உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தை வீடு/001

விக்கிமூலம் இலிருந்து

ஒத்தை வீடு

அந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு வண்ணக்கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று; திடுதிப்பென்று பின் வாங்கியது. வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறிய படியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின. அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்றுவதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மாவான சொர்ணம்மா, பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள். ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறு காலைப் பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலது கர வளைவில் ஒரு தோல்பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப்பட்டதுபோல், கிடந்தது. வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தான் வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த மகிழ்ச்சியுடன், அக்காவைப் பார்த்த எதிர்பாராத மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, காந்தாமணி அக்காவை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்த்தான். மனைவியைக் கண்களால் தேடிப்பார்த்தான். கண்ணில் படவில்லை. மீண்டும் அம்மாவை விட்டு விட்டு அக்காவையே பார்த்தான். அவள், தான் வந்தது தம்பிக்கு பிடிக்கவில்லையோ என்று அனிச்சமலராய் ஆகும் வரை பார்த்தான். அப்புறம்தான் பேசினான்...

“எப்போக்கா வந்தே...”

“இன்னிக்கு காலையிலதான்...”

“அறுவடை சமயம்... அடைமழை நேரம்... ஏன் இப்படி திடுதிப்புன்னு...”

“நான் சொல்லாமல் கொள்ளாமல் வரப்படாதா...?”

“ஒம்மா புத்தி... ஒன்னை விட்டுப் போகுமா... நிலத்தை வித்துட்டோ விற்காமலோ என்னோட தங்கிடுன்னு சொல்றவன் நான்?”

இதற்குள், “என் புத்தில் என்னடா கண்டே...” என்று முற்றத்து மேல் திண்ணையில் நின்ற சொர்ணம்மா, வீதிக்கே ஓடிவந்தாள். அறுபத்தைந்து ஆண்டுகளைக் கொண்ட மொக்கையான முகம் கண், வாய், மூக்கு, காது ஆகியவை அந்த மொக்கையில் தனித்தனியாய் ஒட்டப்பட்டது போன்ற தோற்றம்... பின் நெற்றி முன் தலையை ஆக்கிரமித்தது போல் பொட்டல்... அதில் ஒரு பள்ளம்... பள்ளத்தாக்கைச் சுற்றிய மரங்கள் போல், அந்தப் பள்ளத்தைச் சுற்றிய முடிக் கற்றைகள்... காந்தாமணி, தம்பியிடம் இருந்த சூட்கேஸையும், ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டிருந்தபோது, சொர்ணம்மா அங்கேயே, அந்த நிமிடமே ஒப்பித்தாள்...

“ஊர்ல... ஆறு மாசமா பேச்சு மூச்சி இல்லாமக் கிடந்த பாவிப் பயலுவ. பழையபடியும்... புத்தியக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். அக்காவோட நிலம் இருக்கு பாரு... மூணு மரக்கால்... நாலு செண்டு... அசல் பட்டா இடம்... அதுல வண்டிப் பாதை வேணுமுன்னு ஊர்க்காரனுவ கேட்டாங்களாம்... அக்கா, பட்டா நிலமுன்னு சொல்லியும் கேட்காமல், ஊர்க்காரனுவ வண்டி அடிக்காங்களாம். நிலத்துல முளைச்ச காணப் பயிருல்லாம் கரையான் புத்தாய் ஆகிட்டாம்... அவங்க நாசமாப் போகணும்... போன இடம் புல்லு முளைச்சுப் போக... நீதான் பழையபடியும் பெரிய இடத்துல சொல்லணும்... இந்தத் தடவை... அவங்க காலுல கையில விலங்கை மாட்டி... போலீஸ் இழுத்துட்டுப் போறதுக்கு, நீ ஏற்பாடு செய்யணும்...”

“ஒனக்கு மூளை இருக்குதாம்மா...? தம்பி வந்ததும் வராததுமாய்...”

மனோகர், அக்காவையே பார்த்தான். பார்க்கப் பார்க்க எரிச்சலும், பாசமும் மாறி மாறி வந்தன. உச்சிமுதல் பாதம் வரை சமச் சீரான உடம்பு. பச்சைக் கருப்பு... பச்சையான கருப்பல்ல... பாசிப் பச்சையும், நீலக் கருப்பும் கலந்து குழைந்த வாளிப்பான நிறம். எலும்புகள் தேக்காகவும், நரம்புகள் பித்தளை ஒயர்களாகவும், சதைகள் செப்புக் கட்டிகளாகவும் உருவெடுத்து, எஃகு போன்ற தோலுக்குள் அடங்கியது போன்ற மல்லுடம்பு...

