உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தை வீடு/007

விக்கிமூலம் இலிருந்து

7

மனோகர், துணை இயக்குநராய், அலுவலக சுழல் நாற்காலியில் சோர்ந்து போய்க் கிடந்தான். எதிர் நாற்காலிகளில் ஒன்றை மேஜைக்கு இழுத்துப் போட்டு கால்களை நீட்டி போட்டிருந்தான். தலைதட்டும் மெத்தையிட்ட நாற்காலியில் கரங்களை வளைத்துப் போட்டு, அரைக்கண் பார்வையில் கிடந்தான். தூக்கமும் துக்கமும் கலவையாகி அவனை மயக்கிப் போட்டன நினைவுகள் அவனைத் தூக்கிப் போட்டு மிதித்தன.

சங்கரி, கண் விழிக்கும் முன்பே எழுத்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு, ஐந்து மணிக்குப் புறப்பட்டு ஆறு மணிக்கு அலுவலகம் வந்துவிட்டான். பாயில் அப்போதுதான் தூக்கம் கலைத்த அம்மா, அவன் பக்கமாய் ஓடிவந்து, ‘எங்கடா... எங்கடா...’ என்றபோது, அவன் அவளுக்குப் பதிலளிப்பதுபோல் டெலிபோன் எண்களைச் சுழற்றினான். ‘வேதமுத்தா... நான் ஆபீஸ் வாரேன்... நிறைய வேலை இருக்குது... என் ரூமைக் கிளீன் செய்து வை.’

அம்மாக்காரி, அவன் சட்டை கிழியும்படி இழுத்திருப்பாள். ஆனால், ராமசாமிக்கு விலங்கு மாட்டுவதற்கு அவன் போவதாக அனுமானித்து, சும்மாவே இருந்து விட்டாள். பைக்கில் ஏறிய மனோகர், வீட்டை திரும்பிப் பார்த்தபோது, அம்மா பக்கத்தில் சங்கரி. முகத்தைக் கழுவியதுபோல் கூடத் தெரியவில்லை. முந்தானை விலகிய நினைப்பற்றவளாய் நின்றாள். அவனைப் போய் வழி மறித்திருப்பாள். மாமியார் ரகளைக்குப் பயந்து விட்டாள்.

அலுவலகத்தில், மனோகர் நினைவுகளை அசை போட்டான். மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்தது, என்னவோ போலிருந்ததது. அங்கும் இங்குமாய் நெளிந்தான். கால்தட்டிக் கீழே விழுந்த நாற்காலியை எடுப்பதற்காக எழுந்தவன், எதற்கு எழுந்தோம் என்ற நினைப்பில்லாமல் அந்த அறையைச் சுற்றினான். அல்லாடி... அல்லாடி சோபா செட்டில் சாய்ந்தான். கொஞ்சம் சுகமாக இருந்தது. அவளிடம் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. மெய்யான நியாயம். மெய் சம்பந்தப்பட்ட நியாயம். ஆனால், அந்த நியாயத்தை, அப்படி அநியாயமாக சொல்லியிருக்க வேண்டாம். அப்படியும் சொல்ல முடியாது. அவள் இதுவரை பொறுத்ததே பெரிசு. நாய் தேங்காயை உருட்டியது போன்றி கதை. அரைக்கிணறு தாண்டி, கீழே விழுந்து அடிபட்டுப்போன கதை.

“அய்யா... ஏதாவது...”

‘முப்பது வயதிலும் எழுபது வயது நடுக்கத்தோடு நின்ற சவுக்கிதார் மருதனை, மனோகர் கண் திறந்து பார்த்தான். துணை இயக்குநருக்கு உயிர் நடுக்கம் என்றால், அவனுக்கு உடல் நடுக்கம். இராக்காவலாளியான இவன், இரவு பத்து மணி முதல் நான்கு மணி வரை வீட்டில் படுக்கப் போய்விடுவான். டெலிபோனை எடுத்து, கீழே வைத்து விடுவான். ஒருவேளை அதற்கு முன்பே தன் வேலையைச் சரிபார்க்க நடுராத்திரியிலேயே டெலிபோன் செய்திருப்பாரோ... என்னை ஒழித்துக் கட்டுற வேலையைத்தான் முக்கியமான வேலை என்று சொல்லியிருப்பாரோ. பத்து வருஷ சர்வீஸ் பலன் கொடுக்குதான்னு பார்ப்போம்.’

