உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தை வீடு/019

விக்கிமூலம் இலிருந்து

5

அந்த மெரினா கடற்கரை பூத்துக் குலுங்கியது. ஆண்கள் செடிகளாகவும், பெண்கள் கொடிகளாகவும் பின்னிப் பிணைந்திருந்த பகுதி. இருள்மயமே அவர்களுக்கு ஒளி மயமாக தோன்றிய இடம். என்றாலும், அங்கே சென்ற செல்வாவை கவிதா இழுத்துப் பிடித்துக் கொண்டே, ‘முதலில் உங்க கவிதையை சொல்லுங்க’ என்று கடற்கரையின் விளிம்புப் பகுதிக்கு வந்து உட்கார்ந்தாள். அவன் கையைப் பிடித்து அவனையும் உட்கார வைத்தாள். அவள் கை வலுவை பார்த்த செல்வா கேட்டான் ஒரு கேள்வி.

“நீ என்ன கராத்தே பெண்ணா? உன் பிடி இரும்புப் பிடியாய் இருக்கே?”

“ஒரு பெண்ணோட கடைக்கண் பார்வையில் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம் என்றார் பாரதிதாசன். இது ஒரு ஆணாதிக்கப் பார்வை. அவரே பெண்ணாக இருந்தால், காதலியின் கைப்பிடியில் காதலனும் ஓர் கடுகாமுன்னு பாடியிருப்பார். இப்போ நீங்க என் தோளில கிடக்கிற கையை எடுக்கறீங்க... அதே கையால பைக்குள்ள இருக்கிற கவிதைய எடுத்துப் படிக்கிறீங்க... நிறைய எழுதியிருக்கீங்களோ... உங்க சட்டைப்பை கர்ப்பம் தரிச்ச பெண்ணு மாதிரி துருத்திக்கிட்டு நிற்குது...”

செல்வா, பெருமிதமாகச் சொன்னான்.

“இது கவிதைக் கற்பம். இப்போது பிரவசம் நடக்கும் பார்.”

செல்வா, இலக்கியக் கர்வத்தோடு இரண்டாய் மடித்த அந்தத் தாள் கற்றைகளை எடுத்து சத்தம் போட்டே படித்தான்.

“கானல் சதுரத்தின் வேனல் வெளிப்பாடு
வேனல் வெளிப்பாடுகளில் கோணல் சரிவுகள்
கானலும் சதுரமும் கலந்தவள் கவிதா
வினைப்பாலின் திணைப்பயனோ?
திணைப்பாலின் வினைப்பயனோ?
ஊடகத்தின் பூடகம்
பூடகத்தின் ஊடகம்
ஊடகமும் பூடகமும்
ஒன்றித்த லாகவங்கள்”

கவிதா ‘ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்’ என்று சொன்னபடியே அவன் வாயை பொத்தி, கையை ஈரப்படுத்தினாள். அந்தக் காகித கற்றையில் லயித்துப் போய் வாசித்த செல்வா அவள் கையை விலக்கிக் கொண்டே கேட்டான்.

“என்ன கவிதா! நான் நல்ல தமிழில் கவிதை படிக்கும்போது, நீ இங்கிலீஷ்ல திட்டுறியே... திட்டுறதா இருந்தாலும் கவிதையில் திட்டு...”

“ஒங்க கவிதை லட்சணத்துக்கு, திட்டப்படாது. நாக்குல சூடு போடணும். எழுதுற கைய முறிக்கணும்...”

“இப்படித்தான் எல்லா ஜனரஞ்சக வாசகர்களும் கேட்கிறாங்க... இந்தக் கவிதை, அறிவு ஜீவிகளுக்காக ஒரு அறிவு ஜீவி எழுதிய புதுக்கவிதை...”

“புரியாததற்குப் பெயர்தான் புதுக்கவிதையா?”

செல்வா, தான் படித்த கட்டுரையின் சில பகுதிகளை தானே சொல்வது போல் ஒப்பித்தான்.

