ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இஃது வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம்.

0 நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ்
சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப
வல்லவனாய்முதன் மட்டீறொப்பெதி
ரில்லவனாயுய ரிறையோனொருவனைப்
பன்மையொழியப் பணிந்தேயிராவிருட்
டன்மையொழியத் தரணியிற்றோன்றிய
வாதவனிகரிரு ளகத்தறவன்னா
னோதியமறைநூ லோதினனாகி
யம்மெய்ப்பொருளொன் றனைவருமுணரச்
செம்மெய்ப்பொருளத் திருமறைவழங்க
வமைத்துளத்தெழுந்த வாசையுட்டுண்டிச்
சமைத்துளயாவருந் தாங்கத்தருகென
வேவியதாகவிப் பணியேற்றிநூன்
மேவியவைம்பொருள் விளக்கலுணர்ந்து
விரிவிலாத்தொன்னூல் விளக்கமெனும்பெயர்த்
தரியவாசிரிய ரருந்தமிழ்ச்சொல்லிற்
பிறநூன்முடிந்தது பெயர்த்துடன்படுத்தியும்
புறநூன்முடிந்தது பொருத்தியுந்தானொரு
வழிநூன் முடித்தனன் வாய்ப்பருமெய்ம்மறை
மொழிநூலத்தராய் முதிர்சிறப்பிணையி
லிரோமைநாட்டினின் றெய்தியமுனிவருள்
விரோதமொழி தயைமேவக
நேரமாதவத்தின் வீரமாமுனியே.

பொதுப்பாயிரம் முற்றிற்று

சிறப்புப்பாயிரம்


1. சொன்னூலடையாத் தொகைக்குணத்தொன்றா
முன்னூறந்த முதல்வனைப்போற்றி
நன்னூலாய்ந்தோர் நவின்றவைம்பொருட்
டொன்னூல்விளக்கமுன் சொற்றுதுமெழுத்தே.

முதலாவது - எழுத்ததிகாரம்

1.1 முதலாவதெழுத்தியல்


2. தோற்றமும்வகுப்புந் தோன்றும்விகாரமுஞ்
சாற்றுளித்தோன்றுந் தானெழுத்தியல்பே.
3. உயிரிடை யினமிடறுரம்வலியுச் சிமெலியியை
முதலிட மாயிதழ் மூக்கணம்பன்னா
வைந்துணையிடத்தா மக்கரப்பிறப்பே.

முதலாவதெழுத்தின் றோற்றம் - முற்றிற்று

1.2 இரண்டாவதெழுத்தின் வகுப்பு

4. முதல்சார்புயிரே மூவினமெய்யே
முதற்கண்ணெழுத்தே மொழியீற்றெழுத்தே
யுயிர்மெய்குறி னெடிலோடுமாய்த
மாறுகுறுக்க மளபெடையிரண்டு
மாத்திரைப்புணர்பென வகைப்படுமெழுத்தே.
5. முதலெழுத்துயி ரீராறுடன்மூவாறே
சார்பெழுத் துயிர்மெய் தனியாய்தத்தோ
டஃகிய இ, உ, ஐ, ஔ மவ்வாய்த
முயிரளபொற்றள பொருபஃதென்ப.
6. எ, ஒவ்வும் றனழவ்வுமென்றைம்முதலு
முயிர்மெய்யுயிரள பொழியெண்சார்பு
மந்தமிழ்க்குரிய வாரியமும்பிறவே.
7. இடுகுறிகாரண மிவைபொதுச் சிறப்பென
வீரிரண்டாகு மெழுத்தின்பெயரே.
8. அம்முதலீராறுயிர் கம்முதன்மூவாறுடல்
குறில் அ, இ, உ, எ, ஒவ்வைந்தேநெடில்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ வேழே.
9. வலி க ச ட த ப ற மெலி ங ஞ ண ந ம ன
இடை ய ர ல வ ழ ள வெனமூவினமே.
10. உயிர் க ச த ப ஞ ந ம வ ய முதற்கே
எ, ஒ, ஔ வு மெல்லினஙவ்வு
நீத்துயிர் ண ம ன விடையினமீறே.
11. உயிரேமெய்யணைந் துயிர்மெய்யாகு
மவையிரு நூற்றொருபத்தா றென்ப.
12. நீட்டல் சுழித்தல்
குறின்மெய்க் கிருபுள்ளி.
13. ஆய்தங் குறில் வலிக்காகு நடுவே
யஃ தீற்று ல ளத்திருந்துளி யஃகும்.
14. யம்முதலிய்யா மிருகுறளுக்கெடி
லஃகுமற்றா மசைச்சொன்மியாவே.
15. தனிக்குறிலல்லவற் றிருதிவன்மை
யூர்ந்துளிக்குறுகு முகரமென்ப
தொடருயிருக்குறடுடைத் துணும்யவ்வரின்
உ, இ யாஞ்சில முற்றுகரமு மற்றே.
16. ஐத்தனித்தள பெடுத்தன்றி மூவிடத்து
மௌவு முதலிடத்தஃகுமென்ப
17. மகரம் ல ளக்கீழ்
வம்மேற் குறுகும்.
18. உயிர்நெடி லினக்குறி லுற்றள பெடுக்கு
மொற்றள பெழும்வே றுற்றுக்குறிற்கீ
ழியைந்து ர ழ வொழியிடை மெலியாய்தம்.
19. கண்ணிமை கைந்நொடி காட்டுமாத்திரையி
லஃகிய்மவ்வு மாய்தமுங்காலே
உ இக்குறளொற் றாய்தமரையே
குறிலே ஐ ஔக்குற ளொற்றள பொன்றே
நெடிலிரண் டுயிரளபொரு மூன்றென்ப.
20. முதலீற்றுயிரிரு மொழியே சேர்புளி
இ ஈ எ ஐயீறியையும் யவ்வே
மற்றையுயிர்க்கீழ் வகரம்புணரும்.

இரண்டாவதெழுத்தின் வகுப்பு - முற்றிற்று

1.3 மூன்றாவதெழுத்தின் விகாரம்
21. திரிபழி வாக்கந்
திரட்டுநால் விகாரம்
22. அல்வழி வேற்றுமை யாமிரண்டவற்றுள்
விரியினு முருபெடா வினைசார் பெயரே
யல்வழிப் பொருட்பெய ராகுமென்ப
வேற்றுரு பில்லது விரிக்குங் காலை
வேற்றுமைக் கொளினது வேற்றுமைப் பொருளே.
23. வலிவரின் மஃகான் வருக்கமாகு
நவ்வரின் றனிக்குறின் மவ்வுநவ்வா
மவ்வழியன்றி மகரங் கெடுமே.
24. ண ன முன்தகரம் ட ற வாமுறையே
ண ன வல்வழிக்கென்று மியல்பாம்
வேற்றுமைப்பொருட்கவை வலிவரின் ட ற வாம்
ண ன முன்குறில்வழி நகரம் ண ன வா
மற்றது ண ன முன்மாய்ந்து கெடுமே.
25. தேனெனுமொழிமெய் சேரிருவழியுந்
தானியல்பாமெலிவரின் றன்னீற்றழிவும்
வலிவரினீறுபோய் வலிமெலிமிகலுமா
மின்பின்னுவ்வுறில் வன்மையுமிகுமே
யென்றன்வலிவரி னியல்புந் திரிபுமா
நின்னென்றுமியல்பாய் நிற்குமென்ப
வூன்குயினியல்பா முற்றவேற்றுமைக்கு
மெகின்மரமல்லதே விருவழியியல்பு
மவ்வுறிவலிவரின் வலிமெலிமிகலுமாம்.
26. லளவேற்றுமையிற் றடவுமல்வழி
யவற்றோடுறழ்வும் வலிவரிந்தவ்வரி
னியல்புந்திரிந்தபின் கெடுதலுமாகும்
லளத்தனிக்குறிற்கீ ழல்வழித்தவ்வரின்
றிரிந்தொழிந்தாய்தஞ் சேருமென்ப
லளமுன்மெலிவரி னிருவழினணவா
மவற்றுணத்திரிந் தழிவாந்தனிக்குறி
னண்ணியலளமுன் நவ்வுனணவாம்.
27. சஞயவரின் ஐஅ ச்சமமெனத்திரியும்.
28. அடைமொழிஉக்குறள் ஐயாதலுமாம்.
29. தெவ்வென்பதிருவழி உவ்வெய்திச்சேரும்
வலிமிகுமவ்வரின் வவ்வுமவ்வாமென்ப.
30. யரழமுன்வலிவரினல் வழிக்கியல்பு
மடைமொழிக்காக்கமு மவைவேற்றுமைக்கண்
மிகலுந்தன்னின மெலியெய்தலுமாம்.
31. சிலபலதம்மொடு சேர்புளியியல்பு
முதன்மெய்க்கடைமெய் மிகலுமீறுபோய்
லறவ்வாதலும் லாவாதலுமாம்
பிறவரினகர நிற்றலுங் கெடலுமாம்.
32. ஆமாவல்வழி ஆவீறுமுற்று
மியாவிவைமுன்வலி மிகாதியல்பாகும்.
33. தனிக்குறிலீற்றாத் தகும்பெயர்செய்யுட்கே
ஆஅவ்வாத லுமதனோ டுவ்வணையலுமாம்.
34. தமிழ்வேற்றுமைக் கச்சாரவும்பெறுமே.
35. தனிவழிஐயுந் தனிக்குறில்யவ்வுந்
துவ்வுநொவ்வுந் தொடர்மெலிமிகுமே.
36. தனிக்குறின்மெய்யுயிர் சார்புளிமிகும்ரழத்
தனிக்குறிற்சாரா தாமுமிகாவென்ப.
37. மெலிவுறிற்பாவிடை மென்மைவன்மை
குறுமைநீட்சி குறுந்தொகைவிரிவே
மற்றொருமொழிமூ வழிகுறைதலுமென
வேண்டுளித்தனிமொழி விகாரமொன்பதே.
38. இருமொழி யொருமொழி யெனச்சங்கீர்தமாய்
நிலைமொழியீற்றுயிர் நீங்கலுமதனோ
டணைமொழிமுதற்கண் அ ஆவாதலும்
இ ஈ ஏ யாதலும் உ ஒ வாதலுமாம்.
39. ஈறுபோயிடை யாவேற்றிரட்டிய
சொல்லேமிகுதி தோற்றுமென்ப
விலக்கணமின்றி யியைந்துளபிறவே.
40. உயிரேகுறினெடி லொற்றுமூவின
முயிர்மெய்யாய்த மோரறுகுறுக்க
மளபெடைமாத்திரைப் புணர்பெனவகுத்து
ணநமனலளதவு நண்ணுந் திரிபல
தேனைதிரியா தியல்பாமென்ன
விவண்விளக்கிய வெழுத்தினியல்பே.

