உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தை வீடு/018

விக்கிமூலம் இலிருந்து

4

காலை ஐந்து மணிக்கெல்லாம், கடிகார அலாரம் அலறியது. அதை அப்படியே விட்டால், சித்தி வந்து திட்டுவாள். சித்தப்பா இருக்கும் சமயத்தில் ஆறு மணிக்கும், இல்லாத சமயத்தில் ஏழு ஏழரை மணிக்கும் தூக்கத்திலிருந்து விடுபடுபவள். ஆகையால் செல்வா, படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து அலாரப் பட்டனை ஒரே அமுக்காக அமுக்கினான். இரவில் கடைசியாக தோன்றும் நினைவு, காலையில் எழுந்ததும் மனதில் முதலாக வரும் என்பார்கள்.

இதற்கேற்ப செல்வாவிற்கும் புதுக்கவிதையும் கவிதாவும் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். புதிதாக ஐந்தாறு காகிதங்களை அடுக்கிக் கொண்டு கவிதை எழுதப் போனான். அது, கழுதைமேல் சவாரி செய்வதுபோல் ஆகிவிட்டது. வடிவத்திற்கு ஏற்ற உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவம் இல்லை உலகத்தில் உள்ள அத்தனை கவிஞர்களையும் திட்டினான். அவள் கேட்டபடி, ஒரு கவிதை எழுத முடியவில்லை என்றால், தன்னுடைய மரியாதை கடற்கரை காற்றோடு கலந்து போய்விடுமே என்று கலங்கினான் இப்ப மட்டும் தனது மரியாதை சித்தியிடம் என்ன வாழ்கிறதாம் என்று நினைத்துக் கொண்டான். ஒருவேளை கவிதையோடு போகவில்லை என்றால், தனக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதரவான கவிதா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று கலங்கினான். ஒருவேளை அப்படி நிராகரிப்பதற்குத்தான் பெரிய இடத்துப் பெண்ணான அவள் தன்னை கவிதை எழுதும்படி சதி செய்கிறாளோ என்றும் அளவுக்கு மீறி சிந்தித்தான்.

சித்தப்பா இருக்கும்போது, சித்திதான் காபி போடுவாள் அவர் இல்லாதபோது, இவன் போட வேண்டும். காபியோடு சித்தியை எழுப்பவேண்டும். அதுவும் ஏழேகால் மணிக்கு, குழந்தைகளுக்கோ ஆறுமணிக்கெல்லாம் காபி தேவை. ஆகையால் புதுக்கவிதையை விட்டுவிட்டு, குளியலறைக்குப் போய் அத்தனை காரியங்களையும் முடித்துவிட்டு, வெளியே வந்தபோது மணி ஐந்தரை. அவசர அவசரமாக சமையல் அறைக்குள் ஓடினான். கேஸ் சிலிண்டரை பற்ற வைத்தான். பிறகு பால் வாங்க மறந்து போய்விட்டோமே என்று அடுப்பை அணைத்து விட்டு, ஒரே ஓட்டமாய் ஓடினான். புதுக்கவிதையையும் இப்போது பழைய கவிதையையும் சேர்த்து திட்டிக்கொண்டே ஓடினான். ஆவின் பூத்திற்குள் போய் இரண்டு பால் உறைகளை கையில் எடுத்துக்கொண்டு வந்தபோது, அவை அவன் கையை உருக வைத்தன. கவிதை நினைவிலும், கவிதா நினைவிலும், பாலித்தின் பையை கொண்டு போக மறந்து, கையுருக திரும்பி வந்தான்.

அடுப்பை பற்ற வைத்தபோது, ஆறரை மணி இதற்குள் சித்தப்பா குழந்தைகள் அருணும், சுபேதாவும் “அண்ணா அண்ணா” என்று கூவினார்கள். காபி டம்ளர்களோடு அவர்களைப் பார்த்து அந்த அறைக்குள் ஓடினான். கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்பதால், பல்லை பிரஷ் செய்யாமலே காபி குடித்து பழகியவர்கள். அருணை முகத்தை கழுவச் சொல்லிவிட்டு, சுபேதாவை தூக்கிக் கொண்டுபோய் முகத்தை கழுவினான். சுபேதாவோ தனது பல்லைக் காட்டி ‘வாட் கலர் திஸ்’ என்றாள். உடனே, இவன், “வெள்ளை நிறம்” என்றான். பிறகு, அவள் உதட்டை மடித்துக் காட்டி ‘வாட் ஈஸ் திஸ் கலர்’ என்றாள். இவன் “சிகப்பு” என்றான் உடனே அந்தக் குழந்தை தனது கவுனை தூக்கிப் பிடித்துக் கொண்டு ‘நோ அண்ணா நோ. திஸ் ஈஸ் ஒயிட்... திஸ் ஈஸ் பிங்க்’ என்றாள்.