மனோகர், எதுவும் பேசாமல் உள்ளே வந்தான். முற்றத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து பின்பக்கமாய்ச் சாய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அக்கா கொண்டு வந்த ஒரு செம்புத் தண்ணீரை தூக்கிப்பிடித்து, நீரை அருவியாகவும், வாயைப் பள்ளத்தாக்காகவும் ஆக்கிக் கொண்டிருந்த போது, சொர்ணம்மா சொன்னதையே மாற்றிச் சொன்னாள்...

“பட்டா நிலத்துல வண்டிப் பாதை போடுறத்துக்கு, எங்கப்பனுக்கு பிறந்தானுவளா? இல்லை ஒன் மச்சானுக்குப் பிறந்தானுவளா... எவ்வளவு கொழுப்பு இருந்தால்... அடுத்தவன் நிலத்தை வாயில் போடுவானவ...? அவனுவ துள்ளத் துடிக்கப் போவனும்... கொள்ளி போட பிள்ளை இல்லாமல் போகிற இடத்துல சாகணும்... வாந்தி பேதில போகணும்... மனோகர்! இத விடப்படாதுடா... இப்பவே போன் போட்டு, அவங்க கையில காலுல விலங்கு மாட்டி, போலீஸ்காரன் அவனுவள நடு ரோட்ல நாய இழுத்துட்டுப் போற மாதிரி போக வைக்கணும்... யாரை விட்டாலும் அந்த ராமசாமியை மட்டும் விடப்படாது... கொள்ளையிலே போவான்.”

மனோகர் பாதிச் செம்புத் தண்ணீரைத் தரையில் வீசியபடியே, புரையேறிய தலையோடு சீறினான்.

“சும்மா கிடம்மா... எக்கா... ஆறு மாதத்துக்கு முன்னாலதான் இதே மாதிரி பிரச்சினையில் தலையிட்டு, ராமசாமி வகையறாக்களை உள்ளே போட்டோம்... போலீஸ் என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், ஒரு தடவதான் சொல்லலாம்... அடுத்த தடவ சொன்னால்... நமக்குத்தான் அசிங்கம்...”

அக்கா, காந்தாமணி, அசைவற்று பேசாமல் நின்றபோது, தாய்க்காரி மகளுக்கும் சேர்த்துப் பேசினாள்.

“இந்தப் பாவி மொட்டக்கிட்ட, காலையிலேயே படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... ஒன் தம்பியை நம்பாதே நம்பாதேன்னு தலையில அடிக்காத குறையாச் சொன்னேன்... அவன் பழைய மனோகர் இல்ல... வீட்டுக்குக் கெட்ட பிள்ளையானாலும் பரவாயில்ல... ஊருக்கு நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைக்கான்னு சொன்னேன். கேட்டியாடி... என் பேச்சை...? எப்படிப் பலிச்சிட்டு பாரு!”

மனோகர், அதட்டினான்...

“எம்மா... இதுக்கு மேலே பேசினே... திண்ணைக்குக் கூட வராமல், திரும்பிப் பாராமல் போயிடுவேன்... நீயும் சண்டைக் கோழியாய் நிற்கப்படாதுக்கா... ஊரையும் அனுசரித்துத்தான் போகணும்... ஊர்ப் பாதைக்குத்தானே கேட்டாங்க... பெருந்தன்மையா விட்டுக் கொடுக்கலாமில்ல?”

“இந்தா பாருப்பா... நீ செய்யணும் என்கிறதுக்காக நான் வரல... ஒன்னைப் பார்க்கறதுக்காகக் கூட வரல என் புது நாத்தனாரைப் பார்க்க வந்தேன்... பார்த்துட்டேன்... நாளைக்கே போயிடுவேன்... கவலைப்படாதே..”

“மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும்... சரி விவரமாய்ச் சொல்லு...”