2. இரண்டாவது - சொல்லதிகாரம்


2.1 முதலோத்துச் சொற்பொதுவியல்

41. முச்சயத்தொழிற்கொடு முச்சகந்தனித்தா
ளச்சயனடிபணிந் தறைகுசொல்விளக்கே.
42. எச்சொல்லும் பெயர்வினை யிடையுரியெனநான்
கிவற்றுட்பொதுவென வியற்சொற்றிரிசொ
லொருமொழிதொடர்மொழி யொருவிலாப்பொதுமொழி
பகாப்பதமென்றா பகுபதமென்றா
வாகுபெய ரிருதிணையைம் பான்மூவிடஞ்
சாரியையெனப்பொது தகுதியீராறே.
43. இயற்சொல்லென்ப தியல்பிற்றிரிபிலா
தானெளிதெவர்க்குந் தன்பொருள்விளக்கலே.
44. திரிசொல்லொருபொருட் டெரிபலசொல்லும்
பலபொருட்கொருசொல்லும் பயன்படற்குரியன.
45. ஒருமொழியொன்றையும் பலவையுந்தொடர்மொழி
பொதுவவ்விரண்டையும் புகலுந்தன்மைய
தொகைதொகாவென விருதொடர்மொழியென்ப.
46. பகாப்பதமென்ப பயனாற்குறியாற்
பகாதொன்றாகிப் பகுப்பிற்பயனிலா
நிகழ்ந்தியல்கின்ற நால்வகைச்சொல்லே.
47. பகுபதமொன்றாய்ப் பலவொருங்குணர்த்திப்
பொழுதுகொள்வினையும் பொருளிடங்காலஞ்
சினைகுணந்தொழிலாறுஞ் சேர்ந்தபெயருமாம்.
48. "உயிர்மவிலாறுந் தபநவிலைந்துங்
கவசவினாலும் யவ்விலொன்று
மாகுநெடினொதுவாங் குறிலிரண்டோ
டோரெழுத்தியல் பதமாறேழ்சிறப்பின
பகாப்பதமேழும் பகுபதமொன்பது
மெழுத்தீறாகத் தொடருமென்ப."
49. ஆகுபெயரென்ப தவ்வவமுதற்சினை
கருவிகாரியம் பண்பிவற் றொன்றன்பெயர்
பிறிதொன்றற்குரைக்கும் பெற்றிதானே.
50. திணையிரண்டென மக்கடேவர்நரக
ராவருயர்திணை யஃறிணைபிறவே
பாலைந்தாண்பெண் பலருயர்திணையே
யன்றியுமொன்று பலவஃறிணையென்ப.
51. மூவிடந்தன்மை முன்னிலைபடர்க்கை
தன்மையாகு நான்யான்நாம்யா
முன்னிலைநீநீயிர் நீவிர்நீரெல்லீ
ரேனையபடர்க்கை யெல்லாம்பொதுவே
யானானீதா னொருமையாநாநீர்நீவி
ரெல்லீர்நீயீர்தர மெல்லாம்பன்மை.
52. சாரியையென்ப சார்பத்மெழுத்தெனப்
பதத்தொடுவிகுதியும் பதமுமுருபும்
புணர்புளியிடையிற் புணர்வனவவற்றுள்
அ எ உ ஐ குன் அன்னானின்ன
லற்றிற்றத்தந் தம்நம்நும்மெனப்
பதினேழன்றிப் பிறவுமாம்பொதுச்
சாரியையவற்றோர் வழியன்றாகும்விகற்டடூ

முதலோத்துச் சொற்பொதுவியல் - முற்றிற்று

2.2 இரண்டாமோத்துப்பெயர்

2.2.1 முதலாவது - வேற்றுமையியல்

53. பெயரேவேற்றுமை பெற்றிடம்பாறிணை
காட்டித்தொழிலல காலங்காட்டா
மரபுகாரண மாக்கங்குறியென்
றவைநாற்றகுதி யாகுமென்ப.
54. காரணமில்லன மரபுபெயரே
காரணங்காட்டிக் காரணப்பயன்கொளல்
காரணப்பெயரே காரணங்காட்டா
ததன்பயன்கொள்வ தாகுபெயரே
காரணங்காட்டினுங் காரணப்பயன்கொளா
விடுகுறிப்பெயரா மென்பகற்றோரே.
55. வேற்றுமைப்படுத்தலின் வேற்றுமையாமிவை
பெயர்ஐஆல்குஇன் அதுகண்விளியெட்டே.
56. எழுவாயுருபா மியல்பிற்பெயரே
மீண்டதன்பொருளாம் வினைபெயர்வினாவே.
57. "இரண்டாவதனுரு பையேயதன்பொரு
ளாக்கலழித்த லடைதனீத்த
லொத்தலுடைமை யாதியாகும்."
58. "மூன்றாவதனுரு பாலானோடொடு
கருவிகருத்தா வுடனிகழ்வதன்பொருள்."
59. "நான்காவதற்குரு பாகுங்குவ்வே
கொடைபகைநோச்சி தகவதுவாதல்
பொருட்டுமுறையாதியி னிதற்கிதெனல்பொருளே."
60. "ஐந்தாவதனுரு பில்லுமின்னு
நீங்கலொப்பெல்லை யேதுப்பொருளே."
61. ஆறனொருமைக் கதுவுமாதுவும்
பன்மைக்கவ்வு முருபாம்பண்புறுப்
பொன்றன்கூட்டம் பலவினீட்டந்
திரிபினாக்கஞ்சேர்ந்த தற்கிழமையும்
பிறிதின்கிழமையும் பேணுதல்பொருளே.
[நன்னூல் 300-ம் சூத்திரத்தைக்காண்க.]
62. "எழனுருபு கண்ணாதியாகும்
பொருண்முதலாறு மோரிருகிழமையி
னிடனாய்நிற்றலி னிதன்பொருளென்ப."
63. அதனோடைம்முத லாறுமேற்கும்.
64. ஐஆன்குச்செய் யுட்கவ்வுமாகு
மாகாவஃறிணைக் கானல்லாத.
65. உவ்வீறுவினாச்சுட் டெண்ணிவைவேற்றுமை
வழியன்சாரியை மருவவும்பெருமே
யற்றுறும்பன்மையாம் வினாச்சுட்டென்ப
வவ்விறுமஃறிணைப் பன்மைக்கற்றே.
66. "எல்லாமென்ப திழிதிணையாயி
னற்றோடுருபின் மேலும்முறுமே
யன்றேனம்மிடை யடைந்தற்றாகு
மெல்லாருமெல்லீரு மென்பவற்றும்மை
தள்ளிநிரலே தம்நும்சாரப்
புல்லுமுருபின் பின்னரும்மே."
67. "ஆமாகோனவ் வணையவும்பெறுமே."
68. "தான் தாம் நாமுதல் குறுகும்யான்யாம்
நீ நீர் என் எந் நின் நும் ஆம் பிற
குவ்வின் அவ்வரு நான்காறிரட்டா."
69. "எட்டனுருபே யெய்துபெயரீற்றின்
றிரிபுகுன்றன் மிகுதலியல்பயற்
றிருபுமாம்பொருள் படர்க்கையோரைத்
தன்முகமாகத் தானழைப்பதுவே."
70. எப்பெயர்க்கண்ணு மியல்புமேயு
மிகரநீட்சியு முருபாமன்னே.
71. "ஐயிறுபொதுப்பெயர்க் காயுமாவு
முருபாமல்லவற் றாயுமாகும்."
72. "ஒருசார்னவ்விற் னுயர்திணைப் பெயர்க்கண்
ணளபீறழிவய னீட்சியதனோ
டீறுபோதலவற் றோடோவுற
லீறழிந்தோவர லிறுதியவ்வாத
லதனோடயறிரிந் தேயுறலீறழிந்
தயலேயாதலும் விளியுருபாகும்."
73. "ளஃகானுயர்பெயர்க் களபீறழிவய
னீட்சியிறுதி யவ்வொற்றாத
லயலிலகரமே யாதலும்விளித்தனு."
74. "ரவ்வீற்றுயர்பெயர்க் களபெழலீற்றய
லகரம் இ ஈ யாதலாண்டை
ஆ ஈ யாத லதனோடேயுற
லீற்றேமிக்கயல் யாக்கெட்டதனய
னீடலீருற விவையுமீண்டுருபே."
75. "லகாரவீற்றுயர்பெயர்க் களபயனீட்சியும்
யகாரவீற்றிற்கள புமாமுருபே."
76. "னவ்வீற்றுயர்திணை யல்லிருபெயர்க்கண்
ணிறுதியழிவத னோடயனீட்சி."
77. "லளவீற்றஃறிணைப் பெயர்ப்பொதுப்பெயர்க்கண்
ணீற்றயனீட்சியு முருபாகும்மே."
78. "அண்மையினியல்புமீ றழிவுஞ்சேய்மையி
னளபும்புலம்பி னோவுமாகும்."
79. பலர்பால்ரவ்வுங் கள்ளுமீறுமே.
80. ஒன்றுதுவ்வுறின் அ ன ஐயும்
பலவின்பாலீறுங் கள்ளீறுமற்றவை
யன்றியுமிருமைக் கஃறிணைப்பொதுவே.
81. "ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையு
மோரிடம் பிறவிடந் தழுவலு முளவே."
82. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுணர்ந்தோர்
செப்பின ரப்படி செப்புதன் மரபே."

முதலாவது - வேற்றுமையியல் - முற்றிற்று


2.2.2 இரண்டாவது -- பகுபதப்பெயரியல்

83. பகுபத மொன்றாய்ப் பலவொருங் குணர்த்திற்
பகாப்பத மவற்றுட் பகுதி யென்ப.
84. அன்ஆன் அள்ஆள் அர்ஆர் துஐ
அபிற வுமைம்பாற் பெயர்ப்பகு பதவி குதியே.
85. ந ஞ விடைப் பகுபத நண்ணலு நெறியே.
86. வடநடைப் பகுபதம் வரமொழி முதற்கண்
இ ஏ யென ஐ ஔவும் உ ஒ வென ஔவும்
அவ்வென ஆவுமாம் ஐயிறி னீறுபோய்
எயனீட் டீன்ற வெச்சமா முளபிற.
87. எதிர்மறைப் பகுபதத் தியைந்த மொழிமுதல்
லொற்றெனி லவ்வு முயிரெனி லன்னு
மிருமைக் காநிரு வெனவட நடையே.

இரண்டாவது - பகுபதப்பெயரியல் - முற்றிற்று

2.2.3 மூன்றாவது - தொகைநிலைத்தொடர்மொழிப் பெயரியல்

88. தொகைநிலை யென்ப தொடரும் பெயரொடு
வினைபெயர் புணர்புளி வேற்றுமை முதலொழித்
தொருமொழி போற்பல வொன்றிய நெறியே.
89. தொகைநிலை வகைப்படின் றொகும்வேற் றுமைவினை
யுவமை பண்பும் மையோ டன்மொழி யாறே.
90. தொகைநிலை விரித்துச் சொல்லுங் காலெழு
வகைநிலை யளவும் வகுக்கப் படுமே.
91. தொகுபெயர் வேற்றுமைத் தொடர்பெய ரன்ன
வியற்றிரி பழிவாக்க மியைந் தாந்தொகையே.
92. ஐயிறுங் குணப்பெய ரஃகியீ றொழித
லீறுபோ யுகர மிடையிலி யாத
லாதிநீ டலடிய கரமை யாத
றன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரித
லினமிக லினையவும் பண்பிற் கியல்பே.
93. "அடைசினை முதன்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய லீரடை
சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே."
94. ஓரொரு வீரிரு மும் மூ நாலை யைம்
மாறறு வேழெழு வெண்ணென வியிருட
வியைமுறைக் காரு மெண்ணின் றொகையே.
95. "ஒன்றுமு தலீரைந் தாயிரங் கோடி
யெண்ணிறை யளவும் பிறவரிற் பத்தி
னீற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்று
மேற்ப தேற்கு மொன்பது மினைத்தே."
96. ஒன்று முதலெட் டளவூர்ந் தபத்தொற்
றொழிதலு மாய்த முறழ்தலு மாம்பல
வொன்றுட னானா மொன்பது மிற்றே.
97. 'ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின்'
முன்னது குறுகிமற் றோட 'வுயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.'
98. அளவின் றொகையா யளவொடு தொக்கியை
கலங்கலனாகி யேயு மிகுமே
யுரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகர முரியின் வழியே
யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே.
99. "திசையொடு திசையும் பிறவுஞ் சேரி
னிலையீற் றுயிர்மெய் கவ்வொடு நீங்கலும்
றஃகா னலவாய்த் திரிதலு மாம்பிற."