“அய்யா... நேத்து நைட்டு முழுதும் டெலிபோன் வேலை செய்யலைய்யா. அப்பப்போ வருது... அப்பப்போ போய்டுதுய்யா... கேபிள் பால்டாம்யா...”

மனோகர், அவனை, வினோதமாகப் பார்த்தான். அவன் நடுங்கி விட்டான். ‘சஸ்பென்ட் சஸ்பென்டு தானோ... எதுக்கும் அடுத்த அஸ்திரத்தைப் போட்டுப் பாக்கலாம்.’

“ராத்திரி முழுதும் எனக்குப் பேதி அய்யா... முக்கால் வாசி நேரம் பாத்ரூம்லதான் இருந்தேன் அய்யா.”

மனோகருக்கு, அவனுக்கு, ‘வந்தது’ தனக்கு வந்தது போன்ற அசதியில் பேசினான்.

“இத மொதல்லயே சொல்லபடாதா...? சரி நீ... வீட்டுக்குப் போ... ஒன் வேலையும் நான் சேர்த்துக் கவனிக்கிறேன்.”

“அய்யா... அய்யய்யா... தப்பு தவறு செய்தாலும் பொறுத்துக்குங்க அய்யா... எங்க மாமியார் படுத்த படுக்கையா இருக்காங்க அய்யா... எழுபது வயசு மாமியாருக்கு நான்தான் துணய்யா...”

“மாமியாருக்காக அழுகிற முதல் மருமகன் நீதான்...”

“அவங்க எங்கூடப் பொறந்த அக்காய்யா... அக்கா பொண்ணத்தான் கட்டியிருக்கேன் அய்யா...”

“உறவை திரிக்கிற உன்ன இதுக்கே சஸ்பென்ட் பண்ணனும்... போய்யா... பேதியானவனுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்... முதல்ல வீட்டுக்குப் போ... முடிஞ்சால் சாயங்காலம் வா...”

“ஸ்வீப்பர் வரது வரைக்குமாவது இருக்கேன்யா...”

“அவள் வந்தால், அவள் வேலையப் பார்ப்பாள் நீ போ...”

மருதனுக்கு, இப்போது நிசமாகவே பேதி வந்தது. ‘என்ன ஆகுமோ... எப்படி ஆகுமோ... பூடகமாய்ப் பேசுறாரே.’ அவன் ஒடுங்கி ஒடுங்கி வெளியேறினான். மனோகர், மெல்லச் சிரித்தான். அக்காவை மாமியாராக்கியவனை நினைத்து ரசனையோடு சிரித்தான். திடீரென்று சிரிக்க அவனுக்கு அருகதை இல்லை என்பதுபோல், சங்கரி முன்னால் வந்து கை கொட்டிச் சிரிக்கிறாள். தலையில் அடித்து ஒப்பாரி இடுகிறாள். மனோகருக்கு விரக்தி தூக்கமானது. குறட்டை ஒப்பாரியானது.

“சாரே... சாரே...”

