என் பார்வையில் கலைஞர்/ராணித் தேனீக்கள், சாமானியத் தேனீ, டாமர் தேனீ

விக்கிமூலம் இலிருந்து

ராணி தேனீக்கள்
சாமானியத் தேனீ
டாமர் தேனீ


கலைஞருடன், முதல் தடவையாகத் தனிமையில் நேருக்கு நேராக, மனம் விட்டு உரையாடும் சந்தர்ப்பம் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் எனக்கு கிடைத்தது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், முன்பு ஒரு தடவை, அவர் முதல்வராக இருந்த போது தனித்துப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் முதல்வர். நான் தொலைக்காட்சிச் செய்தியாசிரியர். அந்தச் சந்திப்பு, எனது புலம்பலாகவும் அவர் வெறுமனே தலையாட்டுவதாகவும் மட்டுமே இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்போ என் அளவில் மறக்க முடியாதது. தோழமையுடன் கூடியது. எங்கள் உறவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கலைஞரின் முன் அனுமதி பெற்று, எனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக, கோபாலபுரத்திற்குச் சென்றேன். அவருக்கு வேண்டிய கட்சித் தலைவர்கள், அங்கும் இங்குமாய் நின்றார்கள். ஆனால் கூட்டம் இல்லை. கலைஞரை மாடியில் சென்று சந்தித்தேன். கலைஞர் ஒரு பற்றற்ற யோகி போலவே தோற்றம் காட்டினார். அரசியல் விரோதிகள், தம்மை இழித்துப் பழித்துப் பேசியதோ, எவரை முன்னிருத்தினாரோ, அவராலேயே, தாம் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையோ தெரியப்படுத்தும் எந்த வெளிப்பாடுகளும் முகத்தில் இல்லை. நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற தோரணை. நல்லதே நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு. அப்படியே அது பொய்த்துப் போனாலும் வெற்றியும், தோல்வியும் வீரருக்குச் சமம் என்ற தமிழ் மொழியைப் பிடித்துக் கொண்ட தத்துவார்த்த பார்வை. அந்த அறையில் தவ யோகி போலவே தென்பட்டார்.

எனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்கு முன்பு, யானைப் பூச்சிகள் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தேன். குறிப்பாக யானைப் பூச்சிகள் என்ற சிறுகதையை அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்தக் கதை செம்மலரில் வெளியானது. தற்செயலாக தேனீக்களின் திவ்ய சரித்திரம் என்ற ஒரு நூல் எனக்குக் கிடைத்தது. இது 1932ம் ஆண்டில் பூச்சி சாஸ்திரி வெங்கட்ராமய்யர் என்பவரால் கோவையில் வெளியிடப்பட்ட நூல். இந்தப் புத்தகத்தில் தேனீக்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஒரு தேன் கூட்டில் பொதுவாக ஒரு ராணித் தேனீதான் இருக்கும் என்றும், ஆனால், அபூர்வமாக இரண்டு ராணித் தேனீக்கள், ஓரே கூட்டில் இருந்து தத்தம் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.

ஒற்றை அடை மட்டுமே கட்டும் சாமானியத் தேனீ ஒருவகை. இது தேனடைகளை, சொந்த மெழுகால் கட்டாமல் மண்ணையும், மரப் பிசின்களையும் சேர்த்துக் கட்டுமாம். இந்திரா காந்தியுடன் ஆரம்பத்தில் அரசியல் விளைவுகளைப் புறந் தள்ளிக் கூட்டணி வைத்த கலைஞர், எனக்கு சாமானீயத் தேனீயாகத் தோன்றினார். ஒரு காலத்தில் மலைத் தேனீயாக இருந்து, பின்னர் சமதளத்திற்கு வந்து, பயந்தாங் கொள்ளியாய்ப் போன டாமர் தேனீ வகை ஒன்றையும், பூச்சி சாஸ்திரி குறிப்பிடுவார். இது எனக்கு வீரமணி அவர்களின் திராவிடர் கழகமாகப் பட்டது. இரண்டு ராணித் தேனீக்களை நினைத்ததும், எனக்கு ஜெயலலிதா, சசிகலா நினைவு வந்ததைச் சொல்ல வேண்டியது இல்லை.

இந்த ராணித் தேனீக்கள் தமிழக நந்தவனத்தை அளவுக்கு மீறித் தேன் உறிஞ்சி எப்படிக் கெடுக்கின்றன என்பதும், சாமானியத் தேனீ, இதை எதிர்த்துப் பெரிதாகப் போராடாததையும், தமிழக நந்தவனம் அநாதையாகி விட்டதாகவும் சித்தரிக்கும் கதை அது. கலைஞர் இந்தத் தொகுப்பின் அட்டைப் படத்தை, ரசித்துப் பார்த்தார்.