மூன்றாவது - தொகைநிலை தொடர்மொழிப் பெயரியன் - முற்றிற்று

2.2.4 நான்காவது - சுட்டுவினா

100. அ இ உம்முதல வைம்பாற் சுட்டே
யொன்றன் பாலவை யாய்த மிடையெனவும்
பலவின் பாலவை வவ்வீற் றனவுமா
மிவைகீழ் மூவின மியைபுளி முறையே
யாய்த மெலியியல் பாகுமென்ப.
101. தொடர் அ இ உச் சுட்டெழுத் தென்ப
வவைவந் தணைய வனைத்துமெய் யிரட்டு
முயிர்வரி னிருவவ் விடைவரலு ரித்தா
மெகர வினாவு மிந்நடை யுடைத்தே.
102. "எயா முதலும் ஆ ஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே
யெவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்."

நான்காவது - சுட்டுவினா - முற்றிற்று
இரண்டாமோத்துப் பெயர் - முற்றிற்று.

2.3 மூன்றாமோத்துவினைச் சொல்லியல்

103. வினைமுற் றொருமூன் றெச்ச மிரண்டு
வினைகுறிப் பெனவிவை வினையின் வகுப்பே.
104. பெயரே யேற்றிமற் றொன்றனை வேண்டா
தேற்பது வினைவினைக் குறிப்பு முற்றே.

2.3.1 முதலாவது - முக்காலமுற்றுவினை

105. பொழுது கொள்வினை வினைப்பகு பதமே
பகுதி யேவ லெனும்பகாப் பதமாகும்
என்ஏன் எம்ஏம் ஒம்அம் ஆம்தன்மை
ஐஆய்இ இர்ஈர் முன்னிலை அன்ஆன்
அள்ஆள் அர்ஆர் உஅ படர்க்கை
வினையின் விகுதி மீண்டுள பிறவுங்
கள்ளெனப் பலவொழி பன்மையின் மிகலுமாம்.
106. "அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும்
உம்மூர் கடதற விருபா லாரையுந்
தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை."
107. செய்யுமென் முற்றே சேரும் பலரொழி
மற்றைப் படர்க்கையு மற்றத னீற்றய
லுயிரு முயிர்மெய்யு மொழிந்தே யஃகலும்
பலவின்பாற் கள்ளெனப் பற்றி மிகலுமாம்.
108. இறந்த காலத் திடைநிலை தடறவொற்
றின்னே மூவிடத் தைம்பாற் கேற்பன.
109. நிகழ்பொழு தாநின்று கின்று கிறுவென
வைம்பான் மூவிடத் தாமிடை நிலையே.
110. எதிர்வருங் காலத் திடைநிலை பவ்வ
வைம்பான் மூவிடத் தாமிவை சிலவில.
111. எதிர்கால விகுதியு ளொருமைத் தன்மை
குடுதுறு வென்னுங் குற்றிய லுகரமோ
டல்லன் னென்னே னாமெண் ணீறே
பலர்பாற் காகும் பமார் மருமனார்.
112. எதிர்மறைக் கிடைநிலை யின்றிஎன் எம்ஓம்
ஆய்ஈர் ஆன்ஆள் ஆர்ஆ ஆது அ
வைம்பான் மூவிடத் தாகு மென்ப.

2.3.2 இரண்டாவது - ஏவல்வியங்கோள்

113. ஏவ லொருமைக் கியலு மாய்திமோ
வேவற் பன்மைக் கீர்தீர் மின்மினீ
ரிருமைக் கோரோவிடத் தாகுங் குவ்வே.
114. எதிர்மறை யேவற் கேலே அல்லே
அன்மோ அற்க வாகு மொருமை
ஆமின் அன்மின் அற்பீர் பன்மை.
115. "ஈதா கொடுவெனு மூன்ற்று முறையே
யிழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை."
116. வியங்கோ ளியலும் விகுதிக் கவ்விய
யவ்வொடு ரவ்வொற்று மிவையெங்கு மேற்பன
"வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
யேகலு முரித்தஃ தேகினு மியல்பே."

2.3.3 மூன்றாவது - ஈரெச்சம்

117. எச்சமே தொழில்பொழு தென்றிவை தோன்றி
யிடம்பா றொன்றா தெஞ்சிய வினையென
விவற்றுட் பெயர்சேர்ந் தியலும் பெயரெச்சம்
வினையொடு புணர்வது வினையெச் சம்மே.
118. உம்மீற்ற வெச்சத் தீறு மீற்றய
லுயிரு முயிர்மெய்யு மொழிதலாஞ் செய்யுட்
கும்முந் தாதலு மொக்கு மென்ப.
119. வினையெச் சங்கொள் விகுதி இ உ
உவ்வோ டெனவும் ஊபுஆ விறப்பே
அஇரு கருத்தா வணையி னிகழ்வே
யொருகருத் தாவு மோரிடத் திரண்டு
மியைஅ வன்றி இல்இன் இயஇயர்
வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற.
120. எனவொழித் தொழிந்த விறப்பெச் சத்தும்
வான்பான் பாக்கென வருமூன் றற்கு
மேற்கு மொருகருத்தா விரண்டும் பிறவே.
121. எதிர்மறை யெச்சத் தியலும் விகுதி
யாமலா தாமை யாவென நான்கே.
122. வால்தரல் மூவிட மருவுதற் குரிய
செலல் கொடை சேரும் படர்க்கை யொன்றே.

மூன்றாவது - ஈரெச்சம் - முற்றிற்று

2.3.4 நான்காவது - வினைக்குறிப்பு

123. வினைக்குறிப் பென்ப வினைபோல விகுதி
பெற்றிடம் பாற்கும் பெயர்ப்பகு பதமே.
124. வினைக்குறிப் பொன்றன்பால் விகுதி துவ்விஃதே
வலிமிகத் துறுடுவாம் ஐர யவ்வுமல்
வின்னு மளவு முறையீற்ற பெயர்க்கே
அவ்விறு மெல்லாம் பலவின் பாற்கே.
125. வினைக்குறிப் பெஞ்சி யீற்றகரம் பொதுவே.
126. அன்மை வினைக்குறிப் பணையுந் திரிபொரு
ளன்றுமே லதுவறி னான்றாந் தூக்கி
னின்றி யன்றி யென்றெஞ்சும் இயாப்பி
னுவ்வு மாமாயி னுறுவலி யியல்பே.
127. வழுவா முரிமை மயங்கிக் கெடினவை
யிடம்பா றிணைபொழு திறைவினா மரபேழே.
128. ஐயந் திணைபா லணையும் பொதுவே.
129. சிறப்பணி நடையாற் றிணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணுத னெறியே.

நான்காவது - வினைக்குறிப்பு - முற்றிற்று
மூன்றாமோத்து வினைச்சொல்லியல் - முற்றிற்று

2.4 நான்காமோத்து இடைச்சொல்லியல்

130. இடைச்சொற் றனிநிலை யின்றி முன்பின்
வினைபெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை
வினையொப் புருபுகளும் விளங்குதம் பொருளவு
மிசைநிறைப் பனவு மசைநிறைப் பனவுங்
குறிப்பு மெனவெண் கூற்றவை யென்ப.
131. ஏயென் னிடைச்சொல் லீற்றசை தேற்றமெண்
வினாப்பிரி நிலையிசை நிறையென வாறே.
132. ஓபிரிப் பசைநிலை யொழிவெதிர் மறைவினாத்
தெளிவு கழிவு சிறப்பென வெட்டே.
133. எனவென்ப துவமை யெண்குணம் வினைபெய
ரிசைக்குறிப் பியலு மென்று மினைத்தே.
134. உம்மையே யெதிர்மறை யெச்சமுற் றளவை
சிறப்பைய மாக்கந் தெளிவென வெட்டே.
135. வரைப்படு மெண்ணும் வையகத் தில்லவும்
வினைப்படி னும்மை வேண்டுஞ் செவ்வெண்
ணீற்றின் வேண்டு மெச்ச வும்மையே.
136. எண்வகை யெட்டனுள் ஏசெவ்வெண் ணென்றா
எனாநான்குந் தொகைபெறு மெனவொடு வும்மை
நான்குந் தொகாமை நடக்கவும் பெறுமே
யென்றென வொடுமூன்று மெஞ்சிடத் தனவுமாம்.
137. அத்தந்தி லன்றம்ம வாங்கரோ வாமா
விட்டிகுங் குரைகா விருந்தின் றோருஞ்
சின்றந் தானின் றுதில்பிற பிறக்கு
மன்மா மன்னோ மாதுயா மாதோ
போலும் போமெனப் பொதுவசை முப்பதே
யித்தை யத்தை யாழிக மதிமானார்
மோமியா வாழிய முன்னிலை யசைபத்தே.

நான்காமோத்து இடைச்சொல்லியல் - முற்றிற்று

2.5 ஐந்தாமோத்து உரிச்சொல்லியல்

138. உரிச்சொல் லென்ப வுரியபற் குணசொல்
லாகிப் பெயர்வினை யணைந்து வருமே.
139. அறிவரு ளாசை யச்ச மான
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மைய
னினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துனிவழுக் காறன் பெளிமை யெய்த்த
றுன்ப மின்ப மிளைமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமத
மறவியினைய வுடல்கொ ளுயிர்க் குணந்
துய்த்தறுஞ்ச றொழுத லணித லுய்த்திலாதி
யுடலுயிர்த் தொழிற் குணம்.
140. பல்வகை வடிவிரு நாற்றமை வண்ண
மறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம்.
141. தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்க
னீங்க லடைத னடுங்க லிசைத்த
லீத லின்னன விருபொருட் டொழிற்குணம்.
142. இருதினை மூவிட நான்மொழி யைம்பா
லறுதொகை யெழுவழு வுருபுக ளெட்டே
தொகாநிலை யொன்பது தொகைநிலை யாறு
முப்பொழு திருசொல் லாகு பெயரே
பகுபதஞ் சுட்டு வினாவே வினையின்
மூவகை முற்று மிருவகை யெச்சமும்
வினைக்குறிப் பிடையுரி விதித்திவை முத்தமிழ்
மொழி யெனத் தெளிந்த முன்னோர்
வழியிவண் விளக்கிய வண்சொற் றொகையே.

ஐந்தாமோத்து உரிச்சொல்லியன் - முற்றிற்று
இரண்டாவது - சொல்லதிகாரம் முற்றிற்று

3. மூன்றாவது பொருளதிகாரம்


143. மெய்ப்பொருள் பகாப்பொருள் வேத முதற்பொரு
ளப்பொரு ளகத்தணிந் தறைகுவல் பொருளே.
144. பொருணூ லென்பது புகல்பொரு ணுதலிய
வுரிப்பயன் படுத்துமா றுணர்த்து நூலே.
145. வழக்குத் தேற்றந் தோற்ற மெனவிம்
மூவகைப் படுமா மொழியும் பொருளே.
146. நீதி வழங்கலு நிலைபெறத் துணிதலுந்
தீதென நன்றெனத் தெளிதலு மிவைவழக்
காதி முப்பொருட் காகும் பயனே.

3.1 முதலாமோத்து - பதிகம்

147. பதிகங் காரணம் பாவு தொகைதுணி
வைந்து மெலாப்பொருட் காம்பொது வழியே.
148. தெய்வ வணக்கமுஞ் செய்பொருட் டொகையுந்
செப்புவ தாகுஞ் சிறப்புப் பாயிரம்.
149. பாயிரத் துப்பொருள் பகரிற் கேட்பார்க்
கிணக்க மாசை யியையவும் பொருட்டெளி
வுரிமை தோன்றவு முரைப்பது நெறியே.