மனோகர், திடுக்கிட்டு கண் விழித்தான். விழிப்பில் ஏன் இப்படி பயம் வரவேண்டும் என்று சிந்தித்தான். வைத்தியர் சொன்ன கோழி முடி நினைவுக்கு வந்தது. தன்னைத்தானே நிமிர்த்திக் கொண்டு, அவளைப் பார்த்தான். அலுவலகத்தை கூட்டிப் பெருக்கும் கங்கா. சேரிக்கே உரிய கம்பீரம். உழைப்பில் உருவான உடல்கட்டு. இருபத்து நான்கு தேறலாம். பார்த்தால் பற்றிக் கொள்ளத் தூண்டும் கண்கள். பேசும்போது பூ விரிவது போன்ற தோரணை. அவள், இவனைத் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு, இவனுக்கு, அவளைத் தெரியாது ஒரு தடவை, மாதக் கூலியில் ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுக்கும்படி கேட்டபோது, இவன் நூறு ரூபாய் கூட்டிப் போட்டான் இன்னொரு தடவை, இவளை இந்த அலுவலகத்தில் சேர்த்தவள் மாமூல் கேட்பதாக இவள் முறையிட்டபோது, பக்கத்து அலுவலக பெருக்கல்காரியான அந்த மாமூலை, மிரட்டியவன் இவன்... அதோடு சரி...

“சாரே... சாரே... இந்த ரூமைப் பெருக்கித் துடைக்கணும் சாரே... இந்தாண்டை வா சாரே...”

“நாளைக்குப் பார்த்துக்கலாம்...”

“வாணாம் சாரே... நீ பொறுத்தாலும் ஏஓ கத்துவார் சாரே... வேணுமுன்னா சோபாவில கால்களை மடித்துப்போட்டு ஒக்காந்துக்கோ... சாரே...”

மனோகர், அவள் சொன்னபடியே செய்தான். அவள் அந்த அறையை பெருக்கினாள். ஒரு வாளித் தண்ணீரை வைத்துக்கொண்டே ஈரத்துணியால் மொசைய்க் தரைக்கு பளபளப்பு ஏற்றினாள்.

“சாரே... சாரே... செத்தோண்டு நாற்காலிலே உட்காரு சாரே... சோபாவைத் துடைச்சிடறேன்.”

மனோகர் எழுந்தபோது, அவன் தோள், கங்காவின் தோளில் மோதியது. அவன் கேட்டான்.

“ஆமா... ஒன் பேரு என்ன...?”

“என்ன சாரே... அதுக்குள்ள என் பேரு மறந்து போச்சா...? ஆத்தா வச்ச பேரு கங்கையம்மா... நானே எனக்கு வச்ச பேரு கங்கா... நீ ஐம்பது ரூபாய ரெட்டிப்பா தந்ததை நா மறக்கல சாரே.”

“உனக்கு கல்யாணம் ஆயிட்டா...”

“என்ன சாரே. மஞ்சக் கயித்தப் பார்த்துட்டும் அப்படிக் கேக்கிறே... ஆயி என்ன பிரயோசனம்? அந்தக் கஸ்மாலம் கை விட்டுட்டான்... என்னப் பிடிக்கலையாம். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு சொல்றான்... ஒரு குரங்கு மூஞ்சியோட ஓடிட்டான்... அவன் கிடக்கான்... என் வேலைய பெர்மனென்டு ஆக்கு சாரே...”

“பிரதம மந்திரி நெனச்சாலும் ஒன்னை பெர்மனென்டு ஆக்க முடியாது. ஆனாலும் ஒன்னை ஒரு நல்ல கம்பெனியில் சேர்க்கறதுக்குப் பார்க்கிறேன்... எதுக்கும் ஒன்னைப் பத்திய பயோடேட்டா அதாவது வயது, படிப்பு இப்படிப்பட்ட விவரங்களை எழுதிக் கொடு...”

“எட்டாவது படிச்சாலும் என் எழுத்து தலையெழுத்து மாதிரி கோணல் மாணலா இருக்கும் நீ கேட்டுக் கேட்டு எழுதிக்கோ சாரே.”