“எடுத்த எடுப்பிலேயே புரிவது கவிதையல்ல. கவிதையின் நோக்கம் வாசிப்பு சுகம் அல்ல. மூன்று நான்கு தடவை படித்த பிறகுதான், அதன் பொருள் புரியவேண்டும் அப்படித்தான் நான் எழுதியிருக்கேன்... ஒரு கவிதையில் வாசிப்பு, மறுவாசிப்பு, அசை போடல், அடிமனத் தேடல், மறு பரிசீலனை, சுய பரிசீலனை, சுயத்தை இழந்த பார்வை, பார்வையை இழந்த சுயம் இப்படி ஆயிரம் இருக்குது... ஒரு மாதம் டைம் கொடுக்கறேன்... உன்னை அறிவு ஜீவியாய் மாற்றிக்கொள். அப்புறம் இந்தக் கவிதையின் பொருள் புரியும்.”

‘கவிதா, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஒருவேளை இவனுக்கு பித்து பிடித்துப் போய்விட்டதோ. இனிமேல் குறுந்தாடி வைக்க வேண்டியதும், ஒரு ஜோல்னா பையை போட்டுக் கொள்ளவேண்டியதும், அரக்கப் பரக்கப் பார்க்க வேண்டியதும் தான் பாக்கி. அய்யய்யோ! இவரை இனிமேல் கவிதை எழுதவே சொல்லக்கூடாது.’

கவிதா, அவனது வலது காதை செல்லமாக அல்லாமல், வலிக்கும்படி முறுக்கியபடியே கேட்டாள்.

“ஒழுங்கா பதில் சொல்லுங்க! இது நீங்க எழுதுன கவிதை இல்ல. இப்போ நீங்க பேசுற பேச்சுக்கு உங்களுக்கு எவனோ பின்னணிக் குரல் கொடுக்கான். கொடுத்தவன் யார் சொல்லுங்க...”

“நான்தான்... நானேதான்...”

“நம்ப மாட்டேன்... நம்பவே மாட்டேன். இந்தக் கவிதை, நம்ம, அந்தரங்கத்தை நீங்க எவன் கிட்டயோ சொல்லி, அவன், உங்க அப்பா எழுதிக் கொடுத்தது மாதிரி, இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறான். இப்போது உங்கள் காதல் மீதே எனக்குச் சந்தேகம்.”

கவிதா, அவன் காதை அவனிடமே ஒப்படைத்துவிட்டு, கால்களைத் தூக்கி முட்டிகளின் முனையில் முகம் போட்டாள். செல்வா, அவள் முகத்தை நிமிர்த்தப் போனான். அவள் பற்களால் கடிபட்ட கைகளை உதறியபடியே, அவள் முன்னால் எழுந்து, மூன்று முறை தோப்புக் கரணம் போட்டபடியே விளக்கமளித்தான்.

“என்னை நம்பு கவிதா... நம்ம காதலைப் பற்றி எந்த பயல் கிட்டயும் மூச்சு விடல... கல்லூரி நூலகத்திற்குப் போனேன். அங்கே வந்த எங்க இணை தமிழ்ப் பேராசிரியர்கிட்ட புதுக்கவிதை பற்றி விளக்கம் கேட்டேன். பல இலக்கிய கூட்டங்களுக்கு போனவர் அவர். பல கூட்டங்களில் அடித்துப் பேசுவார். அடிபட்டும் வருவார். இந்தக் கவிதையை அவரிடம் காட்டினேன் ‘இதற்கு ஈடாக இனிமேல்தான் ஒரு கவிதை பிறக்க வேண்டும்’ என்றார். பச்சையாக சொல்லப்போனால், ஒரு இலக்கிய இதழில் வந்த கவிதையை அப்படியே காப்பி அடித்து கொண்டு வந்தேன்.”

கவிதா, மீண்டும் அவன் காதைத் திருகியபடியே இன்னொரு கேள்வி கேட்டாள்.

“இனிமேல் அறிவு ஜீவிகளின் பக்கம் போவீங்களா?”

“மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”

“சரி போகட்டும். இந்தக் கவிதை மண்ணாங்கட்டி எதுவும் வேணாம் என்னை சந்திப்பதற்கு முன்னால் நீங்க எப்படி இருந்தீங்க. என் சந்திப்புக்குப் பிறகு எப்படி ஆனீங்கன்னு யதார்த்தமா, செயற்கைத்தனம் இல்லாமல் கட்டுரை மாதிரி எழுதுங்க... உரைநடையாவது உங்களுக்கு வருதான்னு பார்ப்போம்... என்னைப் பற்றி ஒரு வர்ணணைகூட இருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை. கண்ணாடி போதும். அதேசயமம், நான் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை குறிப்பிடணும்.”