“ஊர்ப்பாதை... வெள்ளையன் தோட்டத்தோட முடியுது... அதுக்கு நேரா... சீமைச்சாமி நிலம், நீள வாக்குல இருக்குது... அதுல பாதை கேட்கலாமில்ல? அதவிட்டுட்டு, பத்தடி தள்ளி இருக்கிற என் நிலத்துல கேட்கிறது என்ன நியாயம்...? ஊர்ப்பாதையை வளைச்சு என் நிலம் வழியாய் விடாமல், சீமைச்சாமி நிலம் வழியா நேராய் விடலாம் இல்லியா... ஏன் விடல? ஏன்னா, சீமைச்சாமிக்கு ஆள் பலம் இருக்குது... நான், நாதியத்தபய மகள்... இல்லாதவன் பெண்டாட்டி... எல்லோருக்கும் இளக்காரமான மயினிதானே...?”

அம்மாக்காரி, சவாலிட்டாள்.

“நான் இருக்கும்போது நீ... எப்படி நாதியத்துப் போவே... நாளைக்கே நானும் ஊருக்கு வாரேன்... எந்தப் பயல் வண்டியடிச்சுட்டு வந்தாலும் முன்னால போய் நின்னு மூக்கணாங் கயிறைப் பிடிக்கேன்...!”

மனோகர், சளைத்தான்.

“சீச்சீ... இது வீடா...? ஒரு மாசம் நிம்மதியாய் டில்லியில் இருந்தேன். ஒருவன் கிட்டச் சிபாரிசுக்கு போறது பிச்சை எடுக்கிறது மாதிரின்னு யாருக்கும் தெரியல...”

“ஒங்களுக்குத்தான் தெரியல... ஊர்க்காரன், இருக்கிறவன் நிலத்தை விட்டுவிட்டு, இல்லாதவன் நிலத்தை பிடுங்க வந்தால் எப்படிங்க? பாதி நிலத்தை வேணுமுன்னா, ஊர்ப்பொதுப் பணத்துல வாங்கிக்கன்னு அண்ணி சொல்லி இருக்காங்க... அதுக்கு முடியாதுன்னா... அது அடாவடிதானே?... ஊர்க்காரன், ஆள் பலத்தை தப்பா பயன்படுத்தும் போது... நீங்க ஒங்க பேட்ச் மேட் எஸ்.பி.கிட்ட இருக்கிற நட்பை சரியா பயன்படுத்துறதுலே என்ன தப்பு...?”

மனோகர், நிமிர்ந்து பார்த்தான்... ஈரம் கசிந்த தலைமுடியை பின்பக்கமாய்த் தட்டி விட்டபடியே, சங்கரி அவனைப் பார்த்தாள்... அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் ரசனை கண்டு நின்றாலும், போவது போல் பாவலா செய்த பக்கத்து வீட்டு உமாவை அழுந்தப் பிடித்தபடியே, கணவனுடைய பதிலுக்காகக் காத்து நிற்பவள் போல் முகம் தூக்கி நின்றாள்... மனோகர், எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்தான்... ஒரு மாதப் பிரிவிற்குப் பிறகான பரிவுப் பார்வை... அவள் உடலெங்கும் கண்களை ஊடுருவ விட்டபடி பார்த்துக்கொண்டே இருந்தான். சங்கரி மீண்டும் அவனை உசுப்பினாள்.

“இதையாவது செய்யுங்க...”

மனோகரின் பிரிவுப் பார்வை, பரிதாபப் பார்வையானது... அவளை ஊடுருவிப் பார்த்தக் கண்கள் தன்னைத்தானே உள்முகமாய்த் தேடின... ‘இதையாவது செய்யுங்கன்னு எந்த அர்த்தத்தில் சொல்றாள்? யதார்த்தமா... இல்ல குத்தல... நோ... நோ... அவள் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியலியே...’

அக்கா காந்தாமணி, நிலைமையைச் சமாளித்தாள்.

“சரி... சரி... நாளைக்கு ஆற அமரப் பேசலாம்...”

“பேசாம இங்கேயே வந்திடுக்கா...”

“அதையும் சேர்த்து நாளைப் பேசலாம்... எம்மா! சங்கரி... மொதல்ல தம்பி குளிக்கட்டும்... வெந்நீர்ல குளிச்சாத்தான் அலுப்பு தீரும். உடல்வலி போகும்... கீசரப் போடு...”

“கீசரு ரிப்பேரு அண்ணி...”

“நல்ல பொண்ணு... அப்போ அடுப்புல போடு... தண்ணி சூடாகணும்... அவ்வளவுதானே...?”

