உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தை வீடு/006

விக்கிமூலம் இலிருந்து

6

சங்கரி, கட்டிலில் குப்புறக் கிடந்தாள். கண்களை மூடி, இருளில் வியாபித்தாள். மத்தியானம் சாப்பிடவே இல்லை. மாடிப்படி ஏறி வந்தவள், கட்டிலில் துக்க மயக்கத்தில் தொப்பென்று விழுந்தாள். அதுவே தூக்க மயக்கமானது. அண்ணி காந்தாமணி, மாடிக்கு வரத்தான் செய்தாள். அவளைச் சாப்பிட வரும்படி கூப்பிடத்தான் செய்தாள். எப்படி வயிற்றுக்குள் சோறு இறங்கும். அந்தப் பேச்சையும், ஏச்சையும் மாமியாரிடமிருந்து கேட்ட பிறகு, தன்னால் சாப்பிட முடியும் என்று அண்ணி நினைத்தது, அதைவிடக் கொடுமை.

சங்கரி, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தாள். மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா என்று, ஆம் அல்லது இல்லை என்று சொல்லும்படி கட்டாயப்படுத்துவது போன்ற இக்கட்டான நிலைமை. ஆட்டையும் புல்லுக் கட்டையும், புலியையும் சேதாரமில்லாமல் சேர்க்கவேண்டியதுபோன்ற பொறுப்பு. பொறுப்பற்றவளுக்கு பதில் சொல்ல முடியாத பரிதவிப்பு.

அந்த மூன்று நாட்கள் முடிந்த இன்று சங்கரி மஞ்சள் தேய்த்து சாவகாசமாய்க் குளித்து விட்டு கூந்தலுக்கு வெள்ளைத் துணியால் கட்டுப் போட்டு, பூஜை அறைக்குள் நுழைந்தாள். மூன்று நாட்களாய்ப் பார்க்க முடியாமல் போன தெய்வப் படங்களை, தீபம் ஏற்றி, கற்பூரம் கொளுத்திக் கொண்டிருந்தபோது, அதற்கு மரணமணி அடிப்பது போல் மாமியார் கத்தினாள்.

ஒவ்வொருத்திக்கு கல்யாணத்துக்குப் பிறகு, குழந்தை உண்டாகாட்டாலும், பத்து நாளாவது நின்னு வரும். இந்த வீட்ல என்னடான்னா டாண்னு வந்துடுது என்ன பொம்பளையோ... சாதகப் பொருத்தம் சரியாக இருக்குன்னு சொன்னவனைச் செருப்பால அடிக்கணும்...

சங்கரி கற்பூரத்தட்டை சுற்றாமல், சுழற்றாமல், கீழே வைத்தாள். பூஜை மணியை அலட்சியப் படுத்தினாள். ஏதேச்சயாய்க் குங்குமம் எடுத்தவள் வழக்கப்படி அதை நெற்றியில் பொட்டாக்கி திருமாங்கல்யத்தில் ஒரு புள்ளியாக்குகிறவள், குங்குமத்தைப் பீடத்தில் சிதறடித்தபடியே, வெளியே வந்தாள். மாமியாரை முறைத்துப் பார்த்தாள். அவளோ, சண்டைக் கோழியாய் கைகளை மடித்து விலாவில் தட்டியபோது. சங்கரி பொறுமை இழந்தாள் ‘இனிமேல் எது கேட்கணுமுன்னாலும் ஒங்க பிள்ளைகிட்ட கேளுங்க... என்கிட்ட கேட்டால் மரியாதை போயிடும்...’ என்றாள். பிறகு, தான் சொன்ன வார்த்தைகளைத் தானே நம்பமுடியாமல், சிறிது கால்களைத் தேய்த்தபடியே நின்றுவிட்டு, மாடிக்கு வந்தவள்தான்.

சிற்றுண்டியும் சாப்பிடவில்லை. மத்தியானச் சாப்பாடும் வரவும் இல்லை. இவள் போகவும் இல்லை. பசிமயக்கம் எடுத்தாலும் அந்த மயக்கத்தை ஏதோ ஒரு விதச் சூன்யம் விழுங்கி விட்டது. மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிப் போட, உமாவும் வருவதில்லை. உறவோ பகையோ அற்ற நிலைமை. அன்று அவள் கணவனிடம் அவர் அப்படிப்பட்டவர் இல்லை... ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டார்... தப்பா நினைக்காதிங்க... என்று சொன்னபோது, இந்திரன் போட்ட பார்வை சரியாகப் படவில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியுமென்று அவன் சொன்ன பதில் சொன்ன தோரணையும், என்னவோ போல் இருந்தது. யானை சேறில் சிக்கினால் தவளை கூடக் கிண்டல் செய்யுமாம்.