“இதைத்தான் பல தடவை நேர்லயே சொல்லிவிட்டேனே... இந்த புதுக்கவிதை அனுபவத்திற்குப் பிறகு, எழுதுறதுன்னா எனக்கு பயமாய் இருக்குதும்மா... இப்பவே நேருக்கு நேராய் சொல்லிடுறேன்...”

“நாம் கைப்பட ஒரு கதை எழுதுறோம். அது பத்திரிகையில பிரசுரமானால், என்ன சுகம் கிடைக்குமோ, அதைவிட அதிக சுகம் நீங்க கைப்பட எழுதின கடிதத்தில் கிடைக்கும். இதய உணர்வுகளுக்கு உங்க வாய் ஈடாகாது. நீங்கள் எழுதித் தருகிற கடிதத்தை ரகசியமான இடத்தில வச்சு கண்ணுல ஒற்றி ஒற்றி ஒரு நாளைக்கு ஒன்பது தடவையாவது படிப்பேன். அந்த அளவுக்கு நீங்க எழுதுவிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது...”

“மொதல்ல நான் உன்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை விலாவாரியா நீ எழுதிக் கொடு.”

“நம்மளால முடியாதுப்பா.”

“ஏன் முடியாது? உன்னால் முடியும் கவிதா. ஆனாலும் பிற்காலத்துல நம்ம காதல் தோல்வியுற்றால் அந்த லட்டரை வச்சு சினிமாவுல வாறது மாதிரி நான் உன்னை பிளாக் மெயில் செய்வனோன்னு பயப்படுற...”

“அப்படிப் பயப்பட்டாலும் தப்பில்லியே...”

செல்வாவிற்கு, என்னவோ போல் இருந்திருக்க வேண்டும். அப்படியே எழுந்தான். தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதுவும் வாகன விளக்குகள், விட்டில் பூச்சிகளாய் தெரிந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்தான். கவிதா, தான் சொன்னதன் வலிமையையும், தவறையும் உணர்ந்தவள் போல் அவன் பின்னால் ஓடினாள். சரியாக கண்ணகி சிலைக்குப் பின்பக்கமாக, அவன் சட்டைக் காலரை பிடித்து விட்டாள் சுற்றும் முற்றும் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த பெரிசுகள் என்னமோ ஏதோவென்று எழுந்துவிட்டன போய்க்கொண்டும், வந்து கொண்டும் இயங்கியவர்கள் நின்றார்கள் ஒருசிலர் கவிதா பக்கமாய் போய் நின்று “பொறுக்கிப் பயல்களுக்கு இதுவே பொழைப்பா போச்சு... ஒன்னை என்னம்மா செய்தான்? நடந்ததைச் சொல்லு... அதோ தெரியுதா உங்கள் நண்பன். அதாம் போலீஸ் போஸ்ட். அதுல இவனை ஒப்படைத்திடலாம்.” என்று பரிந்துரைத்தார்கள்.

செல்வா, வெலவெலத்தான். அவன் பற்கள்கூட தானாய் ஆடுவது போல் தோன்றியது. சுற்றி வளைத்த கூட்டத்தைப் பார்த்து கவிதா, கையெடுத்துக் கும்பிட்டபடியே கெஞ்சினாள்.

“இவன் என்னோட கஸின் பிரதர். எங்க வீட்டுல தங்கித்தான் படிக்கான். வீட்ல ஒரு சண்டை ரெண்டு நாளா ஆளக்காணோம். இங்கே தேடிவந்தால் ஆள் அகப்பட்டான். என்னைப் பார்த்ததும் ஓடுறான். அவ்வளவுதான். பார் உன்னால... உன்னால எத்தனை பேர் வேடிக்கைப் பார்க்கிறாங்க பாரு...”

