ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/028
சுண்ணாம்பு குத்தும் பாட்டு
(1)
மாவிலிங்கம் ஏலேலமடி ஏலம்
கட்டை வெட்டி
எண்ணிக் கைதான் கோலி வெட்டி
ஏலமுன்னு போட்டு விட்டார்;
ஏலத்தில் கொறஞ்சுதுன்னு
எண்ணிவிட்டார் நார்ட்டன்துரை;
ஏலமுன்னு கூறுங்கடா, ஏழுலாந்தர் இல்லேஎன்னு.
கம்பங்கொல்லை ஓரத்திலே காட்டுப்புறா மேயவிட்டுக்
கதவை நல்லாத் தெறந்ததனால்
காட்டுப்புறாக் கப்புதையா;
சோளக் கொல்லை ஒரத்திலே
ஜோடிப்புறா மேயவிட்டேன்
ஜோடிரெண்டும் தெறந்ததனால்
சொக்குதையா சோளத்தைத்தான்.
(2)
மலைமேலே காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை
மயிரைப் புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா நப்பறை
வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை
வெள்ளிப் பணத்துக்கு உண்டாக்க நப்பறை.
அரிவாள் கொடுவாளை இரும்பாக்க வல்லவன்;
அம்மிக் குழவியைக் கருங்கல்லாக்க வல்லவன்;
செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்;
சுவரேறிக் குதிச்சால், முடமாக்க வல்லவன்;
நண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே,
நாலாயிரம் சீலைப்பேனு மத்தளங்கள் கொட்டவே
சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே
சென்ன குன்னி ராஜா தெருவீதி வாறார்