சங்கரி, கணவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே உள்ளே சமையலறைக்குள் போகப் போனாள்... பிறகு திரும்பி வந்து திண்ணையில் வைக்கப்பட்ட சூட்கேஸைத் தூக்க முடியாமல் தூக்கியபடி நின்றாள்... இன்னொரு லெதர் பேக்கைக் கண்களால் சுட்டிக் காட்டி, உமாவைத் தூக்கி விடும்படி அதே கண்களால் கெஞ்சினாள்... ஆனால் உமா, கண்டுக்கவில்லை... ‘அந்நியன் பொருளைத் தொடுவது அவனை தொடுவது மாதிரிதானே... கற்பு கெட்டுப் போகாதா...’

உமா, வெளியே போய்க் கொண்டிருந்தபோது, மனோகர் எழுந்து வீட்டுக்குள் போகப் போனான். அவனையே பார்த்து நின்ற அக்காவின் தோளில் கைபோட்டபடியே, திண்ணைப் படியில் அவன் கால் வைத்தபோது, ஒரு மோட்டார் பைக் சத்தம்... உமாவின் கணவன் இந்திரன், இடது பக்கமாக ஒடிக்கப்போன பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். உமாவை, ‘ஒனக்கென்ன இங்கே வேலை’ என்பது மாதிரி, எள்ளும் கொள்ளுமாய்ப் பார்த்தான். அவளை, அவன் பார்த்த தோரணை, உமாவைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வந்தவன்போல் தோன்றியதே தவிர, மனோகரை பார்க்க வந்தவன்போல் தோன்றவில்லை. ஆனாலும், கடித்த பற்களை விடுவித்தபடியே ஒப்புக்குக் கேட்டான்.

“என்ன மனோ... டில்லியில் பயிற்சி எப்படி இருந்தது...”

“உட்காருங்க இந்திரன் ஸார்... பயிற்சி... பொல்லாத பயிற்சி...”

“உமா... வீட்டுக்குப் போ... அம்மா தேடுவாள்... அப்போ பயிற்சி பயனில்லன்னு சொல்றீங்க...”

“அரசாங்கத்திலே இந்தப் பயிற்சி என்கிறதே ஒரு ஏமாத்து நாடகம்... மேலிடத்துக்குப் பிடித்தவங்க அதை... கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்கிறவங்க... ரிட்டயர்டாகிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்ன கூட வெளிநாட்டுப் பயிற்சிக்குப் போவாங்க... வேண்டாதவங்கள கழித்துக்கட்ட உள்நாட்டுப் பயிற்சின்னு அனுப்புவாங்க...”

“நீங்க எந்த வகையில சேர்த்தி...?”

“இரண்டுலயும் சேர்த்தி இல்ல... எங்க சர்வீஸ் அதிகாரிங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்குன்னு டில்லியில் ஒரு நிறுவனம் இருக்குது... இப்போ பயிற்சியாளர்கள் அதிகமாகவும், பயிற்சி பெறுகிறவங்க குறைவாகவும் ஆகிப் போச்சு... ஆள் பஞ்சம். இதனால் என்னை வரச்சொல்லிட்டாங்க... ஆனாலும் சும்மா சொல்லப்படாது... தமிழக அரசின் இல்லத்தில் ஏஸி ரூம்... அருமையான சாப்பாடு. தகராறுக்கு வராத ஆட்டோ டிரைவர்... அப்புறம் சைட் அடிக்கிறதுக்கு ஏகப்பட்ட அழகிகள்...”

மனோகர், குரலைத் தாழ்த்திப் பேசியபோது, இந்திரன், உமா போய்விட்டாளா என்று கண்களைச் சுழற்றி ஒரு தாவு தாவி விட்டு, கிசு கிசுப்பாகக் கேட்டான்...

“ஏதாவது சிக்கிச்சுதா பிரதர்...? எனக்கு சல்வார் கம்மீஸ்களை ரொம்பப் பிடிக்கும்...”