3.2 இரண்டாவது - காரணம்

150. காரண வழியெனக் காட்டுரைப் பொருட்குரி
யகத்திணை புறத்திணை யாமிரு வகைத்தே.
151. அகத்திணை யியல்பே யறைபடும் வகையே
பொதுச்சிறப் புவமை புறநிலை யெதிர்நிலை
கருவி காரியங் காரக முன்னவை
பின்னவை யெனவாம் பிரிவீ ராறே.
152. அவற்றுள்,
இயல்புரைத் தொப்ப வியம்புத லியல்பே,
153. தொகைவிரித் துரைத்தல் சொற்பொருள் வகையே.
154. பொதுவெனப் பலவை யடக்கு மொன்றே
சிறப்பென வொன்றி னடங்கும் பலவே.
155. உவமை யெனப்பிறி தொப்ப வுரைத்தலே.
156. புறநிலை யொப்பிழி வாக்கமென மூன்றே.
157. குறித்தவை காட்ட மறுத்தவை காட்டி
யெதிரில் விளக்க லெதிர்நிலை யென்ப.
158. காரண நான்குங் காரிய நான்கும்
விரித்துத் தன்பொருள் விளக்க லுரித்தே.
159. காரக மென்ப கருத்தா கருமங்
கருவி கருத்திடங் காலந் திறனேழே.
160. முன்னவை பின்னவை முன்பின் னடநதன
பன்னித் தன்பொருள் பயன்படப் பகர்தலே.
161. புறத்திணை யொழுக்கநூல் புறக்கரி மூன்றே.

3.3 மூன்றாவது - விரிவு

162. விரிவென வணிவழி விரித்த தன்பொரு
டெரியவைக் கட்செலச் செப்புத லென்ப.

3.4 நான்காவது - தொகையுந்துணிவும்

163. ஒருங்கு முன்விரித் துரைத்தவை மீண்டு
சுருங்கக் காட்ட றொகை யென்றாகும்.
164. பன்மனந் துணியவுட் படுத்த றுணிவாந்
துன்னிய வணித்தொகைத் துணிவிற் குரித்தே.

3.5. ஐந்தாவது - உரிமை

165. எப்பொரு ளெவ்வழி யியம்பினு மதற்கதற்
குரிய வுரைப்ப துரிமையாங் கால
மிடம் பண்பொழுக்கிறை யெனவைங் கூற்றே.

காலவுரிமை
166. காலமே பருவம் பொழுதென விரண்டாய்ப்
பருவங் கார்கூதிர் பனிமுன்பின் வசந்த
மெரிமுதிர் வேனி லென்றிரு மூன்றே.
167. கார்காலத் துரிமை கார்க்கா லுருட்டிய
வாடையே கோப மயிலே கேகயங்
கோடல் செங்காந்தள் கொன்றை கூதாளந்
தண்டிமி லுயவை தளவு கடம்பஞ்சனி
வெண்குருந் தலர்தலே வியங்கங் கிளிகுயி
னீங்கலே நீர்மல ரேங்க லென்ப.
168. கூதிர்க் குரிமை கூதிரே குருகே
வோதிமங் குரண்ட மொண்மாதிச் சகோர
முதுவளை ஞண்டூ ருநத்து வத்த
னீரே தெளீத னீர்மீன் சனித்தல்
காரே சூற்கொளல் பாரிசா தஞ்சந்
தாராம் பித்திகை மந்தார நாணன்
முற்றலர்ந் துவத்தலே மற்றுயிர் நைதலே,
169. முன்பனிக் குரிமை துன்பனிக் கடறருங்
கொண்டல் வீசலுங் கூண்டசை சிதகன்
மண்டிருட் கூகைகூன் மனமகிழ்ந் தொலித்தலு
மாந்தருச் சாமந்த மல்ர்தலு மிலந்தை
தீங்கனி யுதிர்த்தலுந் தீயெனக் குன்றி
காய்ந்தலு நெல்லொடு கரும்பு முற்றலுமாம்.
170. பின்பனிக் குரிமை பேசுங் காலை
யுலவை வீசலை யுளபல புறவினம்
வலிது கூய்க்கான வாரணங் களித்தலே
கோங்கில வலர்தலே குரவ நெடும்பனை
171. தீங்கனி யுதவலே சிதப்பரி வெடித்தலே.
வசந்தத் துரிமை வசந்தற் றேரெனுந்
தென்றலே வண்டினஞ் சிறுகிளி பூவை
யன்றிலே குயிலிவை யகமகிழ்ந் தார்த்தலே
மாங்கனி யுதிர்தலே தேங்கய மலரொடு
வகுளந் தாழை வழைசெண் பகம்பிற
முகிழினி தவிழ்த்தலே முன்கா ரிடைக்களி
மிகுவன் மயின்முதன் மெலிதலே யென்ப.
172. வேனிற் குரிமை கானிற் றூசெழக்
கோடையே வீசக் குறுகப் பேய்த்தேர்
காடையே வலியான் கம்புள் காகஞ்
சிரவ மொலித்தல் புருண்டி சிந்தூரம்
பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு
கோடர நாவல் குலிகங் காய்த்த
னீரலகன் மற்றுயிர் சீரலகிச் சோரலே.
173. பொழுதென மாலைக் கெழுயாமம் வைகறை
யெற்றோற்ற நண்பக லெற்பா டெனவாறே
மாலைக் குரிமை மலர்த லுற்ப லம்புள்
சோலைசேர்ந் தொலித்தல் சுரபி கரைத
றுன்னடைத் தாமரை சுளித்தெனக் கூம்பல்
கன்னடங் காம்போதி தனியப் பாடலே
யாமத் துரிமை யாகரி பாடலே
யூமன் சகோர முவரி யுவத்தலே
காம மநினதங் கரவென் றிவையே
வைகறைக் குரிமை வாரணங் கூவன்
மெய்யெனக் கனாவுறன் மீனொளி குன்றல்
வாமமீ னுதித்தன் மாதவர் வாழ்த்த
லிராமகலி யுடனிந் தோளம் பாடலே
விடியற் குரிமை விலங்கொடு மற்றுயிர்
கடிமகிழ்ந் தெழுச்சி கானொடு கமலம்
விரிபூ மலர்தல் வெண்பனி துளித்த
றெரிபூ பாளந்தே சாட்சி பாடலே
நண்பகற் குரிமை நயத்தல் கோகம்
வெண்டே ரோடன் மேதி நீராடல்
பண்டிசை சாரங் கம்பாட லென்பவே
வெற்பாட் டுரிமை வெற்பானி ழனீளல்
வானஞ் சிவத்தன் மறியினங் குதித்தல்
கானமாய்க் காபி கலியாணி பாடலே.

இடவுரிமை
174. குறிஞ்சி பாலை முல்லை மருத
நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென
வரையே சுரமே புறவே பழனந்
திரையே யவையவை சேரிடந் தானு
நிரையே யைந்திணை நிலமெனப் படுமே.
175. தெய்வஞ் செல்வர் சேர்குடி புள்விலங்
கூர்நீர் பூமர முணாப்பறை யாழ்பண்
டொழிலெனக் கருவி ரெழுவகைத் தாகும்.
176. குறிஞ்சிக் கருப்பொருள் குமரன் றெய்வமே
வெறியணிப் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர் கிளிமயின் மறப்புலி குடாவடி
கறையடி சீயஞ் சிறுகுடி யருவி
நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்த
ளாரந் தேக்ககி லசோக நாகம்
வேர லைவனந் தோரை யேனல்
கறங்கிசைத் தொண்டகங் குறிஞ்சியாழ் குறிஞ்சி
வெறிகொ ளைவனம் வித்தல் செறிகுரற்
பைந்தினை காத்தல் செந்தே னழித்தல்
செழுங்கிழங் ககழ்தல் கொழுஞ்சுனை யாடலே.
177. பாலைக் கருப்பொருள் பகவதி தெய்வமே
காளை விடலை மீளி யெயிற்றி
யெயின ரெயிற்றியர் மறவர் மறத்தியர்
புறாப்பருந் தெருவை செந்நாய் குறும்பு
குழிவறுங் கூவல் குராஅ மராஅ
வுழிஞை பாலை யோமை யிருப்பை
வழங்குகதி கொண்டன செழும்பதி கவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகலிற் சூறை பரிவெழுந் தாடலே.
178. முல்லைக் கருப்பொருள் முராரி தெய்வமே
தொல்லைக் குறும்பொறை நாடன் றோன்றன்
மடியாக் கற்பின் மனைவி கிழத்தி
யிடைய ரிடைச்சிய ராய ராய்ச்சியர்
கான வாரண மான்முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்கவர்ப் பிடவங்
கொன்றை காயா மன்றலங் குருந்தந்
தாற்றுக் கதிர்வரகு சாமை முதிரை
யேற்றுப் பறைமுல்லை யாழ்சா தாரி
சாமை வரகு தரமுடன் வித்த
லவைகளை கட்ட லரிதல் கடாவிடல்
செவிகவர் கொன்றைத் தீங்குழ லூதன்
மூவின மேய்த்தல் சேவினந் தழுவல்
குரவை யாடல் குளித்தல் கான்யாறே.
179. மருதக் கருப்பொருள் வாசவன் றெய்வமே
விருதமை யூரன் வெண்டார் கிழவன்
கெழுதகு கற்பிற் கிழத்தி மனைவி
யுழவ ருழத்தியர் கடையர் கடைச்சியர்
மழலை வண்டான மகன்றி னாரை
யன்னம் போதா நன்னிறக் கம்புள்
குருகு தாரா வெருமை நீர்நாய்
பெருகிய சிறப்பிற் பேரூர் மூதூர்
யாறு மனைக்கிண ரிலஞ்சி தாமரை
நாறிதழ்க் கழுநீர் நளிமலர்க் குவளை
காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதஞ்
செந்நெல் வெண்ணெ லந்நெல் லரிகிணை
மன்றன் முழவ மருதயாழ் மருத
மன்றணி விழாக்கொளல் வயற்களை கட்ட
றோயதல் கடாவிடல் பொய்கையா றாடலே.
180. நெய்தற் கருப்பொரு ணீராள் வருணனே
மொய்திரை சேர்ப்பன் முன்னீர் புலம்பன்
பரத்தி நுளைச்சி பரதர் பரத்தியர்
நுளையர் நுளைச்சிய ரளவர ளத்தியர்
காக்கை சுறவம் பாக்கம் பட்டின
முவர்நீர்க் கேணீ கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டக மடம்பு
கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல்
புலவுமீ னுப்பு விலைகளிற் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்த
லுணக்கல் விற்றல் குணக்கட லாடலே.
181. இடனெனப் படுவது மலைநா டியாறே.

பண்புரிமை

182. பண்பெனச் சாதியும் பற்றலு மளவையும்
வண்ணமும் பலவும் வகுத்தனர் புலவர்.

சாதித்தொழிலுரிமை

183. வன்னியர் மன்னர் வணிகர் சூத்திர
ரென்னிவர் நால்வர்க் கியல்வன வுரைக்கி
லோதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கு
மல்லாத கல்வி யெல்லார்க்கு முரித்தே.
184. படைக்கலம் பயிறலும் பகடாதி யூர்தலு
முடைத்தொழில் பின்மூவர்க் குரைத்திசி னோரே.
185. அறப்புறங் காவ லனைவர்க்கு முரித்தாய்
மற்றைக் காவல் கொற்றவர்க் குரித்தே.
186. வேதமாந்தர் வேந்த ரென்றிரு வர்க்குந்
தூது போதற் றொழி லுரித் தாகும்.
187. சிறப்புப் பெயர்பெறிற் செப்பிய விரண்டு
முதற்குரிய மரபின வொழிந்தோ ரிருவர்க்கும்.

பற்றுதலுரிமை

188. வெறுப்புவப் பிரக்கம் வெகுளி நாணந்
திறத்துணி வச்சந் தேறா மயலவாப்
பலவு மக்கட் பலபற் றென்ப
பற்றுறும் வழியும் பற்றுற் றார்க்கு
மற்றுறு மியற்கையும் பற்றிறு வகைத்தே.

வடிவுமுதலியவுரிமை

189. வடிவள வூறு மற்றவை பொதுமை
கடியச் சிறப்பிற் காட்ட லுரிமை.

ஒழுக்கவுரிமை

190. ஒழுக்க மென்பதீண் டுலக முறையே.