கவிதா, நிசமாகவே அழுதாள். வேடிக்கை பார்த்த கூட்டத்திற்கு ஒரு விக்கல். அந்தரங்கம் அம்பலம் ஏறியதற்காக ஒரு கேவல். கூட்டத்தில் அப்பாவுக்கு தெரிந்தவர் யாராவது இருக்கலாம். அவ்வளவுதான் ரகளை ஏற்படும். தன் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். அப்பா அந்த வகை. இந்த செல்வா, எந்த வகை?

கூட்டத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டார்கள் இந்த “கஸின் சிஸ்டர், கஸின் பிரதர் விவகாரம்” அவர்களுக்கும் அத்துபடி இந்தச் சமயம் பார்த்து, கழிவறை பக்கம் ஒரு அடிதடி கூட்டம் இவர்களை விட்டுவிட்டு அங்கே ஓடியது. முன்னெச்சரிக்கையாக, பின்வாங்கியும் முன் வாங்கியும் உஷாராக ஓடிப்போய் தங்களுக்கு ஆபத்து ஏற்படாத ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு, இரண்டு பேரின் சொற்போரோடு கூடிய மற்போரை வேடிக்கை பார்த்தது.

கவிதாவும் செல்வாவும், ஒருவரோடு ஒருவர் பேசாமல் கண்ணகிச் சிலையிலிருந்து தெற்குப் பக்கமாக பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே போனார்கள். அவனுக்கு பின்னால் நடந்த கவிதா பேசிக் கொண்டே நடந்தாள்.

“உங்க பித்துக்குளி தனத்தால நடக்கக்கூடாதது நடந்தது பார்த்தீங்களா... சரியான கிராக்கு...”

“நான் கிராக்கு இல்ல... மானஸ்தன்... நான் பிளாக்மெயில் செய்தாலும் செய்யலாமுன்னு உனக்கு ஒரு எண்ணம் வந்தது பாரு... அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை நான் ஏற்படுத்தியிருக்கேன் பாரு... இதுக்காக எனக்கு நானே தண்டனை வழங்குறது மாதிரி பிரியுறேன்.”

“ஸாரி... செல்வா. சும்மா ஜோக்காத்தான் சொன்னேன். விலகிப் விலகிப் போன உங்களை வளைத்துப் போட்டது நான்தான். உங்க வீட்டு வேலைக்காரம்மா நீங்க படுற பாட்டை சொன்னபோது நிசமாவே அழுதுட்டேன். பெண்களை மானபங்கபடுத்துற இந்தக் காலத்துல, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்னு அந்தம்மா சொன்னாங்க... காலேஜ்ல நல்லா பேசி மெடல் மெடலாய் வாங்கியிருக்கீங்கன்னு வேலைக்காரம்மா சொன்னாங்க... அதனால் ஒங்க மூஞ்சு முகரக் கட்டைக்காக நான் உங்களை காதலிக்கல... உங்க டேலண்டுக்காகவும் நல்ல குணத்துக்காகவும்தான் காதலிக்கிறேன்.”

“எங்க சித்தப்பா மகன் ஐ.ஏ.எஸ். டிரெயினிங் போயிருந்தான். அவன்கிட்ட ஒரு வங்காளப் பொண்ணு... ஒரு ஒரிசா பொண்ணு... காஷ்மீரி பொண்ணு இவங்களும் ஐ.ஏ.எஸ். தான். இவன்கிட்ட ஒவ்வொருத்தரும் என்னை கட்டிக்கிறீங்களான்னு கேட்டிருக்காங்க... உடனே இவன் நானோ கருப்பிலேயோ கருப்பு அண்டங் கருப்பு... மொழியும் மதமும் வேற வேற... நான் ஒரு புத்தகப் புழு... என்ன ஏன் விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு, அவளுக ஒவ்வொருத்தியும் என் கணவருக்கு அழகு முக்கியமில்ல. ஆரோக்கியமான உடம்பு முக்கியம். எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக்கூடாது. பெண்களை மதிக்கத் தெரியணும்... அதனால நீங்க எனக்கு கணவரா வந்தா சந்தோஷப்படுவேன்னு, சொல்லியிருக்காங்க... அதாவது இந்தக் காலத்து பெரிய பதவி பெண்களுக்கு, கணவன் என்கிறவன், அவளை மதிக்கத் தெரிந்தவனாகவும், நல்லவனாகவும், தோழனாகவும் இருக்கணும்...”