சங்கரி தனிமையில் தவித்தாள். இந்த உலகில் அவள் மட்டுமே தனித்திருப்பதாய் ஒரு அனுமானம். சபிக்கப்பட்டது போன்ற உறுத்தல். சாப விமோசனம் எப்போ கிடைக்குமோ என்ற ஏக்கம்.

திடீரென்று, அவள் காதில் ஏதோ உரசுவதுபோல் தோன்றியது. திடுக்கிட்டுக் கண்விழித்தால், ஒரு இலைப் பொட்டலம். மல்லிகைப் பூவாய் துருத்திக் கொண்டிருந்தது. ஏறிட்டுப் பார்த்தால், மனோகர்! அவளுக்கு முதுகு காட்டி வீராப்பாய் நின்றான். அந்தப் பொட்டலத்தையும், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் நின்றவனையும் மாறி மாறிப் பார்த்த சங்கரி, குலுங்கப் போனாள். அவனைக் கட்டிப் பிடித்து தோளில் சங்கமமாக நினைத்தவளாய் எழுந்தாள். ஆனாலும், பழைய கசப்பு, புதிய இனிப்பை சேதாரம் செய்தது. காட்டுமிராண்டி மாதிரி ஏன் அழுகிறே என்று கேட்டாலும் கேட்பார். இதனால் மேலும் பத்து நாட்கள் சூன்யமாகலாம்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. மனோகர் முன்பக்கம் அற்றுப்போனவன் போல் முதுகு காட்டி நின்றான். அவளோ, கட்டிலில் உட்கார்ந்தபடியே விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். அந்த மல்லிகைச் சரத்தை பொட்டலத்திலிருந்து விடுவிக்கப் போனாள். பொட்டலத்தைச் சுற்றிய வாழை நாரை அவிழ்க்க முடியவில்லை பல்லால் கடித்துப் பார்த்தால், அந்தப் பல்லுக்குத்தான் வலி. பொட்டலமும் கலைய வேண்டும் பூவும் நிலைக்க வேண்டும். எப்படி... எப்படி...

மனோகர், அவளுக்கு முகம் காட்டவில்லைதான்; என்றாலும், சங்கரிக்கு ஒரு நிம்மதி. ஆனந்தமான அதிர்ச்சி. மாமியாரின் கிரியா சக்தியால் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கணவன் மனைவி யுத்தம் முடிவுக்கு வரப்போகிற மகிழ்ச்சி அன்று அவன், ஒரு தரப்பாக போர் தொடுத்த பிறகு, இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்வதில்லை அன்று முதல் அவள் கட்டிலில் உடல் கொள்ளாமல் தரையில் படுத்தாள் அவனோ, அவள் இருப்பதாக அனுமானிக்கவே இல்லை. மறுநாள் அவள் காப்பி கொண்டு வரவில்லை. அவன் துணிமணிகளுக்கு இஸ்திரி போடவில்லை. ஆனாலும், மாமியார்க்காரி ‘நானிருக்கேன் ராசா...’ என்று கத்தியபடியே படுக்கை அறைக்கே காப்பியோடு வந்தாள் இரண்டாவது நாளும் இப்படியே. மூன்றாவது இரவில், அவன் வருவதற்கு முன்பே, கட்டிலில் படுத்தாள். அவனோ தரையில் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் மாமியாரை வாசலிலேயே நிறுத்தி அவள் கையிலிருந்த டம்ளரை வலுக்கட்டாயமாக பறித்து, அவனிடம் நீட்டினாள். அவன் குளித்து முடித்து சீவிச் சிங்காரித்து ஒரு அழுக்குப் பேன்டை போடப்போன போது, அவள் அதை வெடுக்கென்று பறித்துவிட்டு, அலமாரியில் தயாராயிருந்த ஒரு நீலப் பேன்டைத் தூக்கி, அவன்மேல் எறிந்தாள். அதற்கு இணையாக பால் வெள்ளைச் சட்டை ஒன்றை அவன் தோளில் தொங்கப் போட்டாள் மறு இரவில், அவன் கட்டிலில் படுத்தபிறகு பக்கத்தில் படுத்தாள். அவனோ கல்லுப் பிள்ளையாராய்க் கிடந்தான். அவள் அழுது பார்த்தும் அவன் அசைவில்லை. இன்றைக்கு என்ன ஆச்சு. எப்படி இந்தப் பூப்பழக்கம்... அவள் தேன் கொண்ட பூவாய் மலர்ந்தாள். முதுகை முகமாக்காதவனை நினைக்க, நினைக்க சிரிப்பு வந்தது. செல்லமாகச் சிணுங்கினாள்.