சொல்லுரிமை

191. சொல்லெனப் படுவ தன்றொகுதி நான்கவற்றுட்
சனுக்கிரகஞ் சங்கதந் தேவர் மொழியே
யவப்பிரஞ் சனமொழி யாமிழி சனர்க்கே
வொவ்வொரு நாட்டிடை யுரைப்பது பாகத
மிதுமூ வகைத்தாய் வடமொழி திரிவன
தற்பவம் பிறவும் பொதுமைய தற்சமஞ்
சிறந்தொன்றற் குரியன தேசிக மென்ப.
192. உறுப்புச் செய்யுளென் றுரைப்ப தற்பவச்
சிறப்புரை விரைவிச் செப்பிய செய்யுளே.
193. கொங்கண மகதங் கோசலந் துளுவஞ்
சிங்களஞ் சீனஞ் சிந்து திராவடம்
வங்கஞ் சாவக மராடங் கலிங்க
மங்கஞ் சோனக மருணங் கவுசலம்
பப்பரங் காம்போசம் பாடைமூ வாறனுண்
மருவூரின் மேற்குங் கருவூரின் கிழக்கு
மருதை யாற்றின் றெற்கும் வைகை
யாற்றின் வடக்குஞ் செந்தமிழ் நிலனே
பாண்டிகுட்டம் பன்றி கற்கா
வெண்குடம் பூழி மலாடு சீதம்
புன்னா டருவா வருவா வடதலை
யெனச்செந் தமிழ்சூழ் பன்னிரு நாடே.
194. செந்தமிழ் வழக்குரை செப்புங் காலை
யிலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றொருமூ வகைத்தா மியல்பு
மிடக்க ரடக்கன் மங்கலங் குழுஉக்குறி
யெனுமுத் தகுதியோ டிருமூன் றாகும்.
195. குறிப்பு மொழிவகைக் கூறிற் பொதுச்சொல்
விகாரந் தகுதி வினைக்குறிப் பாகுபெய
ரன்மொழி முதற்றொகைப் பொருட்டொகைக் குறிப்பென
வொன்பதும் பிறவுமிவ் வொழிந்தன வெளிப்படை.
196. பலவினைக் குரிய பலபொருட் சொல்லொரு
நிலைவரி னுரிமை நீத்தசொல் லுரித்தே.
197. திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ
டியற்பெய ரேற்றிடிற் பின்வா லுரித்தே.
198. அசைநிலை பொருணிலை யிரைநிறைக் கோர்சொல்
லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.
199. அகப்பொருள் புறப்பொரு ளாமிரண் டவற்றுட்
பெருகிய கைக்கிளை பெருந்திணைக் குறிஞ்சி
யாதியைந் திணையென வகத்திணை யேழே
கைகோ ளிரண்டாங் களவு கற்பே
வதுவை வாழ்க்கை வரைவகப் பொருளே
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழுஞை தும்பையேழ் புறத்திணை
பகைநிரை யோட்ட றன்னிரை மீட்டல்
பகைமேற் செல்லல் பகைக்கெதி ரூன்ற
றன்னெயிற் காத்தல் பகையெயிற் கொள்ளல்
போர்வெல்ல லெனமுறை புறப்பொரு டிணையே.
200. முப்பொரு ளைவழி முந்நான் சுகத்தினை
முப்புறத் திணைதவா முறையைந்
துரிமை யெனவிவை பொருணூற் றொகையே.

அதிகாரமொன்றிற்கு ஒத்தொன்றிற்கு மேற்படி சூத்திரம். 58.
மேற்கோள் சூத்திரம். 40. மேற்படி சூத்திரம் 98.
அதிகாரமூன்றிற்கு மேற்கோளோடுகூடிய மேற்படி சூத்திரம். 439.

மூன்றாவது - பொருளதிகாரம் - முற்றிற்று

நான்காவது - யாப்பதிகாரம்


201. யாப்புற நலமெலா மிணைந்தவோர் சட்குணன்
காப்புற வடிதொழீஇக் காட்டுதும் யாப்பே.

4.1 முதலோத்துச் செய்யுளுறுப்பு

202. சிரைமுதல் யாப்புறச் சேருயிர்க் குடல்போ
லுரைமுதல் யாப்புற வுணர்பொருட் குடலாச்
சிறப்பிற் செய்வன செய்யு ளாமவை
யுறுப்பியன் மரபுமூன் றுரைப்ப விளங்கும்
203. எழுத்தசை சீர்தளை யடிதொடை யாறும்
வழுத்திய செய்யுண் மருவுறுப் பெனவே.

அசையிலக்கணம் வருமாறு

204. அசையே நேர்நிரை யாமிரு வகைய
நெடிறனிக் குறின்மெய் நிகழ்குறி னேரா
யிணைக்குறில் குறினெடி லிவைநிரை யசையே.

சீரிலக்கணம் வருமாறு

205. நேரே நிரையே யசைச்சீ ரிரண்டென
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
யீரசை யியற்சீ ரீரிரண் டிவற்றோ
டீற்றுறு நேர்நிரை யிருநான் குரிச்சீர்
நேரிறும் வெண்சீர் நிரையிறும் வஞ்சிச்சீர்
நாலசை பொதுச்சீர் நானான் கென்ப.
206. பொதுச்சீ ரிறுதியு முரிச்சீ ரிறுதியுந்
தளைக்கொக்கு மசைச்சீ ரியற்சீ ரனைத்தே
பொதுச்சீர் வெள்ளையுட் புணரா வுக்குற
ளல்லன கலியு மகவலுஞ் சேரா
வஞ்சியு ளனைத்தும் வரினு மோரடி
யெல்லையு ளொன்றுமே லிணையிற் றொடரா.

தளையிலக்கணம் வருமாறு

207. தளையாஞ் சீர்தம்முட் டலைப்படுங் கட்டே
யவையேழ் வகைய வாகு மவற்று
ளாசிரியத் தளையா மியற்சீ ரொன்றல்.
208. வெண்டளை யென்பது வெண்சீ ரொன்றலு
மியற்சீர் விகற்பமு மெனவிரு வகைத்தே.
209. கலித்தளை வெண்சீர் கலந்த விகற்பமே.
210. வஞ்சித் தளையாம் வஞ்சிக் குரிச்சீ
ரொன்றலு மொன்றா தொழுகலு மென்ப.

அடியிலக்கணம் வருமாறு

211. அடியென்ப தளைத்த வஞ்சீரா நடையவை
குறளடி யிருசீர் சிந்தடி முச்சீ
ரளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி
கழிநெடிலடி யைந்தே கடந்த சீரிவற்று
ளெண்சீர் மிக்கடி யெனிற்சிறப் பன்றே.

தொடையிலக்கணம் வருமாறு

212. தொடையென்ப தீரடி தொடுப்ப தாமவை
யடைமுதன் மோனை யந்த மியைபே
யிடையே யெதுகை யெதிர்மொழி முரணள
பெடையே யளபா மெனவை வகையே.
213. மோனைக் கினமே அஆஐஔவும்
இஈஎஏவும் உஊஒஓவும்
சதவும் ஞநவும் மவவுமெனவே.
214. எதுகை யென்ப வியைபன மொழிகண்
முதலெழுத் தளவொத்து முதலொழித் தொன்றுத
மூன்றா மெழுத்தொன்ற லாசினந் தலையா
கிடைகடை யாறு மெதுகை வகையே.
215. தலையா கெதுகை தலைச்சீர் முழுதுற
லிடைகடை யவ்வவ் வெழுத்தொன் றுவதே.
216. மோனை முதலடி முதல்வரி னடியே
யிணைவ திணையே யிடைவிடல் பொழிப்பே
யிறுவ தோரூஉ வீறென் றொழிவது
கூழை முதலயல் குன்றன் மேற்கதுவா
யீற்றய லொன்றொன் றாதெனிற் கீழ்க்கதுவா
யெல்லா மொன்று வதெனின் முற்றென்ப.
217. அந்தாதி யடிக்கடை யாதி யாத
லிரட்டை முழுதோ ரிறையடிக் கியவடி
செந்தொடை தொடையொன்றுஞ் சேரா வடியே.
218. அடியினைப் பொழிப்பொரூஉக் கூழை மேற்கீழ்க்
கதுவாய் முற்றென வெட்டொடு மோனை
யியைபே யெதுகை முரணே யளபே
யெனவைந் துறழ வெண்ணைந் தாகி
யடியந் தாதி யிரட்டைச் செந்தொடை
யெனவிம் மூன்று மியையத் தொடையும்
விகற்பமு மெண்ணைந் தொருமூன் றென்ப.

முதலாமோத்துச்செய்யுளுறுப்பு - முற்றிற்று

4.2 இரண்டாமோத்துச்செய்யுளியல்

219. வெண்பா வகவல் விரிகலி வஞ்சி
மருட்பா வெனவை வகைப்பா வன்றியுந்
துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றே.

வெண்பாவிலக்கணம் வருமாறு

220. வெள்ளைக் கியற்சீர் வெண்சீர் விரவி
யேற்கு மளவடி யீற்றடி சிந்தடி
யீற்றுச்சீ ரசைச்சீ ருக்குறண் மிகலுமாம்.
221. வெள்ளையுட் பிறதளை விரவா வெண்டளை
யொன்றாய்ச் செப்ப லோசை யாமஃகே
யேந்திசை வெண்சீ ரியற்சீர் தூங்கிசை
யொழுகிசை யிரண்டு முளவெனி லாகும்.
222. குறள்சிந் தின்னிசை நேரிசை சவலை
பஃறொடை யெனவெண் பாவா றவற்று
ளீரடி குறளே யிருகுறள் சவலை
யிருகுற ளிடைக்கூ னியைநே ரிசையே
நாலடி விகற்ப நடையின் னிசையே
நேரிசை யின்னிசை நேர்மூ வடிசிந்தே
நாலடி மிக்கடி நண்ணிற் பஃறொடை
யெனவறு வெண்பா வேற்கு நடையே.

ஆசிரியப்பா விலக்கணம் வருமாறு

223. ஆசிரி யத்தொலி யகவலா யியற்சீர்
தன்றளை பிறவுந் தழுவிய வளவடி
நடையா னடந்து நால்வகைத் தாம்வை
நேரிசை யிணைக்குற ணிலமண் டிலமே
யடிமறி மண்டில மாகு மென்ப.
224. நேரிசைச் சிறுமை நேருமூ வடியே
வரையா பெருமையே மற்றடி யளவடி
யீற்றயற் சிந்தடி யியைந்து வருமே.
225. இணைக்குறண் முதலீற் றீரடி யளவடி
யிடைக்குறள் சிந்தடி யிணையப் பெறுமே.
226. நிலமண்டிலத் தெங்கு நீங்கா வளவடி
யடிமறி மண்டில மந்நடைத் தாகி
யடிமா றினுந்தா னழியா நிலைத்தே.
227. கலியொலி துள்ளல் கலித்தளை பிறவும்
வெண்சீர் பிறவும் விரவிய வளவடி
தன்னா னடக்குந் தன்மைத் தாகி
யொத்தாழிசை மூன்று மோரைங் கொச்சகம்
வெண்கலி கலிவெண்பா விகற்பமீ ரைந்த்தே.
228. கலிமுத லுறுப்பாந் தரவுதா ழிசையே
துணையுறுப் பெனக்கூன் சுரிதகம் வண்ணக
மம்போ தரங்க மாமிவை நான்கே.
229. தரவு தாழிசை தன்றளை வெண்டளை
யிரண்டுறழ்ந் தளவடி யிரண்டும் பலவுமாம்.
230. வண்ணக மளவடி வரைமுதற் பலவடி
நான்காதி யெட்டீறாய் நடைமுடு கராகமாம்.
231. அம்போ தரங்க மம்பளாந் திரைபோ
லளவடி யீரடி யிரண்டும் பேரெண்
ணளவடி யோரடி நான்கு மளவெண்
சிந்தடி யோரடி யெட்டு மிடையெண்
குறளடி யோரடி நானான்குஞ் சிற்றெண்
ணெட்டு நானான்கு நான்கு மெட்டுமாய்ச்
சுருங்கவு மந்நாற் றுணையுறுப் புடைத்தே.
232. சுரிதக மென்ப சுரிந்தெனக் கூனின்
பின்னகவல் வெள்ளை யாக முடிவதே.
233. நேரிசை யம்போ தரங்க வண்ணக
மென்றொத் தாழிசை யிவைமூன் றிவற்றுட்
டரவொன் றொருமுத் தாழிசை தனிநிலை
சுரிதக மெனநாற் றுணைவரு நேரிசை
தாழிசைக் கீழம்போ தரங்கஞ் சாரவு
மம்போ தரங்கமே லராக மணையவு
மம்போ தரங்கமே யாம்வண் ணகமாம்.
234. கொச்சகக் கலியைங் கூறு பாடெனத்
தரவே தரவிணை தாழிசை சிலபல
சிலபிறழ்ந் துறழ்ந்துஞ் சிலமயங் கியுமாம்.
235. வெண்கலிக் களவடி: பலதளை பலதொடை
மண்டியீற் றசைச்சீர் வந்துசிந் தடியாங்
கலிவெண் பாவெண் கலியென நடப்பினும்
வலிவெண் டளைதவா வரவும் பலதொடை
நேரிசை வெண்பா நேரவும் பெறுமே.
236. கட்டளைக் கலிப்பாக் காட்டுங் காலை
யொருமாக் கூவிள மொருமூன் றியைய
நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய்
நடந்தடிப் பாதியாய் நான்கடி யொத்தவாய்
வருவ தின்று வழங்கு நெறியே.