எங்கள் உரையாடல். அரசியல் பக்கமாகச் சென்றது. சில அந்தரங்கமான விவகாரங்களைப் பேசினோம். அவற்றை இங்கே குறிப்பிடுவது நாகரீகமாகாது. ஆனாலும், கலைஞர் ஒரு கட்டத்தில் ‘சமுத்திரம்! நாங்க ஆளும் போது சர்க்காரியா கமிஷனில் எங்கள் மீது நாற்பத்தாறு லட்ச ரூபாய் அளவிற்கே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதுவும் நிருபிக்கப் படவில்லை. ஆனால், இப்போ கோடி கோடியாக் கொள்ளை அடிக்காங்க, ‘யாருமே கண்டுக்கவில்லையே’ என்று என்னிடம் ஆதங்கப்பட்டார்.

நான் அவரது ஆதங்கத்திற்கான காரண காரியங்களை விளக்கி விட்டு, அவருடைய நிலைமையை இப்படி எடுத்துரைத்தேன்.

‘சார், நீங்க முதல் தடவை முதலமைச்சரான போது, நான் டில்லியில் இருந்தேன். உங்களப் பதவி நீக்கம் செய்யப் போற சமயத்துலதான் சென்னைக்கு வந்தேன். உங்களோடு இருந்தவர்கள் எல்லாம், அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல் ஓடி விட்டதோடு, உங்களுக்கு எதிராகவும் செயல் பட்டதுக்கு நீங்க முரசொலியில் ஒரு கட்டுரை எழுதியதாகக் கேள்விப்பட்டேன். அதுல ‘கட்சிக்காரன் காலுக்கு செருப்பில்லாம இருக்கானேன்னு, அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுத்தால், அந்த செருப்ப வைச்சே அவன் என்ன அடித்து விட்டான்’ என்கிற மாதிரி நீங்க எழுதினதாக சொன்னாங்க உண்மையிலே நான் கண் கலங்கிட்டேன்

கலைஞர் என்னை அன்போடும், அழுத்தமாகவும் பார்த்தார். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன் என்பதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. என்னிடம் உற்ற தோழன் போல் பல்வேறு அரசியல் விவகாரங்களையும், தனி மனிதர்களைப் பற்றியும் பேசினார். இவற்றை என் மனதிற்குள் இப்போதும் அசை போடுகிறேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நானும் கலைஞரிடம் உரிமையோடு பேசினேன். பல தலைவர்களைக் கிண்டலடித்தேன்.

கலைஞர் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மெளனம் சாதிக்கக் கூடாது என்றேன். இலங்கை விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றியோ, தமிழக தலைமையைப் பற்றியோ கவலையில்லை. தமிழக அரசில் கலைஞரின் தலைமை வர வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால், ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்க மாட்டார்கள் என்று நினைவு படுத்தினேன். கலைஞரைக் கொன்று அதன் மூலம் தமிழ் ஈழம் வரும் என்றால், அவர்கள் அதற்கும் தயாராவார்கள் என்றும் வாதாடினேன். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவோம், சிங்கள ராணுவத்திடம் இருந்து மட்டும் அல்ல, விடுதலைப் புலிகளிடம் இருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் அவர் ஒரு முழக்கத்தைத் தாயகத் தமிழர்களிடையே வைக்க வேண்டும் என்று வாதாடினேன். கலைஞர், நான் தெரிவித்தவற்றை உன்னிப்பாகக் கேட்டார். மறுத்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, அவர் பதிலளிக்கவில்லை.

கலைஞரிடம் இருந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு, நான் கண்ணீர் மல்க விடை பெற்றேன். என்னுடைய மகள் திருமணத்திற்கு அவர் வர வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். அன்று வெளியூரில் இன்னொரு திருமண நிகழ்ச்சி உள்ளது என்று கலைஞர் அப்போதே தம் இயலாமையைத் தெரிவித்து விட்டார். இயலாமை என்று அவர் சொன்ன போது, புதுடில்லி தமிழ் சங்கத்தில் கலைஞர் முதல் தடவை முதல்வராக இருக்கும் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியே நினைவுக்கு வருகிறது.

பேராசிரியர் சாலை. இளந்திரையன் டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் ஒரு ‘பெரிய சமுத்திரம்’. மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். நானே மிகையானது என்கிற அளவிற்குப் பேசக் கூடியவர். ஆனாலும், டில்லியில் கறுப்புத் தமிழர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர். பிராமணர்களாலும் நேசிக்கப்பட்டவர். டில்லித் தமிழர்களுக்கு சொற்பொழிவு என்று வந்துவிட்டால், அவர்தான் அதாரிட்டி. தனிப்பட்ட முறையில் நல்லவரான இவர் தலைமையில், டில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கலந்து கொண்டார். அப்போது கலைஞர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று சொல்லி விட்டதாக சாலையார் தம் தலைமையுரையில் இடித்துரைப்பது போல் பேசினார்.