“பூவுக்கு மட்டும் குறைச்சலில்லை...”

மனோகர், குறைபட்டவன்போல் திரும்பினான். ‘என்ன சொல்கிறாள்... அந்த குறைச்சலைச் சொல்லாமல் சொல்லுகிறாளோ...’

சங்கரி, அவனைச் சீண்டினாள்.

“யாருக்கு வேணும் இந்தப் பூவு...? பிச்சைக்காரிக்கு எறிந்தது மாதிரி எறிந்தால் என்ன் அர்த்தம்...? வச்சா தலையிலே வைக்கணும்.”

மனோகரின் முகக்கடுமை இளகியது. முணுமுணுப்பு புன்முறுவலானது வைத்தியர் சொன்னதுபோல், அந்தச் சண்டையையே ஒரு சாக்காக்கி. பத்து நாட்களாய் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தவன், பதினோராவது நாளான இன்று அவன் உடம்பு முறுக்கேறியிருந்தது. பார்வை மதப்பானது. எப்படியோ அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்ட மருந்து இன்றிரவு அவளுக்குத் தன்னை தெரியப்படுத்தும்.

மனோகர், அவளை நம்பிக்கையோடு நெருங்கினான். அந்தப்பூப் பொட்டலத்தை பல்லால் நார் உரித்து விடுவித்தான். தலையை கைகளால் மூடிக் கொண்டவளை, தன் மார்பில் கிடத்தினான். அவள் கைகளை தன் கைகளால் இறக்கினான். பிறகு அந்தப் பூவை அவள் தலையில் சூடினான். அவள் வீறாப்பாய் தலையை ஆட்டியபோது, அவன் கைபட்டு சில பூக்கள் கசங்கின. தலையில் சூடிய பூ கட்டிலில் விழுந்தது. அவள் செல்லமாக ஒரு பூவைக்கூட வைக்க முடியலே... என்று சொன்னபோது, அவன் உடல் முறுக்கு லேசாய்த் தளர்ந்தது. மனம் வாதைப்பட்டாலும், உடல் அவள் பக்கமாய்ச் சாய்ந்தது. நடுக்கமற்ற சாய்வு... நம்பிக்கை போகாத அணைப்பு... அவள், அவன் பக்கமாகத் திரும்பி அவன் தோள்களைப் பற்றியபோது...

மாமியாரின் கனைப்புக்குரல் கேட்டது. வாசலுக்கு வெளியே உடம்பையும், உள்ளே தலையையும் போட்டுக் கொண்டு நின்றாள். “அக்கா விஷயம் என்னடா ஆச்சு...” என்றாள். சங்கரி, மாமியாரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. கணவனின் தோள்களைப் பற்றிய கைகளை அகற்றவில்லை. ‘பார்த்தால் பார்க்கட்டும்’ ஆனாலும், மனோகர் அவள் கரங்களை அவசர அவசரமாக எடுத்துப்போட்டான் அம்மா பக்கம் போய், அவளை எரிச்சலாய்ப் பார்த்தான்.

உடனே அவள், “காந்தாமணியோட கொழுந்தன் லெட்டர் போட்டிருக்கான். ‘மனோகர் பயலால என்ன செய்ய முடியுமுன்னு பார்க்கத்தான் போறோம். வண்டிப் பாதை வண்டிப் பாதைதான்... அவன் ஆபீசரா இருக்கலாம். ஆனால், எங்க ஊருக்கு, அவன் ஒரு இரப்பாளிப் பயதான்னு’ ஊரு முழுக்கச் சொல்லிட்டு வாரானாம்... இந்த ராமசாமிப் பய... எல்லாம் நீ கொடுக்கிற இளக்காரம்... அவனை கைவிலங்கு கால்விலங்கு போட்டு ஜெயிலில அடைச்சிருந்தா இப்படிப் பேசுவானா...? ஒன்னால முடியும். ஆனால், மனசுதான் இல்ல. சரிசரி... சாப்பாடு சூடு ஆறிடும்... வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் கொஞ்சுங்க குலாவுங்க... என்றாள்.”