வஞ்சிப்பாவிலக்கணம்வருமாறு

237. வஞ்சிக் கோசை வழங்குந் தூங்கலே
தன்சீர் தன்றளை தவிர்ந்து பிறபெறுங்
குறளடி சிந்தடி கொண்டு மூவடி
குறையா மூன்றன் மேற்கூறில் பெருகத்
தனிச்சொல்லு மகவலுந் தழுவலோ டிறுமே.

மருட்பாவிலக்கணம் வருமாறு

238. மருட்பா வெள்ளை வந்தபின் னகவ
லீற்றின் மருளு மியல்புடைத் தென்ப.

பாவினம்வெண்டுறையிலக்கணம்வருமாறு

239. துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றனுன்
வெண்செந் துறைகுறள் வெண்பா வினமாய்ச்
சீர்தளை யடியெலாஞ் சேர்ந்து விரவினு
மொத்தடி யிரண்டா யொழுகு மற்ற
வெண்டுறை யன்னவை விரவினு மூன்றடி
யாதி யேழடி யந்தமா யீற்றிற்
சிலவடி தஞ்சீர் சிலகுறைந் திறுமே.

ஆசிரியத்துறையிலக்கணம் வருமாறு

240. ஆசிரி யத்துறை யளவி சீர்வரு
மடிநான் கீற்றய லாதி குறைநவு
மிருவழி யிடைமடக் கினவுநால் வகைய.

கலித்துறையிலக்கணம் வருமாறு

241. கலித்துறை நெடிலடி நான்கொத் தவற்று
ளிடைநேர் வெண்சீ ரியற்சீர் முதனான்
கிடைநிரை வெண்சீ ரிறுதிச்சீர் மோனையாய்க்
கடையே கொண்டிறுங் கட்டளைக் கலித்துறை.

வஞ்சித்துறை யிலக்கணம் வருமாறு

242. வஞ்சித் துறைகுற ளடிநான் கொத்ததே.

தாழிசை யிலக்கணம் வருமாறு

243. குறட்டா ழிசையொலி குன்றுங் குரளு
மத்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவுமாம்
வெண்டா ழிசையெனில வெண்சிந் தியல்போ
லண்டாப் பிறதளை யணைந்து வருமே.
244. அகவற் றாழிசை யடிமூன் றொத்தவா
யடுக்கிய மூன்றுமொன் றாகியும் வருமே.
245. கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்
றடியெனைத் தாகியு மளவொத் தொவ்வா
தொருமூன் றடுக்கியு மொன்றுமாய் வருமே.
246. வஞ்சித தாழிசை வருங்குற ளடிநான்
காகித்தான் மூன்றா யடுக்குமோர் பொருளே.

விருத்த விலக்கணம் வருமாறு

247. விருத்த மென்ப விரவிய வெல்லாச்
சீரு மடியுஞ் சிதையாக் கொளினு
மவையொத் தனவா யடிநான் கணையுமே
மாவிளங் காயே வஞ்சிச்சீ ரிடையும்
பொதுச்சீ ரிடையும் புணர்மா விளமிவை
யொப்ப வரிற்சீ ரொப்புமை யாகும்.
248. விருத்த விகற்பம் விளக்கிய காலை
வஞ்சி சிந்தடி வருங்கவி யளவடி
யடிதொறுந் தனிச்சொ லணைவது வெள்ளை
யகவல் கழிநெடி லடிகொள் விருத்தமே.
249. சந்த விருத்தந் தம்முளொத் தெழுத்தசை
வந்தொலி பற்றி வருமுள பிறவே.
250. பத்திய மென்ப பாவொடு பாவினங்
கத்திய மமைபோற் கலையல் லனவே
வண்ண மென்ப வலிமெலி யிடையொழு
கெண்ணுருட் டெனமுடு கேந்த றூங்க
லகைப்புப் புறப்பாட் டகப்பாட் டளபு
பாவு நலிபு தரவு வொரூஉக்
குறினெடில் சித்திரங் கூறுபா டிருபதே.