படுக்கை அறையிலிருந்து, சித்தியின் பயங்கரமான அலறல் கேட்டது.

“இங்கிலீஷ்ல பேசற பிள்ளிங்கள கெடுத்துடுவே போலிருக்கே... இதுக்காகவே மாசா மாசம் இந்த பேய்களை, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல போட்டு மாசம் அறுநூறு ரூபாய் அழுவுறோம்... ஏற்கெனவே டாடின்னு சொல்ற பிள்ளைங்கள அப்பாவாக்கிட்டே மம்மியான என்னை அம்மாவாக்கிட்டே... இதுல்லாம் சரிப்படாதுப்பா... தமிழாம் பொல்லாத தமிழு...”

செல்வா, மனதிற்குள் ஏற்பட்ட வேதனையை அதே விகிதாச்சாரத்தில் அன்பு மயமாக உரக்கக் கேட்டான்.

“உங்களுக்கு காபி போடட்டுமா சித்தி.”

“நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறது ஒனக்கு பொறுக்காதே...”

இதற்குள், அருண் ஒரு விரலையும், சுபேதா இருவிரலையும் காட்டினார்கள். அருணை மேற்கத்திய டாய்லெட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, சுபேதாவை தனியாக இருந்த இந்திய டாய்லெட்டுக்கு கூட்டிப் போனான். பிறகு, அவர்களை பல்லில் பிரஷ் செய்ய வைத்தான். இரண்டு குழந்தைகளையும் ஒருசேர குளியலறைக்குள் கொண்டு போனான். அருண் தானாகக் குளித்தான். இவன், அவனுக்கு சோப்பை எடுத்து உடலெங்கும் தேய்த்தான். சுபேதாவை குளிப்பாட்டினான். துணியால் துவட்டினான். இரண்டு பேரையும் வெளியே கொண்டு வந்து, அருணுக்கு வெள்ளை மேல் சட்டையும், நீல கால் சட்டையும் அணிவித்தான். சுபேதாவிற்கு வெள்ளையும் பச்சையும் கலந்த கவுணை அணிவித்தான். சுபேதாவின் தலையை வாரிக் கொண்டிருந்தபோது, சித்தியின் குரல் சிறிது இறங்கியது போல் கேட்டது.

“கீசரை போடு. நான் இன்னிக்கி வெந்நீர்ல குளிக்கணும். அப்படியே காபி கொண்டு வா...”

செல்வா, குழந்தைகளிடம் ஹோம் வொர்க் நோட்டுகளை கொடுத்துவிட்டு, சமையலறைக்குள் ஓடி, காபி தயாரித்தான் அப்போதுதான் வந்த ஐம்பது வயது வேலைக்காரம்மாவிற்கு சித்தியின் அறையை நோட்டமிட்டபடியே ஒரு கப் காபி கொடுத்தான். இன்னொரு கப்பை சித்தியின் அறைக்கு கொண்டு போனான். ‘சித்தி... சித்தி...’ என்றான். அவளோ கட்டில் சுகத்திலிருந்து மீள முடியாமல் ‘வைத்துவிட்டுப் போ’ என்றாள்.

செல்வா, குழந்தைகளும் தானும் இருக்கும் அறைக்கு ஓடி வந்தான். அவர்கள் ஹோம் வொர்க்கை முடிக்க இன்னும் நேரமிருப்பதை அறிந்தான். அந்தச் சமயம் கவிதைக் கற்பனை வந்தது. மீண்டும் நான்கைந்து தாள்களை வைத்துக்கொண்டு, அவனும் கவிதையும் போராடிக் கொண்டிருந்தபோது, சித்தி குளிப்பதற்காக உள்ளே வந்தாள். இவன் பாட்டுக்கு எழுதுவதைப் பார்த்து, மெல்லிய குரலில், அதேசமயம் அழுத்தம் திருத்தமாக ஒரு கேள்வி கேட்டாள்.

“பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதை விட்டுவிட்டு, என்னத்த எழுதிக்கிட்டு இருக்கே? முடியாதுன்னா சொல்லிடுப்பா... நான் டியூஷன் வச்சுக்கிடுறேன்... நீ வந்ததிலிருந்து குழந்தைங்க மார்க்கும் குறைஞ்சிட்டுது... அதுங்க பேசுற தமிழும் கூடிட்டுது... முடியாதுன்னா சொல்லிடுப்பா... ஒனக்கு மாதிரி ஒரு டீச்சருக்கும் தண்டம் போடணும் அவ்வளவுதான்...”

“இல்ல சித்தி. முன்னைவிட இப்போதான் மார்க் நல்லா வாங்குறாங்க”

“பொய் பேச வேற கத்துக்கிட்டியா?”