மனோகர், நாற்காலியில் போய் உட்கார்ந்து ஒரு தாளை எடுத்தான் அவள், அவன் பக்கத்தில் வந்தாள். பிறந்த தேதி தெரியாது என்றாள். முகவரி சொன்னாள். அவன் முழங்கை விலாவில் பட்டபோது, விலகி நின்றாள். ‘குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டபோது, ‘அதான் குரங்கு மூஞ்சியோட போய்ட்டானே...’ என்றாள். அவன், அவளை அனுதாபமாகப் பார்த்தான் ‘ஒன் அழகுக்கு என்னவாம்...’ என்று சொன்னபடியே கைகளை நெட்டி முறித்தான். ஒரு கை அவள் தோளில்பட்டது. அவள் அதை அறிந்தோ, அறியாமலோ, நின்றபோது, அந்தக் கை, அவள் தோளுக்கு கீழே போய், அவளை, அவன் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தது. அவன் எழுந்தான். அவளின் கலங்கிய கண்களை நான் இருக்கேன் என்பது மாதிரி துடைத்து விட்டான். அவள் திடுக்கிட்டு திமிறினாள். முகத்தோடு முகம் முட்டியதுதான் மிச்சம். பிடிகள் இறுகின. அணைப்புக்கள் அணையை உடைக்கப் போயின.

“வேண்டாம் சாரே... அது மட்டும் வேண்டாம் சாரே...”

“என்னைப் பிடிக்கலியா...?”

“பிடிக்காட்டி இப்படி இடங்கொடுப்பேனா... விடு சாரே... பேஜாரா இருக்குது...”

“இனிமேல் உன் பிரச்சினை என் பிரச்சினை... ‘அதுக்காக’ நான் சொல்லல... ஆனாலும் ஒன்னைப் பார்த்ததும்...”

“சரி சாரே... கதவையாவது சாத்திட்டு வா... வாட்ச்மேன் கேட்டுப் பக்கம் கீறாரு...”

மனோகர், தள்ளு கதவைத் தாளிட்டான். நாணத்தோடு நின்றவளை அப்படியே அப்பிக் கொண்டான். அவளை நகர்த்தி நகர்த்தி ஆன்டி ரூம் எனப்படும் ஒரு பிளைவுட் தடுத்த ஓய்வறைக்கு கொண்டு போனான். அவளை அழுந்தப் பற்றினான். அரைகுறை ஆடைகளில் விட்டான். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்... பிறகு அப்படியே அவளை விட்டு விட்டு, உபதேசம் செய்தான்.

“கங்கா... இது ஆபீஸ்... கோயில் மாதிரி... இங்கே வேண்டாம்... வசதிப்படும்போது வெளியில போகலாம்...”

கங்கா, மெல்லத் தலையாட்டினாள். அந்த ஆட்டு ஆமோதிப்பா, எதிர்ப்பா என்று தெரியவில்லை. ‘சும்மா கிடக்கிற சங்கை ஊதிவிட்டுட்டியே சாமி... இனிமே ஒன் நெனப்புத்தான்...’ என்று சிணுங்கினாள் வாளியை தூக்கிக் கொண்டு, கதவின் இடுக்கு வழியாகக் கண்ணைப் பதித்து விட்டு, பிறகு தாழ்ப்பாளை நகர்த்திவிட்டுப் போய் விட்டாள்.

மனோகருக்குப், பித்துப் பிடித்தது போல் இருந்தது. எல்லாப் பெண்களுமே அவனைத் தள்ளி வைப்பதுபோல் இருந்தது. அவனுக்கு காலநேரம் சூன்யமானது. ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் பத்தரை மணி அளவில் வந்தார்கள். அவன் தங்களின் காலதாமத்தை கண்டுபிடிக்க வந்திருப்பதாக அனுமானித்து, பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொன்னார்கள். அவன் போனால் போகிறது என்பது மாதிரி ஆட்டிய கைக்கு, ஒருத்தி, மானசீகமாக முத்தங்கொடுத்தாள்.

பதினோரு மணிக்கு நிர்வாக அதிகாரி, இரண்டு பைல்களோடு வந்தார்... ஐம்பது வயதுக்காரர்... முக்கியமான பைல்களை ‘ரொட்டீனாக’ அனுப்பாமல், அவரே கொண்டு வருவார். அதாவது அவருக்கு முக்கியமானதை. ஒரு பைலைப் பார்த்தபடியே, மனோகர் கேட்டான்.

“கிருஷ்ணனை எதுக்காக மதுரை பிராஞ்சுக்கு டூர் அனுப்பணும்... பக்கத்துல இருக்கிற இராமநாதபுரத்துக் கிளார்கை அனுப்பலாமே...?”