மனோகர், அம்மாவின் முதுகைத் தள்ளிக்கொண்டே படியிறங்கினான். சங்கரி, அவனை மாமியாரிடம் ஒப்படைக்க விரும்பாதவள் போல் கணவனைப் பின் தொடர்ந்தாள்.

தம்பியையும், நாத்தனாரையும் ஒருசேரப் பார்த்த காந்தாமணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவன் மாடிக்குப் போகும்போது பேன்ட் பை உப்பி இருந்ததைப் பார்த்தவள். அதுவே இப்போது நாத்தனார் கொண்டையை உப்ப வைத்திருந்தது கண்டு ஆனந்தித்தாள். தம்பியையும், தம்பி மனைவியையும், இருவர் தோளையும் அழுத்தி சின்னச் சின்ன சதுரப்பாய் இருக்கைகளில் உட்கார வைத்தாள். பரிமாற எழுந்த சங்கரியை, கண்ணால் அதட்டி உட்கார்ந்த இடத்திலேயே உட்கார வைத்தாள். முட்டைப் பாயாசம் போடாமல் போனோமே என்று, தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டாள். நெத்திலிக்கருவாடு குழம்பு... முருங்கைக்காய் சாம்பார்... எண்ணைக் கத்தரிக்காய்ப் பொரியல்... இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

மனோகரும், சங்கரியும் ஈரக் கைகளைத் துடைத்தபடியே ஜோடியாய் மாடிப்படிகளில் ஏறப்போனபோது, மாமியார் மகனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்... அக்காவுக்கு உதவப் போறியா இல்லியா... அந்த வண்டிப் பாதையை தடந்தெரியாம அழிக்கப் போறியா இல்லியா... ராமசாமிப்பயல ஜெயிலுல போடப்போறியா இல்லியா... இப்பவே எனக்குத் தெரிஞ்சாகனும்... உன்னால முடியாட்டா, நான் ஊருக்குப் போகப்போறேன்... என்று கத்தோ கத்தென்று கத்தினாள். காந்தாமணியோ, அம்மாவை ஒப்புக்குத் திட்டுவது போல் திட்டினாள்.”

சங்கரிக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். அந்தச் சிவபூஜைக் கரடிகளை கண்களால் எரித்துவிட்டு, சலிப்போடு மாடிக்கு வந்தாள். மொட்டை மாடியில் அங்கும் இங்குமாய் சுற்றினாள். கீழே சத்தம் கத்தலாகியது. அந்தக் கத்தலை மீறி தெற்குப்பக்க வீட்டு மாடியில் ஒரு முக்கல் முனங்கல். ‘என்னை விட்டுடு... எவ்வளவு நேரமுய்யா...? வாட்ச்மேன் வந்திடப் போறான்... அட விடுய்யா... இந்தா பாரு... நான் அப்புறம் வரவே மாட்டேன்...’

சங்கரி, மொட்டை மாடியின் மதில் சுவர் விளிம்பில் கை ஊன்றி எதிர்ப்பக்கத்து வீட்டை ரசனையோடு பார்த்தாள். இவள், இந்த வீட்டுக்கு வந்தபோது, காலியாக இருந்த மனை, இப்போது அடுக்கு மாடி கட்டிடமாகிக் கொண்டிருந்தது. முதல் மாடியில்தான், இந்த அமர்க்களம். ஒரு மரத்தில் தங்கும் பறவைகள் போல் கீழ்த்தளத்தில் தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். ‘அவன், வேறு ஏதோ ஒரு கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘பெரியாள்’... அவள், இந்தக் கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘சித்தாள்’ வாரம் இரண்டு தடவை நடக்கும் கூத்து இது. இவள் சாப்பிடப் போவதற்கு முன்பே அந்த கட்டிட முதல் மாடியில் சத்தம் கேட்டது. இன்னுமா முடியல... அடே யப்பா... எப்படி இவ்வளவு நேரம்... உமா என்னடான்னா ஒரு மணி நேரம் புரட்டினதாச் சொல்றாள்... இங்கே என்னடான்னா அதைவிட அதிக நேரம் ஆகும் போல இருக்கு... இன்னும் ஓயல... பாவம்... பாவப்பட்டதுகள். சந்தோஷமாய் இருந்துட்டு போகட்டும் ஆமாம்... பாவப்பட்டது யார்...?’

