உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்தை வீடு/033

விக்கிமூலம் இலிருந்து

19

கடந்த ஒருமாத காலமாக புதை மண்ணாய் தெரிந்த கடல்மண், அவர்கள் இருவருக்கும் மாலை மஞ்சள் வெயிலில் ஒளி சிந்தும் மரகதத் துகள்களாக தெரிந்தன. கடல் வெள்ளை வெள்ளையான அலைப் பற்களைக் காட்டிக் காட்டி சிரித்தது. முன் எச்சரிக்கையாக வெளிச்சம் பொங்கும் இடத்திலேயே அமர்ந்தார்கள். கைகளை மட்டும் பிடித்துக்கொண்டார்கள்.

கடற்கரையில் சந்திக்கக்கூடாது என்று, இருவருக்கும் குடும்பத்தினர் விதித்த கட்டளைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மாதம் ஒரு தடவை சந்திப்பது என்று இவர்களாகவே முடிவெடுத்துக் கொண்டார்கள். மற்ற நாட்களில், இவன் சித்தப்பா, சித்தி அங்கே போவதும், அவள் அம்மா, அம்மா இவர்கள் வீட்டுக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. இருவரும் எதிர்காலத் தம்பதியினர் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று, இரண்டு குடும்பத்துக்கும் இடையே உறுதியாகி விட்டது.

“கவிதா, நான் ஒரு கவிதை எழுதி வந்திருக்கிறேன். படித்துக் காட்டட்டுமா?”

“அய்யய்யோ இந்த கவிதையால வந்த வினையே போதும்பா. நீங்க படிச்சது போதும்... கிழிந்து எறிங்க. அதோட எனக்கு இந்த கவிஞர்களோட கற்பனையே பிடிக்காது. பூ காதலியாம், வண்டு காதலனாம். இது அபத்தமான கற்பனை. மலருக்கும் மலருக்கும் மகரந்த உறவை ஏற்படுத்தும் வண்டுகள் வெறும் புரோக்கர்கள்தான். காதலன்கள் அல்ல.”

“அல்லவோ... இல்லவோ... இது வேற மாதிரியான கவிதை கவிதா... உன்ன மாதிரி வித்தியாசமான கவிதை.”

“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.”

செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான்.

“பாலினம் என்பது ஈரினம் — அதில்
ஓரினம் என்பது பாலின ஊனம்.

கல்லை கவியாக்கும் சிற்பி
கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான்.

மருந்தை உருவாக்கும் வைத்தியன்,
மருந்திலும் ஆண் பெண் காண்கிறான்.

ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன்,
மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான்.

மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை
ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள்.

வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த
மண்டு மனிதனுக்கு இல்லை.

இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு
இனிஷியல் இல்லாமல் அழியலாமா?

பிறப்பிற்காய் ஆன இருபாலும்
ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?”

நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான்.

“கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.”

“நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”

“நீ ஏற்றுக் கொண்டாயே, அதுவே போதும். இன்று முதல் நான் வெறும் செல்வா இல்லை. கவிஞன் செல்வா. சிறிது நாளில் பெருங்கவிக்கோ... அல்லது சிறுங்கவிக்கோ... கவிப்பேரரசு...”

“கவிதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, நம்மை ஆள்கிறது. அந்த ஆளுமையின் வலிவுதான் கவிஞன். இவன் கவிதைக்கு அரசன், பேரரசன் என்பது அசல் பித்துக்குளித்தனம். சரி அது கிடக்கட்டும் உங்க கவிதையில என்னை பற்றி ஒரு வார்த்தை வரலியே?”

“இந்தக் கவிதையே, உனக்காக நான் எழுதியது. நீ மட்டும் இல்லையென்றால், நான் தேங்காய் சிதறலாய் சிதறி, பம்பாய்க்குப் போய் படாதபாடு பட்டிருப்பேன். அந்த டாக்டர் சத்தியாம்மா சொன்னது மாதிரி தாயான பிரும்மம், எனக்கு காதலியாக வந்திருக்கிறது.”

கவிதா, சிரிக்கப் போனாள். அதற்குள், செல்வாவின் தழுதழுத்த குரலும், பொங்கிய கண்ணீரும் அவள் சிரிப்பை கட்டிப்போட்டது. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டும், பிடிபட்டுக் கொண்டும் இருந்த, இருவரின் கரங்களும், இப்போது ஒன்றை ஒன்று கோர்த்துக் கொண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒத்தை_வீடு/033&oldid=1854353" இலிருந்து மீள்விக்கப்பட்டது