“நிசமாய் சித்தி. நீங்கதான் தப்பா நெனைக்கிறீங்க”

“எதிர்த்துவேற பேசுறீயா?”

அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தின் தாத்பரியம் புரியாமலே, அருண், அம்மாவின் இடுப்பில் ஒரு குத்து குத்தினான். அண்ணனைப் போல் பழகத் துடிக்கும் சுபேதாவும் அம்மாவின் பிட்டத்தில் ஒரு குத்து குத்தினாள். சித்திக்காரி கூச்சலிட்டாள்.

“முட்டாப்பய பிள்ளிகளா... மூதேவிகளா... அம்மாவை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களா... ஒங்க பெரியப்பா மகன் உங்களுக்கு நல்லாதான் சொல்லிக் கொடுத்திருக்கான். இன்னும் கத்தியை மட்டும் எடுத்து கையில கொடுக்கல...”

செல்வா, கோபத்தில் பிள்ளைகளின் காதுகளை திருகினான். உடனே, சித்திக்காரி மீண்டும் கத்தினாள்.

“என் கண்ணு முன்னாலேயே என் பிள்ளைகளை இப்படி பண்றீயே... நான் இல்லாட்டால் என்ன பாடுபடுத்துவே...? ஏய் பேய்ப்பய பிள்ளிகளா... இனிமே நீங்க என்கூடத்தான் படுக்கணும்...”

“போ... மாத்தோம்” என்றான் அருண். “அண்ணாகூடத்தான் படுப்பேன்” என்று சுபேதா மழலை மொழியில் பேசினாள். சித்திக்காரியும் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள் குழந்தைகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் இன்று அவர் டூரிலிருந்து திரும்பி வருகிற நாள். இதுகளையும் படுக்கை அறையில் போட்டால் திட்டோ திட்டென்று திட்டுவார். செல்வாவிற்கும் இது தெரியும் அது என்னமோ தெரியவில்லை பகலில் அடிக்காத குறையாக சண்டைபோடும் சித்தப்பாவும் சித்தியும், இரவில் சிரிப்பும் கும்மாளமுமாய் கிடப்பார்கள்.

அந்த அறையை பெருக்க வந்த வேலைக்காரம்மா, செல்வாவை, பரிதாபமாகப் பார்த்தாள். இவன் ஒரு சமயம், சித்தியினுடைய ஏச்சு தாங்கமுடியாமல், கட்டிய லுங்கியோடும், போட்ட சட்டையோடும் வெளியேறப் போனபோது, இந்த வேலைக்கார அம்மாதான், அவன் மோவாயைத் தாங்கி, ‘ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சு பொறுத்துக்கோ ராசா பாலப் பார்க்கிறதா... பால் காய்ச்சின பானையைப் பார்க்கிறதா ஒன் சித்தப்பா ஒன்மேல உயிரையே வெச்சிருக்காருப்பா... ஏடா கோடமா எங்கேயும் போயிடாதேப்பா’ என்று மட்டும் ஆலோசனை சொல்லவில்லையானால், செல்வா, இந்நேரம் ஏதோ ஒரு நகரில், பொறுக்கிக் கொண்டு இருந்திருப்பான்.

சித்திக்காரி, குளித்து முடித்துவிட்டு அடுப்பறைக்கு போனாள். அரைமணி நேரத்தில் “சாப்பிட்டுத் தொலையுங்க... நான் கொஞ்ச நேரம் படுக்கணும்... உடம்பு சரியில்ல.” என்றாள்.

செல்வா, குழந்தைகளை யூனிபாரமாக கூட்டி வந்தான். சித்திக்காரி தட்டில் இட்லிகளை போட்டபடியே, ‘உடம்புக்கு சுபமில்லன்னு சொல்றேனே என்ன சித்தி உடம்புக்குன்னு கேட்டியா?’ என்று அவனை வம்புக்கு இழுத்தாள் உடனே செல்வா, “எதுக்கும் டாக்டரை போய்ப் பாருங்க சித்தி... நான் வேணுமுன்னா லீவு போட்டுட்டு உங்களை கூட்டிகிட்டுப் போகட்டுமா?” என்று நேயத்தோடு கேட்டான் சித்திக்காரி கனிந்து போனாள் “நாலு இட்லி மட்டும் சாப்பிடுறியே... வயிறு கேட்குமா... இன்னையிலிருந்து ஆறு இட்லி சாப்பிட்டாகணும் இந்தா ஒனக்கு பிடிச்சமான மிளகாய்ப் பொடி... ஏய் மூதேவிகளா! இன்னுமா உங்க அண்ணன் உங்களுக்கு ஊட்டணும். சீக்கிரமாகட்டும் அவனும் காலேஜுக்கு போகணுமில்ல...” என்றாள்.