பொதுவாக, கலைஞர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும், யாராவது ஒருவருக்கு செல்லக் குட்டு வைக்கவில்லை என்றால் அவருக்கு நிறைவு இருக்காது. சாலையாருக்கு ஒரு தமிழ்க் குட்டு வைப்பதில் அவர் மகிழ்ந்திருக்க வேண்டும். இறுதியில் பேசிய கலைஞர், சாலையாரிடம் இயலாது என்று சொன்தாகவும், முடியாது என்று சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார். பின்னர், இயலாமைக்கும் முடியாமைக்கும் உள்ள வேறுபாடுகளை விலாவாரியாக விளக்கினார். இப்போது கூட நான் பிறாிடம் இந்த மாதிரிப் பேச வேண்டியது இருந்தால், இயலாது என்று சொல்வதா... முடியாது என்று சொல்வதா... என்று முன்கூட்டியே யோசிப்பது உண்டு. கலைஞரை நான் சந்தித்த ஓரிரு நாட்கள் கழித்து எனது உறவினர் தோழரும், திமுக பிரமுகருமான ஆலடி அருணா அவர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு ‘யோவ்... கலைஞர் கிட்ட யானைப்பூச்சியோ, பூனைப் பூச்சியோன்னு ஒரு கதையை கொடுத்தீராமே அது நல்லாயிருக்குன்னு கலைஞர் உங்ககிட்ட சொல்லச் சொன்னாருய்யா... அப்புறம், கலைஞர் கிட்ட சில யோசனைகள் சொன்னீராமே... அதையும் கணக்கில் எடுத்து இருக்கிறதாக உம்மக்கிட்ட சொல்லச் சொன்னாருய்யா என்று தென்பாண்டி தமிழில் தெரிவித்தார்.

ஆலடி அருணாவும், அந்த யோசனைகளைப் பற்றி தகவல் கேட்கவில்லை. நானும் தெரியப்படுத்த வில்லை. ஒரு மாபெரும் தலைவருக்கும் அவரோடு தோழமை கொண்ட ஒரு எழுத்தாளருக்கும் இடையே நடந்த உரையாடல் ரகசியத்தை மதித்தமைக்காக அவரை இப்போதும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். ஆலடி அருணா அவர்கள் நெல்லையில் கல்லூரியில் படிக்கும்போது, நான் கடையத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். அப்போதே நாங்கள் நண்பர்கள். சந்திக்கும் போதெல்லாம் கடுமையாக வாதாடிக் கொள்ளுவோம். இப்போது கூட அப்படித்தான். ஆனாலும், மனிதர் வரலாற்றுச் சான்றுகளையும், புள்ளி விவரங்களையும் அள்ளித் தந்து என்னையும் ஒரு தற்காலிக திமுகவாக மாற்றிவிடுவார்.

நான் கலைஞரை சந்தித்த சில நாட்களில் திருவான்மியூருக்கு அருகே, திமுகவின் அப்போதைய பகைக்கட்சி அலுவலகத்தில் எதற்கோ குறிவைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததாகவும், இது எல்டிடி குண்டு என்றும் கலைஞருக்கு குறி வைக்கப்பட்டது என்றும் பத்திரிகைகள் பரப்பரப்பான செய்திகளை வெளியிட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய அரசும் விடுதலைப்புலி களின் கொலைப் பட்டியலில் கலைஞரும் இருப்பதாக மாநில அரசையும், அவரையும் உஷார்ப் படுத்தியதாகக் கேள்வி.

இந்தப் பின்னணியில், கலைஞரும் முரசொலியில் அந்தக் குண்டு வெடிப்பை தன்னைக் கொல்வதற்கு குறிவைத்ததாக கருதலாம் என்ற பொருளில் எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் குறித்து நான் சுட்டி காட்டிய அணுகுமுறையையும் அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாம். அதற்குள் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை தொடுத்தது. இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்கு, விடுதலைப் புலிகளைத் தவிர வேறு நாதியில்லை . இதனால் கலைஞர் இந்த புதிய முழக்கத்தைக் கொண்டு செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். நான்கூட, அந்த தாக்குதலின் போது என்னையறியாமலே மானசீகமாக விடுதலைப் புலிகளின் பக்கமே நின்றேன்.

சட்டப் பேரவை தேர்தல்கள் நடக்கும் வரை கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்யும் நான் அரசியல் சமூக நிலவரத்தை கலைஞரிடம், தொலைபேசியில் நேரடியாகப் பேசுவேன். சண்முகநாதனிடம் எனது கருத்துக்களை கூறி அதை கலைஞரிடம் கூறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்வேன். என்னுடைய நோக்கம் எல்லாம் கலைஞர் வரவேண்டும் என்பதை விட, தமிழகத்தில் நிலவிய அராஜகமும் நிலப்பறிமுதலும் ஒருவரை முக்கியத்துவம் ஆக்குவதற்கு ஓராயிரம் பேரை பேடியாக்கும் சினிமாத்தனமும் போயாக வேண்டும் என்ற சிந்தனையே காரணம். கூடவே கலைஞர், தமிழ் சமுதாயம் மேன்பட ஆற்றியத் தொண்டும், பணியும் போனஸாக நினைவுக்கு வந்தன. இத்தகைய உரையாடல்களும், தொடர்புகளும் கலைஞருக்கும் எனக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை வலுவாக்கி விட்டன.