இரண்டாமோத்துச் செய்யுளியன் - முற்றிற்று

4.3. மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல்

251. செய்யு டெரிவுற முத்தகங் குளகந்
தொகைதொடர் நிலையெனத் தொகுதி நான்கவற்றுண்
முத்தகந் தனித்தாய் முடியுஞ் செய்யுளே.
252. குளக மொருவினை கொளும்பல பாட்டே.
253. தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறி
னொருவ னுரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
பாட்டினு மளவினும் கூட்டிய தாகும்.
254. தொடர்நிலைப் பொருளினுஞ் சொல்லினு மாகும்
பொருட்டொடர் நிலைதற் பொருடரத் தானே
பற்பல பாட்டாய்ப் பயனிற் றொடருஞ்
சொற்றொடர் நிலையெனிற் றூக்கந் தாதியே.
255. பொருட்டொடர் நிலையே புகலிற் காப்பியம்
பெருங்கா பியமெனப் பிரிவிரண் டவற்றுட்
காப்பிய மறமுத னான்கிற் குறைநவும்
புராணம் பற்கதை புனைநவு மென்ப.
256. பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வரும்பொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாக முன்வா வியன்று
நாற்பொருட் பயக்கு நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகட னாடு வளர்நகர் பருவ
மிருசுடர் தோற்றமென் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாட
றேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சுருக்க மிலம்பகம
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய வென்ப
கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர்.
257. பிள்ளைக் கவியின் பெற்றியைக் கூறச
சுற்ற வகுப்பொடு தெய்வங் கொலைகாப்ப
வொற்றைப் படமூன் றாதி மூவே
ழீறாய் மதியினு மைந்தே ழாண்டினுங்
காப்புச் செங்கீரை தால்சப் பாணி
முத்தம் வரானை யம்புலி சிறுபறை
சிற்றில் சிறுதே ராடவர்க் கேகடை
முன்றொழித் தரிவையர்க் காங்கழங் கம்மானை
யூச லென்றிவை யவ்விரு பாற்குப்
பத்துறுப் பாயொவ் வொன்று விருத்தம்
பப்பத் தாகப் பாட லென்ப.
258. கலம்பகத் துட்புயங் கைக்கிளைத் தவமே
காலம்வண் டம்மானை காற்றுப் பாணன்
குறஞ்சித் திரங்கல் குளிர்தழை சம்பிரத
மறந்தூ தூசன் மதங்க மடக்கென
விரவிமூ வாறும் வேண்டு முறுப்பா
வொருபோகு வெண்பா வுடன்கலித் துறையிவை
நிரையே முதற்கண் ணின்றுபிற் கலந்தவைம்
பாத்துறை விருத்த மந்தாதி வருமே
வந்தா லீசர்க்கு வருநூறு முனிமெய்யர்க்
கைந்தஃகு மரசர்க் காந்தொண் ணூறு
மமைச்சர்க் கெழுபது மைம்பதும் வணிகர்க்
கமைந்த வேனையோர்க் காறைந் தளவே.
259. பரணிக் காயிரம் பகடு கொன்ற
தெரிவருந் தலைவனாய்த் தேவவாழ்த் தாதி
கடைதிறப் புங்கனல் காய்நிலம் பாலையும்
புடையிற் காளி பொலிந்த கோயிலும்
பேயோடு காளி பேய்கள் காளியோ
டோயில வுரைத்தலி லோர்ந்தவன் கீர்த்தி
புகறலு மவன்வழி புறபொரு டோன்றவு
மிகவெஞ் சமரும் விரும்பலு மென்றிவை
யளவடி முதற்பல வடியா னீரடி
யுளபஃ றாழிசை யுரைப்பது நெறியே.
260. உலாவென மலைநதி யுயர்நா டூர்மாலை
குலாவிய பரிகரி கொடிமுர சுயர்கோ
லியைந்த தசாங்கமு மேழ்பருவத்தார்
வியந்து தொழுதலும் வேண்டுறுப் பாயக்
கலிவெண் பாவாற் குலமகற் புகழ்தலே.
261. மடலென்ப துலாப்போல் வழங்கினுங் கண்ட
மடவார் மயலும் வருந்தலை மகன்பெயர்ப்
படமாறா வெதுகையும் பகர்த லுரித்தே.
262. அங்க மாலையே யங்க வகுப்பெலாம்
பாதாதி கேசமுங் கேசாதி பாதமுங்
கலிவெண்பா வாதல் வெளிவிருத் தமாதல்
வலிதெனப் புகழ்ந்து வகுத்த செய்யுளே.
263. சின்னப்பூ வெனத்தெளி நேரிசை வெண்பா
நூறுதொண்ணூ றெழுப தைம்பதாறைந்துமாய்ப்
பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே.
264. ஒருபா வொருபதா முரைப்பரும் வெண்பா
வகவல் கலித்துறை யவற்று ளொன்றாற்
பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே.
265. இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய்
வெள்ளை யகவல் விரவிப் பாடலே.
266. ஆற்றுப் படையென்ப வாற்றெதிர்ப் படுத்திய
புலவர் பாணர் பொருநர் கூத்தர்
பலபுக ழகவற் பாவொடு பாடலே.
267. வருக்க மாலையாம் வருக்க வெழுத்தென
வுயிரோடு க ச த ந ப ம வ வெனவெண்
வரிமுதல் வந்து வருமெண் ணகவலே.
268. மாலையே யகவலால் வழங்கு மவற்றுட்
டானைபோர் வெற்றி தனித்தனி புகழ்வது
தானை வஞ்சி வாகையென மூன்றாம்.
269. புகழ்ச்சி மாலையாம் பூங்குழ லாரை
யிகழ்ச்சியில் குலமியை வஞ்சி பாட
னாம மாலையா நம்பிகட் புகழ்தலே.
270. செருக்கள வஞ்சியாஞ் செருமுகத் தாயவை
சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே.
271. வரலாற்று வஞ்சியாம் வல்லறமுத னான்கும்
வருமா றுரைத்து வஞ்சி பாடலே.
272. நான்மணி மாலையே நாற்பதந் தாதியாய்த்
தான்மணிக் கொத்தன தந்தன்மன விருத்தமே.
273. விருத்த விலக்கணம் விளம்புங் காலைக்
குடையூர் நாடுகோல் பரிகரி வில்வடி
வாள்வே லொன்பான் வகுப்புமன விருத்த
மீரைந் தவ்வவற் றியற்பெயர் கொள்ளுமே.
274. அட்ட மங்கல மெட்டுமன விருத்தங்
கவிதொறுந் தெய்வங் காப்பவென் றுரைப்பது
நவமணி மாலையந் நடைய வென்ப.
275. பலசந்த மாலை பப்பத் தொருசந்தஞ
சிலவந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே.
276. ஊச லென்ப வூசலாய்க் கிளையள
வாசிரிய விருத்த மாகப் பாடலுந்
தன்னொலி வருங்கலித் தாழிசைப் பாடலும்
வண்ணக முதற்கண் வரினு மியல்பே.
277. கோவையே யகப்பொருட் கூறுபா டிசைப்பட
நாவலர் கலித்துறை நானூறுரைத்தலே.
278. இரட்டை மாலையா மிணைந்த பப்பத்தாய்
வெண்பா கலித்துறை விரவிப் பாடலே.
279. மணிமாலை வெண்பா வகைநா லைந்துட
னிணையாய்க் கலித்துறை யிரட்டைப் பாடலே.
280. பன்மணி மாலை பன்னிற் கலம்பகத்
தொருபோ கம்மானை யூச லிவைநீத்
தகவல் வெள்ளை யருங்கலித் துறையென்
றவைசெறி நூறந் தாதியாய் வருமே.
281. மும்மணிக் கோவையே முப்பதந் தாதியா
யகவல் வெள்ளை கவித்துறை முறைவரு
மும்மணி மாலையா முறைமாறி வெள்ளை
கலித்துறை யகவல் கதிபெருஞ் செய்யுளே.
282. இணைமணி மாலை யிணைவெண்பாக் கலித்துறை
யகவன் மனவிருந்தந் தொடர்நூ றியம்பலே
யலங்கார பஞ்சக மந்நால் வகைப்பாக்
கலந்தவ் வைந்தாய்க் கதிபெறப் பாடலே.
283. பாப்பொரு ளளவாதி பலபெய ருளபிற.
284. முதன்மொழிப் பொருத்தந் தந்திடுங் காலை
மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம் பாலுணாக
கங்கில் வருணநாட் கதிகண மீரைந்தே.
285. மங்கலப் பொருத்தமே கங்கை மலைநிலங்
கார்புயல் பொன்மணி கடல்சொல் கரிபரி
சீர்புக ழெழுத்தலர் திங்க டினகரன்
றேர்வய லமுதந் திருவுல காரண
நீர்பிறா வருமுத னிலைச்சொல் லியல்பே.
286. சொல்லின் பொருத்தஞ் சொல்லுங் காலை
யரிதுணர் சொல்லு மருந்திரி சொல்லுந்
திரிபுடைச் சீருந் தீதா முதற்கே.
287. எழுத்தின் பொருத்தமே யெழுவாய்ச் சீர்க்கண்முன்
றைந்தே ழொன்பது வியநிலை நன்றா
மிரண்டுநான் காறெட்டுச் சமநிலை வழுவாம்.
288. தானமே,
குறினெடி றம்முனி னைந்துஇ உவ்வுடன்
ஐ ஔவுஞ் சேர்புழி யைந்தா மவற்றுட்
டலைமக னியற்பெயர் தான முதலாப்
பாலன் குமர னிராசன் மூப்பு
மரண முறையெண்ணி வருமுத லெழுத்தின்
றானமீற் றிரண்டெனிற் றவிர்க வென்ப.
289. பாலெனக,
குறிலா ணெடில்பெண் மற்றுயி ராணுயிர்
மெய்பெண் ணென்மரு முளரே யவைதம்
பாவியல் கெடினுமா மற்றவை யலியே.
290. உணவெண்,
அ இ உ எ க ச த ந ப ம வ வென்
றமுதெழுத் தாகி யாதிச் சீர்க்குந்
தசாங்கத் தயற்குந் தகுவன வென்ப
யா யோ ரா ரோ லா லோ வவற்றொற்று
மளபெடை மக்குற ளாய்தநஞ் செழுத்தே.
291. வருணப் பொருத்தமே வருமுயி ரடங்கலும்
கம்முத லாறுங் கைசிகர்க் காகுந்
தமமுத லாறுந் தகுமன் னவர்க்கே
ல வ ற ன வணிகர்க் காம்ழளச் சூத்திரர்க்கே
யிம்முறை நஞ்செழுத் தியலினு மிழுக்கா.
292. நாளின் பொருத்த நவிலுங் காலை
நான்கு மைந்து மூன்றுமாய்ப் பிரியுயிர்
கார்த்திகை பூராட முத்திரா டம்மே
கவ்வரி நான்கிரண் டிருமுறை மூன்றிவை
யோண மாதிரை முறையிரு பூசமே
சவ்வரி நான்கைந்துந் தகுங்கடை மூன்றென
வவ்வவை யிரேவதி யசுவதி பரணியே
ஞவ்வரி ஞாஞே ஞொவ்வா மவிட்டமே
தவ்வரி யிரண்டேழு தற்கடை மூன்று
சோதி விசாகந் தூயோனிச் சதையமே
நவ்வரி யாறு நண்ணு மிருமூன்றும்
பொற்பனை கேட்டை பூரட் டாதியே
பவ்வரி நான்கும் பிற்பக ரிரண்டா
றெனவுத்திர மத்த மொளிசித் திரையே
மவ்வரி யாறு மற்றிரு மூன்று
மகமா யிலிய மகந்தொடர் பூரமே
யயாவுத் திரட்டாதி யூயோ மூலமே
வவ்வரி நந்நான்கு ரோகணி யிந்திர
னவ்வவ் வெழித்திற் கவ்வவை குறித்தபின்
னாண்மூ வொன்பதா நாயக னியற்பெயர்
நாண்முதன் மங்கல நவில்சொல் லீறா
வெண்ணி யிரண்டு நான்காறெட் டொன்பதா
மன்றி யொன்றுமூன் றைந்தே ழாகா.
293. கதியின் பொருத்த விதியைக் கூறில்
ஒவ்வொழி குறிலே றவ்வொழி வலியே
செவ்வி தாகுந் தேவர் கதியே
னவ்வொழி மெலியே நெடின்முத னான்கும்
வவ்வி லஃதாகு மக்கட் கதியே
ஒஓய ர ல ழ ற வும் விலங்கின் கதியே
ன வ ள ஐ ஔவு நரகர் கதியே.
294. கணமியல் பொருத்தமே கணமெனுஞ் சீரினுண்
முன்ன ரிந்திரன் முன்னிரை நிலனே
நிரைநேர் நேர்மதி நேர்நிரை நிரைநீ
ரிந்நாற் கணநன் றாமிவை முதற்சீர்க்கே
யிருவிளங் காய்முறை யந்தரஞ் சூரிய
னிருமாங் கனிமுறை வாயு தீயிவை
வருமுதற் சீர்க்கு வழுக்கண மென்ப.
295. சாதி நிலநிறந் தகுநா ளிராசிகோ
ளோதின ராறு மொவ்வொரு பாவிற்கே
வெண்பா முதற்குல முல்லை வெண்மை
கார்த்திகை முதலேழுங் கடகம் விரிச்சிக
மயிலை மதிகுரு வழங்கு மியல்பே.
296. அகவற் கரச ரருங்குலங் குறிஞ்சி
குருதிமக முதற் கொண்டெழு மேட
மரிதனுச் செவ்வா யாதவ னியல்பே.
297. கலிக்கே வணிகங் கழனி பொன்மை
குலாம்பனை முதலாறுங் குடமொடு மிதுனந்
துலாம்புதன் சனியெனத் தொக்கிவை யேற்கும்.
298. வஞ்சிக் கீறதியல் வருண நெய்த
லஞ்சன மவிட்ட மாதி யேழும்
விடைபெண் கலைபுகர் விடதர மியலுமே.
299. ஆசு மதுரஞ் சித்திர வித்தார
மேசில் கவிநான் கிவையென் பவற்று
ளெடுத்த பொருளிற் றொடுத்த வின்பத்தி
லடுத்த பொழுதிற் பாடுவ தாசே
யுடைப்பொருட் பொலிவு முரிச்சொற் செல்வமுந்
தொடைப்பொலி விகற்பமுந் தொடரணிச் சிறப்பு
மிசைபெற வோசையு மியலப் பாடி
வசையில் வருங்கவி மதுர மாமே
கோமூத் திரிமுதற் கூறிய மிறைகவி
சித்திர மென்பர் சிறுபான்மை யவையெனப்
பத்திர முதனுண் பத்தியிற் பாடிச்
சித்திரம் போல்வன சித்திரக் கவியே
தொடர்நிலை தொகைநிலை தொடுத்த பல்பாவுந்
தொடைபல வாகத் தொடுத்த வொருபாவும்
வித்தாரக் கவியென விளம்பினர் புலவர்.
300. ஈரசை யைஞ்சீ ரெழுதளை யையடி
யாறே ழொருதொடை யைம்பா மூவினஞ்
செய்யு ணான்குஞ் செய்யுள் விகற்பமு
மையிரு பொருத்தமு மாக
மெய்யுரை யாப்பை விளக்கிய தொகையே.

நான்காவது - யாப்பதிகாரம் - முற்றிற்று
ஐந்தாவது - அணியதிகாரம்


301. கலையணிச் செல்வன் கமலச் சேவடி
தலையணி புனைந்து சாற்றுது மணியே.
302. அணியெனச் சொல்பொரு ளாமிரண் டவற்றுள்
வேற்றுரை வரக்கெடு மணிசொல் லணியுரை
மாற்றினுந் தோன்றிய வணிபொரு ளணியே.

5.1. முதலோத்துச் சொல்லணியியல்

302. சொல்லணி மறிநிலை மிகலெஞ்ச லொப்பென்
றொல்லணித் தொகுதி யொருநான் கென்ப.

5.1.1. முதலாவது - மறிநிலையணி

304. மறிநிலை யுரிமை மாறணி யாயவை
குணமுதல் காரணங் குறிப்பொழுக் கமைந்தே.
305. பொருள்கோளு மறிநிலை போல்வன வாமவை
யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டடிமறி மாற்றென வாகுமெட் டென்ப.
306. யாற்றுப் புனலே யடிதொறும் பொருளற
வேற்றடி நோக்கா விளம்பலி னாகும்.
307. மொழிமாற் றென்ப மொழிகடம் பயன்படும்
வழிபெயர்த் தோரடி வரையுட் கொளலே.
308. நிரனிறை யாநிரை நிறீஇய பெயர்வினை
யிரண்டும் வேறடுக்கி யெதிரினும் வைத்த
நிரையினும் பொருளே நேர்த லென்ப.
309. பூட்டுவில் லென்ப பூட்டிய விற்போற்
பாட்டிரு தலையொரு பாற்பொருள் கொளலே.
310. தாப்பிசை முதற்கடைத் தன்பொரு டருமொழி
யாப்பிசை யிடையே யியம்புத லென்ப.
311. அளைமறி பாப்பே யந்த மொழிமற்
றுளவிடத் துய்த்துத்தன் னுரைப்பொருள் கொளலே.
312. கொண்டுகூட் டென்ப கொள்பொருட் கேற்ப
விண்டடி பலவினும் வினைகொண் மொழியே.
313. அடிமறி மாற்றே யடிபெயர் பொருளவு
மடியிட மாறினு மழியாப் பொருளவும்.

5.1.2. இரண்டாவது - சொன்மிக்கணி

314. சொன்மிக் கணியென்ப சொன்மறி தாலவை
மடக்கிசை யந்தாதி யடுக்கென மூன்றே.
315. மடக்கணி யோர்மொழி மடங்கி வரலவை
யிடையிடு முதல்கடை யிருவழி மடக்கு
மிடையிடா மடக்கு மெனநால் வகையே.
316. இசையந் தாதியே யீற்றுச் சொன்மீண்
டிசைபெற வுருபுவே றெனினு மியைதலே.
317. அடுக்கணி யொருபொருட் கடுக்கிய திரிசொ
லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும்.