செல்வாவும், வேலைக்காரம்மாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள் இந்த சித்தியை பாம்பென்று அடிக்கவும் முடியாது, பழுதென்று தள்ளவும் முடியாது சாப்பாட்டு விஷயத்தில் செல்வாவிற்கு என்றுமே அவள் குறை வைத்ததில்லை ஒருசில சமயங்களில் இவன் துணியையும் துவைத்துப் போட்டிருக்கிறாள். செல்வா பாதி இட்லி வாயோடு, “டாக்டருக்கிட்ட போகலாமா சித்தி.” என்றான்.

“உங்க சித்தப்பா, காலையிலே வருவாரு அவர் கூட்டிட்டுப் போவாரு... நீ குழந்தைகளை விட்டுட்டு காலேஜுக்குப் போ...” “எனக்கு ஆஸ்மா இருக்குமான்னு சந்தேகமா இருக்குது. மூச்சு வாங்குது... இன்னிக்கு ஒன் சித்தப்பாவ கூட்டிட்டுப் போகச் சொல்கிறேன் என்றாள்.” ‘இது கத்துவதால் ஏற்படுகிற இளைப்பு... ஆஸ்மா இல்லை’ என்று வாயெடுக்கப் போன செல்வா, அதற்கு முன்னெச்சரிக்கையாக அதே வாயை இட்லித் துண்டுகளால் அடைத்துக் கொண்டான்.

செல்வா, ஸ்கூட்டரில், சுபேதாவை முன்னால் நிறுத்திக்கொண்டும், அருணை பின்னால் இருத்திக் கொண்டும் புறப்பட்டான். ஆரம்ப காலத்தில் அப்படியே அதே வண்டியில் கல்லூரிக்குப் போவான். என்றைக்கு சித்தி “பெட்ரோல் என்ன கொட்டியா கிடக்குது...” என்று தன்பாட்டுக்குச் சொன்னாளே, அன்றையிலிருந்து குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த இரு சக்கர வாகனத்தை வீட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பேருந்து நிலையத்தைப் பார்த்து ஓடுவான். குறைந்தது ஐந்தாறு நிமிடம் தாமதமாகத்தான் முதல் வகுப்பிற்கே போக முடிகிறது. இதனால் மாணவர்கள் இவனுக்கு ‘லேட்டன்’ என்று பெயர் வைத்தார்கள். ‘டே... லேட்டா...’ என்றுதான் இவனை செல்லமாகக் கூப்பிடுவார்கள். இவன் லேட்டாக வருவதால் இவனை மாணவ தாதாவாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்கள் எதுவுமே சொல்ல மாட்டார்கள்.

கல்லூரிக்குப் போன செல்வாவிற்கு, பாடத்தில் கவனம் போகவில்லை. பொதுவாக விரிவுரையாளர் சொல்லச் சொல்ல அப்படியே தானும் சொல்லி மனதுக்குள் பதிவு செய்துக் கொள்வான். ஆனால் இன்றோ, அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. முதல் மூன்று வகுப்புக்களிலும் கவிதை மயமானான். இடைவேளையில் எழுதிப் பார்த்தான். இயலவில்லை ஆனாலும், அதுவே ஒரு வைராக்கியமாகி விட்டது.

மாலை வகுப்புக்களை கட்டடித்துவிட்டு, கல்லூரி நூலகத்திற்குள் நுழைந்தான். நீண்ட மேஜையில் பல்வேறு இதழ்கள் துண்டு துண்டாக கிடந்தன. பெரிய இதழ்கள், சிற்றிதழ்கள், அறிவு ஜீவிகள் நடத்தும் தனிச்சுற்றுப் பத்திரிகைகள் என்று பல்வேறு வகை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வகையில் கவிதை இருந்தது இவனுக்கு தெம்பு கொடுத்தது. கூடவே கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு பிரபல கவிஞர், லோக்கல் கவிஞர்களுக்கு சொல்லிக் கொடுப்பதுபோல் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். செல்வா அந்தக் கட்டுரையை மூன்று தடவை படித்தான். அந்தக் கட்டுரைக்கு ஏற்ப எழுதத் துவங்கினான். வார்த்தைகள் மடமடவென்று வந்தன. அவனுக்கு ஒரு அறிவு ஜீவியாகிவிட்டதுபோல் ஒரு ஆனந்தம். கவிதா, மோவாயில் கை வைத்து அவனைப் பார்த்து வியக்கப் போகிறாள் என்ற கற்பனையில், வகுப்புக்களை கட்டடித்ததுகூட அவனுக்கு தவறாய் தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒத்தை_வீடு/018&oldid=1854317" இலிருந்து மீள்விக்கப்பட்டது