“இதுல ஒரு வேடிக்கை தெரியுமோ இந்திரன் ஸார்... டில்லிப் பஸ்ல அடித்துப் பிடித்து உட்காருவீங்க... ஒருத்தி, அதுவும் அழகான இளம் பெண்... பொத்துன்னு ஒங்க இருக்கைப் பக்கம் உட்காருகிறாள்... உங்களை நெருக்கியடித்துக் கிடக்காள்... தோளில் தோள் படுது... கையிலே கை படுது... ஆனால் நீங்க ஆயிரத்தெட்டு ஆஸ் தொல்லையால, அவள் உட்கார்ந்ததையே கவனிக்கல... அவள் ஆர்.கே. புரத்துல இறங்குறாள்... இறங்குன இடத்துல, இன்னொருத்தி ஏறுறாள். ஒங்க இருக்கைப்பக்கம் இடைவெளிவிட்டு உட்காருறாள்... நீங்க உஷாராகுறீங்க... பக்கத்துல ஒரு அழகுப் பெண் இருக்கிற கித்தாப்பு... ஒங்களுக்கு வந்துடுது... அவளைத் தொடாமலேயே பரவசமாகிறிங்க... உடனே அந்தப் பெண், திடுக்கிட்டு உங்களை முறைக்கிறாள்... பஸ் மோதி பாக்கு என்கிற இடத்துல நிற்கும்போது, வேற ஒரு சீட் காலியாயிடுது... அதுல போய், உட்காருகிறாள்... இதுக்கு என்ன அர்த்தம் ஸார்...? இதுக்குப் பேர்தான் டெலிபதியோ... இதுக்குப் பேர்தான் உள்ளுணர்வோ... ஆச்சரியமாய் இருக்குதுல்ல...”

இந்திரன் ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லப் போனபோது, சங்கரி திண்ணைக்கு வந்து அறிவித்தாள்...

“வெந்நீர் ரெடி காப்பி குடிக்கிறீங்களா ஸார்...”

“நோ தேங்ஸ்... சாப்பாட்டுச் சமயம் பாருங்கம்மா... அப்புறம் ஒங்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பரீட்சை ரிசல்ட் வந்ததும், என்கிட்டச் சொல்லுங்க... கமிஷன்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க... இன்கம்டாக்ஸ், என்போர்ஸ்மெண்ட், சி.பி.ஐ., இப்படிப்பட்ட பவர்புல் டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங்க போடச் சொல்றேன்...”

“எந்த டிபார்ட்மெண்ட்ல வேணுமுன்னாலும் போட்டுட்டுப் போகட்டும்... முதல்ல பாஸாகிறேனானு பார்ப்போம்...”

“நீங்க பாஸாகாட்டால், யாருமே பாஸாக முடியாது... எங்க உமா மாதிரியா நீங்க...? சரியான மக்கு... இரண்டு தடவ எழுதியும் தேறல... நீங்க... மனோகர் மாதிரி கிளாஸ் ஒன் சர்வீஸ் எழுதணும்...”

“நீங்க மட்டும் இன்டெலிஜெண்ட் இல்லியா... இவர மாதிரி... நீங்களும் எழுதி இருக்கலாமே...?”

“புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்... சம்பளத்தை நம்பி மோசம் போயிட்டேன்... கழுதை மேய்த்தாலும் சர்கார் கழுதையை மேய்க்கணும் என்கிறது மறந்து போச்சு...”

“இப்போ மட்டும் ஒங்களுக்கு என்ன குறை... இருக்கிறதை வைச்சே நீங்க திருப்திப்படலாம். அய்யய்யோ... வெந்நீர் ஆறிடும்... ஒங்களைத்தான் எழுந்திருங்க...”

மனோகர் எழுந்தான்... அவன் உள்ளே போனாலும், தான் வெளியே போகப் போவதில்லை என்பது போல், இந்திரன் நாற்காலியில் கைகளை விரித்துப் போட்டான். இதற்குள், வெளியே தெருவில் சத்தம். சொர்ணம்மாவுக்கும், பத்து பாத்திரம் தேய்க்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்கும் வாயத் தகராறு. ஒடிந்து விழுவது போல் மார்பற்றுப் போன அந்தப் பெண், போராளியாய் பேசினாள்... அந்த வீட்டு காம்பவுண்டு சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்த செவ்வரளி கிளைகளைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.

“அதோ... அதுல நேத்து ரெண்டு பூ பறிச்சது நிசந்தான்... நீ சத்தம் போட்டதும், ஒன் கிட்டயே அந்தப் பூவைப் போடலியா... ஆனா, இன்னிக்கு சாமி சத்தியமா நானு பூப்பறிக்கல...”

“சரியான புழுகிணிடி... அதெப்படி... நேற்று ரெண்டு பூ இருந்த இடத்துல இன்னைக்கு இல்லை...? சொல்லு... பதில் சொல்லுடி...”

