இருப்பது 200 வெள்ளிக் காசுகள்தாம் என்றாலும் தாங்கள் வந்து விழாத் தலைமை தாங்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன், ஒப்புக் கொண்டார்.

1936 மே 24, 25, 26 ஆகிய நாட்களில், திருவத்திபுரம் எங்கள் தெருவில், கோயிலை அடுத்து தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டு விழா நடத்தினோம்.

வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம், பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரி சென்று படிக்காமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதுவதானால் 3ஆண்டு ஆசிரியராகப் பணி புரிந்திருக்க வேண்டும்; தேர்வுக்கு மனுச் செய்யும்போது ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதி. அதனாலும், இரண்டாம் உலகப் போர் காரணத்தால் அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தவர். அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா அணிக்கு ஆதரவான பிரசாரம் செய்ய முனைந்து விட்டனர், அதனாலும், வேலூரில் என் பழைய தமிழாசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942-இல் சேர்ந்தேன். 1944 வரை பணி புரிந்தேன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது.


பி.ஓ.எல். தேர்வில் முதல் பகுதி பி.எஸ். வகுப்பிற்குரிய ஆங்கில இலக்கியம். இரண்டாம் பகுதி தமிழ் வித்துவான் தேர்வு, மூன்றாம் பகுதி திராவிட மொழி ஒப்பிலக்கணமும், தென்னிந்திய வரலாறும் (ஆங்கிலத்தில்). இரண்டாம் பகுதியை முன்னரே முடித்து விட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வரலாற்றுக்குரிய நூல்களாகிய திருநீலகண்ட சாஸ்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு. கோபாலன் அவர்களின் பல்லவ வரலாறு, திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக் கொண்டேன். கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர் மூல்ம் வாங்கித் தந்தார் ஆசிரியர்.

அவற்றைப் படிக்கும்போது கால்டுவெல் ஒப்பிலக்கணத்தையும், பி.டி.எஸ். அவர்களின் தமிழர் வரலாற்றையும் தமிழில் மொழி பெயர்த்தால் பி.ஓ.எல். படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணினேன்.

வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், தாமரைச் செல்வர், அமரர். சுப்பையா பிள்ளை அவர்கள், சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில், 22-2-42-இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் பாலை என்ற தலைப்பில் சொற் பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் தருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன்.

அம்மாநாட்டினைத் தொடர்ந்து திரு. சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார்.

“திருமாவளவன்” என்ற முதல் நூல் 1951ல் வெளிவந்தது. (என் முதல் மகனின் பெயரும் திருமாவளவன் என்பது குறிப்படல் நலம்.) அதைத் தொடர்ந்து சங்க காலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும், அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார் புலவர் வரிசையில் முதல் நூல் 1952லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955லும் வெளிவந்தன.

தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எழுத்துப் பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர். பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டார் மூலம் பல நூல்கள் வெளி வந்தன. அரசியல் பணிகளுக்கிடையே கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959ல் வள்ளுவர் பண்ணை மூலம் வெளிவந்தது.

1990 ஏப்ரல் 15ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக, திரு. பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழிபெயர்க்கப் பெற்று, திரு. பிள்ளை. அவர்களின் மருகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் பெற்றது. அவருக்கு நன்றி.

இப்போது (1991) அவர் பணிக்க திருவாளர் வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின் Origin and Spread of Tamils, (‘தமிழரின் தோற்றமும் பரவலும்’) என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் Pre Aryan Tamil Culture (ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு) என்ற நூலை மொழி பெயர்த்து முடித்துவிட்டு, அவரின் மற்றொரு நூலாகிய Stone Age in India (இந்தியாவில் கற்காலம்) என்ற நூலை மொழி பெயர்க்க எடுத்துக் கொண்டுள்ளேன்- என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி, பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில் கற்பவர் நாள்சில” காலம் இடம் தந்தால் என் எழுத்துப் பணி ஓரளவேனும் முற்றுப் பெறும்.