“வழக்கமாய்ச் சொல்றதுதானே ஸார்... அவன் பெண்டாட்டி, மதுரையில் இருக்காள். போனால், அங்க திறமயக் காட்டுறானோ இல்லியோ, ஆபீஸ்ல வந்து திறமையைக் காட்டுவான்...”

சிரித்து மழுப்பாதீங்க... அவன் பொண்டாட்டியோட படுக்கிறதுக்கு கவர்ன்மென்ட் எதுக்கு டி.ஏ. டீ.ஏ. கொடுக்கனும்... நோ... நோ...

நிர்வாக அதிகாரி, அவனைப் புதிதாய்ப் பார்ப்பதுபோல், அதிர்ந்து பார்த்தார். தன் பக்கம் நகர்ந்த பைலை வாங்கிக் கொண்டு, அடுத்த பைலை நீட்டினார். அவன் இப்போது அதிக கோபமாய்க் கேட்டான்.

“என்ன அக்கிரமம் இது...? இந்த வசந்தி... மூன்று மாசத்துக்கு முன்னாலேதானே குழந்தை பெத்தாள்.”

“அதனால்தான், அபார்ஷனுக்கு லீவு கேட்கிறாள்.”

“இது அக்கிரமம்... மூன்று மாசம் பிரசவ லீவுல போயிட்டு போன வாரம்தான் டூட்டிலே சேர்ந்தாள்... நோ... லீவ்...”

கோப்பில் ஏதோ எழுதப்போன மனோகரின் கரத்தைக் கிட்டத்தட்டப் பிடித்துக்கொண்டு உரிமைக் குரலில் சட்டோபதேசம் செய்தார், ஏ.ஓ. எனப்படும் நிர்வாக அதிகாரி.

“கவர்மெண்டு வேலையில கல்யாணமாகாத பெண் கூட கருக்கலைப்பதற்கு லீவு கேட்டால், கண்டிப்பாகக் கொடுக்கணுமுன்னு ரூல்... சொல்லுது ஸார்.”

மனோகர், வேண்டா வெறுப்பாய் கையெழுத்துப்போட்டபோது நிர்வாக அதிகாரி, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடியே வெளியேறினார். சலுகைகளை வழங்குவதில் கர்ணனான அவன், எப்படிக் கம்சனானான் என்பது புரியாமல் போய்விட்டார். அவர் போன பத்து நிமிடத்தில் அஸிஸ்டென்ட் கிருஷ்ணன், ஒரு குண்டு மனிதரோடு வந்தான். அவனுக்கு எப்போதாவது பிரச்சினை வரும்போது, பெரிய மனிதர்களை கூட்டிவந்து மனோகருக்கு அறிமுகப்படுத்துகிறவன்.

“ஸார்... இவர் எங்க கஸின் பிரதர், டாக்டர் குமார்... மதுரையில் பிரபலமான செக்ஸாலஜிஸ்ட்...”

மனோகர், வந்தவரைக் கை கொடுத்து உட்கார வைக்காமல் கை கூப்பி அமரச் சொன்னான். அடுத்த இருக்கையில் உட்காரப்போன கிருஷ்ணனை ஒரு வேலையைக்கொடுத்து வெளியேற்றினான். “மதுரைக்கு டூர்ல போங்க... டூர் ஆர்டரை டைப்படிச்சிட்டு வாங்க...” என்றான்.

கிருஷ்ணன், குதிக்காத குறையாய் போனதும், அந்தக் கேள்வியை எப்படிக் கேட்பது என்பது புரியாமல், மனோகர் யோசித்தான். புரிந்தது. இன்னும் புத்திசாலித்தனம் போகவில்லை.

நீங்க எம்.பி.பி.எஸ். படித்திட்டு அப்புறம், செக்ஸ்ல பட்ட மேற்படிப்பு வாங்கி என்ன ஸார் பிரயோஜனம்...? சிட்டுக்குருவிலேகியம்... லபு கபே... தங்கபஸ்பம்முன்னு விளம்பரம் படுத்துற நாட்டு வைத்தியர்ங்ககிட்டதானே நம்ம ஆளுங்க போறாங்க...