“உங்க சித்தப்பா மகன் என்ன செய்தான்?”

“அந்தப் பெண்களை உதறிட்டு, நான் உங்கள காதலிக்கிறது மாதிரி ஒரு தொட்டாச்சிணுங்கி பொண்ண காதலிக்கிறான். முகம் போற போக்க பாரு... உங்களுக்கு சென்ஸ் ஆப் ஹுமரே இல்ல... சரி போகட்டும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்கிறதை நிரூபிக்கிறதுக்கு, நானே ஒரு லவ் லெட்டர் எழுதி உங்களுக்குத் தரப் போறேன்.”

“எழுது. எழுதாமல் போ. நான்தான் முதல்ல எழுதுவேன்.”

“ஒங்க மேல இருக்கிற நம்பிக்கையை நிரூபிக்கிறதுக்காக இதுவரைக்கும் போகாத சீரணி அரங்கத்திற்குப் பின் பக்கம் போவோமா? இன்னிக்கு உங்களுக்கு அதிக சலுகை...”

“கொடுக்கணுமா... எடுக்கணுமா...”

“ரெண்டும்.”

இருவரும், கடல் மண்ணில் தடம் போட்டார்கள். அந்தத் தடங்கள், ரெட்டை ரெட்டையாகவும், இரண்டு அடுக்குகளாகவும், ஒன்றின் மேல் ஒன்றாகவும் ஆழப் பதிந்தன. கால் பின்ன கை பின்ன அப்படிப் பின்னியது தெரியாமலேயே சீரணியின் பின்பக்கம் உட்கார்ந்தார்கள். ஆங்காங்கே ஜோடிகள் அருகருகே ஒன்றுக்கு ஒன்று பாதுகாவலாய் கட்டிப் பிடித்து கிடந்தன. முகமறியா ஜோடிகள். செல்வாவும் கவிதாவும் அந்த ஜோடிகளிடமிருந்து சிறிது விலகி உட்கார்ந்தார்கள். கவிதா, அவன் தோளில் தலை சாய்த்தாள். அப்போது பார்த்து, ஒரு வேர்க்கடலைப் பயல் முன்னால் போய் உட்கார்ந்தான். மூன்று ரூபாய்க்கு வேர்க் கடலையை வாங்கிய பிறகு, ஒரு பூக்காரி முழம் ஆறு ரூபாய் என்றாள். கவிதா, அவசர அவசரமாக இரண்டு முழம் வாங்கி, செல்வாவை, தன் தலையில் வைக்கும்படி குனிந்தாள். அவன் அவள் பின்னலை பூச்சரமாக்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு மூன்று பேர் அவர்களை சுற்றிச் சுற்றியே வட்டமடித்தார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு பேண்ட் போட்ட எருமை அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து ரசனையோடு பார்த்தது.

செல்வாவும் கவிதாவும் அந்த இடத்திலிருந்து, வடக்குப் பக்கமாக நடந்து, இன்னொரு இருட்டு வெளியில் கையோடு கை சேர்த்து உட்கார்ந்தார்கள். அவன் தோளில் இவள் கையும், இவள் தோளில் அவன் கையும் படரப் போன நேரத்தில், அங்கே சுற்றிக் கொண்டிருந்தவர்கள், இங்கே வந்துவிட்டார்கள். போதாக்குறைக்கு, அந்த பேண்ட் போட்ட எருமையும் இவர்களுக்கு முன்னால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. கவிதா பயந்து போனாள். “போகலாம்... போகலாம்...” என்று சொன்னபடியே எழுந்தாள். ‘எதுக்குப் பயப்படணும்’ என்றான் செல்வா. ‘இது பயப்படுற விஷயம் மட்டுமல்ல... கற்புப் பிரச்சினை’ என்றாள். பிறகு ஒரு சந்தேகம் கேட்டாள் ‘எத்தனையோ ஜோடிகள் இருக்கும்போது, நம்மை மட்டும் ஏன் இந்த தடியன்கள் சுத்துறாங்க’ என்றாள். அவளுக்கு பதிலளிக்க முடியாமல், செல்வா குழம்பியபோது, அதே வேர்க்கடலை பையன், வந்தான். அவர்களுக்கு உபதேசம் செய்தான்.