என்றாலும், சங்கரிக்கு மகிழ்ச்சிதான் வீட்டுக்காரன் பேசிவிட்டான் என்பதால் மட்டுமல்ல. இன்றைக்கு அவன் பிடி அசத்தலாயிருந்தது முகத்தில் கூட ஒரு மலர்ச்சி. அவரோட அழகுக்கு வேற சொர்க்கம் இருக்க முடியாது.

சங்கரி, அந்த மொட்டை மாடியையே சுற்றிச் சுற்றி வந்தாள். படிகளில் இறங்கி பக்குவமாகப் பார்த்தாள். சத்தம் ஓய்ந்தது. அண்ணி அழுது கொண்டிருந்தாள். மாமியார் மூலையில் சாய்ந்து கிடந்தாள் ‘அவரோ’ அக்காவின் கைகளைப் பிடித்து ஏதோ பேசுகிறார். அம்மாக்காரி ஓடி வந்து அந்தக் கையைத் தட்டி விடுகிறாள் விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்... பாவம் அவரு... கீழே போய் ரெண்டு கேள்வி கேக்கலாமா... வேண்டாம் ஒருவேளை அவரு காட்டுமிராண்டினு கத்திடப்படாது...

சங்கரி, சலிப்போடு அறைக்கு வந்து, மல்லாக்கப் படுத்தாள். குப்புறப் புரண்டாள். ஒரு பக்கமாய் குடை சாய்ந்தாள். திடீரென்று அவள் உடலோடு உடல் உரசியது. தோளில் ஒரு முகம் விழுந்தது ஆனந்தமாய் திரும்பினாள். அவன், அவளை அங்கும் இங்குமாய் உருட்டினான். அவள் இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு... என்று திக்கித் திக்கிச் சொன்னபடி அவன் தலையைச் செல்லமாகக் குட்டினாள் குட்டிய தலையைக் கோதிவிட்டாள் கழுத்துக்குள் தன் முகத்தைப் பதியவிட்டாள்... அவள் ஆடைகள் அறைகுறையாகின. அந்தச்சுரணை இல்லாமலேயே அவள் அரை மயக்கத்தில் கிடந்தாள்... உடம்பு கனத்தது... ஒரு சுமை. சிறிது நேரத்தில் கனம் தெரியாமல் போன சுகமான சுமை... அவன் கழுத்தை வளைத்துக்கொண்டு ஐ லவ் யூ... ஐ லவ் யூ... மனோ... என்று உளறுவது போல் உணர்ச்சிகளை கொட்டினாள் ஒரே ஒரு நிமிடத்திற்கும் குறைவே...

மனோகர், குழைந்து போனான்... அப்படிப் போகப்போக, அவனுக்கு, அவள் வெறும் சதைப் பிண்டமாகத் தெரிந்தது அவளுக்கும், அவன் சுமையாகப்பட்டது. அவளே அவனை கீழே தள்ளிப் போட்டாள். பிடித்ததும் பிடிபட்டதும் பொய்யாய், பழங்கதையாய் போனது அவள் அந்த இருட்டில் அவனை எரிச்சலோடு பார்த்தாள். வீம்புக்குதன் மேல் சாயப் போனவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, படுக்கையில் உட்கார்ந்தாள் அவனாவது சும்மா இருந்திருக்கலாம் அந்தச் சமயம் பார்த்து நெருப்புக் கோழியாய் ஒரு கேள்விக்குள் தன்னை மறைத்துக் கொண்டதாய் தன்னை நினைத்துக் கொண்டான்.

“ஆமா... நான்தான் எங்கம்மா பித்துக்குளின்னு சொல்லியிருக்கேனே.. காலையில் அவளுக்குப் போட்டியா கூடக் கூடப் பேசினியாமே...”

சங்கரி, வெடித்தாள்... எரிமலையான வார்த்தைகள். பூகம்பமாய்ப் போன விமர்சனம்...