டாக்டர். குமார், நாற்காலியிலேயே துள்ளினார். நீண்ட நாளாய், ஈ ஓட்டிக் கொண்டிருப்பவருக்கு, ஒரு வடிகால் கிடைத்த ஆனந்தம்.

“அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீங்க... செக்ஸ்ல தோத்துப் போறவன்... நெருப்புல பாய்கிற விட்டில் பூச்சியாக ஆயிடுவான்... உடலுறவுல செத்துப் போகிற ஆண் தேனீக்களோட முடிவுதான் இவன் முடிவும்... வைட்டமின் ஈ-யில் குணமாகக் கூடிய சமாசாரத்துக்கு, நூற்றுக்கணக்குல ரூபாய் செலவழித்து, லேகியம், பஸ்பம்முன்னு தின்கிறான்... கடைசியில், இதுக்குள்ளே இருக்கிற உலோகத் துகள்கள், கிட்னிக்கு வந்து அந்தக் கோளாறிலே சாகிறான்... உள்ளதும் போச்சு... நொள்ளக் கண்ணா என்கிற கதை... இந்த மாதிரி அடாவடி வைத்தியர்களைத் தண்டிக்க தடா சட்டத்தை திருத்தணும்.”

மனோகர், திடுக்கிட்டான். இன்று அந்த வைத்தியரிடம் போக நினைத்தவன், ‘கிழட்டுப் பயல் கெடுத்துட்டானே கிட்னி போயிருக்குமோ?’

“ஒரு பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் போயிடுமோ டாக்டர்...”

“கவலைப்படாதீங்க... மாதக் கணக்கிலே சாப்பிட்டாத்தான் கிட்னி கோளாறு வரும்...”

“அப்புறம் டாக்டர்... இந்தியா டுடேயிலேயோ, ரீடர்ஸ் டைஜஸ்டிலேயோ ஒரு கட்டுரை படிச்சேன்... மத்திய தரக் குடும்பங்கள்ல அங்கேயும் இங்கேயுமா சில கணவன்மாரால் முடியலையாமே... நிசமாவா டாக்டர்...”

“அநியாயமா நிசந்தான்...”

“இந்த ஆண்மைக் குறைவுக்கு என்ன காரணம் டாக்டர்...”

“பெரும்பாலும் மனம்தான் காரணம்... கணவனுக்கு மனைவிகிட்டே உள்ளூர வெறுப்பு இருந்தால், அவனால் முடியாது... கள்ளக் காதலியோட பயந்து பயந்து போனால், தேறாது... இப்படிப் பல காரணம்... இப்ப எனக்கு அவசர வேலை... மதுரைக்கு வாங்க... சாவகாசமா பேசலாம். நானிருக்கேன் கவலைப்படாதீங்க...”

கிருஷ்ணனின் கஸின் பிரதர், ஒரு கேஸ் கிடைத்த திருப்தியோடு போய்விட்டார். மனோகர், அவரிடம் சொல்லியிருக்கக் கூடாது என்று மருவினான். ஆனால், இப்போது அலுவலகமே சங்கரியாகிவிடும். என்றாலும், அவனுக்கு ஒரு சின்ன ஆறுதல். அவன் பிரச்சினை, ஆண்மைக் குறைவு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்... ‘சங்கரி நாட்டுப்புறத் தோற்றம் கொண்டவள். பழக்க வழக்கமும் அப்படித்தான். பெண் என்ற நினைப்பற்று ஆண்களை இடிப்பதுபோல் நின்று பேசுகிறவள். அப்படியானால், அவளிடம் முடியாதது, இந்தக் கங்காவிடம் முடிந்திருக்க வேண்டுமே? முடிந்திருக்கும். ஆனால் பயம் அந்தஸ்தைப் பற்றிய பயம். அந்தஸ்த்துப் பேதம் பற்றிய பயம்.’