5.1.3. மூன்றாவது - சொல்லெஞ்சணி

318. எஞ்சணி யென்ப வெளிதுணர் பலமொழி
துஞ்சில் சிறப்பிற் றோன்றா தொழித்தலே.
319. பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை
யெதிர்மறை யிசைக்குறிப் பெஞ்சணி பத்தே.

5.1.4. நான்காவது - சொல்லொப்பணி

320. ஒப்பணி திரிபியை பொழுகிசையியைபிசை
தப்பில் சமமெனத் தகுநால் வகையே.
321. திரிபியை பொருமொழி சேர்பல் லுருபு
முருபொன் றணைபல வுரையு மென்ப.
322. ஒழுகிசைச் சீரொத் தொழுகிய செய்யுள்போல்
வழுவில வியற்றமிழ் வருதலு மாகும்.
323. இயைபிசை சொல்லுரு பீற்றிலொத் தாதலே.
324. சமமென்ப மாத்திரை தவுதல் வேற்றெழுத்
தொன்றுற லன்றி யொன்றிய சொல்லே
மற்றவற் றிளமா மாத்திரைச் சுருக்கந்
திரிப தாதி சேர்ந்தன பிறவே.
325. சொல்லணி மறிநிலை யைந்துங்கோ ளெட்டுஞ்
சொன்மிக் கணிமூன்றுஞ் சொல்லெஞ் சணிபத்துஞ்
சொல்லொப் பணிநான்குந் தொகையா றைந்தே.

முதலோத்துச் சொல்லணியியன் - முற்றிற்று

5.2. இரண்டாமோத்துப் பொருளணியியல்

326. பொருளணி யாறைம் புணர்ப்பெனத் தன்மை
யுரியபல விகற்ப வுவமை யுருவகம்
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை தானே
யொட்டணி யவநுதி யூகாஞ் சிதமே
நுட்பம் புகழ்மாற்றே தன்மேம்பாட் டுரையே
பின்வரு நிலையே முன்ன விலக்கே
சொல்விலக் கிலேசஞ் சுவையே யுதரத்த
மொப்புமைக் கூட்ட மொப்புமை யேற்றம்
விபாவனை விசேடம் விரோதப் பிறிதுரை
விடையில் வினாவே வினவில் விடையே
சித்திர மொழிபமைவு சிலேடை சங்கீரண
மித்திறத் தனையவு மியம்பினர் கற்றோர்.
327. தன்மை யணியே தன்பொருட் குரிய
வன்மை பலவும் வழுவா துரைத்தலே.
328. உவமை யென்ப துரிக்குணத் தொழிற்பய
னிவற்றொன்றும் பலவு மிணைந்து தம்மு
ளொப்புமை தோன்றச் செப்பிய வணியே.
329. உவமை விகற்பித் துரைக்குங் காலை
விரிவே தொகையித ரேதரம் விபரித
மறுபொரு ணியம மைய மின்சொல்
கூடா வுவமை கோத்த மாலை
யுண்மை யெனவிவை யுவமை வகையே.
330. விரிவென விருபொருள் விதித்திற முருபிவை
தெரிவுற விரித்துச் செப்புதன் மற்றுந்
தொகையொப் பாங்குணந் தொழில்பயன் றொகலே.
331. இதரேதர மென்ப விருபொருண் மாறலே.
332. விபரீத பொருளா விளம்பிய வுவமையே.
333. மறுபொரு ளாம்பொருள் வந்தொப் புரைத்தலே.
334. நியமமாம் பிரிநிலை யேகா ரம்வந்
தியனிக ரொன்றுரைத் தேனைய நீக்கலே.
335. ஐயங் கொண்டன விருபொரு ளறைத
லைய வுவமை யாகு மென்ப.
336. இன்சொல் லுரிமையா மிணையிவை யென்ற
பின்சொல் லியபொருட் பெற்றிமி யுரைத்தலே.
337. கூடா வுவமையே கூறின நிகர்க்கண
ணூடா தவைபொருட் குரியன வெனலே.
338. மாலை யுவமையா மருவிய பலநிகர்
மாலையாக் கோத்தபின் வனைபொரு ளியம்பலே.
339. உண்மை யுவமையா முவமை மறுத்தென
நுண்மையிற் பொருடிற நுவன்று விளக்கலே.
340. உவமை வழுவென்ப வுரியபான் மாற
றவன்மிக லுயர்த றாழ்தலென் றைந்தே.
341. உருவக மென்ப வுவமை வேறு
பொருள்வே றின்றிப் புணரத் தொடுத்தலே.
342. வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கி
யீற்றி னுதலிய வேற்றி யுரைத்தலே.
343. வேற்றுமை யென்ப முன்னாற்றிய விருபொருள்
சாற்றிய வுவமையில் வேற்றுமைப் படுத்தலே.
344. ஒட்டெனத் தன்பொரு ளுரையா துவமை
சுட்டலி லப்பொரு டோன்ற வியம்பலே.
345. அவநுதி யென்ப வாய்மெய் மறுத்துமற்
றிவறிய வொன்றனை யேற்றி யியம்பலே
யுருவகங் கூட்டி னெண்சிறப் பாகும்.
346. ஊகாஞ் சிதமென்ப வுரிமை யொழித்துமற்
றாகோர் குறிப்பொரு ளறைந்து பொருத்தலே.
347. நுட்பமாந் தெளிவுற நுவலாத வற்றையு
முட்படுத் திடுங்குறிப் புரையரி துணர்த்தலே.
348. புகழ்மாற் றென்ப புகழ்வது போலிகழ்ந்
திகழ்வது போற்புகழ்ந் தியம்பிய நிலையே.
349. தன்மேம் பாட்டுரை தான்றற் புகழ்தலே.
350. பின்வரு நிலையே பிறழ்ந்தெனப் பலவயின்
முன்வருஞ் சொல்பொருள் பின்னும் வருவதே.
351. முன்ன விலக்கென்ப முன்னத்தின் மறுத்தலே.
352. சொல்விலக் கொன்றனைச் சொல்லிய பின்னஃக
தல்லென மறுத்தல்போ லதுமிக விளக்கலே.
353. இலேசமே கருத்தொளித் திடவதைக் காட்டுஞ்
சத்துவம் பிறிதிற் சாற்றி மறைத்தலே.
354. சுவையணி யென்ப சுடுஞ்சினங் காமம்
வியப்ப வலமிழிவச் சம்வீர நகையென
வெண்மெய்ப் பாட்டி னியைவன கூறி
யுண்மெய்ப் பாட்டை யுணர்த்தித் தோற்றலே.
355. 355.உதாத்தம் பொருளிற் பதார்த்த மிகலே.
356. ஒப்புமைக் கூட்ட மொத்த குணத்தவை
செப்பித் தன்பொரு டெளிவுறக் கூறலே.
357. ஒப்புமை யேற்ற மொன்றற்கொன் றுமிகச்
செப்பிய பலவின்மேற் செய்பொரு ளேற்றலே.
358. விபாவனை யென்ப விளங்கிய வுலக
சுபாவனை யலத்திறந் தோற்றி யியம்பலே.
359. விசேட மெனக்குறை விளம்பி யவற்றான்
மேன்மை படப்பொருள் விளக்கிய நெறியே.
360. விரோத மென்ப விகற்ப முரண்படு
மன்னிய சொற்பொரு ளுன்னிய மாக்கலே.
361. பிறிதுரை யணியே பெருந்துயர் முதற்காட்ட
முன்னிலை யாரொடு மொழித லொழித்துப்
பன்னிலை யாரொடு பகர்த லென்ப.
362. விடையில் வினாவே விடைவேண் டாமையு
மடைய லாரையு மஃறிணை யவற்றையு
மனவியப் பாதி வழங்கப் பலகுணம்
வினவினாற் போல விளம்பிய நிலையே.
363. வினவில் விடையே வினவினா லெனப்பிறர்
மனவுணர் வுரைத்து மறுவுரை கூறலே.
364. சித்திர வணியே தீட்டிய படவடி
வத்திறத் தனைத்தையு மையென வகுத்தலே.
365. ஒழிபணி பலவற்றை யொழித்தன வுரைத்தலே.
366. அமைவணி யலலவு மாமென் றதுபோற்
சமைந்து மற்றொன்றன் றகவெழ வியம்பலே.
367. சிலேடை யென்ப திரிசொல் பலவிணைந்
திருபய னாக வொருதொடர் புரைத்தலே.
368. சங்கீரண மென்ப தகும்பல வணிவகை
கொங்கீரத் தொடையெனக் கூட்டிக் கூறலே.
369. சொல்லணி யாறைந்தும் பொருளணி யையாறும்
புல்லணி யிருவகை புணர்ந்த தொகையென
முத்தமிழ்க் கிவையெலா முகமறை சிகைபொறை
யத்தகைத் தாகர வணிகல னாகக்கொண்
டெந்நூற்கு முதலாம் யுத்தி யஃதில்லா
லந்நூல் பித்த னகங்கை வாளென்ப.
370. எந்நூ னிலையினு மியைபெலா முணர்த்துது
மந்நூ லரியதென வஃ கினு மொறுநூல்
காட்டிய பலநடைக் கடைப்பிடித் தவற்றொடு
கூட்டிய மற்றவை கொள்ப நல்லோரென
வெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யென்றிவண்
வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கித்
தொன்னூ னடையொடு சிறந்த புறநிலைப்
பன்னூ னடையிற் பழையன கழிதலும்
புதியன புகுதலும் புலமையின் மிக்கோர்
விதியென விம்முறை விரும்பி வழுவில
முந்நூல் விளக்கிய முத்தமிழ்த்
தொன்னூல் விளக்கந் துலங்கிய வாறே.

இரண்டாமோத்துப் பொருளணியியல் - முற்றிற்று

ஐந்தாவது - அணியதிகாரம் - முற்றிற்று

மாணாக்கன் றெழுதுரைத்த வாறுகாண்க

மெய்ப்பொரு ளொருபொருண் மேவி யேத்தவுஞ்
செப்பரு மறைப்பொரு டிசையெலாம் வழங்கவும்
வேதப் பயன்றரும் வெளிறில வாயா
லோதித் தொன்னூ லுடைப்பயன் பொதுப்படச்
செந்தமி ழுணர்ந்து தெளிந்த முன்னோர்
தந்த நடையொடு சிலபுர நடையியைந்
தெண்ணைந் தெழுத்துஞ் சொன்னூற் றிரண்டு
மெண்ணே ழிரண்டு பொருள்யாப் பொருநூறு
மெண்ணெட் டாறணி யெனச்சூத் திரத்தொகை
யெண்ணாற் பத்தைந்து மீரைந்து மாக
வருந்தமி ழிலக்கண மைந்தையும்
விரித்து விளக்கினன் வீரமா முனியே.

வெண்பா

ஆதி நூலோதிய வோராதிப் பொருடேரா
னோதி நூலாய்ந்து முணர்வானோ - கோதினூற்
கற்றாலுங் கற்றபய னுண்டோ வக்கடவு
ளெற்றாலு மேத்தாக் கடை.


இந்நூற்குக் கலைவல்லவர் தெருட்குரு வென்னுஞ் சிறந்தநாமஞ்
சூட்டினர். அஃதென்னையோவெனின்:

கட்டளைக்கலித்துறை

அருட்கலைஞோர் முத்தமிழ் நூலுரைத்த வறமுதனாற்
பொருட்களை யாய்ந்துழி வல்லோர்தெரித்த புதைபொருளின்
மருட்களை நூக்கிப் பொருட்பயன் சூட்டி வழுத்துதலாற்
றெருட்குரு நாமந் தொன்னூல் விளக்கிற்குச் சிறந்ததுவே.

முன்னூற்றுளக்கிய வைந்திலக்கணத்
தொன்னூல் விளக்கம் முற்றிற்று