“சரியான மாங்காய் மண்டையாய் இருக்கியே... பூத்த இடத்துலேயே பூக்கணுமுன்னு சட்டமா...”

“யாருடி மாங்கா மண்டை...? பன்னாடைப் பயமவளே... பல்லை... உடைப்பேன்... இன்னொரு தடவை சொல்லுடி பார்க்கலாம்...”

"மாங்காமண்டை மாங்கா மண்டை"

மனோகருக்குக் கோபம் வந்தது. இந்திரனுக்குச் சிரிப்பு வந்தது. கோபக்காரன், குரோதமாய்க் கேட்டான்...

“இந்தா பாரும்மா. மரியாதையா போயிடு... வம்புச் சண்டைக்கு வந்தே, போலீஸ்ல ஒப்படைக்க வேண்டியது வரும்...”

“சரியான எட்டன் நீ... போலீஸ்ல ஒரு வாரம் வச்சிருப்பான்... அங்கேயே குடித்தனம் செய்யவா விடுவான்? ஒனக்கெல்லாம் இம்மாம் பெரிய உடம்பு எதுக்குய்யா? அம்மாக்காரிய அடக்குறதுக்கு வக்கில்ல... வந்துட்ட பெரிசா... தல காஞ்சவங்கள்னா இளக்காரமா...? எனக்கும் செட்டு இருக்குய்யா...”

“அடியே... செருப்பால அடிப்பேண்டி...”

“பாத்தியா... அந்த தத்தேறிப் பேசுற பேச்சை... சின்னப் பிள்ளாண்டான் மாதிரி நிற்கிறே... அந்தக் கஸ்மாலக் கெய்வியை தள்ளிட்டுப் போய்யா...”

மனோகரின் உதடுகள் துடித்தன. கண்கள் எரிந்தன... கைகள் துடித்தன... ஆனால் கால்கள் அந்தப் பெண்ணை நோக்கி நகர மறுத்தன. நல்ல வேளையாக காந்தாமணி ஓடி வந்து அம்மாவை, மாட்டை இழுப்பது போல் இழுத்துக்கொண்டு போனாள். சங்கரி, கணவனின் கையை பிடித்து இழுத்தபடியே, எரிச்சலாய்ப் பார்த்த அந்தப் பத்துப் பாத்திரத்தை, தங்கப் பாத்திரத்தைப் பார்ப்பது போல் பார்த்து, ‘பேசினது தப்புத் தான்... நீ போம்மா...’ என்று கெஞ்சினாள். ‘அப்படி சொல்லு மவராசி...’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குதிபோட்டு நடந்தாள்...

வீட்டுக்குள் கோபமாய்க் காலடி வைத்த மனோகர், தூக்குபையை, காலால் இடறியபடியே மாடிக்குப் போனான். காந்தாமணியும் சங்கரியும் சமையலறைக்கு வந்தார்கள். சொர்ணம்மா, அங்கேயும் வந்து ஆடினாள்.

“அடியே காந்தாமணி... எனக்குன்னு இப்படி ஒரு மருமகள் வாய்த்திருக்காள் பாரு... அவள் தலையை இழுத்து... யாருடி மாங்கா மண்டைன்னு ரெண்டு கேள்வி கேட்டு, நாலு சாத்துச் சாத்தாம, எதிரிகிட்ட தோப்புக் கரணம் போடுறாள் பாரு...”

“தப்புத்தாம்மா... நாளைக்கு வட்டியும் மொதலுமாத் திட்டுவாள்... நீ பிள்ளையாருக்கு விளக்கேத்திட்டு வா..”

அம்மா போனதும், கேஸைப் பொருத்திய காந்தாமணி கீழே குனிந்து, நாத்தனார் கையில் இருந்த சப்பாத்திக் கட்டையை பறித்தபடியே கூறினாள்...

“நீ... மாடிக்கு போயேன்... நான் சமையல் வேலையைப் பார்த்துக்கிறேன்...”

“வேண்டாண்ணி... அப்புறமாய்ப் போறேன்... அவரு பசியோட இருப்பாரு...”

“அதனாலதான் போகச் சொல்றேன்... ஒரு மாதப் பசி பாரு...”