“நீங்க ரெண்டு பேரும் பசங்க... அதாவது சின்ன வயசுப் பசங்க... ஒங்கள மாதிரி சின்ன வயசுக்காரங்கள மிரட்டி கற்பழிக்கிறது இதோ சுத்துறாங்களே இந்தப் பயல்களுக்கு ஒரு பொழுது போக்கு. ஏன்னா உங்களால வெளில் சொல்ல முடியாது பாருங்க... ஆனால், மத்த ஜோடிங்க அப்படி இல்ல நல்லாப் பாருங்க. ஒவ்வொருவரும் ஒரு தடியன்... இப்படில்லாம் நடக்கலாம் என்று எதிர்பார்த்து அதை சமாளிக்கிற தைரியத்தோட வர்றவங்க... இவங்ககிட்ட அந்தப் பயலுவ பாச்சா நடக்காது. இவனுகளோட ஜோடிகளும் காசுக்காகவோ எதுக்காகவோ வருகிற பஜாரிங்க.”

“அதனால் இந்த பெரிசு ஜோடிங்ககிட்ட போகமாட்டாங்க... நீங்க திரும்பிப் பாராம ஓடுங்க... எப்போ காதலிக்கிறதுன்னு வந்துட்டிங்களோ அதுக்கு ஏத்தபடி நடந்துக்கணும். அதாவது சுற்றிச் சுற்றி வராவங்களை ஓரக்கண்ணாலதான் பார்க்கணும். அவங்கள அலட்சியப்படுத்துறது மாதிரி இருக்கணும். நீங்க என்னடான்னா வாரவனையும் போறவனையும் பயந்துகிட்டே பார்க்கிறீங்க... இதனால் உங்களை என்ன வேணுமுன்னாலும் செய்யலாமுன்னு அந்த கடற்கரை பொறுக்கிகளுக்கு ஒரு எண்ணம் வந்துடுது. அதனால உங்களுக்கு இந்த ஏரியா ஒத்துவராது. வேர்க்கடலை வேணுமா?”

கவிதாவும், செல்வாவும் வேர்க்கடலை வாங்கும் சமயத்தில், ஏதாவது நடந்துவிடக்கூடாதே என்ற பயத்தில், வேதாந்திபோல் பேசிய அந்த பிஞ்சுப் பழத்தின் கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை திணித்து விட்டு, வேக வேகமாக வெளிச்சம் நிலவும் பகுதிக்கு வந்தார்கள். கூடவே ஆள்கூட்டம் அதிகம். பழக்கப்பட்ட குரல் கேட்டு கவிதா தெற்குப் பக்கமா திரும்பினாள். அவள் அண்ணன் மோகனன் நாலைந்து பேரோடு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறான் மத்தியில் ஒருவன் டேப் அடித்துக் கொண்டு கானா பாட்டை பாடுகிறான். அண்ணன் குதிக்கிறான்; தரையை மிதிக்கிறான். அங்குமிங்குமாய் தாவுகிறான்.

கவிதா, செல்வாவின் முதுகைத் தள்ளிக் கொண்டே கடற்கரையின் விளிம்பிற்கு ஓடினாள் அவனிடம் பதட்டத்தோடு பேசினாள்.

“இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது செல்வா. அங்கே குதிச்சுக்கிட்டிருக்கே ஒரு கூட்டம் அதுல ஆடிக்கிட்டு இருக்கிறவன் எங்கண்ணன் மோகனன்... அவன் கண்ணுல பட்டால் அவ்வளவுதான்...”

“நானும் அதைத்தான் சொல்லணுமுன்னு நெனச்சேன்... ஒங்கண்ணன் நல்லாவே ஆடுறான்.”