மனோகர், தன்னை மறக்க அலுவலகப் பைல்களை அழுத்தம் திருத்தமாகப் புரட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று தள்ளுகதவு சத்தம் போட்டது. அவன் எரிச்சலோடு பார்த்துவிட்டு, பிறகு எழுந்து நின்றான். வந்தவள் நீலம் கவுல்... மிஸ் நீலம்... வெள்ளையான கொள்ளை அழகு பிடரிக்குக் கீழே போகாத பாப் முடி... மஞ்சள் கட் சோளி வெளிப்படையாய்த் தெரிந்த தோள்களுக்கு இடையே அந்தச் சோளி, அவள் கழுத்துக்கு தங்க உறையாய் மின்னியது. கோவில் மாட்டுத் திமில்கள் மாதிரி உருண்டு திரண்ட புஜங்கள். ஈரப்பசையான உதடுகள்... வசீகரிக்கும் சென்ட் வாசனை.

மிசெளரிப் பயிற்சியில் அவள், இவனோட பேட்ச் மேட். சில ஐ.ஏ.எஸ் டிரெயினிகள். இவள் பின்னால் ‘லோ லோ’ என்று அலைந்தாலும் இவனைச்சுற்றி வட்டமிட்டவள் ஒரு தடவை ‘என்னைக் கட்டிக்கிறியா?’ என்று கேட்டவள், “இந்தக் காலத்தில் பெண் அதிகாரிகள் ஒரு நல்ல கணவனையே விரும்புகிறார்கள்... மொழியோ, இனமோ முக்கியமல்ல... ஒன்னை எனக்குப் பிடித்திருக்கு... நீ தேகக் கட்டுள்ளவன்... ஒழுக்கமானவன்... எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவன்... கட்டிக்கோ...” என்று மன்றாடியவள் இவன்தான் பயந்து போனான். அம்மாவுக்கு மாரடைப்பு வந்துவிடக்கூடாதே என்று அச்சப்பட்டான் தட்டிக் கழித்தான். நல்ல காலமோ கெட்ட காலமோ... இவளுக்கும் சென்னையிலேயே வேலை.

உள்ளே வந்த வேகத்திலேயே, மிஸ். நீலம், ஒரு போடு போட்டாள்.

“ஏம்பா... ஒன்னோட டிரெயினிங்குல ஒன்னத்தான் பெஸ்ட் டிரெயினின்னு தேர்ந்தெடுத்தாங்களாம்... எங்கிட்ட ஏன் சொல்லலே...? ஒய்ப்கிட்டயாவது கிஸ் அடிச்சு சொன்னியா...? இன்னிக்கு நான் ஒன்ன விடப்போறதா இல்லை... இதுக்கு நீ எனக்கு பார்டி கொடுக்கணும்... இல்லாட்டி நான் கொடுக்கணும்... நைட்ல என் பிளாட்ல வச்சுக்கலாமா... ஏன் அப்படிப் போக்கிரித்தனமாக பார்க்கிறே...”

மனோகர், அவள் நெஞ்சை ஊடுருவி, அவள் மனதை தரிசித்தான். தோழனாய், காதலனாய் வார்த்தெடுத்த மனக்காரி... அழகுக்கு அழகு... ஆசைக்கு ஆசை... அந்தஸ்துக்கு அந்தஸ்து. இவளை விட உற்ற தோழி யாரும் இருக்க முடியாது...

“ஓக்கே நீலம்... இன்னைக்கு நைட்ல உன் பிளாட்தான் என் வீடு.”

“திருடா... திருடா...”

மிஸ் நீலம், மேஜையில் அப்படியே படிந்து அவன் கழுத்தில் இரு கரங்களை வளைத்துப் போட்டாள். கதவு மீண்டும் சத்தம் போட்டதும், பால்குடிக்கத் தெரியாத பூனையாய் நாற்காலியில் பம்மி உட்கார்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒத்தை_வீடு/007&oldid=1853086" இலிருந்து மீள்விக்கப்பட்டது