“எல்லாம் தலைவிதி... ஓங்களால இது முடியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன்... ஏன் வம்புச் சண்டைக்கு சாக்கு தேடுறீங்க...”

சங்கரி, அவனது எதிர்த் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாரானது போல் உடம்பை விறைப்பாக்கினாள். முகத்தைக் கடுமையாக்கினாள். வாயில் சில வார்த்தைகளைச் சுமந்தாள் ஆனாலும் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புக்கூட கேட்டகவில்லை. படுக்கைமட்டும் லேசாய் ஆடி அடங்கியது... எல்லாமே அடங்கிப்போன அல்லது அடக்கப்பட்ட வெறுமை. காலம் நிமிடங்களாய் கழிந்து கொண்டிருந்தது.

சங்கரி, அவன் பக்கமாய்த் திரும்பினாள். ஜன்னல் கம்பிகள் வழியாய் ஊடுருவிய நிலா வெளிச்சத்தில் அவன் மங்கலாய்க் கிடந்தான். கண்களைத் திறந்து வைத்திருந்தான். கைகளை விரித்துப் போட்டிருந்தான்... தற்செயலாய் அவள் காலில்பட்ட தன் காலை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டான். திறந்திருந்த கண்களை இமைகளால் பூட்டிக் கொள்ளாமல், கைகளால் மறைத்துக் கொண்டான்.

சங்கரிக்கு, என்னவோ போலிருந்தது. இப்போதுதான், தான் சொன்னதின் தாத்பரியம் அவளுக்கு முழுமையாய்ப் புரிந்தது போலிருந்தது. ‘ஓடி... ஓடி... புறமுதுகு காட்டியவனை, அப்படி சொற்சூடு போட்டது, தவறு. ஆயிரமிருந்தாலும், அவர் கணவர் அந்தக்குறை தவிர, எந்தக் குறையுமில்லாத மனிதர். அவரை மீறிப்போன செயலின்மை... மனதும் உடம்பும் எதிரெதிராய்போன கொடுமை. ஒன்றோடு ஒன்று மல்லுக்கு நிற்கும் கொடூரமான யதார்த்தம். இந்த இரண்டிற்கும் இடையே, இவர் பிள்ளைப் பூச்சியாய் இடையில் அகப்பட்டுத் தவிக்கிறார். மனமிருந்தும் மார்க்கமற்றத் தன்மை.’

‘இப்படிப்பட்ட நோயாளி மாதிரியான ஒருவரை நோகடித்தாச்சு... அய்யோ... எனக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு ராட்சஷியா...? அன்றைக்கு அவர் சொன்னது போல் நான் ஒரு காட்டுமிராண்டிதான். மனுஷி இல்லை. இப்படியா கேட்பது... கேட்டுட்டேனே... எப்படியோ கேட்டுட்டேனே... புத்தியக் கடன் கொடுத்துட்டேனே... அவர் ஆம்பளையா இல்லாமல் இருக்கலாம்... அதனாலேயே அவர் மனுஷன் இல்லேன்னு ஆயிடுமா... அந்த மனுஷனுக்குள்ள ஒரு மனம் இருக்குமே... அது இப்ப என்ன பாடுபடுதோ... நான் பெண்ணே இல்ல... பிறகு எப்படிப் பெண்டாட்டியா இருக்க முடியும்...’

சங்கரி, அவனைப் பார்த்துப் பார்த்து கைகளை பிசைந்தாள்... பிறகு, தலையில், ஓங்கி ஓங்கி அடித்தாள். மனோகரோ, அவளை ஏனென்று கேட்கவில்லை... தலையைத் தாக்கும் கரங்களைத் தடுக்கவில்லை... அழட்டும்... செத்துப்போனவனுக்கு ஒப்பாரி வைக்கிறாள்... தப்பில்லைதான்....

அவனுள் ஒரு வைராக்கியம். பட்டதுபோதும். இவள் ஒப்பாரிக்கு உருவம் கொடுப்பது போல் செத்துப் போகவேண்டும். ‘ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போக வேண்டும். அதை எப்படிச் செய்வது... எங்கே செய்வது... எப்போது செய்வது...’

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒத்தை_வீடு/006&oldid=1852633" இலிருந்து மீள்விக்கப்பட்டது