“எங்கண்ணன் பரத நாட்டியம் நல்லா கற்றுக் கொண்டவன். பதினாலு வயசிலேயே இவன் நாட்டியம் அரங்கேறியது. அப்புறம் குடும்பத்துல என்னல்லாமோ நடந்தது இவன் சித்தன் போக்கு சிவன் போக்காய் ஆகிட்டான் இனிமேல் அவன் எக்கேடு கெட்டாலும் சரிதான். எங்கப்பா அவனை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு. பெற்ற கடனுக்காக அவன் கொடுக்கிற ஏச்சையும் பேச்சையும் வாங்கிக்கிட்டு, அதுக்கு பதிலாக அவன் பணம் எடுக்கும்போது சும்மா இருக்காரு... சரி அதை விடுங்க... நாம், இனிமேல் எப்படி சந்திக்கிறது? எங்கே சந்திக்கிறது? இந்தக் கடற்கரையில வெளிச்சத்துல சந்திச்சா தெரிஞ்சவங்க பார்ப்பாங்க... இருட்டுல சந்திச்சா தெரியாதவங்ககிட்ட அகப்படணும்.”

“அதுதான் எனக்குப் புரியல...”

“ஒரு குட் நியூஸ்... நாளைக்கு எங்கப்பாவும் அம்மாவும் டூர் போறாங்க. ஆபிஸ் கார்ல போறாங்க. அம்மா என்னையும் கூப்பிடுறாங்க. உங்களை பிரிந்து என்னால் இருக்க முடியுமா? அதனால் நான் முடியாதுன்னுட்டேன். நல்லவேளை நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. எங்க வீட்டுக்கு வந்துடுங்க.”

“எனக்கு பயமா இருக்குது கவிதா... ஒருவேளை தப்பித் தவறி யாராவது இருந்தால்... ஒங்கண்ணன்கூட இருக்கலாமே...”

“போன வாரம்தான் மூவாயிரம் ரூபாய் எடுத்துட்டு போனான். இனிமேல், அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிதான் வருவான். ஒருவேளை எங்கப்பா, நானும் அவரோட போகணுமுன்னு அடம் பிடித்தால், என்னால தட்ட முடியாது. அதனால, நான் மட்டும் வீட்ல இருக்கிறதா இருந்தால் கம்பவுண்டு கதவுல ஒரு பக்கம் திறந்திருக்கும். மூடி இருந்தால், நான் இல்லன்னு அர்த்தம்.”

“வாட்ச்மேன் இருக்கலாம் இல்லியா?”

“அவனையும் கூடமாட ஒத்தாசைக்கு அப்பா கூட்டிட்டுப் போறார்.”

“கொஞ்சம்கூட பொறுப்பில்லாத அப்பா. அம்மாவை கூட்டிக்கிட்டு ஒன்னை மட்டும் விடலாமா... நீயும் போ...”

“ஒங்க மனசு கல் மனசு செல்வா. எனக்கு இருக்கிற துடிப்பு உங்களுக்கு இல்ல...”

“நீ சொல்லிட்ட... நான் சொல்லல.... அவ்வளவுதான் வித்தியாசம்...”

“சமையல்காரம்மா வீட்டோட இருக்காங்க. அந்தத் தைரியத்துல அப்பா என்னைப் பற்றி கவலைப்படமாட்டார். அதோட, ‘அம்மா - அப்பா விளையாட்டுக்கு’ நான் இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நினைப்பார்.”

“சமையல்காரம்மா அப்பா வந்ததும் போட்டுக் கொடுத்தால்?”

“அந்தம்மாவுக்கு சாப்பாடு மட்டும்தான் போட்டுக் கொடுக்கத் தெரியும். மற்றபடி பெருந்தூக்கக்காரி அவங்கள சமாளிக்கிறது என் பொறுப்பு. கேட்ல ஒரு பக்கம் திறந்திருந்தால், நீங்க வாறீங்க... மூடி இருந்தால், போறீங்க...”

கவிதா, தனது மாருதி காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, இடது பக்க முன்னிருக்கைக் கதவை செல்வாவிற்கு திறந்து விடப் போனாள். அந்தக் கதவின் உள் சதுரம் பிய்ந்து போய் முரண்டு செய்து கதவை திறக்க மறுத்தது. இதனால் செல்வா, நீண்டு நெடிந்த பின்னிருக்கையில் கைகளையும் கால்களையும் தாரளமாகப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒத்தை_வீடு/019&oldid=1854319" இலிருந்து மீள்விக்கப்பட்டது