காந்தாமணி, சங்கரியைப் பார்த்து கண்களைச் சிமிட்டினாள்... அவளோ, தலையைத் தாழ்த்திக் கொண்டு, சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். இதற்குள் மாடிக்கு போன மனோகர், வேடம் கலைத்து, லுங்கி பனியனோடு சமையல் அறைக்குள் வந்தான். அக்காவை அங்கே எதிர் பாராதது போல், ஆள்காட்டி விரலை வாயால் கடித்தான். காந்தாமணி, தம்பியையும் சங்கரியையும் மாறி மாறிப் பார்த்துப் பூரித்துப் போனாள்... ஆயிரம் பெண்களை ஒதுக்கி, ஆயிரத்தில் ஒருத்தியாக இந்த சங்கரியை தம்பிக்குத் துணையாக்கியவள் இவள்தான். ‘இந்த ஜோடிக்கு எதிராக எந்த ஜோடியும் இருக்க முடியாது. மன்மதன் - ரதியே பொறாமைப்பட வேண்டும்... தம்பியை விட இவள் இரண்டு விரல்கட்டைதான் உயரக் குறைவு... தம்பிக்குத் தடிப்போ, மடிப்போ இல்லாத தேகம். நாத்திக்கு வயிறு தெரியாத லாவகம்... கொஞ்சம் ஒல்லியானாலும் மல்லி... கல்யாணமானதும் பூரிப்பில் தடிக்க வேண்டும். இன்னும் தடிக்கல. ஆனாலும் வளைவில்லாத மூக்கு... பயித்தங்காய் விரல்கள்... அடர்ந்த முடி... படர்ந்த முகம். தம்பி மட்டும் லேசுபட்டவனா. மாநிறம்... என்றாலும் அதில் ஒரு பளபளப்பு... ராஜ பார்வை... கோணாத உடம்பு... கோடு போட்டது மாதிரி சமமான தோளு... எம்மாடி... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’

சமையலறைக்குள் அல்லாடிய மனோகரை, ‘நீ மொதல்ல வெளில் போடா...’ என்று மொதலுக்கு இரட்டை அழுத்தம் கொடுத்தாள்... அவன் போனதும், மாவு பிசைந்த சங்கரியை, அப்படியே தூக்கி, இரண்டு கைகளையும் குவித்து, குவித்துப் பிடித்தபடியே இழுத்து, வாஷ் பேசினுக்குக் கொண்டு வந்தாள்... நாத்தியின் கைகளைக் கழுவி விட்டாள்... தலை முடியை ஒதுக்கி விட்டாள். முகத்தை ஈரக்கையால் பாலீஷ் போட்டாள். பின்னர் அவள் முதுகைத் தள்ளித் தள்ளி, மாடிப் படிகளின் முனையில் விட்டாள்... அவள் படியேறி மேலே மறைந்த பிறகுதான், சமையலறைக்குள் வந்தாள்... அவளுக்கு முன்னால், அம்மா, அங்கே நின்றாள். மகள் வந்ததும் வராததுமாக அவள் காதைக் கடித்தாள்...

“ஒரு மாசம் கழிச்சு... புருசன் வந்திருக்கான். அவள் முகத்துக்குப் பௌடர் போடல... கண்ணுல் ஒரு கிறக்கம் இல்ல... வாயில ஒரு சின்னச் சிரிப்புக்கூட இல்ல... இவள்ளாம் ஒரு பொம்புளையாம்... சரியான ஆம்புளப் பிறவி... இந்த மாதிரி சமயத்துல... அந்தப் பாவி மனுஷன் வெளியூர்ல மூணு நாள் தங்கிட்டு வந்தாக்கூட போதும்... நான் முகத்த அலம்பி... பொட்டு வச்சு... பூ முடிச்சு...”

“என்னம்மா... நீ... நான் ஒன் மகள்... என்கிட்ட போயி...”

“ஆபத்துக்குத் தோசம் இல்லடி...”

“மொதல்ல இங்கிருந்து போம்மா...”

அம்மா போய்விட்டாள். ஆனால் அவள் சொன்னது போகவில்லை... ஒரு வேளை அம்மா நினைத்தது மாதிரியே இருக்குமோ... எப்படிக் கண்டுபிடிக்கலாம்...

கைகளை சொடக்குப் போட்ட காந்தாமணிக்கு, அவர்களது அந்தரங்கத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழி கிடைத்தது...

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒத்தை_வீடு/001&oldid=1854361" இலிருந்து மீள்விக்கப்பட்டது